ஏனெனில், நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம்; எபேசியர் 2:10
என் தோழி அவளது மளிகைப் பொருட்களுக்கானத் தொகையைச் செலுத்துவதற்காகக் காத்திருந்தாள். அவளுக்கு முன்னால் இருந்தவர் திரும்பி, அவளது கட்டண இரசீதிலிருந்து £10 ($14) (தோராயமாக ரூ1120)க்கான கட்டணத்தை கொடுத்தார். உடனே அவருடைய அன்பான செயலால் அவளுடைய கண்களிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது; பின்னர் அவள், தான் அழுததற்காக தன்னைப் பார்த்து சிரிக்க ஆரம்பித்தாள். இந்த எதிர்பாராத தயவு அவள் இதயத்தைத் தொட்டு, சோர்வுற்ற காலக்கட்டத்தில் அவளுக்கு நம்பிக்கையை அளித்தது. மற்றொரு நபர் மூலம் தனக்கு தேவன் தந்த நன்மைக்காக தேவனுக்கு நன்றி செலுத்தினாள்.
எபேசுவில் உள்ள கிறிஸ்தவர்களுக்கு அப்போஸ்தலன் பவுல் எழுதிய கடிதத்தில், கொடுப்பதன் கருப்பொருளும் அடங்கும். கிருபையினால் இரட்சிக்கப்பட்டதால் பழைய வாழ்க்கையை விட்டுவிட்டு புதிய வாழ்க்கையை தழுவும்படி அவர்களை அழைத்தார். நாம் தேவனுடைய சாயலில் படைக்கப்பட்டு அவருடைய “செய்கையாயிருக்கிறோம்” (2:10) என்பதால், இந்த இரட்சிப்பின் கிருபையிலிருந்து, “நல்ல செயல்களைச் செய்ய” வேண்டும் என்கிற விருப்பம் நமக்கு வருகிறது என்று அவர் விளக்கி கூறியுள்ளார். நாமும், அந்த பல்பொருள் அங்காடியில் இருந்த மனிதரைப் போலவே, நமது அன்றாட செயல்களின் மூலம் தேவனுடைய அன்பைப் பகிர முடியும்.
நிச்சயமாக, நாம் பொருள்களை கொடுத்துதான் தேவனின் கிருபையைப் பகிர்ந்து கொள்ள வேண்டுமென்பதில்லை. நம்முடைய பலதரப்பட்ட செயல்களின் மூலமும் அவருடைய அன்பை பிறருக்கு காண்பிக்க முடியும். எப்படியெனில், ஒருவர் நம்மிடம் பேசும்போது, அவர் சொல்வதைக் கேட்க நாம் நேரம் ஒதுக்கலாம். நமக்கு சேவை செய்யும் ஒருவரிடம், அவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்று கேட்கலாம். தேவைப்படும் ஒருவருக்கு, நின்று உதவலாம். மற்றவர்களுக்கு நாம் கொடுக்கும்போது, பதிலுக்கு நாமும் மகிழ்ச்சியைப் பெற்றுகொள்வோம் (அப்போஸ்தலர் 20:35).
ஆசிரியர்: ஏமி பவுச்சர் பை
சிந்தனை
தேவனுடைய அன்பளிப்புகளை கொடுத்து அவருடைய அன்பைப் பகிர்ந்து கொள்வதற்காக நாம் படைக்கப்பட்டுள்ளோம்.
அன்புள்ள பிதாவே, நீர் எங்களை உமது சாயலில் படைத்தீர்; உமது அன்பையும் வாழ்க்கையையும் பகிர்ந்து கொள்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இன்று மற்றவர்களுக்கு கொடுப்பதற்கான வாய்ப்புகளைப் நாங்கள் காண எங்களுக்கு உதவிச் செய்யும்.
|
|