வாசிக்க: எபேசியர் 4:175:2

நீங்கள் கோபங்கொண்டாலும் பாவஞ்செய்யாதிருங்கள் (4:26).

உங்களைக் கோபப்படுத்துவது எது? சாலை நெரிசல், வீங்கிய கால், அவமரியாதை, யாரோ உங்களை நேரத்தில் சந்திக்கவில்லையா அல்லது இரவு முழுவதும் பணியாற்றவேண்டிய திடீர் நிர்ணயமா?. கோபம் என்பது உணர்ச்சி ரீதியான விரக்தி. நமது பாதை தடுக்கப்படும் போதும், ​​யாரோ அல்லது ஏதோ நம் வழியில் குறுக்கிடும்போதும் இது அடிக்கடி நிகழ்கிறது.

கோபம் என்பது எல்லா மனிதர்களும் அனுபவிக்கும்படி, தேவன் கொடுத்த உணர்வு. எனது உரிமைகள் மறுக்கப்படுகையில், ​​​​ஒரு வாகனம் என்னைச் சாலை நெரிசலில் தவறாக இடைமறிக்கையில் அல்லது உரையாடலில் யாராவது என்னைக் குறுக்கிடுகையில் அதை நான் துரிதமாக அனுபவிக்க இயலும்.

ஆனால், மற்றவர்களுடைய நன்மைக்காகக் கோபமடைந்த இயேசுவைப் போல் நான் ஆக விரும்புகிறேன். அவர் தனது பிதாவின் வீடான ஆலயத்தில், ஜனங்களைப் பொருளாதார ரீதியாக சுரண்ட அனுமதித்த மேலும் சூம்பின கையுடன் இருந்த மனிதனை அவர் குணப்படுத்தக்கூடாது என்று நினைத்த மதத் தலைவர்கள் மீது கோபமடைந்தார் (மத்தேயு 21:12-13; மாற்கு 3:5). இயேசு மக்களை நேசித்ததால் கோபமடைந்தார்.

கோபப்படுவது தவறில்லை என்றாலும், அதைக் கொண்டு நாம் என்ன செய்கிறோம் என்பது முக்கியம். தேவன், “நீங்கள் கோபங்கொண்டாலும் பாவஞ்செய்யாதிருங்கள், சூரியன் அஸ்தமிக்கிறதற்கு முன்னாக உங்கள் எரிச்சல் தணியக்கடவது; பிசாசுக்கு இடங்கொடாமலும் இருங்கள்” (எபேசியர் 4:26-27) என்று கட்டளையிடுகிறார். நாம் காலையில் சண்டைபோட்டால், நாள் முழுவதும் கோபமாக இருக்கலாம் என்பது இதன் அர்த்தமல்ல. எந்த உணர்ச்சியையும் போலக் கோபமும் நம்மைக் கட்டுப்படுத்தக் கூடாது என்பதே தேவனின் கருத்து (வ. 26).

கட்டுப்பாடற்ற காட்டாறு போன்ற கோபம் ஆரோக்கியமற்ற நம்பிக்கைகளுக்கும் நடத்தைக்கும் வழிவகுக்கும். நமக்கானவைகளுக்காக போராடுகையில், நாம் சரியானதற்காகப் போராடுகிறோம் என்றெண்ணி நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளலாம். மாறாக, நமக்குத் தவறு இழைப்பவர்களுடன் நாம் ஒப்புரவாக வேண்டும் என்றும், அது முடியாதபட்சத்தில், நம் கோபத்தை அவரிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் தேவன் விரும்புகிறார். நம் தகப்பன் நம்மை தமக்குச் சொந்தமாக முத்திரையிட்டுள்ளார், மீட்கப்படும் நாளில் நாம் இரட்சிக்கப்படுவோம் என்று உத்தரவாதம் அளித்துள்ளார் (வ. 30). அவருடனான நமது உறவின் நிமித்தம் அவருடைய ஞானமான மற்றும் அன்பான கரங்களில் நம் கோபத்தை ஒப்புக்கொடுக்கலாம்.

-மைக் விட்மர்

மேலும் வாசிக்க

நீதிமொழிகள் 14:16-17, 22:24-25 மற்றும் 29:11, 22ஐப் படியுங்கள். நாம் கோபத்தை எவ்வாறு கையாள வேண்டும் என்று தேவன் விரும்புகிறார்?

சிந்திக்க

சமீபத்தில் உங்களைக் கோபப்படுத்தியது எது? உங்கள் கோபத்திலும் தேவனை எவ்வாறு கனப்படுத்த முடியும்?