குடும்பத்தினர் செய்ய ஆயத்தமாயில்லாத எந்த காரியத்தையும் அவர்கள் செய்ய வேண்டும் என்று ராஜா எதிர்பார்க்கவில்லை. ஆற்றுக்கு அப்புறத்திலிருக்கும் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்கு தன்னுடைய தெரிந்துகொள்ளப்பட்ட தேசத்தை கூட்டிச்செல்லுவதற்கு இடையில் இருக்கும் பெரிய பள்ளத்தாக்கின் வழியாய் போவதற்கு பதிலாக, வேறொரு பாதையை ராஜா தேர்வுசெய்கிறார். 40 வருடங்கள், வறட்சியான வனாந்திரத்தில் அவர்களை போஷித்தார். பாலைவன மணலில் புதைந்திருக்கும் தேசத்திற்கு போக விரும்பாத சந்ததி வரும்வரை அவர்கள் ராஜாவின் நிழலில் ஓரு ஆட்டு மந்தையைப் போல இருந்தனர்.
மீண்டும் தன்னைப் பின்பற்றி ஆற்றைக் கடந்துவரும்படிக்கு ராஜா அவர்களை அழைக்கிறார். தண்ணீரின் அருகாமையில் வரும்போது, பள்ளத்தாக்கு நீருற்றால் நிரம்பியிருந்தது. தங்களுடைய எதிர்கால தேசத்தின் அருகாமையில் அவர்கள் வந்துசேர்ந்தபோதிலும், தங்கள் முன்பாக பெருக்கெடுத்து ஓடும் தண்ணீரில் கால் வைத்தால், அது அவர்களை அடித்துக் கொண்டுபோய்விடும் அளவிற்கு வீரியம் நிறைந்ததாயிருந்தது. தங்களுடைய புதிய வீட்டின் அருகாமையில் வந்துசேர்ந்த குடும்பத்திற்கு தன்னை நம்பும்படிக்கு ராஜா அறிவுறுத்துகிறார். தெற்கு தேசத்து ராஜாவின் கைகளிலிருந்து அவர்களைப் பாதுகாக்க தண்ணீரை இரண்டாய் பிளந்ததுபோல, தன்னுடைய குடும்பத்தை வழிநடத்தி அவர்களை போஷிக்க தண்ணீரை இரண்டாய் பிளக்கிறார். ராஜாவின் பராக்கிரமத்தினால் குடும்பத்தினர் தங்களுடைய புதிய தேசத்திற்கு வெட்டாந்தரiயில் நடந்து சென்றனர்.
கரைக்கு அப்புறத்திலும் அவர்களின் பல பழைய பிரச்சனைகள் நீடித்தது. அந்த தேசம் யுத்த வீரர்களால் நிறைந்திருந்தது. ராஜா அவர்களுக்கு கொடுப்பதாக வாக்குபண்ணிய தேசம் ஏற்கனவே ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. அதை ஆக்கிரமித்தவர்கள் சண்டையிடுவதற்கும் ஆயத்தமாயிருந்தனர். ஆனால் தற்போது அதை ஆக்கிரமித்திருக்கிறவர்களை அப்புறப்படுத்த ராஜா தீர்மானித்திருந்தார். ஏனென்றால் அது ராஜாவின் தேசம். அதில் வசித்தவர்கள் அதின் சுற்றுப்புறத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தி, ஒருவருக்கு ஒருவர் தீமை செய்து, அவரை ராஜா என்று ஏற்றுக்கொள்ள மறுத்தனர். அதைத் தொடர்ந்த நாட்கள் குடும்பத்தினருடைய வாழ்வில் மறக்கமுடியாத நாட்கள். தங்களுடைய புதிய வீடுகளுக்காய் யுத்தம் செய்யும் படிக்கு ராஜா கட்டளையிட்டிருந்தாலும், அவர்களுக்கான ஆசீர்வாதத்தை அவர் உறுதிசெய்திருந்தார். பிள்ளைகள் சற்றும் எதிர்பாராத வகையில், அவர்கள் கைகளால் கட்டப்படாத வீட்டை சுதந்தரிக்கவும், அவர்கள் விதைக்காத தானியத்தை அறுவடை செய்யவும் ராஜா அவர்களுக்கு முன் தன் பராக்கிரமத்தை நிரூபித்தார். ராஜாவின் திட்டம் கட்டவிழ்க்கப்பட்டது. அவர்களுடைய ராஜாவை நம்பும் யாவருக்கும் அவர் உதவி செய்ய வல்லவர் என்பதை சாட்சியிடும் ஸ்தானத்தில் குடும்பத்தினர் ஏற்படுத்தப்பட்டனர்.
அவர்களின் புதிய வீடு மேன்மையான ஒரு வாழ்க்கையை அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்தது. ராஜாவின் தரிசனத்தைப் பறைசாற்றும் மைய ஸ்தலமாகவும் அந்த புதிய வீடு அமைந்தது. மூன்று கண்டங்களை இணைக்கும் ஒரு தரைப்பாலத்தில் அதின் பூகோள அமைப்பு அமைந்திருந்தது. அதின் மேற்கு எல்லையானது பெரிய சமுத்திரத்தின் கரையில் அமைந்திருந்தது. அதின் முக்கிய சாலைகள், அங்கிருக்கும் அனைத்து தேசத்தின் வர்த்தகத்திற்கும் இராணுவத்திற்கும் இணைப்பு பாலங்களாய் அமைந்திருந்தது. இவர்களின் இந்த புதிய தேசத்து செய்தியானது, வர்த்தக சாலைகள் மூலமாக சுற்றியிருந்த அனைத்து தேசத்திற்கும் தீ போல பரவியது.
உலகத்தின் வர்த்தக சாலைகளை இணைக்கும் ஸ்தலமாய் புதிய தேசம் அமைந்தது.
அவர்களின் புதிய உறவினர்களுக்கு நடுவில், அவர்களுக்குக் கற்றுக்கொடுத்திருந்த அனைத்தையும் அவர்கள் கைக்கொள்ளும்படிக்கு ராஜா விரும்பினார். ஆறு நாட்கள் வேலை செய்யவும் ஏழாம் நாட்கள் ஓய்ந்திருக்கவும் அவர்களுக்கு கற்றுக்கொடுக்கப்பட்டிருந்தது. அவர்களின் விளைச்சல்களுக்கு முன்மாரி மற்றும் பின்மாரி பருவ மழைகளுக்காய் அவர்கள் ராஜாவை எவ்விதம் சார்ந்திருக்கவேண்டும் என்றும் அவர்களுக்கு கற்றுக்கொடுக்கப்பட்டது. அவர்களின் வாழ்வாதாரத்திற்காகவும் பாதுகாப்பிற்காகவும் அவர்கள் ராஜாவை சார்ந்திருக்க அவர்களுக்கு போதிக்கப்பட்டிருந்தது. குடும்பத்தினரின் இந்த வாழ்க்கை சரித்திரத்திலிருந்து ஓர் அழகான உலகளாவிய கொள்கை உருவானது. ராஜாவின் குடிமக்கள் அவரை நம்பி, உதவிக்காய் அவரை சார்ந்திருந்து, அவர் சொன்னபடி வாழ்ந்தபோது, அவர்கள் எதிரிகளின் அச்சுறுத்தல்களிலிருந்து விலகி, இளைப்பாறுதலை அனுபவித்தனர். ஆனால் அவர்கள் ராஜாவை மறந்து, தங்களுடைய நியாயத்தை தாங்களே ஏற்படுத்திக்கொள்ள முயன்று, தங்களின் பார்வைக்கு சரியென தோன்றுவதை செய்தபோது, அவர்கள் எதிரிகளால் கைப்பற்றப்பட்டு, தகப்பனையும் பிள்ளைகளையும் இழந்து தவிக்க நேர்ந்தது.
மற்றவர்களைப் போல் வாழ எண்ணிய எண்ணம்
தான் தெரிந்துகொண்ட தேசத்திற்கு அனைத்து நன்மைகளையும் ராஜா செய்திருந்தாலும், அவரிடத்தில் அவர்கள் எந்த நன்மையையும் பெற்றுக்கொள்ளாதவர்கள் போலவே செயல்பட்டனர். அவ்வாறு நன்றி மறந்த அவர்கள், ஒரு பெரிய தவறை இழைத்தனர். அவர்களின் அந்நிய உறவினர்களைப் போல தங்களுக்கும் மனித தலைவர்கள் வேண்டும் என்று ராஜாவிடம் விண்ணப்பித்தனர். தங்களுக்குள் ஒரு உறுதியான தலைவனைத் தேர்ந்தெடுக்க குடும்பத்தினர் அதிகம் விரும்பினர். அவ்வாறு ஏற்படுத்தப்படும் புதிய தலைவன் அவர்கள் மீது அதிக வரியை திணிப்பான் என்றும் தன்னுடைய சுய விருப்பத்தை நிறைவேற்ற மக்களைப் பயன்படுத்திக்கொள்வான் என்றும் தன்னுடைய யுத்தத்தைச் செய்வதற்கு அவர்களின் பிள்ளைகளை இழுத்துச்செல்வான் என்று ராஜா அவர்களை எச்சரித்தபோதிலும், ராஜாவின் சத்தத்திற்கு அவர்கள் செவிகொடுக்கவில்லை.
தன்னுடைய குடும்பத்திற்கு முழு சுதந்திரத்தை ராஜா கொடுத்திருக்கிறார் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார். தன்னுடைய குடிமக்கள் கேட்டதை அவர் கொடுத்தார். அவர்களில் ஒருவனை அவர் அவர்களுக்கு தலைவனாய் ஏற்படுத்தி, அவன் தனக்கு உண்மையுள்ளவனாயிருக்கிறானா என்பதை உறுதி செய்து, தொடர்ந்து தன்னுடைய குடும்பத்தை ராஜா பராமரித்தார்.
அதிகார துஷ்பிரயோகம்
குடும்பத்தினரின் இந்த பெரிய தவறு விரைவில் அம்பலமாகியது. நாட்கள் நகர, அவர்களுடைய சிறந்த மன்னர்கள் கூட அதிகாரத்தால் சிதைக்கப்பட்டனர். நல்ல தலைவர்கள் தவறானவர்களாய் மாற, தவறான தலைவர்கள் இன்னும் மோசமான நிலைக்கு மாறினர். தங்களுடைய தலைமைத்துவ செல்வாக்கை வைத்து குடும்பத்தை ராஜாவின் பக்கம் திசைதிருப்ப வேண்டிய தலைவர்கள், அதை செய்யாமல், தங்களுடைய இராஜ்யத்தை வலுவாக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
தலைவர்களின் பாவம் நிறைந்த பாதையில் மக்களும் பயணித்தனர். நியாயப்பிரமாணம் செல்லாமற்போய், மீறுதல்கள் அதிகரித்தது. தான் மக்களைப் பராமரிப்பதுபோல தன்னுடைய குடும்பத்தினரும் ஒருவரையொருவர் பராமரிக்கவேண்டும் என்னும் ராஜாவின் திட்டம் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டு, மறக்கப்பட்டது.
தூதுவர்களின் தொடர் முயற்சி
குடும்பத்தினர் ராஜாவை மறந்தாலும், ராஜா குடும்பத்தை மறக்கவில்லை. அவர்கள் அவரை விட்டு சுற்றித் திரிந்தாலும், அவர் அவர்களை விட்டுவிடவில்லை. ராஜாவின் சார்பில் தூதுவர்கள் அனுப்பப்பட்டு, குடும்பத்தினரைக் குறித்த ராஜாவின் சித்தத்தை அவர்களுக்கு வெளிப்படுத்தினார். எதிர்காலத்தைக் குறித்த திட்டத்தை அவர் மாற்றிக்கொள்ளவில்லை. அவர்கள் அவரை நம்ப மறுத்தபோதிலும், “நம் நடுவில் இருக்கும் ராஜா” என்று அழைக்கப்படப்போகிற சிறந்த தலைவரும் மீட்பரையும் அவர்களுக்கு அனுப்ப ராஜா தீர்மானித்திருந்தார்.
“எதிர்காலத்தில் சம்பவிக்கப்போகிற” அந்த நாளுக்காய் காத்திருக்க குடும்பத்தினர் ஆயத்தமாயில்லை. அவர்களுக்கு உடனடி தீர்வு தேவைப்பட்டது. அவர்களின் இந்த உடனடி தேவைக்கு உதவுவதற்கு ராஜா முன்வரவில்லை என்றால், அவர்கள் வேறோரு ராஜாவை தேடிப்போக வேண்டியிருக்கும். ஆனால் ராஜாவின் செய்தி ஒன்று தான். அவர்களுக்கு மீட்பரை அனுப்பி, ராஜாவே அவர்களின் நடுவில் வாழும்போது, பூமியில் சமாதானம் நிலைத்திருக்கும். பூமியில் இருக்கும் அனைத்து தேசங்களும் குடும்பங்களும் ஒருவரையொருவர் கனப்படுத்தி வாழவேண்டும். ஆனால் குடும்பத்தினர் தங்களுடைய தற்போதைய வேதனையையும் பிரச்சனைகளையும் பொருட்டாக எண்ணுவதால், அந்த செய்தியானது செவிடன் காதில் விழுந்த செய்தியாய் மாறிப்போனது. குடும்பத்தின் தலைவர்கள் ராஜாவின் செய்தியை சுமந்து வந்த தூதுவர்களை பேச அனுமதிக்கவில்லை.
ராஜாவின் பொறுமை முடிவுக்கு வந்தது. இப்போது ராஜா இடைபடவில்லை என்றால், குடும்பத்தினரின் பாவம் பெருகி, மொத்த குடும்பத்திற்கும் பாதிப்பு ஏற்படும். எனவே ஆழ்ந்த வருத்தத்துடன், அவர்களை சுற்றி ராஜா ஏற்படுத்தி வைத்திருந்த பாதுகாப்பு வளையத்தை அகற்றுகிறார். கிழக்கிலிருந்து வந்த இராணுவத்தினால், தன்னுடைய குடிமக்களின் இராணுவ தடவாளங்களை தகர்க்க கனத்த இருதயத்தோடு அனுமதித்தார். குடும்பத்தினரின் பிள்ளைகள் யுத்தத்தில் மடிந்தனர். குடும்பத்தில் மீதமிருப்பவர்கள் கனவீனப்படுத்தப்பட்டு, வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தை விட்டு அப்புறப்படுத்தப்பட்டனர். பல மைல்களுக்கு அப்பால், அந்நிய தேசத்து மொழி தங்கள் காதுகளில் தொனிக்க, அந்நிய தேசத்து ராஜாவின் விதிகளையும் கொள்கைகளையும் நுகங்களாய் கழுத்தில் ஏற்று, தங்கள் கண்களில் மல்கிய கண்ணீரைத் துடைத்தனர்.
திரும்புதல்
70 ஆண்டுகள் சிறையிருப்பிற்கு பின்னர், குடும்பத்தினரை சிறைபிடித்திருந்த ராஜ்யம் வேறொரு ஆட்சியரால் கைபற்றப்பட்டிருந்தது. புதிய நாள் உதயமானது. பிணையக் கைதிகள் தங்கள் சுயதேசம் திரும்ப அனுமதிக்கப்பட்டனர். அவர் திரும்பி வந்த பின்பு, ராஜா தன்னுடைய தூதுவர்களை மீண்டும் அவர்களிடத்திற்கு அனுப்பி, தான் அவர்களை பராமரிக்க ஒருபோதும் தவறியதில்லை என்பதை வெளிப்படுத்துகிறார். தெரிந்துகொள்ளப்பட்ட குடும்பத்துக்கு மட்டுமல்லாது, உலகில் இருக்கும் அனைத்து குடும்பத்தினருக்கும் செழிப்பையும் இளைப்பாறுதலையும் கொடுக்கும் ராஜாவின் தரிசனம் இன்னும் அப்படியே இருக்கிறது என்பதை அந்த தூதுவர்கள் பிரசங்கித்தனர்.
குடும்பத்தினருக்கு தற்காலிகமாய் ஓர் நம்பிக்கை ஏற்பட்டது. யுத்த ஆயுதங்கள் போரடிக்கும் கருவிகளாய் ஒரு நாள் மாற்றப்படும் என்று அவர்கள் கனவு கண்டனர். இயற்கையும் அவர்களுடன் சமாதானமாயிருக்கும் நாளைக் குறித்து ராஜா அவர்களுக்கு அறிவித்திருந்த நாளை நினைவுகூர்ந்தனர். அந்த இளைப்பாறுதலின் நாளில், ஓநாயும் ஆட்டுக்குட்டியினை துரத்துவதில்லை.
காலங்கள் கடக்க, குடும்பத்தினரின் இருதயம் மீண்டும் கடினமானது.
மௌனம்
ஆனால் காலங்கள் கடக்க, குடும்பத்தினரின் இருதயம் மீண்டும் கடினமானது. நினைவுகள் மறக்கடிக்கப்பட்டது. பெரிய ராஜாவின் சத்தம் 400 ஆண்டுகள் கேட்கப்படவில்லை. முடிவில்லாத இரவுகளினால், வாக்குப்பண்ணப்பட்ட அந்த புதிய நாளைக் குறித்த நம்பிக்கை தேய ஆரம்பித்தது.