சிலர் இரதங்களைக்குறித்தும், சிலர் குதிரைகளைக் குறித்தும் மேன்மை பாராட்டுகிறார்கள்; நாங்களோ எங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைக் குறித்தே மேன்மை பாராட்டுவோம். சங்கீதம் 20:7

முப்பத்திரண்டு ஆண்டுகள் ஓர் மனிதனின் வாழ்க்கையை பயம் அரசாட்சி செய்து கலங்கடித்தது. தனது குற்றங்களுக்காக பிடிபட்டுவிடுவோம் என்று பயந்து அவர் தனது சகோதரியின் பண்ணை வீட்டில் ஒளிந்து கொண்டார்; வேறு எங்கும் செல்லவில்லை, யாரையும் பார்க்கவில்லை, தனது தாயின் இறுதிச் சடங்கைக்கூட காணவில்லை. அறுபத்து நான்கு வயதானபோது, அவர் மீது எந்தக்குற்றச்சாட்டும் பதிவு செய்யப்படவில்லை என்பதை உணர்ந்தார். ஓர் சாதாரணமனித வாழ்க்கையை மீண்டும் தொடங்க விடுவிக்கப்பட்டார். ஆம், தண்டிக்கப்பட்டுவிடுவோம் என்ற ஐயம் நியாயமானதுதான்; ஆனால் தண்டனையைக் குறித்த பயம் அவரைக ஆட்கொள்ள அனுமதித்தார்.

இதைபோன்று, ஏலா பள்ளத்தாக்கில் பெலிஸ்தியர்கள் சவால் விட்டபோது பயம் இஸ்ரவேலர்களை ஆட்சி செய்து கலங்கடித்தது. அச்சுறுத்தல் உண்மையானதுதான். அவர்களின் எதிரியான கோலியாத் 9 அடி 9 அங்குலம் உயரமும், அவரது உடல் கவசம் மட்டும் 125 பவுண்டுகள் எடையுள்ளதுமாக இருந்தது (1 சாமுவேல் 17:4-5). கோலியாத் நாற்பது நாட்கள் தினமும் காலையிலும் மாலையிலும் இஸ்ரவேல் இராணுவம் தன்னுடன் போரிட வரும்படி சவால் விடுத்தார். ஆனால் யாரும் முன்வரத் துணியவில்லை. தாவீது போர்க்களத்தைக் காண வரும்வரை யாரும் எதிர்த்து நிற்கவில்லை. கோலியாத் இஸ்ரவேலர்களை கேலி செய்வதைக் கேட்ட தாவீது, துணிவுடன் போரிட முன்வந்தார்.

இஸ்ரவேலின் இராணுவத்தில் இருந்த அனைவரும் கோலியாத் சண்டையிடுவதற்கு மிகவும் பலசாலியாயிருக்கிறார் என்று நினைத்தபோது, ஆடு மேய்க்கும் சிறுவனான தாவீது மட்டும் கர்த்தருக்கு முன்பாக அவர் பெரியவர் அல்ல என்பதை அறிந்திருந்தார். ”கர்த்தர் பட்டயத்தினாலும் ஈட்டியினாலும் ரட்சிக்கிறவர் அல்ல; யுத்தம் கர்த்தருடையது” (வச. 47) என்றார்.

நாம் பயத்தால் சூழப்படும்போது தாவீதின் முன்மாதிரியைப் பின்பற்றி, பிரச்னையைப் பற்றிய சரியான கண்ணோட்டத்தைப் பெற கர்த்தரை நோக்கிப் பார்ப்போம். அச்சுறுத்தல் உண்மையானதாக இருக்கலாம், ஆனால் நமக்கு எதிராக இருப்பதைவிட நம்மோடும் நமக்காகவும் இருப்பவர் மிகவும் பெரியவர்.

– ஆல்பர்ட் லீ

சிந்தனை

பயத்தில் உங்களை முடக்கும் எத்தகைய மாபெரும் போரை எதிர்கொள்கிறீர்கள்? ஜீவனுள்ள தேவனின் மீது முழுமுதலாய்உங்கள் கண்களை எவ்வாறு நிலைநிறுத்த முடியும்?
தேவனே, எனது வாழ்க்கையில் உள்ள மற்றெல்லா ராட்சத தடைகளையும்விட நீர் பெரியவராய் இருப்பதற்கு நன்றி. நான் உம்மை விசுவாசிக்கிறேன்.

 

 

 

banner image