“…கிறிஸ்துவானவர் வேதவாக்கியங்களின்படி நமது பாவங்களுக்காக மரித்து, அடக்கம்பண்ணப்பட்டு, வேதவாக்கியங்களின்படி மூன்றாம்நாளில் உயிர்த்தெழுந்து,” (1 கொரிந்தியர் 15: 3-4)

சிலுவைகள் தேவாலயத்தின் செங்குத்தான கோபுரங்களையும் அலங்கரிக்கின்றன, கல்லரைத் தோட்டங்களிலும் புதைக்கப்படுகின்றன. சில நேரங்களில் அவை சாலை விபத்துகளில் மக்கள் இறந்த இடத்தில் குறியீடுகளாக உள்ளன. அவை நகைகளாகவும் அணியப்படுகின்றன.

என் மேற்சட்டை பையிலிருந்த ஒரு சிறிய தங்கச் சிலுவையைப் பார்த்த ஒரு தொழிலதிபர், “நீங்கள் ஏன் கிறிஸ்துவில் விசுவாசியாக இருக்கிறீர்கள்?” என்று என்னிடம் கேட்டபோதுதான், சிலுவைகள் இயேசு கிறிஸ்துவை மக்களுக்கு நினைவூட்டுகின்றன என்பது எனக்குத் தெரிய வந்தது. என் நம்பிக்கையை அவருடன் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்ததற்காக நான் மகிழ்ச்சியடைந்தேன்.

இயேசு நமக்காகச் சிலுவையில் மரித்தார், ஆனால் நாம் மரித்துப் போன ஒரு இரட்சகரை ஆராதிப்பதில்லை. நமது ஆண்டவரின் உடல் சிலுவையிலிருந்து இறக்கப்பட்டு கல்லறையில் வைக்கப்பட்டது. மூன்றாம் நாள் அவர் மகிமைப்படுத்தப்பட்ட சரீரத்தில் வெளிப்பட்டார்.

நம்முடைய பாவத்திற்கான விலையைச் செலுத்துவதற்காக நம்முடைய கர்த்தரின் பாவ நிவாரண மரணத்தின் ஒட்டுமொத்த உருவத்தையும், மரணத்தின் வல்லமையிலிருந்து நம்மை விடுவிப்பதற்காக அவருடைய மகிமையான உயிர்த்தெழுதலைப் பற்றியும் சிலுவை நம்மிடம் பேசுகிறது.

கிறிஸ்து சிலுவையில் மரிக்கவில்லை என்றால், நாம் அனைவரும் தேவனுக்கு முன்பாக குற்றவாளிகளாகவும், மரணத்தின் முன் நம்பிக்கையற்றவர்களாகவும் நிற்போம். ஆனாலும் அவர் மீதுள்ள விசுவாசத்தின் மூலம், நம்முடைய பாவங்களுக்கு மன்னிப்பும், மரணம் நம்மைக் கட்டுப்படுத்தாது என்ற உறுதியையும் பெறுகிறோம்.

நீங்கள் சிலுவையைப் பார்த்து, அதிலே மரித்த இயேசுவின் மீது நம்பிக்கை வைத்தீர்களா? அதுவே குற்ற உணர்வு மற்றும் பயத்திற்கான ஒரே உறுதியான, சரியான தீர்வுமாகும். அதின் அர்த்தம்; இருண்ட காலங்களிலும் தேவன் நம்மை நேசிக்கிறார், நம்முடன் இருக்கிறார், நமது அனுதின தேவைகளைப் பூர்த்தி செய்கிறார் என்பதே.

— ஹெர்பர்ட் வாண்டர் லக்ட்