ஆபிரகாமுக்கு இரண்டு குமாரர் இருந்தார்கள் என்று எழுதியிருக்கிறது; ஒருவன் அடிமையானவளிடத்தில் பிறந்தவன், ஒருவன் சுயாதீனமுள்ளவளிடத்தில் பிறந்தவன். கலாத்தியர் 4:22
கலாத்தியர்களின் இந்த அத்தியாயத்தில் பவுல் பாவத்தைப் பற்றிப் பேசவில்லை. ஆனால் ஆவிக்குரியதற்கும், ஜென்ம சுபாவத்திற்குமிடையே உள்ள உறவைப் பற்றிப் பேசுகிறார். தியாகத்தின் மூலம்தான் ஜென்ம சுபாவத்தை ஆவிக்குரியதாக மாற்ற முடியும். இது இல்லாமல் ஒரு நபர் பிளவுபட்ட வாழ்க்கையை நடத்துவார். ஜென்ம சுபாவத்தைப் பலியிட வேண்டும் என்று தேவன் ஏன் கோரினார்? தேவன் அதைக் கோரவில்லை. இது தேவனின் பரிபூரண சித்தம் அல்ல, மாறாக அவருடைய அனுமதிக்கப்பட்ட சித்தம். கீழ்ப்படிதலின் மூலம் ஜென்ம சுபாவமானது ஆவிக்குரியதாக மாற்றப்பட வேண்டும் என்பதே தேவனின் பரிபூரண சித்தம். பாவம் தான் ஜென்ம சுபாவம் பலியிடப்பட வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தியது.
ஆபிரகாம் ஈசாக்கைப் பலியிடுவதற்கு முன் இஸ்மவேலைப் பலியிட வேண்டியிருந்தது (ஆதியாகமம் 21:8-14ஐப் பார்க்கவும்). நம்மில் சிலர் ஜென்ம சுபாவத்தைப் பலியிடுவதற்கு முன், தேவனுக்கு ஆவிக்குரிய பலிகளைச் செலுத்த முயல்கிறோம். “சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக” (ரோமர் 12:1) ஒப்புக்கொடுப்பதைத் தவிரத் தேவனுக்கு ஆவிக்குரிய பலிசெலுத்தும் வேறெந்த வழிமுறையும் இல்லை. பரிசுத்தம் என்பது பாவத்திலிருந்து விடுபடுவதை விட அதிகமானது; இது எனது இரட்சிப்பின் தேவனுக்கு வேண்டுமென்றே என்னை அர்ப்பணிப்பதும், அதற்கு என்ன விலைக்கிரயமானாலும் செலுத்தத் தயாராக இருப்பதும்..
நாம் ஜென்ம சுபாவத்தை ஆவிக்குரியதற்குத் தியாகம் செய்யாவிட்டால், ஜென்ம சுபாவமான வாழ்க்கை நமக்குள் இருக்கும் தேவனுடைய குமாரனின் வாழ்க்கையை எதிர்த்து நிற்கும், இதனால் தொடர்ந்து கொந்தளிப்பு உருவாகும். இது ஒழுக்கமற்ற ஆவிக்குரிய இயல்புகளின் விளைவு. உடல் ரீதியாகவோ, ஒழுக்க ரீதியாகவோ அல்லது மனரீதியாகவோ நம்மை ஒழுங்குபடுத்த நாம் பிடிவாதமாக மறுப்பதால்; நாம் தவறுகிறோம். “சரி, நான் குழந்தையாக இருந்தபோது ஒழுக்கமாக இருக்கக் கற்றுக்கொடுக்கப்படவில்லை” என்று சாக்கு சொல்லி நம்மைச் சமாதானப்படுத்துகிறோம். அப்படியானால் இப்போதே உங்களை ஒழுங்குபடுத்துங்கள்! நீங்கள் அவ்வாறு செய்யாவிட்டால், தேவனுடனான உங்கள் முழு தனிப்பட்ட வாழ்க்கையையும் அழித்துவிடுவீர்கள்.
நம் ஜென்ம சுபாவமான வாழ்க்கையை நாம் தொடர்ந்து மகிழ்வித்துத் திருப்திப்படுத்தும் வரை, தேவன் அதில் தீவிரமாக ஈடுபடுவதில்லை. ஆனால் வனாந்தரத்திற்கு அதை வெளியேற்றுவதற்கு நாம் தயாராக இருந்தால், அதைக் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருப்பதில் உறுதியாக இருந்தால், தேவன் அதனுடன் இருப்பார். பின்னர் அவர் கிணறுகளையும் சோலைகளையும் வழங்குவார் மற்றும் சுபாவத்திற்கான அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவார் (ஆதியாகமம் 21:15-19 ஐப் பார்க்கவும்).
எழுதியவர்: ஆஸ்வால்டு சேம்பர்ஸ்
சிந்தனை
ஒரு மனிதனின் உள்ளம் தேவனுடன் சரியாக இருக்கும்போது, வேதத்தின் மர்மமான வார்த்தைகளும்கூட அவனுக்கு ஆவியாகவும் ஜீவனாகவும் இருக்கின்றன. ஆவிக்குரிய உண்மை என்பது தூய்மையான இதயத்திற்கு மட்டுமே தெரியும், கூரிய அறிவுக்கு அல்ல. இது புத்தியின் ஆழம் பற்றிய காரியம் அல்ல, இதயத்தின் தூய்மை பற்றியது.