ஜீவனைப்பார்க்கிலும் உமது கிருபை நல்லது; என் உதடுகள் உம்மைத் துதிக்கும். சங்கீதம் 63:3
என் மகன் சேவியர், பல ஆண்டுகளாக கையால் செய்த கிறிஸ்துமஸ் அலங்காரப்பொருட்களையும், வருடாவருடம் பாட்டி அனுப்பும் பொருந்தாத வர்ண விளக்குகளையும் பார்க்கும்போது, இந்த அலங்காரங்கள் ஏன் எனக்கு திருப்தியளிக்கவில்லை என்று என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. நான் அலங்காரம் செய்யும் கற்பனையாற்றலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பேன். மேலும் அதில் இடம்பெற்றிருக்கும் ஒவ்வொரு பொருட்களின் முக்கியத்துவமும் அர்த்தமுள்ளதாய் இருக்கவேண்டும் என்று நான் விரும்புவேன். சில்லறை விற்பனைக் கடைகளில் வைக்கப்பட்டிருந்த, சரியான வர்ண விளக்குகள், மின்னும் பந்துகள், சாட்டின் ரிப்பன்கள் ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்ட கிறிஸ்மஸ் மரத்தின் காட்சியானது என்னை வெகுவாய் ஈர்த்தது.
ஆனால் எங்களுடைய அலங்காரத்தை நான் பார்வையிடும்வேளையில், ஒரு சிவப்பு நிற இருதய வடிவிலான அலங்காரப்பொருளில், “இயேசு, என் இரட்சகர்” என்ற வாசகம் எழுதப்பட்டிருந்ததை கவனித்தேன். நானும் என் குடும்பமும் கிறிஸ்மஸ் கொண்டாடுவதற்கு கிறிஸ்துவின் மீதான நம்பிக்கையே காரணம் என்பதை என்னால் எப்படி மறக்கமுடிந்தது? அந்த கடையில் இருந்த அலங்கார மரத்தைப்போல எங்களுடைய கிறிஸ்மஸ் மரம் வெகுவிமரிசையாக இல்லை என்பது உண்மையே, ஆனால் ஒவ்வொரு அலங்காரத்திற்கும் பின்னிருக்கும் அன்பே அவற்றை அழகாய் காண்பிக்கிறது என்பதே நிஜம்.
எங்கள் எளிமையான கிறிஸ்மஸ் மரத்தைப் போன்று, மேசியாவும் உலகத்தின் அலங்கார தேவைகளை பூர்த்திசெய்வதற்காய் வரவில்லை (ஏசாயா 53:2). அவர் “அசட்டைபண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரு(மாயிருந்தார்)” (வச. 3). ஆகிலும் “நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு” (வச. 5) அவருடைய அன்பின் மேன்மையை விளங்கப்பண்ணினார். அவர் நம்முடைய ஆக்கினையை எடுத்துக்கொண்டு, நமக்கு சமாதானத்தை அருளினார் (வச. 5). இதைக்காட்டிலும் அழகானது வேறெதுவும் இருக்கமுடியாது.
நேர்த்தியற்ற கிறிஸ்மஸ் அலங்காரத்தையும் நேர்த்தியான இரட்சகரையும் பார்த்து, அலங்காரத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதைக் காட்டிலும் அவருடைய மகிமையான அன்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கத் தீர்மானித்தேன். மின்னும் அலங்கார விளக்குகளின் ஒளியினால் இயேசுவின் அழகான தியாகத்தை வெளிப்படுத்தமுடியாது. சோச்சில் டிக்ஸன்
இயேசுவுக்கு நன்றிசெலுத்துவதை உங்கள் கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தின் அங்கமாய் எவ்விதம் மாற்றுவீர்கள்? அவருடைய சிலுவை தியாகம் உங்களுக்கு என்ன அர்த்தம் கொடுக்கிறது?
அன்பான தேவனே, உம்முடைய தியாகத்திலிருந்து பிரகாசிக்கும் அழகான அன்பை பார்க்க எனக்கு உதவிசெய்யும்.
ஏசாயா 53:1-9
1. எங்கள் மூலமாய்க் கேள்விப்பட்டதை விசுவாசித்தவன் யார்? கர்த்தருடைய புயம் யாருக்கு வெளிப்பட்டது? 2. இளங்கிளையைப்போலவும், வறண்ட நிலத்திலிருந்து துளிர்க்கிற வேரைப்போலவும் அவனுக்கு முன்பாக எழும்புகிறார்; அவருக்கு அழகுமில்லை, சௌந்தரியமுமில்லை; அவரைப் பார்க்கும்போது, நாம் அவரை விரும்பத்தக்க ரூபம் அவருக்கு இல்லாதிருந்தது. 3. அவர் அசட்டைபண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும், துக்கம் நிறைந்தவரும், பாடு அநுபவித்தவருமாயிருந்தார்; அவரைவிட்டு, நம்முடைய முகங்களை மறைத்துக்கொண்டோம்; அவர் அசட்டைபண்ணப்பட்டிருந்தார்; அவரை எண்ணாமற்போனோம். 4. மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார்; நாமோ, அவர் தேவனால் அடிபட்டு வாதிக்கப்பட்டு, சிறுமைப்பட்டவரென்று எண்ணினோம். 5. நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம். 6. நாமெல்லாரும் ஆடுகளைப்போல வழிதப்பித் திரிந்து, அவனவன் தன் தன் வழியிலே போனோம்; கர்த்தரோ நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும் அவர்மேல் விழப்பண்ணினார். 7. அவர் நெருக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் இருந்தார், ஆனாலும் தம்முடைய வாயை அவர் திறக்கவில்லை; அடிக்கப்படும்படி கொண்டுபோகப்படுகிற ஒரு ஆட்டுக்குட்டியைப்போலவும், தன்னை மயிர்கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தமிடாதிருக்கிற ஆட்டைப்போலவும், அவர் தம்முடைய வாயைத் திறவாதிருந்தார். 8. இடுக்கணிலும் நியாயத்தீர்ப்பிலுமிருந்து அவர் எடுக்கப்பட்டார்; அவருடைய வம்சத்தை யாரால் சொல்லி முடியும்; ஜீவனுள்ளோருடைய தேசத்திலிருந்து அறுப்புண்டுபோனார்; என் ஜனத்தின் மீறுதலினிமித்தம் அவர் வாதிக்கப்பட்டார். 9. துன்மார்க்கரோடே அவருடைய பிரேதக்குழியை நியமித்தார்கள்; ஆனாலும் அவர் மரித்தபோது ஐசுவரியவானோடே இருந்தார்; அவர் கொடுமை செய்யவில்லை; அவர் வாயில் வஞ்சனை இருந்ததுமில்லை.