உணர்ச்சிபூர்வமான, ஆரோக்கியமான வாழ்வின் சவால்களுக்கு முன்பாக அடிக்கடி பெருத்த தாக்குதலுக்குள்ளாகிறோம். நம்முடைய உணர்ச்சிபூர்வமான ஆரோக்கியத்தை ஒரு வங்கிக் கணக்காகவும், நமது உணர்வுகளை பணநோட்டாகவும் சிந்தித்தோமானால், அங்கே பணவைப்பும் இருக்கும், மீள்பெறுதலும் இருக்கும். நாங்கள் எதிர்நோக்குகின்ற மனஅழுத்தம், நிச்சயமற்ற தன்மை, மற்றும் அநேக போராட்டங்கள் யாவும், நம்முடைய உணர்ச்சிபூர்வமான வங்கியிலிருந்து மீள்பெறுதல்களைச் செய்ய முடியும். மற்றும், நம்மை நிரப்புகிறதும் நம்மைப் பெலப்படுத்துகிறதுமான நம்முடைய வழமையான வைப்புகளை நம்மால் செய்யமுடியாதிருப்பதால், நம்மில் பலர் ஒன்றுமில்லாதவர்கள் ஆகிவிடுகிறோம்.

எலியாவும்கூட இதைப்போன்றுதான் ஒரு சூழ்நிலையை எதிர்கொண்டார்; பாகாலின் தீர்க்கதரிசிகளுடனான அவருடைய மோதலின் பின்பு அவருடைய உணர்வு மற்றும் ஆவிக்குரிய வங்கியானது வெறுமையானதாகத் தோன்றியது. எனவே, யெசபேல் அவரைக் கொலைசெய்துவிடுவதாகப் பயமுறுத்தியபோது, அவர் எதுவும் இல்லாதவராக பீதியடைந்து ஓடினார். அதிர்ஷ்டவசமாக, அந்நிய தேசத்தில் ஒரு விதவையின் உதவியைக் கண்டுகொண்டார்; அங்கே அவருக்கு அரணும் பாதுகாப்பும், காயமுற்றிருந்த அவருடைய உணர்வுகளை மீண்டும் கட்டியெழுப்ப இடமும் கிடைத்தது.

மன அழுத்தத்தைக் கையாள்வதற்கு நாம் உபயோகிக்கக்கூடியதான ஒரு ஒப்புமையை வரைவதற்கான கடுமையான விளக்கத்தையும் தாண்டி, நாம் பயன்படுத்தக்கூடிய சில உண்மைகள் இதோ. இவை பூரணமானவையல்ல என்பது வெளிப்படை, மேலும் அதிகமானவை கீழே கொடுக்கப்பட்டுள்ளன; ஆனால், இவை எலியாவின் அனுபவத்திற்கூடாக நாம் பெற்றுக்கொள்ளக்கூடிய சில ஊக்கங்களாகும். அவர் ஒரு வித்தியாசமான தேசத்திற்குச் சென்றார் – நம்மால் பயணப்பட இயலாதென்பது இப்பொழுது எனக்குத் தெரியும், இருப்பினும் முடிந்தால் பயணிக்கலாம், ஒரு புதிய சூழல் என்பது ஆத்துமாவிற்கான ஒரு ஊட்ட மருந்தாகும். நம்மை நாமே தெரிந்துகொள்ள இடமளிக்கக்கூடிய ஒரு இடத்தைக்கண்டுகொள்ளவும்.

தனக்கு உணவளிக்கக்கூடிய ஒருவரை அவர் கண்டுகொண்டார், அங்கே பஞ்சம் காணப்பட்டாலும் உணவு தீர்ந்துவிடவில்லை. உணவு என்பது ஒரு மருத்துவ சிகிச்சையாக இருக்கிறது; எமது மனங்களையும் உடல்களையும் அது செப்பனிடுவதோடு, எமது நோய் எதிர்ப்புச் சக்தியையும்கூட கட்டியெழுப்புகிறது. அவருக்கு இளைப்பாற ஒரு இடம் இருந்தது, எமது குணமடைதலுக்கு நல்ல தூக்கம் என்பது அத்தியாவசியமாயிருக்கிறது.

எனவே, எமது உணர்வு வங்கிகளில் மிக அதிகமான பண மீளப்பெறல்களும் குறைவான வைப்புக்களும் இடம்பெறுமாயின், நாங்கள் வறட்சியடையும் அபாயத்தில் இருப்பதோடு, மன அழுத்தம் என்பதே நாம் அனுபவிக்கக்கூடிய யதார்த்த நிலையாகவும் இருக்கும்; இதுவே அநேகமாக “பாதுகாப்பான இடத்திற்குத் தப்பியோடவேண்டிய தருணமாக” இருக்கும். அத்துடன், உங்களில் எவருடைய உணர்வு வங்கியானது நிரம்பி, உங்கள் உலகம் உங்களைச் சுற்றிலும் நொருங்கிப்போகாமலும் இருக்குமாயின், உதவி தேவைப்படக்கூடிய ஒருவரைக் கண்டறிந்து, அவருக்கு ஒரு பாதுகாப்பு அரணாக, தோழமையாக, அவருடைய உடல் மற்றும் உணர்வுபூர்வமான தேவைகளைச் சந்திப்பவராக இருங்கள்.

மனச்சோர்வை மேற்கொள்வதற்கான மேலும் சில ஆலோசனைகள் இதோ:

தொடர்பில் இருங்கள்

அனைத்து விடயங்களையும் நீங்களே கையாள முயற்சிப்பது என்பது, உங்களைத் திணறடிக்கச் செய்வதாக இருக்கக்கூடும். நீங்கள் எப்பொழுதெல்லாம் குறைவுபட்டவராக உணருகிறீர்களோ அப்போதெல்லாம் உதவியை நாடுவதே சிறந்தது. உதவியை நாடி நிற்பதோ, நீங்கள் பாதிப்புறத்தக்க நிலையில் இருக்கின்றீர்கள் என்பதை மற்றவர்கள் அறிந்துகொள்ள அனுமதிப்பதோ தவறல்ல. உங்களால் தனியொருவராக செய்யமுடியாத ஒரு செயலை, மற்றவரின் உதவியைப் பெற்றுக்கொள்ள நீங்கள் தயாராக இருக்கும் பட்சத்தில் அதைச் சாதித்துவிடமுடியும். உங்களைத் தனிமைப்படுத்திக் கொள்வதைத் தவிர்த்து, சமூகமயமாக முயற்சி செய்யுங்கள்.

 

உங்களை மகிழ்விக்கக்கூடிய ஒரு செயலை இன்று செய்யுங்கள்.

உங்களுக்குப் பிடித்தமான அல்லது எப்போதோ விரும்பிய செயல்களைச் செய்வதில் உங்களை ஈடுபடுத்திக்கொள்ளுங்கள். அது காலையில் நடைப்பயிற்சிக்காகச் செல்வது, செல்லப் பிராணியுடன் விளையாடுவது, தோட்டக்கலையில் ஈடுபடுவது, வலைப்பதிவு செய்வது, ஒரு புத்தகத்தை வாசிப்பது, இசையை உருவாக்குவது அல்லது கலையில் மூழ்கியிருப்பது இப்படி எதுவாகவும் இருக்கலாம். ஏதாவதொரு செயலில் உங்களை ஈடுபடுத்தியிருப்பது அநேக எதிர்மறை எண்ணங்களை மேற்கொள்ள உதவும். ஆரம்பத்தில் இது உங்களுக்குச் சவாலாகத் தோன்றினாலும், இறுதிப் பெறுபேறு என்பது எப்போதும் இனிமையானதாகவே அமையும்.

ஒரு வழமைக்கேற்ப செயற்படுங்கள்

ஒரு அன்றாட வழக்க முறையை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். ஒரு சிறிய, செய்துமுடிக்கக்கூடிய ஒரு காரியத்தோடு நீங்கள் ஆரம்பிக்க முடியும். அது, காலையில் எழும்பியவுடன் உங்களின் படுக்கையை ஒழுங்குபடுத்துவது, நேரத்திற்கு உண்பது, நள்ளிரவுக்கு முன்பாகப் படுக்கைக்குச் செல்வது, உங்களுக்குப் பிரியமானவர்களோடு செலவிட நேரத்தை ஒதுக்குவது என்று இப்படி எதுவாகவும் இருக்கலாம். ஒரு சரிபார்ப்புப் பட்டியலைத் தயாரித்து, அதிலுள்ள விடயங்களைச் சரிபார்ப்பதுகூட மிகுந்த மகிழ்ச்சியைத் தரக்கூடியதே. உங்களால் அவற்றை 100 வீதம் ஒவ்வொரு நாளும் நிறைவேற்ற முடியாதுபோனாலும், பரவாயில்லை; ஆனாலும், அவற்றை நிறைவேற்ற முயற்சி செய்வதுகூட உங்களுக்குச் சாதித்துவிட்ட ஒரு உணர்வைத் தரும்.

ஏதாவதொரு உடற்செயற்பாட்டில் ஈடுபடுங்கள்.

ஒரு 10 நிமிட உடற்செயற்பாடுகூட அநேகமாக உடனடியாகவே உங்களின் மன நிலையை ஊக்கப்படுத்தும் என்று ஆய்வுகள் காண்பிக்கின்றன. எனவே, வழக்கமான உடற்பயிற்சி என்பது, உங்களை உற்சாகத்தோடும், ஊக்கத்தோடும் வைத்திருப்பதற்கான ஆற்றல்மிக்க ஒரு வழியாகும். ஒரு கிழமையில் 3-5 நாட்கள், ஆகக் குறைந்தது 30 நிமிடங்களாவது உங்களுக்குப் பிடித்தமான ஏதாவதொரு உடற்செயற்பாட்டில் ஈடுபடும்படியாக உங்களுக்கு நாம் சிபாரிசு செய்கின்றோம்; அது மெது ஓட்டம், நீச்சல், உடற்பயிற்சிக்கூடத்தில் நேரத்தைச் செலவிடுவது அல்லது உங்களுக்குப் பிடித்தமான ஏதாவதொரு விளையாட்டு விளையாடுவது என்று எதுவாகவும் இருக்கலாம். உங்கள் அறையினுள்ளேயே மகிழ்ச்சியான இசை அல்லது உற்சாகமான தாளத்திற்கு நடனமாடுவதுகூட ஒரு மிகப்பெரிய மாற்றத்திற்கு வழிவகுக்கலாம்!

தீங்கு விளைவிக்கக்கூடிய பழக்கவழக்கங்களைத் தவிர்த்துவிடுங்கள்

புகைப் பிடித்தல் மன அழுத்தத்திற்கான ஒரு நிவாரணி என்று பலர் கருதுகின்றனர்; ஆனால், உண்மை என்னவென்றால், அது நன்மையைவிட அதிக தீமையையே விளைவிக்கும். அதைப்போலவே, மது அருந்துதல் உங்களின் மனப்போக்கை மாற்றி, உங்கள் தற்போதைய நிலையை தற்காலிகமாகவே மறக்கச்செய்யும். உண்மையில், மதுப்பழக்கம் மன அழுத்தத்தை மோசமடையச் செய்யும், மன அழுத்தம் மதுப்பழக்கத்தை மோசமடையச் செய்யும். இவற்றில் ஏதாவதொரு பழக்கத்தில் நீங்கள் ஏற்கனவே ஈடுபட்டிருப்பீர்களேயானால், அது உங்களுடைய மன அழுத்தத்தையோ அல்லது பதட்ட நிலையையோ மோசமடையச் செய்யாதபடி உறுதிப்படுத்திக்கொள்ள அப் பழக்கத்திலிருந்து படிப்படியாக உங்களை விடுவித்துக்கொள்வது அவசியம்.

தொழிற்சார் உதவியை நாடுங்கள்

மன அழுத்தமானது சிகிச்சையளிக்கப்படக்கூடியது, மற்றும், தொழிற்சார் உதவியை நாடுவது எப்பொழுதுமே நல்லது. சுய உதவி நேர்மறையான பெறுபேறுகளைக் காட்டினாலும்கூட, ஒரு ஆலோசகர், மனோதத்துவ நிபுணர் அல்லது சிகிச்சையாளரின் உதவியை நாடுவது, மன அழுத்தத்திற்கு எதிரான போராட்டத்தில் உங்களைச் சிறப்பாக மேலாண்மை செய்யவும் வலுப்படுத்தவும் உதவும்.

 

ஒவ்வொரு நாளும் ஒரு புதிய நாளே

இன்றைய நாளிலே ஒரு இலக்கை அடைவதில் தோற்றுவிட்டாலோ, அல்லது ஒரு பணியைப் பூர்த்தி செய்யமுடியாவிட்டாலோ அதுவே உங்கள் வாழ்க்கையின் முடிவாகிவிடாது. நாளை என்பது இதைவிட சிறந்த நாளாக அமையும் என்று நம்பிக்கை கொள்ளுங்கள்; அத்தோடு மிக முக்கியமாக, உங்கள்மீது கருணை காண்பியுங்கள். ஒவ்வொரு நாளிலும் ஒரு புதிய ஆரம்பத்தைத் தேடுங்கள்; ஒரு தோல்வி உங்களின் வாழ்க்கைக்கான முடிவைத் தீர்மானிக்க அனுமதித்து விடாதீர்கள்.

 

“கர்த்தர் தாமே உனக்கு முன்பாகப் போகிறவர், அவர் உன்னோடே இருப்பார்; அவர் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை; நீ பயப்படவும் கலங்கவும் வேண்டாம் என்றான்.”

உபாகமம் 31:8