ரோமர் 8:1-10

1. ஆனபடியால், கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை. 2. கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் என்னைப் பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையாக்கிற்றே. 3. அதெப்படியெனில், மாம்சத்தினாலே பலவீனமாயிருந்த நியாயப்பிரமாணம் செய்யக்கூடாததைத் தேவனே செய்யும்படிக்கு, தம்முடைய குமாரனைப் பாவமாம்சத்தின் சாயலாகவும், பாவத்தைப் போக்கும் பலியாகவும் அனுப்பி, மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார். 4. மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படி நடக்கிற நம்மிடத்தில் நியாயப்பிரமாணத்தின் நீதி நிறைவேறும்படிக்கே அப்படிச் செய்தார். 5. அன்றியும் மாம்சத்தின்படி நடக்கிறவர்கள் மாம்சத்துக்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள்; ஆவியின்படி நடக்கிறவர்கள் ஆவிக்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள். 6. மாம்சசிந்தை மரணம்: ஆவியின் சிந்தையோ ஜீவனும் சமாதானமுமாம். 7. எப்படியென்றால், மாம்சசிந்தை தேவனுக்கு விரோதமான பகை: அது தேவனுடைய நியாயப்பிரமாணத்துக்குக்கீழ்ப்படியாமலும், கீழ்ப்படியக்கூடாமலும் இருக்கிறது. 8. மாம்சத்துக்குட்பட்டவர்கள் தேவனுக்குப் பிரியமாயிருக்கமாட்டார்கள். 9. தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், நீங்கள் மாம்சத்துக்குட்பட்டவர்களாயிராமல் ஆவிக்குட்பட்டவர்களாயிருப்பீர்கள். கிறிஸ்துவின் ஆவியில்லாதவன் அவருடையவனல்ல. 10. மேலும் கிறிஸ்து உங்களிலிருந்தால் சரீரமானது பாவத்தினிமித்தம் மரித்ததாயும், ஆவியானது நீதியினிமித்தம் ஜீவனுள்ளதாயும் இருக்கும்.

(தேவன்) தம்முடைய குமாரனைப் பாவமாம்சத்தின் சாயலாகவும், பாவத்தைப் போக்கும் பலியாகவும் அனுப்பி(னார்). ரோமர் 8:3

ஒரு பழைய பொருட்கள் விற்பனை செய்யும் கடையில், உடைந்த அட்டைப் பெட்டி ஒன்றில் ஒரு இயேசுவின் பிறப்புக் காட்சியில் இடம்பெறும் ஒரு சிலையைக் கண்டேன். அந்த குழந்தை இயேசுவை நான் எடுத்தபோது, குழந்தையின் உடலில் நேர்த்தியாய் செதுக்கப்பட்ட விவரங்களைக் கவனித்தேன். இந்தப் புதிதாகப் பிறந்த குழந்தை, கண்கள் மூடிய நிலையில் போர்வையில் சுற்றப்படவில்லை – அவர் விழித்திருந்தார்; நீட்டப்பட்ட கைகள், விரிந்திருந்த கைகள் மற்றும் விரல்கள் நீட்டிய நிலையில் அந்த உருவபொம்மை இருந்தது. அதைப் பார்க்கும்போது, “நான் இங்கே இருக்கிறேன்!” என்று அவர் சொன்னது போல் தோன்றியது.

அந்தச் சிலை கிறிஸ்துமஸின் அற்புதத்தை விளக்குகிறது. தேவன் தனது குமாரனை மாம்ச சரீரத்தில் இவ்வுலகத்திற்கு அனுப்பினார். இயேசுவின் குழந்தை சரீரம் முதிர்ச்சியடைந்ததும், பொம்மைகளோடு விளையாடிய அவரது சிறிய கைகள், இறுதியில் நியாயப்பிரமாணத்தை பிடித்தது, அதன் பின்னர் அவரது ஊழியம் முறையாய் துவங்குவதற்கு முன்னர் தச்சுவேலை பொருட்களை கையில் பிடித்தது. பிறக்கும்போதே மென்மையாகவும், நேர்த்தியாகவும் இருந்த அவரது பாதங்கள், அவரை ஒரு இடத்திலிருந்து மற்ற இடத்திற்கு எடுத்துச் சென்று கற்பிக்கவும் குணப்படுத்தவும் வளர்ந்தன. அவரது வாழ்க்கையின் முடிவில், அவருடைய இந்த கைகளும் கால்களும் சிலுவையில் அவரது உடலைப் பிடிக்க நகங்களால் துளைக்கப்படும்.

“தம்முடைய குமாரனைப் பாவமாம்சத்தின் சாயலாகவும், பாவத்தைப் போக்கும் பலியாகவும் அனுப்பி, மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார்” (ரோமர் 8:3). நாம் இயேசுவின் இந்த கிருபாதாரபலியை நமது எல்லா குற்றங்களுக்கும் செலுத்தும் விலைக்கிரயமாய் ஏற்றுக்கொண்டு, நம் வாழ்க்கையை அவருக்கு அர்ப்பணித்தால், பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்து நாம் விடுதலை பெறுவோம். தேவனுடைய குமாரன் நமக்காக மண்ணில் ஒரு குழந்தையாகப் பிறந்ததினால், தேவனுடைய சமாதானம், மற்றும் நித்திய வாழ்வின் நிச்சயம் நமக்கு கிடைக்க ஒரு வழி இருக்கிறது.

கிறிஸ்துமஸில் இயேசுவைக் கொண்டாடுவதற்கும் கிறிஸ்துமஸ் பருவத்தைக் கொண்டாடுவதற்கும் என்ன வித்தியாசம்?

அன்பான தேவனே, பாவம் மற்றும் மரணத்தின் அடிமைத்தனத்திலிருந்து என்னை விடுவிப்பதற்காக இயேசுவை ஒரு மனிதக் குழந்தையாக பூமிக்கு அனுப்பியதற்காக உமக்கு நன்றி.