ஏசாயா 7:10-17
10. பின்னும் கர்த்தர் ஆகாசை நோக்கி: 11. நீ உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் ஒரு அடையாளத்தை வேண்டிக்கொள்; அதை ஆழத்திலிருந்தாகிலும், உன்னதத்திலிருந்தாகிலும் உண்டாகக் கேட்டுக்கொள் என்று சொன்னார். 12. ஆகாசோ: நான் கேட்கமாட்டேன், நான் கர்த்தரைப் பரீட்சை செய்யமாட்டேன் என்றான். 13. அப்பொழுது ஏசாயா: தாவீதின் வம்சத்தாரே, கேளுங்கள்; நீங்கள் மனுஷரை விசனப்படுத்துகிறது போதாதென்று என் தேவனையும் விசனப்படுத்தப் பார்க்கிறீர்களோ? 14. ஆதலால் ஆண்டவர் தாமே உங்களுக்கு ஒரு அடையாளத்தைக் கொடுப்பார்; இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இ;ம்மானுவேல் என்று பேரிடுவாள். 15. தீமையை வெறுத்து நன்மையைத் தெரிந்துகொள்ள அறியும் வயது மட்டும் அவர் வெண்ணெயையும் தேனையும் சாப்பிடுவார். 16. அந்தப் பிள்ளை தீமையை வெறுக்கவும், நன்மையைத் தெரிந்துகொள்ளவும் அறிகிறதற்குமுன்னே, நீ அருவருக்கிற தேசம் அதின் இரண்டு ராஜாக்களால் விட்டுவிடப்படும். 17. எப்பிராயீம் யூதாவைவிட்டுப்பிரிந்த நாள்முதல் வராத நாட்களைக் கர்த்தர் உன்மேலும், உன் ஜனத்தின்மேலும், உன் பிதாவுடைய வம்சத்தின்மேலும், அசீரியாவின் ராஜாவினாலே வரப்பண்ணுவார்.
ஆதலால் ஆண்டவர் தாமே உங்களுக்கு ஒரு அடையாளத்தைக் கொடுப்பார்; இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவாள். ஏசாயா 7:14
என் மனைவி எங்கள் இரண்டாவது மகனைப் பெற்றெடுத்த பிறகு, அவனுக்கு பெயர்சூட்ட ஒரு குறிப்பிட்ட பெயரைத் தேர்ந்தெடுப்பதில் நாங்கள் சிரமப்பட்டதால், சிறிது காலம் அவன் பெயரிடப்படாமல் இருந்தான். ஐஸ்கிரீம் கடைகளில் பல மணிநேரம் செலவழித்து, நீண்ட கார் பயணங்களை மேற்கொண்ட பிறகும், எங்களால் இன்னும் ஒரு பெயரை முடிவு செய்ய முடியவில்லை. மூன்று நாட்கள் அவன் “பேபி வில்லியம்ஸ்” என்றே அழைக்கப்பட்டான். இறுதியாக அவனுக்கு மீகா என்று பெயரிட்டோம்.
சரியான பெயரைத் தேர்ந்தெடுப்பது கொஞ்சம் வெறுப்பூட்டுவதாக இருக்கலாம். உலகின் காரியங்கள் அனைத்தையும் மாற்றியமைக்கக்கூடிய ஒருவருக்கு தேவன் சரியான ஒரு பெயரைக் கொடுப்பதை நாம் காணக்கூடும். ஏசாயா தீர்க்கதரிசி மூலம், தேவன் ஆகாஸ் ராஜாவின் விசுவாசத்தை பெலப்படுத்த “ஒரு அடையாளத்தைக்” கேட்கும்படி வழிநடத்தினார் (ஏசாயா 7:10–11). ராஜா தேவனிடத்தில் அடையாளத்தைக் கேட்க மறுத்தாலும், தேவன் அவருக்கு ஒரு அடையாளத்தைக் கொடுத்தார்: “இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இ;ம்மானுவேல் என்று பேரிடுவாள்” (வச. 14). தேவன் அந்தக் குழந்தைக்குப் பெயரிட்டார். வேதனையில் இருக்கும் ஜனங்களுக்கு அவர் நம்பிக்கையின் அடையாளமாக இருப்பார். அந்தப் பெயர் நிலைத்திருந்தது. இயேசுவின் பிறப்பு பற்றிய கதையை எழுதியபோது மத்தேயு அதின் புதிய அர்த்தத்தை வெளிப்படுத்தினார் (மத்தேயு 1:23). இயேசு “இம்மானுவேல்” ஆக இருப்பார். அவர் தேவனின் பிரதிநிதியாக மட்டும் இருப்பதோடல்லாமல், அவர் மாம்சத்தில் தேவனாக இருப்பார். பாவத்தின் விரக்தியிலிருந்து தம் மக்களை மீட்க வருவார்.
தேவன் நமக்கு ஒரு அடையாளத்தைக் கொடுத்தார். அந்த அடையாளம் ஒரு குமாரன். அந்த குமாரனின் பெயர் இம்மானுவேல், “தேவன் நம்மோடு இருக்கிறார்” என்று அர்த்தம். அது அவருடைய பிரசன்னத்தையும் அன்பையும் பிரதிபலிக்கும் ஒரு பெயர். இன்று, இம்மானுவேலைத் தழுவிக்கொள்ளவும், அவர் நம்முடன் இருக்கிறார் என்பதை அறியவும் அவர் நம்மை அழைக்கிறார்.
உங்கள் இருண்ட காலங்களிலும், அவநம்பிக்கையான சூழ்நிலைகளிலும் தேவன் இப்போது புதிய வாழ்க்கையை கொடுக்கமுடியும் என்று நம்புவதைத் தடுப்பது எது? இந்த வாரம் நீங்கள் இயேசுவை இம்மானுவேலாக எப்படி ஏற்றுக்கொள்வீர்கள்?
பரலோகத் தகப்பனே, உமது குமாரனும் இம்மானுவேலருமாகிய இயேசுவுக்காய் நன்றி! இன்று நான் அவருடைய பிரசன்னத்திலும் அன்பிலும் மகிழ்ச்சியடைய உதவிசெய்யும்.