யோவான் 11:17-27,34-44
17. இயேசு வந்தபோது அவன் கல்லறையில் வைக்கப்பட்டு நாலுநாளாயிற்றென்று கண்டார். 18. பெத்தானியா ஊர் எருசலேமுக்குச் சமீபமாய் ஏறக்குறைய இரண்டுமைல் தூரத்திலிருந்தது. 19. யூதரில் அநேகர் மார்த்தாள் மரியாள் என்பவர்களுடைய சகோதரனைக் குறித்து அவர்களுக்கு ஆறுதல் சொல்லும்படி அவர்களிடத்தில் வந்திருந்தார்கள். 20. இயேசு வருகிறார் என்று மார்த்தாள் கேள்விப்பட்டபோது, அவருக்கு எதிர் கொண்டுபோனாள்; மரியாளோ வீட்டிலே உட்கார்ந்திருந்தாள். 21. மார்த்தாள் இயேசுவினிடத்தில் வந்து: ஆண்டவரே, நீர் இங்கேயிருந்தீரானால் என் சகோதரன் மரிக்கமாட்டான். 22. இப்பொழுதும் நீர் தேவனிடத்தில் கேட்டுக்கொள்ளுவதெதுவோ அதைத் தேவன் உமக்குத் தந்தருளுவாரென்று அறிந்திருக்கிறேன் என்றாள். 23. இயேசு அவளை நோக்கி: உன் சகோதரன் உயிர்த்தெழுந்திருப்பான் என்றார். 24. அதற்கு மார்த்தாள்: உயிர்த்தெழுதல் நடக்கும் கடைசிநாளிலே அவனும் உயிர்த்தெழுந்திருப்பான் என்று அறிந்திருக்கிறேன் என்றான். 25. இயேசு அவளை நோக்கி: நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்; 26. உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்; இதை விசுவாசிக்கிறாயா என்றார். 27. அதற்கு அவள்: ஆம், ஆண்டவரே, நீர் உலகத்தில் வருகிறவரான தேவகுமாரனாகிய கிறிஸ்து என்று நான் விசுவாசிக்கிறேன் என்றாள்.
34. அவனை எங்கே வைத்தீர்கள் என்றார். ஆண்டவரே, வந்து பாரும் என்றார்கள். 35. இயேசு கண்ணீர் விட்டார். 36. அப்பொழுது யூதர்கள்: இதோ, இவர் அவனை எவ்வளவாய்ச் சிநேகித்தார் என்றார்கள்! 37. அவர்களில் சிலர்: குருடனுடைய கண்களைத் திறந்த இவர், இவனைச் சாகாமலிருக்கப்பண்ணவும் கூடாதா என்றார்கள். 38. அப்பொழுது இயேசு மறுபடியும் தமக்குள்ளே கலங்கிக் கல்லறையினிடத்திற்கு வந்தார். அது ஒரு குகையாயிருந்தது; அதின்மேல் ஒரு கல் வைக்கப்பட்டிருந்தது. 39. இயேசு: கல்லை எடுத்துப்போடுங்கள் என்றார். மரித்தவனுடைய சகோதரியாகிய மார்த்தாள் அவரை நோக்கி: ஆண்டவரே, இப்பொழுது நாறுமே, நாலுநாளாயிற்றே என்றாள். 40. இயேசு அவளை நோக்கி: நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையைக் காண்பாய் என்று நான் உனக்குச் சொல்லவில்லையா என்றார். 41. அப்பொழுது மரித்தவன் வைக்கப்பட்ட இடத்திலிருந்த கல்லை எடுத்துப் போட்டார்கள். இயேசு தம்முடைய கண்களை ஏறெடுத்து: பிதாவே, நீர் எனக்குச் செவிகொடுத்தபடியினால் உம்மை ஸ்தோத்தரிக்கிறேன். 42. நீர் எப்பொழுதும் எனக்குச் செவிகொடுக்கிறீர் என்று நான் அறிந்திருக்கிறேன்; ஆனாலும் நீர் என்னை அனுப்பினதைச் சூழ்ந்துநிற்கும் ஜனங்கள் விசுவாசிக்கும்படியாக அவர்கள்நிமித்தம் இதைச் சொன்னேன் என்றார். 43. இவைகளைச் சொன்னபின்பு: லாசருவே, வெளியே வா என்று, உரத்த சத்தமாய்க் கூப்பிட்டார். 44. அப்பொழுது, மரித்தவன் வெளியே வந்தான். அவன் கால்களும் கைகளும் பிரேதச் சீலைகளினால் கட்டப்பட்டிருந்தது, அவன் முகமும் சீலையால் சுற்றப்பட்டிருந்தது. இயேசு அவர்களை நோக்கி: இவனைக் கட்டவிழ்த்துவிடுங்கள் என்றார்.
அவள் அழுகிறதையும்… இயேசு கண்டபோது ஆவியிலே கலங்கித்துயரமடைந்து.. யோவான் 11:33
என் சகோதரனின் சமீபத்திய மரணம் அனைவரின் நினைவிலிருந்து வெகு விரைவில் மறைந்துவிட்டது. ஆனாலும் அது என் மனதில் ஆழ்ந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. மரணம் வேதனையளிக்கக்கூடிய ஒன்று.
நாம் மிகவும் நேசிக்கும் ஒன்றை இழக்கும்போது துக்கப்படுவது என்பது ஒரு உணர்ச்சிபூர்வமான பிரதிபலிப்பாகும். ஆனால் நம் வாழ்க்கையில் பல மரண நிகழ்வுகளில் நாம் சந்திக்க நேரிடும் கல்லறைகளில் நின்று, தேவன் நம்மோடு இருக்கிறார் என்பது மிகவும் ஆறுதலாயிருக்கிறது.
இன்றைய வாசிப்பில் லாசருவின் மரணம், இழப்பை அனுபவிக்கும் பல வீடுகளில் பொதுவாக என்ன நடக்கிறது என்பதைக் காட்டுகிறது. அவை அனைத்தும் அங்கே நடப்பதை காணமுடியும்: வியாதினால் நிகழ்ந்த மரணம் (யோவான் 11:1); குணமடையவேண்டும் என்ற எதிர்பார்ப்பு (வசனம் 3); பதிலளிக்கப்படாத ஜெபத்தில் ஏமாற்றம் – “ஆண்டவரே, நீர் இங்கேயிருந்தீரானால் என் சகோதரன் மரிக்கமாட்டான்” (வச. 21) என்று மார்த்தாள் இயேசுவிடம் கேட்கிறாள். மரணத்தின் இறுதிநிலை: “அவன் கல்லறையில் வைக்கப்பட்டு நாலுநாளாயிற்று” (வச. 17). அதைக் காட்டிலும் வேறொன்றையும் நாம் செய்ய முடியாது.
ஆனாலும் இயேசு கல்லறை எங்கே என்று கேட்கிறார் (வச. 34). இயேசு தன்னுடைய இரண்டு சிநேகிதர்களின் துக்கத்தை பகிர்ந்துகொள்ளும் விதத்தில், அவர்களோடு சேர்ந்து கண்ணீர் விட்டார். லாசருவை மீண்டும் உயிரோடு எழுப்பப்போகிறார் என்பது இயேசுவுக்கு மிக நன்றாய் தெரியும். பிறகு ஏன் கண்ணீர் விட்டார்? பல காரணங்கள் இருக்கலாம் என்றாலும், “இயேசு மார்த்தாளிடத்திலும் அவளுடைய சகோதரியினிடத்திலும் லாசருவினிடத்திலும் அன்பாயிருந்தார்” (வச. 5) என்பது நமக்கு தெரியும். துக்கம் என்பது அன்பின் விலை. அவர்களின் துக்கம் இயேசுவின் துக்கமாக மாறியது. கல்லறையில் நின்று, இயேசு தனது மனிதநேயத்தின் மூலம் அவர்களின் உடைந்த இருதயங்களை அடையாளம் கண்டுகொண்டார். பின்னர் மரணம் முடிவு அல்ல என்பதை அவர்களுக்கும் நமக்கும் காண்பித்தார்.
சமீபத்தில் உங்களுக்கு துக்கத்தை ஏற்படுத்தியது எது? கல்லறையில் இயேசுவின் இந்தக் காட்சி உங்களை எவ்விதம் ஊக்குவிக்கிறது?
பரலோகத் தகப்பனே, எல்லாம் தொலைந்து போனதாகத் தோன்றும் இடங்களில் என்னுடன் நின்றதற்காய் உமக்கு நன்றி. என் துக்கத்திற்கான காரணம் எதுவாக இருந்தாலும், இயேசுவின் அன்பு நான் தனிமையில் துக்கப்படத் தேவையில்லை என்பதை அடையாளம் காண எனக்கு உதவிசெய்யும். ஆமென்!