வானங்கள் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகிறது,
ஆகாயவிரிவு அவருடைய கரங்களின் கிரியையை அறிவிக்கிறது.
பகலுக்குப் பகல் வார்த்தைகளைப் பொழிகிறது,
இரவுக்கு இரவு அறிவைத் தெரிவிக்கிறது.
அவைகளுக்குப் பேச்சுமில்லை, வார்த்தையுமில்லை,
அவைகளின் சத்தம் கேட்கப்படுவதுமில்லை.
ஆகிலும் அவைகளின் சத்தம் பூமியெங்கும்,
அவைகளின் வசனங்கள் பூச்சக்கரத்துக் கடைசிவரைக்கும் செல்லுகிறது;
அவைகளில் சூரியனுக்கு ஒரு கூடாரத்தை ஸ்தாபித்தார்.
சங்கீதம் 19:1-4

தேவனுடைய படைப்புகள் எவ்வாறு தொடர்ச்சியாய் தேவனைக் குறித்து நமக்கு போதிக்கிறது என்கிற இயற்கை பாடத்தை டாம் ஸ்பிரிங்கரோடு அனுபவிப்போம். இந்த புத்தகத்தின் பக்கங்களில், நம்மை வெளியே கூட்டிக்கொண்டுபோய் தேவனை பார்க்கவைக்கும் வார்த்தைகளைப் பேசுகிறார்.

நமது அனுதின மன்னா ஊழியங்கள்

அறிமுகம்

பரிசுத்தத்திற்கான சிருஷ்டிப்பின் அழைப்பு

னக்கு எட்டு வயதிருக்கும்போது, எங்கள் வீட்டிலிருந்த சிவப்பு நிற குடும்ப வேதாகமம் எனக்கு ஆச்சரியம் கலந்த பயபக்தியை ஏற்படுத்தியது. அவ்வேதாகமத்தின் வடிவமைப்பானது, வேதாகமம் அச்சிடப்படுவதற்கு முன்பாக, அதின் ஒவ்வொரு புத்தகத்தையும் தங்கள் கைப்பட எழுதிய வேதபாரகர்களின் கடும் முயற்சியின் பலன் என்பது அப்போது எனக்கு தெரியாது. அதில் ஒவ்வொரு அத்தியாயத்தின் முதல் வார்த்தைகளும் பெரிதாக்கப்பட்டு, பொன் முலாம் பூசப்பட்டு, மரத்தைச் சுற்றிலும் கொடிகள் போன்ற இரட்டை எழுத்துக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மிக அழகான தேவதூதர்களின் வரைபடங்களும் அதில் இடம்பெற்றிருந்தன.

    இந்த மகிமைப்படுத்தப்பட்ட வார்த்தைகளும் உருவங்களும், தேவன் மற்றும் நம்பிக்கை, பிறப்பு மற்றும் இறப்பு, வானம் மற்றும் பூமி போன்ற விஷயங்கள் அற்பமானவைகள் அல்ல என்பதை தெளிவாய் விளங்கப்பண்ணுகிறது. நம்முடைய வேதாகமம் இந்த கருத்தை அரச பாணியில் தெரிவிக்கிறது.

    இந்த தொகுப்பில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் அனைத்தும் வேதாகமத்தில் இடம்பெற்றுள்ள வார்த்தைக்கான கனத்தை உள்ளபடி நேர்த்தியாய் கொடுப்பதாக நான் நம்புகிறேன். நான் தேர்ந்தெடுத்த ஏழு தலைப்புகள்: மகிழ்ச்சி, பயம், ஆச்சரியம், பராமரிப்பு, வேலை, ஆளுகை மற்றும் ஜீவியம். இவை அனைத்தும் வேதாகமத்தில் மிகவும் குறிப்பிடத்தக்கவைகள்.

    தேவனுடைய படைப்பில் அவருடைய பிரசன்னத்தை உணர்ந்த தருணத்தை நாம் நினைவுபடுத்திப் பார்க்கலாம். அது ஒருவேளை சூரிய அஸ்தமனமாகவோ, நட்சத்திர கூட்டமாகவோ, வாத்துக்களின் மந்தையாகவோ அல்லது துல்லியமான இடைவெளியோடு கூட்டமாய் பறந்து செல்லும் பறவைகளின் அணிவகுப்பாகவோ இருக்கலாம். இந்த அனுபவங்கள் ஏன் நமக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கிறது? இதற்கு நான் கொடுக்கக்கூடிய சிறந்த விளக்கம் என்னவென்றால், தேவன் படைப்பிற்கான ஒரு புனிதமான பாராட்டை நம் இதயங்களில் வைத்திருக்கிறார். அது முழங்காலில் பொருத்தப்பட்டுள்ள ஒரு குழாய் போன்றது. படைப்பின் மகத்துவத்தைக் கண்டு நாம் திகைக்கும்போது, நன்றிசெலுத்துவதே நம்முடைய (அவிசுவாசிகளுக்கும் இது பொருந்தும்) முதல் செய்கையாய் இருக்கும். நமக்கு நாமே உதவ முடியாது. படைப்பின் ஆச்சரியங்கள் நம்முடைய இருதயத்தில் இயல்பாகவே ஒரு நன்றியுணர்ச்சியை ஏற்படுத்துகிறது.

    நாமும் 24-7 கலாச்சாரத்தில் வாழ்கிறோம். சுற்றுப்புற சத்தம் மற்றும் மின்னணு எந்திரங்களின் சத்தங்களால் நம்முடைய புலன்கள் எப்போதும் தாக்கப்படும். நாமெல்லாரும் வேற்று கிரகத்தில் இருப்பதுபோல் தோன்றுகிறது. ஊடகங்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதாக அறிவிக்கிறது. அது நம் ஆர்வத்தை தூண்டி நம்மை கவலைக்குள்ளாக்குகிறது. இந்த இரைச்சலான உலகத்தில் நம் புலன்களை அடக்கி, அமர்ந்திருந்து தேவனை அறிவது கடினமான இலக்காய் தென்படுகிறது (சங்கீதம் 46:10).

    ஆனால் அப்படி இருக்கவேண்டிய அவசியம் இல்லை. நாம் நேரமெடுத்து தேவனுக்கு செவிகொடுக்க ஆயத்தமாயிருந்தால், அவர் சிருஷ்டிப்பின் மூலம் நமக்கு கற்றுத்தருவார். அவ்வாறு நாம் செய்யும்போது, ஒரு தீர்க்கதரிசன வம்சாவளியில் தோன்றிய பரிசுத்தவான்களோடும் பரிசுத்தவாட்டிகளோடும் நாம் இணைந்துகொள்கிறோம். மோசே, எசேக்கியேல், ஏசாயா, எரேமியா, அன்னாள் மற்றும் தாவீது போன்றோர் இயற்கை என்னும் ஆலயத்தில் தேவனுடைய பராமரிப்பையும் ஆலோசனையையும் சுதந்தரித்தனர். அந்த வரிசையிலும் நம்முடைய ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவே முதன்மையானவர். இயேசுகிறிஸ்து ஒரு சிறுவனாகவும் கலிலேயாவில் தச்சுவேலை செய்துகொண்டிருந்தபோது அவர் பார்த்த இயற்கையின் அன்றாட பாடங்களிலிருந்தே அவருடைய போதனைக்கான உவமைகளை தெரிந்துகொண்டார். இயேசு, குறிப்பாய் சிலுவைக்கு போவதற்கு முன்னர், ஜெபிப்பதற்கும் இளைப்பாறுவதற்கும் வனாந்திரமான பகுதிகளுக்கு அடிக்கடி சென்றதாக சுவிசேஷங்கள் அறிவிக்கிறது.

    அவருடைய கடைசி சில நாட்களில், தாபோர் மலையில் மறுரூபமாக்கப்படும் அனுபவத்திற்குள் கடந்து செல்லுகிறார். அவருடைய வஸ்திரங்கள் வெண்மையாய் மிளிர்ந்தது. அது அவருடைய பூமிக்குரிய வாழ்க்கையில் முடிவை தெரிவிக்கிறது என்று சொல்லலாம்.

    ஒரு கோடைக்காலத்தின் மாலை வேளையில் தோட்டத்தில் களைகளைப் பிடுங்கிக்கொண்டிருக்கும்போது நானும் மறுரூபமாக்கப்படுவேன் என்று நான் பேராசைப்படவில்லை. ஆனால், வியர்வைக்கு அப்பாற்பட்டு அதன் பின்பு ஏதோ ஒன்று என் முகத்தில் பளபளக்கிறது. அந்த களைப்பு அன்றைய சுகமான தூக்கத்திற்கு வழிவகுக்கிறது. அடுத்த நாள் வேலை செய்ய எனக்கு ஊக்கம் தருகிறது. எப்படியோ, எனக்குத் தெரியாத வழிகளில், புதிய கனிகளைக் கொடுக்கும் வகையில் நானும் பயிரிடப்பட்டிருக்கிறேன்.

    இந்த கட்டுரைகள், குறிப்பாய் சிருஷ்டிப்பின் ஒளி வெகுவாய் பிரகாசிப்பிக்கும்வேளையில், என் வாழ்க்கையின் தருணங்களை பிரதிபலிக்கின்றது. என் எண்ணங்களுக்கு அப்பாற்பட்டு, அது என்னை பாதித்த அதே வழிகளில் உங்களுடைய வாழ்க்கையிலும் பாதிப்பை ஏற்படுத்தவேண்டும் என்பதே என்னும் ஜெபமாயிருக்கிறது. நாம் ஒவ்வொருவரும் வாழும் வாழ்க்கையில் ஒருவரிலிருந்து மற்றவர் வித்தியாசப்படலாம். ஆனால் தேவன் படைத்த ஒவ்வொரு அணுவிலும் அவருடைய உயிர்கொடுக்கும் வல்லமை வெளிப்படுகிறது என்பதற்கு நாம் இருவருமே சாட்சிகளாக முடியும். அவர் ஒரு பிரம்மாண்டமான கடிகாரத்தை உருவாக்கி, அதை உடைத்துவிட்டு கடந்து செல்லுபவர் அல்ல. அவர் இன்னும் அதில் கிரியை நடப்பித்துக்கொண்டு தான் இருக்கிறார். அவருடைய நதிகள் மகிழ்ச்சியில் இன்னும் ஆர்ப்பரித்துக்கொண்டிருக்கிறது. அவருடைய வானங்கள் இன்னும் மகிமையை வெளிப்படுத்திக்கொண்டுதான் இருக்கிறது. அவற்றோடு இணைந்துகொள்வதற்கு நாம் ஏன் இன்னும் காத்திருக்கவேண்டும்?

ஒன்று

மகிழ்ச்சி

து ஒரு சிறுவனின் ஜெபம். சர்வவல்லமையுள்ள தேவன் மற்ற வேலை அலுவல்களில் கவனம் செலுத்துகிறார் என்று எண்ணுகிற பெரியவர்களின் ஜெபமல்ல. ஆகிலும் இந்த ஜெபம் மேகங்களை கிழித்துக்கொண்டு மேலே சென்றது.

    அதிகாரப்பூர்வமாக, விடுமுறை காலம் இருபது நிமிடங்களுக்கு முன்பே தொடங்கியது. அப்போதுதான் எங்கள் வாகனம், என் சகோதரன் குடும்பத்துடன் வாடகைக்கு எடுத்திருந்த ஒரு வாகனம் நிறுத்துமிடத்திற்குள் நுழைந்தது. பிறகு உணவு மற்றும் சாமான்களை அவசரமாக அடுக்கி வைத்துக்கொண்டு, நான் மீன்பிடிக் தூண்டிலுடன் ஏரிக்கு ஓடினேன்.

    கடந்த பதினைந்து வருடங்களாக இதுவே என்னுடைய வாடிக்கையாய் இருந்துள்ளது. காலணிகளைக் கழற்றிவிட்டு வெறுங்காலுடன் குறிப்பிட்ட இடத்திற்கு சென்று அங்கே துண்டிலைப் போடுவேன். ஒவ்வொரு ஆண்டும் அந்த சரணாலயத்திற்குள் நான் நுழைவதற்கான என்னுடைய நுழைவுத்தகுதி இது. அந்த நீர்நிலை வாசலைத் தாண்டி நான் உள்ளே வந்துவிட்டேன்.

    வழக்கமாய் உள்ளே வரும்போது அதிக சோர்வாக உணர்வேன். ஆனால் இம்முறை அப்படியிருக்கவில்லை. ஒரு வாரமளவு காடுகளுக்கு சென்று நேரத்தை தனிமையில் செலவிட்டால் கூட வாழ்க்கையின் மனச்சோர்வுகளை அகற்றமுடியும் என்று எனக்கு தோன்றவில்லை.

    அப்போது அது வெளிப்பட்டது: 11 வயதுடைய நான் தேவனிடத்தில் ஒரு ஜெப விண்ணப்பத்தை முன்வைத்தேன்.

    “ஆண்டவரே, உமக்குத் தெரியும், நான் உண்மையில் இப்போது ஒரு நல்ல மீனைப் பிடிக்க விரும்புகிறேன் …”சூரியஒளியில்”

    இப்போது.
ஆனால் அதை நான் சொல்வதற்கு முன்னர், அந்த வார்த்தை மாம்சமானது. தூண்டிலின் தக்கை அசைந்தது. என் கையில் இருந்த கம்பு, இழுத்துக்கொண்டு போனது. கொக்கியில் சிக்கிய மீன் இரண்டொருதரம் துள்ளியது. தூண்டிலின் கயிற்றை சுற்ற சுற்ற அந்த மீன் என் அருகாமையில் வந்தது. அதை அந்த தேநீர் நிற தண்ணீரிலிருந்து வெளியே உயர்த்தினேன். நான் எதிர்பார்த்த அந்த மீனை என்னால் பார்க்கமுடிந்தது.

    ஒரு விநாடிப்பொழுதில் மகிழ்ச்சி வந்தது. ஜெபம் முழுவதுமாய் முடியவில்லை. அதற்குள் பலன் கிடைத்தது. நம்பமுடியாத ஒன்று நம்பியே ஆகவேண்டிய ஒன்றாய் மாறியது. நான் கலிலேயா கடலில் இயேசுவின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து வலை கிழியத்தக்கதாய் மீன்களை பிடித்த படவிலிருந்த சீஷர்களைப் போல உணர்ந்தேன். அதற்கு பின் அந்த விடுமுறை நாட்களில் வேறொரு நல்ல மீனை நான் பிடித்ததில்லை.

    அதுபோன்ற ஒரு தருணத்தில், பரலோகம் பூமிக்கு வந்ததுபோல் உணர்ந்தேன். எப்படியிருந்தாலும், அதன் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, “நான் அதை அனுப்பின காரியமாகும்படி வாய்க்கும்”(ஏசாயா 55:11) அந்த மகிழ்ச்சி நீண்ட காலம் நீடிக்க வேண்டியதில்லை. மகிழ்ச்சி என்பது நம்முடைய சரீரப்பிரகாரமான மற்றும் ஆவிக்குரிய ரீதியான அழகை நமக்குக் காண்பிக்கிறது. இது இயற்கையின் மேன்மையைப் பற்றிய நமது உணர்வை உயர்த்துவதோடல்லாது, தன்னிச்சையான புகழுடன் முடிவடையும் நன்றியுணர்வின் அதிகரிப்பால் நம்மை நிரப்புகிறது.

ஆனால், நான்கு இலைக் கொடியைப் போல் நாம் மகிழ்ச்சியைத் தேட முடியாது. அதற்கு நாம் நம்மை தகுதிப்படுத்தி, மகிழ்ச்சி நம்மை தேடி கண்டுபிடிக்கும் தூரத்தில் இருக்கவேண்டும். ஊடி ஆலன் (ஹாலிவுட் நடிகர்), “கூடுகிற மக்கள் கூட்டங்களே உலகம்” என்று கூறுகிறார். அதுவும் மகிழ்ச்சியுடன். சிருஷ்டிப்பை மிகஅருகில் வைத்துப் பார்க்கும் அமைதியான, கவனமுள்ள பழக்கவழக்கங்களைக் கொண்டவர்களுக்கு இது மிகவும் சாதகமாக இருக்கும். ஒரு பூங்கா, வயல்வெளி அல்லது காட்டுப்பாதையின் வழியாய் பயணிக்கும் ஒருவருக்கும் இந்த அனுபவங்கள் ஏற்படக்கூடும். வாகனம் ஓடுபாதையில் இருக்கும் பறவைக்கூட்டை பார்க்கும்போதோ, அல்லது காரின் கண்ணாடி அல்லது சமையலறை ஜன்னலில் இருந்து சிவப்பு வர்ண சூரிய உதயத்தைப் பார்க்கும்போதோ ஏற்படக்கூடும்.

    எப்போதெல்லாம் மகிழ்ச்சி ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் அதை நாம் முழுமையாய் அனுபவிக்கலாம். இயற்கையிலிருந்து நாம் எதைக் கற்றுக்கொள்ளவேண்டுமோ அதை நேரடியாகவோ அல்லது மறைமுக உருவக உதாரணங்களின் மூலமாகவோ இயற்கை நமக்கு கற்றுக்கொடுக்கும். இவை அனைத்தும் ஒரு தனிப்பட்ட அனுபவத்திற்கு உட்பட்டவை என்றாலும் கூட, இயற்கையின் வலிமையையும் கிருபையையும் விவரிக்கும் சாட்சியங்களாய் நாம் பயன்படுத்தலாம் என்று நான் நம்புகிறேன். எனக்கு நேரிடாத அப்படிப்பட்ட மகிழ்ச்சியான ஒரு தருணம் என் அம்மா டோலோரஸ் ஸ்பிரிங்கருக்கு ஏற்பட்டிருக்கிறது.

    மார்ச் 1966-ல், எங்கள் ஐந்து பேர் கொண்ட குடும்பம் புளோரிடாவில் ஒரு சுமாரான கான்கிரீட் வீட்டில் வசித்து வந்தது. கேப் கனாவெரல் அருகில் இருந்தது. இது நாசா ஊழியர்களுக்கான படுக்கையறை சமூகமாக இருந்தது. எங்கள் பக்கத்து வீட்டுக்காரர்கள் பொறியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் விஞ்ஞானிகள். அவர்களின் ஸ்லைடு விதிகள் மற்றும் எலக்ட்ரான் தொலைநோக்கிகள் மூலம், வெறும் உயர்நிலைப் பள்ளிபடிப்பு மட்டுமே முடித்திருந்த என்னுடைய அம்மாவால் அறியமுடியாத விதங்களில் அவர்கள் விண்வெளியைப் பற்றி அறிந்திருந்தனர்.

    ஆனால் அன்றிரவு, எந்த தொழில்நுட்ப உதவியும் இல்லாமல் அண்டசராசரங்களிலிருந்து சிருஷ்டிப்பு என்னுடைய அம்மாவிடம் பேசியது. அது வசந்த காலம். என் அம்மா பூத்திருக்கும் செடிகளோடு முழங்காலில் நின்று நேரம்செலவழித்தார். அவர் செடிகளை நடவுசெய்து, இடமாற்றம் செய்தார். களையெடுத்து, விதைத்து, நீர்ப்பாய்ச்சினார். எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு இரவில் தூங்கச் செல்வதற்கு முன்னர், தன்னுடைய கைவேலைகளை கண்டு வியப்பதற்காக மீண்டும் ஒரு முறை வீட்டை விட்டு வெளியேறினார். வெளியே வந்த என் அம்மா கீழே பார்க்காமல் மேலே பார்த்தார். விண்வெளியில் பரந்து விரிந்திருந்த நட்சத்திர கூட்டத்தைக் கண்டு ஆச்சரியப்பட்டார்.

    அவர் ஆச்சரியப்பட்டது எனக்கு தெரியும். எப்படியென்றால், அவர் ஒரு கவிஞர் இல்லையெனினும், அவர் கண்ட காட்சியை கவிதையாய் எழுத துணிச்சலாய் முடிவுசெய்தார். பத்தாண்டுகளுக்கு பிறகு, சமையலறையில் வைத்திருந்த அந்த கிழிந்த தாளில் இடம்பெற்றிருந்த கவிதையை என்னிடம் காண்பித்தார். எதுகை மோனை என்னும் கவிதைநயத்தோடுள்ள கவிதைகளை மட்டுமே நீங்கள் விரும்புகிறவர்களாய் இருந்தால், இது உங்களுக்கான கவிதை அல்ல. சிருஷ்டிப்பை நேரடியாய் சந்தித்த ஒருவரின் மகிழ்ச்சியை அளவிட விரும்பினால் இக்கவிதையைப் படிக்கவும். அதின் ஒரு பகுதி இதோ…

நான் மாலை வானத்தைப் பார்த்து பெருமூச்சிவிட்டு சிந்தித்தேன்.
இது எவ்வளவு அழகாக இருக்கிறது, என் தேவனே, நீர் என்னே ஆச்சரியமான காரியங்களை படைத்திருக்கிறீர்!
வானம் இருண்டிருந்தது. நட்சத்திரங்கள் பிரகாசமாக ஒளிவீசியது – அவை மிக அருகில் இருப்பதாகத் தோன்றியது.
அதற்கு முடிவேயில்லை. நான் பயத்தின் குத்தலை உணரும் அளவிற்கு அது ஆழமானது. .
நான் மிகவும் அற்பமாகவும் சிறியதாகவும் உணர்ந்தேன்,
அனைத்தையும் புரிந்துகொள்ள என் உள்ளம் துடித்தது.
நட்சத்திரங்களைக் குறித்து அறிவியல் பல பெரிய விஷயங்களை நமக்கு அறிவிக்கிறது.
ஆனால் என்னைப் பொறுத்தவரையில் பதில் எளிமையானது, அதுவே எனக்கு சிறந்தது என்று நான் நினைக்கிறேன்!
நட்சத்திரங்கள் அனைத்தும் ஏன் மிகவும் பிரகாசமாக பிரகாசிக்கின்றன என்பதைப் பார்ப்பது மிகவும் எளிமையானது.
இரவு நேரத்தில் தம்முடைய பிள்ளைகள் வானத்தை அன்னாந்து பார்த்து மகிழ்ந்திருக்கவே தேவன் அவைகளைப் படைத்தார்!
அனைத்து அழகையும் நான் நின்று பருகி ரசித்தேன். பின்னர் வானத்தின் குறுக்கே ஒரு சிறிய நட்சத்திரம் விழ ஆரம்பித்தது!
ஒரு ஈட்டியைப் போல அது வானத்தில் வேகத்துடன் வளைந்ததை நான் பார்க்கநேரிட்டது. அவருடைய படைப்பின் விசித்திரத்தை நான் கண்டு ரசித்ததற்காக தேவன் எனக்கு அவ்வாறு நன்றிதெரிவித்தார் என்று எண்ணுகிறேன்!

    கற்பனை செய்து பாருங்கள். முடிதிருத்தும் வருமானத்தில் மூன்று குழந்தைகளின் சுமைகள் மற்றும் உடைகளை வாங்கி குடும்பம்நடத்தும் ஒரு சராசரி வீட்டுப்பெண்மணிக்கு ஒளியின் பரிசுகள் வழங்கப்பட்டது.

    சுமார் ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த விண்மீன் துகள்கள் இன்னும் பிரகாசிக்கிறது. இது அடிக்கடி சொல்லப்படும் கதைகளின் குடும்ப நியதியில் நுழைந்த ஒரு ஆவிக்குரிய உண்மையாக மாறியது. மகிழ்ச்சியின் தன்மை பரந்து விரிந்திருக்கிறது: ஒளிரும் வாலோடு வாழ்நாள் முழுவதும் நினைவில் நிற்கக்கூடிய கீழே விழும் வால்நட்சத்திரம்.

இரண்டு

பயம்

ன்னுடைய கணக்கின்படி, சிருஷ்டிப்பைப் பார்த்து நாம் இரண்டு விதங்களில் பயப்படுகிறோம். கென்டக்கியில் உள்ள கம்பர்லேண்ட் ஏரியின் உப்பங்கழியில் நான் என் உயிருக்குப் போராடிய நேரமே முதலும், இரண்டில் சிறந்ததுமான உதாரணம்.

    ஜூலை மாதத்தில் அது ஒரு சூடான மதியவேளை. நானும் என் மனைவியும் ஒரு வாரத்தை படகில் கழிக்க அங்கு சென்றிருந்தோம். 102 மைல் மலைப்பாங்கான கடற்கரையில் 65,000 ஏக்கர் பரப்பளவுகொண்ட கம்பர்லேண்ட் ஏரியில் வீட்டுப்படகுகள் மிகவும் பொதுவானவை. அந்த ஏரியானது முடிவில்லாத எண்ணிக்கையில் சிறிய, தனிமைப்படுத்தப்பட்ட விரிகுடாக்களைக் கொண்டுள்ளது. அங்கு ஒருவர் உலகத்திற்கு விலகி தொலைந்து போவதுபோல் உணருவது இயல்பு.

    எங்கள் படகு ஒரு மரக்கட்டையில் நங்கூரமிட்டு நின்றிருந்ததால், நான் நீந்திச் செல்ல முடிவு செய்தேன். படகின் வெளியில் யாரும் இல்லை. சிலர் தூக்கத்திலும், சிலர் படித்துக்கொண்டுமிருந்தனர். சிலர் தண்ணீரில் ஓடும் ஜெட் வாகனத்தைக் கொண்டு விளையாடிக்கொண்டிருந்தனர். நான் எப்பொழுதும் ஒரு வலிமையான நீச்சல் வீரன் என்று நினைத்துக் கொண்டிருப்பேன். அதனால் நான் படகிலிருந்து நூறு அடி தூரத்தில் உள்ள கரைக்கு நீந்திச் சென்றேன்.

    நான் வெகு தூரத்தை அடைந்தபோது, சோர்வுற்றவனாய் உணர்ந்தேன். அங்கே இளைப்பாறுவதற்கு இடம் ஏதும் தென்படவில்லை. கரை ஏறக்குறைய செங்குத்தாக உயர்ந்தது மற்றும் கரையிலிருந்து சில அடிகள் ஆழத்தில் தண்ணீர் இருந்தது. என்னால் நின்று என் மூச்சைப் பிடிக்க முடியவில்லை. ஏனென்றால் கரையில் பிளவுபட்ட பாறைகள் என் கால்களுக்கு வலி ஏற்படுத்தியது. நான் நீந்தித் திரும்புவதைத் தவிர வேறு வழி எனக்கு தெரியவில்லை.

    பாதி தூரத்தை நீந்திக் கடந்தபின்னர், களைப்பின் அலைகள் ஈரமான சிமென்ட் குவளை போல என் மார்பில் மோதியது. அப்போது நான் ஒரு ஓட்டப்பந்தய வீரராக இருந்தேன். ஓட்டப்பந்தய வீரர்கள் சோர்வடையும் போது, அவர்கள் வேகத்தைக் குறைத்து மெதுவாக ஓடுவார்கள். ஆனால் நீச்சலில் அது சாத்திமில்லை. வேகம் குறைய, நான் மூழ்க ஆரம்பித்தேன். பீதியடைந்தேன். யாராவது நான் அலறுவதைக் கேட்டு, அந்த வீட்டுப்படகின் நங்கூரத்தை இழுத்து, என்னைக் காப்பாற்ற வருவதற்குள் நான் மூழ்கிவிடக்கூடும் என்பதை உணர்ந்தேன்.

    “எனக்கு உதவும் இயேசுவே!” என்று நான் அழுதிருக்கலாம். அதைவிட இறையியல் ஆழமான காரியம் எதுவும் இருந்திருக்காது. சில வினாடிகளில், ஃபோர்ட் நாக்ஸ் நீச்சல் குளத்தில் நான் கற்றுக்கொண்ட இராணுவ அடிப்படைப் பயிற்சியிலிருந்து நீண்டகாலமாக மறந்துபோன பாடத்தை நினைவு கூர்ந்தேன். அது காலவரையறையின்றி மிதக்கும் ஒரு எளிய நுட்பமான ட்ரூன்ப்ரூஃபிங் என்று அழைக்கப்பட்டது. அந்த நேரத்தில் அது கேலிக்குரியதாகத் தோன்றியது. ஆனால் கம்பர்லேண்ட் ஏரியின் நெருக்கடியான அந்த தருணத்தில், அதுவே என்னைக் காப்பாற்றியது. நான் தண்ணீரை நிறுத்தி மெதுவாக மிதக்க முடிந்தது. இது பயத்தைத் தணித்தது. ஓரிரு நிமிடங்களுக்குப் பிறகு, நான் நன்றாக மூச்சுவாங்கி என்னை ஆசுவாசப்படுத்தக்கொண்டு படகிற்கு பாதுகாப்பாக நீந்தி சென்றேன்.

    ஞானி என்று என்னை எண்ணிக்கொண்டிருந்த நான் அப்போது நடந்த அந்த சம்பவத்தினால் அசைக்கப்பட்டேன். தண்ணீர் எவ்வளவு விரைவில் மோசமான ஒன்றாய் மாறிவிடும் என்பதை அறிந்த எனக்கு அதின் மீது ஒரு பயம்கலந்த மரியாதை வந்தது. அத்துடன் என்னுடைய நீச்சல் திறமையானது தண்ணீரின் பலத்திற்கு முன்பாக ஒன்றுமில்லை என்கிற தாழ்மையான சிந்தையும் எனக்கு வந்தது. “கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்” (சங்கீதம் 111:10) என்ற வசனம் எல்லா சூழ்நிலைகளிலும் உண்மையில்லை.

    நாம் பூமியின் வெளிகளில் சுற்றித்திரியும்வேளைகளில் விவேகமுள்ள பயமானது தேவன் நம்முடைய வாழ்க்கையில் வைத்திருக்கும் திட்டத்திற்கு நேராய் நம்மை வழிநடத்துகிறது. இது நமது உள் எச்சரிக்கை அமைப்பைத் தூண்டுகிறது. அதின் உள்ளார்ந்த மகிழ்ச்சியினாலே நம்மை திருப்தியடையச்செய்கிறது. குடிநீர் இல்லாமல் வனாந்தரத்திற்குச் சென்றாலோ, பாதுகாப்பு உடையில்லாமல் படகில் பயணித்தாலோ, காடுகளில் அவசர காலத்தில் கழிப்பறை காகிதத்திற்கு பதிலாக விஷப் படர்க்கொடி இலைகளைப் பயன்படுத்தினாலோ அதற்கான விலையைக் கொடுக்கவேண்டியிருக்கும் என்று இயற்கை நம்மை எச்சரிக்கிறது. இதில் விஷப்படர்கொடி இலைகளைப் பயன்படுத்திய அனுபவம் இனி மீண்டும் என்னுடைய வாழ்க்கையில் நடக்காமல் நான் கவனமாகவே செயல்படுவேன்.

    இன்னொரு வகையான பயம், அந்த அளவிற்கு பயமுறுத்தக்கூடியது அல்ல. அது மரியாதையினிமித்தம் ஏற்படுகிற ஒரு பரிசுத்த பயபக்தி என்று சொல்லக்கூடும். பரிசுத்த பயபக்தி என்பது தேவனையும் அவருடைய சிருஷ்டிப்பின் மகத்துவத்தையும் நமக்கு உணர்த்துகிறது. தேவன் நம்மீது வைத்திருக்கும் அன்பைப் பிரதிபலிக்கும் ஒரு சிறிய அக்கறையுடன் அவைகளை கையாள இது நமக்கு உதவுகிறது.

    விவேகமான பயம் மற்றும் பயபக்தி என்ற இரண்டு பயங்களும் எதிரெதிர் துருவங்களாய் தெரியலாம். உண்மையில், சில ஆண்டுகளுக்கு முன்பு நான் தேனீ வளர்ப்பை மேற்கொண்டபோது அதில் நான் கற்றுக்கொண்ட அனுபவம்போல் அது இருக்கக்கூடும் என்று எண்ணுகிறேன்.

    நான் முதலில் ஒரு தேனீ வளர்ப்பாளராக ஆனேன். ஏனென்றால் எங்கள் கிராமப்புற வீட்டிற்கு உணவு உற்பத்தி செய்யும் “கால்நடை” தேவைப்பட்டது. ஏப்ரல் மாதத்தின் குளிர்ச்சியான இரவில் அதற்கு உணவளிக்கவோ, தண்ணீர் ஊற்றவோ, கசாப்புக் கொடுக்கவோ அல்லது பாட்டிலோடு பாலூட்டவோ தேவையில்லை. இது என்னுடைய அனுபவம். இதை நான் வெளிப்படையாய் சொல்லவில்லை என்றாலும், முழுநேர தேனீ வளர்ப்பவரின் மர்மத்தால் நான் ஈர்க்கப்பட்டேன்.

    துவக்கத்தில் பயம் என்னை ஆட்கொண்டது. முதல் இரண்டு ஆண்டுகளுக்கு, நான் தேனீ முற்றத்திற்கு பலத்த பாதுகாப்புகளுடன் சென்றேன். அது பாதுகாப்பு கியர் மட்டுமல்ல: தலை முக்காடு மற்றும் ஜாக்கெட், தோல்-பனையால் ஆன கையுறைகள் போன்றவற்றை உள்ளடக்கியது

    நான் அந்த நேரத்தில் தேனீ வளர்ப்பவரை விட திரைப்படத்தில் தோன்றும் ஸ்ட்ரோம்ட்ரூப்பர் கதாப்பாத்திரத்தைப் போல் இருந்தேன். ஆர்வக்கோளாறில், 35,000 பேர் குடியிருக்கும் அந்த வீட்டின் மேற்கூரையை அகற்றுவேன். ஆர்வமுள்ள அவசரத்துடன், நான் சீப்பின் சட்டங்களை வெளியே எடுத்து, நொறுக்கப்பட்ட தேனீக்கள் மற்றும் சிதைந்த தேன் செல்களை வெளியே விட்டுவிடுவேன். அது வியாபாரத்தில் ஏற்படும் சேதாரமல்லவா? தேனீக்களும் அவற்றின் தேனும் என் சொத்து அல்லவா? நான் அவைகளுக்கு பணம் செலவழிக்கவில்லையா? படைப்பின் மீதான எனது இலாபவெறியின் சிகிச்சையில், நான் தேவனின் திறந்த தாராள மனப்பான்மையை ஒரு கொடுங்கோலன் கொள்ளையடிக்கும் பேராசையுடன் அணுகினேன்.

    என் பிரயாசத்தின் பலனை அனுபவிக்கும் நாள் வந்தது. நான் இரண்டு முழு பிரேம்கள் தேனீக்களையும் தேன் கூட்டையும் தரையில் இறக்கினேன். ஒரு கணத்தில், சலசலக்கும் தீமையின் மேகம் என்னை மூழ்கடித்தது. நான் அசையாமல் நின்றிருந்தால் பாதுகாப்புக் கருவி என்னைப் பாதுகாப்பாக வைத்திருந்திருக்கும். ஆனால் நானோ கோழி-நடன பாணியில் தலைக்கு மேல் கைகளை அசைத்துக்கொண்டு பயந்துபோன ஆறு வயது சிறுவனைப் போல ஓடினேன். எவ்வளவு தான் அடித்து விரட்ட முயற்சித்தாலும், இரண்டு தேனீக்கள் என் பேண்ட் அடிதுவார வழியாய் உள்ளே நுழைந்து என் முழங்காலை பதம்பார்த்தது. அவைகளை குற்றஞ்சொல்லமுடியாது.

    அடுத்த இரண்டு வாரங்களுக்கு, தேனீக்களின் கூட்டிற்கு செல்ல நான் மிகவும் சிரமப்பட்டேன். நான் சில அடி தூரத்தில் ஓரமாக நின்று 15-20 நிமிடங்கள் தேனீக்கள் வருவதையும் போவதையும் பார்த்துக் கொள்கிறேன். அது மாறிவிடும், நான் அதை தொடர்ந்து செய்திருக்க வேண்டும். ஒருமுறை தேனீ முற்றத்தில் ஓய்வெடுக்க முடிந்தது. அடிபணியவோ ஆதிக்கம் செலுத்தவோ எதுவும் இல்லை. வெப்பநிலை, மேக மூட்டம் மற்றும் ஈரப்பதம் போன்ற காரணிகள் தேனீக்களின் மனநிலை மற்றும் செயல்பாட்டின் அளவை எவ்வாறு பாதித்தன என்பதை நான் பார்க்க ஆரம்பித்தேன். நான் இப்போது தேனீக்களை அடிமைகளாய் பாவிக்கும் ஒரு கொடுங்கோலனைப் போல் சிந்திக்காமல், ஒரு தேனீ வளர்ப்பாளராய் சிந்திக்க ஆரம்பித்தேன்.

    ஒரு ஞாயிற்றுக்கிழமை காலையில், ஜூன் மாத சூரிய ஒளியில் தேனீக்கள் வருவதை நான் பார்த்தபோது, பாய்ந்தோடுகிற கிருபையின் அந்த பரிசுத்தமான பயத்தை நான் முதலில் உணர்ந்தேன். அன்று “தேன் ஓட்டம்” அதிகமாக இருந்தது. தேனீயின் விருப்பமான பூக்கள் உச்சகட்டத்தில் பூக்கும்போது இது நிகழ்கிறது. பூக்களின் பொலிவு அளவுக்கு மிகுதியாக இருப்பதால், தேனீக்கள் வேறு எதையும் கவனிக்க முடியாத அளவுக்கு ஆர்வமாக இருந்தன. சில மணிநேரங்களுக்கு, அவைகள் பட்டாம்பூச்சிகளைப் போல அமைதியாக இருக்கின்றன.

    ஐம்பது அல்லது எழுபத்தைந்து தேனீக்கள் கூட்டாக சேர்ந்து ஒரு பந்துபோல அடத்தியாய் பறந்து, தேன் கூட்டின் நுழைவாயிலில் உள்ள ஒரு அங்குல அகலமான தரையிறங்கும் பலகையில் இறங்குவதற்குத் தங்கள் முறைக்கு காத்திருந்தது. ஒரு பண்டைய காலத்தின் மர்மம் மிகுந்த சமுத்திரம் மற்றும் பிரபஞ்சத்தின் ஒத்திசைவான இயக்கத்தின் தெய்வீக மயக்கமாக அது என்னைத் தாக்கியது. உள்ளே வரும் தேனீக்களில், மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறத் துகள்கள் அவற்றின் பின் கால்களுக்குப் பின்னால் உள்ள மகரந்தக் கூடைகளில் ஒட்டிக்கொண்டன. சில தேனீக்கள் அதிக சுமையுடன் இருந்ததால் அந்த சுமைகள் கூட்டில் இறக்கிவைக்கப்பட்டன. அங்கே, வார்த்தைகளற்ற ஒத்திசைவில், துகள் அளவு மூளைகொண்ட அந்த சிறிய பூச்சிக்கள் நித்தியத்தின் தூய்மையான உணவை உருவாக்கிக் கொண்டிருந்தன.

    தங்கள் சுமையை இறக்கிவைத்துவிட்டு வெளியே செல்லும் தேனீக்கள், மற்றொரு சுற்றுப் பயணத்திற்கு ஆயத்தமாகி புறப்பட்டன. மூன்று மைல்கள் தொலைவில் இருக்கும் பூக்களின் இருப்பிடத்தை நன்கு அறிந்த தேனீக்கள் மற்ற தேனீக்களுக்கு வழிகாட்டின. பிறந்து பதினைந்து நாட்கள் பருவமான அவைகள், எப்படியோ நடனமாடக் கற்றுக்கொண்டது (நான் ஒரு நாத்திகனாக இருந்தேன்; இந்த தேனீ வளர்ப்பு என் அவநம்பிக்கைக்கு ஆபத்தானது என்று எனக்குத் தோன்றியது).

    ஞாயிற்றுக்கிழமை மாலை நான் திரும்பியபோது, தேன் கூட்டிலிருந்து ஒரு உணர்வுப்பூர்வமான ஓசை வெளிப்பட்டது. அங்கு வேலைக்காரத் தேனீக்கள் பச்சைத் தேனை உள்ளே விசிறின. அவற்றின் எண்ணற்ற சிறகுகள் ஒரே குரலில் துடிக்க, சூடான காற்று பதிவேட்டில் இருந்து நறுமணமுள்ள காற்றின் வரைவுகள் நுழைவாயிலிலிருந்து தேன் கொட்டியது. ஐம்பது அடி தூரத்தில் இருந்து நீங்கள் அதை நுகரலாம். சொர்க்கத்தின் வாசலில் இருந்து பாய்ந்திருக்கக்கூடிய ஒரு இனிமையான வடிதல் அது. இரவு முழுவதும், இருண்ட தேன் கூட்டின் ஆழத்தில், தேனின் ஈரப்பதம் 17 அல்லது 18 சதவீதம் ஆவியாகும் வரை அவை விசிறி விடுகின்றன. அப்போதுதான் தேன் வெள்ளை மெழுகு தோலால் மூடப்படுகிறது.

    அது நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம். இந்த தேன்கூட்டு யுக்தி அதிலிருந்து எனக்கு மிகவும் எளிமையானதாய் மாறியது. நான் சிறிது நேரம் பரிசுத்த ஆவியானவரிடம் ஒரு எளிய ஜெபத்தை ஏறெடுத்தேன். எனது வேலை முடிந்ததும், எந்த ஒரு தேனீயும் என்னைக்கொட்டுவதின் முலம் தன்னுடைய உயிரைவிட விரும்பிவில்லை. ஏனென்றால், நான் விகாரமாகவும் அவசரமாகவும் சில காரியங்களை செய்திருந்தேன்.

    மூன்று ஆண்டுகளாய் அந்த தேனீக்கள் என்னைக் கொட்டியதேயில்லை. அவைகளின் நடவடிக்கைகளை கூர்மையாய் கவனித்தே அதற்கான காரணம் என்று நம்புகிறேன். தேனீக்களை கோபமூட்டும் விஷயங்கள் என்ன என்பதை நான் கற்றுக்கொண்டேன். இனி நான் அதைச் செய்யமாட்டேன். தேனீக்கள் ஒரு குறிப்பிட்ட கோபமான சுருதியில் தேன் கூட்டின் சலசலப்பை அதிகரிக்கச்செய்யும்போது, செயற்கைக் கூட்டின் மேல் அட்டையை மெதுவாக மூடிவிட்டு அப்படியே இருக்க வேண்டிய நேரம் அது என்பதை தேனீ வளர்ப்பவர்கள் நன்கு அறிந்திருப்பர்.

    எது எப்படி இருக்க வேண்டுமோ அப்படியே இருக்கவேண்டும். தேனீயின் தற்காப்பு இயல்புக்கு தேவன் கட்டளையிட்டது போல், அவர் நமக்கு உயர்ந்த தன்மையை கட்டளையிட்டிருக்கிறார். படைப்பை நாம் அறியவும், நேசிக்கவும், அக்கறை கொள்ளவும், கிருபையால் பூரணப்படுத்தப்பட்ட பகுத்தறிவுத் திறனை தேவன் நமக்குத் தந்தருளியிருக்கிறார். மேலும் “பூரண அன்பு பயத்தைப் புறம்பே தள்ளும்” (1 யோவான் 4:18) என்னும் வசனத்தை தேனீ வளர்ப்பாளர்கள் ஒவ்வொருவரும் தங்கள் இருதயத்தில் எழுதி வைத்துக்கொள்ளவேண்டும். அதை தேனீ வளர்க்கும் பெட்டகத்தில் எழுதிவைத்திருப்பது சிறப்பானது. அந்த பூரண அன்போடு தேனீக்களை அடைத்துவைத்திருக்கும் சட்டத்தை அகற்றி, தேவனுடைய படைப்பாகிய தேனீக்களை மென்மையாகவும் கவனத்துடளும் கையாளுவதே சிறந்தது.

    பக்கத்தில் தேன் வடித்த சோள ரொட்டியுடன் கூடிய வெனிசன் மிளகாயின் இரவு உணவிற்கு முப்பது நிமிட தூரத்தில் நீங்கள் இருக்கும்போது அசுத்தமான பயம் ஏற்படுவதற்கு ஏதேனும் காரணம் உள்ளதா? தேனீ முற்றத்தில் ஒரு நல்ல மதியநேரத்தில், இனி நான் பயப்படுவதில்லை.

மூன்று

ஆச்சரியம்

டைப்பின் மகிமையைக் கண்டு ஆச்சரியப்படும் மனிதத்திறனுக்கு எனக்குப் பிடித்த உதாரணங்களில் ஒன்று, தனது வயதுவந்த வாழ்க்கையின் பெரும்பகுதியை வீட்டுக்குள்ளேயே வாழ்ந்த ஒரு பெண்ணிடமிருந்து வருகிறது. “என்னை பூட்டிவிட்டு சாவியை வீட்டிற்குள் தூக்கி எறிந்து விடுங்கள்.” அப்படி சொன்னது, நார்விச்சின் ஜூலியன், 13 ஆம் நூற்றாண்டின் ஆங்கில ஆன்மீகவாதி. ஜூலியனின் ஊழியத்திற்கான அழைப்பு, அவரது கணவரும் குழந்தைகளும் கருப்பு பிளேக் நோயால் இறந்தபிறகு வந்ததாக சிலர் நம்புகிறார்கள். ஆதாரம் எதுவாக இருந்தாலும், அவளது தொழில் சாதாரணமானதல்ல. அவள் ஒரு தேவாலயத்தின் சரணாலயத்திற்குள் செங்கல் வெட்டப்பட்ட ஒரு சிறிய அறையில் தங்கியிருந்த ஒரு தீவிர ஆன்மிகவாதி. அங்கு, ஒரு சிறிய ஜன்னல் வழியாக அவளது அற்பமான ஜீவனாம்சத்துடன், இடைவிடாத ஜெபத்தையும் (1 தெசலோனிக்கேயர் 5:16-18) ஏழைகளுக்குத் துணிகளைத் தைத்துக்கொடுக்கும் உதவியையும் அவள் செய்துவந்தாள். அவள் தேவனுடைய படைப்புகளிலிருந்து தன்னை துண்டித்துக்கொள்வதுபோல தெரிந்தாலும், ஜூலியனின் ஆன்மீக தரிசனங்கள் அவளை இன்னும் அதில் அதிகமாய் மூழ்கச்செய்தது. “காட்சிகள்” என்று அவள் அழைத்தவற்றில் மிகவும் பிரபலமானது, ஜூலியன் உலகம் முழுவதையும் ஒரு கடலைப்பருப்போடு ஒப்பிடுகிறார்:

இந்த நுண்ணறிவுடன், அவர் என் உள்ளங்கையில் கிடக்கும் ஒரு கடலைப்பருப்பு அளவு, ஒரு சிறிய விஷயத்தை எனக்குக் காட்டினார். அது சிறிய பந்துபோல் உருண்டையாக எனக்குத் தோன்றியது. நான் அதைப் பார்த்து, “இது என்னவாக இருக்கும்?” என்று கேட்க, பதில் இவ்வாறு வந்தது. “அதுதான் படைக்கப்பட்ட அனைத்தும்… அது நீடிக்கும், என்றும் நிலைத்திருக்கும், ஏனென்றால் தேவன் அதை நேசிக்கிறார். தேவனுடைய கிருபையால் அனைத்தும் அவ்வாறே தோன்றியிருக்கிறது.”

    ஜெபத்தோடுகூடிய ஒரு சமாதானத்தை உணரும்பொருட்டு ஒரு மூடப்பட்ட அறைக்குள் தங்களை தனிமைப்படுத்திக்கொண்டு வாழ்வது என்பது நடைமுறைக்கு முரணானது. ஜூலியன் கற்பனை செய்ததை விட சத்தம் மற்றும் பரபரப்பான வாழ்க்கை நமக்கு இருக்கும்போதிலும், படைப்பின் மிக அடிப்படையான கூறுகளில் தேவனின் அதிசயங்களைக் கண்டு நாம் இன்னும் ஆச்சரியப்படலாம்.

    எனது காரின் சக்கரத்தில் சுற்றியிருந்த ஒரு மண் குவியலில் வெளிப்பட்ட ஒரு மலைத்தொடரைப் பார்க்க வந்தபோது இதை நான் உணர்ந்தேன்.

    அந்த அழுக்குமணல் குவியல், மிச்சிகன் சாலை கட்டுமானப்பணியின் விளைவாய் ஏற்பட்டது. அது ஒரு போக்குவரத்து சிக்னலுக்கு அருகில் நின்றது. நான் வேலைக்கு போகும் வழியில் அந்த இடத்தில் நிற்க நேரிட்டது. அதை அதற்கு பிறகு நான் பார்க்கவேண்டும் என்று எண்ணியதில்லை. வாழ்க்கையின் அன்றாட அடையாளங்களுடன் அது எப்படி இருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும்.

    எனது பார்வையை மாற்ற கலிபோர்னியாவிற்கு வணிகப் பயணம் மேற்கொண்டேன். எனது விமானத்தில் வானிலை தெளிவாக இருந்தது. விமானம் இறங்கும் போது, மலைகளின் எல்லைகள் மற்றும் பிளவுகள் வழக்கத்திற்கு மாறாக தெளிவாக வெளிப்பட்டதை நான் கண்டேன். சிறுவயதில் நான் விளையாடிய பிளாஸ்டிக் மேப் வரைபடங்களை இது எனக்கு நினைவூட்டியது. இது பூமியின் அனைத்து நிலப்பரப்புகளையும் பச்சை, பழுப்பு மற்றும் நீல நிறங்களின் சமதளங்களில் காட்சிப்படுத்தியது.

சிருஷ்டிகர்த்தர் மேலே வானத்திலிருந்து பூமியை எவ்விதம் பார்க்கிறார் என்பதை விமானத்தின் ஜன்னலிலிருந்து என்னால் பார்க்க முடிந்தது. மலைகளின் ஓரங்களை உறுதியாகப் பிடித்திருக்கும்பொருட்டு அவர் ஊசியிலை காடுகளை நட்டார். அவர் கிரானைட் சரிவுகளில் ஓடைகள், சிற்றோடைகள் மற்றும் பள்ளத்தாக்குகளை செதுக்க மழையையும் பனியையும் அனுப்பினார். அவர் சிகரங்களை பனிப்பாறைகளினால் அலங்கரித்தார். இதனால் கோடைகாலத்தில் அந்த பனி உருகி ஆறுகளையும் நீர்த்தேக்கங்களையும் நிரப்பும். ஒவ்வொரு மலையும் தனித்தனி தன்மையைக் கொண்டிருந்தாலும், ஒவ்வொன்றும் இயற்கை வடிவமைப்பின் ஒரே ஒருங்கிணைந்த கொள்கைகளைப் பின்பற்றின. இவை அனைத்திலும் ஒரே எஜமானனுடைய கரத்தை நீங்கள் காணமுடியும்.

    வணிகப் பயணத்திற்குப் பிறகு திங்கட்கிழமை காலை, நான் என் வழக்கமான சிக்னலின் சிவப்பு விளக்கில் நின்று, அழுக்கு குவியலை சாதாரணமாகப் பார்த்தேன். ஆனால் இம்முறை வேறொன்றை அங்கே நான் பார்க்கநேரிட்டது. அந்த அழுக்கு மணல் குவியல், வழக்கத்திற்கு மாறாக, உயரம் குறைந்து காணப்பட்டது. நான் இல்லாத நேரத்தில் பெய்த பெருமழையின் காரணமாக, அந்த குவியலில் இருந்த நல்ல மணல்கள் கரைந்து, பக்கவாட்டுகளை நிரப்பியது. ஓடும் சிறிய நீரோடைகளாகப் பிரிந்து, இலகுவான மணலை அடிப்பகுதிக்குக் கொண்டு சென்றது. ஒரு சிறிய பள்ளத்தாக்கில் அரிப்பு மண் குவிந்து அதின் மீது புற்கள் முளைத்திருந்தது.

    அந்த அழுக்கு மணற்குவியல், ஒரு பெரிய மலையின் சின்ன மாதிரியாய் தென்பட்டது. இது தேவனின் மாறாத இயற்கை விதிகளின் அளவுமாதிரியாக இருந்தது. ஒருவேளை என்னுடைய விமான பயணத்தின் விளைவாய் எனக்கு ஏற்பட்ட காலநேர மாற்றமாய் இருந்திருக்கும். அந்த அழுக்கு மணல் குவியலை பெரிய மலையாய் எண்ணிய நான் அதில், ஒரு வெள்ளை பண்ணை வீடு இருப்பதாக கற்பனை செய்தேன். புல்வெளியில் ஒரு சிறிய சிவப்பு டிரக் மற்றும் செம்மறி ஆட்டு மந்தையையும் நான் கற்பனை செய்தேன். அந்த குவியல் 8,000அடி உயரமுள்ள மலைமுகடு அல்ல, மாறாக, எட்டு அடி உயரமான மணல்குவியலாய் இருந்தது. ஆயினும்கூட, கலிபோர்னியாவைப் போலவே இங்கும் பொருந்தக்கூடிய புவியீர்ப்பு மற்றும் இயற்பியல் கொள்கைகள் அனைத்தையும் வடிவமைத்திருப்பதை ஒருவர் தெளிவாகக் காணலாம்.

    சிக்னலின் சிகப்பு விளக்கு பச்சை விளக்காய் மாறியதை நான் கவனிக்காமல் கற்பனை செய்துகொண்டே நின்றுகொண்டிருந்தேன். எனக்கு பின்னாலிருந்த ஒருவர் வாகனத்தின் ஹார்ன் ஒலியை எழுப்பிய பின்னரே நான் சுதாரித்துக்கொண்டு நகர ஆரம்பித்தேன்.

    இது தான் ஆச்சரிய உணர்வைக் குறித்த வியப்பான காரியம். நாம் சிக்னல் விளக்கில் நின்றுகொண்டு யோசிக்கிறோமோ அல்லது ஹப்பிள் தொலைநோக்கி மூலம் வானவெளியைப் பார்வையிடுகிறோமா என்பது பொருட்டல்ல. நமது மனித உணர்வுகள் குறிப்பிடத்தக்கதாகக் கருதும் படைப்பின் ஒரு அம்சத்தைப் பற்றி சிந்திக்க நாம் நின்று யோசிக்கும்போதெல்லாம் ஆச்சரியம் தொற்றிக்கொள்கிறது. பூமி, நீர், அல்லது விண்மீன் போன்ற எந்த படைப்பும் எப்படி உருவானது என்பது பற்றிய புனிதமான வியப்பு உணர்வை நாம் வளர்த்துக் கொள்ளும்போது ஆச்சரியம் வளர்கிறது. தங்கள் தேடும் தன்மையின் மூலத்தை இன்னும் புரிந்துகொள்ளாத நம்பிக்கையற்ற விஞ்ஞானிகளுக்கு கூட, விஞ்ஞான விசாரணையின் மையத்தில் இந்த ஆச்சரியம் காத்திருக்கிறது.

    மனிதர்கள் ஆச்சரியப்படுவதற்கு வடிவமைக்கப்பட்டவர்கள் என்பது தெரிகிறது. “ஏன்? அது எப்படி?” என்று கேட்கக்கூடிய பொருள் ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் வளரவும் முன்னேறவும் மனித இனம் முயற்சிக்கிறது. நாம் ஆச்சரியப்படுவதற்குத் தயாராக இருந்தாலும், பெரிய மற்றும் சிறிய வழிகளில் அதன் அழைப்பை நாம் உற்று கவனிக்க வேண்டும்.

    எலியா தீர்க்கதரிசி ஓரேப் கன்மலையின் குகையில் ஒளிந்துகொண்டு தன்னால் இயன்ற அனைத்தையும் செய்தான் (1 இராஜாக்கள் 19:11-13). கர்த்தருடைய வார்த்தை எலியாவுக்கு வெளிப்பட்டு, “நீ வெளியே வந்து கர்த்தருக்கு முன்பாகப் பர்வதத்தில் நில் என்றார்; அப்பொழுது இதோ, கர்த்தர் கடந்துபோனார்” என்று கட்டளையிட்டது.

    எலியா தீர்க்கதரிசி ஓரேப் கன்மலையின் குகையில் ஒளிந்துகொண்டு தன்னால் இயன்ற அனைத்தையும் செய்தான் (1 இராஜாக்கள் 19:11-13). கர்த்தருடைய வார்த்தை எலியாவுக்கு வெளிப்பட்டு, “நீ வெளியே வந்து கர்த்தருக்கு முன்பாகப் பர்வதத்தில் நில் என்றார்; அப்பொழுது இதோ, கர்த்தர் கடந்துபோனார்” என்று கட்டளையிட்டது.

    இந்த பெரிய இயற்கை சீற்றங்களுக்கு பின்னர் என்ன தோன்றுகிறது. அது மூடுபனியைப் பற்றி கவிஞர் கார்ல் சாண்ட்பர்க் எழுதியதை எனக்கு நினைவூட்டுகிறது. மூடுபனி துறைமுகத்தின் குறுக்கே “சிறிய பூனையின் கால்களில்” தவழ்ந்து வரும் என்று சொல்லுகிறார்.

    ஓரேப் கன்மலையில் எலியாவுக்கு கிடைத்த அமைதியான வெளிப்பாடானது, ஆச்சரியப்படுகிற சுபாவம் கொண்ட ஒரு நபரால் மாத்திரமே விளங்கிக்கொள்ள முடியம்.

    “அக்கினிக்குப்பின் அமர்ந்த மெல்லிய சத்தம் உண்டாயிற்று. அதை எலியா கேட்டபோது, தன் சால்வையினால் தன் முகத்தை மூடிக்கொண்டு வெளியே வந்து, கெபியின் வாசலில் நின்றான்.”

    நம்மில் சிலர் இயேசுவைப்போலவும் மற்ற தீர்க்கதரிசிகளைப்போலவும் மலைகளுக்கு சென்று ஜெபிக்கும் வழக்கமுடையவர்களாய் இருக்கலாம். ஆனால் நம்மைச் சுற்றி எப்போதும் காத்துக்கொண்டிருக்கக்கூடிய இயற்கை அழகை ரசித்து, தேவனுடைய பிரசன்னத்தை நம்மால் எப்போதும் உணரமுடியும்.

    உடனடி உதாரணத்திற்கு, இப்போது உங்கள் கைகளின் பின்புறத்தைப் பாருங்கள். உங்கள் தோலுக்குக் கீழே கிளைத்து துடிக்கும் நரம்புகளைப் பார்க்கிறீர்களா? உங்கள் தாயின் வயிற்றில் சிறிய நெல்லிக்காய் அளவுள்ள கருவாய் நீங்கள் இருக்கும்போதிலிருந்தே தேவன் அவற்றை நேர்த்தியாய் வடிவமைத்திருக்கிறார். நீங்கள் உயிர்வாழவும், நடக்கவும் தேவையான அனைத்து ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களையும் அவைகள் சரீரம் முழுவதிற்கும் அமைதியாக எடுத்துச் செல்கின்றன. நீங்கள் உண்மையிலேயே பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டிருக்கிறீர்கள் என்பதற்கு இவைகள் தொடர்ச்சியான நினைவூட்டல்களாய் இருக்கிறது (சங்கீதம் 139:14).

    அடுத்த காட்சி, கங்கை, நைல் அல்லது மிசிசிப்பி போன்ற பெரிய நதிகளின் வான்வழிக் காட்சியை உங்கள் கண்முன் கொண்டு வாருங்கள். நீர் மற்றும் வண்டல் வெளியேற்றத்தை இவ்வளவு கலைநயமிக்க, அதேசமயத்தில் கணித திறனுடனும் அவைகள் எவ்வாறு விநியோகிக்கிறது என்று பார்க்கிறீர்களா? இன்னும் சொல்லப் போனால், டெல்டாவின் விசிறி வடிவ வலையமைப்பு குறைந்த நீரோடைகள் எப்படி ஒரு பெரிய மரத்தின் வேர்களை ஒத்திருக்கிறது என்று பார்க்கலாமா?

    என்னைப் பொறுத்தவரை, திரும்பத் திரும்ப வரும் இந்த தெய்வீக அமைப்பு தான் தேவனிடத்தில் ஜெபம் ஏறெடுக்க தூண்டும் விதத்தில் நம்மில் ஆச்சரித்தில் ஆழ்த்துகிறது. நத்தை ஓட்டின் சுழல் வடிவத்தை நான் பார்க்கும்போது, பால்வீதி விண்மீன் மேல்நிலையின் சுழல் வடிவத்தை நகலெடுத்து என் கையில் வைத்திருப்பது போல் உணர்ந்து ஆச்சரியமடைகிறேன். இரண்டையும் பிரிக்கும் மில்லியன்கணக்கான ஒளியாண்டுகள் அனைத்தையும் ஒருபோதும் அடக்கிவிட முடியாது. இயேசு பூமியில் இருந்த காலத்தில் செய்த அனைத்தையும் உலக அதிசய புத்தகங்களில் உள்ளடக்கிவிடமுடியாது (யோவான் 21:25).

    உற்றுகவனித்து ஆச்சரியப்படும் இந்த சுபாவம், மேலும் பல்வேறு ஆச்சரியங்களுக்கு நம்மை வழிநடத்துகிறது. ஆச்சரியப்படும் இந்த சுபாவம் ஒருமுறை நமக்கு ஏற்பட்டுவிட்டால் போதும், நாம் பார்க்கும் அனைத்து இயற்கை சூழலிலும் தேவனுடைய தெய்வீக கரத்தின் மகிமையை நம்மால் உணரமுடியும்.

    “நார்விச்சின் ஜூலியனுடன் ஜெபித்தல்” என்ற புத்தகத்தில், ஒரு பெண் தன்னைக் குறித்து பேசிக்கொள்ளும் ஒரு நாடக பதிவு இடம்பெற்றுள்ளது. அந்தக் காட்சியில், தூரல் தூவும் மார்ச் மாதத்தில் ஒரு சிறிய முற்றத்தில் ஜன்னலின் குறுகிய பிளவுக்கு அருகில் ஒரு வயதான பரிசுத்தவாட்டியை அவர் சித்தரிக்கிறார். மிகச் சிறிய உலகின் மகத்துவத்தை அவள் எப்படி ஆச்சரியத்துடன் பார்க்கிறாள் என்பதைப் பாருங்கள்:

கேள். பறவைகள் பாடுகின்றன.
கேதுருவும் புதர்களும் மிளிர்கின்றன
மழைத்துளிகளுடன்.
(மழையை உணர அவள் கைகளை நீட்டுகிறாள்)
படைப்புகள் அனைத்தும் குளிக்கிறது, கழுவப்படுகிறது –
மழையின் சப்தத்தை நீங்கள் கேட்கலாம்
மீன்; செதில்களின் அளவான
அதின் கனமான துளிகள்.
குளிர்ந்த காற்றில்
ஈரமான பூமியின் வாசனை பரவுகிறது.
ஒரு தாய் சிட்டு பூமரத்தில்
கூடு கட்டியுள்ளது.
அவள் கூடு மீது இறக்கைகள் விரித்து அடைகாக்கிறாள்.
அவள் புதிய ஜீவன்களுக்கு சூடேற்றுகிறாள்,
உறுதியான வாக்குறுதி. . .
‘என் பார்வைக்கு அழகாய் தோன்றும் அனைத்துமே கடவுள்தான்.
எல்லாவற்றிலும் உள்ள நற்குணமும் அவர்தான்.
கிறிஸ்து எல்லாவற்றையும் புதிதாக்க வந்தார்,
மற்றும் அன்பின் எல்லையை அளக்கும்
அவரது மரணம்,
மழை பொழிவதைப் போல தாராளமாய் வழிந்தோடுகிறது.

நான்கு

பராமரிப்பு

“கோ டைக்காலத்தில் இறுதியில், நீங்கள் அழுக்கு வாசனை வீச வேண்டும்” என்று ஒரு ஆங்கில எழுத்தாளர் கூறுகிறார். அதனால்தான், நம்மில் பலருக்கு நர்சரி கடையில் இருந்து விதைகள் மற்றும் தாவரங்களின் அடுக்குகளை வீட்டிற்கு கொண்டு வரும் வரை கோடைக்காலம் அதிகாரப்பூர்வமாக தொடங்குவதில்லை. என்னைப் பொறுத்தவரை, இது ஒரு குறுகிய, ஆனால் நறுமணப் பயணம். அது ஒரு புதிய பருவத்தின் பசுமையான கனவுகளால் மிதக்கிறது. துளசி மற்றும் தக்காளி இலைகளின் நறுமணம் காரை நிரப்புகிறது, மேலும் கோடைக்காலத்தின் தோட்டத்திற்கு தேவையான அனைத்தும் என்னுடைய காரின் பின் இருக்கையை நிரப்பியுள்ளது.

    இந்த கட்டத்தில் நாம் நிச்சயமாக ஆதாயத்தை எதிர்பார்த்தே அனைத்தையும் செய்கிறோம். ஆகையால் தாவரங்களின் இளமைப் பருவத்தில் நமக்கு அதிக விருப்பம் இருக்காது. சமையலுக்கு தேவையான தக்காளி, காய்கறிகளுடன் வேக வைப்பதற்கு பீன்ஸ், மற்றும் கடித்து சாப்பிடுவதற்கு தேவையான கேரட்டுகள் போன்று வளர்ச்சியுள்ள தாவரங்களையே எதிர்பார்ப்போம்.

    தாவரங்களை நடவுசெய்த பிறகு நாம் செய்யக்கூடிய காரியம், அவைகளுக்கு தண்ணீர் ஊற்றி, அவைகள் பலன்கொடுக்கும் வரைக்கும் காத்திருப்பதே. ஒரு சுயநலவாதிக்குக்கூட தோட்டத்தைப் பராமரிக்கும்போது ஆச்சரியமான காரியங்கள் நிகழக்கூடும். விளைச்சலை விநியோகம் செய்யும் அலுவலராய் நீங்கள் செயல்படாமல், அவைகளை பராமரிக்கும் பராமரிப்பாளராய் நீங்கள் மாறிவிடுவீர்கள்.

    கோடைக் காலத்தின் துவக்கத்தில், வேலைக்கு சென்று திரும்பிய பிறகு தோட்டத்தை நீங்கள் பார்வையிடும்போது உங்கள் இருதயத்தில் பாசத்தின் வசந்தம் ஊற்றெடுக்கும். உங்கள் மென்மையான பராமரிப்பு சுபாவத்தை வெளிப்படுத்துகிறீர்கள். நேற்றிரவு தண்ணீர் பாய்ச்சிய பிறகு வாடிய வெள்ளரி இலைகள் மீண்டும் வடிவம் பெற்றதா? காய்கறிகள் முதிர்ச்சியடைவதற்குள் முருங்கைக்காயை பறிக்கவேண்டுமா? ஒவ்வொரு இலை மற்றும் பழத்தின் நிறமும் சாய்வும் எந்தெந்த தாவரங்களுக்கு கவனம் தேவை என்பதையும், எவைகள் அறுவடைக்கு தயாராக உள்ளன என்பதையும் காண்பிக்கிறது.

    நாம் வளர்த்த கால்நடைகளை கொன்று உண்ணும் வழக்கம் தோட்டக்கலைக்கும் பொருந்தும். செம்மறியாடு, கோழி, வான்கோழிகள் ஆகியவற்றை பராமரித்த என்னுடைய சகோதரன் அவ்வாறு செய்வதை நான் பார்த்திருக்கிறேன். அவரது பராமரிப்பில் விலங்குகள் பெரும்பாலும் போதுமான சூரிய ஒளி, மழை மற்றும் மேய்ச்சல் நிலங்களுடன் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்கின்றன. ஆனால் கரிம விவசாயியும் எழுத்தாளருமான ஜோயல் சலாட்டின், அந்த விலங்குகள் “அந்த நாளின் முடிவில் மோசமான முடிவை சந்திக்கின்றன” என்று சொல்லுகிறார். அவைகளை கசாப்பு செய்வதற்கு நானும் என் சகோதரனுக்கு உதவி செய்திருக்கிறேன். அவர் விலங்குகளின் மரணத்தைக் குறித்து துக்கங்கொண்டாடுவதையும், ஈஸ்டர் தின நாளின் இறைச்சிக்காக விலங்குகளை ஏற்றுமதி செய்வதினால் மனம்வருந்தியதையும் நான் பார்த்ததேயில்லை.

    படைப்பின் மீது அக்கறை கொண்டுள்ள நமது ஆழ்ந்த தேவையும், அது தரும் திருப்தியும், ஒரே தெய்வ நம்பிக்கையில் ஊன்றியிருக்கும் எவருக்கும் பெரிய ஆச்சரியமாய் தெரியாது. யூதர்களும் கிறிஸ்தவர்களும் மனிதகுலத்தின் தோற்றம் ஒரு அழகான தோட்டத்திலிருந்து துவங்கியதாக நம்புகின்றனர். அங்கு கடவுள், ஆண், பெண் மற்றும் அனைத்து படைப்புகளுக்கும் இடையே ஓர் அழகான உறவும் ஒற்றுமையும் நிலவியது. தக்காளிப் புழுக்கள் மற்றும் ஸ்குவாஷ் பூச்சிகள் போன்றவைகள் நம்முடைய தோட்டத்தை அவ்வப்போது அரித்து பாழாக்கினாலும் தோட்டங்களில் தெய்வீகத்தை நாம் இன்னும் உணர்கிறோம்.

    பெரும்பாலான மனித முயற்சிகளைப் போலவே, ஒரு தோட்டத்தைப் பராமரிப்பதற்கு, நாம் பயிற்சி மற்றும் சீஷத்துவத்தின் அனுபவத்திற்கு உட்படுத்தப்பட வேண்டும். முதலில், நாங்கள் புத்தகங்கள், சகதோட்டக்காரர்கள் மற்றும் நர்சரியில் பணிபுரிபவர்களிடமிருந்து ஆலோசனைகளை எதிர்பார்க்கிறோம். நாம் அனுபவப்பூர்வமாய் கற்றுக்கொண்ட காரியங்களை மற்றவர்களிடமிருந்து பெறுகிற நல் ஆலோசனைகளின் மூலம் மாற்றியமைத்துக்கொள்கிறோம். இறுதியில், நாமே நம்முடைய தோட்டத்தைப் பராமரிக்கும் முக்கியமான நபர் என்பதை அறிந்துகொள்கிறோம்.

    பலன்கொடுக்காத தோட்டங்கள் கூட தெய்வீக சத்தியங்களை நோக்கி நம்மை வழிநடத்தும் என்பதில் ஆச்சரியமில்லை. விவசாயத்தின் தோல்விகளை இயேசுகிறிஸ்து அவ்வப்போது தன்னுடைய போதனை உவமைகளில் பயன்படுத்தி போதிப்பதை நாம் பார்க்கமுடியும்: இயேசுவின் சாபத்தைப் பெற்று பட்டுப்போன அத்திமரம்; பாறையில் விழுந்த பலன்கொடுக்காத விதைகள்; கோதுமைகளுக்கு இடையே விளைந்திருக்கும் களைகள் போன்றவைகள் அதற்கு உதாரணங்கள். ஒரு சாதாரண தோட்டத்தில்கூட நாம் கற்றுக்கொள்ளக்கூடிய நல்ல விஷயங்கள் அதிகம் இருக்கிறது என்று அவர் பரிந்துரைக்கிறார். மேலும், ஞானத்தால் பிறந்த மனத்தாழ்மையால், மகத்தான பயிர்களை அறுவடை செய்பவர்களைத் துன்புறுத்தக்கூடிய அளவிற்கு பெரிய களஞ்சியத்தை கட்டியெழுப்பி அதில் அனைத்து தானியங்களையும் பதுக்கிவைக்கும் (லூக் 12:18) சுபாவமும் ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல என்றும் போதிக்கிறார். என்னுடைய நாட்களில் சூரியனுக்குக் கீழே நான் சேகரித்த தகவல்களின் மாதிரி இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆச்சரியங்களை எதிர்பார்க்கலாம்

    கோடைக்காலத்தில் தோட்டத்தின் காய்ந்த சருகுகளையும் பூஞ்சை இலைகளையும் புனிதமற்ற காரியங்களாய் நாம் எண்ணலாம். கோகோ பவுடரின் அரைக்கப்பட்ட நிலைத்தன்மையை அடையும் வரை மேல் மண்ணை ரோட்டோடில்லர் மூலம் தூளாக்க இது தூண்டுகிறது. பின்னர் ஒவ்வொரு விதையையும் தாவரத்தையும் குறிப்பிட்ட இடைவெளியை விட்டு நடவுசெய்யவும். ஆனால் அதற்கிடையில் நீங்கள் நடாத தவறான முளைகளும் விரைவாக வளரும்.

    ஆனால் நாம் பூமியை பண்படுத்துவதற்கு ஆதியாகமம் நமக்கு அழைப்பு விடுத்திருக்கிறது. அவைகள் கருகிய பூமிக்கு பலியாகிவிடாதபடிக்கு அவைகளை செப்பனிட அழைக்கப்பட்டிருக்கிறோம். உதாரணமாக, கடந்த ஆண்டு குப்பைகளை பயனுள்ள கரிமப் பொருளாக மாற்ற, ரோட்டோடில்லர் என்னும் எந்திரத்தின் மூலம் ஒரே ஒரு அலசு அலசியது போதுமானதாய் இருந்தது. வேர்த்தண்டுக்கிழங்குகள் மற்றும் நுண்ணுயிரிகளின் அனைத்து சங்கிலிகளுக்கும் வாழவதற்கு சரியான வாய்ப்புகொடுத்தால், அவைகள் எதிர்பாராத பரிசுகளை நமக்குக் கொடுக்கலாம்.

    கடந்த கோடைக்கால தாவரங்களின் வேர்களிலிருந்து தோன்றும் துளிரை தன்னார்வலர்கள் என்று தோட்டக்காரர்கள் அழைக்கின்றனர். நான் குறிப்பாக தன்னார்வலர்களை விரும்புகிறேன், ஏனென்றால் அவைகள் இரண்டாம் தலைமுறை தாவரங்கள். கடந்த ஆண்டில் கடையில் வாங்கி வைத்திருந்த பிளாஸ்டிக் தொட்டியின் புதிய சந்ததிகள் அவைகள். அவைகளுக்கு எந்த உரமும் வைக்கப்படவில்லை. அவைகள் ஏப்ரல் மாத சூரியஒளியில் தங்கள் சொந்த விருப்பத்துடன் வணகத்திற்கு உதவும்வகைளில் தங்கள் தளைகளை வெளியே அனுமதித்தன. இந்த தன்னார்வ ப்ரோக்கோலி நாற்றுகள் நேர்த்தியான வரிசையில் வரும் என்று எதிர்பார்க்க வேண்டாம். அது உங்களுடைய வேலை, அவர்களுடையது அல்ல.

தாராள குணத்தை நடைமுறைப்படுத்துங்கள்

    நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ஒரு தோட்டத்தை பராமரியுங்கள். அது உங்களை தாராள குணமுள்ளவர்களாய் மாற்றும். மே மாதத்தில் உங்கள் காரின் பின் இருக்கையில் மிகவும் நேர்த்தியாக பொருந்திய பத்து தக்காளி செடிகள், ஆகஸ்ட் மாத தொடக்கத்தில், அவர்கள் வாரத்திற்கு பத்துமடங்கு அதிகமான பழங்களை விளைவிக்கலாம். உங்களின் பயன்பாட்டிற்கு மிஞ்சியவைகளைக் கொண்டு புதிய நண்பர்களையும் உறவுகளையும் ஏற்படுத்திக்கொள்ள அது வழிவகுக்கும்.

    முதலாவது, உங்களுடைய தயாள குணம் இதைச் செய்வதற்கு உங்களை தூண்டவில்லை. நீங்கள் இவ்வளவு கடினமாக உழைத்து இந்த பொருட்களை வளர்த்துள்ளீர்கள். அதை மற்றவர்களுக்கு கொடுப்பதில் உங்களுக்கு உடன்பாடு இல்லாமல் இருக்கலாம். உங்கள் தோட்டத்தில் விளைந்த சிறிய பச்சை மிளகாயை (அதாவது, உங்கள் தோட்டத்தில் உள்ளவற்றில் 85 சதவீதம்) நீங்கள் பகிர்ந்து கொள்ள மாட்டீர்கள். ஏனெனில் அது உங்களை மகிழ்ச்சியற்றவர்களாய் மாற்றக்கூடும்.

    எனினும், காலப்போக்கில், நம்முடைய சுய சேவை தாராள மனப்பான்மை ஆன்மீக ரீதியில் மிகவும் பயனுள்ள ஒன்றாக உருவாகலாம். உங்களுடைய பார்வையில் சிறந்தது என்று நீங்கள் நம்பும் காரியங்களை மற்றவர்கள் அனுபவிக்க நீங்கள் அனுமதிக்கும் இந்த சுபாவம் உங்களுக்கு நன்மையானது என்பதை நீங்கள் அறிவீர்கள்.

    ஒரு பணக்கார, சக்தி வாய்ந்த பெண்தான் அதைப் பார்க்க எனக்கு உதவியது.

    அவள் (நான் அவளை ஷீலா என்று அழைப்பேன்) நான் பணியாற்றிய பல பில்லியன் டாலர் நிறுவனத்தில் இயக்குநர்கள் குழுவில் பணியாற்றினாள். ஷீலா தோட்டக்காரர்களின் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவள். பின்னர் அவள் கார்ப்பரேட் ஏணியில் ஏறி நேர்த்தியான இடங்களுக்குச் சென்றாள். கிராமத்தில் தோட்டக்கார குடும்பத்தில் பிறந்து வளர்ந்த ஒரு சாதாரண பெண் கற்பனை செய்துபார்க்கமுடியாத உயரத்திற்கு அவள் பயணித்தாள்.

    ஒரு நாள், எக்சிகியூட்டிவ் அறையிலிருந்து வெளியே வந்த ஷீலா, என் மேசையிலிருந்து நான் விற்பனைக்காக வைத்திருந்த தேன் ஜாடிகளைக் கவனித்தாள். நாங்கள் தேனீ வளர்ப்பு மற்றும் தோட்டக்கலைகளைக் குறித்து பேசினோம். அதன் விளைவாக நான் ஊருக்கு சென்று திரும்பி வரும்போது அவளுக்கென்று எங்கள் தோட்டத்தில் விளைந்த தக்காளிகள் அடங்கிய ஒரு பையை அவளிடம் கொண்டுகொடுத்தேன்.

    நான் கொடுத்தபோது, ஷீலா அதிக நன்றியுணர்வை வெளிப்படுத்தினார். கண்ணியமான விதத்தில் மட்டுமல்லாது, பரிசைப் பெற்றுக்கொண்ட ஒரு வேலைக்காரியைப்போல தன் நன்றியுணர்வை வெளிப்படுத்தியது ஆச்சரியமாயிருந்தது. ஒரு பன்னாட்டு நிறுவனத் தலைவரும் கோடீஸ்வரருமான ஒருவர், திக்கற்ற ஒரு பையன் 2000 ரூபாய் தாளைப் பார்த்தால் எவ்வாறு ஆச்சரியப்படுவானோ அப்படி அவள் ஆச்சரியப்பட்டாள்.

    இதை எப்படி என் மனதில் பதிய வைப்பது என்று தெரியவில்லை. பணி ஓய்வுபெறும்போது நான் ஒரு பெரிய தோட்டத்தை எற்படுத்தி, அதில் தாவரங்களை விளைவித்து, மற்றவர்களுக்கு விநியோகம் செய்யவேண்டும் என்று நீண்ட காலமாக நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் பணக்கார கார்ப்பரேட் வர்க்கத்திற்கு சேவைசெய்வது நான் விரும்பும் பணியல்ல. ஸ்டாக் வாய்ப்புகள் அதிகம் உள்ள இவர்களுக்கு என்னுடைய சேவை எதற்கு?

    ஆனால் இம்முறை மீண்டும் ஒரு பையை கொண்டுபோய் கொடுத்தேன். அதில் எனது தோட்டத்தில் விளையக்கூடிய அனைத்து வகை பலசரக்குகளும் நிரம்பியிருந்தன. அனைத்து தாவரங்களும் விளைந்து செழிக்கும் ஆகஸ்ட் மாதத்தின் இடையில் ஷீலா மீண்டும் வருவதாக திட்டமிட்டிருந்தார். அந்த கோடையில் மூலிகைகள் சிறப்பாக செழித்திருந்தன. சீரகம், கடுகு, கொத்தமல்லி மற்றும் தினை ஆகியவற்றை பிளாஸ்டிக் பைகளில் நிரப்பினேன். இவை அனைத்தும் புதியதாக இருக்க வேண்டும். தக்காளி மற்றும் பச்சை மிளகாயுடன், புதிய வெங்காயம் மற்றும் பூண்டுகளும் இருந்தன. இந்த பரிசுகள் அனைத்தும் ஒரு காகித ஷாப்பிங் பையில் நிரப்பப்பட்டு, கோடையின் நறுமணத்துடன் மிளிர்ந்தது.

    இம்முறை ஷீலா அதைப் பெற்றுக்கொள்ளும்போது அவள் கண்களில் கண்ணீர் கசிந்தது. பூண்டின் நெடியினால் ஏற்பட்ட கண்ணீர் அல்ல அது. அந்த பையிலிருந்து பலசரக்குகள் ஒன்றிணைந்து கிளப்பிய வாசனை உணர்வுகளையும் நினைவுகளையும் அவளுக்கு தூண்டிவிட்டது. அவள் ஏன் அழுதாள் என்று எனக்குத் தெரியவில்லை என்றாலும், என்னால் ஊகிக்க முடியும். ஏக்கர் கணக்கில் விலையுயர்ந்த கார்ப்பொரேட் கண்ணாடி, களங்கமற்ற கழிவறைகள் மற்றும் கார்ப்பரேட் ஆளுமை ஆகியவற்றால் சூழப்பட்ட அந்தக் கட்டிடத்தில் உள்ள எதுவுமே இயற்கையோடு போராடி வெற்றிப்பெறுவதில்லை.

நல்ல விஷயங்கள் நன்றாக சாகட்டும்

    சில தோட்டக்காரர்கள் தங்கள் தோட்டங்களை இலையுதிர்காலத்தில் விதைக்க விடுவது கடினம். இது சுகாதாரமற்றது என்கிறார்கள். முதிர்ந்த நிலையில் உள்ள தாவரங்களின் வாடல் மற்றும் பூச்சிகள் நோய்களுக்கான இனப்பெருக்கம் செய்யும் இடத்தை உருவாக்குகிறது. இது உண்மையெனினும், நான் வேறொன்றை ஊகிக்கிறேன்: ஆண்டின் தொடக்கத்தில் அவைகள் கோடையின் சடலத்தை இடைவிடாமல் பார்க்கின்றன. ஓங்கி வளர்ந்த தாவரங்கள் அதிகப்படியாய் சிதைக்கப்பட்டு அழிக்கப்படுவதைப் பார்ப்பதற்கு வருத்தமாக இருக்கிறது. எனவே ஒவ்வொரு செடியும் மிதமான மஞ்சள் பச்சை நிறமாக மாறியவுடன் அவைகள் அந்த இலைகளை தானாக உதிர்த்துவிடுகின்றன.

    இதை எப்படிச் சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் என் தோட்டம் அதுவே தன்னை கொலைசெய்ய அனுமதிக்க விரும்புகிறேன். இன்னும் தெளிவாய் சொல்லவேண்டுமாகில், அதுவே தானாக சாவதற்கு அனுமதிப்பது நல்லது. அப்படி சாகும்போது, புதிதாய் செடிகளை நடுவதற்கு பதிலாக, பழைய சொச்சங்களிலிருந்து தன்னார்வ துளிர்களை அது தோற்றுவித்தால், அவற்றை அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள்.

    மரபணுமுறையில் உருவாக்கப்பட்ட தாவரங்களும் உயிரினங்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஒவ்வொன்றும் அது தோற்றுவிக்கப்பட்ட நோக்கத்தை சரியாய் நிறைவேற்றுகின்றன. அவைகள் தங்கள் சொந்த இனத்தை மேலும் மேம்படுத்துவதற்கு ஆழ்ந்த, தியாகத் தேவையுடன் தெய்வீகமாக குறியிடப்பட்டுள்ளன. அவைகள் தங்கள் பழங்களை உற்பத்திசெய்யவேண்டும். அதின் விதைகளை அடுத்த தலைமுறைக்குக் கொடுக்கவேண்டும். இந்த தாராள மனப்பான்மையை ஏன் மறுக்கவேண்டும்? நாம் கேரட்டை கருத்தடை செய்ய வேண்டுமா அல்லது மூலிகைகளை கருணைக்கொலை செய்ய வேண்டுமா? ஒரு இலையுதிர் தோட்டம் காடாய் மாறினால், அதின் இயற்கையான கருவுறுதலையும் சரிவையும், நமது செயற்கைச் சமூகம் விரைவாகச் சீர்குலைக்கும்.

    செழிப்பான நாட்களில் இருந்து நான் கற்றுக்கொண்டதைக் காட்டிலும் வறட்சியான காலத்திலிருந்து அதிகமாய் கற்றுக்கொண்டடேன். ஒரு கோடையில், ஜூன் முதல் ஆகஸ்ட் வரை பத்து வாரங்கள் மழை இல்லாமல் இருந்தது. எங்கள் புல்வெளி மிருதுவான பழுப்பு நிறமாக மாறிவிட்டது. ஆவியாதல் மூலம் நீர் இழப்பைக் குறைக்க மரங்கள் ஆரம்பத்தில் இலைகளை உதிர்த்தன. ஆனால் பசுமையான ஊசியிலை மரங்கள் அப்படியல்ல; எங்கள் முன் முற்றத்தில் இரண்டும் வழக்கத்திற்கு மாறாக தடிமனான பைன்கோன்களை வளர்த்திருந்தன. எல்லா ஆண்டுகளிலும், இது அவர்கள் தங்கள் ஆற்றலைப் பாதுகாக்க வேண்டிய நேரம் போல் தோன்றியது. பைன் மரத்தில் கூர்மையான இலைகள் தெளிவாக வெப்ப அழுத்தத்தில் இருந்தன. அவற்றின் ஊசி இலைகள் வீட்டிற்குள் வைக்கப்படும் கிறிஸ்துமஸ் மரம் போல மந்தமாகவும் உலர்ந்ததாகவும் இருந்தன.

    பின்னர், ஒரு தாவரவியலாளர் நண்பரிடம் இருந்து, இது ஒரு தாராள மனப்பான்மையின் விளைவு என்பதை நான் புரிந்துகொண்டேன். மரங்கள் அதிகப்படியான அழுத்தத்தைத் தாங்கும்போது இப்படியாகும். அது மரணத்திற்கு மிக அருகாமையில் நிற்கிறது என்று அர்த்தம். அதுவே அவைகளின் எதிர்வினையைத் தூண்டுகிறது. தங்களுக்குப் பிறகு இன்னும் பல வகையான விதைகளை (பைன்கோன்கள்) அவைகள் உற்பத்திசெய்கிறது. ஒரு பேசமுடியாத, சிந்திக்கமுடியாத மரம் அத்தகைய செய்கைகளில் ஈடுபடுவதைப் பார்க்கும்போது மனதுக்கு இதமாகவும் அறுதலாகவும் இருந்தது.

    ஒரு கோதுமை மணியானது (அல்லது ஒரு பைன்கோன்) நிலத்தில் விழுந்து சாகாவிடில் அது தனித்திருக்கும். ஆனால் அது செத்ததேயாகில் மிகுந்த பலனைக்கொடுக்கும். அதை நாம் சரியாய் பராமரித்துக்கொண்டால், அது தரும் பலன்களில் சிலவைகள் நமக்குச் சொந்தமாகலாம்.

 

banner image