லூக்கா 23:25-34

25. கலகத்தினிமித்தமும் கொலைபாதகத்தினிமித்தமும் காவலில் போடப்பட்டிருந்தவனை அவர்கள் கேட்டுக்கொண்டபடியே விடுதலையாக்கி, இயேசுவையோ அவர்கள் இஷ்டத்துக்கு ஒப்புக்கொடுத்தான். 26. அவர்கள் இயேசுவைக் கொண்டுபோகிறபோது, நாட்டிலிருந்து வருகிற சிரேனே ஊரானாகிய சீமோன் என்கிற ஒருவனைப் பிடித்து, சிலுவையை அவர்பின்னே சுமந்துகொண்டுவரும்படி அதை அவன்மேல் வைத்தார்கள். 27. திரள்கூட்டமான ஜனங்களும் அவருக்காகப் புலம்பி அழுகிற ஸ்திரீகளும் அவருக்குப் பின்சென்றார்கள். 28. இயேசு அவர்கள் முகமாய்த் திரும்பி: எருசலேமின் குமாரத்திகளே, நீங்கள் எனக்காக அழாமல், உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள். 29. இதோ, மலடிகள் பாக்கியவதிகளென்றும், பிள்ளைபெறாத கர்ப்பங்களும் பால்கொடாத முலைகளும் பாக்கியமுள்ளவைகளென்றும் சொல்லப்படும் நாட்கள் வரும். 30. அப்பொழுது மலைகளை நோக்கி: எங்கள்மேல் விழுங்களென்றும், குன்றுகளை நோக்கி: எங்களை மறைத்துக்கொள்ளுங்களென்றும் சொல்லத்தொடங்குவார்கள். 31. பச்சைமரத்துக்கு இவைகளைச் செய்தால், பட்டமரத்துக்கு என்ன செய்யமாட்டார்கள் என்றார். 32. குற்றவாளிகளாகிய வேறே இரண்டுபேரும் அவரோடேகூடக் கொலைசெய்யப்படுவதற்குக் கொண்டுபோகப்பட்டார்கள். 33. கபாலஸ்தலம் என்று சொல்லப்பட்ட இடத்தில் அவர்கள் சேர்ந்தபொழுது, அங்கே அவரையும், அவருடைய வலதுபக்கத்தில் ஒரு குற்றவாளியையும், அவருடைய இடதுபக்கத்தில் ஒரு குற்றவாளியையும் சிலுவைகளில் அறைந்தார்கள். 34. அப்பொழுது இயேசு: பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார். அவருடைய வஸ்திரங்களை அவர்கள் பங்கிட்டுச் சீட்டுப்போட்டார்கள்.

அங்கே அவரை… சிலுவைகளில் அறைந்தார்கள். அப்பொழுது இயேசு: “பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே” என்றார். லூக்கா 23:33-34

கடுமையான சர்வாதிகார ஆட்சியின் கீழ் ஒரு நாட்டில் வாழ்ந்த போதிலும், தீமோத்தேயுவின் குழந்தைப் பருவம் மகிழ்ச்சிகரமான ஒன்றாய் இருந்தது. அவருக்கு ஒன்பது வயதாக இருந்தபோது, ஒருநாள் அவர் பள்ளியிலிருந்து வீடு திரும்பியபோது, குளிர்காலக் காற்று அவரது முகத்தில் மெதுவாய் வீச, அவர் தனது பெற்றோரை போனில் அழைத்தார். அவர்கள் தீமோத்தேயுவை விட்டுவிட்டு வேறொரு நாட்டிற்கு தப்பிச்செல்லும் மும்முரத்தில் இருந்தனர். விரக்தியடைந்த அவன், அவர்களைப் பிடிக்க ரயில் நிலையத்திற்கு வேகமாய் ஓடினான். ஆனால் அவர்களுடைய ரயில் புறப்பட்டவிட்டது. அவன் முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்டான்.

பெற்றோர்கள் கைவிட்டதின் காரணமாக, அவர் மேலும் பல அதிர்ச்சிகரமான அனுவங்களை வாழ்க்கையில் சந்திக்க நேரிட்டது. தெருவில் குழந்தைகள் இறந்துகிடப்பதையும், தன் கண்களுக்கு முன்பாக ஒரு மனிதன் தூக்கிலிடப்படுவதையும், பின்னர் ஒரு நாட்டிலிருந்து புறப்பட்டபோது தானே தூக்கிலிடப்படுவதிலிருந்து மயிரிழையில் தப்பிப்பதையும் கண்டு அனுபவித்திருக்கிறார். இறுதியில் அவர் கோபத்தாலும் கசப்பாலும் ஆட்கொள்ளப்பட்டார்.

இயேசுவின் மரணத்தைப் பற்றி வாசித்தது தீமோத்தேயுவின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தியது. அவரைப் போலவே, இயேசு தன்னுடைய பூமிக்குரிய வாழக்கையில் சரீரப்பிரகாரமாகவும் மனரீதியாகவும் பல அதிர்ச்சிகளை சந்திக்க நேரிட்டது. ஆனால் தன்னைப் போலல்லாமல் மற்றவர்களுடைய நலத்திற்காக இயேசு பாடுபட்டார் என்பதை அறிந்தார். அவர் சிலுவைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, இயேசு பெண்கள் மீது பரிதாபப்பட்டார், “எருசலேமின் குமாரத்திகளே, நீங்கள் எனக்காக அழாமல், உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள்” (லூக்கா 23:28) என்றார். அத்துடன் இயேசு தம்மைத் துன்புறுத்தியவர்களுக்காக, “பிதாவே, இவர்களுக்கு மன்னியும்” (வச. 34) என்று ஜெபித்தார்.

அதிர்ச்சியிலிருந்து மீண்டு மன்னிக்கப்பட்ட இயல்புநிலைக்கு மாறுவது கடினமான ஒரு அனுபவம், அது பல காலம் எடுக்கும். இப்போதும் தனது பெற்றோரைக் குறித்து நினைக்கும்போது தீமோத்தேயு தனக்கு ஏற்பட்ட அவல நிலையை எண்ணி கண்ணீர் வடிப்பதுண்டு. ஆனால் இயேசுவின் முன்மாதிரியான ஜீவியம் அவர்களை மன்னிப்பதற்கான வாய்ப்பை அவருக்கு ஏற்படுத்தி கொடுத்தது. அவரைப் போலவே, எல்லா கசப்புகளிலிருந்தும் விடுபட நாமும் ஜெபிக்கலாம்.

இயேசுவின் மரணத்தின்போது அவர் சொன்ன கடைசி வார்த்தைகளில் உங்களுக்கு மிகவும் பிடித்தது என்ன? நீங்கள் வாழக்கையில் அதிர்ச்சியை அனுபவித்திருந்தால், ஒரு கணம் சுவாசிக்கவும். தெய்வீக ஆறுதலை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள்.

இயேசுவே, நீர் தாமே சோதிக்கப்பட்டு பாடுபட்டதினால், சோதிக்கப்படுகிற மக்கள் யாவரும் உம்மை நம்புவதற்கு அது உதவியாயிருந்தது. அதிர்ச்சியான வாழ்க்கை அனுபவங்களிலிருந்து குணமடையவும் கசப்பிலிருந்து விடுதலை பெறவும் எனக்கு அவகாசம் தாரும்.