பிலிப்பியர் 4:4-8

4. கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்; சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறேன். 5. உங்கள் சாந்தகுணம் எல்லா மனுஷருக்கும் தெரிந்திருப்பதாக. கர்த்தர் சமீபமாயிருக்கிறார். 6. நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தெரியப்படுத்துங்கள். 7. அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும். 8. கடைசியாக, சகோதரரே, உண்மையுள்ளவைகளெவைகளோ, ஒழுக்கமுள்ளவைகளெவைகளோ, நீதியுள்ளவைகளெவைகளோ, கற்புள்ளவைகளெவைகளோ, அன்புள்ளவைகளெவைகளோ, நற்கீர்த்தியுள்ளவைகளெவைகளோ, புண்ணியம் எதுவோ, புகழ் எதுவோ அவைகளையே சிந்தித்துக்கொண்டிருங்கள்.

 

நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல் இருங்கள். பிலிப்பியர் 4:6

உங்கள் தொலைபேசியில் ஒரு செய்தி வந்திருக்கிறதா, அது யாரிடமிருந்து வருகிறது என்பதைப் பார்த்து உடனடியாக மன அழுத்தத்தை உணர்ந்திருக்கிறீர்களா? குறிப்பாக கடினமான காலகட்டத்தில், ஒரு குறிப்பிட்ட நபரிடமிருந்து ஒரு மின்னஞ்சல் என் இன்பாக்ஸில் வரும்போதெல்லாம், நான் பயப்படுவேன். நான் அதைத் திறப்பதற்கு முன்பே என் மனம் அழுத்தத்திற்குள்ளாகிவிடும். என் கவலைகள் கட்டுப்பாட்டை மீறி சென்றது.

நாம் சூழ்நிலைகளுக்கு பயப்படும்போது, தெரியாததை எதிர்கொள்ளும்போது அல்லது நாம் கட்டுப்பாட்டில் இல்லை என்று உணரும்போது பெரும்பாலும் பதட்டம் நேரிடுகிறது. அது நம் எண்ணங்களையும் செயல்களையும் விரைவாக கட்டுப்படுத்தும். இந்த ஆபத்தான சூழ்நிலைகளை நிவர்த்திசெய்யும்பொருட்டு, அப்போஸ்தலனாகிய பவுல் பிலிப்பியர்களுக்கு எழுதிய நிருபத்தில், “நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல்” இருங்கள் (4:6) என்று எழுதுகிறார். எப்படி சாத்தியம்? “எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தெரியப்படுத்துங்கள்” (வச. 6).

நாம் பயப்படுவதற்கு காரணங்கள் இருக்கலாம், ஆனால் நம்முடைய சூழ்நிலைகள் அவருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது. நம்முடைய அனைத்து கவலைகளையும் அவரிடம் விட்டுவிடும்போது “தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்” (வச. 7) என்று நமக்கு வாக்குறுதி அளிக்கப்படுகிறது. கவலை நம்மை ஆட்கொள்ளும்போது, இந்த சமாதானம் என்பது ஒரு இனிமையான உணர்வை விட அதிகமாய் செயல்பட்டு நம்மை காக்கும் ஒரு பாதுகாப்பு வளையமாய் செயல்படும். இது “கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக” சிறந்தவரும் துதிக்கப்படத்தக்கவருமான ஒருவரால் பாதுகாக்கப்படுகிறோம் என்பதற்கான உறுதி (வச. 7-8).

சூழ்நிலைகள் நம்மை மூழ்கடிக்க அனுமதிப்பது எளிது. ஆனால், இந்த வசனத்தைப் பயன்படுத்தி என்னை சமாதானப்படுத்த அனுமதிக்கக் கற்றுக்கொள்கிறேன். இதனால் நான் என் பயங்களை ஜெபத்துடன் அவரிடம் ஒப்படைக்க முடியும். கிறிஸ்துவில் நாம் எதிர்கொள்ளும் எதையும் விட எல்லையற்ற வலிமையான சமாதமானத்தை அணுக முடியும்.

அட்ரியன் ஸ்மித்

பதட்டம் எங்கே உங்கள் மீது கட்டுப்பாட்டைக் கைப்பற்ற முயற்சிக்கிறது? அதை ஜெபத்தில் தேவனிடம் கொண்டு வருவது, அவருடைய சமாதானத்தை பெற்றுக்கொள்ள உங்களுக்கு எவ்வாறு உதவக்கூடும்?

அன்புள்ள ஆண்டவரே, பதட்டம் நம்மை ஆக்கிரமிக்க விரும்பும்போது, நீர் அனைத்தையும் உம்முடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறீர் என்பதை எனக்கு நினைவூட்டுங்கள். என் ஜெபங்களுக்கு பதிலளித்ததற்கும், உமது சமாதானத்தால் என்னைக் காத்துக்கொண்டதற்கும் உமக்கு நன்றி.