ஏசாயா 53:1-6
1. எங்கள் மூலமாய்க் கேள்விப்பட்டதை விசுவாசித்தவன் யார்? கர்த்தருடைய புயம் யாருக்கு வெளிப்பட்டது? 2. இளங்கிளையைப்போலவும், வறண்ட நிலத்திலிருந்து துளிர்க்கிற வேரைப்போலவும் அவனுக்கு முன்பாக எழும்புகிறார்; அவருக்கு அழகுமில்லை, சௌந்தரியமுமில்லை; அவரைப் பார்க்கும்போது, நாம் அவரை விரும்பத்தக்க ரூபம் அவருக்கு இல்லாதிருந்தது. 3. அவர் அசட்டைபண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும், துக்கம் நிறைந்தவரும், பாடு அநுபவித்தவருமாயிருந்தார்; அவரைவிட்டு, நம்முடைய முகங்களை மறைத்துக்கொண்டோம்; அவர் அசட்டைபண்ணப்பட்டிருந்தார்; அவரை எண்ணாமற்போனோம். 4. மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார்; நாமோ, அவர் தேவனால் அடிபட்டு வாதிக்கப்பட்டு, சிறுமைப்பட்டவரென்று எண்ணினோம். 5. நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம். 6. நாமெல்லாரும் ஆடுகளைப்போல வழிதப்பித் திரிந்து, அவனவன் தன் தன் வழியிலே போனோம்; கர்த்தரோ நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும் அவர்மேல் விழப்பண்ணினார்.
நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம். ஏசாயா 53:5
தனது கணவரின் மரணத்திற்குப் பிறகு ரீனாவின் கிறிஸ்துமஸ் மகிழ்ச்சி தோல்வியடைந்தது போல் உணர்ந்தாள். அந்தப் பண்டிகைக் காலத்தில் தங்கள் அப்பாவைக் குறித்து வேதனையடையாதபடிக்கு, தனது இரண்டு சிறு குழந்தைகளுக்கும் அதை ஒரு மகிழ்ச்சியான ஒன்றாக மாற்ற அவள் விரும்பினாள். ஆனால் அவள் தன் இருதயத்தில் சுமந்து கொண்டிருந்த துக்கத்தையும் வலியையும் அவர்களிடமிருந்து மறைக்க அவள் மிகவும் போராடினாள். அவள் தயாரிக்க முயற்சித்த சிறப்பான உணவு முயற்சியும் தோல்வியடைந்து கண்ணீரில் முடிந்தது. ஆனால் அவளுடைய பெற்றோரும் நண்பர்களும் அவளை ஆறுதல்படுத்தி அவளுடைய வேதனையைக் குறைக்க உதவினார்கள். அவளும் அவளுடைய பிள்ளைகளும் மகிழக்கூடிய ஒரு அர்த்தமுள்ள பருவத்தை உருவாக்க தேவனிடத்தில் ஜெபித்தனர்.
ஊக்கமடைந்த ரீனா, “துக்கம் நிறைந்தவரும், பாடு அநுபவித்தவருமான” (ஏசாயா 53:3) இயேசுவைக் கொண்டாட முடிவு செய்தார்.
ஏசாயா தீர்க்கதரிசியின் இந்த வார்த்தைகள், பாபிலோனிய சிறையிருப்புக்கு ஜனங்களை தயார்படுத்தவும், தேவன் மீதான அவர்களின் நம்பிக்கையையும் விசுவாசத்தையும் ஆழப்படுத்தவும் தேவ ஜனத்திற்கு அறுதலாகக் கொடுக்கப்பட்டது. ஆனால் இயேசுவின் பிறப்பு, வாழ்க்கை மற்றும் மரணம் மூலமாகவும் தீர்க்கதரிசனம் நிறைவேறுகிறது: “மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார்… நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்” (வச. 4,5).
இயேசு இந்தப் பூமியில் துக்கத்தை அறிந்திருந்தார், ஆனால் அவருடைய மரணத்தின் மூலம் அவர் நமக்கு மன்னிப்பையும் விடுதலையையும் கொண்டு வந்துள்ளார். நாம் நம்முடைய அன்புக்குரியவர்களைப் பிரிந்து கிறிஸ்துமஸை எதிர்கொள்ளும்போது கூட, அவருடைய காயங்கள் மூலம் நாம் சமாதானத்தையும் சுகத்தையும் பெறுகிறோம்.
இயேசு “துக்கம் நிறைந்தவர்” என்பது உங்களுக்கு எப்படி ஆறுதலையும் நம்பிக்கையையும் தருகிறது? தேவன் உங்கள் வலியையும் இழப்பு உணர்வுகளையும் எவ்வாறு எளிதாக்கியுள்ளார்?
மனிதனாகவும் தேவனாகவும் இருக்கிற எங்கள் இயேசுவே, என்னைக் காப்பாற்றுவதற்காகவே பூமியில் துரோகம், வலி மற்றும் மரணத்தை எதிர்கொள்ள நீர் பரலோகத்தை விட்டு இறங்கி வந்தீர். உம் மீது என் நம்பிக்கையை வலுப்படுத்தி, உலகில் துக்கம் மற்றும் பாடுகளை நான் உணரும் சோகத்தை என்னில் குறைக்க உதவிசெய்யும்.