யோவான் 17:14-26

14. நான் உம்முடைய வார்த்தையை அவர்களுக்குக் கொடுத்தேன்; நான் உலகத்தானல்லாததுபோல அவர்களும் உலகத்தாரல்ல; ஆதலால் உலகம் அவர்களைப் பகைத்தது. 15. நீர் அவர்களை உலகத்திலிருந்து எடுத்துக்கொள்ளும்படி நான் வேண்டிக்கொள்ளாமல், நீர் அவர்களைத் தீமையினின்று காக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன். 16. நான் உலகத்தானனல்லாததுபோல, அவர்களும் உலகத்தாரல்ல. 17. உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும்; உம்முடைய வசனமே சத்தியம். 18. நீர் என்னை உலகத்தில் அனுப்பினதுபோல, நானும் அவர்களை உலகத்தில் அனுப்புகிறேன். 19. அவர்களும் சத்தியத்தினாலே பரிசுத்தமாக்கப்பட்டவர்களாகும்படி, அவர்களுக்காக நான் என்னைத்தானே பரிசுத்தமாக்குகிறேன். 20. நான் இவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறதுமல்லாமல், இவர்களுடைய வார்த்தையினால் என்னை விசுவாசிக்கிறவர்களுக்காகவும் வேண்டிக்கொள்ளுகிறேன். 21. அவர்களெல்லாரும் ஒன்றாயிருக்கவும், பிதாவே, நீர் என்னை அனுப்பினதை உலகம் விசுவாசிக்கிறதற்காக, நீர் என்னிலேயும் நான் உம்மிலேயும் இருக்கிறதுபோல அவர்களெல்லாரும் நம்மில் ஒன்றாயிருக்கவும் வேண்டிக்கொள்ளுகிறேன். 22. நாம் ஒன்றாயிருக்கிறதுபோல அவர்களும் ஒன்றாயிருக்கும்படி, நீர் எனக்குத்தந்த மகிமையை நான் அவர்களுக்குக் கொடுத்தேன். 23. ஒருமைப்பாட்டில் அவர்கள் தேறினவர்களாயிருக்கும்படிக்கும், என்னை நீர் அனுப்பினதையும், நீர் என்னில் அன்பாயிருக்கிறதுபோல அவர்களிலும் அன்பாயிருக்கிறதையும் உலகம் அறியும்படிக்கும், நான் அவர்களிலும் நீர் என்னிலும் இருக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன். 24. பிதாவே, உலகத்தோற்றத்துக்கு முன் நீர் என்னில் அன்பாயிருந்தபடியினால், நீர் எனக்குத் தந்த என்னுடைய மகிமையை நீர் எனக்குத் தந்தவர்கள் காணும்படியாக, நான் எங்கே இருக்கிறேனோ அங்கே அவர்களும் என்னுடனேகூட இருக்க விரும்புகிறேன். 25. நீதியுள்ள பிதாவே, உலகம் உம்மை அறியவில்லை, நான் உம்மை அறிந்திருக்கிறேன்; நீர் என்னை அனுப்பினதை இவர்களும் அறிந்திருக்கிறார்கள். 26. நீர் என்னிடத்தில் வைத்த அன்பு அவர்களிடத்திலிருக்கும்படிக்கும், நானும் அவர்களிலிருக்கும்படிக்கும், உம்முடைய நாமத்தை அவர்களுக்குத் தெரியப்படுத்தினேன்; இன்னமும் தெரியப்படுத்துவேன் என்றார்.

நான் உலகத்தானல்லாததுபோல அவர்களும் உலகத்தாரல்ல. யோவான் 17:14

பல வருடங்களுக்கு முன்பு, நான் ஒரு ஆப்பிரிக்க நாட்டில் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் ஆலோசகராகப் பணியாற்றினேன். இதன் விளைவாக, உயர் ஸ்தானிகராலய நிகழ்வுகளுக்கு அழைக்கப்பட்டேன். வெளிநாட்டினர், அரசாங்க அதிகாரிகள், தனியார் பள்ளிக் கல்வி மற்றும் வெளிநாடுகளில் வாழ்ந்த அனுபவம் கொண்டவர்களால் சூழப்பட்டிருந்ததால், அவர்கள் மத்தியில் நான் மிகவும் இடமற்றவனாக உணர்ந்தேன். பொறுமையோடு காத்திருக்க முடியவில்லை. ஆனாலும் என் அமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்துவது என்று எனக்கு ஒரு தேவை இருந்ததால் நான் கலந்துகொண்டேன்.

கிறிஸ்தவர்களுக்கு இடமற்றதாக உணருவது மிகவும் இயல்பானது. சிலுவை மரணம் நெருங்கி வந்தபோது, இயேசு தம் சீஷர்களுக்காக ஜெபித்தார், “நான் உலகத்தானல்லாததுபோல அவர்களும் உலகத்தாரல்ல” (யோவான் 17:14). சரீரப்பிரகாரமாக சீஷர்கள் தங்களுக்கு சொந்தமல்லாத இவ்வுலகத்தில் வாழ்ந்தனர். ஆனால் இயேசுவை பிரதிபலிக்கும் ஒரு முக்கிய நோக்கம் அவர்களுக்கு இருந்தது. “இவர்களுடைய வார்த்தையினால் என்னை விசுவாசிக்கிறவர்களுக்காகவும் வேண்டிக்கொள்ளுகிறேன்” என்று அவர் ஜெபிக்கவும் செய்தார் (வச. 20).

அந்தச் செய்தியை நாங்கள் நம்பியது போலவே, தேவனுடைய வழிநடத்துதலோடு அனைவருடனும் அதை பகிர்ந்துகொள்வதற்காகவே நாம் இந்த பூமியில் இருக்கிறோம். இந்த நோக்கம் இந்த உலகத்தில் நம்முடைய ஜீவியத்தை வசதியாக்காது; ஆனால் கடினமான சூழ்நிலைகளில் அவரே இந்த உலகத்திற்கு நம்மை அனுப்பினார் (வச. 23) என்ற நேர்மறையான கண்ணோட்டத்தைக் கொடுக்கும்.

நாம் இந்த பூமிக்கு சொந்தமானவர்கள் இல்லை என்பதை உணரும்போது நாம் ஆச்சரியப்படவேண்டியதில்லை. அதற்கும் மேலாய் நாம் வேதனைப்படக்கூடிய காரியம் ஒன்றிருக்கிறது. நமது இரட்சகர் இந்த உலகத்தைச் சேர்ந்தவர் அல்ல, எனவே அவருடைய பிரதிநிதிகளாகிய நாமும் இவ்வுலகத்திற்குரியவர்கள் இல்லை. ஆனால் எல்லாவற்றிலும் கிறிஸ்து நம்முடன் இருக்கிறார் (வச. 26).

நீங்கள் எங்கே இடமில்லாமல் உணர்கிறீர்கள்? அந்த இடங்களில் இயேசு உங்களுக்கு என்ன நோக்கத்தைக் கொடுத்திருக்கிறார் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

அன்புள்ள இயேசுவே, என்னை உமக்கு சொந்தமாய் மாற்றிக்கொள்ள இந்த உலகத்திற்கு வந்ததற்காய் உமக்கு நன்றி. உம்முடைய நற்செய்தியைப் பகிர்ந்து கொள்ள என்னைப் பயன்படுத்தும்.