யோவான் 15:4-8
4. என்னில் நிலைத்திருங்கள், நானும் உங்களில் நிலைத்திருப்பேன்; கொடியானது திராட்சச்செடியில் நிலைத்திராவிட்டால் அது தானாய்க் கனிகொடுக்கமாட்டாதது போல, நீங்களும் என்னில் நிலைத்திராவிட்டால், கனிகொடுக்கமாட்டீர்கள். 5. நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்; என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது. 6. ஒருவன் என்னில் நிலைத்திராவிட்டால், வெளியே எறியுண்ட கொடியைப்போல அவன் எறியுண்டு உலர்ந்து போவான்; அப்படிப்பட்டவைகளைச் சேர்த்து, அக்கினியிலே போடுகிறார்கள்; அவைகள் எரிந்துபோம். 7. நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும். 8. நீங்கள் மிகுந்த கனிகளைக் கொடுப்பதனால் என் பிதா மகிமைப்படுவார், எனக்கும் சீஷராயிருப்பீர்கள்.
நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான். யோவான் 15:5
“உங்க அம்மா இன்னைக்கு வந்தாங்க, ஆனா அவங்களுக்கு என்ன வேணும்னே எனக்குச் சொல்லல – எனக்கு அது விசித்திரமா இருந்துச்சு” என்றாள் டோரதி. இவள் ஒரு இந்தியரை மணந்த வெளிநாட்டு பெண்.
அவரது கணவர் முகம் சுளித்தபடி, “நீ அவங்களை உள்ளே கூப்பிட்டியா?” என்று கேட்க, அவள் கூப்பிடவில்லை என்று பதிலளித்தாள். அவளுடைய நாட்டுக் கலாச்சாரத்தில், குடும்பத்து நபர்களாயிருந்தாலும் கேட்காமலோ அல்லது காரணமில்லாமலோ வீட்டிற்கு வரமாட்டார்கள். அவளுக்கு அந்த கலாச்சார பாடத்தைப் புரியவைத்த பின்பு, அவள் எவ்வளவு முட்டாள்தனமாக நடந்து கொண்டாள் என்பதை உணர்ந்தாள். அவளுடைய மாமியார் மருகளுடன் இருந்துவிட்டு போகலாம் என்று வந்தபோது, அவர்கள் தன்னிடத்தில் எதையோ வாங்கவே வந்துள்ளார்கள் என்று அவள் தவறாய் புரிந்துகொண்டாள். டோரதி தனது எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதில் மிகவும் மும்முரமாக இருந்ததால், மாமியாருடன் தங்கி நேரம் செலவழிக்கும் வாய்ப்பை இழந்தாள்.
அதையே தான் நாமும் செய்கிறோம். அவருடைய ஜனங்களாக நாம் செய்ய வேண்டிய விஷயங்களில் நாம் மிகவும் எளிதாக சிக்கிக் கொள்கிறோம். சில சமயங்களில் மிக முக்கியமான விஷயத்தை மறந்து விடுகிறோம்: இயேசுவுடன் இருப்பது, அவருடைய இருப்பை அனுபவிப்பது.
“நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்” (யோவான் 15:5) என்று இயேசு நமக்கு நினைவூட்டுகிறார். எந்தக் கொடியும் எவ்வளவு கடினமாக முயற்சி செய்தாலும், அது தானாகவே கனிகளைக் கொடுக்க முடியாது. அதற்கு பதிலாக, இயேசுவில் நிலைத்திருங்கள் என்று இயேசு கட்டளையிடுகிறார்.
கனி கொடுப்பது, இயேசுவைச் சேவிப்பது போன்ற செய்கைகள் கடினமான ஒன்றல்ல. நாம் அவரில் நிலைத்திருக்கும்போது, “ அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்” என்று அவர் வாக்குறுதி அளிக்கிறார். இன்று அவருடைய பிரசன்னத்தை அனுபவிக்க நேரம் ஒதுக்குவோம் – அவர் நம்மை வழிநடத்துவார்.
இயேசுவின் பிரசன்னத்தில் ஓய்வெடுக்க நேரம் ஒதுக்குவதைத் தடுப்பது எது? நீங்கள் அவருடன் அதிக நேரம் செலவிட்டதினிமித்தம், அவருடைய கனி உங்களில் வெளிப்படுவதை நீங்கள் எப்போதாவது அனுபவித்தீருக்கிறீர்களா?
இயேசுவே, இப்போது என்னை உம்முடன் நெருக்கமாக இருக்க அழைத்ததற்காய் உமக்கு நன்றி. நான் வேறு எங்கும் இருக்க விரும்பவில்லை.