யோவான் 13:1-11

1. பஸ்கா பண்டிகைக்கு முன்னே, இயேசு இவ்வுலகத்தைவிட்டுப் பிதாவினிடத்திற்குப் போகும்படியான தம்முடைய வேளை வந்ததென்று அறிந்து, தாம் இவ்வுலகத்திலிருக்கிற தம்முடையவர்களிடத்தில் அன்புவைத்தபடியே, முடிவுபரியந்தமும் அவர்களிடத்தில் அன்புவைத்தார். 2. சீமோனின் குமாரனாகிய யூதாஸ்காரியோத்து  அவரைக் காட்டிக்கொடுக்கும்படி பிசாசானவன் அவன் இருதயத்தைத் தூண்டினபின்பு, அவர்கள் போஜனம் பண்ணிக்கொண்டிருக்கையில்; 3. தம்முடைய கையில் பிதா எல்லாவற்றையும் ஒப்புக்கொடுத்தாரென்பதையும், தாம் தேவனிடத்திலிருந்து வந்ததையும், தேவனிடத்திற்குப் போகிறதையும் இயேசு அறிந்து; 4. போஜனத்தை விட்டெழுந்து, வஸ்திரங்களைக் கழற்றிவைத்து, ஒரு சீலையை எடுத்து, அரையிலே கட்டிக்கொண்டு, 5. பின்பு பாத்திரத்தில் தண்ணீர் வார்த்து, சீஷருடைய கால்களைக் கழுவவும், தாம் கட்டிக்கொண்டிருந்த சீலையினால் துடைக்கவும் தொடங்கினார். 6. அவர் சீமோன் பேதுருவினிடத்தில் வந்தபோது, அவன் அவரை நோக்கி: ஆண்டவரே, நீர் என் கால்களைக் கழுவலாமா என்றான். 7. இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: நான் செய்கிறது இன்னதென்று இப்பொழுது நீ அறியாய், இன்மேல் அறிவாய் என்றார். 8. பேதுரு அவரை நோக்கி: நீர் ஒருக்காலும் என் கால்களைக் கழுவப்படாது என்றான். இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: நான் உன்னைக் கழுவாவிட்டால் என்னிடத்தில் உனக்குப் பங்கில்லை என்றான். 9. அதற்குச் சீமோன் பேதுரு: ஆண்டவரே, என் கால்களைமாத்திரமல்ல, என்கைகளையும் என் தலையையும்கூடக் கழுவவேண்டும் என்றான். 10. இயேசு அவனை நோக்கி: முழுகினவன் தன் கால்களைமாத்திரம் கழுவவேண்டியதாயிருக்கும், மற்றப்படி அவன் முழுவதும் சுத்தமாயிருக்கிறான்; நீங்களும் சுத்தமாயிருக்கிறீர்கள்; ஆகிலும் எல்லாரும் அல்ல என்றார். 11. தம்மைக் காட்டிக்கொடுக்கிறவனை அவர் அறிந்திருந்தபடியினால் நீங்களெல்லாரும் சுத்தமுள்ளவர்கள் அல்ல என்றார்.

அப்படியே, மனுஷகுமாரனும் ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ்செய்யவும், அநேகரை மீட்கும்பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார். மாற்கு 10:45

நீண்ட காலத்திற்கு முன்பு, ஸ்காட்லாந்து தேசத்தின் மன்னர் தனது அரச அங்கிகளை கழட்டி வைத்துவிட்டு சிலசமயங்களில் ஒரு சாதாரண மனிதனின் உடையை அணிவார். அவர் ஏன் அப்படிச் செய்வார்? அதனால் அவர் மக்கள் மத்தியில் சுதந்திரமாகத் திரிய முடிந்தது. கோட்டைக்கு வெளியே உள்ள வாழ்க்கையைப் புரிந்துகொண்டு, தனது குடிமக்களிடையே சிறிது காலம் அந்த வாழ்க்கையை அவர் வாழ விரும்பினார். ராஜா தனது அந்தஸ்துக்கு தகுதியான உலகத்திலிருந்து மிகவும் மாறுபட்ட உலகத்திற்குள் நுழைந்தபோது இது சுயமாய் தீர்மானித்த மனத்தாழ்மையின் செயலாகும்.

ஆனால் இயேசு அதிலும் அதிகமாகச் செய்தார். அவர் தேவனுடைய சாயலாக இருந்தபோதிலும், இயேசு இந்த உலகத்திற்கு வந்து ஒரு அடிமையின் சாயலை ஏற்றுக்கொண்டார். கிறிஸ்து “தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார்” என்று பவுல் எழுதுகிறார் (பிலிப்பியர் 2:7).

பாடுகள் அனுபவித்து சிலுவையில் அறையப்படுவதற்கு முந்தைய நாள் இரவில் அவர் தனது சீஷர்களுடன் பஸ்கா உணவை உண்டபோது, இயேசு இதை நமக்குத் தெளிவாகக் பிரதிபலித்தார். இயேசு “போஜனத்தை விட்டெழுந்து, வஸ்திரங்களைக் கழற்றிவைத்து, ஒரு சீலையை எடுத்து, அரையிலே கட்டிக்கொண்(டார்)” என்று அவரது சீஷன் யோவான் நமக்குச் சொல்கிறார் (யோவான் 13:4). பின்னர் அவர் தனது சீஷர்களின் பாதங்களையும் கழுவுகிறார்.

இந்த தாழ்மையான செயல், கிறிஸ்துவின் ஊழியத்தைப் பற்றிய அவரது சொந்த மதிப்பீட்டை உறுதிப்படுத்துகிறது: “அப்படியே, மனுஷகுமாரனும் ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ்செய்யவும், அநேகரை மீட்கும்பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார்” (மாற்கு 10:45). அப்படியானால், அவர் தம்முடைய சீஷர்களின் பாதங்களைக் கழுவ ஒரு பாத்திரத்தையும் துடைக்கும் துண்டையும் எடுத்ததைக் கண்டு நாம் ஏன் ஆச்சரியப்படுகிறோம்? இயேசு நமக்கு சேவை செய்யும் ராஜாவின் இருதயத்தை பிரதிபலித்தார்.

மிகவும் கீழ்த்தரமான பணிகளில் கூட மற்றவர்களுக்கு சேவை செய்வதில் இயேசுவின் ஆச்சரியமான முன்மாதிரிக்கு நீங்கள் எவ்வாறு பதிலளிக்கிறீர்கள்? இன்று நீங்கள் ஒருவருக்கு எவ்வாறு சேவை செய்ய முடியும்?

அன்பான இரட்சகரே, உம்முடைய பணிவான சேவை முன்மாதிரியால் நாங்கள் தாழ்மையுடன் இருக்கிறோம். இன்று எங்கள் வாழ்க்கையில் அதை அதிகமாகக் காண்பிக்க எங்களுக்கு உதவிசெய்யும்.