கொலோசெயர் 3:9-14
9. ஒருவருக்கொருவர் பொய் சொல்லாதிருங்கள்; பழைய மனுஷனையும் அவன் செய்கைகளையும் களைந்துபோட்டு, 10. தன்னைச் சிருஷ்டித்தவருடைய சாயலுக்கொப்பாய்ப் பூரண அறிவடையும்படி புதிதாக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொண்டிருக்கிறீர்களே. 11. அதிலே கிரேக்கனென்றும் யூதனென்றுமில்லை, விருத்தசேதனமுள்ளவனென்றும் விருத்தசேதனமில்லாதவனென்றுமில்லை, புறஜாதியானென்றும் புறதேசத்தானென்றுமில்லை, அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை; கிறிஸ்துவே எல்லாரிலும் எல்லாமுமாயிருக்கிறார். 12. ஆகையால், நீங்கள் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட பரிசுத்தரும் பிரியருமாய், உருக்கமான இரக்கத்தையும், தயவையும், மனத்தாழ்மையையும், சாந்தத்தையும், நீடிய பொறுமையையும் தரித்துக்கொண்டு; 13. ஒருவரையொருவர் தாங்கி, ஒருவர்பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள். 14. இவை எல்லாவற்றின்மேலும், பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.
…புறஜாதியானென்றும் புறதேசத்தானென்றுமில்லை, அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை; கிறிஸ்துவே எல்லாரிலும் எல்லாமுமாயிருக்கிறார். கொலோசெயர் 3:11
யுனைட்டட் கிங்டம் வரலாற்றில் மிக நீண்ட காலம் ஆட்சி செய்த மன்னர் ஒருவர், இயேசுவை தினமும் பின்பற்ற முயன்ற மற்றொரு மன்னரைப் பின்பற்றினார்: “கிறிஸ்துவின் போதனைகள்… நான் என் வாழ்க்கையை நடத்த முயற்சிக்கும் ஒரு கட்டமைப்பை வழங்குகின்றன” என்று அவர் சொல்லுகிறார். இதன் விளைவாக, இரண்டாம் எலிசபெத் மகாராணி தனது குடிமக்களை ஒற்றுமையுடன் வாழவும், பாரபட்சம் காட்டாமல் இருக்கவும் அழைப்பு விடுத்தார். அவரது கருத்தில், “துரதிர்ஷ்டவசமானவர்களும், பின்தங்கியவர்களும் பரலோக இராஜ்யத்தில் ஜசுவரியவான்களோடும் அதிகாரத்திலுள்ளவர்களோடும் சமமான இடத்தில் இருப்பார்கள்” என்பதை தெளிவுபடுத்துவதின் மூலம் கிறிஸ்து தனது உலகத்தை ஆச்சரியப்படுத்தினார்.
மற்றவர்களை நேசிக்கவும் சேவை செய்யவும் மறைந்த ராணியின் அழைப்பு, கொலோசெ பட்டணத்தில் உள்ள திருச்சபைக்கு ஒரு உணர்ச்சிமிக்க நிருபத்தை எழுதிய அப்போஸ்தலர் பவுலின் அழைப்பை எதிரொலித்தது. பொய்யான போதகர்கள் மக்களை வழிதவறச் செய்தனர். ஆனால் அவர்கள் கிறிஸ்துவின் ஞானத்திற்குத் திரும்புவார்கள் என்று பவுல் ஏங்கினார். விசுவாசிகள் பரிசுத்த ஆவியின் வல்லமையால் புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளவேண்டும் (கொலோசெயர் 3:10). இவ்வாறு, “கிறிஸ்துவே எல்லாமுமாக, எல்லாரிலும் இருக்கிறார்” என்பதால், பிரிவினைகள் நின்றுவிடுகின்றன: “அதிலே கிரேக்கனென்றும் யூதனென்றுமில்லை, விருத்தசேதனமுள்ளவனென்றும் விருத்தசேதனமில்லாதவனென்றுமில்லை, புறஜாதியானென்றும் புறதேசத்தானென்றுமில்லை, அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை” (வச. 11).
கிறிஸ்துவில் நம் நம்பிக்கைகளை நிலைநிறுத்தும்போது, அவர் நம்மைத் தம்மைப் போல மாற்றுவதை நாம் உணர்வோம். ஒருவேளை நாம் சமூகத்தில் நமது இடத்தை முன்பை விடக் குறைவாக மதிப்பிடலாம், அல்லது தேவையில் உள்ளவர்களுக்கு உதவுவதில் நாம் ஆர்வமாக இருக்கலாம். ராஜ வஸ்திரம் தரிக்காமல், “உருக்கமான இரக்கத்தையும், தயவையும், மனத்தாழ்மையையும், சாந்தத்தையும், நீடிய பொறுமையையும் தரித்துக்கொண்டு” (வச. 12) இருக்கும் உன்னதமான ராஜாவுக்கு சேவை செய்ய நாம் “தெரிந்துகொள்ளப்பட்டவர்கள்” என்பதில் நாம் மகிழ்ச்சியடையலாம்
அனைத்திலும் உன்னதமான ராஜாவுக்கு சேவை செய்வது என்பது நீங்கள் அதிகாரத்தையும் ஐசுவரியத்தையும் பார்க்கும் விதத்தை எவ்வாறு பாதிக்கிறது? உங்களைச் சுற்றி நீங்கள் கவனிக்கும் எந்தப் பிரிவினைகளையும் கலைக்க நீங்கள் எவ்வாறு பிரயாசப்பட முடியும்?
ராஜாதி ராஜாவே, நீர் வல்லமையுள்ளவர், பராக்கிமமுள்ளவர், ஆனாலும் எனக்காக மரிக்க உம்முடைய குமாரனை அனுப்பினீர். உம்மையும் பிறரையும் நேசிக்கவும் சேவை செய்யவும் எனக்கு உதவிசெய்யும்.