லூக்கா 2:15-20

15. தேவதூதர்கள் அவர்களை விட்டுப் பரலோகத்துக்குப் போனபின்பு, மேய்ப்பர்கள் ஒருவரையொருவர் நோக்கி: நாம் பெத்லகேம் ஊருக்குப் போய், நடந்ததாகக் கர்த்தரால் நமக்கு அறிவிக்கப்பட்ட இந்தக் காரியத்தைப் பார்ப்போம் வாருங்கள் என்று சொல்லி, 16. தீவிரமாய் வந்து, மரியாளையும், யோசேப்பையும், முன்னணையிலே கிடத்தியிருக்கிற பிள்ளையையும் கண்டார்கள். 17. கண்டு, அந்தப் பிள்ளையைக் குறித்துத் தங்களுக்குச் சொல்லப்பட்ட சங்கதியைப் பிரசித்தம்பண்ணினார்கள். 18. மேய்ப்பராலே தங்களுக்குச் சொல்லப்பட்டதைக் கேட்ட யாவரும் அவைகளைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள். 19. மரியாளோ அந்தச் சங்கதிகளையெல்லாம் தன் இருதயத்திலே வைத்து, சிந்தனைபண்ணினாள். 20. மேய்ப்பர்களும் தங்களுக்குச் சொல்லப்பட்டதின்படியே கேட்டு கண்ட எல்லாவற்றிற்காகவும் தேவனை மகிமைப்படுத்தி, துதித்துக்கொண்டு திரும்பிப் போனார்கள்.

மரியாளோ அந்தச் சங்கதிகளையெல்லாம் தன் இருதயத்திலே வைத்து, சிந்தனைபண்ணினாள். லூக்கா 2:19

கிறிஸ்துமஸ் தினத்தின் அனைத்து கொண்டாட்டங்களும் முடிந்த பிறகு, மறுநாள் சோர்வாக உணர்ந்தோம். நாங்கள் நண்பர்களுடன் இரவு தங்கினோம், ஆனால் நன்றாக தூங்கவில்லை. பின்னர் நாங்கள் வீட்டிற்கு காரில் சென்று கொண்டிருந்தபோது எங்கள் கார் பழுதடைந்தது. பின்னர் மழை பெய்யத் தொடங்கியது. நாங்கள் காரை விட்டுவிட்டு, மழையில் நனைந்ததினால் சிறிது மனச்சோர்வடைந்த நிலையில் டாக்ஸியில் வீட்டிற்கு வந்து சேர்ந்தோம்.

கிறிஸ்துமஸ் தினத்திற்குப் பிறகு சோர்வாக உணர்ந்தவர்கள் நாங்கள் மட்டுமல்ல. அதிகமாக சாப்பிட்டதாலோ அல்லது கடந்த வாரம் நாங்கள் வாங்கிய பரிசுகள் இப்போது பாதி விலையில் விற்பனையாகிவிட்டதாலோ, கிறிஸ்துமஸ் தினத்தின் கொண்டாட்ட மந்திரம் விரைவில் மறைந்துவிடுகிறது!

இயேசு பிறந்த மறுநாளைப் பற்றி வேதம் நமக்குச் சொல்லவில்லை. ஆனால் பெத்லகேமுக்கு நீண்ட தூரம் நடந்துசென்று, தங்குமிடத்திற்காக போராடி, மரியாளுக்கு பிரசவ வலி ஏற்பட்டு, மேய்ப்பர்கள் எந்த முன்அறிவிப்புமில்லாமல் வந்த அனைத்தும் ஒன்றன்பின் ஒன்றாக நிகழ்ந்த பின்பு (லூக்கா 2:4–18), மரியாளும் யோசேப்பும் கண்டிப்பாய் சோர்வடைந்திருக்கக்கூடும் என்பதை நாம் யூகிக்கலாம். ஆனால் மரியாள் தனது புதிதாகப் பிறந்த குழந்தையைத் தொட்டிலில் கிடத்தியபோது, அவள் தேவதூதனின் வருகை (1:30–33), எலிசபத்தின் ஆசீர்வாதம் (வச. 42–45) மற்றும் தனது குழந்தையின் எதிர்கால ஆசீர்வாதத்தை உணர்ந்ததை (வச. 46–55) பற்றி சிந்திப்பதை என்னால் கற்பனை செய்து பார்க்க முடிகிறது. மரியாள் தன் இருதயத்தில் இதுபோன்ற விஷயங்களை “சிந்தனைபண்ணினாள்” (2:19). இது அந்த நாளின் மனச்சோர்வு மற்றும் உடல் வலியைக் குறைத்திருக்க வேண்டும்.

ஒருவேளை கிறிஸ்துமஸ{க்கு முன்னதாகவோ அல்லது அதற்குப் பிந்தைய நாட்களிலோ நாம் அனைவரும் மனச்சோர்வடைந்த நாட்கள் அநேகம் இருக்கக்கூடும். மரியாளைப் போலவே, நம் பூமிக்கு வந்தவரைப் பற்றி சிந்திப்பதன் மூலம் அவற்றை எதிர்கொள்வோம். அவருடைய பிரசன்னத்தால் அதை என்றென்றும் பிரகாசமாக்குவோம்.

ஒரு உயர்ந்த நிலைக்குப் பிறகு நீங்கள் எப்போது தாழ்வாக உணருகிறீர்கள்? இயேசு உலகிற்குக் கொண்டு வந்த அனைத்தையும் இன்று நீங்கள் எவ்வாறு சிந்திக்க முடியும்?

அன்புள்ள இயேசுவே, எங்கள் இருண்ட உலகத்திற்குள் நுழைந்ததற்காகவும், உமது பிரசன்னத்தால் என் நாட்களை என்றென்றும் பிரகாசமாக்குவதற்காகவும் நான் உம்மைப் துதிக்கிறேன்.