மத்தேயு 6:25-31
25. ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும்; என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்துக்காகவும் கவலைப்படாதிருங்கள் என்று, உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஆகாரத்தைப்பார்க்கிலும் ஜீவனும், உடையைப்பார்க்கிலும் சரீரமும் விசேஷித்தவைகள் அல்லவா? 26. ஆகாயத்துப் பட்சிகளைக் கவனித்துப்பாருங்கள்; அவைகள் விதைக்கிறதுமில்லை, அறுக்கிறதுமில்லை, களஞ்சியங்களில் சேர்த்துவைக்கிறதுமில்லை; அவைகளையும் உங்கள் பரமபிதா பிழைப்பூட்டுகிறார்; அவைகளைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்கள் அல்லவா? 27. கவலைப்படுகிறதினாலே உங்களில் எவன் தன் சரீர அளவோடு ஒரு முழத்தைக் கூட்டுவான்? 28. உடைக்காகவும் நீங்கள் கவலைப்படுகிறதென்ன? காட்டுப் புஷ்பங்கள் எப்படி வளருகிறதென்று கவனித்துப்பாருங்கள்; அவைகள் உழைக்கிறதுமில்லை, நூற்கிறதுமில்லை; 29. என்றாலும், சாலொமோன் முதலாய்த் தன் சர்வ மகிமையிலும் அவைகளில் ஒன்றைப்போலாகிலும் உடுத்தியிருந்ததில்லை என்று, உங்களுக்குச் சொல்லுகிறேன். 30. அற்ப விசுவாசிகளே! இன்றைக்கு இருந்து நாளைக்கு அடுப்பிலே போடப்படும் காட்டுப் புல்லுக்குத் தேவன் இவ்விதமாக உடுத்துவித்தால், உங்களுக்கு உடுத்துவிப்பது அதிக நிச்சயமல்லவா? 31. ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம், என்னத்தை உடுப்போம் என்று, கவலைப்படாதிருங்கள்.
ஆகையால், நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்; நாளையத்தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும். அந்தந்த நாளுக்கு அதினதின் பாடுபோதும். மத்தேயு 6:34
என்னுடைய சபையின் பெண்கள் குழுவுடன் இரண்டு நாள் கொண்டாட்ட தியான பயணத்திற்குப் புறப்பட்டபோது, என்னுடைய பிரச்சினைகளை வீட்டிலேயே விட்டுவிட்டு வந்ததாக நினைத்தேன். ஆனால் எப்படியோ அவைகள் என்னைப் பின்தொடர்ந்து, என் எண்ணங்களைத் தூண்டி, என் கவலைகளை நினைவுபடுத்தின. “ஆத்தும ஓய்வு மற்றும் அமைதிக்கான எனது எதிர்பார்க்கப்பட்ட நேரம் இவ்வளவுதான்,” என்று நான் சலிப்படைந்தேன். ஆனால் நான் ஜெபிக்கும்போது, தேவனுடைய வார்த்தை நினைவுக்கு வந்தது: “நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்; நாளையத்தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும். அந்தந்த நாளுக்கு அதினதின் பாடுபோதும்” (மத்தேயு 6:34).
“அப்பாடா!” என்று நான் திருப்தியடைந்தேன். எதிர்காலத்தில் என்ன நடக்கக்கூடும் என்று நான் கவலைப்பட்டேன், அது தேவனுடைய வாக்குறுதியளிக்கப்பட்ட நிகழ்கால சமாதானத்தை அழித்துக்கொண்டிருந்தது.
இயேசு, நம்முடைய தேவைகளைப் பற்றிய கவலையைக் குறிப்பிடுகிறார், நமது “பரமபிதா” நமக்குத் தேவையானதை வழங்குவார் என்று நம்பும்படி நம்மை வலியுறுத்துகிறார் (வச. 25–26, 32). சரீரப்பரகாரமான பதட்டம், எதிர்மறை எண்ணங்கள் மற்றும் மன அழுத்தத்தை கொண்டுவருதைத் தவிர்த்து, கவலை வேறு எதையும் சாதிக்கபோவதில்லை என்பதை அவர் நமக்கு நினைவூட்டுகிறார் (வச. 27). எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பிரச்சினைகளைப் பற்றி கவலைப்படுவது, இன்று தேவனுடைய சித்தத்தைப் பின்தொடர்வதிலிருந்து நம்மைத் திசைதிருப்புவதைப் பற்றியும் அவர் எச்சரிக்கிறார். “நாளையத்தினத்தின்” பிரச்சினைகள் பற்றி தேவன் அறிந்திருக்கிறார். எனவே அவை எப்போது நிகழும் என்பதை நாம் சமாளிக்க அவர் நமக்கு உதவுவார் என்று நாம் நம்பலாம் (வசனம் 34).
நம்மை தேவனுடைய அன்பான அரவணைப்பிலும் வல்லமையிலும் இருக்கவிடாமல் தடைசெய்கிற நம்முடைய கவலைகள் நம் விசுவாசத்துடன் முரண்படுவதால், இயேசு அவைகளை நிவிர்த்தி செய்கிறார். நமக்கு கவலைகள் ஏற்படும்போது, அந்த நேரத்தில் தேவனுடைய உதவியுடன் அவற்றை எதிர்கொள்ள முடியும். ஆகையினால், அந்தந்த நாளின் நடத்துதலில் கவனம் செலுத்தி தேவ பிரசன்னத்தை முற்றிலும் சார்ந்துகொள்ளுவோம்.
உங்களுக்கு உதவுவதாக தேவன் கொடுத்த வாக்குறுதிக்காக இயேசுவுக்கு நன்றி கூறுவது உங்கள் கவலையை எவ்வாறு குறைக்கிறது? இன்று உங்களைப் பாதிக்காத எந்த கவலைகளை நீங்கள் இயேசுவுடன் விட்டுச் செல்லலாம்?
பரலோகத் தகப்பனே, எனக்குத் தேவையானதை வழங்குவதாக வாக்குறுதி அளித்ததற்காய் உமக்கு நன்றி.