1 தீமோத்தேயு 2:1-7

1. நான் பிரதானமாய்ச் சொல்லுகிற புத்தியென்னவெனில், எல்லா மனுஷருக்காகவும் விண்ணப்பங்களையும் ஜெபங்களையும் வேண்டுதல்களையும் ஸ்தோத்திரங்களையும் பண்ணவேண்டும்; 2. நாம் எல்லாப் பக்தியோடும் நல்லொழுக்கத்தோடும் கலகமில்லாமல் அமைதலுள்ள ஜீவனம்பண்ணும்படிக்கு, ராஜாக்களுக்காகவும், அதிகாரமுள்ள யாவருக்காகவும் அப்படியே செய்யவேண்டும். 3. நம்முடைய இரட்சகராகிய தேவனுக்குமுன்பாக அது நன்மையும் பிரியமுமாயிருக்கிறது. 4. எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார். 5. தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே. 6. எல்லாரையும் மீட்கும்பொருளாகத் தம்மை ஒப்புக்கொடுத்த மனுஷனாகிய கிறிஸ்து இயேசு அவரே; இதற்குரிய சாட்சி ஏற்ற காலங்களில் விளங்கிவருகிறது. 7. இதற்காகவே நான் பிரசங்கியாகவும், அப்போஸ்தலனாகவும், புறஜாதிகளுக்கு விசுவாசத்தையும் சத்தியத்தையும் விளங்கப்பண்ணுகிற போதகனாகவும் நியமிக்கப்பட்டிருக்கிறேன்; நான் பொய் சொல்லாமல் கிறிஸ்துவுக்குள் உண்மையைச் சொல்லுகிறேன்.

எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும்… அவர் (தேவன்) சித்தமுள்ளவராயிருக்கிறார். 1 தீமோத்தேயு 2:4

பள்ளியிலும், என் சுற்றுப்புறத்திலும் விளையாடுவதில் மிகவும் திறமையான சிறுவர்கள் இருந்தனர். நாங்கள் என்ன விளையாடினாலும் சரி, ஒவ்வொரு போட்டிக்கும் அவர்கள் முதலில் தேர்ந்தெடுக்கப்படுவர். என்னைப் போன்ற சிறுவர்கள் இருந்தனர். எனக்கு திறமையை விட அதிக உற்சாகம் இருந்தது! அதனால் நான் பெரும்பாலும் கடைசியாகவே தேர்ந்தெடுக்கப்படுவேன். பொதுவாக விளையாட்டின் இலக்கில் சிக்கிக் கொள்வேன் அல்லது எங்காவது வழியில்லாமல் நின்றிருப்பேன். ஆனால் “தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில்” ஒரு பகுதியாகவோ அல்லது விரும்பப்படத்தக்கவராகவோ இல்லை.

அதிர்ஷ்டவசமாக, தேவன் இப்படி பாரபட்சம் பார்ப்பதில்லை. அனைவருக்காகவும் ஜெபிப்பதன் முக்கியத்துவம் பற்றிய ஒரு பகுதியில் (1 தீமோத்தேயு 2:1), அப்போஸ்தலன் பவுல் தனது உடன் ஊழியரான தீமோத்தேயுவுக்கு “நம்முடைய இரட்சகராகிய தேவனுக்கு… எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார்” என்று நினைவூட்டுகிறார் (வச. 3-4). தேவனுடைய இலவச இரட்சிப்பை அனைவரும் ஏற்றுக்கொள்ள முடியாவிட்டாலும், அனைவரும் அவரை அறிந்துகொள்ள வேண்டும் என்பது நம் பிதாவின் விருப்பமாகவே உள்ளது. இயேசு சிலுவையில் “எல்லாரையும் மீட்கும்பொருளாக” (வச. 6) ஜீவனைக் கொடுத்தார் என்று பவுல் தொடர்ந்து கூறும்போது இதை வலுப்படுத்துகிறார்.

நம் அனைவர் மீதும் தேவனுடைய அபரிவிதமான கிருபை இருக்கிறது என்பதை அறிந்து நாம் மிகுந்த ஆறுதல் அடையலாம். அவர் தம் மக்களைத் தேர்ந்தெடுப்பது தோற்றம், அந்தஸ்து அல்லது வரம் ஆகியவற்றின் அடிப்படையில் அல்ல. அவருடைய பார்வையில் “யூதனென்றும் கிரேக்கனென்றுமில்லை. அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை, ஆணென்றும் பெண்ணென்றுமில்லை” (கலாத்தியர் 3:28). அவர் உங்களை நேசிக்கிறார், தேர்ந்தெடுத்து பெயர் சொல்லி அழைக்கிறார் (யோவான் 10:3). உங்கள் பின்னணி எதுவாக இருந்தாலும் சரி, அல்லது உங்கள் விளையாட்டுத் திறன்களின் நிலை எதுவாக இருந்தாலும் சரி, அவருடைய பார்வையல் நீங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவர்கள்!

தேவன் உங்களை நேசிக்கிறார், அவருடைய ராஜ்யத்தில் உங்களை விரும்புகிறார் என்று உங்களை நம்பவிடாமல் தடுப்பது எது? தேவன் “எல்லா மனுஷரும் இரட்சிக்கப்பட” விரும்புகிறார் என்பதை அறிந்துகொள்வது உங்களை எவ்வாறு ஊக்குவிக்கிறது?

கர்த்தராகிய ஆண்டவரே, எல்லா மக்களும் இரட்சிக்கப்பட வேண்டும் என்று நீர் விரும்புவதற்காய் உமக்கு நன்றி. என்னை இரட்சித்ததற்காய் உமக்கு நன்றி!