லூக்கா 2:8-20

8. அப்பொழுது அந்த நாட்டிலே மேய்ப்பர்கள் வயல்வெளியில் தங்கி, இராத்திரியிலே தங்கள் மந்தையைக் காத்துக்கொண்டிருந்தார்கள். 9. அவ்வேளையில் கர்த்தருடைய தூதன் அவர்களிடத்தில் வந்து நின்றான், கர்த்தருடைய மகிமை அவர்களைச் சுற்றிலும் பிரகாசித்தது; அவர்கள் மிகவும் பயந்தார்கள். 10. தேவதூதன் அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். 11. இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார். 12. பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தியிருக்கக் காண்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம் என்றான். 13. அந்தசஷணமே பரமசேனையின் திரள் அந்தத் தூதனுடனே தோன்றி: 14. உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக என்று சொல்லி, தேவனைத் துதித்தார்கள். 15. தேவதூதர்கள் அவர்களை விட்டுப் பரலோகத்துக்குப் போனபின்பு, மேய்ப்பர்கள் ஒருவரையொருவர் நோக்கி: நாம் பெத்லகேம் ஊருக்குப் போய், நடந்ததாகக் கர்த்தரால் நமக்கு அறிவிக்கப்பட்ட இந்தக் காரியத்தைப் பார்ப்போம் வாருங்கள் என்று சொல்லி, 16. தீவிரமாய் வந்து, மரியாளையும், யோசேப்பையும், முன்னணையிலே கிடத்தியிருக்கிற பிள்ளையையும் கண்டார்கள். 17. கண்டு, அந்தப் பிள்ளையைக் குறித்துத் தங்களுக்குச் சொல்லப்பட்ட சங்கதியைப் பிரசித்தம்பண்ணினார்கள். 18. மேய்ப்பராலே தங்களுக்குச் சொல்லப்பட்டதைக் கேட்ட யாவரும் அவைகளைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள். 19. மரியாளோ அந்தச் சங்கதிகளையெல்லாம் தன் இருதயத்திலே வைத்து, சிந்தனைபண்ணினாள். 20. மேய்ப்பர்களும் தங்களுக்குச் சொல்லப்பட்டதின்படியே கேட்டு கண்ட எல்லாவற்றிற்காகவும் தேவனை மகிமைப்படுத்தி, துதித்துக்கொண்டு திரும்பிப் போனார்கள்.

பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தியிருக்கக் காண்பீர்கள். லூக்கா 2:12

கருவுற்றிருந்த எங்கள் பக்கத்து வீட்டுக்காரர்கள் தனது முதல் குழந்தையை பெற்றெடுத்த செய்திக்காக நாங்கள் நீண்ட காலமாகக் காத்திருப்பது போல் உணர்ந்தோம். இறுதியாக எனது வாட்ஸ்அப்பில் “இது ஒரு பெண் குழந்தை!” என்ற செய்தி வந்தபோது, நாங்கள் அந்த பிள்ளையின் பிறப்பை மகிழ்ச்சியுடன் கொண்டாடினோம். மேலும் அந்தச் செய்தியைக் கேள்விப்படாத நண்பர்களுக்கெல்லாம் அனுப்பி மகிழ்ந்தோம்.

ஒரு குழந்தையின் வருகைக்காக மிகுந்த உற்சாகம் காத்திருக்கிறது. இயேசு பிறப்பதற்கு முன்பு, யூத மக்கள் சில மாதங்கள் காத்திருந்தது மட்டுமல்லாமல், இஸ்ரவேலின் எதிர்பார்க்கப்பட்ட மீட்பரான மேசியாவின் பிறப்புக்காக தலைமுறை தலைமுறையாக ஏங்கிக்கொண்டிருந்தனர். வாக்குப்பண்ணப்பட்ட இந்த மேசியாவின் வருகையை பார்க்கமாட்டோமா என ஏங்கியிருந்த பக்தியுள்ள யூதர்கள் பலர்.

ஒரு நாள் இரவு, பெத்லகேமில் உள்ள மேய்ப்பர்களுக்கு ஒரு தேவதூதர் தோன்றி, மேசியா பிறந்துவிட்டார் என்று அறிவித்தபோது, நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட செய்தி பரலோகத்திலிருந்து அனுப்பப்பட்டது. தூதன் அவர்களிடம், “பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தியிருக்கக் காண்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம் என்றான்” (லூக்கா 2:12). மேய்ப்பர்கள் இயேசுவைக் கண்ட பிறகு, அவர்கள் தேவனைத் துதித்து, பிள்ளையைக் குறித்த “சங்கதியைப் பிரசித்தம்பண்ணினார்கள்” (வச. 17).

இயேசுவின் பிறப்பைப் பற்றி மற்றவர்களுக்குச் சொல்ல, நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட குழந்தை வந்துவிட்டது என்பதை மேய்ப்பர்கள் அறிய வேண்டும் என்று தேவன் விரும்பினார். அவருடைய பிறப்பை நாம் இன்றும் கொண்டாடுகிறோம். ஏனென்றால் இந்த உடைந்த உலகத்தில் அவரை விசுவாசிக்கும் எவருக்கும் அவருடைய ஜீவியம் மீட்பை அருளுகிறது. பிரசித்திபடுத்த தகுதியான நற்செய்தியாகிய சமாதானத்தை அறியவும் மகிழ்ச்சியை அனுபவிக்கவும் நாம் இனி காத்திருக்க வேண்டியதில்லை!

பிறப்பின் நற்செய்தியைக் கேட்டதும் மேய்ப்பர்கள் எப்படி உணர்ந்தார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? இயேசுவின் பிறப்பு பற்றிய நற்செய்தியை நீங்கள் எவ்வாறு பகிர்ந்து கொள்ளலாம்?

இயேசுவே, உம்முடைய பிறப்பு ஒரு நற்செய்தி என்பதை அனைவரும் அறிய வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.