யோவான் 14:15-21

15. நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள். 16. நான் பிதாவை வேண்டிக்கொள்ளுவேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார். 17. உலகம் அந்தச் சத்திய ஆவியானவரைக் காணாமலும் அறியாமலும். இருக்கிறபடியால் அவரைப் பெற்றுக்கொள்ளமாட்டாது; அவர் உங்களுடனே வாசம்பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால், நீங்கள் அவரை அறிவீர்கள். 18. நான் உங்களைத் திக்கற்றவர்களாகவிடேன், உங்களிடத்தில் வருவேன். 19. இன்னும் கொஞ்சக்காலத்திலே உலகம் என்னைக் காணாது, நீங்களோ என்னைக் காண்பீர்கள்; நான் பிழைக்கிறபடியினால் நீங்கள் பிழைப்பீர்கள். 20. நான் என் பிதாவிலும், நீங்கள் என்னிலும், நான் உங்களிலும் இருக்கிறதை அந்நாளிலே நீங்கள் அறிவீர்கள். 21. என் கற்பனைகளைப் பெற்றுக்கொண்டு அவைகளைக் கைக்கொள்ளுகிறவனே என்னிடத்தில் அன்பாயிருக்கிறான், என்னிடத்தில் அன்பாயிருக்கிறவன் என் பிதாவுக்கு அன்பாயிருப்பான்; நானும் அவனில் அன்பாயிருந்து, அவனுக்கு என்னை வெளிப்படுத்துவேன் என்றார்.

நான் என் பிதாவிலும், நீங்கள் என்னிலும், நான் உங்களிலும் இருக்கிறதை அந்நாளிலே நீங்கள் அறிவீர்கள். யோவான் 14:20

14 வயது நிரம்பிய ஜெய் மனச்சோர்வடைந்தபோது, அவன் தன் வாலிபர் கூட்டத் தலைவரிடம் திரும்பினான். “எல்லோருக்கும் மனச்சோர்வு ஏற்படும் தருணங்கள் இருக்கும்,” என்று அந்த முதியவர் அவனுக்கு விளக்கி சொன்னார். “ஆனால் உங்களுக்காக எப்போதும் ஒருவர் இருக்கிறார்… அவரே இயேசு. நீங்கள் தனியாக இல்லை” என்றும் சொன்னார். ஜெய் வாலிபர் கூட்டத்தில் தொடர்ந்து கலந்து கொள்ளும்போது, இயேசுவை நம்ப ஆரம்பித்தான். “இயேசு நமக்காக மரித்தார், அவர் என்னை நன்மைக்காக மறுரூபமாக்கினார்” என்று அவன் சொன்னான். மேலும், “அவர் இருக்கிறார் என்பது எனக்கு முன்னமே தெரியும்; ஆனால் இப்போது அந்த இயேசு எனக்குள் இருக்கிறார்; அவர் என்னில் ஒரு பகுதியாகிவிட்டார்” என்று இந்த மாற்றத்திற்கு இயேசுவின் பிரசன்னமே காரணம் என்று அவன் கூறுகிறான்.

இங்ஙனம் ஜெய், இயேசு தன்னுடைய மரணத்திற்கு பின்னான தன்னுடைய சிநேகிதர்களுடைய ஊழியத்திற்கு வாக்குப்பண்ணின பரிசுத்த ஆவியானவரின் வரங்களைக் குறித்து பேசுகிறான். “உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை” அனுப்பும்படிக்கு பிதாவை வேண்டிக்கொள்வதாக இயேசு சொல்கிறார். “அவர் உங்களுடனே வாசம்பண்ணி உங்களுக்குள்ளே இருப்பார்” (யோவான் 14:16–17). இயேசு பிதாவோடு வசிப்பது போல, அவருடைய சிநேகிதர்களும் அவருடன் வசிப்பார்கள்: “நான் என் பிதாவிலும், நீங்கள் என்னிலும், நான் உங்களிலும் இருக்கிறதை அந்நாளிலே நீங்கள் அறிவீர்கள்” (வச. 20). இது ஒரு ஆச்சரியம் கலந்த மர்மம். ஆனால் இயேசு தனக்குள் இருக்கிறார் என்று ஜெய் கூறும்போது அந்த மர்மத்தை நன்றாக வெளிப்படுத்துகிறார்.

நாமும் இயேசுவை சமாதானம், அமைதி மற்றும் மன்னிப்புக்காக சார்ந்துகொள்ள முடியும். அவர் நமக்குள் வாழ்கிறார்; அவர் நம்முடைய ஜீவியத்தை நன்மைக்கேதுவாய் மாற்றக்கூடும்; அவர் ஜெய்யை மாற்றியது போல நம்மையும் மாற்றுவார் என்பதை நாம் அறிவோம்.

எமி பவுச்சர் பை

இயேசு உங்களுக்குள் வாழ்கிறார் என்பதை அறிவது உங்கள் அன்றாட வாழ்க்கையில் எவ்வாறு மாற்றத்தை ஏற்படுத்துகிறது? மாற்றம் மற்றும் மறுரூப அனுபவத்திற்காக நீங்கள் எவ்வாறு தேவனை சார்ந்துகொள்ள முடியும்?

எனக்குள்ளே வாழும் தேவனே, உம்மை அறிந்து ஊழியம் செய்ய கொடுத்த கிருபைக்காய் நன்றி. என் வாழ்க்கையில் உமது அன்பான பிரசன்னத்தை ஏற்றுக்கொள்ள எனக்கு உதவிசெய்யும்.