ல்லாரும் அன்புக்காக ஏங்குகிறோம். ஆனால் மெய்யான அன்பு எப்படியிருக்கும்? அதைக் கண்டடைந்தோம் என்று எவ்வாறு அறிந்துகொள்ளலாம்? சிலருக்கு இது வார்த்தையால் விவரிக்க இயலாத காதல் வயப்படும் உணர்வாகும். ஆனால் வேதாகமத்தில் உள்ள காலத்தை வென்ற அதின் ஞானமானது, அன்பிற்கு இன்னும் அர்த்தமுள்ள மற்றும் நிலைத்திருக்கும் ஒரு வடிவத்தைக் கொடுக்கிறது.

பின்வரும் பக்கங்களில் போதகரும், வேதாகம ஆசிரியருமான பில் கிரவுடர், 1 கொரிந்தியர் 13:4-8 இல் உள்ள வார்த்தைகளின் தாக்கத்தை புதிய கண்ணோட்டத்தில் பார்க்க நமக்கு உதவுகிறார். பாப் லிண்ட் எனும் பாடலாசிரியர், அன்பை “கைநழுவும் பிரகாசமான பட்டாம்பூச்சி” என்று அழைத்திருக்க; பில்லை போல வேதாகமத்தை நம்புகிறவர்களோ, அன்பு ஒருபோதும் கைநழுவாது என்பதைக் கண்டுகொள்வார்கள்.

மார்ட் டீஹான்

banner image

மெரிக்கப் பாடகரும் பாடலாசிரியருமான ஜாக்கி டி ஷானோன் “உலகின் இன்றைய தேவையென்னவெனில் அன்பே, இனிய அன்பே” என்று பாடியபோது அந்த தலைமுறையே அவரோடு சேர்ந்து பாடினது. அந்த பாடலின்படி, உலகிற்கு ஏற மலைகளோ, கடக்க ஆறுகளோ தேவையில்லை. நமக்குத் தேவையானது அன்பு, “சிலருக்கு மட்டுமல்ல, அனைவருக்கும்.”

60களின் இந்த பிரபல பாடலின் கருப்பொருள் நம் அனைவரின் மனதிலும் எதிரொலிக்கும். நம் துணையிடம் அன்பை வெளிப்படுத்த ரோஜாக்கள் மற்றும் இனிப்புகளை வாங்குகிறோம். இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகையைத் திரட்டுகிறோம். 75 வயதான ரஸ்ஸல் ப்ளைசன்ஸ் போன்றவர்களின் செயல்களை நாம் பாராட்டுகிறோம், அவர் தனது உள்ளூர் செய்தித்தாளில் விவரிக்கப்பட்ட தவித்துக்கொண்டிருந்த ஒரு குடும்பத்திற்கு உதவ முயன்றார். அவர்கள் தங்கியிருந்த ஒரு உள்ளூர் மோட்டலுக்கு ரஸ்ஸல் பணம், உணவு மற்றும் பொம்மைகளைக் கொண்டு வந்தார். துரதிர்ஷ்டவசமாக, ரஸ்ஸலின் கருணைக்கு சில நாட்களுக்குப் பிறகு “பதில் செய்யப்பட்டது”, அந்த குடும்பத்தின் தந்தை கத்தி முனையில் அவரது பணப்பையையும் காரையும் அபகரித்துக்கொண்டார்.

ரஸ்ஸலின் அனுபவம், உலகம் ஏன் அன்பின் அவசியத் தேவையில் உள்ளது என்பதை விளக்க உதவுகிறது. வழங்கப்பட்ட அன்பிற்கு எப்போதும் பதில் செய்யப்பட்டால், போதுமான அன்பு எங்குமிருக்கும். ஆனால் அன்பிற்கு எப்போதும் பதில் செய்யப்படுவதில்லை. சில சமயங்களில் அன்பிற்குப் பதில் செய்யப்படுகையில், அதை நம் விருப்பங்களுக்கு ஏற்றவாறு மறுவரையறை செய்கிறோம். அன்பானது வெவ்வேறு நபர்களுக்கு வெவ்வேறு பொருள்படும்.

பொதுவான உரையாடலில் கூட, பல்வேறு விஷயங்களில் அன்பை குறிக்கும் வார்த்தைகளைப் பயன்படுத்துகிறோம். உதாரணமாக,

“எனக்கு கோல்ஃப் விளையாடுவது மிகவும் பிடிக்கும்.”
“எனக்கு என் கணினி மிகவும் பிடிக்கும்.”
“நான் என் மனைவி மற்றும் குழந்தைகளை நேசிக்கிறேன்.”
“நான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை விரும்புகிறேன்.”

ஒரு வார்த்தை பல பொருள்படுகையில், அது அர்த்தமற்றதாகவும் கூடப் போகலாம்!

இருப்பினும், அன்பிற்கான விளக்கத்தில் வேதாகமத்தின் ஞானம் தெளிவாக உள்ளது. கோபத்தாலும் சண்டையாலும் பாதிக்கப்பட்ட சபையாருக்கு எழுதுகையில், அப்போஸ்தலன் பவுல் கூறினார்:

நான் மனுஷர் பாஷைகளையும் தூதர்பாஷைகளையும் பேசினாலும், அன்பு எனக்கிராவிட்டால், சத்தமிடுகிற வெண்கலம்போலவும், ஓசையிடுகிற கைத்தாளம்போலவும் இருப்பேன். நான் தீர்க்கதரிசன வரத்தை உடையவனாயிருந்து, சகல இரகசியங்களையும், சகல அறிவையும் அறிந்தாலும், மலைகளைப் பேர்க்கத்தக்கதாக சகல விசுவாசமுள்ளவனாயிருந்தாலும், அன்பு எனக்கிராவிட்டால் நான் ஒன்றுமில்லை. எனக்கு உண்டான யாவற்றையும் நான் அன்னதானம்பண்ணினாலும், என் சரீரத்தைச் சுட்டெரிக்கப்படுவதற்குக் கொடுத்தாலும், அன்பு எனக்கிராட்டால் எனக்குப் பிரயோஜனம் ஒன்றுமில்லை (1 கொரி. 13:1-3).

ரஸ்ஸலின் அனுபவம், உலகம் ஏன் அன்பின் அவசியத் தேவையில் உள்ளது என்பதை விளக்க உதவுகிறது. வழங்கப்பட்ட அன்பிற்கு எப்போதும் பதில் செய்யப்பட்டால், போதுமான அன்பு எங்குமிருக்கும்.

காலத்தை வென்ற இந்த வார்த்தைகள் தனிப்பட்ட அர்ப்பணிப்பு மற்றும் தியாகத்தின் முக்கியத்துவத்தை அறிந்த ஜனங்களுக்காக எழுதப்பட்டது.

பவுலின் கடிதத்தின் கொரிந்திய வாசகர்கள் விசுவாசம், அறிவு, ஆவிக்குரிய வரங்கள், வலிமையான தலைவர்கள் மற்றும் ஊக்கமளிக்கும் செய்திகளின் மதிப்பைப் புரிந்திருந்தனர்.

ஆனால், தங்கள் சொந்த நலன்களைக் கவனிக்கும் முயற்சியில், கொரிந்துவிலிருந்த கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்கள் தங்கள் நம்பிக்கை மற்றும் அறிவின் இலக்கை இழந்தனர். வேதத்தைப் படித்தும் கூட, இன்னும் தேவனின் இதயத்தையும் மனதையும் புரிந்துகொள்ளாமல் இருப்பது சாத்தியம் என்பதை அவர்கள் மறந்துவிட்டார்கள். அவர்களின் ஆசையை நிறைவேற்றுவதற்கான முயற்சியில், அவர்களுக்கு மிகவும் தேவையானதை மறந்துபோனார்கள்.

banner image

லகம் இதுவரை அறிந்திராத அன்பின் மிக அழகான விளக்கங்களில் ஒன்று கொரிந்து போன்ற நகரத்துடன் தொடர்புடையது என்பது முரண்பாடாகத் தோன்றலாம். நலிந்த மற்றும் இதயமற்ற அதன் மக்கள் தங்கள் சுயத்தையே மையமாகக் கொண்ட உறவுகளுக்கு பேர்போனவர்கள். சுயத்திற்காக வாழ்க்கைகள் பயன்படுத்தப்பட்டு அழிக்கப்படுவது வழக்கமானதாய் இருந்தது. இருப்பினும், கூர்ந்து கவனிக்கையில் சூழ்நிலை மிகவும் பொருத்தமானது. தங்கள் வாழ்க்கையை மாற்ற உண்மையான அன்பின் கொள்கைகள் தேவைப்பட்ட ஜனங்கள் அங்கே எவராகிலும் இருந்திருப்பார்கள் என்றால், அது கொரிந்துவில் உள்ள சபையே ஆகும்.

இன்றைய சூழல்களோடு ஒப்பிடுகையில் கூட, கொரிந்திய கிறிஸ்தவர்கள் மேற்கொள்ள நிறைய இருந்தது. 1,000 விபச்சார பெண் பூசாரிகள் பணிபுரியும் கோவிலில் அன்பிற்கான கிரேக்கத் தெய்வமான அப்ரோடைட்டின் வழிபாடுதான் நகரத்தின் முதன்மையான மதம்.

செல்வம் மற்றொரு சவாலாக இருந்தது. வடக்கு மற்றும் தெற்கு கிரீஸை இணைக்கும் கொரிந்தின் முக்கிய இடமான இஸ்த்மஸில் உள்ள நகரத்தின் வணிக செழிப்பு, அதன் நெறிமுறை வீழ்ச்சிக்குப் பெரும்பங்காற்றியது. பாலியல் சார்ந்த மதத்துடன் கலந்த பொருள்முதல்வாதத்தின் இந்த கொடிய கலவையானது தனிப்பட்ட இன்பத்தின் அடிப்படையில் ஒரு கலாச்சாரத்தை உருவாக்கியது.

எப்போதும்போல, கொரிந்துவில் உள்ள சபையும் அதன் சூழலின் நிலையைப் பிரதிபலிக்கத் தொடங்கியது. இந்த நம்பிக்கைக்குரிய ஆனால் குழம்பியிருந்த சபையாருக்கான இந்த முதல் கடிதத்தில், பவுல் பல்வேறு பிரச்சனைகளைக் கையாண்டார்:

  • தேவனின் குடும்பத்தில் உள்ள பிளவுகள் (அதி. 1–3)
  • பெருமை மற்றும் ஆவிக்குரிய கர்வம் (அதி. 4)
  • பாலியல் முறைகேடு (அதி. 5)
  • விசுவாசிகளுக்கு இடையேயான வழக்குகள் (அதி. 6)
  • பிரச்சனைக்குரிய திருமணங்கள் (அதி. 7)
  • ஆவிக்குரிய சுதந்திரத்தைத் துஷ்பிரயோகம் செய்தல் (அதி. 8–10)
  • தேவனின் பந்தியைத் துஷ்பிரயோகம் செய்தல் (அதி. 11)
  • ஆவிக்குரிய வரங்களைத் தவறாகப் பயன்படுத்துதல் (அதி. 12,14
  • வேதாகம கோட்பாட்டின் அடிப்படைகளைப் புறக்கணித்தல் (அதி. 15)

அறிவு, ஞானம் மற்றும் வல்லமை ஆகியவற்றைப் பின்தொடர்வதை விட கிறிஸ்துவைப் பின்பற்றுவது மேலானது என்பதை பவுலின் வாசகர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அன்பின் உண்மையான அர்த்தத்தை அவர்கள் மீண்டும் அறிந்துகொள்ளவில்லை என்றால்; அவர்களின் திறமையான வாதங்கள், சரியான உபதேசம், விசுவாசத்தின் வெளிப்பாடுகள் மற்றும் தியாகமான தானங்கள் ஆகியவை உண்மையில் மற்றவர்களுக்குப் பயனளிக்காது. 13:1-3 இல் தொடர்ச்சியான முரண்பாடுகளுடன், நம் செயல்கள் அதாவது நல்ல செயல்கள் கூட அன்புடன் செய்யப்படாவிட்டால் உண்மையில் என்ன நடக்கும் என்பதை பவுல் காட்டினார்.

கொரிந்து அதன் சீர்கேட்டுக்கு மிகவும் பிரபலமானது, கிரேக்க உலகில் மோசமான ஒழுக்கக்கேடு மற்றும் குடிபோதையில் துஷ்பிரயோகம் செய்தவர்கள் கொரிந்தியர்களைப் போலவே நடந்துகொள்வார்கள் என்று கூறப்பட்டது.

கொரிந்தியர்களுக்குத் தேவைப்பட்ட இந்த புரிதல், நம் அனைவருக்குமே இன்றியமையாதது. நாமும் தேவனிடமிருந்தும், தேவனைப் பற்றியும் அவரது இதயத்தைப் புரிந்து கொள்ளாமல், மலைபோல வெறும் தகவல்களைச் சேகரித்திருக்கலாம். ஆவியானவர் நம்மில் வாழ்ந்தாலும், நம் வாழ்வில் உள்ள மக்களுக்காக நாம் உண்மையிலேயே அக்கறை காட்டாமல் இருப்பதும் சாத்தியமே. நாம் எப்போது தவறு செய்கிறோம் என்பதைப் பார்க்காமல் மற்றவர்கள் எப்படி, எப்போது தவறு செய்கிறார்கள் என்பதைப் பார்ப்பது சாத்தியம்.

மெய்யான அன்பில்லாமல் செய்யப்படும் திறமையான வாதங்கள், சரியான உபதேசம், விசுவாசத்தின் வெளிப்பாடுகள் மற்றும் தியாகமான தானங்கள் உண்மையில் மற்றவர்களை நம்மிடமிருந்து விரட்டிவிடும்.

இத்தகைய புரிதல் நம்மைக் கண்டிப்பதற்கல்ல. 1 கொரிந்தியர் 13 நம்மை வீழ்த்துவதற்காக அல்ல. நாம் பாதை மாறும்போது, ஒரு ஒளியைப் நமக்காக பிரகாசிப்பிப்பதே இதன் நோக்கமாக உள்ளது. நம் உறவுகள் மற்றும் அணுகுமுறைகளில் ஏற்படும் தோல்விகள் நம்மை அழிக்க அனுமதிக்க முடியாது என்பதை உணர உதவுகிறது. நமது சொந்த விருப்பங்களைக் குறித்த வாதங்கள், நமது தேவனின் நம்பகத்தன்மையைத் தவறாகச் சித்தரிக்க அனுமதிக்க முடியாது.

நாம் எவ்வளவு அக்கறை காட்டுகிறோம் என்பதைப் பார்க்கும் வரை, நமக்குத் தெரிந்ததைப் பற்றி மக்கள் அதிகம் கவலைப்பட மாட்டார்கள். நம்மைப் பற்றி நாம் எவ்வளவு அக்கறை கொண்டிருக்கிறோமோ அந்த அளவுக்கு மற்றவர்கள் மீது நாம் அக்கறை காட்டினால் ஒழிய, நம் நம்பிக்கைகள் நம்பகமானதாக மற்றவர்களால் கருத முடியாது. கிறிஸ்துவின் அன்பு நம்மை நெருக்கி ஏவாவிட்டால்; சுவிசேஷம் நியாயத்தீர்ப்பாய் மாறுகிறது, பரிசுத்த உபதேசம் பரிசேயமாகிறது, தனிப்பட்ட அர்ப்பணிப்பு சுயநீதியாக மாறும், ஆராதனை வழக்கமான ஒன்றாக, மனம் ஒன்றாததாக மாறும்.

தேவன் நம்மை உன்னதமான இடத்திற்கு வெறுமனே அழைப்பது மட்டுமில்லை. அவர் நம்மை உள்ளிருந்து புறம்பே மாற்ற முன்வருகிறார். அவர் வெறுமனே உயர்ந்த வாழ்க்கைத் தரத்தை நமக்கு முன்வைக்கவில்லை. நம்முடைய இயற்கை சுபாவத்திற்கு மேலாக நம்மை உயர்த்தவும், நம்மால் நமக்காக ஒருபோதும் செய்ய முடியாத ஒன்றை நம்மில் செய்ய விரும்புகிறார்.

இயேசு வாழ்ந்த காலத்தில் யூதர்களில் முக்கியமான மூன்று மதக் குழுக்களில் பரிசேயர்களும் ஒருவர். அவர்கள் பழைய ஏற்பாட்டுச் சட்டத்தைக் கண்டிப்பாக கடைப்பிடிப்பதற்காகவும், சடங்கு தூய்மைக்கான வலுவான அர்ப்பணிப்பிற்காகவும் அறியப்பட்டனர்.

banner image

பீட்டில்ஸ் இசைக் குழுவினர், “உனக்கு தேவையானதெல்லாம் அன்பே” என்ற பழைய பாடலை புதிய இசையுடன், பொலிவுடன் அந்த தலைமுறையையே பாட வைத்தனர். மிகவும் விளம்பரப்படுத்தப்பட்டு அந்த குழுவினர் மீண்டும் ஒன்றிணைகையில் அதே பாடலை பாடினர். ஆனால் ஜான் லெனான் என்பவர் எழுதிய “மெய்யான அன்பு” என்ற பாடலின் வரிகளில் சோகமே இருக்கும். தன்னுடைய வாழ்வின் இலக்கே மெய்யான அன்புதான் என்று விவரிக்கும் அந்த பாடலின் வரிகள், இறுதியில் “தனிமையாய் இருப்பதே” தன் தலைவிதி என்று துக்கமான புலம்பலுடன் முடிகிறது.

லெனானின் பாடல் வரிகள் அவரது தலைமுறையின் அனுபவத்தை மட்டுமல்ல, நம்முடைய அனுபவத்தையும் விவரிக்கின்றன. நாம் அன்பைத் தேடுகிறோம், அதைக் கண்டுபிடித்தோம் என்று நினைக்கிறோம், ஆனால் உணர்வுகள் காற்றாய் பறக்கையில் ஏமாற்றமடைகிறோம்.

அன்பு என்றால் என்ன, அது ஏன் கைநழுவிக்கொண்டே போகிறது? அப்போஸ்தலன் பவுலின் நாட்களில் நாம் வாழ்ந்திருந்தால், நாம் தேடும் “அன்பை” தெளிவுபடுத்துவதற்குக் கிரேக்க மொழி நமக்கு உதவியிருக்கும்.

கிரேக்க வார்த்தையான ஈரோஸ் என்பது காதல் அன்பை விவரிக்கப் பயன்படுத்தப்படும் சொல். ஸ்டோர்கே ஒரு வலுவான அன்பை விவரிக்கும், அது பாதுகாக்கிற மற்றும் பாதுகாப்பான அன்பு. பிலியோ என்பது குடும்பம் அல்லது நட்பின் சகோதர அன்பைக் குறிக்கிறது.

பின்னர் அகாபே (பெரும்பாலும் தேவனின் அன்பைப் பற்றிப் பேசுவதற்குப் பயன்படுத்தப்படுகிறது) அது, அன்பை அதன் மிக ஆழமான மற்றும் தூய்மையான வடிவத்தில் விவரிக்கிறது.

1 கொரிந்தியர் 13ல் தனது அன்பின் விளக்கத்திற்காக அகாபே என்ற வார்த்தையை பவுல் தேர்ந்தெடுத்ததால், அன்பின் மற்ற எல்லா வெளிப்பாடுகளுக்கும் நீடித்த அர்த்தத்தை அளிக்கும் உயர்ந்த வகையான தெய்வீக அன்பை நாம் பார்க்க வேண்டும் என்று அவர் விரும்பினார். நம்முடைய சிருஷ்டிகரின் பார்வையிலிருந்து இந்த அன்பை விவரிக்க அகாபேவைப் பயன்படுத்தி, அப்போஸ்தலன் எழுதினார்:

அன்பின் இந்த குணம் [நீடிய பொறுமை] தங்களால் செய்ய முடியாது என்று மற்றவர்கள் சொல்வதை, ஒரு நபர் செய்ய உதவுகிறது.

அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது; அன்புக்குப் பொறாமையில்லை; அன்பு தன்னைப் புகழாது, இறுமாப்பாயிராது, அயோக்கியமானதைச் செய்யாது, தற்பொழிவை நாடாது, சினமடையாது, தீங்கு நினையாது, அநியாயத்தில் சந்தோஷப்படாமல், சத்தியத்தில் சந்தோஷப்படும். சகலத்தையும் தாங்கும், சகலத்தையும் விசுவாசிக்கும், சகலத்தையும் நம்பும், சகலத்தையும் சகிக்கும் (1 கொரி.13:4-7).

இந்த உயர்ந்த அன்பின் வெவ்வேறு கூறுகளை நாம் கருத்தில் கொள்ளும்போது; அகாபே அன்பே உண்மையான அன்பு, நாம் அனைவரும் விரும்பும் மற்றும் தேவைப்படும் அன்பு என்பது தெளிவாகிறது.

புதிய ஏற்பாட்டில் அகாபே மற்றும் பிலியோ மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.

அன்பு “நீடிய பொறுமையுடையது”

இது பொறுமையானது என்ற கிரேக்க வார்த்தைக்கு “நீண்ட காலத்திற்குப் பின்னான கோபம்” என்று பொருள். வைன்ஸ் எக்ஸ்போசிட்டரி டிக்ஷனரி ஆஃப் நியூ டெஸ்டமென்ட் வேர்ட்ஸ் (வேதாகம விளக்கவுரை) கூறுகிறது, மக்ரோதுமியா என்பது “அவசரமாகப் பழிவாங்கவோ உடனடியாகத் தண்டிக்கவோ செய்யாமல், ஆத்திரமூட்டப்படுகையில் சுயக் கட்டுப்பாட்டோடு இருக்கும் சுபாவம்” என்று விவரிக்கிறது. மற்றொரு வர்ணனையாளர் அதை “வெறுப்பதற்கு மிகவும் தாமதித்தல்” என்று வரையறுத்தார்.

உண்மையான அன்பு பழிவாங்குவதில்லை அல்லது தக்க பதில் செய்ய முற்படுவதில்லை. அது கசப்பைத் தூண்டுவதில்லை, ஆனால் பொறுமையாகத் தாங்கும். பதிலுக்குப் பழிவாங்காமல், அது எதிர்கொள்ளும் இதய வலிகளை இனங்கண்டு கையாளுகிறது. இந்த அன்பின் குணம் [நீடிய பொறுமை] தங்களால் செய்ய முடியாது என்று மற்றவர்கள் சொல்வதை, ஒரு நபர் செய்ய உதவுகிறது.

அது ஜோனுக்கு பொருந்தும். அவரது கணவர் நீண்ட காலமாக ஒரு கள்ள உறவில் ஈடுபட்டிருந்தார், இறுதியில் அவர்களது குடும்பத்தை கைவிட்டார். திருமணம் விவாகரத்தில் முடிந்தது. ஆயினும்கூட, ஜோன் அனுபவித்த அனைத்து காயங்களிலும் வலிகளிலும், அவள் ஏன் தன் கணவனை நேசித்தாள் என்பதை அவள் ஒருபோதும் மறக்கவில்லை.

பல மாதங்கள் துக்கமடைந்து தன் வாழ்க்கையைத் தனியாகக் கட்டியெழுப்பிய பிறகு, அவளுடைய முன்னாள் கணவரான சார்லஸ் வேலை செய்யுமிடத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக அவளுக்குச் செய்தி வந்தது. திசைமாறிய ஒரு மனிதனின் கவனத்தைத் திசைதிருப்ப, அந்த விபத்தின் துன்பத்தைத் தேவன் பயன்படுத்தினார்.

ஒரு நாள் சார்லஸ் ஜோனைத் தொடர்பு கொண்டு, அவர்களது உடைந்த திருமணம் மீண்டும் அமையும் என்ற நம்பிக்கை இருக்கிறதா என்று கேட்டார். எவ்வளவு பெரிய கேள்வி! காயமும் துக்கமும் மேலும் அதிகரிக்கக்கூடிய வாய்ப்பு. இதேபோன்ற சூழ்நிலையில் மற்றொரு பெண், நிச்சயமாக மறுத்திருக்கலாம். ஆனால் ஜோனுக்கு கவலைகள் இருந்தபோதிலும், சார்லஸுடன் பல மாதங்கள் வேதாகம ஆலோசனை பயிற்சிபெற அவள் தயாராக இருந்தாள். ஒரு பெண் அறியக்கூடிய மிகக் கடுமையான வலி மற்றும் இழப்புகளில் ஒன்றைச் சமாளிக்க ஜோன் நிர்ப்பந்திக்கப்பட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் சார்லஸை மறுமணம் செய்து கொண்டார்.

மனக்கசப்பை எதிர்க்கும் இத்தகைய விருப்பம், கடந்த கால பாவங்களை எளிதில் அல்லது வலியின்றி மறந்துவிடும் என்று அர்த்தமல்ல. ஆனால் உண்மையான அன்பு கசப்பான மனக்கசப்புக்கு வழிவகுக்காது. அது “நீடிய பொறுமையுடையது”

“நீடிய பொறுமையுடைய” அன்பில், காயப்பட்டவர்கள் தீங்கு விளைவிக்கும் சூழ்நிலைகளில் தொடர்ந்து இருக்க வேண்டும் அல்லது மீண்டும் நுழைய வேண்டும் என்று அர்த்தமில்லை. மெய்யான அன்புக்கு நமது எண்ணங்கள் மற்றும் செயல்கள் சரியான அணுகுமுறையிலிருந்து வளர வேண்டும்.

மெய்யான அன்பு “தயையுள்ளது”

கிரேக்க அறிஞரான ஏ.டி. ராபர்ட்ஸனின் கூற்றுப்படி, “அன்பு” என்று மொழிபெயர்க்கப்பட்ட கிரேக்க வார்த்தை “பயனுள்ள அல்லது கருணையுள்ள” என்றும் பொருள்படும். உண்மையான அன்பின் நோக்கம் நேசிப்பவரின் நலனைத் தேடுவதே என்பதை நாம் மனதில் வைத்துக் கொண்டால், உண்மையான அன்பு பொறுமையாக மட்டுமில்லாமல் கருணையாகவும் இருக்க வேண்டும் என்பதைப் புரிந்துகொள்வோம்.

கடுமை அல்ல கருணையே மற்றொரு நபரிடமுள்ள நல்லதை ஊக்குவிக்க மிகவும் பொருத்தமானது. நீதிமொழிகள் சொல்வது போல, “மெதுவான பிரதியுத்தரம் உக்கிரத்தை மாற்றும்” (15:1), ஆகவே நடைமுறையான மற்றும் பயனுள்ள அன்புதான் நேசிக்கப்படுபவரிடம் உள்ள சிறந்ததை வெளிக்கொணருகிறது.

தயவாகவும், “கிருபையால் நிறைந்திருப்பதும்” கிறிஸ்துவை போன்ற குணாதிசயமாகும் (யோவான் 1:14). உதவி தேவைப்படுபவர்களுக்கு, தம்மை இயேசு விவரித்த விதத்தைப் பாருங்கள்: “வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாயிருக்கிறேன்; என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்” (மத். 11:28-29).

ஒரு விசுவாசியின் வாழ்வில் அன்பின் தன்மை மற்றும் செயல்பாடு பற்றிய முழு புரிதலை முன்வைக்க பவுல் நேர்மறை மற்றும் எதிர்மறையான உதாரணங்களைப் பயன்படுத்துகிறார்.

உலகம் இதுவரை அறிந்திராத வலிமையான மற்றும் மிகவும் அன்பான நபரைக் குறித்த விளக்கம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. பிரபஞ்சத்தை உருவாக்கும் அளவுக்கு இவர் வலிமையானவர் மற்றும் அவருடைய நாளின் மிகவும் சக்திவாய்ந்த நபர்களின் மாய்மாலம் மற்றும் சுயநலத்திற்கு எதிராக நிற்கும் அளவுக்கு ஞானவான். ஆயினும் அவர் சத்தியம் மற்றும் கிருபை ஆகிய இரண்டிலும் நிறைந்திருந்தே அவ்வாறு செய்தார்.

அன்பு சத்தியத்தை அழைக்கும் அதே வேளையில், இரக்கமின்றி வெளிப்படுத்தப்படும் சத்தியம் அன்பானதல்ல என்பதை இயேசு நமக்கு நினைவூட்டுகிறார். அன்பு பொறுமையை அழைக்கும் அதே வேளையில், இரக்கம் இல்லாத பொறுமை அன்பாக இருக்காது என்பதை நமக்கு நினைவூட்டுகிறார்.

மெய்யான அன்புக்கு “பொறாமையில்லை”

அன்பைப் பற்றிய தனது விளக்கத்தைத் தொடர்ந்த பவுல், மெய்யான அன்பு மற்றொருவரின் ஆசீர்வாதங்கள், வெற்றிகள் அல்லது நல்வாழ்வைக் குறித்து எரிச்சல் அடையாது என்று கூறினார். “நான் விரும்புவதை என்னால் பெற முடியாவிட்டால், நீயும் பெறுவதை நான் விரும்பவில்லை” என்று அன்பு கூறவில்லை. அதற்குப் பதிலாக, மெய்யான அன்பு, “நீங்கள் அனுபவிக்கும் சாதனைகள், அங்கீகாரம் அல்லது ஆறுதல்களை நான் ஒருபோதும் அடையாவிட்டாலும், உங்களுக்காக நான் மகிழ்ச்சியாக இருக்க முடியும். நான் எனக்கென்று அதிகமாக ஆசைப்பட்டாலும், உனக்கென்று குறைவாக ஆசைப்பட என்னால் கூடாது” என்கிறது.

உண்மையான அன்பின் இந்த “பொறாமையற்ற” இயல்பு ஒருவேளை நாம் அடிக்கடி எதிர்கொள்ளும் அம்சமாகும். நாம் போராடிக் கொண்டிருக்கையில், மற்றவர்களோ செழிப்பதை எத்தனை முறை பார்த்திருக்கிறோம்? இயேசுவின் சொந்த சீடர்களும் கூட, யாருக்கு மிக முக்கியமான மரியாதைக்குரிய இடங்கள் என்று தங்களுக்குள் வாதிட்டனர்.

ஏமாற்றமே இல்லாமல் ஒரு வேலையை இழக்க வேண்டும் அல்லது வலியே இல்லாமல் ஒரு உறவை இழக்க வேண்டும் என்று வேதம் கூறவில்லை. நம்மிடம் அன்பு இருந்தால் தனிப்பட்ட இழப்பு அல்லது சோகம் போன்ற உணர்வுகள் இருக்காது என்று பவுல் கூறவில்லை. ஆனால் மெய்யான அன்பு இருந்தால் நாம் பொறாமைப்பட மாட்டோம் என்று அவர் கூறுகிறார். நம்மை விடச் சிறந்தவற்றைப் பெறுகிறவர்கள் குறித்து தவறான எண்ணங்கள் தோன்ற நமது சொந்த வலி ஒரு சாக்காக இருக்காது.

அத்தகைய கருணையுடன் நாம் எப்படி நேசிக்க முடியும்? கிறிஸ்துவின் ஆவியின் பலத்துடன் மட்டுமே. ஏமாற்றத்திலும் நல்லெண்ணம் கொள்வதின் ரகசியம், நமது மேய்ப்பரும் தந்தையுமான நமக்கு அனைத்தையும் அருளும் தேவன் மீது ஆழ்ந்த நம்பிக்கை வைப்பதாகும். ஏமாற்றங்கள் வரும். நியாயமற்ற சூழ்நிலைகள் நம் நம்பிக்கையையும் நம் அன்பையும் சோதிக்கும். ஆனாலும், தேவனை நம்புவதற்கு நாம் கற்றுக்கொண்டிருந்தால், நம்மைப் பற்றி நாம் ஏமாற்றமடைந்தாலும் மற்றவர்களிடம் அன்பைக் காட்டலாம்.

மெய்யான அன்பு “தன்னைப் புகழாது”

வாழ்வில் முன்னேற நாம் வெற்றி பெற்றாற்போல பாவித்து, நம்மைக் குறித்து உயர்வாக எண்ணி, நம் சொந்த திறமைகளை வெளிப்படுத்த வேண்டும் என்றே சுயமுன்னேற்றப் புத்தகங்கள் நமக்குச் சொல்கின்றன,. ஆனால் மெய்யான அன்பானது அதன் சாதனைகளைப் பற்றி தற்பெருமை கொள்ளாது. தன்னை பெரிதாய் காட்டிக்கொள்ள இடங்கொடுக்காது. இந்த கருத்து வேதாகமத்தின் பண்டைய வேர்களில் காணப்படுகிறது. சாலொமோன் ராஜா இதை எழுதும்போது நன்றாகச் சொன்னார், “உன் வாய் அல்ல, புறத்தியானே உன்னைப் புகழட்டும்; உன் உதடு அல்ல, அந்நியனே உன்னைப் புகழட்டும்” (நீதி. 27:2). எளிமையாகச் சொன்னால், மெய்யான அன்பு தன்னை பிரதானமான இடத்தில் வைத்துக்கொள்ளாது.

“நான் மேகங்களுக்கு மேலாக உன்னதங்களில் ஏறுவேன்; உன்னதமானவருக்கு ஒப்பாவேன்” (ஏசா. 14:14) என்று சொல்லியதில், சாத்தான் செய்த பாவங்களில் முதன்மையானது பெருமையே.

ஏமாற்றத்திலும் நல்லெண்ணம் கொள்வதின் ரகசியம், நமது மேய்ப்பரும் தந்தையுமான நமக்கு அனைத்தையும் அருளும் தேவன் மீது ஆழ்ந்த நம்பிக்கை வைப்பதாகும்.

அன்பின் இந்த நான்காவது விளக்கம் பொறாமை அல்லது வயிற்றெரிச்சல் இல்லாத அன்பென்னும் நாணயத்தின் மறுபக்கமாகும். பொறாமை மற்றவருக்கு இருப்பதை விரும்புகிறது; தற்பெருமை நம்மிடம் இருப்பதைப் பார்த்து மற்றவர்களைப் பொறாமைப்படுத்த முயல்கிறது. பொறாமை மற்றவர்களை வீழ்த்துகிறது; தற்பெருமை நம்மைத் தவறாக உயர்த்துகிறது.

எவ்வாறாயினும், மெய்யான அன்பு மற்றொருவரின் வெற்றியைப் பாராட்டுவது மட்டுமல்லாமல், தனது சொந்த வெற்றிகளைக் கருணை மற்றும் பணிவுடன் எவ்வாறு கையாள்வது என்பதும் அதற்குத் தெரியும்.

மெய்யான அன்பு “இறுமாப்பாயிராது”

பவுல் இங்குப் பயன்படுத்தும் கிரேக்க வார்த்தையின் அர்த்தம் “சொந்த முக்கியத்துவத்தால் மிகைப்படுத்தப்பட்ட உணர்வுடன் நிரம்பி வழியும் மக்கள்”. உண்மையான அன்பு எதுவல்ல என்பதை விவரிப்பதில், கொரிந்துவிலுள்ள அன்பற்ற கிறிஸ்தவர்களை ஊக்குவித்தபோது அவர் முன்பு பயன்படுத்திய ஒரு சொல்லைத் தேர்ந்தெடுத்தார், “ஒருவனும் ஒருவனிமித்தம் மற்றொருவனுக்கு விரோதமாய் இறுமாப்படையாதிருக்கவும்” (1 கொரி.4:6).

முந்தைய பகுதியில், மற்றவர்களின் வேதனையை உணர இடமில்லாமல் தங்களைக் குறித்து மட்டுமே எண்ணினதாக கொரிந்தியர்களை பவுல் விவரித்தார். இங்கே அதிகாரம் 13 இல் அதே வார்த்தை உருவகத்தைக் கொண்டு, மற்றவர்களின் உதவியைப் பெற விரும்பாத நமது ஆணவத்தையும், நாம் தேவைப்படும் மற்றவர்களிடம் உணர்ச்சியற்றவர்களாக இருப்பதையும் படம்பிடித்துக் காட்டுகிறார்.

நம்முடைய சொந்த முக்கியத்துவத்தைப் பற்றிய இறுமாப்பான உணர்வு இருக்கிறதா என்று நாம் பார்க்கக்கூடிய ஒரு இடம் நமது ஜெபங்களில் உள்ளது. நாம் நமக்காகவும் நம் சொந்த நலன்களுக்காகவும் ஜெபிக்கிறோமா அல்லது பிள்ளைகள், வாழ்க்கைத் துணைகள் மற்றும் மற்றவர்களின் கரிசனைகளுக்காகவும் ஜெபிக்கிறோமா?

தங்களின் சொந்த முக்கியத்துவத்தால் மிகைப்படுத்தப்பட்ட உணர்வுடன் நிரம்பி வழியும் மக்கள், தங்கள் மகிழ்ச்சி, கருத்துக்கள் மற்றும் உணர்வுகள் மட்டுமே கணக்கிடப்படும் என்று கருதுகின்றனர். இவ்வாறு இறுமாப்பானவர்களுக்கு மற்றவர்களின் தேவைகளையும் உணர்வுகளையும் நிராகரிப்பது எளிது.

மெய்யான அன்பைப் பற்றிய புதிய ஏற்பாட்டின் பார்வை, நம்முடைய சொந்தத் தேவைகளைப் புறக்கணிக்கக் கற்றுக்கொடுக்கவில்லை. மற்றவர்களின் நலன்களை விட நமது நலன்கள் முக்கியமல்ல என்பதை நினைவில் கொள்ள இது நமக்கு அறிவுறுத்துகிறது.

மெய்யான அன்பு “அயோக்கியமானதைச் செய்யாது”

இந்த சொல்திறம் பயன்படுத்தப்பட்டிருக்கும் ஒரே புதிய ஏற்பாட்டு நிகழ்வு 1 கொரிந்தியர் 7:36 இல் காணப்படுகிறது, இது திருமணமாகாத தம்பதியினருக்கு இடையிலான உறவை விவரிக்கிறது. பல்வேறு மொழிபெயர்ப்புகள் அதை “முறைகேடாகவோ, பொருத்தமற்றதாகவோ, முரட்டுத்தனமாகவோ, ஒழுங்கீனமாகவோ அல்லது அநாகரீகமாகவோ நடந்துகொள்ளாமல் இருப்பது” என்று மொழிபெயர்க்கின்றன. தேவபக்திக்கான மிக உயர்ந்த முன்னுரிமையை வலியுறுத்தும் அதே வேளையில், ஒரு ஆணும் பெண்ணும் பாலியல் சோதனையை எதிர்கொண்டால், அவர்கள் “முறையற்ற வகையில் நடந்துகொள்வதற்கு” பதிலாகத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று அப்போஸ்தலன் தொடர்ந்து கூறினார்.

1 கொரிந்தியர் 13 இல் குறிப்பிடப்பட்டுள்ள மெய்யான அன்பின் கோட்பாட்டுடன் “தவறாக நடந்துகொள்வது” எவ்வாறு தொடர்புடையது? மெய்யான அன்பின் கெளரவமான தன்மையே, மற்றவர்களிடம் தகாத கோரிக்கைகளை ஒருபோதும் முன்வைக்காது என்பதை இது நமக்கு நினைவூட்டுகிறது. மெய்யான அன்பு, திருமணமாகாத ஒருவரை “நீ என்னை நேசித்தால், உன்னையே எனக்குக் கொடுத்து நிரூபி” என்று சொல்லத் தூண்டாது. நேசிப்பவர்கள் தமக்காகப் பொய், ஏமாற்றுதல் அல்லது திருடுவதன் மூலம் தங்கள் உண்மைத்தன்மையை நிரூபிக்கும்படி மற்றவர்களிடம் ஒருபோதும் கேட்க மாட்டார்கள்.

மெய்யான அன்பு நட்பைப் பயன்படுத்தி யாரையும் மனசாட்சி அல்லது நம்பிக்கையின் அடிப்படைகள் அல்லது தேவனின் தார்மீகக் கோட்பாடுகளுக்கு எதிராக ஏதாவது செய்ய அழுத்தம் கொடுக்காது. மிக மோசமான பாலுறவுச் செயல்கள், மிக அருவருப்பான மூடிமறைப்புச் செயல்கள், குடும்பம், வட்டாரம், குழு அல்லது நட்பின் மிக மோசமான ரகசியங்கள் அன்பு என்ற தவறான பெயரில் நடத்தப்படுகின்றன. அன்பு ஒருபோதும் வற்புறுத்தலின் கருவி அல்ல.

மெய்யான அன்பு “தற்பொழிவை நாடாது”

தன்னலமற்ற தன்மையை விவரிக்க இது பவுலின் விருப்பமான முறை. இது வெளிப்புறத்தின் மீது கவனம் செலுத்தும் நபரைப் பற்றிப் பேசுகிறது. பிலிப்பியர் 2ல், உண்மையான அன்பின் கொள்கையை பவுல் இவ்வாறு வெளிப்படுத்தினார்: ஒன்றையும் வாதினாலாவது வீண்பெருமையினாலாவது செய்யாமல், மனத்தாழ்மையினாலே ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ணக்கடவீர்கள். அவனவன் தனக்கானவைகளையல்ல, பிறருக்கானவகளையும் நோக்குவானாக. (வ.3-4).

கிறிஸ்துவின் நாமம் தரிக்கப் பெற்றவர்கள் குறித்து பவுலின் மிகுந்த ஆர்வம் என்னவென்றால், அவர்கள் ஒருமைப்பட்டவர்களாக, ஒரே மனதாக இருக்க வேண்டும் என்பதே. ஆயினும்கூட நம்முடைய சொந்த நலன்களைப் போலவே மற்றவர்களின் நலன்களையும் அதிக அக்கறையுடனும் முயற்சியுடனும் கவனிக்கும் வரை, இந்த ஒற்றுமை ஒரு தேவாலயத்திலோ, திருமணத்திலோ அல்லது வேறு எந்த உறவிலோ ஒருபோதும் நிஜமாக இருக்காது, உண்மையான அன்பு நம்முடைய தேவைகளை விட மற்றவர்களின் தேவைகளை முதன்மைப்படுத்துகிறது என்றும் பவுல் கூறினார்.

இந்த சுய-தியாகம் என்பது நமது மனித இயல்பில் சாத்தியமற்றதாக இருப்பினும், அது கிறிஸ்துவின் மனதை வெளிப்படுத்துகிறது (பிலி. 2:5). தம்முடைய பரலோகத் தந்தையை விட்டுப் பிரியவும், மனித சரீரத்தின் வரம்புகளில் வாழவும், பூமியில் வறுமையில் நடமாடவும், தம்மை நிராகரிக்கும் மக்களுக்கு ஊழியனாகவும், தம்மைக் கைவிடும் சீடர்களின் பாதங்களைக் கழுவவும், அவருக்குச் சற்றும் தகுதியில்லாத மக்களின் பாவங்களுக்காகச் சிலுவையில் மரிக்கவும் அவர் தன்னைத் தாழ்த்தினார். இயேசுவின் முழு வாழ்க்கையும், தன்னை விட மற்றவர்களை முன்னிலைப்படுத்துவதற்கு ஒரு எடுத்துக்காட்டு.

மெய்யான அன்பு “சினமடையாது”

உண்மையான அன்பின் வரையறையில் பவுல் பயன்படுத்திய அடுத்த வார்த்தை, எளிதில் எரிச்சல் அடையாத அல்லது “சினமூட்டாத” (ஏ. டி. ராபர்ட்சன்) சுபாவத்தை விவரிக்கிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், உண்மையான அன்பு எளிதில் கோபமடையாது. இது வெறுமனே தொடுவது அல்லது எரிச்சலூட்டுவது அல்ல. இது அன்பின் முதல் குணாதிசயத்தின் மறுபக்கம். அன்பு நீடிய பொறுமையுடையது என்பதின் எதிர்மறையான.

உண்மையான அன்பின் இந்த முக்கியமான குணத்தை நாம் எவ்வளவு எளிதாக மறந்து விடுகிறோம். பல ஆண்டுகளாகப் பரஸ்பர ஏமாற்றத்திற்குப் பிறகு, கணவன்-மனைவி ஒருவருக்கொருவர் எளிதில் எரிச்சலடைகிறார்கள். கோபமடைந்த பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைத் தகாத வார்த்தைகளால் திட்டுகிறார்கள். ஒரு முதலாளி அல்லது சக தொழிலாளி அடிப்படைக் காரியங்களைக் கருத்தில் கொள்ளத் தவறினால், தொழிலாளர்கள் விரைவான கோபத்தைக் காட்டுகிறார்கள்.

நாம் ஏன் சினமடைகிறோம்? சில சமயங்களில் நாம் மனதினுள்ளே கொதித்துப் பொங்கி விடுகிறோம். ஏனென்றால் நமக்கு என்ன வேண்டும் எப்போது வேண்டும் என்று நாம் விரும்புகிறோமோ, அது அப்போதே நமக்கு வேண்டும். அது நமக்கு வேண்டாம் என்று எதுவும் நம்மை தடைபண்ணக் கூடாது. சில சமயங்களில் நமது கோபம் நமது சுயநலத்திற்குச் சான்றாக அமைகிறது.

இருப்பினும், இந்த படத்திற்கு மற்றொரு பக்கமும் உள்ளது. சுயநல காரணங்களுக்காக அன்பு எளிதில் தூண்டப்படுவதில்லை என்றாலும், உணர்ச்சி ரீதியாக வருத்தப்படுவதற்கும் கிளர்ந்தெழுவதற்கும் ஒரு நேரம் இருக்கிறது. அப்போஸ்தலர் 17:16ல் நாம் இவ்வாறு வாசிக்கிறோம்: “அத்தேனே பட்டணத்தில் பவுல் அவர்களுக்காகக் காத்துக்கொண்டிருக்கையில், அந்தப் பட்டணம் விக்கிரகங்களால் நிறைந்திருக்கிறதைக் கண்டு, தன் ஆவியில் மிகுந்த வைராக்கியமடைந்து”

சுயநல
காரணங்களுக்காக
அன்பு எளிதில்
தூண்டப்படுவதில்லை
என்றாலும், உணர்ச்சி
ரீதியாக
வருத்தப்படுவதற்கும்
கிளர்ந்தெழுவதற்கும்
ஒரு நேரம் இருக்கிறது.

இந்த நிகழ்வில், பவுலின் ஆத்திரமூட்டல் அவசியப்பட்டது ஆனால் அது அன்பானதாக இருந்தது. அவர் காத்திருந்தபோது, அவர் மெதுவாக எரிச்சலடைந்தார். நகரத்தின் விக்கிரக ஆராதனையைப் பற்றி அவர் எவ்வளவு அதிகமாகப் பார்த்தாரோ மற்றும் நினைத்தாரோ, அந்தளவுக்கு அவர் பொய் மதத்தால் புண்படுத்தப்பட்டு தவறாக வழிநடத்தப்படுபவர்களின் சார்பாக அதிக அக்கறையும் வருத்தமும் அடைந்தார்.

ஆலயத்தில் பணம் மாற்றுபவர்களின் மேசைகளைப் புரட்டியபோது இயேசுவும் ஆத்திரமடைந்தார். அவர் தனது தந்தையின் ஜெப வீட்டிலுள்ள புறஜாதிகளின் பிராகாரத்தைச் சீர்குலைக்கும் வணிகத்தால் கோபப்படும் அளவிற்கு தன் ஆலயத்தை நேசித்தார். ஜெபம் செய்ய அமைதியான இடத்தை இழந்தவர்களுக்காக அவர் கரிசனை கொண்டார் (மத். 21:12-13).

அன்பில்லாமையால் உண்டாகும் உணர்வையோ எரிச்சலையோ இயேசு இங்கே வெளிப்படுத்தவில்லை. சூழ்நிலைகள் அவரைத் தூண்டியபோது, அவர் நேசித்தவர்களைத் துன்புறுத்தும் நடைமுறைகளுக்கு எதிராகச் சிந்தனையுடனும் அன்புடனும் நடவடிக்கை எடுத்தார்.

அத்தேனே பட்டணத்தில் பவுலின் அனுபவமும், தேவாலயத்தில் இயேசுவின் செயல்களும், கோபப்படுவதற்கு ஒரு காலம் இருக்கிறது என்பதை நமக்கு நினைவூட்டுகிறது. ஆனால் இந்தக் கோபம் அன்பிலும் பாவமில்லாமலும் வெளிப்படுத்தப்பட வேண்டும் (எபே. 4:26).

மெய்யான அன்பு “தீங்கு நினையாது”

“தீமையைக் காணாத, தீமையைக் கேட்காத, தீமை பேசாத” மூன்று புராணக் குரங்குகளின் சுபாவத்தை பவுல் இங்கே எழுதவில்லை. “தீங்கு நினையாது” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள கிரேக்க வார்த்தை ஒரு கணக்கியல் சொல். இதன் பொருள் “எண்ணுவது, ஒரு அட்டவணை அல்லது கணக்கு ஏட்டில் உள்ளதைப் போலக் கணக்கில் எடுத்துக்கொள்வது.” தீங்கு என்று குறிப்பிடப்படுவது, நாம் மற்றவர்களால் பெறும் தவறுகள் அல்லது காயங்கள்.

“எந்தத் தீமையும் நினைக்காத” ஒரு அன்பு, இரக்கமற்ற காரியங்களுக்கு பதில்செய்யும்படி அவைகளைப் பதிந்து வைக்காது. உண்மையான அன்பு கசப்பான வெறுப்புகளை வைத்திருக்காது அல்லது மற்றவர்களுக்கு எதிராக நீண்டகால வெறுப்பை அனுமதிக்காது.

மற்றவர்கள் செய்த தவறுகளுக்காக அவர்கள் பதில் சொல்லியாக வேண்டும் என்ற நோக்கத்தில் தவறுகளை நாம் கண்காணிக்கும் போது, நாம் நினைத்ததைக் காட்டிலும் அதிகமாக நாமே நஷ்டமடையக் கூடும். ஒரு எதிரணிக்கு “இலக்கு நிர்ணயிப்பது” விளையாட்டுக்குச் சிறந்தது, ஆனால் அது அன்பின் வேலை இல்லை. மெய்யான அன்பு தவறுகளைப் பதிவு செய்வதில்லை, ஏனென்றால் அது தேவனின் பிரசன்னத்திலும் அவருடைய பராமரிப்பிலும் பாதுகாப்பைப் பெறுகிறது. தேவனே அனைத்து விளைவுகளையும் கட்டுப்படுத்துகிறார் என்பதை நாம் அறிந்தால், தவறுகளைப் பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை. அவர் நம் தேவைகளைக் கவனித்து வருகிறார்.

மெய்யான அன்பு “அநியாயத்தில் சந்தோஷப்படாது”

பவுல் சுருக்கமாக கூறுகிறார், “தேவன் தவறு என்று சொல்லும் காரியத்தில், அன்பு மகிழ்ச்சி அடைவதில்லை.” மற்றவர்கள் ஒழுக்கநெறி தவறுகையில், அன்பு இரகசியமாக திருப்தி அடையாது. வேறொருவரின் தோல்வி சுவையாக இருப்பதால், அன்பு அதை ரசித்து கடந்து செல்லாது.அன்புடையவர் அறிவுடையவராகத் தோன்றுவதற்காகவோ அல்லது வேறொருவரின் நிந்தையை பற்றிய செய்திகளை வெளியிடுவதன் மூலம் தன்னை நல்லவராக காண்பிக்கவோ கிசுகிசுப்பதில்லை.

எவ்வாறாயினும், மெய்யான அன்பு பாவத்தின் நீண்டகால விளைவுகளை பற்றி அக்கறை கொண்டுள்ளது. பாவத்தை அம்பலப்படுத்த அன்பு நம்மை ஏவினால், அது மற்றவர்களின் நன்மைக்காக மட்டுமே இருக்க வேண்டும், வேறு எந்த காரணமும் அன்பின் தூண்டுதலாக இருக்க முடியாது.

நல்ல உபதேசம்
என்பது தேவனை பற்றியும், நம்மைப் பற்றியும், மற்றவர்களைப்
பற்றியும் சரியான சிந்தனையாகும். விளைவாக சரியான சிந்தனை, ஒருவரையொருவர் உண்மையாகவும் ஆழமாகவும் நேசிக்க உதவுகிறது.

அறிவற்ற சிற்றின்பத்திற்கான நேரங்களில் விதைக்கப்பட்ட தீமை, வருத்தத்தின் நீங்கா வலிநிறைந்த பலன்களையே அறுவடை செய்யும் என்பது மெய்யான அன்பிற்கு தெரியும். முட்டாள்தனத்தின் விதைகளாக விதைக்கப்பட்ட பாவங்கள் ஒரு நாள் பிரிவு, தனிமை மற்றும் தனிமையின் கசப்பான பலனைத் தரும் என்பதை அன்புக்குத் தெரியும்.

மெய்யான அன்பு பாவத்தில் மகிழ்ச்சியடைய முடியாது, ஏனென்றால் அது இன்று மட்டுமல்ல, நாளையையும் பற்றி கவலைப்படுகிறது. விளைவுகள் இல்லாமல் தீமையை அன்பால் சகிக்க முடியாது.

மெய்யான அன்பு “சத்தியத்தில் சந்தோஷப்படும்”

அன்பு அநியாயத்தில் சந்தோஷமடையாது என்று பவுல் இப்போதுதான் சொல்லியிருக்கிறார். அன்பு, சத்தியத்தில் சந்தோஷமடைகிறது என்று இப்போது நாம் வாசிக்கிறோம். அவர் ஏன் “சத்தியம்” என்று கூறினார்? “அன்பு நியாயத்தில் சந்தோஷமடைகிறது” என்று அவர் ஏன் சொல்லவில்லை?

பவுலின் இந்த வார்த்தைகளைத் தேர்ந்தெடுப்பதற்கான ஒரு காரணம், நீதிக்கும் சத்தியத்திற்கும் உள்ள உள்ளார்ந்த உறவாக இருக்கலாம். தெசலோனிக்கேயர்களுக்கு எழுதிய இரண்டாவது நிருபத்தில், நியாயந்தீர்க்கப்படுபவர்களைப் பற்றி பவுல் பேசுகையில், “சத்தியத்தை விசுவாசியாமல் அநீதியில் பிரியப்படுகிற யாவரும்” (2 தெச. 2:11) என்கிறார்.

தெசலோனிக்கேயர்களுக்கு பவுல் சொன்ன வார்த்தைகள், “அன்பு சத்தியத்தில் சந்தோஷப்படும்” என்று அவர் ஏன் சொன்னார் என்பதை நமக்குத் தெரிவிக்கிறது. நாம் நம்புவதற்கும், நாம் செய்வதற்கும் உள்ள ஆழமான உறவைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார். ஒருபுறம், நாம் எதை நம்புகிறோம் என்பதே நமது செய்லகளை தீர்மானிக்கிறது. மறுபுறம், நாம் என்ன செய்ய விரும்புகிறோம் என்பதே நாம் எதை நம்ப விரும்புகிறோம் என்பதைத் தீர்மானிக்கிறது.

கிரியைகள் நம்பிக்கைகளைப் பின்தொடர்கின்றன என்று வசனங்கள் பொதுவாகக் கருதுகின்றன. பொய்யை காட்டிலும் உண்மையே மேலானது என்கிற நிச்சயம் இல்லாத நபரைவிட, வஞ்சகத்தை காட்டிலும் சத்தியத்தை பேசுவதில் அதிக நம்பிக்கையும் உறுதிப்பாடும் உடையவர்களே உண்மையை அதிகம் பேசமுடியும்.

அதனால்தான் வேதாகமம் சரியான நம்பிக்கைகளுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறது. நல்ல உபதேசம் என்பது தேவனை பற்றியும், நம்மைப் பற்றியும், மற்றவர்களைப் பற்றியும் சரியான சிந்தனையாகும். விளைவாக சரியான சிந்தனை, ஒருவரையொருவர் உண்மையாகவும் ஆழமாகவும் நேசிக்க உதவுகிறது.

அநியாயம் சத்தியத்தை மறுதலிக்கிறது. தவறான நடத்தை யதார்த்தத்தைப் பற்றிய தவறான நம்பிக்கையில் வேரூன்றியுள்ளது. ஒழுக்கக்கேடு, “எனது சொந்த நலன்களையும் மற்றவர்களின் நலன்களையும் எவ்வாறு மேம்படுத்துவது என்பது தேவனை விட எனக்கு நன்றாகத் தெரியும்” என்று கூறும் சுயவஞ்சனையான செயல்முறையில் வேரூன்றியுள்ளது.

அன்பு “அநியாயத்தில் சந்தோஷப்படாமல், சத்தியத்தில் சந்தோஷப்படும்.” என்று சொல்வதற்கு பவுலுக்கு நல்ல காரணம் இருந்தது. அக்கிரமத்திற்கு (அநீதிக்கு) எதிரானது நீதி மட்டுமல்ல, அது சத்தியம் கூட. தேவனையும், பிறரையும் மற்றும் நம்மையும் பற்றிய உண்மையை நம்புவதே வாழ்க்கையை ஏற்ற விதத்தில் அனுபவிக்க உதவுகிறது. நாம் ஒருவரையொருவர் தவறுகளைக் கண்டுபிடிப்பதை ஒழித்து, கருணையோடும் உண்மையோடும் பிறரை நேசிக்கக் கற்றுக்கொள்கிறோம். நம்மையே அழிக்கக்கூடிய நமது தவறான நம்பிக்கைகளை அகற்றினால்; தார்மீக தைரியம், நேர்மை, பொறுமை மற்றும் விசுவாசத்தை எவரிடம் கண்டாலும் நாம் மகிழ்ச்சியடைய முடியும். அதுதான் மெய்யான அன்பு.

நீதி மற்றும் சத்தியத்தின் இந்த அஸ்திவாரத்தின் மீது, பவுல் தனது அன்பின் உருவகத்திற்கு இறுதிக்கட்ட வடிவம் கொடுக்க தயாராகிறார்.

மெய்யான அன்பு “சகலத்தையும் தாங்கும்”

தாங்கும் என்ற வார்த்தை “கூரை” என்று பொருள்படும் கிரேக்க வார்த்தையிலிருந்து வந்தது. இந்த சித்திரம் அதன் எளிமையில் பிரமாண்டமானது. கூரை, வீட்டை மூடி புயலிலிருந்து காப்பது போல; அன்பு மறைத்துப் பாதுகாக்கிறது. சூழ்நிலைகளைப் பொருட்படுத்தாமல் மற்றவர்களின் நன்மைக்காக அன்பு தொடர்ந்து செயல்படுகிறது.

அன்பு ஏமாற்றத்தின் சூறாவளியையும், தோல்வியின் மழையையும், நேரம் மற்றும் சூழ்நிலையின் புயல்களையும் தாங்குகிறது. குளிர்ந்த குளிர்காலம் மற்றும் வெப்பமான கோடைக்காலங்களில் அன்பு கவசமாகப் பாதுகாக்கிறது. கற்பனை செய்யக்கூடிய எந்தவொரு மோசமான சூழ்நிலையையும் தாங்கக்கூடிய ஒரு புகலிடத்தை அன்பு வழங்குகிறது.

அன்பு ஏமாற்றத்தின் சூறாவளியையும், தோல்வியின் மழையையும், நேரம் மற்றும் சூழ்நிலையின் புயல்களையும் தாங்குகிறது. கற்பனை செய்யக்கூடிய எந்தவொரு மோசமான சூழ்நிலையையும் தாங்கக்கூடிய ஒரு புகலிடத்தை அன்பு வழங்குகிறது.

உடைந்த உலகில் வாழும் கடுமையான யதார்த்தங்களிலிருந்து அன்பு மற்றவர்களைத் தனிமைப்படுத்தாது. மற்றவர்களை அவர்களின் சொந்த விருப்பங்களின் விளைவுகளிலிருந்து அன்பால் பாதுகாக்கவும் முடியாது. ஆனால் உடைந்த, வேதனைப்படும் நபர்களுக்கு அவர்களின் நல்வாழ்வில் அக்கறையுள்ள ஒருவரைக் கண்டுபிடிக்க அன்பு வாய்ப்பளிக்கிறது. மனந்திரும்பாத மக்களுக்கும் கூட அவர்களின் நல்வாழ்வுக்காக வேண்டுதல் செய்யும் இறுதியான ஒரு வழக்கறிஞரையும் பரிந்துரையாளரையும் அன்பு அளிக்கிறது. மிக மோசமான பாவிகளுக்குக் கூட மனந்திரும்பிய இதயங்களைக் கொண்டுவர அன்பு ஒரு வாய்ப்பை வழங்குகிறது.

அன்பு “சகலத்தையும் தாங்கும்” என்பது ஒரு கம்பளம் அதன் பயனர்களின் கால்களைத் தாங்குவதுபோல, பாவத்தை கண்டும் காணாமலும் ஏற்றுக்கொள்கிறது என்று அர்த்தமல்ல. அன்பு ஒருபோதும் கரிசனை கொள்வதை நிறுத்தாது மற்றும் மன்னிப்புக்கான வாய்ப்பு வழங்குவதை நிறுத்தாது என்பதே இதன் பொருள். அன்பு இன்னொருவரை வெறுக்கவோ, இகழவோ அல்லது நியாயம் தீர்க்க ஆரம்பிக்கும் நிலைக்கு வராது. தொடர்ந்து ஜெபிக்கவும், மற்றவர்களின் பாவங்களைப் பொறுமையாகச் சகித்துக் கொள்ளவும், தேவைப்படும்போது எதிர்கொள்ளவும், மன்னிக்கவும் அன்பு போதுமான அக்கறை கொண்டுள்ளது.

இங்குதான் கூரையின் எல்லை வரையறுக்கப்பட்டுள்ளது. இத்தகைய நிபந்தனையற்ற அன்பு, வெறுமனே பாதுகாத்து கிரியைகளற்று இல்லாமல், மற்ற நபரின் தேர்வுகளுக்குப் பொருத்தமான வழிகளில் தக்க பதிலளிக்கும் ஒரு ஆற்றல்மிக்க அன்பு. அன்பின் குணாதிசயங்கள் ஒருபோதும் மாறாது என்றாலும், அதன் உத்திகள் மற்றும் தந்திரோபாயங்கள் மற்ற நபரின் நல்வாழ்வை “எல்லாவற்றிலும்” நோக்கும்படிக்கு தொடர்ச்சியாக மாறிமாறி ஒத்துப்போகின்றன.

மெய்யான அன்பு “சகலத்தையும் விசுவாசிக்கும்”

மேலோட்டமான பார்வையில், அன்பின் இந்த அடுத்த குணாதிசயம் மற்றவர்களைப் பற்றி அக்கறை கொண்டவர்கள் ஏமாறக்கூடியவர்களாக அல்லது அப்பாவியாக மாற வேண்டும் என்ற எண்ணத்தைக் கொண்டுவரலாம். அது பவுலின் நோக்கம் அல்ல. அன்பு எப்போதும் மற்றவர்களைச் சந்தேகிக்காது என்று அவர் சொல்லவில்லை. சில நேரங்களில் ஒரு அன்பான நண்பர் ஒரு விஷயத்தின் உண்மையைக் கண்டறிய, மற்றவரை நம்பாமல் இருக்க வேண்டும்.

விசுவாசத்திற்கும் அன்பிற்கும் இடையிலான அடித்தள உறவை பவுல் இங்கே கொண்டாடுகிறார். முதல் கொரிந்தியர் 13, மெய்யான அன்பு தேவன் மீது நாம் வைத்திருக்கும் விசுவாசத்தால் தூண்டப்படுகிறது என்பதை நமக்கு நினைவூட்டுகிறது. தேவன் தன்னைப் பற்றியும், நம்மைப் பற்றியும், பிறரைப் பற்றியும் நமக்குச் சொல்லும் “சகலத்தையும்” நாம் நம்பும்போது மெய்யான அன்பு வளர்கிறது மற்றும் விசுவாசத்தால் நிலைபெறுகிறது.

“என் நாமத்தினிமித்தம் நீங்கள் எல்லாராலும் பகைக்கப்படுவீர்கள்; முடிவுபரியந்தம் நிலைத்திருப்பவனே இரட்சிக்கப்படுவான்.” (மத். 10:22) என்று கூறுகையில், சகிப்புத்தன்மையின் அவசியத்தைப் பற்றி இயேசு பேசினார்.

தேவன் நம்மீது கொண்ட அன்பைப் பற்றிச் சொல்வதை நாம் சந்தேகித்தால், ஒருவரையொருவர் நேசிப்பதற்கான வலுவான உந்துதலை நாம் இழக்க நேரிடும். தேவன் நம்மிடம் பொறுமையாகவும் அன்பாகவும் இருக்கிறார் என்ற உறுதியை நாம் சந்தேகித்தால், நாம் ஒருவருக்கொருவர் பொறுமையையும் கருணையையும் காட்டமாட்டோம். தேவன் நம் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியுமா என்று நாம் சந்தேகித்தால், நாம் தாராள மனப்பான்மை பக்கம் சாயமாட்டோம்.

“அன்பு சகலத்தையும் விசுவாசிக்கும்” என்ற சத்தியம், கிறிஸ்துவைப் போன்ற அன்பைப் பற்றிய நமது புரிதலுக்கு மையமானது. மெய்யான அன்பு விசுவாசத்தில் வேரூன்றி, அடித்தளமாக உள்ளது. விசுவாசம், தேவன் தம்முடைய வார்த்தையில் கூறியவற்றில் வேரூன்றி, அடித்தளமாக உள்ளது.

தேவன் சொல்லியிருக்கும் “சகலத்தையும் ” நாம் தொடர்ந்து விசுவாசிக்காத வரையில்; நம்முடைய அன்பு வாழ்வின் ஏமாற்றங்கள், நிராகரிப்புகள் மற்றும் அவமானங்களில் பிழைக்காது. நாம் தேவனுடைய வார்த்தையின் மீது நம் அன்பை உறுதியாகக் கட்டியெழுப்பாவிட்டால், அன்பு துடைத்தெடுக்கப்பட்டு விடும். தேவன் மீதான விசுவாசத்தால் மட்டுமே அன்பு வலுவாக இருக்கும்.

மெய்யான அன்பு “சகலத்தையும் நம்பும்”

இது முந்தைய அறிக்கையிலிருந்து வழிந்தோடுகிறது. தேவனுடைய வார்த்தைகளிலும் அவருடைய இறையாண்மைத் திட்டத்திலும் நாம் நம்பிக்கையுடன் வாழ்ந்தால், “சகலத்தையும் நம்புவதற்கு” நமக்குக் காரணம் இருக்கும். தேவனின் கிருபையில் மனித தோல்விகள் இறுதியானவை அல்ல என்று நாம் நம்பலாம். ஒரு தனிப்பட்ட நபரின் வாழ்க்கையில் தேவனால் என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும் என்ற காரணத்தால், மெய்யான அன்பு நம்பும்.

பகுத்தறிவில்லாமல் நம்பும்படிக்கோ அல்லது கண்மூடித்தனமாக நம்பவோ பவுல் நம்மைக் கேட்கிறார் என்பது அர்த்தமில்லை. ஆனால் எல்லா ஜனங்களிலும், வேதாகமத்தின் தேவனை நம்புபவர்கள் மட்டுமே இந்த உலகத்தில் அன்பாகவும் நம்பிக்கையுடனும் இருப்பதற்குச் சரியான அடிப்படையைக் கொண்டுள்ளனர்.

தேவனைக் குறித்து சங்கீதக்காரன், “நீரே என் நம்பிக்கை” (சங்கீதம் 39:7) என்றார். பவுல் “நம்பிக்கை நம்மை வெட்கப்படுத்தாது” (ரோமர். 5:5) என்றெழுதினார். பேதுருவோ “நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக; அவர், இயேசுகிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுந்ததினாலே, அழியாததும் மாசற்றதும் வாடாததுமாகிய சுதந்தரத்திற்கேதுவாக, ஜீவனுள்ள நம்பிக்கை உண்டாகும்படி” (1 பே.1:3-4) என்று சேர்த்தெழுதினார்.

இதுதான் அன்பின் வல்லமை. இது மாறிக்கொண்டேயிருக்கும் உணர்ச்சிகள் அல்லது உடல்நிலையால் அல்ல, மாறாகத் தேவனை நம்புபவர்களுக்குத் தேவனால் கொடுக்கப்பட்ட ஆழமான விசுவாசம் மற்றும் நம்பிக்கைகளால் தூண்டப்படுகிறது. மெய்யான அன்பிற்கு வாழ்க்கையைப் புரிந்துகொள்ளுதல் மற்றும் அதை புத்துணர்ச்சியூட்டும் நம்பிக்கையுடன் வாழக்கூடிய திறன் உள்ளது, ஏனெனில் “கிறிஸ்துவானவர் மகிமையின் நம்பிக்கையாக உங்களுக்குள் இருப்பதே அந்த இரகசியம்” (கொலோ.1:27).

மெய்யான அன்பு “சகலத்தையும் சகிக்கும்”

4 ஆம் வசனத்தில், “அன்பு நீடிய சாந்தமும்” என்று அன்பிற்கான தனது விளக்கத்தை ஆரம்பித்த பவுல், இங்கே நிறைவு செய்கிறார். அந்த முதல் பயன்பாட்டிற்கும் இதற்கும் உள்ள வித்தியாசம், மெய்யான அன்பின் இந்த அற்புதமான கூறுகளை விவரிக்க பவுல் தேர்ந்தெடுத்த வார்த்தைகளில் காணப்படுகிறது. மெய்யான அன்பின் ரகசியம் சரியான நம்பிக்கைகளிலும் விசுவாசத்திலும் உள்ளது என்ற புரிதலுடன், அன்பு “சகலத்தையும் சகிக்கும்” என்று கூறுவதற்கான அடிப்படையை பவுல் நமக்கு அளித்துள்ளார்.

வசனம் 4 இல் உள்ள கிரேக்க வார்த்தையானது, மற்றவர்களால் தவறாக நடத்தப்படும்போது, வெறுப்படையாமல் “நீடிய சாந்தத்தோடு” இருப்பதை மையமாகக் கொண்டது. பொதுவாக வாழ்க்கை சூழ்நிலைகளுக்கு நாம் எவ்வாறு எதிர்வினையாற்றுகிறோம் என்பதே இங்கு வலியுறுத்தப்படுகிறது. அன்பு கைவிடாது. அது விலகாது. அது விலகிச் செல்லாது. அது வலியை எதிர்கொண்டு நீடிய பொறுமையுடன் நிற்கிறது, ஏனெனில் அதின் இலக்கு விலையேறப்பெற்றது என்பதை அறிந்திருக்கிறது.

banner image

லியோனல் ரிச்சி மற்றும் டயானா ரோஸ் ஆகியோர் திருமணத்தில் ஒன்றுபடும் ஒவ்வொரு இளம் ஜோடியும் எதை எதிர்பார்க்கிறார்கள் என்பதை ஏக்கத்துடன் பாடினர். அது தான் “முடிவற்ற அன்பு” என்ற பாடல்.

1 கொரிந்தியர் 13ல் பவுல் விவரித்த அன்பைத் தவிர அது சாத்தியமில்லை. இந்த சிந்தனைகள் அனைத்தும் வசனம் 8ல் “அன்பு ஒருக்காலும் ஒழியாது.” என்று வலுப்பெற்றது. அது தன் ஆதாரத்தையும் வாழ்க்கையையும் தேவனில் கண்டடைவதால், மெய்யான அன்பு எதையும் தாங்கும்.

மற்ற விஷயங்கள் தற்காலிகமானவை, முழுமையற்றவை, நம்பமுடியாதவை என்று பவுல் தெளிவுபடுத்தினார். ஆனால் அன்பு அப்படி அல்ல. தேவனின் பலத்தாலும், கிருபையாலும் அது எதையும் தாங்கும். மெய்யான அன்பு துரோகத்தையும், அவநம்பிக்கையையும் தாங்கும். இது ஏமாற்றம் மற்றும் ஒழுக்கநெறி தோல்வியிலும் நீடிக்கும். நம்மை எதிரியாகக் கருதுபவர்களின் அவமானங்கள் மற்றும் பொறாமைகளுக்கு மேலாக இது உயரும். குற்றவாளியைப் போல விசாரிக்கப்பட்டாலும், சிறைக்கே சென்றாலும் இது நிலைத்திருக்கும்.

துரதிர்ஷ்டவசமான மனிதத் தேர்வுகள் காரணமாக நம் உறவுகளின் தன்மை மாறினாலும், தேவனின் அன்பு நம்மை ஜெபிக்கவும், முடிந்தவரை மற்றொரு நபரின் சார்பாகச் செயல்படவும் தூண்டும்.

அன்பே கிறிஸ்துவின் இதயத்தைப் பிரதிபலிக்கிறது மற்றும் ஒருவரின் வாழ்க்கையில் அவர் மட்டுமே செய்யக்கூடிய “மெய்யான அன்பு” எனும் அற்புதமான மாற்றத்தை வெளிப்படுத்துகிறது.

banner image

“இந்த உண்மையான அன்பை நான் எங்கே கண்டுபிடிப்பேன்?” என்பதுதான் உங்கள் மனதின் கேள்வி என்றால், சில நல்ல செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். நீங்கள் ஏற்கனவே நேசிக்கப்படுகிறீர்கள். வேதத்தில் மிகவும் பரிச்சயமான வசனத்தில் நமக்கு இவ்வாறு கூறப்பட்டுள்ளது: “தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்” (யோவான் 3:16).

விசுவாசிகளுக்கு, தேவனின் அன்பின் அகலத்தை இயேசு விவரித்தார். இயேசு தம் சீடர்களிடம்: “ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று கவலைப்படாதிருங்கள். இவைகளையெல்லாம் அஞ்ஞானிகள் நாடித்தேடுகிறார்கள்; இவைகளெல்லாம் உங்களுக்கு வேண்டியவைகள் என்று உங்கள் பரமபிதா அறிந்திருக்கிறார். முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்; அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்” (மத். 6:31-33) என்று கூறினார்.

இந்த வகையில் நாம் நேசிக்கப்படுகிறோம் என்று நாம் நம்பும்போதுதான், பிறரைத் துணிவுடன் நேசிப்பதற்கு நமக்கு வேண்டிய உத்தரவாதம் கிடைக்கும்.

கிறிஸ்து என்னும் நபர் மற்றும் அவரது செயல்களில் அன்பைக் கண்டறிவதற்கான முதல் படியை நீங்கள் எடுத்துள்ளீர்களா? நீங்கள் அவரை நம்பினீர்களா? கிறிஸ்து உங்கள் பாவங்களுக்காக மரித்தார் என்று வேதம் கூறும்போது நீங்கள் அதை நம்புகிறீர்களா?

அதுதான் ஆரம்பப் புள்ளி.

உங்கள் பாவத்தை ஒப்புக்கொண்டு, “இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே” (லூக்கா 19:10) வந்த கிறிஸ்துவை அறிக்கையிடுங்கள். கிறிஸ்துவில்தான் நாம் தேவனின் அன்பைக் கண்டடைகிறோம். பவுல் விவரித்த அன்பில் வாழ்வதன் அர்த்தம் என்ன என்பதை அவரில் மட்டுமே காண்கிறோம்.

அவர் நம்மை ஒரு உயர்ந்த தரத்திற்கு மட்டுமல்ல, அவருடைய வாழ்க்கையை நம் மூலமாக வாழ அவரை அனுமதிக்கவும் அழைக்கிறார்.

banner image