வாசிக்க: மாற்கு 9:14-29
“வீட்டில் அவர் பிரவேசித்தபொழுது, அவருடைய சீஷர்கள்: அதைத் துரத்திவிட எங்களால் ஏன் கூடாமற்போயிற்று என்று அவரிடத்தில் தனித்துக் கேட்டார்கள். அதற்கு அவர்: இவ்வகைப் பிசாசு ஜெபத்தினாலும் உபவாசத்தினாலுமேயன்றி மற்றெவ்விதத்தினாலும் புறப்பட்டுப்போகாது என்றார்.” (வவ. 28-29).
உங்கள் தோல்விகளை அனைவரும் பார்க்கும்படி சுவரில் எழுதச் சொன்னால் என்ன செய்வீர்கள்? கேட்கும் நபர் உங்கள் முதலாளியாக இருந்தால் என்ன செய்வீர்கள்? டன் மற்றும் பிராட்ஸ்ட்ரீட் க்ரெடிபிலிட்டி கார்ப்பரேஷனில் தினமும் இவ்வாறு தான் நடந்து கொண்டிருந்தது. தலைமைச் செயலாளர் ஜெஃப் ஸ்டிபல் என்பவர் தோல்விச் சுவரைக் கொண்டு வந்தார். ஸ்டிபெல் தனது ஊழியர்களை அவர்களது வேலையிலும், வாழ்க்கையிலும் வெற்றிபெற தங்கள் தோல்விகளை 10க்கு 15 அடி பரப்பில் எழுதுமாறு ஊக்குவிக்கிறார்.
தம்முடைய சீஷர்கள் தங்கள் தோல்விகளை ஒப்புக்கொண்டு தங்களுக்கு சொந்தமாக்கிக்கொள்ள வேண்டும் என இயேசு விரும்பினார். ஏனென்றால் அதன் மூலமாகத்தான் அவர்கள் தேவ பணியில் வெற்றிபெற முடியும். சீஷர்கள் எழுதியிருக்கக்கூடிய ஒரு விஷயம் இங்கே: “ஆறுநாளைக்குப் பின்பு, இயேசு பேதுருவையும் யாக்கோபையும் யோவானையும் அழைத்து, உயர்ந்த மலையின்மேல் அவர்களைத் தனியே கூட்டிக்கொண்டுபோய், அவர்களுக்கு முன்பாக மறுரூபமானார்; அவருடைய வஸ்திரம் உறைந்த மழையைப்போல் பூமியிலே எந்த வண்ணானும் வெளுக்கக்கூடாத வெண்மையாய்ப் பிரகாசித்தது. அப்பொழுது ஜனக்கூட்டத்தில் ஒருவன் அவரை நோக்கி: போதகரே, ஊமையான ஒரு ஆவி பிடித்த என் மகனை உம்மிடத்தில் கொண்டுவந்தேன். அது அவனை எங்கே பிடித்தாலும் அங்கே அவனை அலைக்கழிக்கிறது; அப்பொழுது அவன் நுரைதள்ளி, பல்லைக்கடித்து, சோர்ந்துபோகிறான். அதைத் துரத்திவிடும்படி உம்முடைய சீஷரிடத்தில் கேட்டேன். அவர்களால் கூடாமற்போயிற்று என்றான்.
(மாற்கு 9:2-3, 17-18). அவர் பன்னிருவரையும் அழைத்து, அசுத்த ஆவிகளைத் துரத்த அவர்களுக்கு அதிகாரங்கொடுத்து, அநேகம் பிசாசுகளைத் துரத்தி, அநேகம் நோயாளிகளை எண்ணெய் பூசிச் சொஸ்தமாக்கினார்கள்.(6:7,13). அவர்களால் அதைச் செய்ய முடியவில்லை. இயேசு அந்த மனிதனின் மகனைக் குணப்படுத்தினார். “வீட்டில் அவர் பிரவேசித்தபொழுது, அவருடைய சீஷர்கள்: அதைத் துரத்திவிட எங்களால் ஏன் கூடாமற்போயிற்று என்று அவரிடத்தில் தனித்துக் கேட்டார்கள்.”(9:28). சீஷர்கள் தேவனைச் சார்ந்து அவரிடம் ஜெபிப்பதற்குப் பதிலாக, தங்களுடைய சொந்த பலத்தில் செயல்பட முயன்றனர்.
நாம் அனைவரும் இந்த வாழ்க்கையில் ஆத்துமாவிற்கு எதிராக வரும் போராட்டமாகிய எதார்த்தத்தை எதிர்கொள்கிறோம். நம்முடைய சொந்த பாவ சுபாவம், தோல்விக்கு வழிவகுக்கும் சோதனைகளைப் பின்தொடர நம்மை ஊக்கப்படுத்தும். தேவனைப் பின்பற்றுவதற்கும், தோல்வியடையாமல் இருப்பதற்கும் நாம் எவ்வாறு சிறப்பாகத் தயாராக முடியும்? வேதாகமத்தைப் படிப்பதன் மூலமும் (எபேசியர் 6:17), நமது ஆவிக்குரிய கவசத்தை அணிந்துகொள்வதன் மூலமும் (6:10-17), விசுவாசத்தில் வளர்வதன் மூலமும் (1 யோவான் 5:4-5), இயேசுவின் வல்லமையை (யோவான் 16:33) சார்ந்து அவரிடம் ஜெபிப்பதின் மூலமும் நாம் தயாராக முடியும் (எபேசியர் 6:18).
– மார்வின் வில்லியம்ஸ்
மேலும்
2 இராஜாக்கள் 4:32-35ஐப் படித்து, எலியா மரணத்தின் இருண்ட வல்லமையை எவ்வாறு எதிர்த்துப் போராடத் தயாரானார் என்பதைப் பார்க்கவும்.
அடுத்து
ஆத்மாவிற்கு எதிராக வருபவற்றை சந்திப்பதற்கு நீங்கள் எந்த வழிகளில் தயாராக இருக்க வேண்டும்? எபேசியர் 6:10-17-ல் உள்ள எந்த கவசத்தை நீங்கள் இன்று அணிய வேண்டும்?