1999 ஏப்ரல், ஒரு கோடைக்கால இரவில், ரேச்சல் பர்னபாஸ் தனது 9 மற்றும் 8 வயதுடைய ஆண் பிள்ளைகளுடன் வீட்டில் தனியாக இருந்தார். இவரது கணவர் தொழில் விஷயமாக வெளியூர் சென்றுள்ளதால், வீட்டில் தனியாக இருந்துள்ளார். அன்று இரவு அவள் மாடியிலிருந்த படுக்கையறைக்கு ஏறியபோது, ஜன்னலில் ஒரு கருப்பு பிம்பத்தைக் கண்டதாக அவள் நினைத்தாள், ஆனால் பின்னர் கூர்ந்து கவனித்ததில், அது அவளுடைய இரவு உடையின் பிரதிபலிப்பைத் தவிர வேறில்லை என்பதை அவள் உணர்ந்தாள். ரேச்சல் பொதுவாக நன்றாக நித்திரை செய்பவா், ஆனால் இந்த குறிப்பிட்ட இரவு முழுவதும் அவள் அமைதியற்று அசவுகரியமாக உணர்ந்தாள். இருள் சூழ்ந்தபோது, அவள் பாதி விழித்திருந்த கண்களால் அவள் படுக்கைக்கு அருகில் ஒரு நிழல் உருவத்தைப் பார்க்கத் தொடங்கினாள், ஆனால் அவள் படுக்கைக்கு அருகில் தண்ணீர் குடித்துக்கொண்டிருந்த தன் மகன்தான் என்பதை அவள் உணர்ந்தபோது மீண்டும் அவள் பயம் தணிந்தது. அவள் மீண்டும் தூங்க முயன்றபோது, அந்த அற்பமான, அன்றாட நிகழ்வுகளைப் பற்றிய தனது பயத்தைக் குறித்து அவள் யோசித்தாள். நடுஇரவு கடந்து கொண்டிருந்தபோது, படுக்கையறையின் வாசலிலிருந்து தன் படுக்கையை நோக்கி ஒரு நிழல் உருவம் ஊர்ந்து செல்வதைக் கண்டு திடுக்கிட்டுப் போனதால், பயம் அவளைத் தரைமட்டமாக்கியது. இந்த உருவம் அலமாரிகளுக்குள் சென்றதையும், கையடக்க மின்விளக்கால் அதனுள் இருப்பவற்றைத் துழாவுவதையும் அவள் கண்டாள். கடைசியாக, அது ஒரு திருடன் என்று அவளுக்குப் புரிந்தது, அவளுடைய அசௌகரியத்திற்கான காரணத்தைக் கண்டுபிடித்தாள்.
அவள் மூளை வேகமெடுத்து என்ன செய்வது என்று யோசித்தபோது, இந்த மனிதன் குனிந்து, அவளைக் கத்த வேண்டாம் என்று உறுமியபடி அவள் நெஞ்சில் ஒரு கத்தியை நீட்டினான். ஆச்சரியம் என்னவென்றால், அவள் முகமூடி அணிந்த உருவத்தைப் பார்த்தபோது, அவள் பயப்படவில்லை, அவள் வாழ்க்கையில் ஒருபோதும் இவ்வாறு அமைதியாக இருந்ததில்லை. வீட்டில் உள்ள பணம் மற்றும் நகைகள் அனைத்தையும் தன்னிடம் ஒப்படைக்குமாறு அவன் கோரினான், அவளும் முழுவதுமாக ஒத்துழைப்பதாக அவனுக்கு உறுதியளிக்கையில், அவள் அருகில் தூங்கிக்கொண்டிருந்த அவளுடைய மகன்கள் எழுந்தார்கள், ஆனால் அதிர்ஷ்டவசமாக அவர்களும் சத்தம் போடவில்லை. அவர்கள் மூவரையும் கத்தி முனையில் படிக்கட்டுகளிலிருந்து இறக்கிச் சென்றபோது, அங்கே முகமூடி அணிந்த மேலும் இருவர் கைகளில் பெரிய அரிவாளுடன் இருப்பதைக் கண்டனர். அறை முழுவதும் தலைகீழாகப் புரட்டப்பட்டிருப்பதையும், அலமாரியிலிருந்த பொருட்கள் அனைத்தும் தரையில் சிதறிக் கிடந்ததையும் ரேச்சல் கவனித்தாள். அந்த மனிதர்கள் சொற்பக் கொள்ளையினால் விரக்தியடைந்ததாகத் தோன்றியது, ஏனெனில் அவர்களால் இதுவரை கண்டுபிடிக்க முடிந்ததெல்லாம் சில பணநோட்டுகளையும் மற்றும் சில சிறிய நகைகளை மட்டுமே. மேலும் கொலைமிரட்டல் விடுத்து, ஒரு மகனின் கையை இழுத்து, அதை வெட்டி விடுவதாக மிரட்டியதன் மூலம் அவர்கள் தங்கள் விரக்தியை வெளிப்படுத்தினர்.
இந்த பயங்கரமான சூழ்நிலையில், ரேச்சல் அமைதியாக ஜெபித்துக்கொண்டிருந்தார். “தேவனே, எங்களைக் காப்பாற்றும், உம்மால் கூடும்!” என்பதையே திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டிருந்தார். கிட்டத்தட்ட அதிசய விதமாக, இந்த மனிதர்கள் திடீரென்று தங்கள் ஆயுதங்களைப் போட்டுவிட்டு, அவர்கள் சேகரிக்க முடிந்த குறைந்தபட்ச பொருட்களுடன் அமைதியாகச் சென்றனர். அந்த இரவில் அவளை விழிப்புடன் வைத்திருந்த ஒவ்வொரு இடையூறும் தேவனால் அனுமதிக்கப்பட்டதாகத் தோன்றியது, ஏனெனில் அதுவே உண்மையான சூழ்நிலையை அதிக அமைதியுடன் எதிர்கொள்ள அவளுக்கு உதவியது.
உபாகமம் 32:10 இல் வாசிப்பதுபோல, “பாழான நிலத்திலும் ஊளையிடுதலுள்ள வெறுமையான அவாந்தர வெளியிலும் அவர் அவனைக் கண்டுபிடித்தார், அவனை நடத்தினார், அவனை உணர்த்தினார், அவனைத் தமது கண்மணியைப்போலக் காத்தருளினார்”. வாழ்க்கையின் கடினமான சூழ்நிலைகளில், அதைத் மேற்கொள்ளும் திறனுக்கு அப்பாற்பட்ட கஷ்டங்களை நாம் எதிர்கொள்ளும் போது அல்லது மிகுந்த பயம் அல்லது பதட்டத்தமான தருணங்களில் நமக்கு ஆறுதலையும் வலிமையையும் தருவது நங்கூரம் போன்ற தேவனின் வார்த்தையே. கர்த்தர் இஸ்ரவேலைக் காத்தது போல, அவர் நம்மையும் காக்கிறார்.
நம்முடைய கடினமான சூழ்நிலைகளை சந்திக்கும்போது, நம்மால் எப்போதும் வேதாகமத்தை எடுக்கவோ அல்லது ஜெபிக்கவோ முடியாமல் போகலாம், வார்த்தைகள் கூட வெளிவரக்கூடாதபடிக்கு நம் இதயங்கள் மூழ்கடிக்கப்படலாம். இந்த கடினமான தருணங்களில், வேதத்தின் வாக்குறுதிகளை நாம் நினைவுகூரலாம். நாம் தினமும் தேவனுடைய வார்த்தையைத் தியானிக்கும்போது, அது மெதுவாக ஆனால் நிச்சயமாக நம் செயல்கள் மற்றும் சிந்தனையின் ஒரு பகுதியாக மாறும், அது நம் ஒவ்வொரு பகுதியிலும் ஊடுருவுகிறது. மெய்யான பெலனும் குணமாக்குதலும் தேவனுடைய வார்த்தையின் பக்கங்களில் காணப்படுகின்றன. ரேச்சலைப் போலவே, உங்கள் தேவையின் போது உங்களுக்கு உதவத் தேவனின் வாக்குறுதிகள் உங்களில் ஒரு பகுதியாகவே மாறும் என்று நாங்கள் நம்புகிறோம். எனவே, உங்கள் சோதனைகள் மூலம், உங்கள் நீடியபொறுமை விசுவாசத்தின் சாட்சிக்கு ஏதுவாக மாறும், இது பிறருக்கும் பயத்தின் மீது வெற்றிபெற உதவுகிறது.