எஎல்லோரும் ஓய்வு எடுப்பதை விரும்புகிறார்கள். மணிநேரங்கள் அல்லது நாட்கள் முயற்சிக்குப் பிறகு ஒரு ஆழ்ந்த உறக்கம் நம்மை புத்துணர்ச்சியூட்டுகிறது; நம் எண்ணங்களை நேராக வைத்திருக்கிறது, மேலும் நமது மன மற்றும் உணர்ச்சி வடிகால்களை நிரப்ப உதவுகிறது. ஓய்வெடுக்க நேரமில்லாமல் நாம் வாழ்க்கையை வாழ முடியாது என்று கூறுவது கடினமல்ல; இது மிகவும் சரியான மிகவும் இயல்பான உணர்வு. ஆனால் ஓய்வென்பது இரவு தூக்கத்திற்கு அப்பாற்பட்டது.
திவ்ய இளைப்பாறுதலில், டாக்டர் ஏ. ஜே. சுவோபோடா ஓய்வுநாளை வேறுகோணத்தில் பார்க்கும்படி நம்மை ஊக்குவிக்கிறார். தேவன்தான் இதை உண்மையில் வடிவமைத்தார் மற்றும் இளைப்பாறக் கட்டளையிட்டார் என்று புரிந்து கொள்ள. ஓய்வுநாளைக் கடைப்பிடிப்பது என்றால் என்ன என்பதையும், நம் இடைவிடாத வாழ்க்கையிலிருந்து ஒரு நாளை ஒதுக்குவது ஏன் முக்கியம் என்பதையும் ஆராய்கிறார். தேவன் நம்மை வடிவமைத்தபடி வாழ்வோம், ஓய்வுநாளின் பரிசை ஏற்றுக்கொள்வோம்.
நமது அனுதின மன்னா ஊழியங்கள்
பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும் போது, பாட்டி, தாத்தா மற்றும் அம்மா சமையலறையில் நிற்பதைக் கண்டேன். எனக்கு வயது பத்து. அவர்களின் முகங்கள் நான் இதுவரை கண்டிராத ஒரு தனி ஒளியுடன் பிரகாசித்தது. ஒரே குழந்தையாக இருந்ததால், அவர்கள் என்னைப் பார்த்துச் சிலிர்த்துப் போனார்கள் என்று நினைத்தேன். எனக்கு பெருமையாக இருந்தது. சாப்பாட்டு அறை மேசையிலிருந்த செய்தித்தாள்களின் மேல் ஒரு சிறிய காகிதத்தை மெதுவாகக் காட்டினார்கள்.
அந்த சிறிய காகிதம் எல்லாவற்றையும் மாற்றியது.
இந்த கதை என் குடும்பத்தில் நன்கு அறியப்பட்டதாகும்: எனது தாத்தா, பாட்டி கலிபோர்னியாவிலிருந்து முந்தைய நாள் மாலை காரை ஓட்டிச் சென்றார்கள். ஒரேகான் எல்லையில் உள்ள ஒரு எரிவாயு நிலையத்தில் நிறுத்தி; சில தின்பண்டங்கள், எரிவாயு மேலும் அவர்கள் வழக்கம்போல ஒரு லாட்டரி சீட்டு வாங்கினார்கள். அதைப்பற்றி யோசிக்காமல், அதை சட்டைப்பையில் திணித்துக்கொண்டு வடக்கே பயணத்தைத் தொடர்ந்தனர். அன்று இரவு அவர்களது விடுதியில், தாத்தா அவர்கள் லாட்டரி பரிசு எண்களை அறிவிக்கும் செய்தியைப் பார்க்க விழித்திருந்தார். எண்கள் அறிவிக்கப்பட ஆரம்பித்தது, முதல் எண், பின் இரண்டாம் எண், பின் மூன்றாம் எண் என்று எல்லாம் ஒத்துப்போக, இப்போது என் தாத்தா தூங்கிக்கொண்டிருந்த பாட்டியை எழுப்பினார். அவள் கண்களை கசக்கிகொண்டே எழ, நான்காவது, ஐந்தாவது, ஆறாவது மற்றும் ஏழாவது எண்கள் பொருந்துவதை பார்த்தார்கள். எல்லா ஏழு எண்களும் பொருந்தின. ஆச்சரியத்தில் வாய் பிளந்தனர். தொலைக்காட்சித் திரையில் பொறிக்கப்பட்டிருந்ததைப் புரிந்து கொள்ள அவர்களின் மனம் போராடியது. கற்பனை செய்ய முடியாதது. சிந்திக்க முடியாதது. அவர்கள் எவ்வளவு வென்றார்கள்? இதன் பொருள் என்ன? தொகுப்பாளர் வெற்றித் தொகையை அறிவித்தார். அன்று இரவு, பாட்டியும் தாத்தாவும் கோடீஸ்வரர்கள் ஆனார்கள்.
தூக்கமில்லாத இரவுக்குப் பிறகு, அவர்கள் எங்கள் வீட்டிற்கு வந்து லாட்டரி சீட்டை எங்கள் சாப்பாட்டு அறை மேசையில் வைத்தார்கள். 46 லட்சம் எங்கள் குடும்பத்திற்கு அநேக வழிகளில் உதவியது. கடன்களை கட்டினோம், கோடை விடுமுறை பயணங்கள் சென்றோம், கல்வி கட்டணங்கள் செலுத்தினோம். ஆனால் கதை ஒரு இருண்ட பக்கத்தையும் கொண்டுள்ளது. நொடிப்பொழுதில் பேரின்பத்தை உருவாக்கிய ஒரு உயர்ந்த பரிசு, இறுதியில் குடும்பத்தில் சண்டை, சச்சரவு மற்றும் கோபத்திற்கு வழிவகுத்தது. கிட்டத்தட்ட ஐம்பது வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு, பாட்டி மற்றும் தாத்தா பிரிந்தனர். குடும்ப உறுப்பினர்கள் பேசுவதை நிறுத்தினர். மற்றும் ஒரு கடுமனையான கசப்பு மேலோங்கியது. நான் யாரையும் வெட்கப்படுத்த இந்தக் கதையை மீண்டும் கூறவில்லை. தேவனின் கிருபையால், எங்கள் குடும்பத்தில் குணப்படுதலும், நல்லிணக்கமும் துவங்கியுள்ளது. ஆனாலும் உண்மை இதுதான்; அத்தகைய பரிசை எவ்வாறு தக்கவைப்பது என்பது யாருக்கும் தெரியவில்லை.
பரிசை விட முக்கியமான விஷயம், அதை நாம் எப்படி கையாளுகிறோம் என்பதுதான். நாம் நம்பமுடியாத, கற்பனை செய்ய முடியாத ஒன்றைப் பெறுகிறோம்; ஆனால் அதை என்ன செய்வது என்று தெரியவில்லை. பரிசை அனுபவிப்பதை விட, நாம் அதை எதிர்த்துப் போராடுகிறோம். திராட்சைத் தோட்டத்திலும் இருந்த இப்பிரச்சனையைப் பற்றி இயேசு எச்சரிக்கிறார் (மத்தேயு 20:1-16). கதையின்படி, அறுவடைக் காலத்தில் வேலையில்லாத ஆண்களின் குழு மிகவும் தேவைப்படும் வேலைக்கு அமர்த்தப்படுகின்றது. அவர்களின் வேலை நாளுக்குப் பிறகு, மேலாளர் அவர்களுக்கு பேசப்பட்ட ஊதியத்தை செலுத்துகிறார். ஆனால் ஒரு நல்ல நாள் வேலை மற்றும் பணப்பையில் உள்ள பணம் இரண்டிலும் மகிழ்வதற்கு பதிலாக, மிகக் குறைவாக உழைத்த தொழிலாளர்களும் இதேபோன்ற தாராள தொகையை பெற்றதாக அவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். இந்த உவமை, இயேசுவைப் பின்பற்றும் பலர் தேவனின் கிருபையை வைத்து என்ன செய்கிறார்கள் என்பதை நிரூபிக்கிறது. உன்னதமான பரிசை அனுபவிப்பதற்குப் பதிலாக, அதற்குத் தகுதியற்றவர்கள் என்று நாம் என்னும் பிறரிடம் தேவன் காட்டும் பெருந்தன்மையான விளக்கத்தைக் கோருகிறோம்.
ஓய்வுநாள் என்பது நமக்கு எப்படிப் பெறுவது என்று தெரியாத ஒரு பரிசு.
செய்கிற, போகிற, மற்றும் உற்பத்தி செய்யும் உலகில்; நம்மை சற்று நிறுத்தும்படி அழைக்கும் ஒரு வெகுமதியை நாம் சிறிதும் மதிப்பதில்லை. ஆனால் அதுதான் உண்மையான பரிசு: ஓய்வு நாளின் பரிசு. மேலுமாக, உலகின் தொடக்கத்தில், தேவன் முழு சிருஷ்டிப்புக்கும் ஒரு பரிசை வழங்கியே முதல் வாரத்தை நிறைவு செய்கிறார். நிறுத்த, சுவாசிக்க, ஓய, அனுபவிக்க, களிப்புற. தேவன் அதற்கு “ஓய்வு நாள்” என்று பெயரிட்டார்.
அந்த ஓய்வு நாள் கனத்துக்குரிய மற்றும் அனுமதிக்கப்பட்ட அந்த நேரம் உலகின் தோற்றம் முதல் மனித சமுதாயங்கள் மற்றும் அனைத்து படைப்புகளையும் நிலைநிறுத்தி, போஷித்து வருகிறது. தேவனின் இன்னும் பல பரிசுகளைப் போலவே, இதையும் ஏற்றுக்கொள்வதற்கு நாம் போராடிக்கொண்டிருக்கிறோம். சபை வாழ்க்கையில், அதன் செல்லுபடியை பற்றி நாம் வாதிடுகிறோம். ஓய்வு நாள் எந்த நாளாக இருக்க வேண்டும் என்பதை விவாதிக்கிறோம். ஓய்வு நாளின் விதிமுறைகள் மற்றும் அதை ஏன் இனி தீவிரமாகக் கருத்தில் கொள்ள வேண்டியதில்லை என்பதற்காக நுணுக்கமான பகுத்தறிவு கோட்பாட்டுகளில் நாம் சிக்கிக் கொள்கிறோம். ஓய்வுநாளை குறித்த கருத்து வெறுப்பாடுகளை வைத்து சபை பிரிவுகளையும் தொடங்குகிறோம். உண்மையில் அதை அனுபவிக்கத் தெரிந்தவர்கள் நாம் மட்டுமே என்று நினைக்கிறோம். நாம் மீண்டும் மீண்டும் அதே வலையில் விழுகிறோம்; கேள்விகளை அனுபவிக்க தெரியாமல் இருப்பது, தேவனுக்கும் வசனங்களுக்கும் உண்மையாக இருக்க வேண்டும் என்ற நியாயமான அக்கறையால் உந்தப்பட்டிருக்கலாம், ஆனால் அவை பிளவுகளையும் அமைதியின்மையையும் உருவாக்கியுள்ளன.
எல்லாவற்றையும் சொல்லியும் செய்தும் முடித்தபின்னர், ஓய்வுநாளுக்கு நடந்த மிக மோசமான விஷயம் மதம். மதம் பரிசுகளுக்கு விரோதமானது. மதம் இலவச ஈவுகளை வெறுக்கிறது. தேவனின் நல்ல வெகுமதிகளை சுயமாக சம்பாதிக்க முயற்சிப்பதன் மூலம், மதம் அவற்றை வீணடிக்கிறது. அதனால்தான் நாம் மதம் என்பது சுயமாக சம்பாதிப்பது மட்டுமே என்று நாம் நினைக்கும் வரை புனிதமான ஓய்வு நாளை அனுபவிக்கவே மாட்டோம்.
இது ஒன்றும் புதிதல்ல; ஓய்வுநாளை விரோதித்தல் என்பது நீண்ட காலமாக சபையிலும் உலகதின் இரத்தத்திலும் ஊறியுள்ளது. ஜஸ்டின் மார்டையர் போன்ற பல ஆரம்பகால சபை தலைவர்கள் ஓய்வு நாளை யூதர்களுக்கான தண்டனையாகவே பார்த்தனர். அவர்களின் சீரழிவை நினைவூட்டுவதற்கு கீழ்ப்படிதலுக்கான ஒரு நாள் தேவைபட்டது என்று அவர் நம்பினார். ஆனால் ஓய்வு நாள் ஒரு தண்டனையா? மற்றவர்கள் அதை முற்றிலுமாக நிராகரித்தனர். பழமையானது, தேவையற்றது, இக்கால பரிசீலனைக்கு தகுதியற்றது என்று அதை புறக்கணித்து தள்ளுகின்றனர். இன்னும் மற்றவர்கள் அதை தங்கள் இலட்சியதிற்கான இடைஞ்சலாகவோ அல்லது சாத்தியமற்ற பழக்கமென்றோ நிராகரிக்கிறார்கள். “எல்லாம் சரி, ஓய்வு நாளிற்கு யாருக்கு நேரம் இருக்கிறது?” என்று கேட்கிறார்கள். “நான் இறக்கும் போது இளைப்பாறுவேன். அதாவது, பிசாசு ஒருபோதும் ஓய்வதில்லையெனில் , நான் ஏன் ஓயவேண்டும்?” என்கிறார்கள்.
ஆனால் இந்த வெற்று கருத்துக்கள் வேதத்தை விட மனித பகுத்தறிவை அடிப்படையாகக் கொண்டவை. நமது வேகமான, வேலையில் மூழ்கி, உற்பத்தி வெறி நிறைந்த உலகில், ஓய்வுநாள் என்பது பொருந்தாத ஒன்றாகவே தோன்றுகிறது. ஆயினும், ஓய்வுநாளை குறித்து நமக்கு சந்தேகம் இருந்தாலும் ; அத்தகைய அலட்சியத்தை வேதமோ, இயேசுவோ அல்லது சபை வரலாற்றின் பெரும்பகுதியோ நமக்கு அறிவிக்கவில்லை. தேவனின் கதை அடிப்படையில் ஒரு நாள் ஓய்வுக்கான எளிய பரிசைப் பற்றிய கதை.
“திரியேக தேவன் மீதான நம்பிக்கையின் மூலம் நமக்குக் வழங்கப்பட்ட ஆன்மீக வளங்கள்தான் இருப்பதிலேயே சிறந்த பொக்கிஷங்கள்” என்று மார்வா டான் எழுதியுள்ளார். ஓய்வு நாள் அத்தகைய ஒரு பொக்கிஷம். நமது பிரச்சனை? ஓய்வு நாளை என்ன செய்வது என்று தெரியவில்லை. ஓய்வு நாளின் பரிசைப் புரிந்துகொள்வது, அதை நாம் எவ்வாறு ஏற்றுக்கொள்வது, அதைப் பெறுவதால் அது உலகிற்கு என்ன செய்கிறது என்பதைப் புரிந்துகொள்வதுதான் இந்தக் கட்டுரையில் வருகிறது.
வேதாகமத்தின் பொக்கிஷங்கள் பிரகாசிக்கும் மகிமையுடன் கூடிய ஓய்வு நாளைப் பற்றி பேசுகின்றன; நமது வாழ்வையே மாற்றும் ஆற்றலைக் கொண்ட ஒரு பரிசை நமக்கு வழங்குகிறது. இந்தக் கட்டுரையில், ஓய்வுநாளைப் பற்றி வேதம் பயன்படுத்தும் நான்கு வார்த்தைகள் அல்லது சொற்றொடர்களை எடுத்துரைக்க விரும்புகிறேன்; அவை அதன் முக்கியத்துவத்தை மட்டுமல்ல, நம் வாழ்க்கையையும் நம் உலகத்தையும் மாற்றியமைப்பதில் அதன் ஆற்றலையும் பார்க்க உதவுகிறது.
ஓய்வு நாள். அப்படியென்றால்தான் என்ன?
மனிதகுலத்தை உருவாக்கிய பிறகு, தேவன் கொடுக்கும் முதல் பரிசு ஓய்வு நாளின் பரிசு. அதற்கு என்ன அர்த்தம்? இங்குதான் நாம் ஒரு வேதாகம வார்த்தையான “சப்பாத்”-ஐ நேருக்கு நேர் சந்திக்கிறோம். எபிரேய மொழியில், இந்த வார்த்தைக்கு “நிறுத்து, நில் அல்லது மெதுவாக” என்று பொருள். இது மற்றொரு எபிரேய வார்த்தையான “மெனுஹா”வுடன் இணைக்கப்பட்டுள்ளது; இது வெறுமனே “ஓய்வு” என்று பொருள்படும். இரன்டும் ஒரே யதார்த்தத்தை குறிக்கிறது. வேலை, உற்பத்தித்திறன், குவிப்பு அல்லது கட்டுப்பாடு போன்றவை இல்லாமல் செய்யப்பட்ட தனிமையான இடம்.
சப்பாத் என்ற வார்த்தை எனக்கு மிகவும் பிடிக்கும். சப்பாத் என்ற வார்த்தையை நான் கேட்கும்போதெல்லாம், அமைதியாய் இருக்க அழைப்பதைப்போல இருக்கும் “ஷ்ஷ்” என்று தொடங்கும் வார்த்தையை என்னால் கேட்காமல் இருக்க முடியாது. இது அமைதியான, யாராலும் மேற்கொள்ளமுடியாத தேவனின் காலத்திற்கான அழைப்பாகும்; அங்கு அவரே ஆண்டவராக இருக்கிறார், அவருடைய ஆளுகையின் கீழ் நாம் இளைப்பாறுகிறோம். ஓய்வுக்கான கட்டளை வேதத்தின் கதையோட்டத்தில் ஆதியாகமம் 1-2 இல் உடனடியாக வருகிறது. ஆறு நாட்களுக்குப் பிறகு, தேவன் தான் சிருஷ்டித்த அனைத்தையும் பார்த்து, “நல்லது” என்று அழைத்து, இவ்வாறு அறிவித்தார்…
♦ தேவன் தாம் செய்த தம்முடைய கிரியையை ஏழாம் நாளிலே நிறைவேற்றி, தாம் உண்டாக்கின தம்முடைய கிரியைகளை எல்லாம் முடித்தபின்பு, ஏழாம் நாளிலே ஓய்ந்திருந்தார். தேவன் தாம் சிருஷ்டித்து உண்டுபண்ணின தம்முடைய கிரியைகளையெல்லாம் முடித்தபின்பு அதிலே ஓய்ந்திருந்தபடியால், தேவன் ஏழாம் நாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார். (ஆதியாகமம் 2:2–3) ♦
சிருஷ்டிப்பின் நிகழ்வை விளக்கும் இந்தப் பகுதியின் இரண்டு கூறுகளைக் கவனியுங்கள். முதலாவதாக, ஏழு நாட்களைச் சுற்றி தேவன் நேரத்தை ஒழுங்குபடுத்தி கட்டமைத்திருப்பதைக் கவனியுங்கள். தேவன் ஏழு நாள் வாரத்தை உருவாக்குகிறார். அதாவது, ஏழு நாட்களின் கட்டமைப்பு தெய்வீக நோக்கத்துடன் நிறைந்துள்ளது. திருச்சபையின் முற்பிதாக்கள் (சிசேரியாவை சேர்ந்த பேசில் போன்றவர்கள்) கூறியதை எதிரொலிக்கும் இறையியலாளர் கொலின் கன்டன், ஏழு நாட்களை வரிசைப்படுத்துவது தற்போதைய நேரத்திற்கும் நித்தியத்திற்கும் இடையே ஒரு தனித்துவமான உறவை நிறுவுகிறது என்று வாதிடுகிறார். அதாவது, தேவன் வசிக்கும் நித்தியத்தின் சாம்ராஜ்யத்திற்கு மாறாக, ஏழு நாள் வாரம் தேவனால் உருவாக்கப்பட்டது.
சொன்னது போல், காலம் என்பது அனைத்தும் ஒரே நேரத்தில் நிகழாமல் வைத்திருப்பதற்கான தேவனின் வழியாகும். அதனால்தான் யூத அறிஞரான ஆபிரகாம் ஹெஷெல் ஓய்வு நாளை “நித்தியம் உதிர்க்கும் ஒரு நாள்” என்று அழகாக விவரிக்கிறார்.
ஓய்வு நாள் என்பது நமது தற்கால, அநித்தியமான உலகில் வெளிப்படும் நித்திய மகிமையின் ஒரு தருணம். சிலர் மிக எளிதாகக் கருதுவது போல், வேதாகமத்தில் வலியுறுத்தப்படுவது சிருஷ்டிப்பின் காலம் அல்ல, ஆனால் காலத்தின் சிருஷ்டிப்பு. ஏழு நாள் வாரம் என்பது தேவனின் அதிபுத்திசாலித்தனமான படைப்பு; இதை ஒரு கவிஞர், “எபிரேய மனதின் மிகவும் புத்திசாலித்தனமான படைப்பு” என்று அழைக்கிறார்.
மனித வேலையையும், மனித ஓய்வையும் சமநிலையில் வைத்திருப்பதற்கான தேவனின் வழிமுறைதான் இந்தக் கட்டளை. வாசகத்தை மனதில் வையுங்கள்; ஒவ்வொரு வாரமும் ஒரு நாள் ஓய்வு மற்றும் ஆறு நாட்கள் வேலை செய்ய தேவன் கட்டளையிடுகிறார். எனவே அந்த கட்டமைப்பில், இந்த கட்டளை ஓய்வெடுப்பதற்கான அழைப்பு மற்றும் வேலை செய்வதற்கான அழைப்பாகும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். சிலருக்கு, ஓய்வுநாள் கட்டளை குறைவாக வேலை செய்வதற்கான அழைப்பாக இல்லை, ஆனால் உண்மையில் அதிகமாக வேலை செய்ய வேண்டும். துரதிர்ஷ்டவசமாக, சில தலைமுறைகள் வேலைப்பளுவை நோக்கியும், மற்றவை சோம்பேறித்தனத்தை நோக்கியும் பயணிக்கின்றன. சமநிலையே தேவை. ஆறு நாட்கள் வேலை, ஒரு நாள் ஓய்வு.
இரண்டாவதாக, ஏழு நாள் கால ஸ்வரத்தில் ஓய்வுக்கான மிகத் தெளிவான ஸ்வரமானது இந்த வார கட்டமைப்பில் இருப்பதைக் கவனியுங்கள். ஏழு நாளில் ஒரு நாள் இளைப்பாறுதல், நிறுத்துதல், மகிழ்தல் மற்றும் தேவனுடன் இருப்பதற்காகக் கொடுக்கப்பட வேண்டும். ஒவ்வொரு வாரமும் ஒரு நாள் ஓய்வுக்காக ஒதுக்க வேண்டும். ஆகவே தேவனை மையப்படுத்துதல்; கொலை, விபச்சாரம், விவாகரத்து, பொய், தவறான உறவு , கற்பழிப்பு, பொறாமை மற்றும் குழந்தை பலி ஆகியவற்றிற்கு எதிரான கட்டளைகளுக்கு முன்பாக வேதத்தில் பிரதானமாக்கப்பட்ட கட்டாய நெறிமுறையாகும். நாம் ஏன் ஓய்வு நாளை அனுசரிக்கிறோம்? ஆதியாகமம் சொல்கிறது நாம் ஓய்வு நாளை அனுசரிக்கிறோம் ஏனெனில் முதலாவதாகத் தேவன் ஒரு ஓய்வு நாளை அனுசரித்தார். இரண்டாவதாக, சிருஷ்டிப்பின் அணுவிலேயே தேவன் ஓய்வு நாளை இணைத்திருப்பதால், அது சிருஷ்டியின் வளர்ச்சிக்குத் தேவையான ஒன்று.
புதிய ஏற்பாடும் ஓய்வு நாளைகுறித்து தொடர்ந்து போதிக்கையில், பவுல் புதிய உடன்படிக்கையின் ஜனங்களை அந்த குறிப்பிட்ட நாளிலிருந்து விடுவிப்பது போல் தோன்றுகிறது. தேவன் நமக்குப் பரிசாகக் கொடுத்த ஒன்றை வெட்கம் அல்லது குற்ற உணர்வின் கருவியாக மாற்ற ஒருபோதும் எண்ணவில்லை. ஓய்வுநாள் நமக்கானது. நாம் ஓய்வுநாளுக்காக இல்லை. இந்த யதார்த்தத்தில் நாம் சுதந்திரத்தையும் மகிழ்ச்சியையும் அனுபவிக்க முடியும். “ஆகையால், போஜனத்தையும் பானத்தையும் குறித்தாவது, பண்டிகைநாளையும் மாதப்பிறப்பையும் ஓய்வுநாட்களையுங்குறித்தாவது, ஒருவனும் உங்களைக் குற்றப்படுத்தாதிருப்பானாக” (கொலோசெயர் 2:16) என்ற பவுலின் வார்த்தைகளை நினைவுகூருங்கள். நியாயந்தீர்க்க வேண்டாம் நண்பரே. நினைவில் கொள்ளுங்கள், இயேசுவைத் தவிர வேறு யாரும் ஓய்வு நாளைச் சரியாகக் கடைப்பிடிக்கவில்லை. கிருபை இருக்கிறது. முடிவில்லா கிருபை. நாம் செய்ய வேண்டியதெல்லாம் ஓய்வுநாளுக்குள் நுழைவதற்கு “எல்லா முயற்சிகளையும்” செய்ய வேண்டும். புதிய ஏற்பாட்டில் உள்ள இந்த அடிப்படையான கருத்து ஒரு குறிப்பிட்ட நாளைப் பற்றியது அல்ல, மாறாக நாம் கிறிஸ்துவின் இளைப்பாறுதலுக்குள் பிரவேசிக்கத் துவங்குவதே காரியம்.
தேவன் நம்மை ஓய்வுநாளுக்கு அழைப்பதால், ஓய்வு நாள் நமக்காக “கிரியை” செய்ய முடியாது என்று நினைக்க நாம் தூண்டப்படலாம். “ஒரு நாள் முழுவதும் ஓய்வெடுக்க எனக்கு நேரம் இல்லை,” என்று மக்கள் என்னிடம் பல ஆண்டுகளாகக் கூறியுள்ளனர். இருப்பினும், வேதத்தில் இது அப்படி இல்லை. வாரத்தில் ஒரு நாள் ஓய்வெடுப்பது உண்மையான மனிதத்தன்மையாகவும், ஓய்வெடுக்காமல் இருப்பது மனிதத்தன்மையற்றதாகவும் இருக்கும் என்று வேதாகமம் சொல்கிறது. மனிதர்கள் ஓய்வெடுக்க வைக்கப்பட்டனர். ஓய்வெடுக்க நேரம் இல்லை என்று நாம் கூறும்போது, ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்ட ஒன்றுக்கு நேரத்தைப் புதிதாகக் கண்டுபிடிக்க முடியாது. டீட்ரிச் போன்ஹோஃபர் ஒருமுறை எழுதியது போல், தேவனுக்கு, கட்டாயம் என்பது அடையாளமாகும். அதாவது, தேவன் நமக்குக் கட்டளையிடும் ஒன்று, தேவன் யார் என்பதைக் குறித்து நமக்கு ஒன்றைச் சொல்கிறது. தேவன் நம்மை ஓய்வெடுக்க அழைக்கிறார். மேலும் தேவன் ஓய்வெடுக்கிறார். நாம் தேவனை விட வலிமையானவர்களா அல்லது புத்திசாலிகளா அல்லது சிறந்தவர்களா? சிருஷ்டிப்பின் சம்பவங்கள் நமக்கு நினைவூட்டுவது போல, ஓய்வின் தேவை பிரபஞ்ச அமைப்பின் மரபணுவில் கட்டமைக்கப்பட்டுள்ளது. மேலும் இதை அசட்டைசெய்தல் என்பது, மனிதக்குலம் முழு பிரபஞ்சத்தையும் மரபணு மாற்றம் செய்ய முயல்வது போன்றது.
அண்டசராசரத்தின் தேவனாகிய நமது தேவன் மிக நல்ல படைப்பாக வாரத்தை உருவாக்கியுள்ளார். ஆனால் அதேபோல, தேவன் ஓய்வு நாளாக இருக்கும்படி அந்த வாரத்திற்குள் ஒரு நாளைப் படைத்தார். எவ்வளவு அழகாக இருக்கிறது? வார இறுதியைக் கண்டுபிடித்த தேவனைத்தான் நாம் உண்மையில் ஆராதிக்கிறோம்!
ஓய்வு நாள். அப்படியென்றால் தான் என்ன?
மனிதகுலத்தை உருவாக்கிய பிறகு, தேவன் கொடுக்கும் முதல் பரிசு ஓய்வு நாளின் பரிசு. அதற்கு என்ன அர்த்தம்? இங்குதான் நாம் ஒரு வேதாகம வார்த்தையான “சப்பாத்”-ஐ நேருக்கு நேர் சந்திக்கிறோம். எபிரேய மொழியில், இந்த வார்த்தைக்கு “நிறுத்து, நில் அல்லது மெதுவாக” என்று பொருள். இது மற்றொரு எபிரேய வார்த்தையான “மெனுஹா”வுடன் இணைக்கப்பட்டுள்ளது; இது வெறுமனே “ஓய்வு” என்று பொருள்படும். இரன்டும் ஒரே யதார்த்தத்தை குறிக்கிறது. வேலை, உற்பத்தித்திறன், குவிப்பு அல்லது கட்டுப்பாடு போன்றவை இல்லாமல் செய்யப்பட்ட தனிமையான இடம்.
எங்கள் குடும்பம் யூத குடும்பம் அல்ல. மேலும் எங்கள் பாடல் மிகவும் எளிமையானது. நாங்கள் சப்பாத் ஷாலோம் அல்லது “சப்பாத் சமாதானம்” என்ற பாடலைப் பாடுகிறோம். குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரின் பெயரையும் வைத்துப் பாடுவோம்.
“ஏ.ஜே.” வுக்கு சப்பாத் ஷாலோம்
“க்வின்” னுக்கு சப்பாத் ஷாலோம்
“எலியட்” டுக்கு சப்பாத் ஷாலோம்
எங்களிடம் பன்னிரண்டு கோழிக்குஞ்சுகள் உள்ளன, அவற்றையும் பாடலில் பெயரிடுவது வழக்கம். பின்னர் நாங்கள் ஒரு பெரிய விருந்தை உண்டு, ஒன்றாகப் புத்தகங்களை வாசித்து, படுக்கைக்குச் செல்வோம். காலையில் எழுவோம். ஓய்வு நாளின் காலையில் எங்களுக்கு இரண்டு விதிகள் உள்ளன. முதலில், யாரும் தங்கள் படுக்கையை மடிப்பதில்லை. இரண்டாவது, பான்கேக். பான்கேக் எங்கள் ஓய்வு நாளுக்கு இன்றியமையாதது. க்வின் தூங்கும்போது, நான் அடிக்கடி எலியட்டுடன் சீக்கிரம் எழுந்து, மிகப்பெரிய பான்கேக்கை நாங்கள் ஒன்றாக உருவாக்குவோம். எதிரில் உட்கார்ந்து, அவன் எனக்கு மாவைக் கிளற உதவுவான். பின்னர் நாங்கள் அவற்றைச் சமைப்போம். எலியட் எவரையும் குறித்துக் கவலைப்படாமல் தனக்கே மொத்த சிரப்பையும் ஊற்றிக்கொள்வான் (சில சமயங்களில் அவனுக்கு ஏதோ பிரச்சனை இருக்குமோவென நான் கவலைப்படுகிறேன்). பிறகு சாப்பிடுவோம். இது ஒரு பான்கேக் விருந்து; கேக்குகள், பன்றி இறைச்சி, முட்டைகள், கூடுதல் தேன் கலந்த காபி.
எனது குடும்பத்தின் ஓய்வு நாள் முறைமைக்கு பான் கேக் அவசியம். சில யூத தகப்பன்மார்கள், ஓய்வுநாளின் காலையில், தங்கள் குழந்தைகளுக்கு ஒரு சிறிதளவு தேன் கொடுப்பார்கள் என்று ஒரு முறை படித்துள்ளேன். இதின் கருத்து எளிமையானது; அவர்கள் வாழ்நாள் முழுவதும் ஓய்வு நாளின் இனிமையை எப்போதும் நினைவில் வைத்திருப்பார்கள். இது ஆரம்பக்கால கிறிஸ்தவர்கள் திருவிருந்தைப் பால் மற்றும் தேனுடன் எடுத்துக் கொண்டதைப் போன்றது. கிறிஸ்துவில் அவர்கள் வாக்களிக்கப்பட்ட தேசத்திற்கு வந்துவிட்டார்கள் என்பதை அவர்களுக்கு நினைவூட்டுவதற்காகவே இந்த குறியீடு இருந்தது. அதுதான் என் நம்பிக்கை; நான் மரித்த பின்னர், என் மகன் வளர்ந்து பெரியவனான பிறகு, யாராவது என் மகனைச் சுற்றி ஓய்வு நாள் என்று கிசுகிசுத்தால் கூட அவன் அதை ரசித்து ருசிப்பான். பிடித்தமான உணவை நினைத்த மாத்திரத்தில் நாக்கில் எச்சில் ஊறுவதுபோல.
நமக்கு ஓய்வு தேவை. ஆனால் நாம் ஓய்வை நினைவுகூரக் கற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் அதற்கு மாறாகத்தான், பல சம்பவங்கள் நிகழும்; செய்ய வேண்டிய பணிகள் பலவாகும்; வாழ்க்கையில் நிறையக் காரியங்கள் நடக்கும்; நம் கவனம் சிதறும்; நாம் நமது நாட்களை அதிகபட்சமாகவே திட்டமிடுவோம்; விருப்பத்தோடும் நோக்கத்தோடும் இருத்தல் உண்மையான ஓய்வின் ஒரு பகுதி என்பதை அதற்கான ஆயத்த நாள் மெதுவாக நமக்கு நினைவூட்டுகிறது. இதைக் கவனியுங்கள்: வேதத்தில் முதன்முறையாக ஓய்வு நாள் (சாப்பாத்) பெயர் குறிப்பிடப்படுவது யாத்திராகமம் 20:8 இல் உள்ளது. அங்கு, “ஓய்வுநாளைப் பரிசுத்தமாய் ஆசரிக்க நினைப்பாயாக” என்று இஸ்ரவேலுக்குக் கட்டளையிடப்பட்டது. “பரிசுத்தமாக ஆசரித்தல்” என்றால் என்ன?
ஆபிரகாம் ஹெஷெல் இதை இவ்வாறு விளக்குகிறார், ஒன்றைப் பரிசுத்தமாய் ஆசரித்தல் அல்லது சுத்திகரித்தல் என்பது (எபிரேயத்தில் லெ-காதேஷ்) திருமணத்திற்கு தயாராவதைப் போன்ற ஒரு ஆயத்த உணர்வைக் குறிக்கிறது. இன்னும் குறிப்பாக, “ஆசரித்தல்” என்ற வார்த்தை பெரும்பாலும் ஒரு மணமகள் தனது திருமண நாளுக்குத் தயாராகி வருவதை விவரிக்கப் பயன்படுத்தப்படுகிறது. “ஆசரித்தல்” என்பது “நிச்சயித்தல்” ஆகும். உண்மையில், யூதர்கள் ஓய்வு நாளை ஒரு “மணமகள்” மற்றும் “ராணி” என்று சொல்வார்கள். நாம் அவளுடைய நேசர், ஆனால் நாம் அவளால் ஆளவும் படுகிறோம். ஒரு ஆண் தன் மணவாட்டிக்காகத் தன்னை எவ்வாறு தயார் செய்கிறான்? ஒரு விருந்து, ஒரு வசிப்பிடம், பின்னர் தன்னையே அவளுக்குத் தயாராக்குகிறான். ஒரு அரசி உங்கள் வீட்டிற்கு வந்தால் என்ன செய்வீர்கள்? வீட்டை ஆயத்தம் செய்வீர்கள். இவ்விரண்டிலும் ஆயத்தமே காரியம்.
இது மிகவும் குறிப்பிடத்தக்கது; யாத்திராகமம் 20இல் உள்ள பத்துக் கட்டளைகளைப் பார்க்கும்போது, “நினைப்பாயாக” என்ற வார்த்தையுடன் ஒரே ஒரு கட்டளை மட்டுமே உள்ளது. “நினைப்பாயாக” என்று கொலைக்கு எதிரான கட்டளையில் கூறப்படவில்லை. விபச்சாரத்திற்கு எதிரான கட்டளையிலும் இல்லை. உருவ வழிபாட்டுக்கு எதிரான கட்டளையிலும் இல்லை.
ஓய்வுநாளின் கட்டளை ஒன்றே நாம் நினைவுகூரும்படி கட்டளையிடப்பட்டுள்ளோம். அவர் எதைக் குறித்துப் பேசுகிறார் என்று தேவன் அறிந்திருந்தார் போலும். ஏன்? பத்தில் இதைத்தான் நாம் எளிதில் மறந்துவிடுவோம் என்று அவர் அறிந்திருந்தார். உண்மை என்னவெனில்; அடிப்படையில் நாம் மறந்துவிட்டோம். அனைத்து நோக்கங்கள் மற்றும் குறிக்கோள்களுக்காக, ஓய்வுநாள் பற்றிய நான்காவது கட்டளையின் செல்லுபடியை மற்றும் அதின் நெறிமுறை முக்கியத்துவத்தைச் சபை நம்புவதில்லை. நாம் அடிப்படையில் ஒன்பது கட்டளைகள், ஒரு வலுவான ஆலோசனை உள்ளதென்றே நம்புகிறோம்.
ஓய்வு நாளை கடைப்பிடிப்பதன் ஒரு பகுதி, உண்மையில் அதை நினைவில் வைத்திருப்பதாகும். அதை நம் மனதில் பதிய வைப்பதாகும். “செழிப்பு மறதியை வளர்க்கிறது” என்று வால்டர் ப்ரூக்மேன் வலியுறுத்துகிறார், அதாவது, தாங்கள் விரும்பும் அனைத்தையும் வைத்திருப்பவர்களே பெரும்பாலும் ஓய்வுநாளின் முக்கியத்துவத்தைப் புறக்கணிப்பதில் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். வங்கிக் கணக்கு நிரம்பியதும், குளிர்சாதனப் பெட்டியில் ஏராளமாக உணவு இருக்கையில், வியாபாரம் பெருகுகையில், நிதிநிலை உயர்கையில், அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பதாக தோன்றுகையில், நம் வாழ்க்கை இருக்குபடியே நீடிக்க ஆசைப்படுகிறோம். அதனால் எல்லாம் நன்றாக இருக்கையில் ஓய்வு நாளை மறந்து விடுகிறோம்.
ஆனால் நாம் அதைச் செய்யும்போது, ஓய்வுநாளின் கட்டளையின் மையக் கருத்தான நினைவுகூருதல் என்பதைக் கடைப்பிடிக்கத் தவறிவிடுகிறோம்.
ஓய்வு நாளை நினைவுகூரும் எளிய செயல் நம் மனதை மாற்றுகிறது. நம் மனதுக்கும், உடலுக்கும், ஆன்மாவுக்கும் ஒரு நாள் ஓய்வு கொடுக்காததால் அடிக்கடி மனச்சோர்வடைகிறோம். ஓய்வு நாளை நினைவருகூறுதல் நம்பிக்கையைத் தருகிறது. அதைக் கற்பனை செய்தல், அதை எதிர்பார்த்தல்; நமக்கு ஒரு மாற்றம் வரப்போகிறது என்று தெரிந்தால் வாழ்க்கை மிகவும் சிறப்பாக இருக்கும். ஓய்வு நாளை நினைவுகூரும் செயலில் ஆழ்ந்த மகிழ்ச்சி இருக்கிறது.
அந்த பான் கேக்குகளின் வாசனை நீங்காதிருப்பதாக!
தேவனே நன்மையானவற்றை உருவாக்குகிறார்.
சாய்வு எழுத்து அல்லது தடித்த எழுத்து போன்ற நுட்பங்களைப் பயன்படுத்துவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே, ஒரு கருத்தை முன்னிலைப்படுத்த பண்டைய ஆசிரியரின் இலக்கிய கருவியாக இருந்தது அக்கருத்தை மீண்டும் மீண்டும் கூறுவதே. எனவே வேதத்தின் ஆசிரியர்கள் எதையாவது திரும்பத் திரும்பச் சொல்வதன் மூலம் தங்கள் கருத்தை வெளிப்படுத்துவார்கள். இந்தக் காரணத்தினாலேயே படைப்பின் சம்பவத்தில், தேவன் தான் செய்த எல்லாவற்றையும் நன்மையென்று அறிவிப்பதை மீண்டும் மீண்டும் சித்தரிக்கிறது. “அது நல்லதென்று . . . . அது நல்லதென்று அது மிகவும் நல்லதென்று” (ஆதியாகமம் 1:4, 10, 12, 18, 21, 25, 31). இது ஏதோ தற்பெருமையாக, சுய-வாழ்த்து வர்ணனையாகத் தோன்றலாம், உண்மையில் தேவன் தனது சிருஷ்டிப்பின் மகத்துவத்தைத் தானே அங்கீகரிப்பதன் மூலம் நாம்தான் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். தான் படைத்தது மதிப்புமிக்கது, சரியானது, நல்லது என்பதை அவர் நன்கு அறிவார். ஒவ்வொரு முறையும் இந்தப் பல்லவியைத் திரும்பத் திரும்பச் சொல்வதன் மூலம், இந்த உலகம் அடிப்படையில் நன்மையாகவே சிருஷ்டிக்கப்பட்டுள்ளது என்பதை வேதாகம ஆசிரியர் தெளிவுபடுத்துகிறார். படைப்பின் உள்ளார்ந்த நற்குணம் ஓய்வு நாள் வாழ்வின் ஒரு முக்கியமான நடைமுறையைப் பற்றிப் பேசுகிறது; தேவன் உருவாக்கிய நன்மையைப் பற்றிச் சிந்திக்கவும், அதில் மகிழ்ச்சியடையவும் வேண்டிய மனிதக்குலத்தின் அவசியமே அது.
ஒருமுறை, கடவுள் நம்பிக்கையில்லாத ஒரு நண்பருடன் என் நம்பிக்கையைப் பகிர்ந்துகொண்டபோது, தேவன் உண்டென்பதற்கான எனது மிகப்பெரிய வாதத்தை முன்வைக்க வேண்டியிருந்தது. நான் ஒரு எளிய வார்த்தையை உச்சரித்தேன், “மாம்பழங்கள்”. நான் ஏதோ ஒரு மாம்பழத்தைப் பற்றி மட்டும் பேசவில்லை. நான் புதிய, பழுத்த, மரத்திலிருந்து புதியதாய் பறிக்கப்பட்ட, சாப்பிட்ட உடனே சட்டை மாற்றவேண்டும் என்னளவிற்குக் கனிந்த மாம்பழங்களைப் பற்றிப் பேசினேன். மாம்பழங்கள்; தேவன் இருக்கிறார் என்பதற்கான எனது மிகப்பெரிய வாதம் என்று நான் விளக்கினேன். ஒரு மாம்பழம் சாப்பிட்டுவிட்டு, இது ஒரு முட்டாள் கண்டுபிடித்த உலகம் என்று முகத்துக்கு நேராகச் சொல்ல முடியாது. அல்லது மிகவும் சுவையான ஒன்று எங்கிருந்து வரக்கூடும்? சிருஷ்டிப்பு நல்லது. ஏன்? ஏனென்றால் தேவன் நல்லவர். மேலும் அவருடைய நற்குணம் அவர் செய்வதில் பிரதிபலிக்கிறது. ஒரு மாம்பழம், படைப்பின் ஒரு பகுதியாக, மனிதக்குலத்திற்கான தேவனின் அன்பு மடல்.
எனது வீட்டருகே பாலிவுட் தியேட்டர் என்ற இந்திய உணவகம் உள்ளது. ஒருமுறை உள்ளூர் வேதாகம பயிற்சி வகுப்பின் இறையியலாளர் டோட் மைல்ஸுடன் மதிய உணவிற்குச் சென்றேன். உங்களுகளை கொஞ்சம் ருசி பார்த்த அவர், “ஏ.ஜே., உணவைப் பற்றி நினைக்கும் போது, உணவு இவ்வளவு நன்றாக இருக்க வேண்டியதில்லை!” என்றார். இது ஆதியாகமத்தின் முதல் இரண்டு அத்தியாயங்களின் ஆய்வறிக்கை என்று ஒருவர் தாராளமாகச் சொல்லலாம். ஒரு நல்ல தேவன், ஒரு நல்ல படைப்பை உருவாக்குகிறார். சிருஷ்டிப்பு மோசமானதல்ல. சிருஷ்டிப்பு “பரவாயில்லை” என்பது அல்ல. சிருஷ்டிப்பு மிக நல்லது. மார்ட்டின் லூதரின் வார்த்தைகள் இதை எதிரொலிக்கின்றன: “தேவன் சுவிசேஷத்தை வேதாகமத்தில் மட்டும் எழுதவில்லை, ஆனால் மரங்களிலும், பூக்கள் மற்றும் மேகங்கள் மற்றும் நட்சத்திரங்களிலும் எழுதுகிறார்.” லூதர் இப்பொழுது இருந்திருந்தால் மாம்பழங்களையும், இந்தியர்களின் குழம்பையும் சேர்த்தே சொல்லியிருப்பார். அவருடைய நற்குணத்தால், இவ்வளவு நல்லதாக இருக்க வேண்டிய அவசியமில்லாத உணவை நமக்குக் கொடுப்பதில் தேவன் மகிழ்ச்சியடைகிறார். பின்னரும், அவருடைய நற்குணத்தை நாம் புரிந்து கொள்ளவில்லை என்றாலும், அவர் நற்சுவைகளை நமக்கு வழங்க முடிவு செய்கிறார்.
நற்செய்தி யாதெனில், மாம்பழம் மற்றும் இந்திய உணவுகள் எல்லாம் வரவிருக்கும் நல்ல உலகத்தின் முன்சுவை மட்டுமே. பழைய ஆங்கில இரத்த சாட்சியான ஜான் பிராட்ஃபோர்டின் இறுதி வார்த்தைகளைக் கவனியுங்கள், அவர் கழுமரத்தில் இறக்கும் போது, “படைப்பைப் பாருங்கள்; அனைத்தையும் பாருங்கள்! இது தேவன் தம் சத்துருக்களுக்குக் கொடுத்த உலகம்; அவர் தனது சிநேகிதர்களுக்கு தரப்போகும் உலகைக் கற்பனை செய்து பாருங்கள்” என்றார். பிராட்ஃபோர்டின் கருத்துப்படி, பரலோகத்திலுள்ள “மாம்பழங்களையோ அல்லது இந்திய உணவையோ” நாம் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாது. தேவனின் இந்த நல்ல உலகம் மகிழ்ச்சியான உலகம்; இது வரவிருக்கும் கம்பீரமான, கற்பனை செய்ய முடியாத உலகத்தின் முன்னோட்டத்தை மட்டுமே வழங்குகிறது. அது நன்மை மற்றும் ஆசீர்வாதம், மகிழ்ச்சி மற்றும் தாராள மனப்பான்மை, மேலும் நிச்சயமாக மகிமையான இளைப்பாறுதல் நிறைந்த உலகம். ஓய்வு நாள் என்பது தேவனையும், நமக்கு அனுப்பப்பட்ட அனைத்து அன்பு மடல்களையும் குறித்துச் சிந்திக்கும் ஒரு நாளேயன்றி வேறென்ன? ஓய்வு நாள் என்பது ஒரு கொண்டாட்டம்; இது சிருஷ்டிப்பிலுள்ள நன்மையைக் குறித்தும்; அதை சிருஷ்டித்தவரை குறித்தும் களிகூருவதற்கான நாள்.
இப்போது, சிருஷ்டிப்பின் நிகழ்வில் தேவன் உருவாக்கிய அனைத்தும் “நல்லது”. ஆனால் சிருஷ்டிப்பின் நிகழ்வில் “பரிசுத்தம்” என்று ஒன்று மட்டுமே உள்ளது. சிருஷ்டிப்பின் நிகழ்வில் தேவன் “கடோஷ்”அல்லது பரிசுத்தமென்று கருதும் ஒரே விஷயம், ஓய்வு நாள். பூமி, ஆகாயம், நிலம், நட்சத்திரங்கள், விலங்குகள், மனிதர்கள் கூட பரிசுத்தம் என்று குறிப்பிடப்படவில்லை. ஓய்வு நாள் பரிசுத்தமானது. ஹெஷல் ஓய்வுநாளை “காலத்தின் பரிசுத்தமாக்கல்” என்று கூறுகிறார்: “பழகிப்போன மத சிந்தனையிலிருந்து இது ஒரு முற்றிலும் வித்தியாசமானது. வானமும் பூமியும் ஸ்தாபிக்கப்பட்ட பிறகு, தேவன் ஒரு புனிதமான இடத்தை, புனித மலை அல்லது புனித நீரூற்று, அங்கு ஒரு சரணாலயம் ஸ்தாபிக்கப்பட வேண்டும் என்று புராணத்தில் ஊறிப்போன இருதயம் எதிர்பார்க்கிறது. ஆனால் காலத்தின் பரிசுத்தமாக வரும் ஓய்வே நாளே , வேதாகமத்திற்குப் பிரதானமாய் தோன்றுவதுபோல உள்ளது”
ஓய்வுநாளின் இந்த புனிதம் யூத இறையியலின் தனித்துவமான அடையாளங்களில் ஒன்றாகும் என்று ஹெஷல் வாதிடுகிறார். மீண்டும் சிருஷ்டிப்பு நிகழ்வில் ஒரு குறிப்பிட்ட புனிதமான இடத்தைப் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. ஒரு புனித நாள் மட்டுமே உள்ளது. இடமும் இருப்பிடமும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தாலும், ஏதேன் தோட்டத்தின் சரியான இடம் தவிர்க்கப்பட்டதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆயினும் ஓய்வு நாள் பரிசுத்தமானது என்பதை நாம் அறிவோம்.
இப்போது, மனிதர்களால் எதையும் பரிசுத்தமாக்க முடியாது. நாளை பரிசுத்தமாகக் கருதவேண்டும். அவர்கள் ஓய்வு நாளை பரிசுத்தமாக ஆசரிக்க வேண்டும், அது அவர்கள் வருவதற்கு முன்பே பரிசுத்தமாக இருந்தது. கெட்ட நாட்கள் உள்ளன என்று இது அர்த்தப்படுத்துவதில்லை. நேரமே புனிதமானது. ஒவ்வொரு நாளும் புனிதமான நாள். காலத்தைப் பற்றிய நமது கருத்துக்களுக்கு மாறாக, எல்லா நேரமும் புனிதமானது என்று வேதாகம வழக்கம் நமக்குக் கூறுகிறது (சங்கீதம் 31:15; 139:16; ஏசாயா 60:22). சில நாட்கள் புனிதமானவை என்றும் மற்றவை இல்லை என்றும் கூறுவது இறையியல் ரீதியாகத் தவறானது மட்டுமல்ல, ஆபத்தானதும் கூட; நேரம்தான் பரிசுத்தமானதாக நியமிக்கப்பட்டது என்று முதலில் குறிப்பிடப்படுகிறது. ஓய்வு நாள் மட்டுமல்ல எல்லா நேரமும் பரிசுத்தமானது. ஆனால் ஓய்வுநாள் ஒரு தனித்துவமான பரிசுத்தமாக ஒதுக்கப்பட்டுள்ளது.
முந்தைய அத்தியாயங்களில் நாம் விவாதித்தபடி, ஓய்வு நாள் என்பது விடுதலையையும் மற்றும் அனைத்து படைப்புகளும் செழிக்கக்கூடிய சூழலையையும் ஏற்படுத்துவது பற்றியது. இந்த விடுதலை, நாம் பார்ப்பது போல் மனிதர்கள் மற்றும் அனைத்து படைப்புகளுக்கும் உள்ளது. மீண்டுமாக நான்காம் கட்டளையைக் கேளுங்கள்:
♦ஓய்வுநாளைப் பரிசுத்தமாய் ஆசரிக்க நினைப்பாயாக; ஆறுநாளும் நீ வேலைசெய்து, உன் கிரியைகளையெல்லாம் நடப்பிப்பாயாக; ஏழாம்நாளோ உன் தேவனாகிய கர்த்தருடைய ஓய்வுநாள்; அதிலே நீயானாலும், உன் குமாரனானாலும், உன் குமாரத்தியானாலும், உன் வேலைக்காரனானாலும், உன் வேலைக்காரியானாலும், உன் மிருக ஜீவனானாலும், உன் வாசல்களில் இருக்கிற அந்நியனானாலும், யாதொரு வேலையும் செய்யவேண்டாம். கர்த்தர் ஆறுநாளைக்குள்ளே வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கி, ஏழாம்நாளிலே ஓய்ந்திருந்தார்; ஆகையால், கர்த்தர் ஓய்வுநாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார். (யாத்திராகமம் 20:8–11) ♦
ஒரு வருடத்திற்கு முன்பு, நான் தேசமெங்கும் அறியப்பட்ட ஒரு சபையில் பிரசங்கித்துக் கொண்டிருந்தேன். அதின் போதகர் தனது ஆன்மாவைப் பராமரிக்க ஓய்வெடுக்கவும் ஓய்வுநாளை அனுசரித்துக் கொண்டிருந்தார். சபையில் உள்ள பல குடும்பங்கள் அவரை சோம்பேறி என்றும் ஊழியத்திற்குத் தகுதியற்றவர் என்றும் பகிரங்கமாகப் பேசிக் கொண்டிருந்தனர். நான் ஓய்வு நாளைக் கடைப்பிடிப்பது குறித்தும் மற்றும் ஆவிக்குரிய ரீதியில் உருவாக்கத்திற்கான அதன் முக்கியத்துவத்தைப் பற்றியும் பிரசங்கித்தேன். அந்த ஞாயிறு அன்று போதகரின் மனைவியும் குழந்தைகளும் சபைக்கு வர முடிவு செய்திருந்தனர்; எனக்கது தெரியாது. ஆராதனைக்குப் பிறகு, போதகரின் அலுவலகத்தில் என்னைச் சந்தித்தார்கள். கண்களில் கண்ணீருடன், குழந்தைகள் என்னைக் கட்டிப்பிடித்து, வீட்டிற்கு வந்து அவர்களுடன் இருக்க தங்கள் அப்பாவுக்கு வழிவகுத்ததற்காக நன்றி தெரிவித்தனர்.
ஓய்வுநாள் நமது “வேலைக்காரர்களுக்கும், வேலைக்காரிகளுக்குமானது” என்பதையும் பாருங்கள். இது நமது வேலைக்காரர்களுக்கும் சரிசமமாக உள்ளது. இந்தக் கோட்பாட்டிற்குப் பின்னால் மிக முக்கியமான ஒன்றும் இருக்கிறது. அதாவது, தேவன் நமக்கு ஒரு ஓய்வு நாளைக் கொடுக்கும்போது, நம்முடைய அதிகாரத்தின்கீழ் உள்ளவர்களுக்கும் அதே ஓய்வு கொடுக்கப்பட வேண்டும் என்று அவர் ஏங்குகிறார். பொதுவாக, அதிகாரத்தில் இருப்பவர்கள் ஓய்வெடுக்க மனதாய் இருக்கும்போதுதான், அவர்களின் பராமரிப்பில் பணியாற்றும் ஜனங்களுக்கும் ஓய்வு அளிக்க முடியும்.
சில ஆண்டுகளுக்கு முன்பு, டிம் என்ற பெயருடைய ஒரு இளம் போதகர் ஓய்வு நாளை குறித்த என் கட்டுரையைப் படித்துவிட்டு என்னை அணுகினார். டிம் தனது ஊழியத்தில் மரித்துக் கொண்டிருந்தார்; வாரத்தில் 80 மணிநேரம் வேலை செய்தார், உடல் பருமனாகி, மகிழ்ச்சியற்றவராக இருந்தார். ஒவ்வொரு வாரமும் தனக்கு ஒரு நாள் ஓய்வு தேவை என்று தனது போதகரிடம் எப்படிச் சொல்ல முடியும் என்று ஆலோசனை கேட்க வந்தார். அவர் எப்படி உரையாடவேண்டும் என்று நான் அவருக்குப் பயிற்சி அளித்த பிறகு, அவர் தனது போதகரிடம் பேசச் சென்றார். ஒரு வாரம் கழித்து, அழுது கொண்டே திரும்ப அழைத்தார். திட்டமிட்டபடி உரையாடல் நடக்கவில்லை. ஓய்வின் தேவையை வெளிப்படுத்திய பிறகு, அவரது முதலாளி,
♦ “எனக்கு ஒரு நாள் ஓய்வு தேவையில்லை என்றால், உங்களுக்கும் தேவையில்லை” என்றார். ♦
ஓய்வு நாள் கட்டளையில் அதிகாரத்திற்கும் ஓய்வுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு உள்ளது. அதிகாரத்தில் இருப்பவர்கள் ஓய்வெடுக்காதபோது, அவர்களின் பராமரிப்பில் இருப்பவர்களும் ஓய்வெடுக்க மாட்டார்கள். வேறு விதமாகச் சொல்வதானால், என்னுடைய ஓய்வு வேறொருவரின் அடிமைத்தனமாக இருந்தால், நான் ஓய்வு நாளை சரியாக அனுசரிப்பதில்லை.
ஓய்வு நாள் என்பது நாம் பார்ப்பதுபோல, உங்கள் நடுவில் உள்ள “அந்நியர்களையும்” பற்றியது. இது ஒரு ஆழமான ரகசியம் மற்றும் ஓய்வு நாளின் பறந்து விரிந்த நோக்கத்தைப் பற்றிப் பேசுகிறது. ஏனெனில் ஓய்வுநாள் என்பது இஸ்ரவேலருக்கு மட்டும் அல்ல. ஓய்வுநாள் உலகத்துக்கானது. இஸ்ரவேலின் மத்தியில் உள்ள எவருக்கும் (அவர்கள் இஸ்ரவேலராக இல்லாவிட்டாலும்) ஒவ்வொரு வாரமும் ஒரு நாள் ஓய்வு அளிக்கப்பட வேண்டும். இதைக் கருத்தில்கொள்ளுங்கள்; உலகம் முழுவதையும் ஆசீர்வதிக்க வேண்டும் என்ற வெளிப்படையான நோக்கத்துடன் கட்டளையைக் கொண்ட வேறு எந்த மதத்தையும் குறிப்பிடுங்கள் பார்ப்போம்.
உங்கள் மத ரீதியான பாரம்பரியம் உங்களைச் சுற்றியுள்ளவர்களுக்கும், உங்கள் எதிரிகளுக்கும் கூட விடுதலையையும் ஓய்வையும் அளித்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். உங்கள் மதத்தின் நம்பிக்கைகள் உங்கள் மதப் பழக்கவழக்கங்களைக் கடைப்பிடிப்பவர்களை ஆசீர்வதிப்பது மட்டுமல்லாமல், உங்கள் நம்பிக்கை அமைப்புக்கு அப்பாற்பட்டவர்களையும் சேர்த்தே கரங்களை விரிக்கிறது என்று கற்பனை செய்து பாருங்கள். இயேசுவைப் பின்பற்றுபவர்களுக்கு, அப்படித்தான் இருக்கும். ஓய்வு நாளை கடைப்பிடிக்கும் மதரீதியானவர்கள் மட்டுமல்ல, படைப்பின் ஒவ்வொரு அம்சமும் ஓய்வு நாளைக் கடைப்பிடிப்பதன் மூலம் பயனடைய வேண்டும்.
பண்டைய யூத தத்துவஞானி ஃபிலோ, “ஆன் தி சப்பாத்” என்ற தனது நூலில், சமுதாயத்தில் உள்ள அனைவருக்குமான ஓய்வு நாளின் செழிப்பைப் பற்றி எழுதுகிறார்: “ஏழாம் நாளில் ஒவ்வொரு நகரத்திலும், விவேகம், நீதி மற்றும் மற்ற எல்லா நற்பண்புகள் பற்றிய எண்ணற்ற பாடங்கள் மக்களுக்குப் பரப்பப்பட்டன. . . அதனால் அனைவரின் வாழ்க்கையும் மேம்பட்டது”. இஸ்ரேலைச் சுற்றியுள்ள நாடுகளை ஆசீர்வதிக்கும் இந்த வழி அவர்களைச் சுற்றியுள்ள மற்ற நாடுகளின் பொருளாதார முறைகளுக்கு முற்றிலும் முரணானது; குறிப்பாக எகிப்து.
பின்னர், இறுதியாக, ஓய்வு நாளில் விலங்குகளும் ஒரு நாள் ஓய்வெடுக்க வேண்டும். இங்கே “மிருக ஜீவன்” என்பது அனைத்து வீட்டுக் கால்நடைகளையும் குறிக்கிறது. நார்மன் விர்ஸ்பா எழுதுகிறார், “ஓய்வு நாளில் விலங்குகள் ஓய்வெடுக்கவும், புத்துணர்ச்சியடையவும் விடப்பட வேண்டும் அல்லது வயல்களைத் தரிசாக விட வேண்டும். நமது இடைவிடாத வேலைச் சுமைகளிலிருந்து மிருக ஜீவன்கள் வெளியே வருவதற்கான சுதந்திரம் இருக்க வேண்டும். நமது தொடர்ச்சியான உழைப்பை நிறுத்தும்போது, முழு சிருஷ்டியும் நமக்காகவும் நம் ஆசைகளைப் பூர்த்தி செய்வதற்காகவும் மட்டும் இல்லை என்ற விலையேறப்பெற்ற பாடத்தை நாம் கற்றுக்கொள்கிறோம்”
இஸ்ரவேலில் விலங்குகள் நியாயமாக நடத்தப்பட வேண்டும். ஒரு வேலைக்காரன் கூலிக்குத் தகுதியானவனாக இருப்பதைப் போலவே, போரடிக்கிற மாட்டை வாய் கட்டக்கூடாது (உபாகமம் 25:4). ஒரு ஓய்வு வருடத்தில் வயல்களில் கிடக்கும் பழங்கள் மற்றும் காய்கறிகளை விலங்குகள் சாப்பிட அனுமதிக்கப்பட்டன (யாத்திராகமம் 23:11). விலங்குகளை குறித்து இப்படி உயர்ந்த பார்வைக்கு ஏற்பவே ஓய்வு நாள் கட்டளை வருகிறது. விலங்குகள் வாரத்தில் ஒரு நாள் தேவனிடம் ஓய்வெடுக்க வேண்டும். விலங்குகளுக்கு ஓய்வு வேண்டும் என்ற தேவனின் கட்டளையானது, யூத பாரம்பரியம் விலங்குகளைப் பராமரிப்பதில் மிகவும் உறுதியுடன் இருப்பதை நமக்கு காட்டுகிறது; ஒருவேளை மற்ற எந்த பண்டைய மதத்தையும் விட அதிகமாக இருக்கலாம். குழியில் விழுந்த ஒரு எருதை மீட்க, ஒரு முறையான ஓய்வு நாளை கூட ஒதுக்கி வைப்பது பற்றி இயேசு கற்பித்தார் (லூக்கா 14:5).
இதன் கருத்து எளிமையானது; ஆனால் ஆழமானது. ஓய்வு உங்களுக்காக! ஆனால், நீங்கள் ஓய்வெடுக்கும்போது, அதன் விளைவுகள் உங்களைச் சுற்றியுள்ள அனைவருக்கும் எதிரொலிக்கும். அது உங்களை மட்டும் பாதிக்காது. இது உங்களைச் சுற்றியுள்ள அனைவரையும் மற்றும் அனைத்தையும் பாதிக்கிறது!
நீங்கள் நம்புவது போல், ஓய்வு நாள் உலகத்திற்கான தேவனின் நோக்கத்திற்கு மட்டுமல்ல; ஆனால், அது நமது செழிப்புக்கும், அனைத்து படைப்புகளின் நல்வாழ்வுக்கும் சமமாக முக்கியமானது. இந்த கட்டுரையில், ஓய்வு நாளை மட்டுமல்ல, ஓய்வு நாளின் சில முக்கிய கூறுகளையும் நாம் ஆராய்ந்தோம்.
ஆனால் ஓய்வு நாள் என்பது இன்னும் பெரிய காரியத்திற்கு ஒரு அடையாளமாக இருக்கிறது என்று நான் வாதிடுவேன்; அதுதான் நற்செய்தி!
மனிதக்குலம் ஆறாவது நாளில் உருவாக்கப்பட்டது.
ஏழாவது நாள், தேவன் உற்பத்தி மற்றும் முயற்சியை நிறுத்திய நாளாகும். ஆதாம் மற்றும் ஏவாளின் முதல் முழு நாள் ஓய்வு நாள்; வேலை அல்ல. என்ன ஒரு முதல் புரிதல் ! ஒருவரைச் சந்திக்கும் நமது முதல் சந்திப்பின் முதல் 100 மில்லி விநாடிகளில் பிறரைப் பற்றிய அபிப்பிராயத்தை நாம் தீர்மானிக்கிறோம் என்று சமூக விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டுகின்றனர். உண்மையில், முதல் அபிப்பிராயங்கள் முக்கியம். ஆதாமும் ஏவாளும் தங்கள் முதல் நாளில் தேவனைப் பற்றிய முதல் அபிப்ராயத்திலிருந்து தேவனுடைய தாராள குணத்தைப் பற்றிக் கற்றுக்கொண்டதைக் கற்பனை செய்து பாருங்கள். தேவன் மற்றும் தேவன் உருவாக்கிய உலகத்தைப் பற்றிய அவர்களின் முதல் புரிதல் என்னவென்றால், ஓய்வு என்பது ஒரு பிற்போக்கான சிந்தனை அல்ல; ஓய்வு என்பது முதன்மையானது
ஆதாமும் ஏவாளும் இந்த இலவச ஈவாகிய ஓய்வு நாளை சம்பாதிக்க எதையும் சாதிக்கவில்லை. ஓய்வு நாள் என்பது, என் அனுமானத்தின்படி, வேதாகம சம்பவத்தில் உள்ள நற்செய்தியின் முதல் பிம்பம். தேவனின் இயல்பு எப்போதும் முதலில் ஓய்வு கொடுக்கிறது; வேலை பின்னர் வருகிறது. இது நம் அனைவரின் வாழ்விலும் பிரதிபலிக்கிறது. இவ்வுலகில் நம் வாழ்வு தொடங்கும் முன், கருவறையில் ஒன்பது மாதங்கள் ஓய்வு பெறுகிறோம். ஒரு தொழிலை எடுப்பதற்கு முன், குழந்தைகளாக விளையாட மட்டுமே சில வருடங்கள் கிடைக்கும். நமது ஆறு நாட்கள் வேலைக்கு முன், நாம் ஓய்வு நாளைப் பெறுகிறோம். முதல் ஓய்வு நாளில் ஆதாமும் ஏவாளும் கொண்டாட வேண்டிய ஒரே விஷயம் தேவனும் அவருடைய படைப்பும் மட்டுமே, என்று கார்ல் பார்த் பிரபலமாகச் சுட்டிக்காட்டினார்: “தேவன் ஏழாவது நாளில் ஓய்வெடுத்தார், அதை ஆசீர்வதித்துப் பரிசுத்தப்படுத்தினார், இதுவே மனிதன் சாட்சி பகரும் பாக்கியம் பெற்ற முதல் தெய்வீக செயல்; வேலையிலிருந்து முற்றிலும் விடுபட்டு, அவனே ஓய்வு நாளைக் தேவனோடு கடைப்பிடிக்க வேண்டும் என்பதுதான் அவனுக்குச் சொல்லப்பட்ட முதல் வார்த்தை, அவனுக்கு விதிக்கப்பட்ட முதல் கடமை”.
மனிதக்குலம் கொண்டாடத் தேவனின் நன்மை மட்டுமே இருந்தது, அதற்கு மேல் எதுவும் இல்லை. வேலை துவங்கக் கூட இல்லை. கிருபை, தேவனின் இயல்பு. ஓய்வைச் சம்பாதிப்பதற்காக ஒரு காரியத்தையும் செய்வதற்கு முன், தனது உலகத்திற்கு ஓய்வு கொடுக்கும் படைப்பின் தேவனைப் போற்றுங்கள். ஓய்வு நாளை உண்டாக்கிய தேவன் நிச்சயமாகச் சிலுவையில் முடிவில்லாத கிருபையை அளிக்கும் தேவனே.
தேவனைப் பிரியப்படுத்த நாம் வேலை செய்யவில்லை என்பதை ஓய்வு நாள் நமக்குக் கற்பிக்கிறது. மாறாக, தேவன் ஏற்கனவே கிறிஸ்துவில் நம்மில் பிரியமாக இருப்பதால் நாம் ஓய்வெடுக்கிறோம். ஒருவேளை, ஒருவேளையாவது, ஓய்வு நாளின் பரிசைப் பெறுவதற்கு நாம் திறந்த மனதோடு இருப்போம், அது தொடர்ந்து அளிக்கக் கூடிய பரிசாகும்.