குருத்தோலை ஞாயிறு முதல் உயிர்த்தெழுதல் ஞாயிறு வரை, இயேசுவைச் சிலுவைக்கு இட்டுச் செல்லும் பாதையில் அவருடைய அடிச்சுவடுகளைக் காண்கிறோம். இது ஒரு பரீட்சயமான சம்பவம் தான், ஆனால் மிக முக்கியமான ஒன்று, தேவன் தம் ஜனங்கள் மீது கொண்டுள்ள அபரிமிதமான அன்பைப் பற்றியும், நம் பாவங்களிலிருந்து நம்மை இரட்சிக்க அவர் எந்த அளவிற்குச் செல்வார் என்பதைப் பற்றியும் பேசுகிறது. எந்தவொரு பரிச்சயத்தையும் ஒதுக்கிவிட்டு, வரலாற்றின் மிக முக்கியமான தருணத்தைப் புதிதாக்கப்பட்ட பார்வையுடன் அணுகுவோம். சுவிசேஷத்தின் இதயத்தில் நம் கண்களைப் பதிப்போம்: இயேசு, தேவன் நமக்கு அளித்த பரிசு

குருத்தோலை ஞாயிறு

 

banner image

உயிர்த்தெழுந்த நாளுக்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமை, இயேசு எருசலேமுக்குள் நுழைகையில் சாலை முழுவதும் குருத்தோலைகளும், வஸ்திரங்களும் பரப்பப்பட்டு வரவேற்கப்பட்டார். ஜனங்கள் இயேசுவை இரட்சகராகவும் ராஜாவாகவும் கொண்டாடும் போது, ​​அதையே நாமும் செய்ய வேண்டும் என்பது நமக்குச் சரியான நேரத்தில் நினைவூட்டப்படுகிறது. நம் இதயங்களைத் திறந்து, நம் இரட்சகரும் ராஜாவுமான இயேசுவுக்கு முன்பாக வணங்குவோமாக.

பெரிய வியாழன்

banner image

அவர் காட்டிக்கொடுக்கப்பட்ட இரவில், இயேசு அப்பம் பிட்டு, திராட்சரசத்தை ஊற்றி, அவருடைய சீஷர்களின் கால்களைக் கழுவினார். இது அவருடைய நொறுக்கப்பட்ட சரீரத்தையும், அவருடைய சிந்தப்பட்ட இரத்தத்தையும் மற்றும் நம்மீதான அவரின் தியாகமான அன்பையும் குறிக்கிறது. இன்று, அவருடைய மரணத்தைத் தெரிவித்தும், சிலுவையில் நமக்கான அவருடைய விலையேறப்பெற்ற தியாகத்தை நினைவுகூர்ந்தும், திருவிருந்தில் பங்கு கொள்கிறோம். நாம் வாழ வேண்டும் என்பதற்காகத் தன் ஜீவனையே கொடுத்தவருக்காக நன்றியறிதலினாலும், துதிகளாலும் நம் உள்ளம் பொங்குகிறதா?

பெரிய வெள்ளி

banner image

இயேசு தம்முடைய இறுதி மூச்சை விட்டு சிலுவையில் ஆவியை ஒப்புக்கொடுத்தவுடன், தேவாலயத்தின் திரைச்சீலை மேலிருந்து கீழாக இரண்டாகக் கிழிந்தது. அவருடைய மரணம் நம்முடைய பாவங்களுக்கு நாம் செலுத்த வேண்டிய கிரயத்தைச் செலுத்தியது, மேலும் தேவனுடனான திறந்ததும் தடையற்றதுமான வாசலை நமக்கு வழங்கியது. இயேசுவின் மூலமாக மட்டுமே நாம் பிதாவைச் சேரவும், அவருடன் மீண்டும் இணைவதற்குமான ஒரு வழி ஏற்படுத்தப்பட்டது. ஒவ்வொரு முறையும் நாம் நம் பாவங்களை அறிக்கையிட்டு, தேவனைத் துதித்து, நம் வேண்டுதல்களை முன்வைக்கும்போது, ​​அதை நினைவில் கொள்வோமாக.

புனித சனி

முள்ளுகளாலான கிரீடம். இயேசுவைச் சிலுவையில் அறைந்த ஆணிகள். அவரது தலைக்கு மேலிருந்த அடையாளம். மற்றும் சிலுவை. இவை ஒவ்வொன்றும் உங்களுக்கு எவ்வாறு பொருள்படுகின்றன?

banner image

இயேசு நமக்காக வேதனை, அவமானம் மற்றும் நிந்தையைச் சகிக்கத் தயாராக இருந்தார். தனக்கு அபாத்திரமான முள் கிரீடத்தைத் தரித்தார். அவர் செய்த அனைத்திற்கும், நீங்கள் அவர்னிமித்தம் துன்புறுத்தப்பட்டாலும் சகித்துக்கொண்டு, சுவிசேஷத்திற்காக வெட்கப்படாமல் நிற்பீர்களா?

banner image

நம் பாவம்தான் அவரை அங்கே அறைந்தது. ஆனாலும், அவருடைய கைகளிலும் கால்களிலும் உள்ள துளைகளால், நாம் பூரணரானோம். தேவன் தமக்குக் கீழ்ப்படிவோருக்கு வாக்களித்த பரிபூரணமான வாழ்வை வாழும்படி நீங்கள் மீட்டெடுக்கப்படுவதற்கு, நீங்கள் எதனை சிலுவையில் அறைய விரும்புகிறீர்கள்??

banner image

“யூதருக்கு ராஜா”: இது அவரை கேலி செய்யும் ஒரு அடையாளமாக இடப்பட்டிருந்தது, ஆனால் முரண்பாடாக அதுவே துல்லியமான உண்மையாகும். இன்று, இயேசு யூதர்களுக்கு மட்டுமல்ல, புறஜாதிகளுக்கும் ராஜாவாக இருக்கிறார், அதில் நாம் அனைவரும் உள்ளடங்குவோம். ராஜாவாக உங்கள் இதயத்தில் அவருக்கு உரிய இடத்தை அளித்துள்ளீர்களா?

banner image

ஒரு காலத்தில் குற்றவாளிகளுக்குத் தண்டனை கொடுக்க பயன்படுத்தப்பட்டது, அது இப்போது மீட்புக்கும் கிருபைக்கும் அடையாள சின்னமாக உள்ளது. கிறிஸ்துவின் காரணமாக, சிலுவையின் அர்த்தம் என்றென்றைக்குமாக மாறிவிட்டது. மனிதனின் வீழ்ச்சி தொடங்கியே அவருடைய விலையேறப்பெற்ற மற்றும் அன்பான குமாரனின் பலியின் மூலம் நம்மை மீட்டெடுப்பது என்பது தேவனின் திட்டத்திலிருந்தது என்பதை அறிகையில், அவரை தொழுவதும் ஆராதிப்பதும் தவிர வேறு எதை உங்களால் செய்யக் கூடும்?

உயிர்தெழுதலின் ஞாயிறு

banner image

மரணத்தின் தோல்வி அவர் தன்னை யார் என்று கூறுவதை நிரூபிக்கிறது, அவரே தேவன். அவருடைய உயிர்த்தெழுதல் தேவனின் மகத்தான வல்லமையை நிரூபிக்கிறது. அவருடைய ஜெயமான உயிர்த்தெழுதல், அவர் வாக்களித்ததை அவர் நிறைவேற்றினார் என்பதை நிரூபிக்கிறது. மேலும் அவர் மீண்டும் திரும்புவதாகவும் வாக்களித்துள்ளார். மகிமையின் நம்பிக்கையான இந்த வாக்குத்தத்தம், நம் வாழ்க்கைக்கு அடித்தளமாகக் கொள்ளப் பாத்திரமானது. அவருடைய வருகைக்காக நாம் எதிர்பார்த்துக் காத்திருக்கையில், அன்புடனும் கீழ்ப்படிதலுடனும் அவருக்கு ஊழியம் செய்வோமாக.


உங்கள் இன்பாக்ஸில் தினசரி மின்-தின தியானங்களைப் பெற விரும்பினால், கீழே உள்ள இணைப்பைக் கிளிக் செய்து பதிவு செய்யவும்!
இங்கே பதிவு செய்யவும்