கிறிஸ்துவின் சார்பில் செய்யப்படும் போதக ஊழியமானது மிகவும் அத்தியாவசியமானதும், மிகக்கடினமானதும், சற்றே ஆபத்தான அழைப்புமாய் உள்ளது. இப்பணி பெரும்பலனை உண்டாக்குவதாய் இருப்பினும்; இதை எவரும் சுலபமானதென்றோ, பாதுகாப்பானதென்றோ அல்லது நினைத்தாற்போல நடக்குமென்றோ சொன்னதேயில்லை.

இத்தகைய எதார்த்தமான அன்போடு, தனது சக ஊழியர்களுக்கென்றே, ஆர்.பி.சி.ஸ்தாபனத்தின் சபை ஊழியங்களின் இயக்குநர் பில் கிரவுடர், பின்வரும் பக்கங்களில் தனது இதயம் திறந்து பேசுகிறார். தீமோத்தேயுவிற்கான பவுலின் வார்த்தைகளிலுள்ள ஞானத்தையும், தனது பலவருட அனுபவங்களையும் இணைத்து; பில் தனது வார்த்தைகளில், “என்ன செய்கிறோம், ஏன் செய்கிறோம், மேலும் எப்படிச் செய்கிறோம் என்று சிந்திப்பதால்; தேவனின் வார்த்தைகள் மூலம் ஜனங்கள் தேவனின் மகா விலையேறப்பெற்ற அன்பை அறிந்து அனுபவிப்பார்கள்” என்று நமக்கு நினைப்பூட்டுகிறார்.

மார்ட்டின்.ஆர்.டி ஹான் II

banner image

1950களின் சிறுவனாக வளர்ந்த நான், அக்காலத்தில் பிரபலமாயிருந்த மிக்கி மவுஸ் கிளப் மற்றும் டிஸ்னியின் அற்புத உலகம் போன்ற நிகழ்ச்சிகளில் திளைத்த டிஸ்னி நிறுவனத்தின் பரம ரசிகர்களில் ஒருவன். என் சிறுவயதில், டிஸ்னி உலகத்தின் “மந்திர ராஜ்யத்திற்கு” போகவேண்டும் என்றெல்லாம் கற்பனை செய்ததுண்டு.

வாராவாரம் வால்ட் டிஸ்னி எங்களுக்களித்த கதாநாயகர்களின் சாகசங்களைப் பார்க்கவே உயிர்வாழ்ந்தோம். குறிப்பாக டெக்சாஸ் ஜான் ஸ்லாட்டர், சோரோ அல்லது ஸ்வாம்ப் பாக்ஸ் (பிரான்சிஸ் மரியோன்) போன்றவர்களோடு நானும் இனைந்து நீதிக்காகவும், விடுதலைக்காகவும் போராடுவதுபோல கற்பனை செய்துகொள்வேன். ஆனால் டிஸ்னி வழங்கிய டேவி கிராக்கெட்டின் வீரதீர சாகசங்களை மெய்மறந்து பார்க்கையில், மற்றவையெல்லாம் அற்பமாய் தோன்றும்.

இந்த கதாபாத்திரம் மேலும் 180 பேருக்கும் அதிகமான மற்ற கதாநாயகர்களோடு இணைந்து விடுதலைக்காகச் சண்டையிட்ட நிகழ்ச்சி தொகுப்புகள் என்னைப் பிரமிக்க வைத்தன. 1960 களின் துவக்கத்தில் ஜான் வெய்ன் என்பவர் இந்த கதாபாத்திரங்களையும், சண்டைக் காட்சிகளையும் மையப்படுத்தி ஒரு திரைப்படத்தை எடுத்தார், என் ஆவல் பேராவலாய் மாறியது. இன்றுகூட அமெரிக்கச் சரித்திரத்தின் ஆரம்ப நாட்களைப் பின்னணியாகக் கொண்டிருக்கும் எதையும் ஆவலுடன் வாசிக்கிறேன்.

ஜனங்கள் காரியங்களை எதிர்பார்க்கிறார்கள்

எனக்கு பிடித்தமான நிகழ்ச்சி தொகுப்பு டிஸ்னி நிறுவனத்தால் புதிதாகத் தொகுக்கப்பட்டு, 2004 ஆம் ஆண்டில் வெளிவரும் என்ற செய்தியை நான் கேட்டபோது என் ஆர்வ நிலையை நீங்களே கற்பனை செய்துகொள்ளுங்கள். அதில் ஒரு குறிப்பிட்ட காட்சியில், எனக்கு பிடித்தமான இரண்டு கதாபாத்திரங்களுக்கிடையே நடக்கும் உரையாடல் என்னை மிகவுமாய் கவர்ந்தது.

அந்த காட்சியில், எதிரிகளின் எல்லைக்குள் ஊடுருவி அங்கேயிருக்கும் தனது படையினருக்காக உதவ ஒரு தூதுவன் சென்றிருக்கும் நேரத்தில், காவல்காத்துக்கொண்டிருக்கும் கிராக்கெட் எனும் கதாநாயகனிடம் ஒருவன் வந்து, அவனுடைய சிந்தையறிந்தவனாக “தக்க சமயத்திற்காகக் காத்திருக்கிறாய் அல்லவோ?” எனக் கேட்க

அதற்கு கிராக்கெட்,”ஜனங்கள் காரியங்களை எதிர்பார்க்கிறார்கள், இதுவே வேறொரு சமயமென்றால் நான் அந்த சுவர்களைக் கடந்து என்னால் உதவ முடியும் என்று அவர்கள் எதிர்பார்க்கலாம். ஆனால் இன்று நான் இந்த கோட்டையைக் காவல் காக்கும் பணியிலிருக்கிறேன்” என்று பதிலளித்தான்.

கிராக்கெட்டின் இந்த வார்த்தைகளில், “ஜனங்கள் காரியங்களை எதிர்பார்க்கிறார்கள்” என்பது என்னை மிகவும் கவர்ந்துவிட்டது.

எதிர்பார்ப்புகளின் ஆற்றல்

எதிர்பார்ப்புகள் ஆற்றல் மிக்கவை. நாமும்கூட அவைகளுக்கு இசைகிறோம், அவைகளுக்காக வாழ்கிறோம், அவைகளால் நசுக்கவும் படுகிறோம், அவைகளைக் குறையும் கூறுகிறோம்.

எனினும், நம்மால் இயலாத காரியம் யாதெனில், அவைகளிடமிருந்து தப்ப முடியாது. மக்கள் காரியங்களை எதிர்பார்க்கிறார்கள்.

எதிர்பார்ப்புகளிடமிருந்து நாம் தப்ப இயலாது.

இது சபைக்கும் பொருந்தும். தேவனுடைய வார்த்தையைப் பிரசங்கிப்பவர்கள், தங்கள் சபையின் அங்கத்தினரால் தொடர்ச்சியாக மதிப்பிடப்பட்டுக்கொண்டே இருக்கிறார்கள். நம்மைக் கூர்ந்து கவனிக்கும் உலகத்தோடு, நமது சொந்த ஜனங்களும் நம்மிடம் காரியங்களை எதிர்பார்க்கிறார்கள். அந்த எதிர்பார்ப்புகளால் உண்டாகும் அழுத்தமானது நம்மை மூழ்கடிக்கக் கூடியது.

சமீபத்தில் வெளிநாட்டிற்குச் சென்றிருந்த நான், என் சக ஊழியனாய் இருந்த ஒருவரின் விமர்சனத்தால் சற்றே திகைத்தேன். அவருடைய வீட்டிலிருந்து அலுவலகத்திற்கு நாங்கள் காரில் பயணிக்கையில், எனது அந்த நண்பர் “ஏன் பெரும்பாலுமான மூத்த போதகர்கள் கசந்துகொள்கிறார்கள்?” என்று வியந்தார்.

“ஏன் பெரும்பாலுமான மூத்த போதகர்கள் கசந்துகொள்கிறார்கள்?”

சற்றே சிந்தித்த நான், அவரிடம் “நானும் ஒரு மூத்த போதகன் என்ற முறையில், எல்லா மூத்த போதகர்களும் கசந்துகொள்பவர்கள் அல்ல என்பதை உறுதியாக என்னால் சொல்ல முடியும். ஆனால் அதேசமயம், அநேகர் கசந்துகொள்வதற்கு சில காரணங்கள் உள்ளன.

முதலாவது, போதகர்கள் மிகவும் குறைவாகவே ஊக்குவிக்கப்படுகின்றனர். எனினும், அவர்கள் இடைப்படுகிற மனிதர்கள் பெரும்பாலும் தங்கள் வாழ்வின் மிகவும் இருண்ட காலங்களிலும், சவாலான நேரங்களிலும் வாழ்கின்றனர். இது மிகவும் சோர்வுறச் செய்யும் பணியாகும்.

இரண்டாவது, ஜனங்கள் தங்கள் ஆவிக்குரிய வழிகாட்டிகளிடம் மிகவும் அதிகமாய் எதிர்பார்ப்பதால், ஏமாற்றங்கள் தவிர்க்க இயலாதவை. ஆண்டுக்கணக்காகப் பிறரின் தேவைகளுக்காகவும், நல்வாழ்க்கைக்காகவும் தன்னையே அர்ப்பணித்திருக்கும் நபர், பிறர் தன் மீது கொண்டிருக்கும் அளவுக்கதிகமான மிகவும் உயர்ந்த அளவுகோல்களைப் பூர்த்தி செய்யாத பட்சத்தில் தொடர்ச்சியாக விமர்சிக்கப்படுவது, அந்த போதகரை ஆழமாகப் பாதிக்கும். அது அவரை சின்னாபின்னமாக்கும்.

எதிர்பார்ப்புகளை மறுபரிசீலனை செய்தல்

ஜனங்கள் காரியங்களை எதிர்பார்க்கிறார்கள். சரியோ தவறோ, நியாயமோ அநியாயமோ, கருணையோ கொடுமையோ, ஜனங்கள் காரியங்களை எதிர்பார்க்கிறார்கள். மேலும் அந்த எதிர்பார்ப்புகள், தேவனின் மந்தையை மேய்க்கும் ஒருவரை முடக்கக் கூடியவையாகவும் இருக்கலாம்.

தங்கள் ஆவிக்குரிய வழிகாட்டிகள்மேல் ஜனங்கள் வைத்திருக்கும் அளவுக்கதிகமான எதிர்பார்ப்புகளால், தோல்விகள் தவிர்க்க இயலாதவையாகின்றன.

கிறிஸ்துவின் நாமத்தினால் பிறருக்கு ஊழியம் செய்யும் நாமும்கூட நமது நோக்கத்தைத் தெளிவாகவும், முன்னுரிமைகளை முறையாகவும் கொண்டு; எது முக்கியம், ஏன் முக்கியம் என்று நமக்கே அடிக்கடி நினைப்பூட்டிக்கொள்வது உபயோகமாக இருக்கும். நமது சபையாரின் எதிர்பார்ப்பை நாம் அறிந்து வைத்திருப்பது முக்கியம் என்றாலும், தேவன் நம்மிடம் எதை? ஏன்? எப்படி? எதிர்பார்க்கிறார் என்பவற்றை மறுபரிசீலனை செய்து சிந்திப்பதே மிகமுக்கியானதாகும்.

banner image

உள்ளூரில் சபையை நாட்டுவதில் இருக்கும் சவால்களை அப்போஸ்தலன் பவுல் அறிந்திருந்தார். மேலும், கிறிஸ்துவின் ஊழியர்களாக (வாலிபரானாலும், முதியவரானாலும்) போதகரென்னும் தலைமைபொருப்பின்மேல் உள்ள எதிர்பார்ப்புகள் மூழ்கடிக்கக்கூடியவை என்பதையும் அறிந்திருந்தார். இதுவே அவர் 1 தீமோத்தேயு, 2 தீமோத்தேயு மற்றும் தீத்து ஆகிய புதிய ஏற்பாட்டு நூல்களை எழுத அமைந்த காரணிகளுள் ஒன்று.

கரிசனையுள்ள வழிகாட்டி

தீமோத்தேயு மற்றும் தீத்து ஆகிய இருவரையும் பவுல் நன்கு பயிற்றுவித்திருந்தார், மேலும் அவர்களின் ஆவிக்குரிய வளர்ச்சியிலும் போதக வாழ்வின் வளர்ச்சியிலும் தொடர்ந்து தன்னை அர்ப்பணித்திருந்தார். கிறிஸ்துவின் ஆற்றல்மிகு ஊழியர்களாக அவர்கள் மாறும்படி உதவ, தொடர்ச்சியான அறிவுரைகளை எழுதினார். போதகர்களுக்கான நிருபங்களென்று அழைக்கப்படும் இந்த நிருபங்களில், கிறிஸ்துவின் இளம் ஊழியர்களான இவர்களுக்கு பவுலின் அக்கறையான சில அற்புதமான காரியங்களை நாம் பார்க்கிறோம். பவுலின் வார்த்தைகளில் நாம்:

• அவர்களுக்கான அவருடைய அன்பைக் காணலாம் (1 தீமோ. 1:2; 3:14; 2 தீமோ. 1:2; 4:9; தீத்து. 1:4)
• அவர்களுக்கான அவருடைய கரிசனையைக் காணலாம் (1 தீமோ. 4:12; 5:23; 2 தீமோ. 1:8; தீத்து. 2:15)
• அவர்களுக்கான அவருடைய அறைகூவலைக் காணலாம் (1 தீமோ. 1:18; 4:14; 6:2- 11; 2 தீமோ. 2:1; தீத்து. 2:1)

அவர்களுக்கான தனது ஜெபங்களையும், ஆழ்ந்த அன்பையும் உறுதியளித்ததோடு; பவுல் இவ்விரு இளம் மேய்ப்பர்களுக்கும் உதவுவதில் தன்னை அர்ப்பணித்திருந்தார்.

ஆவிக்குரிய யுத்தத்தின் முன்னணியில் பவுலோடு, தீமோத்தேயுவும் தீத்துவும் இணைந்திருந்தனர். அவர்களோடு அவர் பகிர்ந்திருந்த ஆழ்ந்த அறிவும், ஞானமும், அனுபவமும் மிகவும் விலையேறப்பெற்றவையாகும். அநேக யுத்தங்களின் அனுபவத்தில் முதிர்ந்திருந்த அவர், அவர்கள் சந்தித்த அநேக சவால்களினூடே அவர்களை வழிநடத்தினார். சுவிசேஷ பணியில் அவர்களுக்கு நம்பிக்கையும் ஊக்கமும் ஊட்டிய அவர் அதேசமயம், அவர்களுடைய சித்தாந்த கொள்கைகளின் அடிப்படையையும், கட்டுமானத்தையும் உறுதிப்படுத்தினார். மிக முக்கியமாக, அவர்கள் தங்களுடைய போதக பணியிலுள்ள எதிர்பார்ப்புகளையும் முன்னுரிமைகளும் சரியாய் புரிந்துகொள்ள அவர்களுக்கு ஒரு மையப்புள்ளியையும் கொடுத்தார். இவ்விரு வாலிபர்களும் சந்தித்த கள்ள போதனைகள், தனிப்பட்ட பயங்கள், பாலியல் இச்சைகள், உடன் ஊழியர்களின் ஆவிக்குரிய குறைபாடுகள் போன்ற சவால்களின் மத்தியிலும் மிகப் பிரதானமானதை அவர்கள் நோக்க அது உதவியது.

தங்களுடைய போதக பணியிலுள்ள எதிர்பார்ப்புகளை அவர்கள் சரியாய் புரிந்துகொள்ள, அவர்களுக்கு ஒரு மையப்புள்ளியை பவுல் கொடுத்தார்.

ஆரம்பப் புள்ளி

தீமோத்தேயுவுக்கான முதலாம் நிருபத்தை பவுல், ஒரு தகப்பனின் வாழ்த்தோடு துவங்குகிறார். விசுவாசத்தில் தனது குமாரனுக்கு தன்னுடைய உளமார்ந்த வாஞ்சையை வெளிப்படுத்தி “நம்முடைய பிதாவாகிய தேவனாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவினாலும் கிருபையும் இரக்கமும் சமாதானமும் உண்டாவதாக” (1:2) என்றார்.

பின், பவுல் உடனடியாக தன் மனதைத் திறக்கிறார். தங்களுக்கு ஒப்புவிக்கப்பட்ட விசுவாசத்தின் அடிப்படை காரியங்களைக் கவனிக்காமல், பலவகையான உபதேச கோட்பாடுகளைப் போதிப்பவர்களுக்கு எதிராக தைரியங்கொள்ளத் தனது இளம் சீடனுக்கு அறைகூவல் விடுக்கிறார் (வ.3-4).

பவுலின் எண்ணங்களின் மேல்தட்டில், தீமோத்தேயுவுக்கு தான் முன்னர் சொன்னதை நினைப்பூட்டுவதே மேலோங்கியிருந்தது. திசைதிருப்பும் ஆபத்தான போதனைகள் சபையில் வேரூன்ற அவைகள் அனுமதிக்காது. அத்தகைய கொள்கை குழப்பங்களை ஊக்குவிக்கும் கருத்துக்களை ஏற்றுக்கொண்டவர்கள், ஆவிக்குரிய வஞ்சனையில் சிக்கியிருந்தனர். அவர்களை மீட்டெடுக்கும் முயற்சியில்தான் ஒரு போதகனாக தீமோத்தேயு மேய்ப்பனானார்.

நோக்கத்திற்கான ஒரு செய்தி

இத்தகைய சவால்களை பவுல் மனதிற்கொண்டு, இதுவரையிலும் எழுதப்பட்டவற்றில் மிக முக்கியமான ஒரு நோக்க அறிக்கையை எழுதுகிறார்.

அத்தகைய வாக்கியம் காலத்திற்கேற்றது. பெருநிறுவனங்களின் இலட்சிய அறிக்rகொண்டாடும் உலகில் நாம் வாழ்கிறோம். இத்தகைய இலட்சிய அறிக்கைகளே அந்நிறுவனங்கள் இயங்குவதின் காரணத்தையும், போட்டி நிறைந்த உலகில் தனக்கான இடத்தை ஏற்படுத்தும் தங்கள் திட்டத்தையும் அறிவிக்கும். சிறந்த எலிப்பிடிக்கும் கருவியைப் படைப்பதோ, சளித்தொல்லை நிவாரணியோ அல்லது ருசிகரமான உணவைத் தயாரிப்பதோ, எதுவாயினும் இந்நிறுவனங்கள் தொடக்கம் முதல் இறுதிவரை தங்கள் இலட்சிய அறிக்கைகளையே பின்பற்றும். நிறுவங்களின் வணிபதொடர்பான சகல செயல்பாடுகளிலும் நோக்கத்தையும், தெளிவையும் இவ்வறிக்கைகள் ஏற்படுத்தும்.

இளம் தீமோத்தேயுவும் கூட இத்தகைய முன்னுரிமை தெளிவோடு உள்ளூர் சபையின் ஊழியத்தை அணுகவேண்டுமென்று பவுல் விரும்பினார். இதுவரை அவரை வாழ்த்தி அவருக்கு அறைகூவல் விடுத்த பவுல், இப்போது கணிதரும் ஊழியத்தின் ஆணிவேருக்கு நேராக தீமோத்தேயுவின் கவனத்தைத் திருப்புகிறார். மேய்ப்பனின் பணியில் இருக்கும் அத்தியாவசியமான காரியங்களையும், அவைகளின் பின் உள்ள காரணங்களையும் ஒட்டுமொத்தமாக அடக்கியுள்ள ஊழிய அறிக்கையை அவருடைய போதக பணிக்காக பவுல் தருகிறார். அது காரியத்தை நிறைவேற்றும் சூட்சுமத்தையும் உள்ளடக்கியுள்ளது. 1 தீமோத்தேயு 1:5இல், பவுல் அந்த ஊழிய நோக்கத்தை வழங்கியுள்ளார்

கற்பனையின் பொருள் என்னவெனில், சுத்தமான இருதயத்திலும் நல்மனச்சாட்சியிலும் மாயமற்ற விசுவாசத்திலும் பிறக்கும் அன்பே.

இங்கே, இந்த ஒரே வசனத்தில் ஏன்? எப்படி? போன்ற முக்கியமான கேள்விகளுக்கு நமக்கு விடைகளுண்டு. குறிப்பாக, கிறிஸ்துவின் நாமத்தில் நாம் என்ன செய்ய அழைக்கப்பட்டுள்ளோமோ, அதை எப்படிச் செய்யவேண்டுமென்பதற்குப் பதிலுண்டு. இந்த கேள்விக்கான பதில்கள், நாம் கிறிஸ்துவுக்காக செய்யும் ஊழியத்தின் முக்கியத்துவத்தையும், கணிதரும் ஊழியத்தின் தெளிவான விளக்கத்தையும் ஆராயும்.

ஊழியத்திற்கான அப்போஸ்தலன் பவுலின் பணிநோக்க அறிக்கை:

கற்பனையின் பொருள் என்னவெனில், சுத்தமான இருதயத்திலும் நல்மனச்சாட்சியிலும் மாயமற்ற விசுவாசத்திலும் பிறக்கும் அன்பே. 1 தீமோத்தேயு 1:5

“என்ன” என்கிற கேள்விக்கு பதிலளித்தல்

நான் போதகராக பணியாற்றிய முதல் சபையில், எனக்கு மிகவும் பயனுள்ளவராக ஒருவர் இருந்தார். அவர் கட்டுமான தொழில் சார்ந்த அநேக காரியங்களில் கைதேர்ந்தவராய் இருந்தார். தண்ணீர் குழாய் அமைத்தல், மின்சார பணிகள், காற்று பதனாக்கம், தச்சு வேலை போன்ற கட்டிட சம்பந்தமான அநேக விஷயங்களை அறிந்துவைத்திருந்தார். அதனாலேயே நாங்கள் சபைக்காக ஒரு பழைய கட்டிடத்தை வாங்கியபோது, அவரையே அதின் புனரமைக்கும் பணிக்காக அதிகம் சார்ந்திருந்தோம்.

அந்த பணியானது மிகவும் சிறப்பாக முடிந்ததால், நான் வேறொரு இடத்தில மற்றொரு சபைக்கு போதகராக மாறுதலாகி போனபின்னரும், அங்கேயும் நடைபெற்ற சபை கட்டிட புணரைக்கும் பணிக்காக அவரையும், அவரது மனைவியையும் உதவிக்காக அழைத்தோம். அவர் உண்மையாக ஒரு சகலகலா வல்லவனாய் கட்டிட அமைப்புகள், தன்னார்வலர்கள், பணியாளர்கள் என்று அனைத்து காரியங்களையும் கையாண்டார். இப்படிப்பட்டவர்கள் நமக்கு கிடைப்பது கடினம்தான்.

போதக பணியை போல சில பணிகளும், அழைப்புகளும் கூட அநேக எதிர்பார்ப்புகளுடன் வருகிறது.

சொன்னது போலவே, போதக பணியை போல சில பணிகளும், அழைப்புகளும் கூட அநேக எதிர்பார்ப்புகளுடன் வருகிறது. சபையை நடத்தும்படி அழைக்கப்பட்டவர்மேல் வைக்கப்படும் கோரிக்கைகளுக்கு, பெரும்பாலும் இப்படிப்பட்ட சகலகலா வல்லவன்மேல் உள்ள எதிர்பார்ப்புகளே காரணமாகும். அநேக திருச்சபைகளில் இன்றும் ஒரு போதகர்:

• சிறந்த ஆலோசகராக, நிதி ஆளுநராக, தரிசனம் உள்ளவராக, பேச்சாளராக, அக்கறை உள்ளவராக, ஊழியனாக மற்றும் நிர்வாக இயக்குனராக இருக்க வேண்டும்
• வல்லவராக, எப்போதும் சுறுசுறுப்புள்ளவராக; முதியவர், இளம் குடும்பத்தினர், குழந்தை வளர்ப்பவர்கள் மற்றும் நவீன யுகத்தினரென்று அனைவரோடும் இசைந்திருக்க வேண்டும்.
• வரலாறு, நீதி நெறிமுறைகள், தற்கால நிகழ்வுகள் மற்றும் பல துறைகளில் நுண்ணறிவோடும் ஞானத்தோடும் கருத்துக்களை தெரிவிக்க வேண்டும்

இதுபோன்ற கோரிக்கைகளால், ஏன் அநேக போதகர்கள் சோர்ந்துபோயுள்ளனர் என்று புரிந்துகொள்வது எளிது. ஒரு சாதாரண மனிதனாக தேவனின் மந்தையை மேய்க்கவும், வழிநடத்தவும் அழைக்கப்பட்ட ஒருவரிடம் இத்தகைய காரியங்களை எதிர்பார்த்தால் அசாதாரணமானது. ஆகவேதான் ஆவிக்குரிய வழிகாட்டிகள், எது முக்கியமானதோ அதின்மேல் கவனம் செலுத்துவது அவர்களுக்கு அவசியம்.

தெளிவுண்டாக்குதல்

அக்காலத்தில் தீமோத்தேயுவின் மீதிருந்த எதிர்பார்ப்புகளினூடே அவருக்கு தெளிவுண்டாகும்படியாக பவுல், ஒரு போதகருடைய பல்வேறு பணிகள், கடமைகள், பொறுப்புகள் ஆகியற்றை இணைத்து, வடித்து, ஒரு பொதுவான நடுநிலையாக வகுத்த வாக்கியந்தான் “கற்பனையின் பொருள்” (1:5).

ஜனங்களின் வாழ்விற்குள்ளாக தேவனின் வார்த்தைகளை ஒன்றிணைக்க, ஊழியம் கரிசனை கொள்ளவேண்டும்.

எளிமையாக சொல்லவேண்டுமெனில், அறிவுரைகளை வார்த்தையிலும் நடக்கையிலும் எடுத்து சொல்வதே அணைத்து ஊழியங்களின் அடிப்படையாகும். சூழ்நிலைகள் எதுவாயினும், ஆவிக்குரிய மேய்ப்பர்கள் தேவ ஜனங்களை வெளிப்படுத்தப்பட்ட வார்த்தைகளாலும், சிந்தனைகளாலும், தேவனுக்கேற்றவைகளாலும் போஷிக்க வேண்டும். சபைகளில் ஜனங்களுக்கு நன்மைபயக்கும் அநேக சேவைகள் வழங்கப்பட்டாலும், அணைத்து தரப்பினருக்கும் வாழ்வின் அணைத்து சூழல்களில் இருப்பவர்களுக்கும் தேவனின் வார்த்தைகளின் ஞானத்தையும் சத்தியத்தையும் புரிந்துகொள்ளும்படி உதவுவதைவிட முக்கியமானது வேறொன்றுமில்லை. போதகருக்கான உபதேசத்தில் பவுல் முக்கியத்துவப்படுத்தும் காரியத்தை கவனியுங்கள்.

போதகரின் பங்கும் அறிவுறுத்தலும்

போதகரின் பங்கில், தேவனின் வார்த்தையை கற்பித்தல் என்பது அவ்வளவு மையமானது எனவேதான் பவுல் இரண்டு கருத்துக்களை ஒன்றிணைத்து “மேலும் நாம் அனைவரும் தேவனுடைய குமாரனைப் பற்றும் விசுவாசத்திலும் அறிவிலும் ஒருமைப்பட்டவர்களாகி, கிறிஸ்துவினுடைய நிறைவான வளர்ச்சியின் அளவுக்குத்தக்க பூரண புருஷராகும்வரைக்கும், பரிசுத்தவான்கள் சீர்பொருந்தும்பொருட்டு, சுவிசேஷ ஊழியத்தின் வேலைக்காகவும், கிறிஸ்துவின் சரீரமாகிய சபையானது பக்திவிருத்தி அடைவதற்காகவும், அவர், சிலரை அப்போஸ்தலராகவும், சிலரைத் தீர்க்கதரிசிகளாகவும், சிலரைச் சுவிசேஷகராகவும், சிலரை மேய்ப்பராகவும், போதகராகவும் ஏற்படுத்தினார்.” (எபேசியர்.4:11-13) என்றெழுதினார். சில வேத வல்லுநர்கள் இந்த பத்தியிலுள்ள இரண்டு பதங்களும் (மேய்ப்பர்,போதகர்) ஒரே பங்கையே குறிக்குமென்கின்றனர். ஆரோக்கியமான மந்தையை மேய்க்க, போதித்தலென்பது மிகவும் அவசியமாதலால் இதை போதகமேய்ப்பனின் ஊழியம் எனலாம். இந்த அடிப்படையான போதிக்கும் பணியே போதக ஊழியத்திலுள்ள மற்றெல்லா பகுதிகளுக்கும் அஸ்திபாரமாகவும், பின்புலமாகவும் உள்ளது.

அறிவுறுத்தலும் சபையின் நலனும்

தீமோத்தேயுவுக்கான இரண்டாம் நிருபத்தில், போதகரின் பங்கில் இரண்டாம் பகுதியை பவுல் இணைக்கிறார். அவர் “சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் ஜாக்கிரதையாய்த் திருவசனத்தைப் பிரசங்கம்பண்ணு; எல்லா நீடிய சாந்தத்தோடும் உபதேசத்தோடும் கண்டனம் பண்ணி, கடிந்துகொண்டு, புத்திசொல்லு” (2 தீமோ. 4:2) என்றார். கண்டனம் பண்ணுதல், உபதேசித்தல், கடிந்து கொள்ளுதல் போன்ற செயல்களை நிறைவேற்ற கிருபை பொதிந்த அறிவுரைகள் தேவை. நமது சொந்த வார்த்தைகளை பயன்படுத்துவதில் இருக்கும் வரையறைகள் நம்மை அடிக்கடி தடைபடுத்துவதால் இது மிகவும் முக்கியமானது. ஆனால் ஆவிக்குரிய வழிநடத்துதல் தேவைப்படுவோருக்கு உபதேசிக்கவும், ஆலோசனை சொல்லவும், போதிக்கவும் பயன்படுத்துகையில்; வாழ்வை மாற்றும் வல்லமை கொண்ட தேவனுடைய வார்த்தை உயர்த்தப்படுகிறது.

விசுவாசியின் வளர்ச்சியும் போதனையும்

கரிசனை கொள்ளுதலும் தேவ ஜனங்களை தேவனுடைய வார்த்தையினால் போஷிப்பதும் இரு வழி உறவு முறை ஆகும். விசுவாசிகள் தங்களை போஷிப்பவர்களுக்கு தக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று பேதுரு கற்றுத் தந்தார் “நீங்கள் வளரும்படி, புதிதாய்ப் பிறந்த குழந்தைகளைப்போல, திருவசனமாகிய களங்கமில்லாத ஞானப்பாலின்மேல் வாஞ்சையாயிருங்கள்.” (1 பேதுரு.2:3). புதிதாய் பிறந்த குழந்தை ஆரோக்கியமாய் வளர்வதற்கு எப்படி போஷாக்கு தேவைப்படுகிறதோ, அதேபோல விசுவாசியும் கிறிஸ்துவின் சுபாவங்களில் வளர இது தேவை. கிறிஸ்துவை குறித்த தெளிவான புரிந்து கொள்ளுதல் உண்டாக, தேவனுடைய வார்த்தையின் மூலம் ஊக்கமளிப்பதே ஒரு போதகரின் உயர்ந்த அழைப்பாகும். “எந்த மனுஷனையும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேறினவனாக நிறுத்தும்படிக்கு, அவரையே நாங்கள் அறிவித்து, எந்த மனுஷனுக்கும் புத்திசொல்லி, எந்த மனுஷனுக்கும் எல்லா ஞானத்தோடும் உபதேசம்பண்ணுகிறோம்” (கொலோ. 1:28) என்று பவுல் எழுதினார். இதுவே நமக்கு முன் வைக்கப்பட்டிருக்கும் சவாலாகும்: வேத வசனங்களின் படி விசுவாசிகள் கிறிஸ்துவின் சாயலிலும் வேதாகம குணாதிசயங்களிலும் வளரும்படி அவர்களை ஊக்குவிப்பது. ஒரு ஊழியனின் கருவி பெட்டகத்தில் வேத வசனங்களே நிகரற்ற முக்கியத்துவம் வாய்ந்த கருவியாய் உள்ளது. ஏனெனில், அவைகள் சத்தியத்தை அறிவித்து ஜீவனைக் கொடுக்கும்.

பவுலுடைய போதர்களுக்கான நிருபங்களில் அவர் மீண்டும் மீண்டும் ஊழியத்தில் இருக்கும் வேதாகமத்தின் முக்கியத்துவத்தையே சுட்டி காண்பிக்கின்றார். ஆவியானவரால் அருளப்பட்ட அறிவுறுத்தல்கள் நிறைந்த வசனங்களே மேய்ப்பனின் கரிசனைக்கான சாரம்சம். அதுவே ஒரு ஆத்துமாவிற்குப் பாலையும், ஜீவ அப்பத்தையும், திட ஆதாரத்தையும் அளிக்கின்றது. இயேசுவானவர், பேதுருவை மூன்று முறை தம்முடைய மந்தையை மேய்க்கும்படி அறைகூவல் விடுத்ததே, பவுல் தீமோத்தேயுவையும் தீத்துவையும் நோக்கி விடுகின்ற அறைகூவலிலும் எதிரொலிக்கின்றது (பார்க்க யோவான். 21:15-17).

உங்கள் சொந்த வார்த்தைகளுக்கான மதிப்பு ஒரு வரையறைக்குட்பட்டது, ஆனால் வேதத்தின் வார்த்தைகளுக்கோ நித்திய மதிப்பு உண்டு

கட்டளையை நிறைவேற்றுதல்

போதிப்பதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று இருக்கின்ற நம்மில் சிலருக்கு, நம்முடைய ஊழியங்களில் இருக்கும் அநேக அழுத்தங்களினால் தடைப்பட்டு இருக்கும் படிக்கும் நேரம் அல்லது கற்றுக் கொள்ளும் நேரத்தை மீட்டெடுக்க வேண்டியது அவசியமாகும். ஆனால் அத்தகைய மாற்றம் நமக்கு நன்மையே. தேவனின் வார்த்தைக்கான ஊழியத்தை முதன்மைப்படுத்தி மையப்படுத்துதல், போதக பணியைக் குறித்ததான பாரம்பரியமான வரையறையிலிருந்து நம்மை வழிவிலகச் செய்யாது, அதே சமயம் அது தற்போதுள்ள நடைமுறையில் எது சிறந்தது என்பதைக் குறித்தும் கரிசனை கொள்ளாது. மாறாக அது கிறிஸ்துவின் சீஷர்களுக்கும், அவர்கள் அமைக்கப் போகும் சபைக்கும் அவர் கட்டளையிட்டதின் அடிப்படை சாரம்சமாக இருக்கும். அவர் மத்தேயு 28:19-20 இல், இவ்வாறு சொன்னார்:

ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்; இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென்.

நிறையத் திருச்சபைகளில் இந்த மாபெரும் கட்டளையானது மிஷனரி பணிகளோடும், சபைக்கு வெளியே செய்யவேண்டிய ஆத்தும ஆதாயத்தோடும் இணைத்துப் பேசப்படுகின்றது. ஆனால், அது துரதிர்ஷ்டவசமாக முழுமை பெறாத புரிந்துகொள்ளுதலாகவே இருக்கின்றது.

இந்த பத்தியில் உள்ள முக்கியமான வினைச்சொல் என்ன? “சீஷராக்குங்கள்” என்பதே, சீஷர்கள் என்பதற்கு கிரேக்கத்தில் “கற்றுக் கொள்கிறவர்கள்” என்பதே பொருள். நாம் சீஷர்களை அல்லது கற்று மாணவர்களை எவ்வாறு உருவாக்கலாம்? இந்த பத்தியில் உள்ள மூன்று செயல்கள் அதற்குப் பதில் அளிக்கின்றது.

• புறப்பட்டுப் போகுதல்
• ஞானஸ்நானம் கொடுத்தல்
• உபதேசித்தல்

சபையின் தேவனானவர் தமது ஊழியர்களுக்குக் கொடுத்த உன்னத சுவிசேஷ மயமான வாக்கியத்திலும் கூட, போதித்தல் என்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. கிறிஸ்துவின் மன்னிப்பைப் பெற்றுக் கொண்ட ஒரு நபர், அதனைத் தொடர்ந்து தேவனுடைய வார்த்தையினால் உண்டாகும் உபதேசத்திலும், அதைச் செயல்படுத்துவதிலும் வேரூன்ற வேண்டும்.

தரத்தை நிர்ணயித்தல்

தேவனுடைய வார்த்தையை உபதேசிக்க அர்ப்பணிப்பதற்கும், அதைக் குறித்து கரிசனை கொள்ளுவதற்கும் அநேக நியாயமான காரணங்கள் உண்டு. சத்தியத்தையும், பிழையையும் பகுத்து அறியக்கூடிய விசுவாசிகளை உருவாக்குவதற்கு இதுவே ஒரே வழி. மெய்யான கிறிஸ்துவின் சாயலில் வளர்வதற்கு இதுவே ஒரே வழி. கிறிஸ்துவை இந்த உலகத்திற்கு வெளிப்படுத்த நாம் தகுதி பெறுவதற்கு இதுவே ஒரே வழி. அப்போஸ்தலன் பேதுருகூட இதைக் குறித்து எழுதுகையில் ஒரு வலிமையான சவால் இடுகிறார்:

ஆதலால் பிரியமானவர்களே, இவைகள் முன்னமே நீங்கள் அறிந்திருக்கிறபடியால், அக்கிரமக்காரருடைய வஞ்சகத்திலே நீங்கள் இழுப்புண்டு உங்கள் உறுதியிலிருந்து விலகி விழுந்துபோகாதபடிக்கு எச்சரிக்கையாயிருந்து, நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையிலும் அவரை அறிகிற அறிவிலும் வளருங்கள். அவருக்கு இப்பொழுதும் என்றென்றைக்கும் மகிமையுண்டாவதாக. ஆமென் (2 பேது. 3:17-18).

தேவனுடைய வார்த்தையை உபதேசிக்கும் ஊழியத்தின் முக்கியத்துவத்தையும், அதைக் கேட்கிற ஜனங்களுடைய வாழ்விலே இது உண்டாக்கும் தாக்கத்தையும் குறித்து இவ்வசனம் நமக்கு நினைப்பூட்டுகிறது. நம்மால் மனிதர்களை மாற்ற முடியாது ஆனால் தேவனுடைய வார்த்தையால் கூடும். இதுவே நமது உபதேசத்தின் முக்கியத்துவமாய் இருக்கிறது. வாழ்வை மாற்றக்கூடிய வேதாகம ஞானத்தைப் பிறர் புரிந்துகொள்ளும்படியாகவும், அநேகருக்கு கிடைக்கும்படியாகவும் செய்வதற்குத் தேவனின் கருவிகளாக நம்மை மாற்றுகிறது.

“ஏன்” என்கிற கேள்விக்குப் பதில் அளித்தல்

ஒரு அப்பாவாக, குழந்தை கேட்கும் முதலும் தொடர்ச்சியுமான கேள்விகளைக் குறித்து எனக்கு அனுபவம் உண்டு. அதில் இருக்கும் ஒரே வார்த்தை “ஏன்?”

காரியம் எப்படி இருப்பினும், எதுவாயிருப்பினும் குழந்தைக்குத் தேவையானதெல்லாம், அதின் ஏனென்ற கேள்விக்கான பதில்.இந்தக் கேள்விக்கான பதிலை அவர்கள் தேடுவது நமக்குச் சற்று எரிச்சல் ஊட்டுவதாகவே இருக்கும். சில சமயங்களில் குழந்தைகள் வேண்டுமென்றே இப்படிப்பட்ட கேள்விகளைக் கேட்கும் என்று, ஐந்து பிள்ளைகளின் தகப்பனான எனக்குத் தெரியும் (இந்த சுபாவம் அவர்களுடனே கூட பிறப்பிலேயே இருக்கிறது). ஆனால் ஏன்? என்ன? போன்ற கேள்விகளுக்கான பதிலைத் தேடும் தேடலின் வேரானது, காரியங்களை மேற்புறத்திலிருந்து மேலோட்டமாக பார்ப்பதைக் காட்டிலும் ஊடுருவி அதில் மையத்தைப் பார்க்கும் ஆவலில் இருக்கிறது. ஏன் என்ற கேள்விக்கான பதிலைப் புரிந்து கொள்வதே ஞானமான வாழ்க்கையின் வேராய் இருக்கிறது.

வாழ்க்கையில், ஏதோ ஒரு நிலையில் “ஏன்” என்ற கேள்வியை கேட்பதை விட்டுவிட்டு; “’ஏன் இருக்கக் கூடாது” என்று கேட்க ஆரம்பிக்கிறோம். ஆகவே ஏன் என்கிறதான கேள்வியின் முக்கியத்துவம் குறைகிறது. ஏன் என்கிற கேள்விக்கான முக்கியத்துவம் குறைகையில், நமக்கு ‘எது சாத்தியம்?’ அல்லது ‘எனக்கு இதிலிருந்து என்ன கிடைக்கும்?’ என்பவற்றைக் குறித்ததான கரிசனை மேலோங்கும். “இதிலே எனக்கு என்ன உண்டு?” என்கிற இந்த கேள்வி நம்முடைய வாய்களிலிருந்து சுலபமாக வெளியேறுவதில்லை. ஆனால் நம் எண்ணங்களை அடிக்கடி ஆக்கிரமிக்கும்.

“இதிலே எனக்கு என்ன உண்டு?” என்கிற இந்த கேள்வி நம்முடைய வாய்களிலிருந்து சுலபமாக வெளியேறுவதில்லை. ஆனால் நம் எண்ணங்களை அடிக்கடி ஆக்கிரமிக்கும்.

ஏன் “ஏன்”‘ என்கிற கேள்வி இன்னமும் அவசியம்?

துரதிருஷ்டவசமாக, இப்படிப்பட்ட மனப்பான்மை சபையையும் மேற்கொண்டுள்ளது. ஏன் என்கிற கேள்விகளுக்குப் பதில் அளிப்பதின் மூலம், நாம் செய்கிறவற்றுக்கான நித்தியமான நோக்கங்களைப் புரிந்து கொள்வதற்கு மாறாக, தற்காலத்திற்கு ஏற்றவற்றை மட்டுமே சிந்திப்பது என்று ஆகிவிடும். ஆயினும், “என்ன?” என்கிறதான கேள்வி, “ஏன்?” என்கிறதான கேள்விக்குப் பின்பாகவே இருக்க வேண்டும் என்று வேதம் தெளிவாக விளக்குகிறது. ஏன் இயேசு பிறந்தார், ஏன் அவர் மரிக்க வேண்டும், ஏன் நாம் சுவிசேஷம் அறிவிக்க வேண்டும், ஏன் நல்லவர்கள் கூட சில சமயம் துன்பப்படுகிறார்கள், நமது செயல்களைக் காட்டிலும் நமது இருதயத்தின் நோக்கங்கள் ஏன் முக்கியம். நமது போதகப் பணியானது இது போன்ற காரியங்களில், “என்ன?” என்கிறதான காரணிகள் “ஏன்?” என்கிற காரணிகளைக் கொண்டே நிர்ணயம் செய்யப்படுவது தெளிவாகிறது.

ஊழியத்தில், “என்ன?” என்பவற்றின் திறன் “ஏன்?” என்பவற்றைக் கொண்டே தீர்மானிக்கப்படுகிறது

“ஏன்” என்கிற கேள்விக்கு இயேசு ஏன் முக்கியத்துவம் அளித்தார்

ஏசுவானவர் அடிக்கடி இருதயத்தின் நோக்கத்திற்கு முக்கியத்துவம் அளித்தார். தன்னுடைய சீஷர்களும், தம்முடைய எதிரிகளும் காரியங்களை ஆழமாகப் பார்க்கும்படி, அவர் தொடர்ச்சியாக அவர்களை உந்தி தள்ளினார். தற்சமயத்திற்கு மட்டுமே நன்மையாய் இருக்கும் “என்ன?” என்பவற்றைக் கடந்து காரிய நோக்கத்தையும், உள்நோக்கத்தையும் ஆராய்ந்து பார்க்கும்படி அவர்களைத் தூண்டினார். இயேசுவுக்கு “ஏன்?” என்பது முக்கியமானதாய் இருந்தது, காரணம் அதுவே ஒரு காரியம் செயல்படுகிறதற்கான செயலை தாண்டி, ஏன் அது செய்யப்படுகிறது என்பதற்கான நோக்கத்திற்கும் விடையளித்தது.

செயல்களுக்குப் பின்பாக இருந்த நோக்கத்தை அறிவதற்கான இயேசுவின் ஆவலை சில எடுத்துக்காட்டுகளில் பாருங்கள்:

•  உடைக்காகவும் நீங்கள் கவலைப்படுகிறதென்ன? (மத். 6:28)
• நீ உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை உணராமல், உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பைப் பார்க்கிறதென்ன? (மத். 7:3)
•  எஅற்பவிசுவாசியே, ஏன் சந்தேகப்பட்டாய் (மத். 14:31)
• நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவரைத்தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே; நீ ஜீவனில் பிரவேசிக்க விரும்பினால் கற்பனைகளைக் கைக்கொள் (மத். 19:17)
• என்னை ஆண்டவரே! ஆண்டவரே! என்று நீங்கள் சொல்லியும், நான் சொல்லுகிறபடி நீங்கள் செய்யாமற்போகிறதென்ன? (லூக். 6:46)

சிலசமயம், நோக்கத்தின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்வதென்பது; கிறிஸ்துவின் முன்னுரிமைகளைப் புரிந்துகொள்வதாகும். தூய்மையான நோக்கத்திற்கான வேட்கை, நமது ஊழியத்தைக் குறித்த எண்ணத்திலும் முழுமையாக இருக்க வேண்டும்.

ஊழியத்தில் “ஏன்” மேலோங்குகையில்

மீட்பின் திட்டத்தில்; பிதாவாகிய தேவனுக்கும், குமாரனாகிய தேவனுக்கும் இடையே இருக்கும் உறவிற்கான நோக்கங்களைக் கடந்து, மற்றும் ஒரு ஏன் என்கிறதான கேள்வி முக்கியமாக இருக்கின்றது. நாம் ஏன் ஊழியம் செய்கிறோம்? நம்மை உந்தி தள்ளுவது, நம்மை ஊக்கப்படுத்துவது, நம்மை நடத்துவது எது? ஒருவேளை இதுவே, 1 தீமோத்தேயு 1:5 நேர்த்தியாய் சமநிலைப்படுத்தப்பட்ட ஊழிய அறிக்கையாவதற்குக் காரணமாயிருக்கலாம். நோக்க அறிக்கையென்பது நாம் என்ன செய்கிறோம், ஏன் செய்கிறோம் மேலும் எவ்வாறு செய்யப் பார்க்கிறோம் என்பவற்றைப் பற்றிக்கொள்ள நமக்கு உதவுகிறது.

நாம் ஏன் ஊழியம் செய்கிறோம்? பவுலின் பதில் உன்னதமானதும் எளிமையானதுமாய் உள்ளது, “கற்பனையின் பொருள்… அன்பே.”

இது ஆச்சரியமானது!

ஒரு இறையியலாளருடைய மனதையும், ஒரு பழைய ஏற்பாட்டுத் தீர்க்கதரிசியின் மனோபாவத்தையும் உடையவராக பவுல் வர்ணிக்கப்பட்டார். ஜனங்கள் கிறிஸ்துவிடம் வருவது அல்லது கிறிஸ்துவை போல முதிர்ச்சி அடைவது அல்லது விரைவாய் வளரக்கூடிய, அநேகருடைய வாழ்வை மாற்றக்கூடிய ஊழியங்களை ஸ்தாபிப்பது அல்லது பரிசுத்தமும் நீதியும் நிறைந்த வாழ்வை வெளிப்படுத்துவது என்பது போன்ற இவையே நமது இலக்காக பவுல் நிர்ணயிக்க நாம் எண்ணலாம். இவை அனைத்துமே வேதத்தின்படியாக உன்னதமான நோக்கங்கள்தான் ஆனால் பவுல், “அன்பையே” தனது இலக்காக நிர்ணயிக்கிறார். பிறகு மற்றவை அனைத்தும்; நாம் தேவனை நேசிக்கும் அனுபவத்திற்கும், அவரை நமது முழு உள்ளத்தோடு நேசிக்கவும், நம்மைப் போலப் பிறரையும், நமது எதிரிகளையும் கூட நேசிக்கவும் ஏதுவாகும்.

தேவனின் அன்பை வெளிப்படுத்துவதற்கான நமது அர்ப்பணிப்பையே இந்த முன்னுரிமை பிரதிபலிக்கிறது, இது நம்முடைய ஊழியம் சார்ந்த செயல்பாடுகளில் மட்டும் அல்லாமல் நம் அனைத்து செயல்களையும் முடிப்பதற்கு எடுக்கும் முயற்சிகளிலும் வெளிப்படும். நமது செயல்களுக்குப் பின்பாக இருக்கும் உந்துவிசை தேவனின் அன்பே என்பதை இது காட்டுகிறது.

நமது ஊழியத்தில் தேவனின் அன்பை வெளிப்படுத்துவதற்கான அர்ப்பணிப்பை இந்த முன்னுரிமை பிரதிபலிக்கிறது

சுவிசேஷத்திற்கான பவுலின் சொந்த அர்ப்பணிப்பிலும் இந்த முன்மாதிரியை நாம் பார்க்கலாம். 2 கொரிந்தியர் 5 இல், கொரிந்து சபை இன்னும் சுவிசேஷமயமாகும்படி பவுல் அறைகூவல் விடுத்தார். இவ்வாறு அவர் சொல்லுவதற்கு அநேக காரணங்கள் இருந்தன

• நாம் அனைவரும் கிறிஸ்துவின் நியாயாசனத்திற்கு முன்பாக நிற்க வேண்டும் (வ.10)
• ஜனங்கள் நித்திய நியாயத்தீர்ப்பை எதிர்கொள்ள வேண்டும் (வ.10-11)
• ஒரு நபருடைய வாழ்க்கை கிறிஸ்துவுக்குள்ளாக புதிய சிருஷ்டியாக மாறுகிறது (வ.17)
• விசுவாசிகள் தேவனின் ஸ்தானாபதிகளாக வாழும்படி அழைக்கப்படுகின்றனர் (வ.20)

ஆத்தும ஆதாயத்திற்கான இந்த ஒவ்வொரு காரணமும் முக்கியமானது. ஒவ்வொன்றும் விலையேறப்பெற்றது. இந்த அவசியமான ஊழிய மதிப்பீடுகளின் மத்தியில், பவுல் இவை அனைத்தும் முக்கியமானவை என்று தெளிவுபடுத்தியிருந்தாலும் கூட, கிறிஸ்துவின் செய்தியை ஜனங்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு இந்த காரணங்கள் தன்னை இயக்கவில்லை என்று பவுல் கூறுகிறார். பிறகு அவரை உந்தி தள்ளியது என்ன?

கிறிஸ்துவினுடைய அன்பு எங்களை நெருக்கி ஏவுகிறது; ஏனென்றால், எல்லாருக்காகவும் ஒருவரே மரித்திருக்க, எல்லாரும் மரித்தார்கள் என்றும்; பிழைத்திருக்கிறவர்கள் இனித் தங்களுக்கென்று பிழைத்திராமல், தங்களுக்காக மரித்து எழுந்தவருக்கென்று பிழைத்திருக்கும்படி, அவர் எல்லாருக்காவும் மரித்தாரென்றும் நிதானிக்கிறோம் (2 கொரி 5:14-15).

மூலாதாரமாக பவுல் தமது ஊழியத்தில் உண்மையுள்ளவராய் இருக்க, அவரை உந்திக் தள்ளியது கிறிஸ்துவின் அன்பே. உண்மையில் அது தன்னை நெருக்குவதாகவும் அவர் கூறுகிறார். இது ஒரு போர் உபாய வார்த்தை. கிரேக்கத்தில் ஒரு போர் வீரன் தன்னுடைய நிலையில் இறுதியாய் நின்று தன் கடமையைச் செய்வதைக் குறிக்கும் வார்த்தை. தன்னுடைய வேதாகம விரிவுரையில், ஒரு விரிவுரையாளர் பவுல் கூறும் “நெருக்குதல்” என்கிறதான பதத்தை இவ்வாறு விளக்குகிறார்:

மேற்கொள்ள முடியாத இந்த ஆற்றல் நம்மை ஒரே ஒரு பெரிய நோக்கத்திற்குட்படுத்தி, மற்ற காரியங்கள் அனைத்தையும் புறம் தள்ளும்படி நம்மை ஆளுகிறது. கிரேக்கப் பதத்தில் ‘அனைத்து ஆற்றல்களையும் ஒரே வடிகாலில் கட்டாயப்படுத்திச் செலுத்துதல்’ என்று உள்ளது. ஆத்துமாவை ஆக்கிரமிக்க நினைக்கும் எந்த காரியத்திற்கு எதிராகவும் அன்பு எரிச்சல் அடையும் (2 கொரி.11-13).

மூலாதாரமாக பவுல் தமது ஊழியத்தில் உண்மையுள்ளவராய் இருக்க, அவரை உந்தித் தள்ளியது “கிறிஸ்துவின் அன்பே”

கிறிஸ்துவின் அன்பே நமது ஊழியத்திற்கான உந்துவிசையாய் இருக்கையில், அவ்வன்பே நம்முடைய இருதயங்களை பிரகாசிப்பித்து நம் சுபாவங்களை அவருடைய வேட்கையினால் நிரப்பும்.

“ஏன்” எவ்வாறிருக்கும்

1 கொரிந்தியர் 13:4-8 நமக்கு அன்பின் குணாதிசயங்களை நினைப்பூட்டுகிறது. இதுவே நமது வாழ்வின் துடிதுடிப்பாகவும், நம்மிலிருக்கும் அவரது ஜீவனின் வெளிப்பாடாகவும் இருக்க வேண்டும்.

அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது; அன்புக்குப் பொறாமையில்லை; அன்பு தன்னைப் புகழாது, இறுமாப்பாயிராது, அயோக்கியமானதைச் செய்யாது, தற்பொழிவை நாடாது, சினமடையாது, தீங்கு நினையாது, அநியாயத்தில் சந்தோஷப்படாமல், சத்தியத்தில் சந்தோஷப்படும். சகலத்தையும் தாங்கும், சகலத்தையும் விசுவாசிக்கும், சகலத்தையும் நம்பும், சகலத்தையும் சகிக்கும். அன்பு ஒருக்காலும் ஒழியாது.

அன்பே நமது ஊழியத்தின் உந்துசக்தியாக இருக்கவேண்டும். அதுவே நம்மை மாற்றி, நாம் ஊழியம் செய்யும் கிறிஸ்துவை போலவே நம்மையுமாக்கும்.

அன்பு நம்மை மாற்றி, நாம் ஊழியம் செய்யும் கிறிஸ்துவை போலவே நம்மையுமாக்கும்

•  நம் இருதயங்களை அவரது அன்பினால் ஆளுகை செய்ய நாம் விட்டுக்கொடுக்கையில், அது நம் சுபாவத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்
• அவருடைய அன்பு நம் சுபாவங்களைச் சீரமைக்க விட்டுக்கொடுக்கையில், அது நமது மதிப்பீடுகளின் மேலும், முன்னுரிமைகளின் மேலும் தாக்கத்தை ஏற்படுத்தும்
• நமது மதிப்பீடுகளையும், முன்னுரிமைகளையும் மாற்றும்படி அவரது அன்பிற்கு நாம் விட்டுக்கொடுக்கையில், கணிதரும் ஊழியத்தின் இதயத்தை நமக்குள் உருவாக்கும்

“எப்படி” என்கிற கேள்விக்குப் பதிலளித்தல்

வீடுகளை மேம்படுத்தும் வேலையில், இன்றைக்கு சில காரியங்கள் பொதுவாக உள்ளன. வீட்டை மேம்படுத்தும் பொருட்களை விற்கும் அங்காடிகள், கடைகள் போன்றவற்றைக் கடந்து இன்று நிறையப் புத்தகங்கள், வலைத்தளங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், (குறைந்தபட்சம் இரண்டு சேனல்கள் இதற்கென்றே இருக்கின்றது) இவை மக்கள் தங்களுடைய வீடுகளை தாங்களே எவ்வாறு மேம்படுத்திக் கொள்ளலாம் என்பதை கற்றுக் கொடுப்பதற்காகவே இருக்கின்றது. நமது வீடுகளுக்கான முதலீட்டையும் நமது வாழ்க்கையின் தரத்தையும் மேம்படுத்துவ வேண்டுமானால் இத்தகைய மூல உபாயங்கள் நமக்கு எளிதான, பாதுகாப்பான வழிமுறைகளை விளக்குகின்றன. “எவ்வாறு?” என்று நாம் சிந்திக்கையில், நாம் பொதுவாக எண்ணுகிற சில விஷயங்கள்:

• மூன்று எளிய முறைகளில் சுவரை உண்டாக்குதல்
• மூன்று எளிய முறைகளில் மின்சார விளக்கிற்கான வயரிங் வேலை
• மூன்று எளிய முறையில் வீட்டுத் தோட்டம் அமைத்தல்
• மூன்று எளிய முறைகளில் கூரையைப் பழுது பார்த்தல்
• இப்படி மூன்று எளிய முறைகளில் இன்னும் எண்ணற்ற காரியங்கள்…

எனக்கு இந்த மூன்று எளிய முறைகள் பிடிக்கும். ஆயினும், இந்த அற்புதமான ஆனால் கடினமான மேய்ப்பனின் பணியைச் செய்பவர்களுக்கென்று, எந்த ஒரு சுலபமான மூன்று வழிமுறைகளும் பவுலின் மனதில் இருக்கவில்லை. உண்மையில் அவருடைய பாணியில், போதக பணியில் உள்ள “எவ்வாறு” என்பதற்கும், இதுபோன்ற குறிப்பிட்டு செயல்முறைக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை. காரணம் அதற்குக் குணாதிசயமே தேவை.

ஈ. எம். பவுண்ட்ஸ் என்பவர் பவுலின் இத்தகைய மனோபாவத்தை, “சபை சிறப்பான வழிமுறைகளைத் தேடுகிறது ஆனால் தேவனோ சிறப்பான நபர்களைத் தேடுகிறார்” என்று பிரதிபலிக்கிறார்.

அந்த அளவிற்கு தீமொத்தேயு, தம்முடைய ஆவிக்குரிய ஊழியத்தில் எழும்பும் “எவ்வாறு” என்கிற சிக்கலுக்குத் தீர்வாகத் தெய்வீக சுபாவத்தையே பதிலாகப் பார்க்க வேண்டும் என்று, பவுல் விரும்பினார். இப்படிப்பட்ட ஊழியத்திற்கு அஸ்திபாரம் எது? இவ்வாறு நித்தியத்திற்கும் நிலைத்து நிற்கும் முக்கியத்துவம் வாய்ந்த செயல்களை நாம் எவ்வாறு செய்யப் போகிறோம்? அப்பேர்ப்பட்ட ஊழியம், கிறிஸ்துவுடன் நெருங்குகையில் உண்டாகும் ஆவிக்குரிய குணாதிசயத்திலிருந்து புறப்படும் மூன்று சுபாவங்களில் வழிந்தோடும் என்று பவுல் சொல்கிறார்: சுத்தமான இருதயம், நல்மனசாட்சி மேலும் மாயமற்ற அன்பு.

banner image

மாசில்லாத, அசுசிப்படாத ஏதோ ஒன்றின் அழகை வர்ணிப்பதற்காகப் பயன்படுத்தப்படுகிற உருவகம் தான் “பனியைப் போன்ற தூய்மை” என்பது. என்னுடைய இளம்பிராயத்தில் நானும், “இந்த சோப் 99.4% தூய்மையானது” என்பது போன்ற விளம்பரங்களைப் பார்த்து வளர்ந்தேன். அது கிட்டத்தட்டப் பூரணத்தை நெருங்குவதால் அதனால் நாம் ஈர்க்கப்படுகிறோம். என் கருத்து எளிமையானது: “நீங்கள் சுத்தமாய் இருக்க வேண்டுமென்றால், எது தூய்மையானதோ அதை நீங்கள் சார்ந்து கொள்ள வேண்டும்.”

தூய்மை என்பது வெறும் சுத்தத்தைக் காட்டிலும் மேலானது. எப்படியாயினும், அதுவும் “தூய்மையாக்கப்பட்டது”. ஏதாகிலும் ஒன்று தூய்மையாய் இருக்குமாயின், அது தன்னிலிருந்த அசுத்தங்கள் நீக்கப்பெற்றது. இது வெறும் குடிநீருக்கோ, தூய்மையான ஒலிவ எண்ணெய்க்கோ அல்லது மோட்டார் வாகன எண்ணெய்க்கோ மட்டும் அல்ல நம்முடைய இருதயத்திற்கும் பொருந்தும்.

விசுவாசத்தால் தூய்மையாக்கப்பட்ட இருதயமே சுத்த இருதயம்

தீமோத்தேயுவுக்கான பவுலின் அறைகூவலில், கிறிஸ்துவின் நாமத்தினால் நாம் மற்றவர்களுக்கு வழங்கும்படி முதலிடத்தில் இருப்பது “சுத்த இருதயமே”. தேவனுக்கு முன்பாகவும் மனிதர்களுக்கு முன்பாகவும் நேர்மையான மனதோடு இருப்பதைக் குறித்து இது பேசுகிறது. ஆத்துமாவின் அந்தகாரமான, வஞ்சனையான நோக்கங்களை வெறுக்கும் ஒரு நிலை இது. “தேவனே என்னை ஆராய்ந்து, என் இருதயத்தை அறிந்துகொள்ளும், என்னைச் சோதித்து, என் சிந்தனைகளை அறிந்துகொள்ளும்.வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பார்த்து நித்திய வழியிலே என்னை நடத்தும்.” (சங்கீதம் 139:23-24) என்று தொடர்ந்து தங்களுடைய வழுவிப்போகும் இருதயத்தைக்குறித்து மிகவும் ஜாக்கிரதையோடு ஜெபிக்கும் ஜனங்களைக் குறிக்கிறது.

அர்த்தமுள்ள ஆராதனைக்கான திறவுகோல்.

சங்கீதம் 24 இல், தேவனை அணுகக்கூடிய மனிதனை வர்ணிப்பதற்கு தாவீது இந்த பதத்தை உபயோகிக்கிறார்: “கைகளில் சுத்தமுள்ளவனும் இருதயத்தில் மாசில்லாதவனுமாயிருந்து, தன் ஆத்துமாவை மாயைக்கு ஒப்புக்கொடாமலும், கபடாய் ஆணையிடாமலும் இருக்கிறவனே.”(வ.4). சுத்தமான இருதயமின்றி; ஆராதனையானது ஆவி, அர்ப்பணிப்பு மற்றும் பற்றுறுதி இல்லாத இயந்திர உடற்பயிற்சியைப் போல இருக்கும். ஏன்? ஏனெனில் தேவன் நம்முடைய இருதயங்களைத் தூய்மையாக்காவிட்டால், நம்மால் தேவனை ஆராதிக்க முடியாது.

தேவனுடனான தொடர்ச்சியான ஒரு உறவுக்கான திறவுகோல்.

மலைப் பிரசங்கத்தில் நம்முடைய ஆண்டவரும் “இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்” (மத். 5:8) என்று அறிவித்தார். சுத்தமான இருதயமென்பது தேவன் தம்மிடம் நெருங்கிவருவதற்கென நமக்குத் தருகின்ற ஒன்று.

திவ்விய எடுத்துக்காட்டான வாழ்விற்குத் திறவுகோல்.

தன்னுடைய விசுவாசத்தை வாழ்ந்து காட்டுகையில், ஒரு ஆவிக்குரிய தலைவனாகப் பிறருக்கு எடுத்துக்காட்டாக வாழ்வதற்கு, தேவனுடைய பார்வையில் சரியானவற்றில் அஸ்திபாரம் கொள்ளும்படி தீமோத்தேயுவை பவுல் அறிவுறுத்தினார். “அன்றியும், பாலியத்துக்குரிய இச்சைகளுக்கு நீ விலகியோடி, சுத்த இருதயத்தோடே கர்த்தரைத் தொழுதுகொள்ளுகிறவர்களுடனே, நீதியையும் விசுவாசத்தையும் அன்பையும் சமாதானத்தையும் அடையும்படி நாடு.” (2 தீமோ. 2:21) என்று எழுதினார்.

தேவ பிள்ளையின் இருதயத் தூய்மைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இன்னும் அநேக உதாரணங்கள் உண்டு. ஆனால் காரியம் தெளிவாய் இருக்கிறது: நமது ஆவிக்குரிய ஊழியத்தில் நாம் சந்திக்கும் “எப்படி” என்கிறதான காரியத்திற்கு, நாம் எந்த விசுவாசத்திற்கு நேராய் ஜனங்களை நடத்த விரும்புகிறோமோ, அதை முதலாவது நாம் இறுகப் பற்றி கொள்ள வேண்டும். அந்த விசுவாசத்தில் பிறர் பங்கு கொள்ள நாம் உபயோகமுள்ளவர்களாய் இருக்க வேண்டுமானால், நாம் அந்த விசுவாசத்தின் தாக்கத்தை நம் வாழ்விலும் இருதயத்திலும் வெளிக்காட்ட வேண்டும்.

எந்த விசுவாசத்தில் பிறர் பங்கு கொள்ள நாம் உபயோகமுள்ளவர்களாய் இருக்க விரும்புகிறோமோ, நாம் அந்த விசுவாசத்தின் தாக்கத்தை நம் வாழ்விலும் இருதயத்திலும் வெளிக்காட்ட வேண்டும்.

சில ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு ஊழிய ஸ்தாபனத்தை சேர்ந்த சிறந்த போதகர் ஒருவர், ஒரு மாய்மாலமான கிறிஸ்தவர்களைக் குறித்து பிரசிங்கிக்க கேட்டேன். அதில் அவர் தன்னுடைய சொந்த விசுவாச பயணத்தைச் சாட்சியாகக் கூறினார் அதில் அவர் அநேக சமயம் சார்ந்த செயல்களை மிக ஆர்வமாகச் செய்தார்; வாலிபக் குழுவின் தலைவராகப, பகுதிநேர சுவிசேஷனாக, நல்ல ஒரு ஆவிக்குரிய தலைவனாக இருந்தவர், வருங்காலத்தில் கிறிஸ்துவுக்காக வல்லமையாக எழும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்டார்.

இவ்வாறு தன்னுடைய சொந்த கதையைச் சொல்லிக் கொண்டிருந்த போதகர் இப்படியாகக் குறிப்பிட்டார், அவர் பிறரிடம் எந்த விசுவாசத்தை வல்லமையாக அறிவித்தாரோ அந்த விசுவாசத்தை தன்னுடைய சொந்த இருதயம் ஏற்றுக் கொள்ளாததை உணர்ந்தார். ஒரு கட்டத்தில் அவர் தன்னுடைய வாழ்வைத் திரும்பிப் பார்க்கையில், அவர் அநேக நல்ல காரியங்களை கற்றுக் கொடுத்திருந்தார், செய்திருந்தார்; ஆனால் அவருடைய இருதயமோ மாறவில்லை. அவர் உண்மையாகவே கிறிஸ்துவிடம் வந்த பின்னரே, தான் ஒரு மாய்மாலமான கிறிஸ்தவன் என்பதை உணர்ந்ததாக தன்னுடைய சொந்த வார்த்தையில் சொல்கிறார். ஆனால் இந்த போதகர் கிறிஸ்துவில் தன்னுடைய விசுவாசத்தை உறுதியாய் பற்றிக் கொண்ட பின்னர், மெய்யாகவே மிகுந்த பிரயோஜனம் உள்ளவராக மாறினார். மேலும், தேவன் அவரை வல்லமையான வழிகளில் பயன்படுத்தி மற்றவர்களிடம் பெரிய மாற்றத்தைக் கொண்டு வரவும், குறிப்பாகப் பல வகையான மதங்களிலிருந்து கிறிஸ்துவிடம் ஜனங்களைக் கொண்டு வரவும் அவரை பயன்படுத்தினார். அவர்களில் நானும் ஒருவன். ஊழியத்தில் மாற்றம் வருவதற்குச் சுத்த இதயமே காரணம் என்பதை ஒத்துக் கொள்ளும் மிகச் சில ஊழியர்களில் இவரும் ஒருவர்.

பாபி ஜோன்ஸ் என்ற புகழ்பெற்ற கோல்ஃப் விளையாட்டு வீரரைப் பற்றின திரைப்படத்தில் வருகிற காட்சி ஒன்றில், 1920 களின் புகழின் உச்சியிலிருந்த இவர்; யு. எஸ். ஓபன் கோல்ஃப் போட்டியின் இறுதிச்சுற்றில் வால்டர் ஹேகன் என்பவரை எதிர்த்து விளையாடினார். அப்போட்டியில் இவர் பந்தை அடிக்க, பந்தோ நெரிசலான வைக்கோல் புதரில் மாட்டிக் கொண்டது. அவ்விடத்திலிருந்து அடுத்த ஆட்டத்தை ஆட சென்றவர் அங்கேயே நின்றுகொண்டு “நான் பந்தை சற்றே தள்ளிவிட்டு விட்டேன்” இன்று போட்டி நடுவரிடம் கூறினார். மேலும் ஒரு ஆட்ட சுற்றுமுறை தடையையும் தானே தண்டனையாக வாங்கிக் கொண்டார்.

போட்டியின் நடுநிலையாளர்கள் குழுவாகக் கலந்தாலோசித்த பின்பு அவர்கள் ஜோன்சிடம் “நாங்கள் நடுவரிடமும், ஹேகனிடமும் (போட்டியாளர்), மற்ற சிலரிடமும் விசாரித்தோம். ஆனால் ஒருவரும் நீங்கள் பந்தை நகர்த்தியதாகப் பார்க்கவில்லையே” என்றனர். இது ஜோன்ஸ்க்கு ஒரு போக்கு ஏற்படுத்தி இருந்தாலும், அவர் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. “இல்லை ஐயா, நான் அதைத் தள்ளிவிட்டேன்” என்று மறுபடியும் உறுதியாகக் கூறினார். “வாலிபனே நீ நிச்சயம் பாராட்டப்பட வேண்டும்” என்று ஒரு போட்டி கண்காணிப்பாளர் கூற, “இது ஏதோ வங்கியை நான் கொள்ளையடிக்காமல் இருப்பதற்காகப் பாராட்டப்படுவது போல இருக்கிறது. எனக்கு இப்படித்தான் இந்த போட்டியை விளையாடத் தெரியும்” என்றார் ஜோன்ஸ். முடிவாக, ஒரே ஒரு ஆட்டசுற்றில் யு.எஸ் ஓபன் போட்டியில் ஜோன்ஸ் தோற்றார். ஆனால் அவர் தனது சுத்த மனசாட்சியைக் காத்துக் கொண்டார்.

“என் தரத்தைக் குறைத்துக் கொள்வதற்கு மாறாக, சுத்த மனசாட்சியை காலியான பணப்பையோடு வைத்துக் கொள்வேன்.” டேவி கிராக்கெட்

தன்னுடைய “த்ரீ ரோட்ஸ் டூ தி அலமோ” என்ற புத்தகத்தில் வரலாற்று ஆசிரியர் வில்லியம் ஸ்மித் என்பவர்; ஜிம் போவி, வில்லியம் பாரெட் டிராவிஸ் மற்றும் டேவி கிராக்கெட் ஆகியோர் எவ்வாறு பயணித்து அந்த யுத்த களத்தை அடைந்தனர் என்பதை விளக்குகின்றார்.

கிராக்கெட்டைக் குறித்து ஸ்மித் குறிப்பிடுகையில், தன் வாழ்நாள் முழுவதும் டேவி கடன்பாரத்தோடு போராடினாலும் சொன்னதைச் செய்யக்கூடியவராக, தன் வாக்கில் சுத்தம் உள்ளவராய் இருந்தார் என்றும்; ஒரு முறை ஒரு டாலர் கடனை திரும்பச் செலுத்தப் பல நூறு மைல்கள் நடந்து சென்றதாகவும் கூறுகிறார். கிராக்கெட்டின் குறிக்கோள் என்ன? “என் தரத்தைக் குறைத்துக் கொள்வதைக் காட்டிலும் நான் சுத்த மனசாட்சியை ஒரு காலியான பணப்பையோடு காத்துக் கொள்ளவே விரும்புகிறேன்”. இதனாலேயே அவருடைய நீதியும், நேர்மைகுணமும் அவருடைய வீரதீரச் சாகசங்களைப் போலவே மிகவும் மதிப்பிடப்படுகிறது.

காரியங்கள் எப்படிச் செய்யப்பட்டாலும் அதன் விளைவை மட்டுமே ஆராய்கிற இன்றைய உலகில் சுத்த மனசாட்சி என்பது அர்த்தமற்றது போலத் தெரியலாம் அல்லது அது அவசியமற்றதாகவும் தோன்றலாம். ஆனால் அப்படி அல்ல. நாம் உண்மையாகவே கனி கொடுக்கும் ஒரு வாழ்வை வாழ்வதற்குச் சுத்த மனசாட்சி மிகவும் அவசியம். ஊழியத்திலோ இது மிக மிக அவசியம். இதை எபிரேய நிருபத்தின் ஆக்கியோனும் ஒப்புக்கொள்கிறார். தான் எப்போதும் ஒரு உத்தமனாய் விளங்க அவர் மிகவும் பிரயாசப்பட்டார்.

நாம் உண்மையாகவே கனி கொடுக்கும் ஒரு வாழ்வை வாழ்வதற்குச் சுத்த மனசாட்சி மிகவும் அவசியம்.

எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்; நாங்கள் நல்மனச்சாட்சியுள்ளவர்களாய் எல்லாவற்றிலும் யோக்கியமாய் நடக்க விரும்புகிறோமென்று நிச்சயித்திருக்கிறோம். (எபி.13:18)

ஊழியத்திலே “எவ்வாறு?” என்பதற்கான ஒரு வடிவத்தை வடிக்கையில், சுத்த மனசாட்சி என்கிற இந்த காரியம் பவுலுக்கு மிகவும் அவசியமாய் இருந்தது. சுத்த மனசாட்சி என்றால் என்ன? குற்ற மனசாட்சி நீங்கப் பெற்ற மனசாட்சியே சுத்த மனசாட்சி. இது, நம்முடைய வாழ்வை அநேக வழிகளில் பாதிக்கிறது. ஆகவேதான் பவுல் தனது இளம் மேய்ப்பனாகிய தீமொத்தேயுவுக்கு, இதை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார்:

• இந்த நல்மனச்சாட்சியைச் சிலர் தள்ளிவிட்டு, விசுவாசமாகிய கப்பலைச் சேதப்படுத்தினார்கள். (1 தீமோ.1:19)
• விசுவாசத்தின் இரகசியத்தைச் சுத்த மனச்சாட்சியிலே காத்துக்கொள்ளுகிறவர்களாயும் இருக்கவேண்டும். (1 தீமோ.3:9)
• உன்னிலுள்ள மாயமற்ற விசுவாசத்தை நினைவுகூருகிறதினால், என் முன்னோர்கள் முதற்கொண்டு சுத்த மனச்சாட்சியோடே ஆராதித்துவரும் தேவனை நான் ஸ்தோத்திரிக்கிறேன். (2 தீமோ.1:4)

இவை எல்லாவற்றையும் கடந்து, சுத்த மனசாட்சி மட்டுமே கொடுக்கக்கூடிய விடுதலையை பவுல் அனுபவித்தார். பேலிக்ஸ் என்கிற ஆளுநருக்கு முன்பாக, தன் எதிர்வாதத்தை வைக்கையில், பவுல் தன்னைக் குறித்துச் இப்படியாக சொல்ல முடிந்தது:

இதனால் நான் தேவனுக்கும் மனுஷருக்கும் முன்பாக எப்பொழுதும் குற்றமற்ற மனச்சாட்சியை உடையவனாயிருக்கப் பிரயாசப்படுகிறேன். (அப்.24:16)

தீமோத்தேயுவுக்கு எழுதப்பட்ட இந்த கடைசி நிருபத்தில் அவருக்காகவும் அவருடைய ஊழியத்துக்காகவும் பவுல் கொண்ட கரிசனை அவருடைய ஆழ்மனதிலிருந்ததே என்பதில் சந்தேகம் இல்லை. நினைவில் கொள்ளுங்கள் பவுல் விசுவாசிகளை துன்பப்படுத்தி, ஜனங்களைச் சிறைப்படுத்தி, தனது கோபத்தையும் சுயத்தையும் வெளிப்படுத்திக் கொண்டிருந்தார். ஆயினும் அவரால் மேற்கண்டவாறு பேலிக்ஸிடம் சொல்லக் கூடுமானால் அவர் தேவனோடும், தான் துன்புறுத்தியவர்களோடும் காரியங்களைச் சரிசெய்ய போதுமான, கடினமான முயற்சிகளை மேற்கொண்டார்.

முறையான, அர்த்தமுள்ள உறவுகளை பேணுவது நம்மை சில காரியங்களில் அதிக விடுதலையை அனுபவிக்கச் செய்யும்.

நாம் மற்றவர்களை ஏமாற்றியதை ஒப்புக்கொள்வது கடினமானதும், சங்கடமானதுமாய் இருக்கலாம். நாம் ஒப்புரவாக முயன்றாலும் ஜனங்கள் மறுக்கலாம். ஆனால் நாம் தொடர்ந்து முயற்சிக்க வேண்டும். நல் மனசாட்சியை அடைய அதுவே ஒரே வழி. சரியான முறையில், அர்த்தமுள்ள வழியில் தேவனோடும், பிறரோடும் நாம் சரியான உறவில் இருக்கிறோம் என்கிற நிச்சயமானது நம்மை சில காரியங்களில் இன்னும் அதிக விடுதலையாக்கும். பவுல் பேலிக்ஸிடம் கூறிய அந்த “குற்றமற்ற மனசாட்சியை” அடைய பிரயாசப்பட வேண்டும்.

ஊழியத்தில் நாம் ஆற்றலுள்ளவர்களாவதற்கு, உடைந்த உறவுகளைச் சீர்படுத்துவதைக் காட்டிலும் மற்ற முட்டுக்கட்டைகள் குறைவே. எனது இருபது ஆண்டுக்கால போதக வாழ்க்கையில் எனக்கு இது அடிக்கடி நேர்ந்தது இல்லை, ஆனால் எப்போதாவது எனக்கும் என் மனைவிக்கும் ஞாயிறு காலை சபைக்குச் செல்லும் முன் சில கருத்து வேறுபாடுகள் உண்டாகும். நான் சரியா என் மனைவி தவறா என்பதெல்லாம் இங்கே காரியம் அல்ல, நான் பிரசங்க பீடத்தில் நின்று ஜனங்களுக்குத் தேவனுடைய மகத்துவங்களை விளக்குகிறேன், ஆனால் எனது வாழ்வின் முக்கிய உறவில் பிரிவினை சுவர் எழும்பி இருக்கிறது என்பதே காரியம்.

அங்கே பாத பீடத்தில் நான் நிற்கையில் என் கண்களுக்குத் தெரிந்ததெல்லாம், சுமார் 20 அடி உயரத்திற்கு என் மனைவியின் முகமும்; நான் ஏற்படுத்தின காயமுமே. கவனசிதறல்களோடு போராடிக் கொண்டே எனது காலை பிரசங்கத்தை எப்படியோ செய்து முடிக்கும் நான், அந்த மாலை பிரசங்கத்தில் அப்படி இருக்கக் கூடாது என்பதில் உறுதியாய் தீர்மானிப்பேன். மாலைக்குள்ளாக எனது காரியங்களைச் சரி செய்வதற்குத் தீர்மானித்த பின்னர் என் மனைவியோடு ஒப்புரவாகிற நான், மீண்டும் அந்த உறவைப் புதுப்பித்துக் கொள்வேன். அப்போது இன்னும் ஆற்றல் மிகுந்த ஊழியம் செய்யும் வழி தெளிவாகப் பிறக்கும்.

நாம் ஒருபோதும் சுத்தமான சாட்சியின் வலிமையைக் குறைத்து மதிப்பிடக் கூடாது.

ஊழியத்திலோ, வாழ்க்கையிலோ நாம் ஒருபோதும் சுத்த மனசாட்சியின் வலிமையைக் குறைத்து மதிப்பிட இடம் கொடுக்கக் கூடாது.

banner image

அக்காலத்தில் மாயமற்ற விசுவாசத்திற்கான அழைப்பு ஒரு பெரும் முக்கியத்துவத்தைப் பெற்றிருந்தது. மாயமற்றது என்றால் மாயமாலமற்றது என்று பொருள், அதாவது எந்த ஒரு முகமூடியும் அணியாதது. மாயமாலக்காரன் என்கிற வார்த்தை; சூழ்நிலைக்கு ஏற்றவாறு தக்க முகமூடியை அணிந்து கொண்டு தங்கள் உணர்வுகளையும், பாவனைகளையும் மாற்றிக் கொள்ளும் நடிகர்களைக் குறிப்பது. மொத்தத்தில் தனக்குப் பொருத்தம் இல்லாததாகத் தன்னை காட்டிக்கொள்ளும் நபரைக் குறிக்கிறது. இழிவான குணம் கொண்ட ஒருவன் ஒரு வாலிபனுக்கு அறிவுரை கூறுகையில், “எப்போதும் நேர்மையாய் இருப்பது என்பதே மிகவும் கடினம். ஆனால் போலியாக நேர்மையாக இருப்பதை நீ கற்றுக் கொண்டால், இந்த உலகமே உன்னை நம்பி விடும்” என்ற இந்த வார்த்தைகளில் மாயமாலம் எதிரொலிக்கிறது.

இதற்கு முரணாக, மாயமற்ற விசுவாசத்தின் மாதிரியாக வாழும்படி தீமோத்தேயு அறைகூவல் பெற்றார். இதன் முடிவே அதிகாரப்பூர்வமானதும், அங்கீகரிக்கப்பட்டதுமாய் இருந்தது. வேதவல்லுனர் வில்லியம் பார்கிலே இவ்வாறு எழுதினார்:

நாணயமே கிறிஸ்தவ சிந்தனையாளரின் மிகவுயர்ந்த குணாதிசயம். சத்தியத்தை அறியும் ஆவல், மற்றும் சத்தியத்தை அறிவிக்கும் ஆவல் ஆகிய இவ்விரண்டிலும் அவன் உண்மையுள்ளவனாய் இருப்பான்.

உண்மையான விசுவாசம் என்பது மாயமாலமற்றதாக இருக்கிறது. அதுவே, அதிகாரப்பூர்வமானதும் அங்கீகரிக்கப்படுகிறதுமாய் இருக்கிறது.

இக்கருத்துக்கள் இணைந்து நாணயம் என்கிற வார்த்தைக்கு உயர்ந்ததோர் விளக்கம் அளிக்கிறது. அது அசலானதும், நம்பகமானதுமாய் இருக்கிறது; எந்த ஒரு முகமூடியும் அணியாமல், போலியாக நடிக்காமல்; எந்த ஒரு தவறான உள்நோக்கமும் உடையதாய் இருக்காமல் உள்ளது. நம் விசுவாசத்தோடு அதைப் பொருத்தினால்; நமது இரட்சகரைப் பின்பற்ற வேண்டும் என்கிற நேர்மையான விசுவாசமே அது.

இரட்சகரைப் பின்பற்ற வேண்டும் என்கிற நேர்மையான விசுவாசமே உண்மையான விசுவாசம்.

தீமோத்தேயுவுக்கான தனது இறுதி நிருபத்தில் பவுல் இப்படிப்பட்ட விசுவாசமே தீமோத்தேயுவுக்கு மாதிரியாக வாழ்விலிருந்ததாக குறிப்பிடுகிறார்:

அந்த விசுவாசம் முந்தி உன் பாட்டியாகிய லோவிசாளுக்குள்ளும் உன் தாயாகிய ஐனிக்கேயாளுக்குள்ளும் நிலைத்திருந்தது; அது உனக்குள்ளும் நிலைத்திருக்கிறதென்று நிச்சயித்திருக்கிறேன். (2 தீமோ.1:5)

ஒரு பாட்டியும், ஒரு தாயும் ஒரு வாலிபனுக்கு அளித்த உன்னதமான மரபிது. அசலான, நாணயமான விசுவாசத்திற்கு முன்மாதிரி. கிறிஸ்துவின்மந்தைக்கு ஒரு மேய்ப்பன் காண்பிக்கும் வல்லமையான முன்னுதாரணம். மாயமற்ற விசுவாசம் என்பது ஒரு மிகப்பெரிய ஈவு; நாம் அனுபவிக்கவும், பிறருக்குக் கொடுக்கவும் ஏற்றது.

காரியத்தின் தொகை

இவ்வாறே நீங்கள் ஊழியம் செய்யவேண்டும். சுலபமாக்க, பவுல் நமக்கு எனது எளிமையான மூன்று வழிமுறைகளையும் கொடுக்கவில்லை. மாறாக அவர் நமக்கு மூன்று சவாலான குணாதிசயங்களின் தன்மைகளை விளக்கினார், மேலும் வாழ்வை மாற்றக்கூடிய ஊழியத்திற்கு அவற்றையே அடித்தளமாக்கினார். எபிரேயர் 10:22- 23 இல், அதின் ஆசிரியர் இக்காரியங்களை ஒன்றிணைக்கிறார்:

துர்மனச்சாட்சி நீங்கத் தெளிக்கப்பட்ட இருதயமுள்ளவர்களாயும், சுத்த ஜலத்தால் கழுவப்பட்ட சரீரமுள்ளவர்களாயும், உண்மையுள்ள இருதயத்தோடும் விசுவாசத்தின் பூரண நிச்சயத்தோடும் சேரக்கடவோம். அல்லாமலும், நம்முடைய நம்பிக்கையை அறிக்கையிடுகிறதில் அசைவில்லாமல் உறுதியாயிருக்கக்கடவோம்; வாக்குத்தத்தம்பண்ணினவர் உண்மையுள்ளவராயிருக்கிறாரே.

அது சுலபமல்ல, ஆனால் எளிமையானது. அது கிறிஸ்துவைப்போல வாழ்வதற்கான அழைப்பு, பயனுள்ள பாத்திரங்களைக் கொண்டு அவர் தடையின்றி பணியாற்றுவதற்கான விட்டுக்கொடுத்தல்; இந்த களிமண்ணான பாத்திரங்கள் அசலானவை, தூய்மையாக்கப்பட்டவை, சுத்த மனசாட்சி மட்டுமே அருளும் நிச்சயத்தோடு இவை பயன்படக் கூடியவை.

banner image

இதுவே நாம் என்ன, ஏன், எவ்வாறு செய்வதாகும். எனவே தேவனின் வார்த்தையை அறிவிப்பதின்மூலம், மக்கள் தேவனுடைய உன்னதமான உயர்ந்த அன்பை அறிந்து அனுபவிக்கலாம்.

ஒரு ஆங்கில திரைப்படமொன்றில்; ரோம தளபதி ஒருவன் தனது போர்படையினர் ரோம தேசத்திற்காக வலிமையோடும் கௌரவத்தோடும் போரிடும்படி ஆற்றுகின்ற வீரவுரையில், இவ்வாறு சொல்கிறான் “இவ்வாழ்க்கையில் நாம் செய்வது நித்தியமட்டும் நீளும்” என்று.என்னைப் பொறுத்தமட்டில், திரைப்பட வசனங்களிலேயே உன்னதமான வாக்கியம் இது.

இந்த வார்த்தைகள் நமது இருதயத்திலும் ஒலித்து, நமது சிந்தைகளில் ரீங்காரமிட வேண்டும். தேவனின் பிள்ளைகளாக, நாம் அவருக்கு ஊழியம் செய்ய அழைக்கப்பட்டுள்ளோம். நித்தியத்திற்கும் நிலைக்கும் காரியங்களைக் கொண்டே அவருக்கு ஊழியம் செய்ய வேண்டும். இப்பேர்ப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த செயலை நாம் பாதியிலேயே நிறுத்திவிட முடியாது அல்லது கழித்துக்கட்டக் கூடாது.

“இவ்வாழ்க்கையில் நாம் செய்வது, நித்தியத்திற்கும் எதிரொலிக்கும்” ~ கிளாடியேட்டர் திரைப்படத்தில் மாக்ஸிமஸ் மெரிடியஸ்

ஏனெனில், கிறிஸ்து தம்மையே நமக்காகத் தந்திருக்க; நம்மை அவருக்கென ஊழியத்தில் தரவேண்டியவர்களாய் இருக்கிறோம். இந்த சிந்தனை சிதறலை ஐசக் வாட்ஸ் என்பவர் “வியத்தகு சிலுவையை நான் ஆராய்கையில்” என்ற தனது கீர்த்தனையின் வரிகளில், “ஆச்சரியமான அன்பிது, தெய்வீகமானது; என் ஆத்துமா, வாழ்வு, என் எல்லாவற்றையும் கோருகிறதே” என்று அழகாகப் படம்பிடிக்கிறார். நமது இரட்சகர் எப்பேர்பட்டவரென்பதால், நாம் செய்வதில் ஒரு அர்த்தமுண்டு. இது மிகமுக்கியம் ஏனெனில் இது நமக்கான கட்டளை. இந்த வாழ்வில் நாம் செய்வது, நித்தியமட்டும் நீளுமென்பதால் இதில் பொருளுண்டு.

மறுபடியுமாக, கிறிஸ்துவின் நாமத்தில் நாம் பிறருக்கு ஊழியம் செய்யும் விருப்பத்தில்; தீமோத்தேயுவுக்கான பவுலின் அறைகூவலில் உள்ள வார்த்தைகளைச் சிந்திப்போமாக.

கற்பனையின் பொருள் என்னவெனில், சுத்தமான இருதயத்திலும் நல்மனச்சாட்சியிலும் மாயமற்ற விசுவாசத்திலும் பிறக்கும் அன்பே. 1 தீமோத்தேயு 1:5

பிறருக்கான ஊழியத்தைக் குறித்து இவ்வார்த்தைகள் வர்ணிக்கும் கணிதரும் ஊழியத்தைப் பற்றி ஜெபத்தோடு ஆராய்வோமாக.

ஒருவேளை நீங்கள் உற்சாகமாக ஆவிக்குரிய ஊழியத்தில் ஈடுபடாவிடில், அவர் தன்னைக்குறித்துக் கூறுபவற்றை ஏற்றுக்கொள்வீர்களா? அதைக்காட்டிலும் முக்கியமாக, அவர் உங்களுக்காகப் பலியானாரே; உங்கள் ஊழியத்திற்கு அவர் தகுதியானவரில்லையா?

ஒருவேளை நீங்கள் கிறிஸ்துவையும் அவருடைய ஈவாகிய நித்திய ஜீவனையும் அறியாமலிருந்தால், ஒருவேளை நீங்கள் சபைக்கே செல்லாதவராய் இருந்தால், ஒருவேளை உங்கள் வாழ்நாள் முழுதும் உங்களை ஆவிக்குரிய பணியில்” ஈடுபடுத்திகொள்ளாதிருந்தால், இரட்சகர் உங்கள் இருதயங்களைத் தூய்மையாக்கி உங்களுக்கு மன்னிப்பையும் நித்தியத்தையும் அருளுவாராக. இதுவே அவர் வந்ததின் நோக்கமும், சிலுவையில் அவரடைந்த வியாகுலத்தின் நோக்கமுமாம். இன்றைக்கு அவரை நம்புங்கள், பிறகு கூடுமானமட்டும் கூடுமான ஜனங்களை அவருக்கென ஆதாயப்படுத்தும் வாஞ்சையில் எங்களோடு இணைந்திடுங்கள், எஞ்சியுள்ள காலங்களில் கணிதரும் ஊழியத்தின் இதயத்தோடு வாழ்வோம்.

கற்பனையின் பொருள் என்னவெனில், சுத்தமான இருதயத்திலும் நல்மனச்சாட்சியிலும் மாயமற்ற விசுவாசத்திலும் பிறக்கும் அன்பே. 1 தீமோத்தேயு 1:5