றுவடையின் காலம் என்பது வெகுமதிகள் பெறும் காலம். பல மணி நேர உழைப்பு, வியர்வை, தொடர்ந்து தண்ணீர் பாய்ச்சுதல், எதிர்ப்புகளுக்கு மத்தியில் பயிர்களைப் பாதுகாத்தல், விரல் நகங்களுக்கு இடையில் சிக்கியிருக்கும் மண் துகள்கள் ஆகிய அனைத்து பிரயாசங்களும் நம் தோட்டத்தில் விளையும் விளைச்சலைப் பார்க்கும்போது உகந்ததாய் தெரியும்.

நம்முடைய தோட்டத்தில் விளையும் தாவரங்களின் வளர்ச்சி, நிறைவான மற்றும் சுவையான பலனைக் கொடுக்கிறது. ஆனால் நம்முடைய கிறிஸ்தவ வாழ்வின் வளர்ச்சி என்பது நம் தோட்டத்திலுள்ள கனிகளின் வளர்ச்சியைப் போல் எதிர்பார்க்கக்கூடிய ஒன்று அல்ல. நம்முடைய அதிகப்படியான பிரயாசங்கள் நம் ஆவிக்குரிய முதிர்ச்சி நிலையை அடைய உதவினாலும், நாம் குறைவான பலனையும் தோல்வியையுமே சந்திக்க நேரிடுகிறது.

ஆவியின் கனிகளைக் குறித்த பவுலின் உருவகமானது, அந்த கனிகளை நாம் அறுவடை செய்து சாப்பிட எண்ணும் வகையில் கிறிஸ்தவ முதிர்ச்சியைக் குறித்த ஒரு தெளிவைக் கொடுக்கிறது. ஆனால் அது ஏன் எப்போதும் எட்டாத தூரத்திலேயே இருக்கிறது? நாம் எவ்வளவு தான் பிரயாசப்பட்டாலும், நாம் எதிர்பார்க்கிற பொறுமையையும், நாம் தேடும் சமாதானத்தையும் பெற்றுக்கொள்வது கடினமாய் தோன்றுகிறது.

நம்முடைய முயற்சியில் பிரச்சனை என்றால் என்ன செய்வது? முனைவர். கான் காம்ப்பெல், பின்வரும் பக்கங்களில் ஆவியின் கனிகளைக் குறித்த ஒரு புதிய பார்வையை நமக்கு வழங்குவதோடு, அதை வளர்ப்பதற்கு யார் பொறுப்பு என்பதைப் புரிந்துகொள்ளவும் உதவுகிறார். இந்த ஆலோசனைகள் கிறிஸ்துவைப்போல மாறுவதற்கு உங்களுக்கு உதவியாயிருக்கும் என்று நம்புகிறோம்.

banner image

சில வருடங்களுக்கு முன்னர், என்னுடைய பிள்ளைகள் சிறியவர்களாய் இருந்தபோது, அவர்களைஆஸ்திரேலியாவின் குழந்தைகள் பொழுதுபோக்கு மற்றும் நாட்டுப்புற இசை நட்சத்திரம் கோலின் புச்சானன் இடம்பெறும் இசைக் கச்சேரிக்கு அழைத்துச் சென்றேன். நாங்கள் உள்ளே செல்வதற்குக் காத்திருந்தபோது, ஒரு அம்மா தன் மகனிடம் “ஜானி, பொறுமை என்பது ஆவியின் கனி என்பதை நியாபகம் வைத்துக்கொள்” என்று எச்சரித்தாள்.

அது எனக்கு வித்தியாசமாய் தோன்றியது. நான் பொதுவாக “பொறுமை என்பது நல்லொழுக்கம்” என்றே கேள்விப்பட்டதுண்டு. ஆனால் “பொறுமை என்பது ஆவியின் கனி” என்று சொல்லப்பட்டது எனக்கு தவறாய் தோன்றியது. அதைக் குறித்து நான் யோசிக்கும்போதெல்லாம் எனக்கு கடினமாய் தோன்றியது. அந்த பெண்ணுடைய வார்த்தைகள் சரியாய் இருந்திருக்கலாம். ஆனால் அதைக் குறித்து யோசிக்கும்போது நான் சற்று குழப்பமாய் உணர்ந்தேன். அந்த பெண்ணுடைய வார்த்தைகள் என்னை விட ஆவிக்குரிய ரீதியில் இருந்ததால், அந்த அனுபவத்தை நான் சவாலாக உணர ஆரம்பித்தேன்.

நல்லொழுக்கத்தில் எந்தத் தவறும் இல்லை என்றாலும், அது ஆவியின் கனியைப் போன்றது அல்ல. எவருக்குள்ளும் நல்லொழுக்கம் அல்லது பல நற்பண்புகள் இருக்கலாம். அவர்கள் நற்பண்புகளை தானே வளர்த்துக்கொண்டவர்கள். ஒரு “ஒழுக்கமான நபர்” என்பவர் பொறுமையாகவும் தைரியமாகவும் தாராளமாகவும் இருக்கும்பொருட்டு தன்னை தகுதிபடுத்திக்கொண்டவர் என்று அர்த்தம். ஆனால் “ஆவியின் கனி” என்பது முற்றிலும் வேறுபட்டது. இது நம்முடையது அல்ல, ஆவியானவருடையது என்பது தெளிவாய் தெரிகிறது. ஆவியின் கனியை பழுக்கவைப்பதற்கு மனவுறுதியும் ஒழுக்கமும் மட்டும் போதாது. இது ஆவியானவருடைய கனி என்பதினால், பரிசுத்த ஆவியானவரைப் பெற்றிருப்பவர்கள் மட்டுமே இதை அறுவடையை செய்ய முடியும்.

என் குழந்தைகளுடன் நான் இருக்கும்போது, “பொறுமை என்பது ஆவியின் கனி” என்று சொல்லி அவர்களை ஒழுங்குப் படுத்த எனக்கு ஏன் தோன்றவில்லை என்று நான் ஆச்சரியப்பட்டேன். இதுவரை அவர்களை பொறுமையாயிருங்கள் என்று சொல்லியோ அல்லது ஒழுங்காய் இருங்கள் என்று சொல்லியோ நான் கட்டுப்படுத்தியிருக்கலாம். ஆனால் நான் ஆவிக்குரிய பார்வையில் சிந்திக்கவில்லை. எனவே, வேதாகம வசனங்களின் அடிப்படையில் பெற்றோர்த்துவத்தை கையாளவேண்டும் என்கிற பாடத்தை அன்று நான் கற்றுக்கொண்டேன்.

அந்த அனுபவத்திற்காய் நான் நன்றி செலுத்துகிறேன். ஆனால் அதைக் குறித்து நான் அதிகம் சிந்திக்கும்போது, ஆவியின் கனிகளை இவ்வாறு செயல்படுத்துவது சரியா என்னும் கேள்வி எனக்குள் எழும்புகிறது. நம்முடைய பிள்ளைகளை ஆவிக்குரிய சுபாவங்களிலும் குணாதிசயங்களிலும் வளர்ப்பது அவசியம் தான். அவர்களுக்கு வேதம் என்ன சொல்லுகிறது என்பதை கற்றுக்கொடுப்பதும் அவசியமே. வேதம் சுபாவங்களையும் குணாதிசயங்களையும் மறுரூபமாக்கக்கூடியது என்பதை பிள்ளைகளும் உணர வேண்டும். ஆகையால், “பொறுமை என்பது ஆவியின் கனி” என்று ஒருவர் சொல்லுவதில் என்ன பிரச்சனை இருக்கிறது?

கலாத்தியர் 5:22-23இல் பவுல் அப்போஸ்தலர் ஆவியின் கனிகளை வரிசைப்படுத்தும்போது, அவர் ஆலோசனை சொல்லுவதற்காய் அவைகளை பதிவிடவில்லை என்பதை நாம் புரிந்துகொண்டால் பிரச்சனை என்ன என்பதை நாம் தெளிவாய் விளங்கிக்கொள்ளக்கூடும். அது சொல்லப்பட்ட நோக்கம் முற்றிலும் வேறு என்றாலும் அது நம்முடைய வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது என்பதில் மறுப்பில்லை.

பவுல் என்ன சொல்ல வருகிறார் என்பதைப் புரிந்துகொள்வதற்கு, ஒரு கற்பனை இலக்கை வைத்து செயல்படலாம். கலாத்தியர் 5 என்னும் சிறிய வட்டத்திலிருந்து துவங்கி, பெரிய வளையத்திற்கு நகர்கிறது. அதில் கலாத்தியர் நிருபத்தின் முழுமையான செயதியுடன ஆவியின் கனி ஆலோசனை எந்த விதத்தில் தொடர்புபடுத்தப்படுகிறது என்பதையும், வேதாகமத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ள தேவ திட்டத்தை விளங்கிக்கொள்வதற்கு ஆவியின் கனியின் முக்கியத்துவம் என்ன என்பதையும் விளங்கிக்கொள்ளும்போது, ஆவியின் கனியைக் குறித்து பவுல் என்ன சொல்லுகிறார் என்பதை நாம் விளங்கிக்கொள்ள முடியும். கிறிஸ்துவில் வெளிப்படும் தேவனுடைய ஆச்சரியமான அன்பையும், நம் வாழ்வில் வெளிப்படும் ஆவியின் வல்லமையையும் குறித்து நாம் ஆச்சரியப்பட தவறுகையில், ஆவியானவர் தொடர்ந்து நம்மை ஊக்குவிக்க வேண்டும் என்பதே என்னுடைய நம்பிக்கையும் ஜெபமுமாய் இருக்கிறது. நாம் கலாத்தியர் 5ஆம் அதிகாரத்தை பார்ப்போம்.

“ஆவியின் கனி” மற்றும் “மாம்சத்தின் கிரியைகள்”

ஆவியின் கனியைக் குறித்து நாம் வாசிக்கும்போது, இரண்டு வசனங்களுக்குள்ளாகவே நாம் யோசிக்க விழைகிறோம். அது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த வசனங்கள் என்பதினால், அவைகளை மட்டும் பிரத்யேகமாய் முக்கியத்துவம் கொடுத்து வாசிக்கும்போது, அதின் உடைந்த அர்த்தத்தை மாத்திரமே நாம் பெற்றுக்கொள்ள முடியும். நாம் கலாத்தியர் 5:22-23 வேதப்பகுதியை அதனுடைய சூழலில் நிறுத்தி வாசிக்கவேண்டும். அதுவே சரியானது.

ஆவியின் கனியானது, அதற்கு முன்பு 5:19-21இல் சொல்லப்பட்டுள்ள மாம்சத்தின் கிரியைகளுக்கு முரணாக்கப்பட்டுள்ளது.

மாம்சத்தின் கிரியைகள் வெளியரங்கமாயிருக்கின்றன; அவையாவன: விபசாரம், வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம், விக்கிரகாராதனை, பில்லிசூனியம், பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், பிரிவினைகள், மார்க்கபேதங்கள், பொறாமைகள், கொலைகள், வெறிகள், களியாட்டுகள் முதலானவைகளே; இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று முன்னே நான் சொன்னதுபோல இப்பொழுதும் உங்களுக்குச் சொல்லுகிறேன்.

ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை.

இந்த சிந்தனை மற்றும் சுபாவங்களின் பட்டியல்கள் வித்தியாசமானவைகளாய் இருக்க முடியாது. அவைகள் எதிர் துருவங்கள். இதுபோன்ற நேர்மறையான மற்றும் எதிர்மறையான காரியங்களை ஒன்றன்பின் ஒன்றாய் வரிசைப்படுத்துவது பொதுவான ஒரு எழுத்து முறையாகும். கலாத்தியர் நிருபத்தின் ஆசிரியரான பவுல் அப்போஸ்தலர் அடிக்கடி இதை பயன்படுத்துவது வழக்கம் (எ.கா. எபேசியர் 4:25-32). முரண்படும் கருத்துக்களை ஒன்றன்பின் ஒன்றாய் வரிசைப்படுத்துவது அதின் அர்த்தத்தை இன்னும் கூர்மையாக்குகிறது. கருப்பு பின்னணியில் வெள்ளை நிறம் தெளிவாய் தெரியும். ஆவியின் கனிகள் மாம்சத்தின் கிரியைகளுக்கு முற்றிலும் முரண்பாடாய் நிற்கிறது. இரவுக்கும் பகலுக்குமுள்ள வித்தியாசம் அதற்கு உண்டு.

“மாம்சம்” பற்றி பவுல் பேசும்போது, நம்மை பாவத்திற்குத் தூண்டும் சுயநலம் மற்றும் சுயநலமான சிந்தனைகளை அவர் குறிப்பிடுகிறார். தேவனுடைய கிரியைகளுக்கும் சுபாவத்திற்கும் எதிரான அனைத்தையுமே அது குறிப்பதாக புரிந்துகொள்ளப்படுகிறது.

இந்த இரண்டு வரிசைகளையும் ஒப்பிட்டு, அந்த குணாதிசயங்களைக் கொண்ட மக்களை கற்பனை செய்து பார்த்தால், இரண்டாம் வரிசையில் இடம்பெற்றுள்ளவைகள் மேன்மையானவைகளாய் தெரியும். அந்த குணாதிசயங்களே நமக்கு அவசியப்படுகிறது. ஆனால் தனிப்பட்ட குணாதிசயங்களுக்கு இடையிலான வேறுபாடு இந்த இரண்டு பட்டியல்களுக்கு இடையே உள்ள மிக முக்கியமான முரண்பாடு அல்ல. அந்த குணாதிசயங்கள் எதிலிருந்து தோன்றுகிறது என்பதே முக்கியமான முரண்பாடு.

ஆவியின் கனிகள் மாம்சத்தின் கிரியைகளுக்கு முற்றிலும் முரண்பாடாய் நிற்கிறது.

முதலாவது பட்டியல், மாம்சத்தின் கிரியைகள். இந்த பட்டியலானது மாம்சத்தின் வல்லமையை வைத்து பட்டியலிடப்பட்டுள்ளது. மாம்சமே அந்த குணாதிசயங்களை தோற்றுவிக்கிறது. மாம்சம் கிரியை செய்யும்போது, இதுவே விளைவு. மாம்சத்தை நல்லது என்றும், அதின் கிரியைகள் வெளியரங்கமாய் இருக்கிறது என்றும் பவுல் கூறுகிறார். பிக்காஸோவை யாராகிலும் நன்கு அறிந்திருந்தால், அவருடைய படைப்புகளை கண்டுபிடிப்பது எளிது. அதுபோலவே, மாம்சத்தின் கிரியைகளை எளிதில் அடையாளம் காணமுடியும்.

அதுபோலவே ஆவியின் கனிகள் ஆவியானவரால் தோற்றுவிக்கப்பட்டது. கனி என்பது ஒரு மரத்திலிருந்து தோன்றுகிறது. அக்கனியின் வளர்ச்சியானது அதைத் தாங்கியிருக்கும் ஆதாரத்தைத் பொறுத்தது. ஒரு ஆப்பிள் மரத்தின் கிளையிலிருந்து ஒரு ஆப்பிளை பறித்துவிட்டால், அது தொடர்ந்து வளராது. ஆப்பிளின் வளர்ச்சிக்கு தேவையான சத்துகள் மரத்திலிருந்தே கிடைக்கிறது. அதுபோலவே, ஆவியின் கனியும் அதன் மூல ஆதாரமாகிய பரிசுத்த ஆவியானவரையே சார்ந்திருக்கிறது. வசனங்கள் 19-21ல் உள்ள கிரியைகள் மாம்சத்திலிருந்து தோன்றுவது போல, கனிகள் ஆவியானவரால் வளர்க்கப்படுகிறது.

ஆவியின் கனிகளைக் குறித்து நாம் அறிந்துகொள்ளவேண்டிய மிக முக்கியமான விஷயம், அக்கனிகள் ஆவியானவருடையது என்பதே.

ஆவியின் கனிகளைக் குறித்து நாம் அறிந்துகொள்ளவேண்டிய மிக முக்கியமான விஷயம், அக்கனிகள் ஆவியானவருடையது என்பதே. இந்த பிரபலமான வேத வாக்கியங்கள் நாம் வாழும் வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்துக்கூடியது. ஆனால் இந்த கனிகள் யாருடையது? அவைகள் ஆவியானவருடையது. இந்த கனிகள் திரித்துவத்தின் மூன்றாவது நபரானது ஆவியானவருக்கு சொந்தமானவைகள் என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். அவரே அந்த கனி வளருவதற்கான காரணமும், ஆதாரமும், சக்தியாகவும் இருக்கிறார். அவருடைய வல்லமை மாம்சத்தின் கிரியைகளுக்கு முரணானதாய் இருக்கிறது. அவைகள் இரண்டும் நம்முடைய செயல்கள் மற்றும் சிந்தையின் இரண்டு போட்டி நிலைகள்.

ஆவியின் கனிகள் மாம்சத்தின் கிரியைகளுக்கு முற்றிலும் முரண்பாடாய் நிற்கிறது.

“சுட்டிக்காட்டக்கூடியது” மற்றும் “கட்டாயமாக்கப்படுவது” ஆகிய இரண்டும் விளங்கிக்கொள்ள சற்று கடினமான வார்த்தைகளாய் தெரியலாம். சுட்டிக்காட்டக்கூடியது என்றால், காரியங்கள் எப்படியிருக்கிறது என்று அறிவிப்பது; கட்டாயமாக்கப்படுவது என்பது அதை செய்வதற்கு கட்டளையிடுவது (கட்டாயமாக்குவது). இதற்கு முன்பு நாம் பார்த்ததுபோல, ஆவியின் கனிகள் ஆவியானவருடையது என்பது இதை உறுதிசெய்கிறது. இதன் முக்கியத்துவம் கருத்தில்கொள்ளப்படவேண்டும். அதாவது, ஆவியின் கனிகள் என்பது என்ன செய்யவேண்டும் என்னும் பட்டியல் அல்ல. இந்த வசனங்கள் நாம் எப்படி வாழ்கிறோம் (அதை அடைவோம்) என்பதை அறிவிக்கிறதே தவிர, ஆவியின் கனியை பட்டியலிடுவதற்கு முன்பு “இப்படி வாழவேண்டும்” அல்லது “அப்படி இருக்கவேண்டும்” என்று பவுல் சொல்ல முயற்சிக்கவில்லை. கனி ஆவியானவரிடத்திலிருந்து வளர்கிறது. இது நம்முடைய பிரயாசத்தினாலோ அல்லது ஒழுக்கத்தினாலோ விளையக்கூடியது அல்ல; நாம் அக்குணாதிசயங்களில் குறைவுபடும்போது, சரிபார்த்துக்கொள்ளும் பட்டியலும் அல்ல. நாம் செய்யவேண்டிய காரியங்கள் என்னவென்று சுவரில் மாட்டி வைக்கும் பட்டியலும் அல்ல. அவைகள் நாம் பின்பற்ற வேண்டிய கட்டளைகளும் அல்ல. அவைகள், உள்ளதை உள்ளதாய் சுட்டிக்காண்பிக்கும் தகவல்கள்.

கலாத்தியர் 5:22-23இல் இடம்பெற்றுள்ள காரியங்கள் ஒருவேளை கட்டளைகளாய் இருந்திருந்தால், அது கீழ்க்கண்டவாறு இருந்திருக்கும்.

நீங்கள் மற்றவர்களிடம் அன்புகூருங்கள்; சந்தோஷமாய் இருங்கள்; தேவனோடும் மற்றவர்களோடும் சமாதானமாய் இருங்கள்; யாவருடனும் பொறுமையாயிருங்கள்; நீங்கள் தயவாகவும், நற்குணத்தோடும் விசுவாசத்தோடும் இருங்கள். நீங்கள் சாந்தத்தோடும் இச்சையடக்கத்தோடும் இருங்கள்.

ஆனால் அந்த வசனங்களை நாம் வாசிக்கும்போது அவைகள் அப்படியிருக்கவில்லை. ஆனால் நம்மில் பலர் அவைகளை அப்படித்தான் கையாளுகிறோம். ஆனால் வேதம் அப்படி சொல்லவில்லை. பதிவுசெய்யப்பட்டுள்ள பட்டியலானது காரியங்கள் எதுவென சுட்டிக்காண்பிக்கக்கூடியதாய் இருக்கிறதே தவிர கட்டளையாய் பதிவுசெய்யப்படவில்லை. அது என்ன என்றே குறிப்பிடுகிறது. பவுல், “ஆவியின் கனியோ…” என்று துவங்குகிறார். அதாவது, அவைகள் என்ன என்று சாதாரணமாய் அறிவிக்கிறார். ஆவியானவர் எங்கேயோ அங்ஙனம் இந்த கனி வளருகிறது.

தவறாய் புரிந்துகொள்ள வேண்டாம். அனைத்து விசுவாசிகளும் இந்த அனைத்து கனிகளையும் கையாளத் தேவையில்லை. பரிசுத்த ஆவியானவர் கிறிஸ்தவர்களுக்குள் வாசம்பண்ணினாலும், அனைவரும் அன்பாகவும், சந்தோஷமாகவும், பொறுமையாகவும் இருப்பதில்லை. நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால், இந்த கனியானது ஆவியானவருக்கு சொந்தமானது; அவரிடத்திலிருந்து வழிந்தோடுகிறது. அவர் அவைகளை உண்டாக்குகிறார். கிறிஸ்துவை பின்பற்றுகிற ஒருவரிடம் இந்த சுபாவங்கள் தென்பட்டால், ஆவியானவர் அவருக்குள் வாசம்பண்ணுகிறார் என்று அர்த்தம். பரிசுத்த ஆவியானவர் சமாதானத்தின் கனியை என்னுடைய வாழ்க்கையில் உருவாக்கலாம்; சந்தோஷம் மற்றும் பொறுமையை உங்களுடைய வாழக்;கையில் உருவாக்கலாம்; அன்பை இன்னொருவருக்குள் உருவாக்கலாம். அது முற்றிலும் பரிசுத்த ஆவியானவருக்கு சொந்தமான கனி என்பதினால், விசுவாசிகள், சபை மற்றும் தேவனுடைய இராஜ்யம் ஆகிய அனைத்தின் நன்மைக்காய் அது எங்கு சரியாய் பொருந்துகிறதோ அங்கே அதை வளரப்பண்ணுகிறார்.

பட்டியல் முழுமையானது அல்ல

கலாத்தியர் 5:22-23ஐ கட்டளை பட்டியலாய் நாம் பயன்படுத்தக்கூடாது என்பதற்கு மற்றுமொரு முக்கிய காரணம் என்னவெனில், இது ஆவியின் கனியை விளக்கும் முழுமையான பட்டியல் அல்ல. மற்ற குணாதிசயங்களைத் தவிர்த்து இவைகளை மட்டும் பின்பற்றுவது போதுமானது அல்ல. இது அநேகருக்கு புதிதாய் தெரியலாம். அது என்ன என்பதை நாம் பார்ப்போம்.

வேதாகமத்தில் பல இடங்களில் பல்வேறு நற்குணாதிசயங்கள் பட்டியலிடப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு, மத்தேயு 5ஆம் அதிகாரத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ள மலைப்பிரசங்கத்தில் பதிவாகியுள்ள நற்குணாதிசயங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ள காரியங்களும் கலாத்தியர் 5இல் பதிவாகியுள்ள அம்சங்களுக்குள் வித்தியாசங்கள் இருக்கிறது. இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள சுபாவங்களைக் காட்டிலும் இயேசு மேன்மையான சுபாவங்களை தரித்திருந்தார்: உதாரணத்திற்கு, இரக்கம்.

கலாத்தியர் 5:19-21இல் பதிவாகியுள்ள மாம்சத்தின் கிரியைகளை மீண்டும் பார்ப்போம். அதுவும் முழுமையான பட்டியல் இல்லை என்பதுபோலவே தெரிகிறதல்லவா? ஆனால் அது அநேக சுபாவங்களை உள்ளடக்கியது என்பதை ஒத்துக்கொள்ள வேண்டும். ஆனால் அதில் கொலைப்பாதகம் இடம்பெறவில்லை. கொலை செய்வது மாம்சத்தின் கிரியையல்லவா? பட்டியலில் இடம்பெறாத காரியங்களில் இதுவும் ஒன்று. இன்னும் அநேகம் பட்டியலில் இடம்பெறவில்லை. அதே போன்று, ஆவியின் கனி பட்டியலில் தயாள குணம், விருந்தோம்பல், தாழ்மை போன்று மேலும் பல சுபாவங்களையும் சேர்க்கமுடியும்.

இதுபோன்ற பட்டியல்கள் முழுமையான தகவல்களை உள்ளடக்கியது அல்ல; அவைகள் தவிர்க்கும் காரியங்களை நாம் அதிகம் படிக்கக்கூடாது.

இதுபோன்ற பட்டியல்களில், இதற்கு மேலும் ஏதாகிலும் இருக்கிறதா? அவைகளை பவுல் ஏன் சேர்க்கவில்லை? தயாள குணம், விருந்தோம்பல், தாழ்மை போன்ற குணாதிசயங்கள் ஏன் குறிப்பிடப்படவில்லை? என்னும் குழப்பம் ஏற்படுவது இயல்பு. அது போன்ற கேள்விகளுக்கு பதிலே இல்லை என்று நான் நம்புகிறேன். ஆனால் இங்கு கேள்வி அதுவல்ல; ஆனால் அந்த கேள்விகளுக்கு பதில் சொல்வதற்கு நாம் அதிக பிரயாசப்பட்டால், அவ்வேதப்பகுதி சொல்ல முற்படும் முக்கிய கருத்துகளை நாம் விட்டுவிட நேரிடலாம். இதுபோன்ற பட்டியல்கள் முழுமையான தகவல்களை உள்ளடக்கியது அல்ல; அவைகள் தவிர்க்கும் காரியங்களை நாம் அதிகம் படிக்கக்கூடாது. மாறாக, அவைகள் பொதுவான குணாதிசயங்களின் ஓவியத்தை தீட்டுகின்றது. அதிலிருந்து மாம்சத்தின் கிரியைகளும் ஆவியின் கனிகளும் முரண்படக்கூடியவைகள் என்னும் கருத்து வலியுறுத்தப்படுகிறதே தவிர, இது முழுமையான பட்டியல் இல்லை.

அனைத்து விசுவாசிகளுக்கும் அனைத்து கனிகளும் சரிசமமாய் கிடைக்குமா?

இந்த ஆவியின் கனி பட்டியலைப் பார்க்கும்போது, அனைத்து கிறிஸ்தவர்களும் இந்த கனிகள் வெளிப்படுத்தும் சுபாவங்களை உடையவர்களாய் இருக்க வேண்டும் என்று யோசிக்கக்கூடும். அதாவது, ஆவிக்குரிய விசுவாசி சாந்தமும் இச்சையடக்கமும் இல்லாதவர் என்று நாம் எதிர்பார்க்கக்கூடாது. அனைவருக்குள்ளும் ஒரே ஆவியானவர் இருப்பாரேயாகில், அவர் அனைவருக்குள்ளும் ஒரே விதமான கனிகளையே உருவாக்குவாரல்லவா?

இந்த ஊகம் சரியா? இந்த வேதப்பகுதி விளக்கமளிக்கக்கூடிய வகையில் எழுதப்பட்டுள்ளது. விசுவாசிகளின் வாழ்க்கையில் ஆவியானவர் உருவாக்கும் சில கனிகளை இது குறிப்பிடுகிறது. ஆனால் சில விசுவாசிகள் மற்றவர்களை விட அதிக சந்தோஷத்தை அனுபவிக்கலாம்; சிலர் மற்றவர்களைக் காட்டிலும் சாந்தமுள்ளவர்களாய் இருக்கலாம். சிலருக்கு மற்றவர்களைக் காட்டிலும் இச்சையடக்கம் அதிகமாய் இருக்கலாம். ஆவியின் வரங்களை எவ்வாறு நாம் விளங்கிக்கொள்கிறோமோ அதே வழியில் தான் ஆவியின் கனியையும் விளங்கிக்கொள்ளவேண்டும். 1 கொரிந்தியர் 12:4-11இல், வெவ்வேறு நபர்களுக்கு வெவ்வேறு வரங்கள் அளிக்கப்பட்டிருக்கிறது என்று குறிப்பிடுகிறார். ஆவியானவர் வரங்களை தன்னுடைய சித்தத்தின் படி பகிர்ந்தளிக்கிறார். அனைவருக்குள்ளும் இருக்கும் ஆவியானவர் ஒருவரே என்றாலும், அனைவருக்கும் அனைத்து வரங்களும் அருளப்படவில்லை.

ஆவியின் கனியையும் அதேபோன்று நாம் புரிந்துகொள்ளலாம். நமக்குள்ளே ஒரே ஆவியானவர் வாசமாயிருந்தாலும், அவர் நமக்குள் வெவ்வேறு கனிகளை வெவ்வேறு வழிகளில் உருவாக்கமுடியும். அதாவது, உபசரிக்கும் தயாள குணம் படைத்த ஒருவர், முழுமையான சந்தோஷத்தை அனுபவிக்கிறவராய் இல்லாமல் இருக்கலாம்; அதேபோன்று, முழுமையான சந்தோஷத்தை அனுபவிக்கும் ஒருவர் உபசரிக்கும் குணத்தில் குறைவுபட்டவராய் இருக்கலாம். இந்த இலட்சிய உலகத்தில் வாழும் நாம் நம்மால் இயன்றவரை ஆவியின் கனியை சரிசமமாய் பிரதிபலிக்க பிரயாசப்படுவோம். ஆனால் அது அப்படியல்ல.

ஆவியின் வரங்களைப்போன்றே ஆவியின் கனியும் விளங்கிக்கொள்ளப்பட வேண்டும். ஒரு மனிதன் அனைத்து ஆவியின் வரங்களையும் பெற்றிருப்பது சாத்தியமில்லை; ஆனால் ஒரு திருச்சபை அனைத்து வரங்களையும் பெற்றிருப்பது சாத்தியம். அதே பார்வையில் ஆவியின் கனியையும் நாம் கையாளலாம். திருச்சபையில் விசுவாசிகள் இணைந்து ஆவியின் கனியை முழுமையாய் செயல்படுத்த முடியும். அதைத் தான் பவுல் இந்த வேத வாக்கியத்தில் சொல்ல முயற்சிக்கிறார். அவர் இதை கலாத்திய திருச்சபைக்கு எழுதுகிறார். பெரும்பாலும் வேதத்தை நாம் தனிப்பட்ட முறையில் படிக்கிறோம். ஒவ்வொரு முறை படிக்கும்போதும், நாம் ஆவியின் கனியை முழுமையாய் பிரதிபலிக்கவேண்டும் என்று எண்ணுகிறோம். ஆனால் பவுல் சமுதாய பார்வையில் சிந்தித்திருக்கலாம். கலாத்தியர் 5:22-23 இல் பட்டியலிடப்பட்டுள்ள குணாதிசயங்கள் அனைத்தையும் பிரதிபலிக்கும் விசுவாசக் கூட்டத்தை தன் சிந்தையில் வைத்து பவுல் இவ்வேதப்பகுதியை எழுதியிருக்கக்கூடும்.

ஆவியின் கனி என்ன?

ஆவியின் கனி என்றால் எதுவல்ல என்பதை நாம் இதுவரை பார்த்தோம். இப்போது, ஆவியின் கனி என்றால் என்ன என்று பார்ப்போம். கலாத்தியர் 5:22-23இல் இடம்பெற்றுள்ள கனிகளின் பட்டியலானது, குணாதிசயங்கள் என்று நாம் எளிதில் விளங்கிக்கொள்ள முடியும். அவைகள் திறமைகள் அல்ல என்பதை கவனியுங்கள் (பெரும்பாலான ஆவியின் வரங்கள் திறமைகளாகவும் வெளிப்படக்கூடியது). அவைகள் வார்த்தைகளால் செய்யப்படுபவை அல்ல. மாறாக, அவைகள் வார்த்தைகளாகவே வாழக்கூடியது. சிலர் சாந்தகுணமுள்ளவர்கள்; சிலர் அன்புகூருகிறவர்கள்; சிலர் இச்சையடக்கமுள்ளவர்கள். ஆனாலும், வாழ்தல் என்பது கிரியை செய்தல் என்று அர்த்தங்கொள்கிறது. இது ஒரு விதத்தில் ஆவியின் கனியானது கிரியையோடு தொடர்புடையதாய் அடையாளப்படுத்தப்படுகிறது.

ஒருவன் சாந்தகுணமுள்ளவனாயிருந்தால், அது அவனுடைய மென்மையான அணுகுமுறையில் வெளிப்படும். ஒருவன் அன்புகூருகிறவனாயிருந்தால், அவனுடைய அன்பின் கிரியைகளில் அது வெளிப்படக்கூடும். ஒருவன் இச்சையடக்கம் கொண்டவனாயிருந்தால், அவனுடைய சுயக் கட்டுப்பாட்டில் அது வெளிப்படக்கூடும். இதில் ஒரு நுட்பமான வேறுபாடு தென்பட்டாலும், அவை முக்கியமானது. வாழ்தல் என்பது கிரியை நடப்பிப்பதாகும். ஆவியானவர் என்னுடைய சில குணாதிசயங்களை எடுத்துவிட்டு, சிலவற்றை சேர்த்து, என் குணாதிசயங்களை பூரணப்படுத்துவதில் ஆர்வம் காண்பிப்பதில்லை. அவர் நம்மை சமுதாயமாய் மாற்றுவதற்கு விரும்புகிறார். மாற்றமடைந்த மக்கள் மாற்றத்திற்கேதுவான காரியங்களை செய்கின்றனர். ஆனால் முதலில் உள்ளான மாற்றம் ஏற்படவேண்டும். நாம் எப்போதும் எந்திரத்தனமாய் நன்மையை மட்டும் செய்கிற ரோபாட் எந்திரமாய் இருப்பதற்கு தேவன் விரும்பவில்லை. தேவன் நம் இருதயத்தை பொருட்படுத்துகிறார்.

இதில் வரிசைப்படுத்தப்பட்டுள்ள கனிகளில் பலவைகள் ஒன்றோடொன்று தொடர்புடையவைகளாய் இருப்பதை நாம் எளிதில் புரிந்துகொள்ள முடியும். அன்பு, சமாதானம், பொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம் மற்றும் சாந்தம் ஆகியவைகள் ஒன்றோடொன்று தொடர்புடையவைகள். சக மனிதனின் ஈடுபாடு இல்லாமல் நான் எவ்வாறு அன்பை செயல்படுத்த முடியும்? எனக்கு ஜாஸ் இசை பிடித்திருக்கிறது என்று நான் சொன்னால், அது ஒரு நபர் அல்ல. இங்ஙனம் குறிப்பிடப்படுவது அந்த வகையான அன்பு அல்ல. இந்த அன்பானது மனிதனுக்கும் சக மனிதனுக்கும் உள்ள உறவை மையப்படுத்துகிறது.

சமாதானம் என்பது எது நேரிட்டாலும் அமைதியான ஜைன மார்க்கத்தின் மௌன நிலையில் இருப்பது அல்ல. வேதாகமத்தின் அடிப்படையில் சமாதானம் அல்லது ஷாலோம் என்பது இருவர் அல்லது அதற்கு மேற்பட்டவர்களோடு நல்வுறவில் இருப்பதாகும்.

பொறுமையும் தயவும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது. பொறுமை என்பது மற்றவர்கள் செய்யும் தவறான செயல்களை பொறுத்துக்கொள்ளும் தன்மையை அடையாளப்படுத்துகிறது. சாந்தம் என்பது மற்றவர்கள் மீது அக்கறை கொண்டு அவர்களுடைய தேவையை சந்திக்க பிரயாசப்படுவது.

நற்குணம் என்பது மற்றவர்களை அதிகம் தொடர்புபடுத்தாததுபோல் தெரிந்தாலும், உண்மையான நற்குணம் என்பது மற்றவர்களோடுள்ள தொடர்பில் தான் விளங்குகிறது. நாம் நம்மை “நற்குணம்” படைத்தவர்களாய் எண்ணலாம். ஆனால் மற்றவர்களிடம் எப்போதும் கோபப்படுகிறவர்களாய் இருந்தால், நம்முடைய நற்குணம் கேள்விக்குள்ளாகிறது.

விசுவாசம் என்பதும் எப்போதும் மற்றவர்களோடு தொடர்புடையது. அது மற்றவர்களுக்கு நேர்மையாகவும் உண்மையாகவும் இருப்பதை சொல்லுகிறது. வேதத்தின் படி விசுவாசம் என்பது ஒரு குறிப்பிட்ட வரையறை பட்டியலுக்கு கீழ்ப்படிவது அல்ல; மாறாக, விசுவாசம் என்பது தேவனோடு ஒருவருக்கு உள்ள உறவைக் குறிக்கிறது. நாம் அவர் மீது விசுவாசமுள்ளவர்களாய் இருந்தால் அவருடைய கட்டளைக்கு கீழ்ப்படிவோம். வெறுமனே கட்டளைகளுக்கு கீழ்ப்படிவது அல்ல; கீழ்ப்படிதலானது விசுவாசத்தின் பிரதிபலிப்பாகும்.

சாந்தமும் மற்றவர்களோடு தொடர்புடையதாகும். மற்றவர்களுடனான நம்முடைய பேச்சு சாந்தத்தை பிரதிபலிக்கும். நாம் நம்மை சிறு பூச்சிகளுக்குக் கூட பாதிப்பு ஏற்படுத்தாத அமைதிவாதிகளாய் நம்மை எண்ணிக்கொள்ளக்கூடும். ஆனால் நாம் மற்றவர்களைக் கடுமையாக நடத்தினால், நமது சாந்தம் ஆவியின் கனியாக இருக்காது.

மற்றவர்களோடு தொடர்புபடுத்தாத இரண்டு குணாதிசயங்கள், சந்தோஷமும் இச்சையடக்கமுமாகும். இவைகள் இரண்டும் மற்றவர்களோடு நேரடியாய் தொடர்புபடுத்தாமல், உள்ளான மனிதனோடு தொடர்புடையதாகும். நம்மைச் சுற்றி யாருமே இல்லாத தருணத்தில் கூட நாம் சந்தோஷத்தை அனுபவிக்கமுடியும். நம்முடைய இச்சையடக்கத்தையும் தனிமையில் பிரதிபலிக்கக்கூடும். இந்த குணாதிசயங்களுக்கும் மற்றவர்களோடு தொடர்பு இருக்கிறது என்பதை மறுக்கமுடியாது. நம்முடைய சந்தோஷத்தை மற்றவர்களோடு நாம் பகிர்ந்துகொள்ள முடியும். இச்சையடக்கம் என்பது மற்றவர்களுக்கு கொடுக்கவேண்டிய சுயமரியாதையைக் கொடுத்து, அவர்களின் வாழ்க்கைக்கு எந்தவித தடங்களும் ஏற்படுத்தாமல் இருப்பதாகும்.

ஆவியின் கனி மற்றவர்களோடு நமக்கு இருக்கும் உறவில் ஊன்றப்பட்டுள்ளது. இதுவே கிறிஸ்துவுக்குள்ளாய் வாழும் வாழ்க்கையில் அஸ்திபாரம். நாம் மற்றவர்களோடு இடைபடும்போது அன்பையும், பொறுமையையும், தயவையும் பிரதிபலித்து, அவர்களோடு சரியான உறவில் இருக்கவேண்டும்.

அதற்காக நாம் என்ன செய்யவேண்டும்?

நான் ஏற்கனவே சொன்னதுபோல், கலாத்தியர் 5:22-23 என்பது செய்யப்படவேண்டிய காரியங்களின் பட்டியல் அல்ல. இது சுட்டிக்காண்பிக்கும் பட்டிலே தவிர, கட்டளை பட்டியல் அல்ல. ஆனால் நாம் வாழும் இயல்பு வாழ்க்கையில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது என்பதில் மறுப்பில்லை. முதலாவது, கிறிஸ்தவ வாழ்க்கையில் ஆவியின் கனியானது எங்கு பொருந்தக்கூடியது என்பதை பாhப்போம்.

இந்த பட்டிலை தொடர்ந்து பவுல், “கிறிஸ்துவினுடையவர்கள் தங்கள் மாம்சத்தையும் அதின் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கிறார்கள்” (கலாத்தியர் 5:24) என்று குறிப்பிடுகிறார். இந்த வாக்கியமானது 5:19-21இல் இடம்பெற்றுள்ள மாம்சத்தின் கிரியைகளோடு தொடர்புடையது. “இதை செய்யாதீர்கள்” என்று பவுல் இங்ஙனம் குறிப்பிடவில்லை என்பதை கவனியுங்கள். மாறாக, இன்னும் ஆழமான பார்வையில் பார்க்கும்படி சொல்லுகிறார். அவர் ஆவிக்குரிய உண்மையை எடுத்துக் காண்பிக்கிறார். நாம் கிறிஸ்துவினுடையவர்களாயிருந்தால், நம்முடைய மாம்சத்தை சிலுவையில் அறைந்திருப்போம். அதாவது, குறிப்பிடப்பட்டுள்ள மாம்சத்தின் கிரியைகளின் பட்டியலானது, மாம்சத்தினால் தோற்றுவிக்கக்கூடியது. இதுபோன்ற கிரியைகளைத் தோற்றுவிக்கும் வல்லமை மாம்சத்திற்கு உள்ளது.

ஆனால் 5:24இல் மாம்சமானது சிலுவையில் அறையப்பட்டது என்று பவுல் சொல்லுகிறார். அது கிறிஸ்துவோடு மரித்துவிட்டது என்று சொல்லுகிறார். நாம் கிறிஸ்துவோடு தொடர்புடையவர்கள் என்பதினால் அவருடைய மரணத்தில் அவரோடு இணைக்கப்படுகிறோம். நாம் ஆவிக்குரிய ரீதியான மரணத்தை சந்திக்கிறோம். நாம் இனி மாம்சத்தின் அதிகாரத்திற்கு உட்பட்டவர்கள் இல்லை. இது “இனி இதைச் செய்யாதீர்கள்” என்று வெறுமனே சொல்லும் எச்சரிப்பு ஆலோசனைக்கு அப்பாற்பட்டது. நம்மடைய வாழ்வில் பெரிய மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. இனி நாம் பாவத்திற்கும் அதின் ஆசை இச்சைகளுக்கும் உட்பட்டவர்கள் இல்லை. நாம் இனி ஆவியானவருடைய ஆளுகைக்கு உட்பட்டவர்கள்.

தொடர்ந்து வரும் வசனங்களில், பவுல், “நாம் ஆவியினாலே பிழைத்திருந்தால், ஆவிக்கேற்றபடி நடக்கவும் கடவோம்” (5:25) என்று சொல்லுகிறார். நாம் ஆவியில் பிழைத்திருக்கிறவர்கள். நாம் இனி மாம்சத்தில் பிழைக்கிறவர்கள் இல்லை. கிறிஸ்தவ வாழ்க்கையில் ஆவியானவருடைய அதிகாரம் செயல்படுகிறது. நாம் அவருடைய அதிகாரத்திற்கும் ஆளுகைக்கும் உட்பட்டிருக்கிறோம். நாம் ஆவிக்கேற்றபடி பிழைத்தால், நாம் ஆவியானவரை பின்பற்றவேண்டும். ஆவியானவரை பின்பற்றுவது அல்லது ஆவிக்கேற்றபடி நடப்பது என்பது, அவருக்கு பிரியமான வழிகளில் நம்முடைய வாழ்க்கையை நடத்துவதாகும். நாம் எப்படி இருக்கவேண்டும் என்று ஆவியானவர் எதிர்பார்க்கிறாரோ அதை நாடுவது எப்படி என்று கற்றுக்கொள்கிறோம். நாம் நம்முடைய சித்தத்தை பரிசுத்த ஆவியானவரின் சித்தத்திற்கு ஏற்றவாறு வடிவமைத்துக்கொள்கிறோம். நாம் அவரோடு பிணைந்துகொள்கிறோம். அதின் விளைவாய், நாம் ஆவியின் கனியினால் அடையாளப்படுத்தப்பட விரும்புகிறோம். நாம் அன்பானவர்களாய், சந்தோஷப்படுகிறவர்களாய், சமாதானமுள்ளவர்களாய், பொறுமையுள்ளவர்களாய், தயவுள்ளவர்களாய், நற்குணம்கொண்டவர்களாய், விசுவாசமுள்ளவர்களாய், சாந்தமுள்ளவர்களாய் இச்சையடக்கம் கொண்டவர்களாய் வாழ விரும்புகிறோம்.

ஆனால் ஆவியின் கனியை செய்யப்படவேண்டிய கட்டளைப் பட்டியலாய் கருதுவதிலிருந்து இது எவ்விதத்தில் மாறுபடுகிறது? நான் ஏற்கனவே சொன்னதுபோல, இது சுட்டிக்காண்பிக்கும் பட்டியலே தவிர, செய்யப்படவேண்டிய கட்டளைகளின் பட்டியல் அல்ல என்பது உண்மையே. ஆனால் 25ஆம் வசனத்தில் கட்டளை இடம்பெற்றுள்ளது: நாம் ஆவியினாலே பிழைத்திருந்தால், ஆவிக்கேற்றபடி நடக்கவும் கடவோம். இது ஆவியின் கனியை கட்டளைப் பட்டியலாய் பார்ப்பது அல்ல. மாறாக, நம்முடைய சித்தத்தை திரித்துவத்தின் மூன்றாம் நபருடைய சித்தத்தின் படி வடிவமைத்துக்கொள்வதாகும். நாம் அவரோடு ஒத்துப்போக வேண்டும். அதைச் செய்யும்போது, அவருடைய கனியை நம்மில் வளரச்செய்வார். அதைச் செய்யத் தவறும்போது, நாம் முதிர்ச்சியடையாத கிறிஸ்தவர்களாய் ஆவிக்கேற்ற விதத்தில் சிந்திக்காமல், மாம்சத்திற்கேற்றவைகளையே சிந்திக்க நேரிடும்.

ஆவியானவரை பின்பற்றுவது அல்லது ஆவிக்கேற்றபடி நடப்பது என்பது, அவருக்கு பிரியமான வழிகளில் நம்முடைய வாழ்க்கையை நடத்துவதாகும்.

அதாவது, நாம் எவ்வாறு இருக்கவேண்டும் என்று அவர் விரும்பிய அந்த நிலைக்கு தேவன் நம்மை உடனே மாற்றிவிட அவர் நம்மை தூண்டுவதில்லை என்பதே இதன் பொருள். அவர் நினைத்தால் அதை செய்யமுடியும் என்றே நான் நம்புகிறேன். ஆனால் அவர் உடனே சமைக்கும் எந்திர அடுப்பைப் போல வேலைச்செய்யாமல், பொறுமையாய் மெதுவாக சமைக்கும் அடுப்பைப் போல பொறுமையாய் சமைக்கிறார். ஆவியானவர் நம்மை மெதுவாக சமைப்பதால், அந்த அடுப்பில் அதுவரை நிலையாய் தங்கியிருப்பதே நம்முடைய பணி. நம்மால் நம்மை சரியாய் சமைக்க முடியாது என்பதினால் தேவனை சமைக்க அனுமதிப்போம்.

ஆவிக்கேற்றபடி நடத்தல் என்பதை ஆழமாய் புரிந்துகொள்ளவேண்டுமாகில், நாம் கலாத்தியர்களைக் குறித்து அறிந்துகொள்ள வேண்டும். அதைக் குறித்து நாம் பார்ப்போம்.

banner image

கலாத்தியரில் ஆவியானவர்

கலாத்திய திருச்சபையில் இருக்கும் விசுவாசிகள் வேறொரு சுவிசேஷத்தை நம்பத் துவங்கியதால், பவுல் இந்நிருபத்தை கலாத்திய திருச்சபைகளுக்கு எழுதுகிறார். அத்திருச்சபை விசுவாசிகள், உண்மையான கிறிஸ்தவர்களாய் மாறுவதற்கு புறஜாதி கிறிஸ்தவர்கள் (யூதரல்லாதவர்கள்) யூத சடங்காச்சாரங்களை கைக்கொள்ளவேண்டும் என்று எதிர்பார்க்க ஆரம்பித்தனர். பவுல் அவர்களுக்கு, கிறிஸ்துவின் மீதான விசுவாசத்தினால் மாத்திரமே இரட்சிப்பே தவிர, நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினால் இல்லை என்று நினைவுபடுத்துகிறார்.

தன்னுடைய 3ஆம் அதிகாரத்தில் அவியானவரை அறிமுகப்படுத்தும் பவுல், நியாயப்பிரமாணத்திற்கு கீழ்படிந்ததால் ஆவியைப் பெற்றீர்களா அல்லது இயேசுவைக் குறித்து கேள்விப்பட்டதை விசுவாசித்ததினால் ஆவியைப் பெற்றீர்களா என்று கேள்வியெழுப்புகிறார்.

இயேசு அவர்களை மீட்டுக்கொண்டதினால் அவருடைய ஆவியை அவர்கள் முத்திரையாய் பெற்றுக்கொண்டனர் என்று பவுல் அவர்களுக்கு உணர்த்துகிறார். தேவன் அவர்களை தத்தெடுத்துக்கொண்டு, அதின் அடையாளமாய் அவருடைய ஆவியானவரை அவர்களுக்கு தந்தருளியிருக்கிறார். அடிமைகளாய் அல்லாமல், குமாரர்களாய் குமாரத்திகளாய் புத்திரசுவிகாரத்தின் ஆவியைப் பெற்றிருக்கின்றனர். அவர்கள் மீட்கப்பட்டவர்கள் என்பதினால், மீண்டும் தங்களுடைய பிந்தின வாழ்க்கையைத் திரும்பிப்பார்த்து, மீண்டும் தங்களை அடிமைகளாய் எண்ணக்கூடாது.

நம்முடைய கிரியைகள் சுயநலமானதா அல்லது ஆவியினால் ஏவப்பட்டதா என்பதை சுலபமாய் சொல்லிவிடக்கூடும்.

தேவனால் நாம் புத்திரசுவிகாரத்தைப் பெற்றதற்கு முத்திரையாய் பெற்றுக்கொண்ட ஆவியானவரை நம்முடைய சொந்த சுயநல தேவைகளுக்காய் பயன்படுத்தக்கூடாது என்ற பவுல் எச்சரிக்கிறார். மாறாக, நாம் புதிதாய் பெற்ற இந்த சுதந்திரத்தை மற்றவர்களுக்கு ஊழியம் செய்வதின் மூலம் பயன்படுத்தவேண்டும் என்று அறிவுறுத்துகிறார். ஆவிக்கேற்றப்படி நடக்கும் வாழ்க்கை முறையை கலாத்திய திருச்சபை விசுவாசிகள் தத்தெடுத்துக்கொள்வது அவர்களின் மாம்சத்தின் இச்சைகளை மேற்கொள்ள உதவும். மாம்சத்தின் கிரியைகளும் ஆவியின் கனியும் தெளிவாய் பட்டியலிடப்பட்டுள்ளது. நம்முடைய கிரியைகள் சுயநலமானதா அல்லது ஆவியினால் ஏவப்பட்டதா என்பதை சுலபமாய் சொல்லிவிடக்கூடும். இனி அவர்கள் மாம்சத்தின் ஆளுகைக்கு உட்பட்டவர்கள் இல்லை என்பதினால் அவர்கள் ஆவிக்கேற்றபடி பிழைத்திருக்கவேண்டும்.

கலாத்திய திருச்சபைக்கு பவுல் எழுதிய நிருபத்தின் இந்த குறிப்பிட்ட வேதப்பகுதியானது, கிறிஸ்தவ வாழ்க்கையில் ஆவியானவரை எங்கு பொருத்துவது என்பதை சுட்டிக்காண்பித்து, ஆவியின் கனியைக் குறித்து சிந்திக்கவேண்டிய அவசியத்தை ஏற்படுத்துகிறது. தேவனுடைய குடும்பத்தின் அங்கத்தினராய் மாற்றப்பட்டதற்கு ஆவியானவர் அடையாளமாய் கொடுக்கப்படுகிறார். அவரே மீட்பின் அடையாளம். ஆவிக்கேற்றபடி நடப்பதே திருச்சபையின் பிரச்சனைக்கு பவுல் கொடுக்கும் தீர்வாகும். யூத சடங்காச்சாரங்களை புறஜாதி கிறிஸ்தவர்கள் கைக்கொள்ள வேண்டுமா? இல்லை! கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவர்கள் ஆவிக்கேற்றபடியே நடக்கவேண்டும்.

இந்த வேதப்பகுதியில் பவுல் சொல்லும் பதிலானது, யூத சடங்காச்சாரங்களை விமர்சிக்கும் நோக்கத்துடன் சொல்லப்பட்டதில்லை. யூதர்கள் தங்கள் சடங்காச்சார முறைமைகளை விட்டுவிடவேண்டும் என்றும் அவர் சொல்ல வரவில்லை. மாறாக, சடங்காச்சார முறைமைகளை பின்பற்றுவது என்பது கிறிஸ்தவனாய் வாழ்வதற்கான வரையறை அல்ல. எந்த மக்களினத்தை சேர்ந்தவராயினும், கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவர்கள் ஆவிக்கேற்றபடி வாழுகிறவர்களாய் இருக்கவேண்டும் என்பதே அவர் சொல்ல முயற்சிக்கும் கருத்து.

வேதாகமத்தில் கலாத்தியர் நிருபம்

தேவனைக் குறித்தும் வாழ்க்கையைக் குறித்தும் கலாத்தியர் நிருபம் சொல்லும் போதனைகள் வேதாமத்தின் முக்கிய கருப்பொருள்களோடு குறுக்கிடுகிறது. ஆபிரகாமுக்குக் கொடுத்த வாக்குத்தத்தம் (ஆதியாகமம் 12:1-3) கிறிஸ்துவில் நிறைவேறுகிறது. ஏனெனில், அவர் மீதான விசுவாசத்தின் மூலம் அனைத்து தேசத்து மக்களும் ஆசீர்வதிக்கப்படுகின்றனர். மோசேயின் நியாயப்பிரமாணம் கோரிய நீதியானது கிறிஸ்துவின் சிலுவை மரணத்தில் பூரணமடைகிறது. கலாத்தியர் நிருபத்தில் நியாயப்பிரமாணத்திற்கு உட்பட்ட வாழ்க்கை முறையானது, ஆவிக்கேற்றபடி வாழும் புதிய வாழ்க்கை முறையோடு முரண்படுத்தப்படுகிறது. வெகுகாலத்திற்கு முன்பு கொடுக்கப்பட்ட வாக்குறுதியின் விளைவே இந்த புதிய வாழ்க்கை. தேவனுடைய ஆவியானவர் மக்களுக்குள்ளே வாசம்செய்வார் என்னும் வாக்குறுதியை பழைய ஏற்பாட்டின் எசேக்கியேல் தீர்க்கதரிசி முதன்முறையாய் அறிவிக்கிறார்.

எசேக்கியேல் 36:27இல் கொடுக்கப்பட்ட வாக்குறுதி, கலாத்தியர் 5ஆம் அதிகாரத்தை விளங்கிக்கொள்வதற்கு நமக்கு உதவுகிறது. அந்த வேதப்பகுதியில், “உங்கள் உள்ளத்திலே என் ஆவியை வைத்து, உங்களை என் கட்டளைகளில் நடக்கவும் என் நியாயங்களைக் கைக்கொள்ளவும் அவைகளின்படி செய்யவும் பண்ணுவேன்” என்று கர்த்தர் சொல்லுகிறார். புதிய வாழ்க்கை என்னும் ஆவியானவருடைய பரிசைக் குறித்து நாம் கலாத்தியரில் ஏற்கனவே பார்த்தோம். இயேசு கிறிஸ்து சிலுவையில் அறைப்பட்டதினால் நாம் நம்முடைய பாவமன்னிப்பை பெற்றுக்கொண்டு, அவர் மீதான விசுவாசத்தினால் மீட்பைப் பெற்றுக்கொண்டோம். ஆவியானவர் நம்முடைய இருதயத்தில் வாசம்செய்யத் துவங்கி, எசேக்கியேல் 36:27ஆம் வசனத்தின் முதற்பாதி நிறைவேறியுள்ளது. ஆனால் அவ்வசனத்தின் இரண்டாம் பாதியானது, ஆவியின் கனியோடு நேரடியாய் தொடர்புடையது. “உங்களை என் கட்டளைகளில் நடக்கவும் என் நியாயங்களைக் கைக்கொள்ளவும் அவைகளின்படி செய்யவும் பண்ணுவேன்” என்று கர்த்தர் சொல்லுகிறார். அதாவது, தேவ ஜனத்தை ஊக்குவித்து, அவருடைய வழியில் நடக்கும்படி செய்வதாக சொல்லுகிறார்.

எசேக்கியேல் 36:27இன் இரண்டாம் பகுதி ஆவியின் கனியினால் நிறைவேற்றப்படுகிறது. ஆவியானவர் விசுவாசிகளின் வாழ்க்கையில் அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம் போன்ற நற்குணாதிசயங்களை விதைக்கிறார். கலாத்தியர் 5:23ன் பிற்பகுதியில் பவுல் என்ன சொல்லுகிறார் என்பதை கவனியுங்கள்: “இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை.” அதாவது, ஆவியானவர் தன்னுடைய கனியை உங்களுடைய வாழக்கையில் வளரப்பண்ணினார் என்றால், நீங்கள் நியாயப்பிரமாணத்தின் வழியில் சரியாய் நடக்கக்கூடும். கிறிஸ்தவர்கள் நியாயப்பிரமாணத்திற்கு அடிமைகளில்லை; ஆனால் அவர்களுடைய வாழ்க்கை, நியாயப்பிரமாணத்தின் ஒழுக்க வரையறைக்கு உட்பட்டதாய் மாறும். ஆனால் நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்ளுவதினாலோ அல்லது புண்ணியம் செய்வதினாலேயோ இது சாத்தியமாகாது. மாறாக, ஆவிக்கேற்ற பிரகாரம் நடப்பதினாலேயே இது சாத்தியமாகக்கூடும்.

தேவனுக்கு பிரியமான வழியான, ஆவியின் வல்லமையில் மக்களை நடத்துவதற்கு இந்த ஆவியின் கனி என்பது தேவனுடைய பிரம்மாண்டமான திட்டத்தில் ஓர் அங்கம். தேவனுடைய குடும்பத்தின் அங்கத்தினர்களாய், புத்திரசுவிகாரத்தின் ஆவியைப் பெற்ற பிள்ளைகளாய், தேவன் நம்மை அவரைப்போலவும், அவரிடத்திலிருந்து வழிந்தோடும் சுபாவத்திற்கு பாத்திரராகவும் மாற்றுகிறார். பல நூற்றாண்டுகளுக்கு முன்பாக முன்னறிவிக்கப்பட்டு, இயேசுவின் மரணத்திலும் உயிர்த்தெழுதலிலும் நிறைவேறிய வாக்குத்தத்தங்களைக் காட்டிலும் ஆவியின் கனி என்பது எவ்விதத்திலும் குறைவானது அல்ல. ஆவிக்குரியவர்களுக்கு என்னே மேன்மையான பாக்கியம்!

banner image

ஆவியன் கனி என்ன என்பதையும் (எது இல்லை என்பதையும்), ஏன் அது முக்கியத்துவம் வாய்ந்தது என்பதையும் பார்த்தோம். தற்போது, ஆவியின் கனியானது கிறிஸ்தவ ஜீவியத்தை எவ்விதம் வடிவமைக்கக்கூடியது என்பதைப் பார்ப்போம்.

கிறிஸ்துவில் தேவன் நமக்கு செய்த நன்மைகளையும், பரிசுத்த ஆவியானவருடைய துணையோடு அதைத் தொடர்ந்து செய்வதையும் அனுபவிப்பது ஆச்சரியமான அனுபவம். அவர் செய்த எல்லாவற்றிற்காகவும் நம்முடைய பொறுப்பு எளிதானது: ஆவிக்கேற்றபடி நடந்து, மாம்சத்தின் மீது ஜெயமெடுக்கவேண்டும். நம்முடைய மாம்சத்தின் மீதான வல்லமை மேற்கொள்ளப்படும் நாளுக்காய் அவருக்கு நாம் முழு ஒத்துழைப்பைக் கொடுக்க வேண்டும்.

ஆவியானவர் நமக்குள் செய்யும் முக்கியமான காரியங்களில் ஒன்று, கிறஸ்துவுக்கு நேராய் நம்மை திசை திருப்புவதாகும். அதாவது, நாம் ஆவிக்கேற்றபடி நடத்தலின் ஒரு முக்கியமான அம்சம் என்னவெனில், இயேசுவின் மீது நம்முடைய கண்களை பதியசெய்வதாகும். நம்முடைய அனுதின தியானங்களும் சிந்தனைகளும் அவரிடத்திற்கு மீண்டும் மீண்டும் நம்மை திசை திருப்பக்கூடிதாய் இருக்கட்டும். அவரே நம்முடைய சிந்தனைகளுக்கும், கற்பனைகளுக்கும், விருப்பத்திற்கும் மையமாய் இருக்கட்டும். நாம் கிறிஸ்துவை பின்பற்ற தீர்மானித்து, அவரை சார்ந்துகொண்டு, அவருக்கு கீழ்ப்படியும்போது, நாம் ஆவிக்கேற்றபிரகாரம் நடக்கிறவர்களாய் இருப்போம்.

இயேசுவை யார் என்று நம்மால் பிரதிபலிக்க முடியும். அவர் தேவ குமாரன். பிதாவுக்கு சமமாயிருந்த தன்னுடைய ஸ்தானத்தை விட்டுவிட்டு, மனிதனாகி, புறக்கணிக்கப்பட்டவராகவும் பாடனுபவிக்கிறவராகவும் தன்னை மாற்றிக்கொண்ட நம்முடைய தாழ்மையும் கிருபையுமான இரட்சகர் அவர். அவருடைய சுபாவங்களை நாம் பிரதிபலிக்கும்போது, நாம் நல்ல மனிதர்களாய் மாறுவதோடல்லாது, அவரை நம்முடைய சிந்தனையிலும் பேச்சிலும் கிரியையிலும் பிரதிபலிக்க விழைகிறோம். இயேசு இரக்கமும் தயவும் உள்ளவர். அவர் மற்றவர்களை கனத்தோடும் இரக்கத்தோடும் பாவிக்கிறார். அவரே ஆவியின் கனிக்கு சரியான மாதிரி.

இயேசுவை நாம் பிரதிபலிக்க துவங்கும்போது, நம்முடைய அனைத்து செயல்பாடுகளிலும் அவரை சார்ந்திருக்கும் தன்மையை நாம் பிரதிபலிக்கும் வாய்ப்பைப் பெறுகிறோம். இந்த பூவுலகத்தின் அனைத்து உயிர்களுக்கும் அதிகாரியும் பாதுகாவலருமாகிய அநாதி தேவனே நம்முடைய நித்திய வாழ்க்கைக்கான ஆதாரம். அவரை ஜெபத்தோடு நாம் சார்ந்துகொள்ளுவது என்பது, அவருக்கு கனத்தையும் நம்முடைய இருதயத்தின் சரியான நிலையையும் எடுத்துரைக்கிறது. கிறிஸ்துவைப் பற்றிய இத்தகைய பிரதிபலிப்பு மற்றும் அவரைச் சார்ந்திருப்பதன் வெளிப்பாடு ஆகியவை ஆவியினாலேயே ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கிறிஸ்தவ வாழ்க்கை என்பது பாடுகளால் நிறைந்தது என்பதை நாம் அனைவரும் நன்றாய் அறிந்திருக்கிறோம். ஆவியானவர் நமக்குள் பலமாய் கிரியை நடப்பிக்கும்போது, மாம்சத்தின் படி நடக்காமல் இருக்கும்படிக்கு வேதாகமம் நம்மை எச்சரிக்கிறது. நாம் இன்னும் மாம்சத்தின் ஆதிக்கத்திற்கு உட்படநேரிடும் என்பதை இது காட்டுவதாக எண்ணத் தோன்றுகிறது. நாம் எதிர்மறையாய் செயல்படுவதற்கான வாய்ப்பு மறுக்கப்படுகிறது. ஆகையினால் தான், ஆவிக்கேற்றபடி நடப்பதற்கும், மாம்சத்தின் இச்சைகளால் வீழ்வதற்கும் இடைப்பட்ட தொடர் போராட்டத்தை நாம் வாழ்நாள் முழுவதும் சந்திக்கவேண்டியிருக்கிறது.

இது கலாத்தியர் 5ஆம் அதிகாரத்தின் இறுதியில் தெளிவாய் விளக்கப்பட்டுள்ளது. ஆவிக்கேற்றபடி நடக்கும்படிக்கு (5:25) பவுல் தன்னுடைய விசுவாசிகளுக்கு போதித்த பின்பு, அவர் எதிர்மறையாய் தொடருகிறார்: “வீண் புகழ்ச்சியை விரும்பாமலும், ஒருவரையொருவர் கோபமூட்டாமலும், ஒருவர்மேல் ஒருவர் பொறாமைகொள்ளாமலும் இருக்கக்கடவோம்” (5:26).

அனுதின வாழ்க்கைப் போராட்டத்தை மேற்கொள்ளும் பெலத்தை தேவனிடத்தில் கேட்பதே ஒரு நல்ல அனுதின ஜெபத்தின் நோக்கமாயிருக்கும். போராட்டங்கள் போராட்டங்களாய் தெரியாமல் இருப்பதற்கு இரண்டே வழிகள் மட்டுமே இருக்கிறது. முதலாவது, மரித்து தேவனிடத்தில் சேர்வது. இரண்டாவது, போராட்டத்தை கைவிட்டு, மாம்சத்திற்கு உடன்படுவது. இது நாம் தவிர்க்கவேண்டிய பாதை! ஆகவே, போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபடவிடாமல் நம்மை சோர்வுக்குள்ளாக்கும் நம்பிக்கையற்ற உணர்வுகளுக்கு எதிராக நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

அது சிலவேளைகளில் அப்படி தெரிந்தாலும், மாம்சத்திற்கு விரோதமான நம்முடைய யுத்தம் நம்பிக்கையற்றதல்ல. இதற்கு இரண்டு பெரிய காரணங்களை சொல்ல முடியும்: நாம் இனி பாவத்தின் அதிகாரத்திற்கு உட்பட்டவர்களில்லை; ஆவியானவர் நம்முடைய எதிர்காலத்திற்கு உத்தரவாதம் கொடுக்கிறார். இவைகளை தொடர்ந்து ஆராய்வோம்.

நாம் இனிமேல் பாவத்தின் அதிகாரத்திற்கு உட்பட்டவர்கள் இல்லை. ரோமர் 6ஆம் அதிகாரத்தில் பவுல் இதைக் குறித்து விரிவாய் விவாதிக்கிறார். நாம் கிறிஸ்துவோடு மரித்தால், பாவத்திலிருந்து விடுதலையாக்கப்படுகிறோம் (ரோமர் 6:7). “பாவம்” என்று ரோமர் 6ஆம் அதிகாரத்தில் பவுல் குறிப்பிடும்போது, அவர் வல்லமையையும் அதிகாரத்தையும் குறிப்பிடுகிறார். அவர் சொல்ல வருவது என்னவென்றால், கிறிஸ்துவோடு நாம் மரிக்கும்போது விசுவாசிகள் பாவத்தில் வல்லமையிலிருந்து விடுபட்டு, கிறிஸ்துவின் அதிகாரத்திற்கு உட்படுகிறார்கள் என்று சொல்லுகிறார். ஆகிலும் மீண்டும் பாவத்திற்கு உட்படவேண்டாம் என்று ரோமத் திருச்சபையின் விசுவாசிகளுக்கு பவுல் வலியுறுத்துகிறார் (6:12-13). பாவம் நம்முடைய எஜமானாய் இல்லாதபட்சத்தில் (6:14), பாவத்தின் மீதான ஈர்ப்பு என்பது உண்மையானதும் வலிமையானதுமாயிருக்கிறது. ஆனால் நாம் அதற்கு இடம்கொடுக்கக்கூடாது என்று பவுல் வலியுறுத்துகிறார்.

அது சிலவேளைகளில் அப்படி தெரிந்தாலும், மாம்சத்திற்கு விரோதமான நம்முடைய யுத்தம் நம்பிக்கையற்றதல்ல.

பிரபல வெல்ஷ் போதகர் மார்டின் லாயிட் ஜோன்ஸ், இந்தப் போராட்டத்தை நேர்த்தியாய் விளக்குகிறார். 1865 ஆம் ஆண்டில், அமெரிக்காவில் அடிமைத்தனத்தை ஒழிப்பதற்கான ஆபிரகாம் லிங்கன் மற்றும் பலரின் போராட்டம் இறுதியில் பலன் தந்தது. அனைத்து அடிமைகளும் சுதந்திரவாளிகளாய் அறிவிக்கப்பட்டனர். லாயிட் ஜோன்ஸ், நீங்கள் அலபாமாவில் அடிமையாக வளர்ந்திருக்கிறீர்கள் என்று அவர் நம்மை கற்பனை செய்யச் சொல்கிறார். ஒரு நிமிடம், நீங்கள் ஒரு அடிமை. அடுத்து, நீங்கள் சட்டப்பூர்வமாய், அதிகாரப்பூர்வமாய் ஒரு முழுமையான சுதந்திரவாளி. நீங்கள் இப்போது சதந்திரவாளியாக்கப்பட்டாலும், அந்த சுதந்திரத்தை உங்கள் மனம் ஒத்துக்கொள்வதற்கு சிறிது நேரம் ஆகலாம். ஒரு நாள், உங்கள் முன்னாள் எஜமானரை வீதியில் சந்திக்கும்போது, அவர் உங்களைப் பார்த்து, “இங்கே வா” என்று கூப்பிடும்போது, நீங்கள் இன்னும் அடிமையாய் உணருவீர்களா? ஆம் என்றே நான் எண்ணுகிறேன். உங்களுடைய வாழ்நாள் முழுவதும் அவரை உங்களுடைய எஜமானராய் கற்பனை செய்துவிட்டீர்கள். அவருடைய சத்தத்திற்கு செவிகொடுத்தே பழகி விட்டீர்கள். உங்களுடைய சரீரத்தின் ஒவ்வொரு அவயங்களும் அவருடைய சத்தத்திற்கு கீழ்ப்படியும்.

ஆனால் நீங்கள் சுதந்தரவாளியாக்கப்பட்டு விட்டீர்கள் என்பதே நிஜம். நீங்கள் அடிமை இல்லை. உங்களுடைய முன்னாள் எஜமானருக்கு உங்கள் மீது எந்த அதிகாரமும் இல்லை. நீங்கள் என்ன செய்யவேண்டும் என்று அவர் இனி கட்டளையிட முடியாது. அதற்கு நீங்கள் கீழ்ப்படிய வேண்டிய அவசியமும் இல்லை.

பாவத்துடனான நம்முடைய போராட்டமும் அப்படியே இருக்கிறது. பாவம் ஒருகாலத்தில் நம்மை ஆளுகைசெய்தது. அதின் கட்டளைகளுக்கு நம்முடைய சரீரம் முழுமையாய் கீழப்;படிந்தது. நாம் கிறிஸ்துவில் மீட்கப்படும் வரைக்கும் நம்முடைய வாழ்க்கை முறை இப்படியாகத்தான் இருந்தது. நாம் இப்போது ஆவிக்குரிய சுதந்திரத்தை அதிகாரப்பூர்வமாய் பெற்றுவிட்டோம். ஆகிலும் அதை மனப்பூர்வமாய் செயல்படுத்த சில காலங்கள் எடுக்கும். பாவம் அவ்வப்போது நம்மைப் பார்த்து, “இங்கே வா” என்று கூப்பிடும்போது, அதற்கு உடனே கீழ்ப்படியவேண்டும் என்று நமக்கு தோன்றலாம். கிறிஸ்துவில் இனி நாம் பாவத்திற்கு அடிமை இல்லை. அதின் அழைப்பிற்கு நாம் செவிகொடுக்க வேண்டியதில்லை. ஆகிலும் அதின் ஈர்ப்பிற்கு நாம் இசைந்து, அதின் தேவையை நிறைவேற்ற நாம் போராடுகிறோம். நாம் சுயாதீனராக்கப்பட்டாலும், நமக்கு கட்டளையிடும் அதிகாரம் பாவத்திற்கு இல்லாதபோதிலும், அது என்ன செய்ய கட்டளையிடுகிறதோ அதை செய்வதற்கு நாம் இசைந்துபோக நேரிடுகிறது.

பாவம் சிலவேளைகளில் நம்முடைய கவனிப்பையும் கீழ்ப்படிதலையும் எதிர்பார்க்கிறது. சிலவேளைகளில் நம்முடைய காதுகளில் மெல்லமாய் பேசி நம்மை விழப்பண்ணுகிறது. “அவனவன் தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான். பின்பு இச்சையானது கர்ப்பந்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கும், பாவம் பூரணமாகும்போது, மரணத்தைப் பிறப்பிக்கும்” (யாக்கோபு 1:14-15).

ஆகையினால், ஆவியானவருக்கும் நம்முடைய பழைய எஜமானனாகிய பாவத்திற்கும் மாம்சத்திற்கும் இடைப்பட்ட தொடர் போராட்டத்தோடே இந்த ஜீவியத்தை நாம் வாழவேண்டியிருக்கிறது. நாம் ஆவியை தேர்வுசெய்ய வேண்டும். நாம் தற்போது கிறிஸ்துவைச் சேர்ந்தவர்கள். அவருடைய ஆவி வல்லமையுள்ளது. மேற்கொள்ளப்பட்ட பாவம் மற்றும் மாம்சத்தின் அநீதியான சத்தத்திற்கு செவிகொடுக்காமல், ஆவிக்கேற்ற விதத்தில் நடக்க பழகுவோம்.

மாம்சத்திற்கு விரோதமான நம்முடைய போராட்டம் நம்பிக்கையற்றதல்ல என்பதற்கு இரண்டாவது பெரிய காரணம், அது ஒரு நாள் முடிவுக்கு வரும் என்பதே. எபேசியர் 1:13-14இல் பவுல் சொல்லுவதுபோல, நாம் கிறிஸ்துவினுடையவர்கள் என்பதை அடையாளப்படுத்தும் முத்திரையாய் ஆவியானவர் நமக்கு கொடுக்கப்பட்டிருக்கிறார். அவர் இறுதியாக நம்மை மீட்கும் வரை, அவர் நமது தலைமுறைக்கு உத்தரவாதமளிக்கும் ஆதாரமாய் இருக்கிறார். நமது எதிர்காலத்திற்கான ஆதாரமாய் ஆவியானவர் இருக்கிறார் என்பதே இதன் பொருள். புதிய யுகத்தின் அடையாளமாக, ஆவியில் நிரப்பப்பட்ட நாம் ஒரு நாள் மறுரூபமாக்கப்பட்டு, புதிய சரீரத்தை அணிந்துகொண்டு பாவத்திலிருந்து முற்றிலும் விடுதலையாக்கப்பட்ட நிலையில் பூரணப்படுவோம்.

மேற்கொள்ளப்பட்ட பாவம் மற்றும் மாம்சத்தின் அநீதியான சத்தத்திற்கு செவிகொடுக்காமல், ஆவிக்கேற்ற விதத்தில் நடக்க பழகுவோம்.

பவுல் இதே காரியத்தை ரோமர் 8:14-17இல் குறிப்பிடுகிறார். ஆவியினாலே நடத்தப்படுகிறவர்கள் தேவனுடைய புத்திரசுவிகாரத்தின் ஆவியைப் பெற்றவர்களாதலால், தேவனுடைய புத்திரர் எனப்படுவர். ஆவியானவர் நம்மை “அப்பா பிதாவே” என்று கூப்பிடத்தக்க விதத்தில் நம்மை உயிர்ப்பிப்பார். 17ஆம் வசனத்தில் முக்கியமான வரிகள் இடம்பெறுகிறது: “நாம் பிள்ளைகளானால் சுதந்தரருமாமே; தேவனுடைய சுதந்தரரும், கிறிஸ்துவுக்கு உடன் சுதந்தரருமாமே.” நாம் அவரோடே பாடனுபவித்தால், அவரோடே மகிமைப்படுத்தவும் படுவோம். ஆகையால் ஆவியானவர் நமக்குள் வாசம்பண்ணும்போது, பாவம், உபத்திரவம், வெட்கம் ஆகியவைகள் எதுவும் இல்லாத மகிமையான எதிர்காலத்திற்கு நேராய் நாம் திசைதிருப்பப்படுகிறோம்

அதுவரையிலும் மாம்சத்திற்கும் ஆவிக்குமான போராட்டம் தொடர்ந்துகொண்டேயிருக்கும். நாம் ஆவிக்கேற்ற பிரகாரம் வாழ ஆரம்பித்து, மாம்சீகத்தின் அழைப்புக்கு செவிகொடுக்காமல் ஜீவித்தால், ஆவியானவர் அவருடைய கனியை நம்மில் வளரச்செய்வது அதிக நிச்சயம்.

அறுவடை நேரம்

ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம் மற்றும் பல கிறிஸ்துவின் சுபாவங்களை உள்ளடக்கியுள்ளது. கிறிஸ்துவுக்குள் நாம் புதுவாழ்வு அடைந்ததால், ஆவி நமக்குள் வாசம்பண்ணுகிறது; நாம் மாம்சம், பாவம் மற்றும் நியாயப்பிரமாணத்தின் கட்டுகளிலிருந்து விடுதலையாக்கப்படுகிறோம். அவரே புதிய யுகத்தின் அடையாளம். தேவ குடும்பத்தில் நாமும் அங்கத்தினர் என்பதறகான ஆதாரமும் அவரே. ஆவியானவர் அவருடைய குடும்பத்தின் அங்கத்தினராய் நம்மில் கிரியைசெய்யும்போது, நாம் நம்முடைய கண்களை கிறிஸ்துவை நோக்கி ஏறெடுத்து, அவரை முற்றிலும் சார்ந்தவர்களாய் நம் வாழ்நாள் முழுவதும் அவருக்கு ஆராதனை செலுத்தக்கடவோம்.

ஆவியின் கனி என்பது செய்யப்படவேண்டிய காரியங்களின் கட்டளைகள் அல்ல. ஆவியானவர் நமக்குள் கனியை உண்டுபண்ணுகிறார். கிறிஸ்தவம் என்பது விதிமுறைகளின் பட்டியல் அல்ல. வேதாகமமும் நல் வாழ்க்கை வாழ்வதற்கான கையேடும் அல்ல. கிறிஸ்தவம் என்பது பிதாவாகிய தேவனோடு, அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து மூலம், பரிசுத்த ஆவியானவரால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு உறவைப் பற்றியது.