வாசிக்க: மத்தேயு 14:22-36

ஆண்டவரே! நீரேயானால் நான் ஜலத்தின்மேல் நடந்து உம்மிடத்தில் வரக்கட்டளையிடும். (வ. 28)

ஒரு கிறிஸ்தவம் சாராத அமைப்பு ஆன்மீக சந்தேகங்களுடன் போராடும் மக்களுக்காக சிறப்பு அவசரகால தொலைபேசி இணைப்பை நிறுவியுள்ளது. இந்த உதவி மையத்தின் சரியான குறிக்கோள் சற்று தெளிவற்றதாகத் தோன்றினாலும், அதன் நிறுவனர் ஒரு காரியத்தை அவதானித்து, “கேள்விகளைக் கேட்கத் தொடங்கும்போது பலர் தனிமைப்படுத்தப்பட்டதாகவோ அல்லது நிராகரிக்கப்பட்டதாகவோ உணர்கிறார்கள் …. சபைகள் சந்தேகிக்கும் நபர்களை [உதவிகள் மற்றும் ஐக்கியத்திற்காக] வரவேற்கத் தொடங்கினால், இந்த திட்டம் தேவைப்படாது” என்று சுவாரஸ்யமாக கூறினார்.

கடுமையான சந்தேகத்தின்போது தம்மிடம் நெருங்கி வரும்படி இயேசு பேதுருவை வரவேற்றார். அந்த கடுமையான புயலின்போது சீடர்கள் கரையிலிருந்து வெகு தொலைவில் ஒரு படகில் இருந்தனர். அவர்கள் தண்ணீர் மீது ஒரு உருவம் நடப்பதைக் கண்டார்கள். ஆனால் இது இயற்கையின் அனைத்து விதிகளையும் கடந்திருந்ததால், அவர்கள் ஒரு பேயைப் பார்க்கிறார்கள் என்று கருதினர் (மத்தேயு 14:26).

அவர்களை நோக்கி நடந்து சென்றவர் இயேசு, அவர்கள் பயப்படாமல் இருக்கும்படிக்கு அவர் தன்னை அடையாளம் காட்டினார். ஆனால் சந்தேகம் தீராத பேதுரு, “ஆண்டவரே! நீரேயானால் நான் ஜலத்தின்மேல் நடந்து உம்மிடத்தில் வரக்கட்டளையிடும்” என்று (வ.28) கத்தினார், அதற்கு அவர்: வா என்றார் (வ.29).

கிறிஸ்துவின் மீதான பேதுருவின் விசுவாசம், அவர் ஒரு அற்புதத்தை அனுபவிக்க செய்தது. நாம் தரிசித்து நடவாமல், விசுவாசித்து நடக்கிறோம் (2கொரி 5:7) என்ற வசனத்தை அப்பட்டமாக செய்துவிட்டார். ஆயினும் அவருடைய சந்தேகம் அவரை விடவில்லை. பயந்து திகைத்த பேதுரு, நீரில் மூழ்கினார். உடனடியாக இயேசு அவரை காப்பாற்றினார். பேதுருவின் அவிசுவாசத்தை அவர் கடிந்துகொண்டாலும், அவரைவிட்டு இயேசு விலகவில்லை. அவர் பேதுருவின் அருகிலேயே நின்று “ஏன் சந்தேகப்பட்டாய்” என்றார் (மத். 14:31)

நமக்கு சந்தேகம் ஏற்படும்போதோ அல்லது மற்றவர்கள் தங்கள் சந்தேகங்களை நம்மிடம் தெரிவிக்கும்போதோ; கேள்வி கேட்பதும், பிரச்சினையை ஆராய்வதும் தவறல்ல. சந்தேகத்தின் அடிப்படை என்ன? வாழ்க்கையின் இந்த குறிப்பிட்ட பருவத்தில் ஏன் சந்தேகம் அதிகரித்தது? விசுவாசத்தின் எந்த அம்சம் மிகப்பெரிய சவாலாக இருக்கிறது?

தேவன் நமது சந்தேகங்களை நேர்த்தியாய் கையாள்வார். அவைகளை அவரிடம் கொண்டுவந்து, இன்று அவருடைய பிரசன்னத்தையும் வல்லமையையும் அனுபவிப்போம்.

– ஜெனிபர் பென்சன் ஷூல்ட

மேலும் அறிய

சரித்திரம் முழுவதும் நமது விசுவாசத்தை வளர்ப்பதில் தேவன் நம்மீது வைத்திருக்கும் அக்கறையின் சில சான்றுகளைக் காண ஓசியா 13:4, மத்தேயு 1:23, மற்றும் யோவான் 20.31 ஆகியவற்றைப் படியுங்கள்.

சிந்திக்க

எதையாவது உண்மையா என்று சந்தேகிப்பதற்கும், ஒன்று உண்மையல்ல என்று பயப்படுவதற்கும் வித்தியாசம் உள்ளதா? உங்கள் விசுவாசத்தைப் பற்றிய குழப்பமான சந்தேகங்களை நீங்கள் எதிர்கொள்ளும்போது, தேவன் மற்றும் ஆவிக்குரிய நண்பர்களின் ஆலோசனையை நீங்கள் எவ்வாறு நாடலாம்?