எங்கள் அறையின் மூலையில் இருந்த அந்த சிறிய பஞ்சு பொதிந்த நாற்காலியில் அமர்ந்து அவர் சுவாசிப்பதை பார்த்துக்கொண்டிருப்பேன். வாழவும், சாகவும் ஒரே நேரத்தில் அவர் போராடிக் கொண்டிருந்தார். குறிப்பிட்ட காலத்திற்குப்பின் திருமண தம்பதியினரின் மூச்சும், இதய துடிப்பின் நாதங்களும் கூட ஒன்றிவிடுமென விஞ்ஞானிகள் கூறுகின்றனர். மற்றவர்களுக்கு இது புரியாது ஆனால் இது உண்மையென்று உங்களுக்கும் எனக்கும் தான் தெரியும். சுவாசத்தை உள்ளிழுத்து, வெளியேற்றும் இடைவெளி, நீண்டு இனி இடைவெளியே இல்லை என்றானது. இனியும் வெளியேற எந்த சுவாசமும் இல்லையென்றபோது, நீண்ட காத்திருப்புக்கு முடிவும் வந்தது. உங்கள் இதய துடிப்பு நின்றது, உங்கள் மூச்சை பிடித்துவைக்க உங்களால் முடியவில்லை. என்னாலும் கூட தான். நீங்கள் உங்கள் வாழ்க்கைத் துணையின் அருகில் இல்லாவிட்டாலும்; உங்களுக்கும், அவர்களுக்கு பல மைல்கள் இடைவெளி இருக்கலாம், ஆனாலும் நீங்கள் உணர்வீர்கள்.

ஏப்ரல் மாதத்தின் மழைத்தூரும் ஒரு பிற்பகலில், சுவாசிக்கும் இடைவெளிகள் நீண்டுகொண்டிருக்க, மிகவும் சிரமத்தோடு மூச்சிவிட்ட இருபத்திரண்டு வருடமாய் என் துணையாயிருந்த கணவர் இறுதியாக சுவாசித்தார். நாங்களும் அவருக்கு பிரியாவிடை அளித்தோம். இப்பொழுது நானும் என் மூச்சைப்பிடித்து, வருடங்கள் உருண்டோடிய நினைவுகளோடு இதை எழுதுகிறேன். நீங்கள் எத்தகைய சூழ்நிலையில் இந்த கையேட்டை, இந்த பக்கத்தை, படிக்கிறீர்களோ என்று நான் அறியேன். ஏறக்குறைய உங்களை காண்கிறேன். நீங்களும் உங்கள் மூச்சைப்பிடித்து கொண்டிருக்கிறீர்கள். நாம் இருவரும் இப்போது ஒரே காரணத்திற்காக இந்த பக்கத்தில் இருக்கிறோம். உங்கள் வாழ்க்கைத் துணை இறுதியாக சுவாசித்துவிட்டார், இப்பொழுது நீங்கள் வேதனையோடு சுவாசிக்கிறீர்கள். ஆனாலும் திடன்கொள்ளுங்கள். ஏனெனில், வானத்தையும், பூமியையும் படைத்த சர்வ வியாபியாகிய தேவ ஆவியானவர்; பிறப்பு, இறப்பு, சூழ்நிலை போன்ற வாழ்க்கை கணக்குகளையும் ஆளுகிறார். தேவனுடைய சுவாசம், அவருடைய ஆவியின் வற்றாத ஜீவநதி, உங்களுக்குள் தொடர்ந்து ஓடும். முடிவில்லா வேதனையின் விளிம்பில் உள்ள நீங்கள், இனியும் உங்கள் மூச்சைப்பிடித்து கொள்ள போராடாமல், மீண்டும் சுவாசிப்பீர்கள். நீங்கள் இனி நிம்மதியாக சுவாசித்து ஜீவிப்பீர்கள்; ஏனெனில் உங்கள் தேவன் உயிரோடிருப்பவர்களுக்கும், மரித்தவர்களுக்கும் தேவனாயிருக்கிறார்.

பத்திகளுக்கு கீழ் இழுக்கவும் அல்லது கீழ்க்காணும் சம்பந்தப்பட்ட இணைப்புகளை கிளிக் செய்யவவும்

banner image

“ஆறாம்மணி நேரமுதல்……..பூமியெங்கும் அந்தகாரம் உண்டாயிற்று இயேசு மகா சத்தமாய்க் கூப்பிட்டு ஜீவனை விட்டார். அப்பொழுது, தேவாலயத்தின் திரைச்சீலை மேல்தொடங்கிக் கீழ்வரைக்கும் இரண்டாகக் கிழிந்தது. — மாற்கு 15:33,37-38

சிலர் இதை கிழிக்கப்படுவதாக வர்ணிக்கின்றனர்; சரீரத்தை கிழிப்பது போல. சிலர் தங்களால் மூச்சுக்கூட விடமுடியவில்லை என்றும், சிலர் இரத்தம் நிற்காமல் கசிவது போலிருப்பதாக கூறுகின்றனர். இவர்கள் சொல்வதின் அர்த்தம் உங்களுக்கு தெரியும். ஏனெனில் உங்கள் துணையும் கடந்துபோய்விட்டார். ஒரு கெட்டநாளின் சில நேரங்களில் மிக குறுகியதாய் ஆனால் நல்ல நாளில் சுகமாயிருந்த உங்கள் படுக்கை இப்போது அகண்டு விரிந்த சமுத்திரம் போலவும், ஆழ்ந்த பிளவை போலவும் தோன்றும்.

உங்கள் துணை இங்கே இல்லை, உங்கள் இருதயம் வறண்டு தரிசாயுள்ளது. முன்பு சிலர் இதை உங்களிடம் விவரிக்க முற்பட்டபோது உங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை, ஆனால் இப்பொழுது… இப்பொழுது தான் உங்களுக்கு புரிகிறது. உங்களை சுற்றிலும் இருள் சூழ்ந்துள்ளது.

இயேசுவின் இறுதிமூச்சில், அடங்காது எதிர்க்கிற மரண அனுபவத்திற்கு தம்மை ஒரு நோக்கத்தோடு ஒப்புக்கொடுத்தார். இப்போது நீங்கள் உயிர்வாழ எடுக்கும் சிறந்த முயற்சிகளுக்கு எதிராக மரணம் கொக்கரிக்கலாம், ஆனால் மரணம் ஜெயிக்கவில்லை. உங்களுக்கும், உங்கள் துணைக்கும் இடையேயிருந்த திருமண ஒப்பந்தம் இரண்டாக கிழிக்கப்பட்ட போதிலும், அந்த இருண்ட நாளை வெளியேற்றிய அதே அன்பு தான் இன்றைக்கு உங்களுக்கும், எனக்கும் இரட்சிப்பின் புதிய உடன்படிக்கையை முத்திரித்தது. அவர்களுடைய மரணம் ஒரே நேரத்தில் உங்கள் புலன்களை உணர்வற்றதாகவும், கொழுந்து விட்டெறியவும் செய்கிறது.

புதிய உடன்படிக்கையை குறித்து அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு சொல்கிறார், “அதெப்படியெனில், மாம்சத்தினாலே பலவீனமாயிருந்த நியாயப்பிரமாணம் செய்யக்கூடாததைத் தேவனே செய்யும்படிக்கு, தம்முடைய குமாரனைப் பாவமாம்சத்தின் சாயலாகவும், பாவத்தைப் போக்கும் பலியாகவும் அனுப்பி, மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார்.”
(ரோமர் 8:3)

ஆனால் எல்லாவற்றையும் விலைக்கிரயம் செலுத்தின உடன்படிக்கையின் அன்பு, நிரந்தரமாய் இழந்ததாக தோன்றிய அனைத்தையும் மீட்டு தந்தது. இப்பொழுது உயிரற்ற தொடுவானம் போலத் தோன்றும் துக்கத்தின் தரிசு நிலமும் புனிதக்கனிகளை முளைப்பிக்கும். ஆகையால் தான் திருமணம் தற்காலிகமாய் இருந்தாலும் அது குறிக்கும் மெய்ப்பொருள் நித்தியம்.

உங்கள் நினைவுகளின் கண்ணாடியை நீங்கள் பார்க்கும் போதெல்லாம் உங்கள் திருமணம் உண்டாக்கிய மதிப்பும், மகிமையும் தான் பிம்பமாய் தோன்றும். இப்பொழுது உங்கள் வேதனை “மரணம் நம்மை பிரிக்கும் மட்டும்” என்பதின் ஒரு தற்காலிக பகுதியே, ஆனால் மரணத்தின் மேல் ஜெயம் என்பதுதான் நித்திய உண்மையாய் இருக்கிறது. தேவனுடைய மாறாத உடன்படிக்கையை மரணம் வென்று விட்டதோ என்று எண்ணுகிற உங்கள் வேதனையின் இருளிலே, இந்த உண்மை ஒளியேற்றுகிறது. ஏனெனில் “மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகாவிட்டால் தனித்திருக்கும், செத்ததேயாகில் மிகுந்த பலனைக்கொடுக்கும்.” (யோவான் 12:24), என்பதில் தேவன் பதிலுக்கு மரணத்தின் கற்பனையான, போலி வெற்றியையும் வென்றெடுத்தார்.

இப்பொழுது உங்கள் திருமணத்தை பிரதிபலிக்கும் கண்ணாடியை மீண்டும் பாருங்கள். அங்கே மரணமே இறுதியானது என்று நீங்கள் கருதின உயிரற்ற தொடுவானத்தை உடைத்தெறிந்து, புதிய வாழ்க்கை, மிகுதியாய் உங்களுக்காக விளைகிறது.

திருமணம் என்பது ஒருவரின் ஆக்கிரமிக்கும் அன்பிற்கு மனமுவந்து அடிபணிவது. இது ஆக்கிரமிப்பு தான், காரணம் இது உடன்படிக்கையின் வாக்குதத்தங்களால் கட்டப்பட்டுள்ளது. ஒரு “பரிமாற்றம்” நடைபெற வேண்டும் என்பதே அதின் அர்த்தம். இது ஒரு மர்மமாக இருப்பினும் ஒரு பலி செலுத்தப்பட வேண்டும், பலி செலுத்த இரத்தம் வேண்டும். ஆகவே தான் திருமண பலிபீடம் என்று அழைக்கப்படுவதில் வியப்பில்லை.

திருமண உடன்படிக்கை, உறவை உறுதி செய்கிறது. உடலும், உள்ளமும் ஒன்றாகி, உடன்படிக்கையின் பங்காளர்களை இயற்கைக்கு அப்பாற்பட்ட விதத்தில் ஒன்றிணைக்கிறது. அவர்கள் ஒரே மாம்சமாயிருப்பார்கள் (ஆதியாகமம் 2:24) என்பதே இவ்வுடன்படிக்கையின் சாரம்சத்தை சித்தரிக்கிறது. இது இப்படி இருப்பது ஏனென்றால், தேவன்தான் இந்த .உடன்படிக்கையை உறுதிப்படுத்துகிறார். அதின் பொருள், பேரழிவுண்டாக்கும் கிளர்ச்சிகளும், வேதனைகளுமன்றி இவ்வுடன்படிக்கை உடையாது. இரு வேறு நபர்களின் அன்பை ஆச்சரியமாக ஒன்றிணைக்கும் பசையாக தேவன் இங்கே இருப்பதை பாருங்கள். பூமிக்குரிய திருமணம் கிறிஸ்துவுக்கும், அவர் மணவாட்டிக்குமான உடன்படிக்கையின் அடையாளமாக இருக்கிறது.. மரணத்தின் கொடூரம் அந்த பிரதிபலிப்பை புறக்கணித்துவிட்டது.

உங்கள் இழப்பு இவ்வளவாய் உங்களை வேதனைபடுத்துவதற்கு இந்த உடன்படிக்கையின் ஆழமும் ஒரு காரணம்; மாறாததும், அழியாததுமாக தோன்றியது, இன்று இரண்டாக கிழிந்துவிட்டது. 

உங்கள் துயரம் சொல்லொண்ணா வேதனையுடையது, ஆகவே அதற்கு புனிதமான மறுமொழி தேவை. ‘துயரம்’ என்பது உங்கள் நிலையை விவரிக்கவோ, அடக்கவோ சரியான வார்த்தை அல்ல. அதுபோலவே, நமக்காக பலியான இயேசு, சொல்லொண்ணா துயரப்பட்டார், அவருடைய வேதனையையும் வார்த்தைகளால் விவரிக்கவோ, அடக்கவோ இயலாததால், அவருக்கும் புனிதமான மறுமொழி தேவைப்பட்டது.
ஆனால் மரணம் அல்ல தேவன்தான் இங்கு சட்டங்களை இயற்றுகிறார்.

நடுங்கத்தக்கதும், அழிவின் அடையாளமாயும் எண்ணப்பட்ட தேவாலயத்தின் கிழிந்த திரைச்சீலை இப்போது துயரப்படுகிற விசுவாசிக்கு ஆறுதல் அளிக்கிறது. காரணம், கிழிந்த அந்த தேவாலயத்தின் திரைச்சீலை போலவே, துயரம் உண்டாக்கும் வெறுமையின் பிளவுகள் அவருடைய பரிபூரணத்தால் நிரப்பபடும். உங்கள் கிழிந்த இருதயம் குணமாக அவருடைய இருதயம் கிழிக்கப்பட்டது. திரைச்சீலையை கிழித்து, கல்லறையை திறந்து, இயேசுவை உயிரோடு எழுப்பின அதே வல்லமை, இப்போது கல்லறையாய் போன உங்கள் இதயத்தையும் திறந்து, அதில் மரித்ததாய் தோன்றுபவைகளை உயிரடையச்செய்யும்.

நம் இராஜா மரணத்தை நேருக்கு நேர் சந்தித்தார், போட்டியின்றி ஜெயித்தார். ஆட்டுக்குட்டியானவருடைய கொலையுண்ட சரீரம் மரணத்தின் முகத்திற்கு நேரே உயிர்ப்பிக்கப்பட்டு, அதின் வாயை என்றென்றைக்கும் அடைத்தது.

அன்பு கிழிக்கப்பட்டால் எப்படி இருக்கும் என்பதை இயேசு அறிவார். அந்த இராவிருந்தில் தன் சீடர்களுடன், தன் இரத்தத்தினாலே ஒரு பரிமாற்றத்தை செய்தார். ஆகவே நானும் நீங்களும் எப்படிபட்ட பாடுகளை அனுபவிக்கிறோமோ, அதை அவரும் அனுபவித்து வென்றிருக்கிறார். அந்த நாளில் திருமண பலிபீடத்தில் ஏற்பட்ட உடன்படிக்கை போலவே, இயேசுவும் பிதாவை நோக்கி நாம் அவரோடு ஒன்றாய் இணைந்திருக்கும்படி வேண்டிக் கொண்டார் (யோவான் 17:21). ஆனால், இயேசு மரண இருளிருந்து உயித்தெழுந்தார், ஆகவே நீங்களும் எழ முடியும்.

இப்போதும் கூட, ஒரு பாடல் தொலைவில் கேட்கிறது. அது உங்கள் பாடல் தான். அதின் இன்னிசையை உங்களால் கேட்க முடியாவிட்டாலும் அதின் வார்த்தைகள் நீங்கள் அறிவீர்கள் “மரணம் ஜெயமாக விழுங்கப்பட்டது. மரணமே! உன் கூர் எங்கே? பாதாளமே! உன் ஜெயம் எங்கே?” (1 கொரிந்தியர் 15:54-55). அது அனைத்தையும் மாற்றுகிறது.

banner image

துயரம் அநேக கேள்விகள் கேட்கிறது. அது தன்னிடம் இல்லாத ஒன்றுக்காய் ஏங்குகிறது: அது உங்கள் அன்புக்குரியவர். அவர்கள் இந்நேரம் இங்கிருந்தும், அவர்களை காணாவிட்டால், அவர்களை அடையும்வரை உங்கள் தேடல் அமைதியற்றிருக்கும். இது உங்கள் துக்கத்திற்கும் பொருந்தும். உங்களுக்கு அவர்களுடைய அரவணைப்பு தேவை, உங்களுக்கு பதில்கள் தேவை. ஏன் என்று உங்களுக்கு தெரிந்தாக வேண்டும். தெரியாது என்ற பதில் போதுமானதாக இருக்காது, காரணம் நீங்கள் அறிந்தபடி துயரம் சாதாரண மொழி அல்ல, அது சாதாரண பதில்களில் திருப்தி கொள்வதில்லை. தெரியாது என்பது அதை திருப்தியாக்காது… ஒருவேளை திருப்தி செய்யலாம்.

நரம்பியல் நிபுணர், என் கணவரின் நோயை குணமாக்க கூடாமல் போனபோது, நங்கள் அனைவரும் ஒரு இனம் புரியாத நிலைக்கு தள்ளப்பட்டோம். கிட்டத்தட்ட தொடர் நிகழ்ச்சிகளை தொலைக்காட்சியில் பார்த்தபின் திடீர் அமைதியில் நள்ளிரவில் ஏற்படும் நிசப்தம் போல, அது எங்கள் வாழ்வில் திடீர் வெறுமையை ஏற்படுத்தியது. ஆழமான இழப்பில் சத்தமில்லாமல் கூச்சலிடுவது போலிருந்தது. நான் அறியாத ஒன்று என்னையே இரக்கமில்லாமல் முறைத்துப் பார்த்தது கொண்டிருந்தது. நான் அதை தாக்ககூட ஆசைப்பட்டேன். ஒரு வார்த்தை என் மனதில் இரவும், பகலுமாய் ஓடிக்கொண்டிருந்தது. ஆனால் என்னை சுற்றிலும் ‘தெரியாதவைகளை’ தவிர எதுவுமில்லை.
செய்தி வேகமாக பரவியது, அடுத்த மாலை எங்கள் வீட்டைநோக்கி வாகனங்கள் படையெடுக்க, அந்த தெருவே கார்களால் வழிந்தது. அந்த இரவு எவ்வளவு நண்பர்கள் வந்தார்களோ தெரியவில்லை. ஆனால் எங்கள் சிறிய வீட்டில் அனைவரையும் அடைத்தோம். அந்த கரிசனை மறக்கமுடியாதது. இரவெல்லாம் அழுதோம், மகிழ்ச்சி தூரமானது, ஆனாலும் துக்கத்தோடு தேவனை ஆராதித்து, நாங்கள் குணமாகும்படி வேண்டிக்கொண்டோம். எங்கள் மகன் சாமுவேலும் அவன் நண்பனும் கிட்டார் வாசித்து எங்களை ஜெபத்திலும், ஆராதனையிலும் கிருபாசனத்தண்டை நடத்தினார்கள். எங்கள் பத்தே வயதான மகன் பெஞ்சமின் கூட தன் கைகளை உயர்த்தி தேவ இரக்கத்திற்காக பாடினான்.
எல்லாரும் “ஆமென்” சொல்லி களைந்த பின்னர், பெரும் நிசப்தம் அறையை நிரப்பியது, நாங்கள் இன்னும் வெறுமையாகவே உணர்ந்தோம். நாங்கள் தொடர்ந்து ஜெபிக்க தேவன் எங்களை உணர்த்தினார். நேரம் கடந்திருந்தது, நாங்கள் மிகவும் களைப்படைந்திருந்தோம் ஆனாலும் எங்களை தாழ்த்தி ஜெபித்தோம். அப்பொழுது எனக்கு பிரியமான தோழி “சூசன் நாம் மீண்டும் ஜெபிக்க வேண்டும் என்று நினைக்கிறேன், காரணம் தேவன் ஏதோ ஒன்று சொல்ல வேண்டுமென்கிறார், அவர் உன்னிடம் ஏதோ ஒன்றை சொல்ல விரும்புகிறார், அவர் உன்னுடைய தெரியாதவைகளின் வாயிலில் உனக்காக இருக்கிறார் என்று உனக்கு சொல்ல விரும்புகிறார்” என்றாள்.
அன்றைய தினம் என்னை கசக்கிகொண்டிருந்த அந்த வார்த்தையை, தேவன் ஒருவரை தவிர யாரும் அறியவில்லை. ஏதோ தேவன் எனக்காக தம் உலகத்தை சற்று நிறுத்திவிட்டு, சுழலாமல் நின்ற என் உலகத்தில் தம் வார்த்தையால் பேசி உயிர்பெற செய்தது போலிருந்தது. தேவனுக்கு ஒரு சிறப்பு இருக்குமானால், அது தெரியாதது என்பேன். எப்பொழுதெல்லாம் எனக்கு ஏதாகிலும் தெரியாததாக தோன்றினால் அங்கே எனக்காக அவர் தம் கொடியை அசைத்து என்னை குறித்து அவர் எவ்வளவாய் அறிந்திருக்கிறார் என்பதை நினைவுபடுத்துவார் என்று சொல்லினார். அன்றிலிருந்து அறியப்படாதவைகள் அறியப்பட்டன, காரணம் அவர் அங்கே இருந்தார். நான் அறியாத, புரியாத, பார்க்காத எதுவாயினும் அவர் அதிலே குடியிருந்தார்.
தெரியாதது நான் தேவனை சந்தித்து அவர் அன்பை அனுபவிக்கும் இடமாக மாறியது. வார்த்தையில் இருந்த அன்பு தான் அன்று என்னை மாற்றியது, இன்றும் மாற்றுகிறது.
துயரப்படும் என் நண்பரே, தெரியாததென்பது உங்கள் போராடும் மனதும், உடலும் ஓய்வெடுக்க தெரியாதவைகளில் குடியிருப்பவரின் கரங்களில் இளைப்பாறும் நேரமாகட்டும். பாருங்கள், “விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது” (எபிரேயர் 11:1)

banner image

ஒருவேளை சுவிசேஷங்களை எழுதியவர்கள் இயேசு தன் ஜீவனை கொடுத்த அந்த தருணத்தை வருணிக்க குறைந்தபட்ச வார்த்தைகளையே உபயோகித்தனர் என்று எண்ணுகிறேன். காரணம், அந்த செயலுக்கு இணையான வார்த்தைகளே இல்லை. மூன்று மணிநேரங்கள் இவ்வுலகத்திற்கு அப்பாற்பட்ட இருள், இராஜாவை மரணத்திற்கு நேராய் அழைத்து சென்றது. அவர் வேளை வந்தபோது அவர் வழக்கத்திற்கு மாறாக கூச்சலிடுகிறார், அது எல்லாவற்றையும் கடந்ததாக, மிகவும் வல்லமையுள்ளதாக இருந்ததால் தேவாலயத்தின் திரைச்சீலை கிழிந்தது, பூமி பலமாய் அசைந்து, நடுங்கியது. வரலாற்றின் ஈடு இணையில்லா வெற்றியும், ஒப்பற்ற துயரமும் ஒன்றை ஒன்று சந்தித்தது.
உங்கள் வாழ்க்கை துணையின் கடைசி நிமிடங்களில் இது போல இருள் சூழ்ந்தோ சூழாமலோ இருந்திருக்கலாம் ஆனால் அந்த உள்ளார்ந்த கதறலை நீங்கள் நன்கு அறிவீர்கள். உங்கள் உலகமே அசைந்து, தவறுகளின் அதிர்ச்சியால் உங்கள் வாழ்வின் அஸ்திபாரமே அசைந்திருக்கிறது. ஆனால், நொறுங்கி தூளாய் போன அனைத்திலும், சகலத்தையும் படைத்த நமது மீட்பின் கன்மலையான தேவன் நிலையான அஸ்திபாரத்தின் மேல் நம்மை நிலைநிறுத்த வல்லவர்.
நான் கலிபோர்னியாவில் வளர்ந்ததால் நிலநடுக்கங்கள் மத்தியில் வாழ்வதை குறித்து நன்கு அறிவேன். நாம் நிற்கும் பூமி அசையும்போதும், நம்மை சுற்றிலுமுள்ள சுவர்கள் நொறுங்கும்போதும் ஒன்றும் செய்ய இயலாமல் வெறுமனே பார்ப்பது எப்படி இருக்கும் என்பதையும் அறிவேன். நாங்கள் எங்கள் முதல் வீட்டைகட்டும்போது இத்தகைய சவால்களை சந்திக்கும் உறுதியான அஸ்திபாரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தோம். எங்கள் நண்பன் ரோலண்ட் ஒரு காண்ட்ராக்டர் கூட, அவரிடம் இந்த பொறுப்பை கொடுத்தோம். கட்டுமான பணிகள் ஒரு குளிர்காலத்தின் இடையில் ஆரம்பிக்கப்பட்டதால், அஸ்திபாரத்தை போடுமுன் அவ்விடத்தின் மண்ணின் தன்மையை உறுதி செய்துகொண்டார். கட்டுமானத்தை தாங்க மண் பக்குவப்பட்டிருக்க வேண்டும், இல்லையேல் அஸ்திபாரம் குலைந்து முழு வீடுமே இடிந்துவிழும். உறுதியான மண்ணை உருக்குலைத்தால், அதில் கட்டுவதற்கு முன்பாக அது மீண்டும் வலுப்பெற கவனமாக இருக்கவேண்டும். அது, சுற்றிலும் உள்ள நிலப்பகுதிகளின் அதிர்வுகள் மற்றும் வானிலை மாற்றங்களின் தாக்கங்கள் ஆகியவற்றை பொறுத்தே இருக்கும். அதிக மண் எடுக்கப்பட்டால், அதிக நேரமெடுத்து அதை சமப்படுத்தின பின்பு தான் அதில் கட்ட முடியும்.
துக்கம் உங்கள் வாழ்வின் அஸ்திபாரத்தில் அதிகமான மண்ணை எடுத்தபடியால், இப்போது அதிக கவனிப்பு வேண்டும். உங்களுடைய ஆழத்தில் அதிக அதிர்வு ஏற்பட்டபடியால் அது பக்குவப்பட நேரம் தேவைப்படுகிறது. ஆகவே துயரப்படுகிறவரே அது பக்குவப்படட்டும், காரணம் உங்கள் வாழ்வெனும் நிலம் எவ்வளவாய் இளைப்பாறுதல் பெறுகிறதோ அதை பொறுத்தே நீங்கள் கட்டுவதின் உறுதிப்பாடு இருக்கும். இந்த நேரத்தில் நீங்கள் அவசரப்பட்டால் அது அழிவில் முடியும்.
எவ்வாறு ஒரு நோக்கத்தோடு அஸ்திபாரமிட திட்டமிடுகிறோமோ, அப்படியே ஒரு நோக்கத்தோடு துக்கப்பட நேரம் ஒதுக்குங்கள். வெறுமனே உங்கள் துயரங்களின் குப்பைகளை புதைக்க பார்க்காதீர்கள், ஏனெனில் அவை மீண்டும் சிதைத்து, உங்கள் வீட்டை அசைத்து விரிசலுண்டாக்கும். பொறுமையாக இருங்கள்; தேவனே அதை உங்களுக்காக செய்வார். நீங்கள் காத்திருக்கையில் அவர் அன்பில் நிலைத்திருங்கள், அதில் நீங்கள் குணமாக தேவையான அனைத்தும் உண்டு.
உலகத்தின் அஸ்திபாரத்தின்மேல் ஒருபோதும் நிற்காதீர்கள். ஏனெனில் அங்கே காலநிலை எப்பொழுதும் கொந்தளித்து உங்களை வீழ்த்த பார்க்கும். உங்கள் உடல் சுகம், உறவுகள், உணர்வுகள், மற்றும் ஆவிக்குரிய நன்மைகள் அனைத்தும் இயேசு கிறிஸ்து எனும் ஒரே உண்மையான அஸ்திபாரத்தின் மேலே இருக்க வேண்டும். அவரே காயப்பட்டவர்களை பூரணமாக்கும் கீலேயாத்தின் பிசின் தைலமாய் இருக்கிறார். பொய்யான ஆறுதல்கள் அளித்து தற்காலிக விடுதலை தரும் போலியான நோக்கங்களை தேடாதேயுங்கள்.

எரேமியா தீர்க்கதரிசியால் மேற்கோள் காட்டப்பட்ட கீலேயாத்தின் பிசின் தைலம் (எரேமியா 8:32) இயேசுவால் உண்டாகும் குணமாக்குதலுக்கு அடையாளம். இந்த தைலம் அல்லது பிசின், யோர்தான் நதியின் கிழக்கேயுள்ள மலைப்பகுதியான கீலேயாத்தின் பால்சாம் எனும் மரத்திலிருந்து கிடைக்கிறது. கீலேயாத் என்றால் சாட்சியின் தூண் என்று பொருள். இந்த மரத்தை கீறும்போது அதிலிருந்து பிசின் வெளிப்படும், அது விலையேறப்பட்ட பரிசாக கருதப்பட்டது. அதுபோலவே, இயேசுவும் நமது குணமாக்குதலுக்கும், சாட்சிக்கும் அவரது காயங்களில் வழிந்தோடிய தனது விலையேறப்பட்ட இரத்தத்தால் நம் காயங்களை ஆற்றி, தேற்றி, காயங்கட்டுகிறார்.

துயரம் சற்று தனியட்டும், அதின் பாரத்தால் நீங்கள் அமிழ்ந்து விடமாட்டீர்கள் .தேவன் உங்கள் வேர்களை சுற்றிலுமிருக்கும் மண்ணை உறுதியாக அழுத்த, நீங்கள் நிற்பீர்கள்.. ஆனால் அதற்கு நேரம் கொடுங்கள்.

“உங்களைச் சீர்ப்படுத்தி, ஸ்திரப்படுத்தி, பலப்படுத்தி, நிலைநிறுத்துவாராக” (1 பேதுரு 5:10)

banner image

எங்கள் பிள்ளைகள் ஆழமாக நேசிக்கப்பட்டும், நேசித்தும் வளர்ந்தனர். அது அவர்களின் உண்மையான பரம்பரைச்சொத்து. என் மகன் பென், அவன் தந்தை மரித்தபோது சிறுவனாக இருந்தான், அவன் வாழ்க்கை வளரவளர சில நேரங்களில் அவனுடைய துயரமும் வளர்ந்தது. வாழ்வின் ஒவ்வொரு பகுதியிலும் துயரம் மென்மையாகவும், தொடர்ச்சியாகவும் கவனிக்கப்பட வேண்டும். பென் வாலிபனானபோது அவனுடைய புதிய இழப்புகள் சிலநேரம் பழைய துயரங்களை எழுப்பிவிட்டன.

அது துயரத்தின் பண்பு. என் மற்ற பிள்ளைகள் ஜெனிபர் மற்றும் சாமுவேல் போல, பென் தன் தந்தையுடன் அநேக ஆண்டுகள் செலவழிக்கவில்லை. ஆனால் இன்னும் இணக்கமான பரிசின் மூலம் அவனுக்கு தேவனுடைய கனிவு கிடைத்தது. காரணம் அவன் வளருகையில் பாப் நல்ல தகப்பனாக, பெலவீனமான அழுகிற குழந்தையை கவனித்துக்கொண்டார். அவன் டயப்பர்களை மாற்றி, கழிவுகளை சுத்தப்படுத்தி, அநேக இரவுகளில் அவனை தூக்கிக்கொண்டு அறையில் தாலாட்டு பாடி தூங்க வைத்தார்.

பென் எங்கள் வீட்டை சுற்றிலுமிருக்கும் மலைகளையும், பள்ளத்தாக்குகளையும் பரிட்சயமாக்கும் பெரியவனான பின்பு அவர்கள் இருவரும் மலையேறுதல், காட்சிகளை, சத்தங்களை, வாசனைகளை, உரையாடல்களை பகிர்ந்துகொள்ளுதல் என்று தந்தை-மகன் என்ற தெய்வீக உறவில் மகிழ்ந்தனர். எல்லாவற்றுக்கும் மேலாக பென், கால்பந்து விளையாட கற்றுக்கொண்டதை இன்றும் மறக்கவில்லை காரணம் அதை கற்றுக்கொடுத்தது அவன் தந்தை. உலகம் அதனை “அழகான விளையாட்டு” என்றழைக்கிறது, ஆனால் பென்னுக்கு அதனோடே இணைந்த அவன் பிள்ளைப் பருவம் அந்த விளையாட்டின் அழகாய் தோன்றியது.

பென் பல ஆண்டுகள் இந்த விளையாட்டின் மீது ஆர்வமாய் இருந்தான். கல்லூரி நாட்களில் தன் அணிக்காக விளையாட தகுதிபெற்றும் காயங்களும், அவன் கைமீறின சூழ்நிலைகளும் பல ஆண்டுகளுக்குமுன் எங்கள் வீட்டு கொல்லைப்புறத்தில் முளைத்த அவன் கனவுகளை தகர்த்தன. அவன் தன் தந்தைக்காக விளையாட விரும்பினான். அவன் கைதேர்ந்தவனாக, நான்கு ஆண்டுகள் நீடிய பொறுமையோடு, இக்கட்டான பல சூழ்நிலைகளை கடந்து வந்தான், அவன் தந்தையை பெருமைப்படுத்த எண்ணினான். ஆனால் அது அமையவில்லை. தன் கால்பந்து அணியின் கேப்டனாக, தன் கல்லூரியின் இறுதி ஆண்டையும், அதனுடன் தன் தந்தையையும் இழந்ததற்காக துயரப்பட்டான். கால்பந்து விளையாடுவதை நிறுத்துவது, அவன் தந்தையையே விட்டு பிரிவது போல தன்னால் இயலாத காரியமாக உணர்ந்தான்.

ஒரு இரவு நாங்கள் தோய்ந்த இருதயத்தோடு, வழிகாட்டுதலுக்காகவும், ஆறுதலுக்காகவும் ஜெபித்தோம். அந்த இரவிலே தேவன் எங்களோடு பேசினார், அவர் காட்டிய தரிசனம் எங்களுக்கு என்றைக்கும் நிலைத்திருக்கும். எல்லையில்லா ஒரு அறையை நான் கண்டேன், அது தங்கத்தால் ஜொலித்தது. ஒரு பெரிய சிலுவை அந்த அறையின் நடுவிலே மொத்த அறையையும் இரத்தத்தால் நிறைத்தது. அந்த தங்கத்தை சுத்தமாக்கும் பணியிலிருந்தவர் நன்கு பரிச்சயமானவர்; அவர் இயேசு. அவர் புன்னகைத்துக்கொண்டே நேர்த்தியாக அந்த தங்கத்தின் மீது இருந்த கசடை தன் சொந்த கரங்களால் துடைத்து கொண்டே, அந்த தங்கம்தான் பென்னின் துயரம் என்றார். பிறகும் “அவன் இதை வைத்துக்கொண்டே இருக்கிறான்” என்றார். இயேசு அந்த தங்கத்தின் மேலிருந்து துடைத்த கசடு அவனுக்கு இனி தேவைப்படாத துயரமே. மீதமிருந்த துயரம் பென் தனக்கென்று வைத்துக்கொண்ட பகுதியே; ஆனால் தன் பொக்கிஷத்தை சுத்திகரிக்கும் நேரம் வந்தது. இந்த பணியை தாமே செய்து முடிக்க போவதாக தேவன் உறுதியளித்தார்; பென் அதை செய்ய வேண்டியதில்லை. அவன் அவரை நம்பினால் மட்டும் போதும்.

இன்றைக்கும் நடைமுறையில் இருக்கும் பழம்பெரும் மனிதர்களின் பழக்கம் உலோகங்களை நெருப்பால் சுத்திகரிப்பதாகும். ஆயிரம் டிகிரி செல்சியஸ் சூட்டில் நெருப்பு, கசடுகளை மேலே வெளியேற்றும், ஆனாலும் இந்த முறையில் தங்கம் சற்றாகிலும் சேதப்படாமல் அதின் மதிப்பும், ஆற்றலும் இன்னும் அதிகமாகும்.

கசடு ஒரு மாசாக கருதப்படுவதால் அது நீக்கப்பட வேண்டும். இல்லையேல் விலையேறப்பட்ட தங்கள் மதிப்பிழக்கும். “சுத்திகரித்தல்” என்றால் ஏதோ ஒன்றை உயர்வான நோக்கத்திற்காக மெருகேற்ற அதை விடுவிப்பதாகும். கிரேக்கத்தில் இதற்கு “பற்றவைத்தல்” என்று பொருள். அதிலும் லத்தீனிலோ தங்கத்திற்கு அடையாளமாக Au என்பார்கள் அதற்கு “பிரகாசமான அல்லது ஒளிரும் விடியல்” என்று பொருள், ஏனெனில் தங்கத்தை புடமிடும் இறுதி கட்டத்தில் அது “பிரகாசிக்கும்” அனுபவம் பெரும். இந்த உலோகத்தில் உள்ள கடைசி களிம்பும் அதினிடமிருந்து நீங்கும்போது சுத்தமான உலோகம் பிரகாசமான ஒளியை பிரதிபலிக்கும்.

அந்த சோகமான மாலை நேர ஜெபத்தில் கிடைத்த தரிசனம் இன்றும் பலகாரியங்களை கற்று தருகிறது. நாம் கசடற்றவர்கள் அல்ல. அது தேவையில்லாத காரியங்களால் உருவாகி, உடைந்த இருதயம் குணமாக தடையாயிருக்கிறது. அதை விடுவது கடினமாக தோன்றாது, அப்படி செய்தால் வேதனையும் கூடாது காரணம் எஜமானின் கரமே அதை செய்து முடிக்கும்.

“நான் எவைகளையெல்லாம் எனக்காக என் கரங்களில் வைத்து கொண்டேனோ, அவைகளையெல்லாம் இழந்தேன்; ஆனால் எவைகளை தேவனுடைய கரங்களில் கொடுத்தேனோ, அவைகளை சொந்தமாக்கி கொண்டேன்.” – மார்ட்டின் லூதர்

விடாமல் போராடிக்கொண்டிருக்கும் என் நண்பரே, ஒருவேளை உங்கள் முகத்தில் வழியும் கண்ணீர் மட்டுமே இப்போது உங்கள் ஆறுதலாயிருக்கலாம். உங்களுக்கு முன்பாக பார்க்கும்போது, முடிவேயில்லாத பல காரியங்கள் உங்கள் எதிர்காலத்தை குறித்து நம்பிக்கையற்று போக செய்திருக்கலாம். உங்கள் கனவுகளும், ஆர்வங்களும் கொல்லைப்புறத்திலேயே புதைக்கப்பட்டு, நினைவுகள் சுகத்திற்கு பதிலாக திகிலூட்டலாம். ஆனால் உங்களை புடமிடுகிறவரின் நேச தணல்கள் உங்களுக்குள் இருக்கும் செழிப்பை விருதாவாக விடாது. உங்கள் மதிப்பும், திறன்களும் கெட்டழிய அவருடைய அன்பு ஒருக்காலும் அனுமதிக்காது. உங்கள் துயரத்தின் பொக்கிஷம், அதின் நோக்கத்தை நிறைவேற்ற நிலைத்திருக்கும். ஆனால் எவையெல்லாம் பயனற்றவைகளோ, எவையெல்லாம் மதிப்பற்றவைகளோ, எவையெல்லாம் உங்கள் எதிர்காலத்தை சீரழிக்குமோ, அவைகளெல்லாம் இயேசுவின் சுத்திகரிக்கும் கரங்களில் ஒப்படைக்க வேண்டும்.

நீங்களே கசடை நீக்க முடியாது; அது மிக கடினம். ஆனால் பரவாயில்லை. இப்பொழுது எல்லாமே கடினமாக இருக்கிறது, செய்யப்படவேண்டிய ஒரே காரியம் இளைப்பாறுவது ஏனெனில் அது தன்னில் தானே குணமாக்கும் ஆற்றலுடையது. உங்கள் துயர வாழ்க்கை முழுதும் இந்த புடமிடுதல் நடைபெறும், ஆனால் அதின் முடிவில் நீங்கள் சுத்தமான பொன்னாய் வெளிவருவீர்கள்.

பென் தன் தந்தையை கனப்படுத்த கால்பந்து விளையாட விரும்பினான் காரணம் அவன் அவருக்கு சிறந்தவனாக இருக்க விரும்பினான். புடமிடப்படவும், துயரென்ற கசடற்றவர்களாய் நாம் வாழவும் தேவன் உண்டாக்கிய வழி, நாம் முன்னேற்றம் அடையவும், சிறந்தவர்களாய் விளங்கவுமே. பென்னின் கனவு நிறைவேறியது. இயேசு புன்னகைத்ததில் ஆச்சரியமில்லை.

“ஆனாலும் நான் போகும் வழியை அவர் அறிவார்; அவர் என்னைச் சோதித்தபின் நான் பொன்னாக விளங்குவேன்.” (யோபு 23:10).

banner image

ஒரு மாலை வேளை, பாப் தன் முடிவின் சமீபத்தில், படுக்கையில் ஓய்ந்திருக்கயில், நானும் அருகிலிருந்தேன். அவர் என் பக்கமாய் திரும்பி, பார்வையால் இறுகப்பிடித்து, ” நினைவில்கொள், எப்பொழுதும் நினைவில்கொள், நான் உங்கள் அனைவரையும் அதிகமாக நேசிக்கிறேன்” என்றார். நானும் அப்படியே செய்வதாக வாக்கு பண்ணினேன். அவர் வாழ்வை போலவே அந்த தருணமும் மறக்க இயலாது. “நாங்கள் நினைப்போம்” என்ற வாசகம் தான் அவருடைய கல்லறையில் உள்ளது.

இறையியளாலர் விக்டர் ஷெப்பர்ட் கூறுகையில், நினைத்தல் என்பது “கடந்த கால நிகழ்வை நிகழ் காலத்திற்கு கொண்டு வருதல்; அப்படி செய்கையில் முன்பு என்ன நடந்ததோ அது இப்போதும் நடந்து கொண்டிருப்பதை பார்ப்போம்; அன்று வெளிப்பட்டு தன்னை தொட்ட அனைவரையும் என்றைக்குமாய் மாற்றியது, இப்பொழுதும் செயல்படக்கூடியதாய், தன்னை நினைவு கூறுபவர்களை மாற்றக் கூடியதாய் உள்ளது” என்கிறார்.

நாம் முன்பு பார்த்த திருமண பலிபீடத்தில் தியாகமான அன்பினால் உண்டான உடன்படிக்கையை, நினைத்துப்பாருங்கள். அதே புனிதத்தன்மையோடு வேறுவகையான பலிபீடமும் உண்டு, ஆனால் உங்களை “முன்னேறி செல்லவும்”, “இன்னும் நம்பிக்கையோடு இருக்கவும்” கூறிய உங்கள் அன்புக்குரியவர்களின் நோக்கங்களோடு எதிர்மறையானதாய் இது இருக்கும். அதுதான் நினைவுகூறுதலின் பலிபீடம், தன் ஜனங்களுக்காய் வழிகளை திறக்கும், எதினாலும் தடைப்பண்ண முடியாத இணையற்ற தேவனின் வல்லமையும், அவர் உண்மையின் அடையாளங்களும் பதிக்கப்பட்ட பலிபீடம்.

தன்னை பாதுகாத்துக்கொள்ள எண்ணாமல் தன்னையே கொடுத்து இடைவிடாமல் போராடும் இருளிலிருந்து நம்மை காத்த இயேசுவை இந்த பலிபீடம் நினைவுபடுத்துகிறது. நம் பாதை இருளினாலும், பயத்தினாலும் சூழப்படும்போதெல்லாம் தன்னை நம்ப இந்த பலிபீடம் அழைக்கிறது. அவர் நம்மால் இயலாத சூழலில் நம்மை நடத்தினதையும், தற்கால குழப்பங்களிலும், வருங்கால பயங்களிலும் நம்மை திடப்படுத்தியதை இந்த பலிபீடம் நினைவூட்டுகிறது. இது மற்றவர்களுக்கு நம் கதையை சொல்லி, தொலைந்தவர்களையும், தோய்ந்தவர்களையும், வீடு சேர நடத்துகிறது. அவர் நம்மோடு என்றுமிருப்பார் என்ற அவரின் வாக்குத்தத்தத்தை இந்த பலிபீடம் நினைவுபடுத்துகிறது. இந்த பலிபீடத்தில் அசாத்தியங்களும், நம்மை குணமாக்கி, நம் வேதனையை உருமாற்றும் வல்லமைகளும் உள்ளன.

இந்த பலிபீடம் நம்மை எவ்வாறு மாற்ற வேண்டுமோ அவ்வாறே என்றென்றைக்கும் மாற்றும்.

துயரத்தை தாண்டவும், ஆரோக்கியமாக வெளிப்படுத்தவும் வேண்டும், ஆனால் நாம் சுலபமாக அதை கடப்பதில்லை. வாழ்க்கை அவ்வளவு புனிதமானது. அன்பு நண்பரே, உங்களுக்கு யார் எதைவேண்டுமானாலும் சொல்னாலும், நினைவுகூறுதலை தேவனுக்கு ஆராதனையாக ஒப்புக்கொடுப்பது என்பது நம் விசுவாசத்தின் வெளிப்பாடாகும்.

“துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் ஆறுதலடைவார்கள்.” மத்தேயு 5:4. துக்கித்தல் என்பது துயரத்தின் ஆழமான அனுபவமும், வெளிப்பாடுமாய் இருக்கிறது. நாம் ஆறுதல் அடையவே துக்கிக்கிறோம். இங்கே தான், இந்த நினைவுகூறுதலின் பலிபீடத்தில்தான் ஆசிர்வாதம் காத்திருக்கிறது. ஆவிக்குரிய தசை, வலியோடும், விசுவாசத்தோடும் உருவாக்கப்படுகிறது. துக்கிக்கவும், நினைவுகூறவும் இந்த பலிபீடம் அனுமதிக்கிறது. இதுவரை எடுத்த எல்லா முயற்சிக்கும் உங்கள் இழப்பு தகுதியானதே; அதை கற்பனை செய்வதே கடினமாயிருந்தாலும்; நீங்கள் பெறப்போகிற ஆறுதல் உங்கள் வசிப்பிடமாய்ப்போன வேதனையான இரவுகளை மிஞ்சும்.

இதை நினைத்துக்கொள்ளுங்கள்: இஸ்ரவேலர்கள் யோர்தானை கடக்கும்போது, அவர்கள் பாதங்களின் கீழிருந்த கற்களே அவர்கள் நினைவுகூறுதலின் பலிபீடமானது. நினைத்துக்கூட பார்க்கமுடியாத பாதை வழியே அவர்கள் கடந்து வந்ததே அவர்களுடைய மகிமையாகவும், புதிய இடத்தில் புதிய நோக்கத்தோடு வாழும் புதிய ஆரம்பமாய் இருந்தது; உங்களுக்கும் அவ்வாறே இருக்கும்.

என் பொக்கிஷமான நண்பரே, உங்கள் பலிபீடமும் உங்கள் யோர்தானின் நடுவிலிருந்த கற்களால் கட்டப்படவேண்டும். நோக்கத்தோடு நினைத்துப்பார்த்தல், புனிதமானதும் நீங்கள் நடந்த கரடுமுரடான பாதைகளாலுமானது; இயேசுவைப் போலவே. ஆனால் நீங்கள் எழுந்து நிற்பதற்கு, அவர் நடந்த பாதைதான் உங்களுடைய துயரம் மற்றும் பலிபீட மூளைக்கல்லாக இருக்கவேண்டும்.

நினைவுகூறுதலின் சிறப்புரிமையும், அந்த பரிசும் பழைய ஏற்பாட்டோடு முடியவில்லை. நம் கிறிஸ்து நமக்கு திருவிருந்தை அறிமுகப்படுத்துகையில், அதை ஒரு நோக்கத்தோடு கடைபிடிக்கும் பழக்கமாய் தொடர அழைக்கிறார், அது நாம் தொடர்ந்து செல்லுமுன் ஒருமுறை செய்யும் செயலின் அடையாளத்திற்கு மேலானது. மேல்வீட்டறையின் அமைதியான மணித்துளிகள், யூத மக்களின் விடுதலையின் மையமாயிருந்த பஸ்கா, மறுரூபமானதை குறித்துக்கொண்டிருந்தன. இயேசு அதற்கு தன் ஜீவனைக்கொண்டு புதிய ஜீவனை கொடுத்தார். அவர் அதின் அர்த்தத்தை “நிறைவேற்றினார்”, அல்லது அதை முழுவதும் நிரப்பி, நாம் அவரோடு மீண்டும் ஒன்றினையும் வரை அவரை தொடர்ந்து பருக சொன்னார். மேலும் அதை நினைவுகூறுதலின் அர்த்தத்தால் முழுவதும் நிறைத்தார்.

அவரை அறிந்த எல்லாராலும் உயர்வாக நேசிக்கப்பட்டிருந்தும், தன் தந்தையை எல்லாரும் மறந்துவிடுவார்கள் என்று எங்கள் மகள் ஜெனிஃபர் கவலையோடு ஆறுதலற்றிருந்தாள். வருடங்கள் உருண்டோட இந்த எண்ணம் மறைந்தாலும், தந்தையின் செல்லமகளை ரகசியமாக இது துளைத்தது, மற்றவர்கள் மறந்துவிட்டனரோவென்று கவலையோடிருந்தாள். காலப்போக்கில் அவள் தந்தையில்லாமல் தனியே நடைபாதையில் நடக்க வைத்தோம், பிறகு அவளுக்கு பிறந்த இனிமையான இரு பெண் குழந்தைகள் என நாங்களும் அவளுடைய நினைவுகூறுதலின் பலிபீடத்தின்மேல் சில கற்களை வைத்தோம். அவளுக்கு மூன்றாவதாக ஆண் குழந்தை பிறக்கும் தருவாயில் ஜெனிஃபரின் கணவர், தேவன் “சகரியா” என்று பெயரிடுமாறு தன் உள்ளத்தில் பேசியதாக எங்களோடு பகிர்ந்தார். அதற்கு அர்த்தம் யெகோவா நினைத்திருக்கிறார்.

முந்திப் பூர்வகாலத்தில் நடந்தவைகளை நினையுங்கள்; நானே தேவன், வேறொருவரும் இல்லை;…… (ஏசாயா 46:9)

துயரப்படுகிற அன்பு நண்பரே, உங்கள் அன்பானவரை தாராளமாக நீங்கள் நினைவுகூறலாம், ஏனெனில் நினைவுகூறுதலின் உன்னதமான பலிபீடத்தில் தேவன் உங்களை நினைத்தார். பதிலுக்கு நாமும் அவரை நினைவுகூர நம்மிடம் கேட்கிறார். அவரால் அதை புரிந்துகொள்ள முடியும். 

அதைக்குறித்து நோக்கத்தோடிருங்கள், மற்றவர்கள் அதை கண்டுகொள்ளாமலிருப்பினும் நீங்கள் எதிர்கொள்ளுங்கள், தேவனையும், உங்கள் அன்பானவரையும் கனப்படுத்துங்கள். மேலும் அவர் உங்களை அதிகமாக நேசிக்கிறார் என்பதை நினையுங்கள்.

banner image

வசந்த காலத்தின் நடுவிலே இதை நான் எழுதுகிறேன், ஆனால் வருடத்தின் எந்த காலமாயிருந்தாலும் உங்களுக்கு வசந்த காலம் இல்லாமலிருக்கலாம். எந்த பருவமாய் இருந்தாலும், துக்கத்தினூடே குறிப்பிட்ட பயமும் இருக்கும். நிச்சயமாய் பொழுது விடுவது போலவும், சூரியன் இடம்பெயர்ந்து பூமியின் சுழற்சி மாறுகையில் பருவமும் மாறும் என்ற சில உண்மைகளை போலவே, துயரமும் மாறும். உங்கள் தேவன்தான் பருவங்களை மாற்றுகிறார், அவர்தான் உங்கள் குளிர்காலத்திலிருந்து உங்களை மீட்கிறவர்.

அவருடைய வல்லமையினால் வானங்கள் உண்டாகி நிலைபெற்றிருக்கிறது, மேகங்கள் அவருடைய கால்தூசி. மரணமும் விழுந்து பணிந்துகொள்ளும் தேவன், இந்த பூமியை தமது கிரியைகளின் பலனால் திருப்தியாக்குகிறார், அவரே உங்கள் வெறுமையின் தாகத்தையும் திருப்தியாக்குவார்.

அவர் எல்லாவற்றையும் சீர்படுத்துகிறார், உங்களையும் சீர்படுத்துவார். இப்பொழுதே, அந்த பனி துவங்கிவிட்டது. திராட்சை செடி தேவையானதை வழங்குவதைப்போல, திராட்சை தோட்டக்காரர் தனது நிச்சயமான, மிருதுவான கத்தரிகளால் கிளை நறுக்கும்போது உங்கள் வேதனை நல்ல கனிகளை கொடுக்கும். ஆனால் அவர் அதை செய்ய நீங்கள் அனுமதிப்பீர்களா? அது உங்களுக்கு பாதுகாப்பானதா? வெட்டுவதும், சீர்படுத்துவதும் எதிர்மறையானதென்று நாம் எண்ணலாம் ஆனால் தேவனுடைய வழிகள் உயர்ந்தவைகள், அதின் விளைவுகளும் அப்படியே இருக்கும்.

யோவான் எழுதிய சுவிசேஷத்திலிருக்கும் பிரசித்தமான வார்த்தைகளை கேளுங்கள்:

“நான் மெய்யான திராட்சச்செடி, என் பிதா திராட்சத்தோட்டக்காரர். என்னில் கனிகொடாதிருக்கிற கொடி எதுவோ அதை அவர் அறுத்துப்போடுகிறார்; கனிகொடுக்கிற கொடி எதுவோ, அது அதிக கனிகளைக் கொடுக்கும்படி, அதைச் சுத்தம்பண்ணுகிறார். என்னில் நிலைத்திருங்கள், நானும் உங்களில் நிலைத்திருப்பேன்; கொடியானது திராட்சச்செடியில் நிலைத்திராவிட்டால் அது தானாய்க் கனிகொடுக்க மாட்டாதது போல, நீங்களும் என்னில் நிலைத்திராவிட்டால், கனிகொடுக்கமாட்டீர்கள். நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்; என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது.” (யோவான் 15:1-2; 4-5)

நீங்கள் பாருங்கள், திராட்சை தோட்டக்காரருக்கு இது தனிப்பட்ட விஷயம், காரணம் அவருடைய குமாரன்தான் திராட்சை செடி, நீங்கள் கிளைகள். அவர் நோக்கம் பன்முகத்தன்மை உடையதாயினும், சீரமைத்தலே அடிப்படை நோக்கமாக உள்ளது. அன்பினாலே இந்த செயல் செய்யப்பட்டாலும் கீறல்களும் உண்டு.

திராட்சைசெடி உறைந்திருக்கும் குளிர்காலத்தில் தான் அதின் கொடிகள் கத்தரிக்கப்படுகின்றன. இதின் முழுமையான குழும நோக்கம், ஒன்றோடொன்று சிக்கிகொண்டிருக்கின்ற, நோயுற்றுள்ள அல்லது சுற்றிலுமுள்ள கொடிகளுக்கு நோய்தொற்றை பரப்பக்கூடிய கொடிகளை கத்தரிப்பதே ஆகும். திராட்சை கொடிகள் பொதுவாகவே போதுமான கட்டைகள் இல்லாமல் அடர்த்தியாய் வளருபவை, இதினால் செடியின் சீரோட்டம் பாதிக்கப்பட்டு அதினால் சுவாசிக்க முடியாது.

இது எப்படி இருக்கும் என்று நீங்கள் நன்கு உணர்வீர்கள்.

கனிகொடுக்கும் கொடிகள் மீது திராட்சை தோட்டக்காரர் கவனமாய் இருந்தாலும், தவறான நேரத்தில் அதிக கனிகொடுக்க அனுமதிக்க மாட்டார், ஏனெனில் திராட்ச செடி செழிப்பாய், முழுமையாய் வளர தேவையான திடனும், போஷாக்கும் அதற்கு கிடைக்காமல் போய்விடும்.

இரண்டாம் நோக்கமானது, கொடிகள் எல்லாம் அறுவடைக்கு ஏற்றாற்போல இசைவாய், அவைகளின் தட்டிகளில் சரியான கட்டுமானத்தில் வளரவேண்டும், அப்போது அது எதிர்காலத்திலும் நிலைத்திருக்கும். ஒரு திராட்சை செடியை, குறிப்பாக ஒரு புயலுக்குப்பின் அதை சீரமைத்து, கிளைநறுக்குவது அதற்கு மீட்பையும், ஆரோக்கியமான வசந்தகால வளர்ச்சியையும் அளிக்கிறது. திராட்சை தோட்டக்காரர் மிருதுவானவர் ஆனால் அதே சமயத்தில் பெலனுள்ளவர், நிச்சயமானவர், உறுதியானவர். தன் திராட்சை தோட்டத்தின் ஒவ்வொரு “உறுப்பினர்களின்” சுபாவங்களையும், குணாதிசயங்களையும் நன்கு அறிவார். அப்படியே உங்களையும் உங்கள் துயரத்தையும் அறிவார்.

நீங்கள் பாருங்கள், மீட்டெடுத்தல் இழந்ததை விட அதிகமாக திரும்ப கொடுக்கும். இது தான் வெற்றி! மாற்கு 3 இல் ஜெப ஆலயத்தில் இருந்த அந்த சூம்பின கையையுடைய மனுஷனை போல தான் நாமும் உதிர்ந்து போய், தூக்கிக்கிற நம் வாழ்வை இயேசுவிடம் நீட்ட, அதை அவர் சீரமைக்கிறார். அது தேவனின் தயாள குணம். அவருடைய சீரமைக்கும் கிருபை மிகுதியாய் வழிந்தோடி மரணத்தின் எல்லைகளையும் கடக்கிறது. ஏனெனில் அவர் அன்பை எவராலும் கட்டுப்படுத்த இயலாது. எபேசியர் 3:20 இல் கூறப்பட்ட “மிகவும் அதிகமாய்” என்பது இதுவே. இதை அளவிட முடியாது.

“நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியைசெய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவராகிய அவருக்கு,” (எபேசியர் 3:20)

ஆனால் முதலாவது கத்தரிக்கப்பட வேண்டும். நீங்கள் முடங்க அவசியமில்லை. கவனமாக கேளுங்கள்: அவர் கத்தரிக்கிறார் என்றால் அவர் அரவணைக்கிறார், அதற்கு தேவையெல்லாம் உங்கள் ஒப்புதல் மட்டுமே. யோவான் 15 இல் சொல்லப்பட்ட “நிலைத்திருத்தல்” இதுவே. இளைப்பாறுதலே கத்தரிக்கப்படுதலின் அர்த்தம்.

வாழ்க்கைக்கும், துயரத்திற்கு பொதுவான சில மீதங்கள் உங்களிடமிருந்து திருடப்பட்டுள்ளன, சிலவற்றிற்கான பெயர் கூட உங்களுக்கு தெரியும். இதுவரையிலும் அவைகளின் பிடியை உங்களால் தளர்த்த இயலவில்லை. இது ஏனெனில் திராட்சை தோட்டக்காரர் உங்களுக்காக அதை செய்யவும், உங்களை சீரமைக்கவும் காத்திருக்கிறார். அவற்றுள் சிலவற்றிற்கு என்னால் பெயரிட முடியும் ஆனால் நீங்கள் தான் அவற்றை கத்தரிக்க திராட்சை தோட்டக்காரரிடம் தர வேண்டும்.

நீங்கள் உங்களையோ, மற்றவர்களையோ காரணம் காட்டலாம், ஆனால் இவைகளெல்லாம் கத்தரிக்கப்பட வேண்டும்: மனக்கசப்பு, கோபம், மன்னியாமல் இருப்பது, கசப்பு, குற்றப்படுத்துதல், வருத்தம், மூடத்தனமான அல்லது புண்படுத்துகிற உறவுகள், உலகப்பிரகாரமான தீமை, மற்றும் போலியான தேற்றரவாளர்கள். இந்த வார்த்தைகளை படிக்கும்போதே இவைகள் உங்கள் மனதையும், இதயத்தையும் பாதித்துள்ளனவா என்று உடனே நீங்கள் அறிவீர்கள். இவைகள் உங்கள் உணர்வை கசப்பாக்கி, உங்கள் வருத்தத்தையும், உங்களுக்கு அன்பானவரின் நினைவுகளையும், உங்கள் எதிர்காலத்தையும் தீட்டுப்படுத்தும். நீங்கள் அவைகளோடு ஒரு போலியான சமாதானத்தை பெற்று, அவைகளை உங்கள் சிநேகிதராக கூட ஏற்றிருக்கலாம். அவைகளை நீங்கள் அருகிலேயே வைத்துக்கொண்டிருந்தால், அவை உங்களை சிதைத்து, நீங்கள் இழந்த அன்பானவரையும் கனவீனப்படுத்தும். அவைகள் உங்கள் பக்கமும், உங்கள் துயரத்தின் பக்கமும் திரும்பி உங்கள் இழப்பிற்காக யாரையாகிலும் பழியேற்க சொல்லும்.

ஆனால் அதுதான் கவனிக்கப்பட வேண்டும்- யாரோ ஒருவர் செய்திருக்கிறார்.

என் நண்பரே, கிருபை உங்களுக்குண்டு, வாழ்க்கை செயலற்றதாக நீங்கள் உணர்ந்தாலும், உங்களை சீரமைப்பதே திராட்சை தோட்டக்காரரின் உறுதியான வாக்குத்தத்தம். உங்கள் துயரத்தினால் விளைந்த புனிதமான கனி செழிக்கும், உங்கள் வேர்கள் ஆழமாக ஊடுருவி உங்களை நிலைப்படுத்தும். காரணம், நினைவில்கொள்ளுங்கள் திராட்சை தோட்டக்காரருக்கு இது தனிப்பட்ட விஷயம்.

“கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மைத் தமது நித்திய மகிமைக்கு அழைத்தவராயிருக்கிற சகல கிருபையும் பொருந்திய தேவன்தாமே கொஞ்சக்காலம் பாடநுபவிக்கிற உங்களைச் சீர்ப்படுத்தி, ஸ்திரப்படுத்தி, பலப்படுத்தி, நிலைநிறுத்துவாராக; (1 பேதுரு 5:10)

banner image

யாருக்கும் இது தெரியாது, ஆனால் நான் பாப் இறுதி மூச்சை விட்ட போர்வைக்குள் என்னை போர்த்தி, அவரை இறுதியாக தொட்ட துணி என்னையும் தொட அதில் மூடிக்கொண்டேன்.

குறிப்பிட்ட பிரியாவிடைகள் எப்போதும் நேரத்தை குறித்து வைத்திருக்கும், அடுத்த காரியத்திற்குள் நாம் நுழைய தேவையான மாறுதலை சுலபமாக்க அல்ல, மாறாக அவை நிரந்தரமான பிழையாக உணரவைக்கும்.

“குட்பை” என்ற பிரியாவிடை “தேவன் உன்னோடுகூட இருப்பராக” (God be with you) என்ற வாக்கியத்தில் பிறந்தது. ஒவ்வொரு கலாச்சாரத்திலும் அவைகளுக்கென்ற பிரியாவிடை சடங்குகள் கூட உண்டு. ரஷ்யாவில், விருந்தாளிகள் சென்ற பின்பு அவர்கள் தங்கியிருந்த அறையை உடனே சுத்தம் செய்வதில்லை. துருக்கியில், நண்பர்கள் அல்லது உறவினர்கள் கூடி மகிழ்ந்த பின் அவர்களுடைய கார்களுக்கு பின்னாக ஒரு வாலி நிறைய தண்ணீரை சாலையில் இறைப்பார்கள், அது அன்பானவர்கள் பத்திரமாக பிரயாணிக்கவும், பின்பு சுகமாய் திரும்பவும் அவர்களை கொண்டு செல்லும் நதியின் அலைகளுக்கு அடையாளமாம். யூத மக்களும், தங்கள் வேதமான தோராவை படித்து முடித்தபின்னர் “நாங்கள் உன்னிடம் திரும்பி வருவோம்” என்று சொல்லி பிரியாவிடை அளிப்பர், காரணம் தேவனுடைய கதையில் “பிரியாவிடை” ஒருபோதும் முடிவல்ல.

நம்மில் பெரும்பாலானோருக்கு பிரியாவிடை என்பது இனிமையானதல்ல, ஆனால் நாம் அதிலும் தேவனை இணைக்கும்போது அது இனிமையாகும். நம்முடைய அறிவுக்கெட்டாத அவருடைய நாமத்தை நம் பிரியாவிடையில் இணைத்து அவரை விசுவாசிக்க துணியும்போது நம் கண்ணோட்டம் மாறுகிறது. உண்மையென்னவெனில், பாவம்தான் நம்முடைய எல்லா பிரியாவிடைகளுக்கும் காரணம். அது தான் பிரிவினையாளன்.

தேவன் பாவத்தை வெறுக்கிறார் காரணம் அது தனக்கு அன்பானவர்களை அவரிடமிருந்து பிரிக்கிறது. எனக்கும், உங்களுக்கும் தான் அப்படிப்பட்ட பிரிவின் தாக்கம் புரியும். ஆனால் பாவமும், அது உண்டாக்கும் பிரிவினையும் மீதான தேவனுடைய வெறுப்பு மரணத்தை கூட புரட்டுகிறது. தேவனுடைய தீர்வுகள் மனதுருக்கத்தின் செட்டைகள்மேல் சுமக்கப்பட்டு, துயரம் உண்டாக்கும் நம்பிக்கையின்மையை தோற்கடிக்கிறது. தனக்கு அன்பான ஒருவரிடமிருந்து துண்டிக்கப்படுதல் எவ்வளவு வேதனை என்று தேவன் நன்கு அறிவார், எனவே நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒன்றை தேவன் நமக்காக செய்து நம்மை திரும்ப பெற்று, நம்மை ஒன்றிணைக்கிறார். “இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார் என்றார்.” (லூக்கா 19 :10 ) எந்த பிரியாவிடையும் வருங்காலத்தை குறித்த நம்பிக்கையிலிருந்தும், வாக்குத்தத்தத்திலுமிருந்து நம்மை பிரிக்க இயலாது.

இன்னும் நாம் எல்லாவற்றையும் தாங்கிக்கொள்ள இயலாமல், நம்முடைய குறுகிய மனித சுபாவத்தில் “ஏன் இப்படி?” என்று கேட்டுக்கொண்டும், “தேவன் நல்லவராய் இருந்தால் ஏன் இப்படி நடக்கிறது?” என்ற கேள்விக்கு யாராவது பதில் தர எதிர்பார்த்துக்கொண்டும் இருக்கிறோம். ஆனால் விளக்கம் மட்டும் போதுமானதல்ல. அதனால் தான் இயேசு, வெறும் பதிலை விட மிக அதிகமாக தருகிறார், காரணம் “ஏன்?” என்ற வாழ்வின் மிகப்பெரும் கேள்விக்கு சாதாரண விடை போதுமானதல்ல. என் அன்பு நண்பரே விளக்கம் ஒரு பொருட்டா? அதற்கு விடை தெரிந்தாலும் உங்கள் அன்புக்குரியவர் திரும்பப்போவதில்லை. எனவே தான் தேவன் வெறும் பதிலை விட அதிகமாக தருகிறார், ஏனெனில் நமக்கு பதிலை விட அதிகம் தேவை. நம் கேள்விகள் கேட்கும் அனைத்தையும் விட அதிகமாகவே தருவார்.

இயேசுவின் சீடர்களும் அதே கேள்வியை கேட்டனர். ஏன் அவர் அவர்களை விட்டுப் பிரிய வேண்டும் என்பதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை அல்லது புரியவுமில்லை. யோவான் 16:7 இல் இயேசு, “நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன்; நான் போகிறது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கும்; நான் போகாதிருந்தால், தேற்றரவாளன் உங்களிடத்தில் வரார்; நான் போவேனேயாகில் அவரை உங்களிடத்திற்கு அனுப்புவேன்.” என்று அவர்களிடம் சொன்னார்.

நமது இரட்சகரின் வலிமிகுந்த பிரியாவிடையின் செயலே, சாத்தானும் மரணமும் என்றென்றுமாய் முறியடிக்கப்படும் வழியாய் மாறியது. இப்பொழுது நாம், ஒரே மெய்யான தேவன் நம் அருகில் மட்டுமல்ல நமக்குள்ளும் இருக்க வாழ்கிறோம். இதுதான் பிரியாவிடையின்மேல் வெற்றி.

சாத்தான் திராணியற்றவனாய் தீமைக்கென கொண்டிருந்த நோக்கத்தை தேவன் நன்மையாய் மாற்றினதுமன்றி, தீமையின் விளைவையும் பின்னிடச்செய்தார், அதனால் சாத்தான் எதை மரணத்திற்கென்று விட்டுவைத்தானோ, அதுவே தேவனின் கரத்தில் மகிமையான அறுவடையாய் வெளிப்படுகிறது. ஏனெனில் இயேசு, வாழ்வின் மோசமான வேதனையின் நடுவில் பிரியாவிடை கொடுத்ததால் நாம் நிறைவான வாழ்வடைய அதிகாரம் பெறுகிறோம். என்னே ஒரு பரிசு!

நான் கடந்தகால வாழ்க்கை என்னும் போர்வையிலிருந்து வெளியே வந்துவிட்டேன்; நீங்களும் வருவீர்கள். உங்கள் உடைந்த இருதயத்தை குணமாக்குவதோடு மட்டுமல்லாமல் தேவன் அதிகமாய் செய்வார். நிறைவான வாழ்வு வாழ கற்றுக்கொள்ளுங்கள். அதுதான் உங்கள் பிரியாவிடையிலுள்ள நன்மை.

banner image

என் நண்பரே, நம் சந்திப்பு குறுகிய சந்திப்பு, ஆனால் உங்கள் பிரியாவிடையில் உள்ள நன்மையை நீங்கள் புரிந்துகொள்ளும்படி வேண்டுகிறேன். நீங்கள் நிலைத்திருந்து உங்கள் பொக்கிஷத்தை கண்டுகொள்ளும்போது உங்கள் துயரம் தொடர்ந்து கற்றுக்கொடுத்து ஊழியஞ்செய்யும். தொடுவானில் தோன்றும் அற்புதத்தை நீங்கள் ஏற்கனவே கண்டுபிடிக்க துவங்கிவிட்டீர்கள், நீங்கள் நதியை கடந்து உங்கள் பலிபீடத்தை கட்ட துவங்கியதில் நானும் உங்களோடு நடந்ததை கௌரவமாக எண்ணுகிறேன்.

இப்பொழுது இது, உங்களை அனுப்ப: லூக்கா 9 இல், சீடர்கள் முற்றிலும் சோர்வுற்றவர்களாக, வேறு எங்காவது உணவை பெற்றுக்கொள்ளும்படி ஜனக்கூட்டத்தை அனுப்பிவிடுமாறு இயேசுவை கெஞ்சினார்கள், “வனாந்திரமான இடத்தில்” கொடுப்பதற்கு ஒன்றுமில்லையென்று சீடர்கள் காரணம் சொன்னார்கள், ஆனால் உடைந்து போன நிலையிலிருந்து கொடுப்பதின் சூட்சமத்தை இயேசு அறிந்திருந்தார்.

உங்களுக்கும், எனக்கும் தான் இந்த உணர்வு புரியும்.

மாறாக இயேசு, “நீங்களே அவர்களுக்கு கொடுங்கள்” என்று சீடர்களிடம் சொன்னார். இப்போது கற்பனை செய்துபாருங்கள் இயேசு அதையே உங்கள் வனாந்திரமான இடத்தில் உங்களுக்கு அதை சொல்கிறார். ‘என்னிடம் எதுவுமே இல்லையே’ என்று எண்ணுகிறீர்கள். ஒன்றுமில்லை தான். ஆனால் உங்கள் பாரம் அதிகாமாக இருந்தால் என்ன? அது உங்களிடம் மிகுதியாகவே இருக்கிறது! நினைவில்கொள்ளுங்கள் அந்த நாளிலே தேவையானது இயேசுவின் கரத்திலிருந்தே வந்தது, இயேசு கொடுத்துக்கொண்டே இருந்தார் – உங்களுக்கும் அப்படியே செய்வார். உங்களோடும், உங்களுக்குள்ளும் என்றைக்கும் இருப்பேன் என்ற தேவனின் வாக்குத்தத்தத்தை அன்றைய தினம் மீந்த உடைக்கப்பட்ட துணிக்கைகள் தான் நிறைவாய் நிறைவேற்றிக்கொண்டிருந்தன.
ஆனால் இப்படி நடக்க ஒரு அற்புதம் வேண்டும் என்று நீங்கள் சொல்வீர்களானால். சரியாக சொன்னீர்கள்.

பவுல் மக்கெதோனியா சபைகளை குறித்து ” அவர்கள் மிகுந்த உபத்திரவத்தினாலே சோதிக்கப்படுகையில், கொடிய தரித்திரமுடையவர்களாயிருந்தும், தங்கள் பரிபூரண சந்தோஷத்தினாலே மிகுந்த உதாரத்துவமாய்க் கொடுத்தார்கள்.” (2 கொரிந்தியர் 8:2) என்றார். விசுவாசியே, ஒன்றுக்கும் உதவாது என்று நீங்கள் எண்ணுகிற வாழ்வின் துணிக்கைகள் தான் கொடுப்பதற்கேற்ற உணவு. உங்கள் எஜமான் அவைகளை தம்முடைய குணமாக்கும் சந்தோஷத்தோடு அன்பால் கலந்து உங்களை ஆச்சரியப்படுத்துவார், மேலும் துயரமே உங்கள் நிறைவான செல்வமாய் மற்றவர்களுக்கும் வழிந்தோடும். மரணம் என்பது இறுதியானதல்ல, காரணம் மரணம் ஜெயமாக விழுங்கப்பட்டது.

திடன்கொள் என் நண்பரே. பரத்தை நோக்குங்கள். தேவன் சமீபமாயிருக்கிறார். நீங்கள் கடக்க நானும் ஜெபிக்கிறேன்.

“இருளில் நடக்கிற ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் தேசத்தில் குடியிருக்கிறவர்களின்மேல் வெளிச்சம் பிரகாசித்தது.” (ஏசாயா 9 :2 )

read_more