வாசிக்க: 2 சாமுவேல் 6:1-23

தாவீது அன்றையதினம் கர்த்தருக்குப் பயந்து, கர்த்தருடைய பெட்டி என்னிடத்தில் வருவது எப்படியென்று சொல்லி… (வ. 9).

ஆச்சரியமூட்டும் கிருபை என்ற பாடலில் வரும் இந்த வரிகளை என்றாவது சிந்தித்து பார்த்தீர்களா? “இக்கிருபை என் பயம் நீக்கிற்று, பயப்படவும் கற்று கொடுத்தது. நான் விசுவாசித்த முதல் தருணமுதல் எவ்விலையேறப்பெற்ற கிருபையிது”. உள்ளம் பயப்பட கிருபை கற்றுக்கொடுத்ததாம். பயப்படும் அளவிற்கு கிருபை பயங்கரமானதா?

தேவனின் உடன்படிக்கை பெட்டியை தாவீது மீண்டும் எருசலேமிற்கு கொண்டுவருகையில், இக்கேள்விகளுக்கான விடைகளை கண்டுகொண்டார். அது ஒரு பண்டிகை, இரைச்சலான கொண்டாட்டம், மனிதனின் மனதை உறைய வைக்கும் தருணம் (2 சாமுவேல் 6:5). மாடுகள் மிரண்டு பெட்டியை அசைத்தபடியினால், ஊசா தேவனுடைய பெட்டியினிடமாய்த் தன் கையை நீட்டி, அதைப் பிடித்தான், அவன் அங்கே தேவனுடைய பெட்டியண்டையில் செத்தான் (வ.6-7).

தாவீது கோபமாகவும் பயமாகவும் உணர்ந்தார். தேவன் அங்கே இருப்பதால் பெட்டி ஆபத்தானது என்பதை அவர் உணர்ந்தார் (வ.8-9). ஆனால் ஜீவனைத் தானே கொடுக்கிற தேவன் (யோவான் 17:3), தம்முடைய மகிமையை துணிகரமாய் தொடுபவர்களுக்கு மரணத்தைக் கொண்டுவரத் தேர்ந்தெடுத்தார். வாழ்வின் ஒரே ஆதாரம் தேவன் என்றால், அவரை நேசிக்கும் பாக்கியத்தை இழந்துவிடுவோமோ என்று நாம் பயப்பட வேண்டும்.

இறையியலாளர் கார்ல் பார்த், “அனைத்திற்கும் மேலாக நாம் அவருக்குப் பயப்பட வேண்டும், ஏனென்றால் நாம் அனைத்திற்கும் மேலாக அவரை நேசிக்கலாம்” என்று விளக்கினார். தேவனை நேசிப்பதே வாழ்க்கை என்பதால், “அவரை நேசிக்க அனுமதிக்கப்படாவிட்டால், நாம் அவரை நேசிக்கவில்லை என்றால், அவருடைய கைகளில் நம் வாழ்வு முடிவடைவதை மட்டுமே எதிர்பார்க்க முடியும்” என்று பார்த் நியாயப்படுத்தினார்.

நாம் ஜெபிக்கும்போதும், அவருடைய வார்த்தையை ஆராய்ந்து பார்க்கும்போதும் நாம் தேவனுக்கு எந்த உதவியும் செய்வதில்லை. அவர்தான் நமக்கு நன்மை செய்கிறார், ஏனென்றால் ஜீவனுக்கான ஒரே வழியை நாம் அணுகும்படி நமக்கு அருள்கிறார். இந்த வாசலையோ தேவன் எப்போதும் திறந்து வைப்பதுமில்லை, “மேலும் ஒரு நாளைக் குறித்திருக்கிறார்; அதிலே அவர் தாம் நியமித்த மனுஷனைக்கொண்டு, பூலோகத்தை நீதியாய் நியாயந்தீர்ப்பார்” (அப்போஸ்தலர் 17:31). அந்த நாள் இன்னும் வரவில்லை, எனவே இன்னும் அவகாசமுண்டு. எனவே புறக்கணிக்க வேண்டாம் “தேவனுடைய கிருபையை நீங்கள் விருதாவாய்ப் பெறாதபடிக்கு….இதோ, இப்பொழுதே அநுக்கிரககாலம், இப்பொழுதே இரட்சணிய நாள்” (2 கொரிந்தியர் 6:1-2). நீங்கள் தேவனை நேசிப்பீர்களானால், நீங்கள் அவருக்கு பயபக்தியுடன் அஞ்சுவீர்கள்.

– மைக் விட்மர்

மேலும் அறிய

தேவனின் அன்பு நமது பயங்களை எவ்வாறு அமர்த்துகிறது என்பதை அறிய 1 யோவான் 4:7-21 ஐ வாசிக்கவும்.

சிந்திக்க

நீங்கள் தேவனுக்கு அதிகம் பயப்படுகிறீர்களா அல்லது அவரை நேசிக்கிறீர்களா? ஒன்றோடொன்று உயரவும் அல்லது விழும்படியாக இந்த இரண்டு உணர்ச்சிகளும் எவ்வாறு இணைக்கப்பட்டுள்ளன?