“எனது கனவுகளில் பெரும்பாலானவை பேருந்துகள், ரயில்கள் மற்றும் பயண பைகள் உள்ளடக்கியதாக இருப்பதற்கு சில வம்சாவளி காரணங்கள்” இருக்குமா என எமி பீட்டர்சன் வியக்கிறார். சிறுவயதிலிருந்தே அவளுடைய ஆர்வத்தின் பெரும்பகுதி, உலகைச் சுற்றிப் பார்ப்பதிலும், அதில் மாற்றத்தை உண்டாக்குவதிலுமேயே இருந்தது. அந்தக் கனவுகளில் பலவற்றை நிஜமாக்கிக் கொண்ட போதிலும், அவள் எதிர்பார்த்தது போல் விஷயங்கள் இல்லை என்பதை அவள் கற்றுக்கொண்டாள்.

அவளது பல்வேறு வெளிநாட்டு அனுபவங்களிலிருந்தும், அவளது கணவர் ஜாக்கிடமிருந்தும் , நோக்கம் நிறைந்த உபசரிப்பின் இன்றியமையாமையின், வேதாகம மயமான தேவையைப் பற்றிக் கற்றுக்கொண்டாள். நம் அச்சங்கள், வேறுபாடுகள் மற்றும் சந்தேகங்கள் மத்தியிலும், நாம் பணிவு, கருணை கலந்த அன்புடன் விருந்தோம்பலை வழங்கவும், பெறவும் வேண்டும். தாழ்மையான உள்ளம், தாராளமான கரங்கள்; இதை எப்படிச் செய்வது என்று அவள் நமக்குக் கூறவில்லை. மாறாக, எமி பீட்டர்சன் இவ்வுலகில் வாழ்ந்து கொண்டிருக்கிற பெண்ணாகையால் , அனுபவப்பூர்வமான சில குறிப்புகளை கொடுத்துள்ளார்.

நமது அனுதின மன்னா ஊழியங்கள்

உள்ளடக்கங்கள்

banner image

2004 ஆம் ஆண்டு வசந்த காலத்தின்பிற்பகுதியில், தென்கிழக்கு ஆசியாவில் எனது முதலாம் ஆண்டு ஆங்கிலம் கற்பித்தல் முடிவடைந்தது. நான் பணிபுரிந்த பல்கலைக்கழக வளாகத்திலிருந்து எனது மின்சார மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றபோது, கடலோரத்தில் ஒரு இரவு கழித்தால், அரையாண்டு காலம் முடிவதற்குள் புத்துணர்ச்சியடைய முடியும் என நம்பினேன். தூசி படிந்த சாம்பல் நிற தெருக்கள் முடிந்து விரைவில் நெல் வயல்களுக்கு வழிவகுத்தன; கடற்கரைக்குச் செல்லும் சாலைகள் பிரகாசமாகவும், ஆரோக்கியமாகவும் இருபுறத்திலும் இருந்தது. நான் வேகத்தை அதிகரித்தபோது, தணியாத வெப்பத்திலிருந்து நிவாரணம் கிடைத்தது.

என் அருகில் மற்றொரு மோட்டார் சைக்கிள் முந்தியது. அதின் ஓட்டுநரும் நான் வாழ்ந்த நாட்டிலுள்ள எல்லாப் பெண்களையும் போலவே, வெயிலிலிருந்து அவளைப் பாதுகாப்பதற்காக நீண்ட கையுறைகள் , நீண்ட கால்சட்டை, தொப்பி மற்றும் முகத்தில் கழுத்துக்குட்டை அணிந்திருந்தாள். பிரகாசமான புன்னகையுடன் கழுத்துக்குட்டையைக் கீழே இழுத்தவள், “ஹலோ!” என்றாள்.

“ஹாய்,”என்று நான் பதிலளித்தேன் எரிச்சலை மறைக்க முயன்றேன். சத்தமாக கத்தும்படிக்கு நான் சற்றே பின்வாங்கினேன். நான் தனியாக இருக்க முயன்றேன். ஆனால் நாட்டின் அந்தப் பகுதியில், பல உள்ளூர்வாசிகள் ஒரு வெளிநாட்டவரைப் பார்த்ததில்லை, அவர்கள் என்னுடன் பேச விரும்பினார்கள்.

“என் பெயர் லேய்! நீங்கள் அமெரிக்கரா” என அவள் உற்சாகமாகக் கேட்டாள். இந்த உரையாடல் விரைவில் முடிவடையும் என்று நம்பி, நானும் ஆம் என்று பதிலளித்தேன். பின்பு ஒரு வரி அல்லது இரண்டு வரிகளுக்குப் பிறகு உரையாடல் நின்றது.

கோபத்தில் சத்தமாக கத்தாமல் நான் சற்றே பின்வாங்கினேன். நான் தனியாக இருக்க முயன்றேன்.

“ஓ! அது என் வீடு” என்றவள், மெதுவாகத் திரும்பி, நெற்பயிர்களும் பனை மரங்களும் சுற்றிலுமிருந்த கற்காரைப் பலகத்தின் மீதிருந்த ஒரு சிறிய மரப் பலகை வீட்டைக் காட்டினாள். “நான் உங்களை என் வீட்டிற்கு வரும்படி அழைக்கிறேன்!” என்றாள்.

நான் அவளுக்கு நன்றி சொல்லி கையசைத்தேன்.

எனது விடுதிக்குள் நுழைந்தபோது, மறுநாள் காலை வீட்டிற்குச் செல்லும் எனது மின்சார மோட்டார் சைக்கிளை முழுவதுமாக மின்னேற்றம் செய்யும்படி, அதன் உரிமையாளர்களை மின்சாரத்தில் இணைக்கச் சொன்னேன். பிறகு எனது புத்தகங்களையும், பத்திரிகைகளையும் எடுத்துக்கொண்டு கடற்கரைக்குச் சென்றேன்.

ஒரு இரவும் பகலும் அமைதியிலும், ஜெபத்திலும் கழித்த பிறகு, நான் வளாகத்திற்குத் திரும்பி அடுத்த அரையாண்டை நிறைவு செய்யத் தயாரானேன். ஆனால் வீட்டிற்குச் செல்லும் வழியில் பாதியிலேயே எனது மோட்டார் சைக்கிள் வேகத்தை இழக்கத் தொடங்கியது. விரைவில் நான் மணிக்கு நான்கு கிலோமீட்டர் வேகத்தில் ஊர்ந்து சென்றேன். விடுதி உரிமையாளர்கள் என் மோட்டார் சைக்கிளை இரவு முழுவதும் மின்னேற்றம் செய்யவில்லை என்பதை உணர்ந்தேன். அவர்கள் மின்சாரக் கட்டணத்தின் பணத்தைச் சேமிக்க நினைத்திருக்கலாம். எனது மோட்டார் சைக்கிள் இயங்கவில்லை.

மொழிகளின் தடையால் ஒருவருக்கொருவர் சரளமாகப் பேச இயலாவிட்டாலும், நாங்கள் எங்கள் வாழ்க்கையையும் கதைகளையும் பகிர்ந்துகொண்டு ஒரு மணி நேரம் உரையாடலில் செலவிட்டோம்.

நான் சுற்றிலும் பார்த்தேன். பார்வைக்கு ஒருவரும் தென்படவில்லை. சுற்றிலும் பச்சைபசேலென்றும், வெப்பமாகவும் மற்றும் கொசுக்களின் சலசலப்புமே இருந்தது. நான் இன்னும் நகரத்திலிருந்து கிட்டத்தட்ட பத்து கிலோமீட்டர் தொலைவிலிருந்தேன், சிக்கலில் மாட்டிக்கொண்டேன். கடைசியில் மற்றொரு நபர் வந்தாலும், அவர்களால் எனக்கு போதுமான எரிவாயுவைக் கொண்டு வரவும் முடியாது. எனக்கு எரிவாயு தேவையில்லை; எனக்கு மின்னூட்ட இணைப்பு தேவைப்பட்டது.

பின்னர் நான் ஒன்றை உணர்ந்தேன்: எனது மோட்டார் சைக்கிள் செயலிழந்தபோது நான் லேயின் வீட்டைக் கடந்து கொண்டிருந்தேன். முந்தின நாள் எனக்கு அறிமுகமான அந்தப் பெண் நான் இருந்த இடத்திலேயே இந்த நெற்களஞ்சியத்தின் நடுவே வாழ்ந்தாள். நான் அந்த உற்சாகமான அந்நிய பெண்ணின் சிறிய வீட்டை நோக்கி அழுக்கான பாதையில் திரும்பினேன்.

லேய், என்னைப் பார்த்தவுடனே மகிழ்ச்சியடைந்தாள், மேலும் சந்தோஷமாக அவளது வீட்டின் பக்கத்தில் உள்ள ஒரு மின்னூட்ட இணைப்பில் என்னை மின்னேற்றம் செய்ய அனுமதித்தாள். இப்போது நான் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே நின்றவளைப் பார்த்தபோது, அவள் கர்ப்பமாக இருப்பதை உணர்ந்தேன், ஏறக்குறைய நிறைமாதமாக உள்ளாள்.அநேகமாக என்னை விட சில வருடங்கள் மட்டுமே மூத்தவள். லேய் என்னை உட்காரும்படி அழைத்தாள், ஒரு இளநீரையும் கூடவே ஒரு வெட்டுக்கத்தியையும் கொண்டு வந்தாள். இந்த குட்டிக் கர்ப்பிணிப் பெண் இளநீரை இரண்டாகப் பிளந்து அதன் சாற்றை இரண்டு குவளைகளில் ஊற்றுவதை நான் வியந்தும், கொஞ்சம் பயந்தும் பார்த்தேன். ஒன்றை என்னிடம் கொடுத்து, என்னுடன் மேஜையில் அமர்ந்தாள். மொழிகளின் தடையால் ஒருவருக்கொருவர் சரளமாகப் பேச இயலாவிட்டாலும், நாங்கள் எங்கள் வாழ்க்கையையும் கதைகளையும் பகிர்ந்துகொண்டு ஒரு மணி நேரம் உரையாடலில் செலவிட்டோம். பல்கலைக்கழகத்தில் சேர்ந்தது, தனது உயர்நிலைப் பள்ளி “காதலனை” திருமணம் செய்தது, அவனது பனை மரப் பண்ணைக்குக் குடியேறியது பற்றியும் அவள் என்னிடம் சொன்னாள். அவன் அடிக்கடி வேலை விஷயமாக வெளியூர் சென்றதால், கர்ப்பமாக இருந்த அவளைத் தனியாக விட்டுவிட்டிருந்தான். வெளிநாட்டினரை மணந்து ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்துக்குக் குடிபெயர்ந்த தன் வகுப்பு தோழர்களுக்குக் கடிதம் எழுதுவாள். அவர்களில்லாத குறையுடன் இருந்தாள். அமெரிக்காவில் நான் விட்டு வந்துள்ள என் குடும்பத்தைப் பற்றியும், பல்கலைக்கழகத்தில் ஆங்கிலம் கற்பிக்கும் எனது வேலையைப் பற்றியும் அவளிடம் சொன்னேன். அவளுடைய பெருந்தன்மைக்கு நன்றி, நான் இறுதியில் வீட்டிற்குச் செல்ல முடிந்தது.

என்னால் என் நம்பகத்தன்மையை நிரூபிக்கவோ, நான் உதவிக்குத் தகுதியானவள் என்பதை நிரூபிக்கவோ, உதவிக்குக் கைமாறு செய்யவோ முடியவில்லை. மிகுந்த தேவையினூடே நான் அந்நிய பெண்ணாக இருந்தேன். ஆனாலும் நான் அன்புடன் வரவேற்கப்பட்டு கரிசனையுடன் கவனித்துக் கொள்ளப்பட்டேன்.

தென்கிழக்கு ஆசியாவில் வெறிச்சோடிய நெல் வயலில் நான் மின்னாற்றல் இழந்ததிலிருந்து பன்னிரண்டு ஆண்டுகளில், அங்கு எனக்குத் தொடர்ந்து அளிக்கப்பட்ட சிறந்த உபசரிப்பின் அடையாளமாக இந்த தருணத்தை நான் அடிக்கடி நினைத்துக்கொண்டேன்.

உபசரிப்பு என்பது இதயத்தின் நிலைப்பாடு. உபசரிப்பு என்பது அந்நியர்களிடம் உணர்ச்சி ரீதியாகவும், சரீர ரீதியாகவும், ஆவிக்குரிய ரீதியிலும் தாராளமாக இருப்பதைக் குறிக்கிறது. மற்றும் எதிர்பாராத ஆசீர்வாதங்க-ளுக்காகத் திறந்த மனதுடன் இருத்தலாகும்.

தென்கிழக்கு ஆசியாவில் நான் அந்நிய பெண்ணாக இருந்தபோது நான் வரவேற்கப்பட்ட விதம், நான் அமெரிக்காவுக்குத் திரும்பியபோதும் அதே வகையான உபசரிப்பை வழங்க வேண்டும் என்ற விருப்பத்தை என்னுள் தூண்டியது. ஆனால் நான் தாயகம் திரும்பியதும், விருந்தோம்பலை கற்கவும் பயிற்சி செய்யவும் தொடங்கியபோது, அதைப் பற்றிய எனது புரிதல் எவ்வளவு குறைவாக இருக்கிறது என்பதை நான் உணர ஆரம்பித்தேன். நான் உபசரிப்பை வேதாகமத்தில் படித்தபோது, அந்த வார்த்தையைப் புரிந்துகொண்டு நான் வளர்ந்த விதத்திலிருந்து அது எவ்வளவு வித்தியாசமானது என்பதை உணர்ந்தேன். உபசரிப்பு என்பது மிக உயர்ந்த தரநிலைகள் அல்லது சிறந்த படங்களின் தொகுப்புக்கான அலங்காரங்களைப் பூர்த்தி செய்யும் அட்டவணை அமைப்புகள் அல்ல. உபசரிப்பு என்பது நேர்த்தியான வீடுகளில் ஆடம்பரமான தின்பண்டங்களுடன் சரியாகத் திட்டமிடப்பட்ட விருந்துகள் அல்ல. உபசரிப்பு என்பது ஒரு சுத்தமான வீட்டைக் கொண்டிருத்தல் அல்லது ஒரு திறமையான விருந்தோம்பாளராக இருத்தல் ஆகியவற்றுடன் சிறிதும் சம்பந்தப்படவில்லை. உபசரிப்பு பற்றிப் பேசும்போது கலாச்சார ரீதியாக நாம் நினைத்த விஷயங்கள் இவையே. விடுதிகள் மற்றும் உணவகங்களின் “விருந்தோம்பல் தொழில்” பற்றிக் கூட நாம் பேசுகிறோம்.

இது ஒருவேளை, நீங்கள் வேதாகமத்தின் விருந்தோம்பலைப் பார்க்கும்போது, விதிமுறைகளில் சற்று முரண்பாடாக இருக்கலாம். உபசரிப்பு என்பது உங்கள் நண்பர்களுக்காக விருந்து வைப்பதோ அல்லது அந்நியர்களுக்கு இலவசமாகக் கொடுப்பதோ அல்ல.

banner image

பிரகாம் இப்படிப்பட்ட ஒரு எதிர்பாராத ஆசீர்வாதத்தைப் பெற்றார். ஒரு நாள் தன் கூடாரத்தின் வாசலில் அமர்ந்து, மம்ரேயின் சமபூமியிலுள்ள பெரிய மரங்களின் நிழலில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த ஆபிரகாம், ஏறிட்டுப் பார்த்தபோது, அருகில் மூன்று மனிதர்கள் வருவதைக் கண்டார். அவர் இந்த அந்நியர்களை நோக்கி விரைந்தார் மற்றும் மரியாதைக்குரிய விருந்தினர்களாக அவர்களை வரவேற்றார். “கொஞ்சம் தண்ணீர் கொண்டு வரட்டும், உங்கள் கால்களைக் கழுவி, மரத்தடியில் சாய்ந்துகொண்டிருங்கள். நீங்கள் உங்கள் இருதயங்களைத் திடப்படுத்தக் கொஞ்சம் அப்பம் கொண்டுவருகிறேன்; அப்புறம் நீங்கள் உங்கள் வழியே போகலாம்” (ஆதியாகமம் 18:4-5) என்று அவர் அவர்களைத் தன்னுடன் ஓய்வெடுக்க ஊக்குவித்தார். ஆபிரகாம் தனது மனைவி சாராளிடம் அந்நியர்களுக்கு அப்பம் சுடச் சொன்னார், மேலும் விருந்தினர்கள் சாப்பிடுவதற்குத் தயார் செய்வதற்காகத் தனது பணியாளர்களிடம் அவர் தனிப்பட்ட முறையில் தனது மந்தையிலிருந்து நல்ல இளங்கன்றைப் பிடித்துக் கொடுத்தார். அவர்கள் ஒன்றாக விசேஷ விருந்தை ருசித்தபோது, பேசினர். அவர்கள் தேவனிடமிருந்து ஒரு வார்த்தையைக் கொண்டு வந்தனர்: அடுத்த வருடத்திற்குள், சாராள் ஒரு குழந்தையைப் பெறுவாள், ஒரு மகனைப் பெறுவாள் (ஆதியாகமம் 18:1-15).

அந்நியர்களை வரவேற்றதில், ஆபிரகாம் தேவனைக் குறித்தும், அவருக்கான தேவனின் திட்டத்தைக் குறித்தும் அறிந்துகொண்டார். “உபசரிப்பு பற்றிய வேதாகம பாரம்பரியத்தின் இந்த முதல் வடிவ கதை, சந்தேகத்திற்கு இடமின்றி நேர்மறையாக அந்நியர்களை வரவேற்பதைப் பற்றியது.

இது உபசரிப்பைத் தேவனின் பிரசன்னம், வாக்குறுதி மற்றும் ஆசீர்வாதத்துடன் இணைக்கிறது” என்று கிறிஸ்டின் போல் “மேக்கிங் ரூம்” என்ற நூலில் எழுதியுள்ளார். தேவனாலே அவரது சொந்த ஜனங்களாக, அவருடைய குடும்பமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அந்நியர்களும் பரதேசிகளுமாய் இருந்த இஸ்ரவேலரின் பிரமாண்டமான கதைக்கும் இது பங்களிக்கிறது.

ஒருவேளை ஆபிரகாம் அந்நியராக இருப்பது என்னவென்று அவருக்குத் தெரிந்திருந்தபடியால், அந்நியர்களை மிகவும் விருப்பத்துடன் உபசரித்திருக்கலாம். தேவன் அவரை தனது குடும்பத்தையும், தாயகத்தையும் விட்டு வெளியேறி, அயல்நாட்டில் குடியேற அழைத்தார். ஆபிரகாம் தனது சந்ததியினருக்கும் அதே போன்ற உபசரணை தேவை என்பதை அறிந்திருந்தார். ஆபிரகாமின் சந்ததியினரை வானத்தில் உள்ள நட்சத்திரங்களைப் போல எண்ணிலடங்காதவர்களாக ஆக்குவேன் என்று தேவன் வாக்களித்தபோது, தேவன் ஆபிரகாமை எச்சரித்திருந்தார், “உன் சந்ததியார் தங்களுடையதல்லாத அந்நிய தேசத்திலே பரதேசிகளாயிருந்து, அத்தேசத்தாரைச் சேவிப்பார்கள் என்றும், அவர்களால் நானூறு வருஷம் உபத்திரவப்படுவார்கள் என்றும், நீ நிச்சயமாய் அறியக்கடவாய்” (ஆதியாகமம் 15:13).

உபசரிப்பு என்பது தேவன் தம் மக்களுக்காகத் திட்டமிட்ட வாழ்க்கை முறைக்கு அடிப்படையாக இருந்தது.

பல தலைமுறைகள் கழித்து, அந்த தீர்க்கதரிசனம் நிறைவேறியது. பஞ்சம் ஆபிரகாமின் சந்ததியினரை எகிப்துக்கு விரட்டியடித்தது, காலப்போக்கில், எகிப்தியர்கள் இஸ்ரவேலரை அடிமைப்படுத்தி, அவர்களது சொந்த நாட்டிலிருந்து வெகு தொலைவில் அடிமைத்தனத்தில் சிக்க வைத்தனர். மோசே தேவனுடைய ஜனங்களை எகிப்திலிருந்தும் அடிமைத்தனத்திலிருந்தும் விடுவித்த பிறகு, தேவனுடைய கற்பனைகளை அவர்களுக்கு வழங்கினார். தம்முடைய ஜனங்கள் தங்களுக்கான விடுதலையையும் புதிய நாட்டையும் அனுபவித்தாலும், அவர்கள் ஒருவருக்கொருவர் வேருபாடின்றி வாழ வேண்டும் என தேவன் நினைப்பூட்டினார். தேவனுக்கே பூமி சொந்தம்.அவர்கள் அதன் உக்கிராணக்காரர்களாய் இருக்க வேண்டும். எனினும் அவர்கள் “பரதேசிகளும் என்னிடத்தில் புறக்குடிகளுமாயிருக்கிறீ(றா)ர்கள்” (லேவியராகமம் 25:23). உபசரிப்பு என்பது தேவன் தம் மக்களுக்காகத் திட்டமிட்ட வாழ்க்கை முறைக்கு அடிப்படையாக இருந்தது. மோசேக்குக் கொடுக்கப்பட்ட நியாயப்பிரமாணம், “அந்நியரை ஒடுக்காதே” என்று கட்டளையிட்டது. “எகிப்து தேசத்தில் அந்நியர்களாயிருந்த நீங்கள் அந்நியனுடைய இருதயத்தை அறிந்திருக்கிறீர்களே” (யாத்திராகமம் 23:9). இஸ்ரவேலர்களின் கடினமான அனுபவம் பிறரை வரவேற்பதில் முக்கிய பங்காற்றியது.

3,000 ஆண்டுகளுக்கு முன்பு மத்திய கிழக்கில் “அந்நியர்களாக” இருப்பதன் பொருள் என்ன? இப்போதெல்லாம் நாம் அடிக்கடி வெளிநாட்டினர் அல்லது அந்நியர்களை வெறுமனே பயணிகள் என்று நினைக்கிறோம். வேர்விடாமல் உலகைச் சுற்றிப் பார்க்க விரும்புபவர்கள் என்கிறோம். ஒருவேளை நாம் குடியேறியவர்கள் அல்லது அகதிகள் என்று எண்ணலாம். அவர்கள் விருப்பத்தினாலோ அல்லது சூழ்நிலையினாலோ தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வேறு இடத்தில் குடியேறினவர்கள். ஆனால் பெரும்பாலும் விவசாய சமூகத்தில், சஞ்சாரியாக இருப்பதற்கு ஒரு தனித்துவமான அர்த்தம் இருந்தது. நிலம் வாழ்வாதாரத்திற்கு இன்றியமையாததாக இருந்தால், நிலமே இல்லாத சஞ்சாரியின் வாழ்க்கை நிலையற்றது.அவனுடைய பாதுகாப்பும் நல்வாழ்வும், அவனை ஏற்றுக்கொள்ளும் ஒரு சமூகத்தின் விருப்பத்தைப் பொறுத்தது. ஒரு விவசாய சமுதாயத்தில் ஏழைகள், விதவைகள் மற்றும் அனாதைகள் போன்ற நிச்சயமற்ற நிலையில்தான் அந்நியர்கள் இருந்தனர்.

ஓர் வார்த்தையை பல்வேறு ஆங்கில மொழிபெயர்ப்புகள் எவ்வாறு வழங்குகின்றன என்பதைக் கவனிப்பது அவசியமாகும். தி நியூ இன்டர்னேஷல் பதிப்பு மற்றும் நியூ லிவிங் டிரான்ஸ்லேஷன் “வெளிநாட்டவர்” என்று கூறுகின்றன; நியூ அமெரிக்கன் ஸ்டாண்டர்ட் மற்றும் நியூ கிங் ஜேம்ஸ் பதிப்புகள் அதனை “அந்நியர்” என்று மொழிபெயர்க்கின்றன. மூன்று விளக்கங்களும் இடம் இல்லாத ஒருவர் – ஒரு வேற்றுகிரகவாசியின் கருத்தைக் குறிக்கின்றன.

அந்நியருக்கு உபசரிப்பு என்பது பண்டைய கிழக்கு நாடுகள் முழுவதும் இருந்த மனிதக்குலத்திற்கே புனிதமான அடிப்படைக் கடமையென்று பரவலாக அங்கீகரிக்கப்பட்டது. ஆனால் இஸ்ரேலுக்கு அது வெளிப்படையாகச் சட்டமாக்கப்பட்டது. உண்மையில், அந்நியன் மீதான அன்பும், பிறன் மீதான அன்பும் சமமான நிலையில் தேவஜனங்களுக்கு கட்டளையிடப்பட்டது (லேவியராகமம் 19). குறிப்பிட்ட சட்டங்கள் இஸ்ரவேலர்கள் அந்நியரைப் பராமரிப்பதை உறுதி செய்தன. அவர்களுக்குச் சரியான நேரத்தில் சமமான ஊதியம் வழங்குதல் (உபாகமம் 24:14-15), மற்றும் ஆவிக்குரிய வாழ்க்கையையும் உள்ளடக்கி இருந்தது (உபாகமம் 29:10-15).

இந்தச் சட்டங்களில் சில எவ்வாறு செயல்பட்டன என்பதைப் பற்றிய தெளிவான பிம்பத்தை ரூத் புத்தகம் நமக்கு வழங்குகிறது. மோவாபிய ஸ்திரீயாகப் பிறந்த ரூத், பெத்லகேமில் பஞ்சத்தைத் தவிர்ப்பதற்காக மோவாபில் வாழ்ந்த இஸ்ரவேல் குடும்பத்தில் மருமகளானாள். குடும்பத்திலுள்ள எல்லா ஆண்களும் இறந்தபோது, ரூத்தின் மாமியார் நகோமி, அவளது சொந்த ஊருக்குத் திரும்பி மறுமணம் செய்யும்படி அவளை ஊக்குவித்தார். ரூத் மறுத்துவிட்டார். அவள் தன் மாமியாருடன் தங்க விரும்பினாள், “நீர் போகும் இடத்திற்கு நானும் வருவேன்; நீர் தங்கும் இடத்திலே நானும் தங்குவேன்; உம்முடைய ஜனம் என்னுடைய ஜனம்; உம்முடைய தேவன் என்னுடைய தேவன்” (ரூத் 1:16) என்று அறிவித்தாள்.

இஸ்ரவேலின் தேவனை நம்பி இந்தப் பெண்கள் பெத்லகேமுக்கு குடிபெயர்ந்தனர். அவர்கள் ஆழமாகப் பாதிக்கப்படக்கூடியவர்களாக இருந்தனர்.இருவரும் விதவைகள், நகோமி ஒரு இஸ்ரவேலராக இருந்தபோதிலும், ரூத் ஒரு அந்நிய பெண் மற்றும் குறிப்பாக மோசமானவர்களாகக் கருதப்பட்ட ஒரு தேசத்தைச் சேர்ந்த அந்நிய பெண் . கடந்த தலைமுறைகளில், எகிப்தில் அடிமைத்தனத்திலிருந்து தப்பித்த இஸ்ரவேலர்களை மோவாபியர்கள் வரவேற்கவில்லை, மேலும் மோவாபிய பெண்களுடனான ஒழுக்கக்கேடான உறவுகள் தேவஜனங்களை பொய்யான தெய்வங்களை வணங்கும்படி வழிவகுத்தது (எண்ணாகமம் 25:1-2). உண்மையில், தேவனும் “அம்மோனியனும் மோவாபியனும் கர்த்தருடைய சபைக்கு உட்படலாகாது; பத்தாம் தலைமுறையிலும் என்றைக்கும் அவர்கள் கர்த்தருடைய சபைக்கு உட்படலாகாது” (உபாகமம் 23:3) என்று அறிவித்திருந்தார்.

எனவே மோவாபியரான ரூத்தும் அவளுடைய மாமியார் நகோமியும் பெத்லகேமுக்குத் திரும்புகையில், அவர்கள் எப்படி வரவேற்கப்படுவார்கள் என்று யோசித்திருக்க வேண்டும். அவர்களுக்கு வரவேற்போ, வாழ ஒரு இடமோ, தங்களுக்கு ஒரு வாழ்வாதாரமோ கிடைக்குமா? இஸ்ரவேலின் தேவன் விதவைகளுக்கும் தன்னை போன்ற அந்நியருக்கும் நியாயப்பிரமானத்தில் விசேஷித்த ஏற்பாடுகளை வழங்கியிருந்ததை ரூத் ஒருவேளை அறிந்திருக்கலாம்:

நீ உன் பயிரை அறுக்கையில் உன் வயலிலே ஒரு அரிக்கட்டை மறதியாய் வைத்து வந்தாயானால், அதை எடுத்து வரும்படி திரும்பிப் போகவேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தர் உன் கைப்பிரயாசத்திலெல்லாம் உன்னை ஆசீர்வதிக்கும்படி, அதைப் பரதேசிக்கும் திக்கற்றபிள்ளைக்கும் விதவைக்கும் விட்டுவிடுவாயாக. நீ உன் ஒலிவமரத்தை உதிர்த்துவிட்டபின்பு, கொம்பிலே தப்பியிருக்கிறதைப் பறிக்கும்படி திரும்பிப் போகவேண்டாம்; அதைப் பரதேசிக்கும் திக்கற்ற பிள்ளைக்கும் விதவைக்கும் விட்டுவிடுவாயாக; நீ உன் திராட்சப்பழங்களை அறுத்தபின்பு, மறுபடியும் அதை அறுக்கத் திரும்பிப்போகவேண்டாம்; அதைப் பரதேசிக்கும் திக்கற்ற பிள்ளைக்கும் விதவைக்கும் விட்டுவிடுவாயாக.நீ எகிப்திலே அடிமையாயிருந்ததை நினைப்பாயாக; ஆகையால், இப்படிச் செய்யும்படி நான் உனக்குக் கட்டளையிடுகிறேன். (உபாகமம் 24:19–22)

ரூத்துக்கும் நகோமிக்கும் சொந்தமாக நிலம் இல்லாததால், ரூத் நகோமியிடம், “நான் வயல்வெளிக்குப் போய், யாருடைய கண்களில் எனக்குத் தயைகிடைக்குமோ, அவர் பிறகே கதிர்களைப் பொறுக்கிக்கொண்டுவருகிறேன் என்றாள்” (ரூத் 2:2). காரியம் இப்படியிருக்க, அவளுக்கு வேலை கிடைத்த வயல், நகோமியின் நெருங்கிய உறவினராக இருந்த போவாஸுக்கு சொந்தமானதாயிருந்தது (ரூத் 2:3, 20). போவாஸ் அவளை வயலிலிருந்து கதிர்களைப் பொறுக்கிக்கொள்ள ஊக்குவித்தார், மேலும் நியாயப்பிரமானம் கட்டளையிட்டதைத் தாண்டி அவளிடம் மிகுந்த கருணை காட்டினார், இறுதியில் அவளை மணந்தார். அவர்களுடைய மகன் ஓபேத் தாவீதின் தாத்தா, இஸ்ரவேல் இதுவரை கண்டிராத மாபெரும் அரசன். போவாஸின் கீழ்ப்படிதலுள்ள உபசரிப்பு இஸ்ரவேல் குடும்பத்தில் ஒரு அந்நியரை இணைத்தது, மேலும் ரூத்தின் விசுவாசத்தையும் போவாஸின் கீழ்ப்படிதலையும் தேவன் ஆசீர்வதித்தார், மோவாபியரான ரூத்தை இறுதியில் மேசியாவாகிய இயேசுவை உருவாக்கும் வம்சாவளியில் ஒரு பகுதியாக ஆக்கினார் (மத்தேயு 1:5-6).

வரவேற்கப்படவும், சொந்தமாக நிலம் கொள்ளவும் ஏங்கும் அந்நியர்களாகவும், சஞ்சாரிகளாகவும் இருப்பது எவ்வாறிருக்கும் என்றறிந்திருந்த இஸ்ரவேலர்களுக்கு தேவன் உபசரிப்பையும் பராமரிப்பையும் வழங்கினார். மேலும் அவரது ஜனங்கள் அதே போன்ற உபசரிப்பை உலகில் தங்களுக்கான அடையாளத்தோடு உள்ளடக்க வேண்டும் என்று தேவன் எதிர்பார்த்தார்.

banner image

புதிய ஏற்பாட்டில், உபசரிப்பு பற்றிய இந்த ஆழமான புரிதல், தேவஜனங்களின் அடையாளத்திற்கு அத்தியாவசியமாக உள்ளது. அந்நியர்களை வரவேற்கும் அந்நியர்களாக இஸ்ரவேலர்கள் இருந்தது போல், கிறிஸ்துவும் வெளியாட்களை வரவேற்கும் அந்நியராக இருந்தார். ஒரு குழந்தையாக, இயேசுவும் அவரது பெற்றோரும் அகதிகளாக ஆனார்கள், பெத்லகேமில் இருந்து எகிப்துக்கு தப்பி ஓடினர். சந்தேகத்திற்கு இடமின்றி அவர்கள் உயிர்வாழ்வது பல அந்நியர்களின் தயவைப் பொறுத்திருந்தது. பின்னர், வாலிபனாக, பாலஸ்தீனத்தின் நகரங்கள் மற்றும் கிராமங்களில் உள்ள மக்களுக்கு இயேசு அடிக்கடி வீடற்ற அந்நியராகத் தென்பட்டார். “நரிகளுக்குக் குழிகளும் ஆகாயத்துப்பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு; மனுஷகுமாரனுக்கோ தலைசாய்க்க இடமில்லை” (மத்தேயு 8:20) என்று அவர் தனது சொந்த வாழ்க்கையை விவரித்தார்.

கிறிஸ்து நமக்குக் காட்டிய உபசரிப்பே நமது விருந்தோம்பலுக்கு அடித்தளம்.

கிறிஸ்து ஒரு அந்நியராக இருந்தாலும், பிறரை வரவேற்றார். அவர் உபசரிப்பை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருந்தார், மேலும் வரி வசூலிப்பவர்கள், சமாரியர்கள் மற்றும் பெண்கள் என்று பொதுவாக இகழப்பட்டவர்கள் அல்லது தவிர்க்கப்பட்டவர்கள் ஆகியோருக்கு கூட அதை வழங்கிடத் தயாராக இருந்தார். இறுதியில், இயேசுவின் மரணம் கூட உபசரிப்பில் அடையாளமே. தம்மைப் பின்பற்றுபவர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் வரவேற்கப்படுவதற்காக அவர் தனது ஜீவனையே கொடுத்தார். அவரது மரணம் உபசரிப்பு, கருணை மற்றும் தியாகத்தை ஒன்றிணைத்தது, இந்த நற்பண்புகளை நம் விசுவாசத்தின் மையமாகவும் ஒருங்கிணைத்தது. கிறிஸ்துவின் முன்மாதிரியைப் பின்பற்றும்படி கிறிஸ்தவர்களை பவுல் கேட்டுக்கொள்கிறார்: “ஆதலால் தேவனுக்கு மகிமையுண்டாக, கிறிஸ்து நம்மை ஏற்றுக்கொண்டதுபோல, நீங்களும் ஒருவரையொருவர் ஏற்றுக்கொள்ளுங்கள்” (ரோமர் 15:7). கிறிஸ்து நமக்குக் காட்டிய உபசரிப்பே நமது விருந்தோம்பலுக்கு அடித்தளம்.

கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்களுக்கு உபசரிப்பு என்பது கட்டாயமானது. புதிய ஏற்பாட்டில் உபசரிப்புக்குப் பயன்படுத்தப்படும் கிரேக்க வார்த்தைகளில் ஒன்று பிலோஸேனியா ஆகும்.இதில் பிலேயோ என்பது குடும்பம் சார்ந்த அன்பை விவரிக்கிறது, மற்றும் ஸேனோஸ் என்பது அந்நியனைக் குறிக்கும் வார்த்தை. மீண்டும் மீண்டும், புதிய ஏற்பாட்டின் எழுத்தாளர்கள் இந்த அந்நியருக்கான அன்பை வெளிப்படுத்த கிறிஸ்தவர்களை அழைக்கிறார்கள். ” அந்நியரை உபசரிக்க நாடுங்கள்” என்று பவுல் எழுதுகிறார், மேலும் 1 பேதுருவின் ஆசிரியர், “முறுமுறுப்பில்லாமல் ஒருவரையொருவர் உபசரியுங்கள்” (ரோமர் 12:13; 1 பேதுரு 4:9) என்று அங்கீகரிக்கிறார். எபிரேய புத்தகத்தின் ஆசிரியர் ஆபிரகாமின் அனுபவத்தை வாசகர்களுக்கு நினைவூட்டுகிறார்: “அந்நியரை உபசரிக்க மறவாதிருங்கள்; அதினாலே சிலர் அறியாமல் தேவதூதரையும் உபசரித்ததுண்டு.” (எபிரெயர் 13:2)

முதல் ஐந்து நூற்றாண்டுகளில், கிறிஸ்தவர்கள் எவரையும் வரவேற்பதற்கும், ஏழைகள், அந்நியர்கள் மற்றும் நோயுற்றவர்களுக்கு நடைமுறைக்கேற்ற பராமரிப்பு வழங்குவதற்கும் அவர்கள் விருப்பமுள்ளவர்களாக இருந்தனர்.

இந்த வகையான வரவேற்பு எப்படி இருந்தது? ஆதிதிருச்சபையில், உபசரிப்பு பல வடிவங்களைக் கொண்டிருந்தது. கிறிஸ்துவுக்குப் பின்னர் முதல் ஐந்து நூற்றாண்டுகளில், கிறிஸ்தவர்கள் எவரையும் வரவேற்பதற்கும், ஏழைகள், அந்நியர்கள் மற்றும் நோயுற்றவர்களுக்கு நடைமுறைக்கேற்ற பராமரிப்பு வழங்குவதற்கும் அவர்கள் விருப்பமுள்ளவர்களாக அறியப்பட்டதாக வரலாற்று ஆவணங்கள் காட்டுகின்றன. பெரும்பாலான சபைகள் வீடுகளில் சந்தித்தன, எனவே கிறிஸ்தவர்கள் தங்கள் வீடுகளை ஆராதிப்பதற்கும், பகிர்ந்து சாப்பிடுவதற்கும் ஒருவருக்கொருவர் திறந்துகொடுப்பதைப் பழக்கமாகக் கொண்டிருந்தனர். பவுலும் மற்ற மிஷனரிகளும் பயணம் செய்து, சுவிசேஷத்தைப் பரப்பும் போது, ஒவ்வொரு இடத்திலும் உள்ளூர் வாசிகளின் உபசரிப்பைச் சார்ந்திருந்தனர்.

அவரது சீடர்களுக்கான இயேசுவின் கடைசியாகப் பதிவுசெய்யப்பட்ட ஜெபம் ஒற்றுமைக்கான ஜெபமாகும் (யோவான் 17). அவரைப் பின்பற்றுபவர்கள் வெவ்வேறு சமூகக் குழுக்கள் மற்றும் இனங்களைச் சேர்ந்தவர்கள் வேறுபட்டவர்களை வரவேற்கக் கற்றுக்கொள்வது அவசியம் என்பதைப் புரிந்துகொண்டிருப்பார்கள். நிச்சயமாக, செயல்முறை எளிதானதல்ல.

banner image

பசரிப்பைக் கற்றுக்கொள்வது எனக்கு எப்போதும் சுமுகமாக இருந்ததில்லை. தென்கிழக்கு ஆசியாவிலிருந்து அமெரிக்காவுக்குத் திரும்பிய சில ஆண்டுகளுக்குப் பிறகு, நானும் என் கணவர் ஜாக்கும் சியாட்டிலுக்குச் செல்ல முடிவு செய்தோம். எங்களிடம் வேலைகள் அல்லது தெளிவான திட்டம் இல்லை, ஆனால் ஜாக்கின் சகோதரி முதல் சில வாரங்களுக்கு எங்களுக்கு புகலிடமளித்தார்.பின்னர் சபையார் மூலம் நாங்கள் ஒரு வீட்டைக் கண்டுபிடித்தோம்.

நாங்கள் பல்கலைக்கழகம் இருந்த மாவட்டத்தில் ஒரு பெரிய பழைய வீட்டில் வசித்தோம். அது ஒரு ஓய்வுபெற்ற தம்பதியருக்குச் சொந்தமானது, அவர்கள் அதை ஊழியத்திற்குப் பயன்படுத்த விரும்பினர். வேறொரு நாட்டில் அந்நியராக நாங்கள் பெற்ற உபசரிப்பால் ஈர்க்கப்பட்டு, அமெரிக்காவில் உள்ள சர்வதேச மாணவர்களுக்கும் இதேபோன்ற விருந்தோம்பலை வழங்க விரும்பினோம். வீட்டின் பொறுப்பாளர்களாக, நாங்கள் வீட்டின் ஒரு படுக்கையறையில் வசித்தோம், மற்ற ஏழு படுக்கையறைகளைச் சீனா, தைவான், கொரியா, இந்தோனேசியா, ஜப்பான், நேபாளம் மற்றும் கேமரூன் ஆகிய நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு வாடகைக்கு விட்டோம்.

எங்கள் வீட்டு நண்பர்களுடன், நாங்கள் நோக்கம் நிறைந்த அயலகத்தைச் செயல்படுத்தினோம். நாங்கள் சமையல் மற்றும் சுத்தம் செய்யும் பொறுப்புகளைப் பகிர்ந்து கொண்டோம், வாரத்தில் ஐந்து இரவுகள் ஒன்றாக இரவு உணவு சாப்பிடுகிறோம், வாரத்திற்கு ஒரு முறை ஜெபத்திற்காகச் சந்திப்போம். வெள்ளிக்கிழமை இரவுகளில், “இன்டர்நேஷனல் கிறிஸ்டியன் பெல்லோஷிப்” என்ற விருந்து மற்றும் வேதபாட வகுப்பை நாங்கள் நடத்தினோம், அப்பகுதியைச் சேர்ந்த முப்பது சர்வதேச மாணவர்கள் தவறாமல் கூடுதலாகக் கலந்து கொண்டனர்.

அது ஒரு அழகான வாழ்க்கை, ஆனால் சில நேரங்களில் பெரும்பாலும் உண்மையில் நாங்கள் நடைமுறைப்படுத்த விரும்பிய மெய்யான உபசரிப்பை நிரூபிக்கத் தவறினோம். எங்கள் வீட்டுத் தோழர்களில் முதலாவதை வந்த சில கொரியச் சகோதரிகள், ஆங்கிலம் மிகக் குறைவாகவே பேசினர். அவர்கள் அமெரிக்காவில் இருக்க விரும்பவில்லை, ஆனால் அவர்களது பெற்றோரால் அனுப்பப்பட்டவர்கள். சில வாரங்களுக்குப் பிறகு, அவர்களில் ஒருத்தி அளவுக்கதிகமாக சாப்பிடுவதும் மற்றும் மலம் கழிப்பதும் தெளிவாகத் தெரிந்தது. இரவு உணவில் குடும்பத்தினரோடு அவள் மிகக் குறைவாகவே சாப்பிடுவாள், ஆனால் ஒரே இரவில் முழு வாழைப்பழ ரொட்டிகளும் காணாமல் போய்விடும். மேலும் கழிப்பறையில் தண்ணீர் ஊற்றிக்கொண்டேயிருப்பதைக் கேட்போம். எங்களுக்கு எப்படி உதவுவது என்று தெரியவில்லை. அதைக் கண்டுபிடிக்க நாங்கள் கடுமையாக முயலவில்லை. அவர்கள் சென்றதும் நாங்கள் நிம்மதியடைந்தோம். நேபாளத்தைச் சேர்ந்த ஒரு வீட்டுத் தோழி தனது அழுக்குப் பாத்திரங்களை எப்போதும் அடுப்பில் வைத்துவிட்டு வருவாள். அதைப் பற்றி நாங்கள் அவளைத் திட்ட விரும்பவில்லை. ஒரு சீன தோழி மற்றும் ஒரு கொரியத் தோழி இருவருக்கும் அரிசியை எப்படிச் சமைப்பது மற்றும் குளியலறையை எப்படி சுத்தம் செய்வது என்பது பற்றி கருத்து வேறுபாடு ஏற்பட்டது. ஜப்பானைச் சேர்ந்தவரோ மிகவும் தனிமை விரும்பி, நாங்கள் அவரை அறியக்கூடவில்லை; ஆனால் நாம் உண்மையில் அதற்கு முயற்சி செய்தோமா என்பது கேள்விக்குறி.

வெவ்வேறு கலாச்சாரங்களைச் சேர்ந்தவர்கள் தேவனை ஆராதிக்க ஒன்றுகூடியபோது ஆதித்திருச்சபை சிக்கலை அனுபவித்தது. அவர்களின் கருத்து வேறுபாடுகள் கோட்பாட்டு ரீதியாக மட்டுமல்ல, எங்களைப் போலவே மிகவும் நடைமுறைக்குரியவை. அப்போஸ்தலர் புத்தகத்தில் பதிவுசெய்யப்பட்ட மிகப்பெரிய மோதல்களில் சில, கிறிஸ்தவர்கள் யூத மரபுகளைப் பின்பற்ற வேண்டுமா இல்லையா என்பதை மையமாகக் கொண்டது. பல நூற்றாண்டுகளாக யூதர்கள் பன்றி இறைச்சியையும் மட்டியையும் தவிர்த்து உண்ணும் பழக்கமான ‘கோஷரை’ கிறிஸ்தவர்கள் பின்பற்ற வேண்டுமா? புதிய கிறிஸ்தவர்கள் விருத்தசேதனம் செய்யப்பட வேண்டுமா? விக்கிரகங்களுக்குப் பலியிடப்பட்ட இறைச்சியை உண்பது சரியா? ஆதி கிறிஸ்தவர்கள் இந்தக் கேள்விகளுடன் போராடியபோது, தேவனோ தம்மை வெளிப்படுத்த, அவர்களின் மல்யுத்தத்தையே பயன்படுத்தினார். கிறிஸ்துவின் சுவிசேஷம் யூதர்களுக்கு மட்டுமல்ல, புறஜாதிகளுக்கும், தேவனுக்கு அஞ்சும் எங்குமுள்ள எவருக்கும் உரியது (அப்போஸ்தலர் அத்தியாயங்கள் 10 & 15) என்பதை அவர்களின் கலவையான கலாச்சார உறவுகளின் மூலம் அவர்கள் புரிந்துகொண்டனர்.

அப்போஸ்தலர் 10, “இத்தாலியப் பட்டாளத்திலிருந்த” நூற்றுக்கு அதிபதி “தன் வீட்டார் அனைவரோடும் தேவனுக்குப் பயந்து, ஜனங்களுக்கு மிகுந்த தர்மங்களைச் செய்து, எப்பொழுதும் தேவனை நோக்கி ஜெபித்த ஒரு பக்தியுள்ள மனிதன்” என்று விவரிக்கிறது (வச 1-2).
அப்போஸ்தலர் 15 இல், சிலர் யூதேயாவிலிருந்து வந்து கிறிஸ்துவின் விசுவாசிகளிடம் யூத மதப் வழக்கமான விருத்தசேதனம் இரட்சிப்புக்கு இன்றியமையாதது என்று கற்பித்துக் கொண்டிருந்தனர். பவுலும் பர்னபாவும் இந்த மதங்களுக்கு எதிரான கொள்கையுடன் உடன்படவில்லை, மேலும் இந்த தர்க்கம் இறுதியில் யூத மற்றும் புறஜாதி கிறிஸ்தவர்களிடையே அதிக ஒற்றுமை உணர்வை ஏற்படுத்தியது (வச 1–35).

வளர்ந்து வரும் கிறிஸ்தவ இயக்கத்தின் வளர்ச்சியானது, வருகை தரும் மிஷனரிகள் மற்றும் வளர்ந்து வரும் சபைகளை உபசரிக்க விரும்பிய பெண்களைச் சார்ந்திருந்தது. பெண்கள் குறிப்பாக விதவைகள்; வருகை தரும் மிஷனரிகள், போதகர்கள் மற்றும் கிறிஸ்தவ வழிப்போக்கர்களை உபசரிக்க மிகவும் ஏற்றவர்களாக இருந்தனர். வளர்ந்து வரும் சபைகள் குலோவேயாள், பிரிஸ்கில்லாள், நிம்பா போன்ற பெண்களின் வீடுகளில் சந்தித்தன. ஒரு மிஷனரி பயணத்தில், அப்போஸ்தலன் பவுல் லீதியாள் என்ற பெண்ணை சந்தித்தார், அவள் அவரது நற்செய்தியை நம்பினாள் மற்றும் அவரை தனது வீட்டிற்கு அழைத்தாள். அவளுடைய உபசரிப்பு , ஆழமாகப் பதிந்துள்ள சில கலாச்சார மற்றும் சமூகப் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை எதிர்க்கும்படி அவருக்கு அறைகூவலாக இருந்திருக்கலாம்.

பவுல் மக்கதோனியாவின் பிலிப்பி பட்டணத்துள் நுழைந்தார். ஒரு சொப்பனத்தில், “மக்கெதோனியா தேசத்தானொருவன் வந்துநின்று: நீர் மக்கெதோனியாவுக்கு வந்து எங்களுக்கு உதவிசெய்ய வேண்டுமென்று தன்னை வேண்டிக்கொண்டதாக இருந்தது” (அப்போஸ்தலர் 16:9) இக்காரணத்தால் அவர் அங்கே வந்திருந்தார். ஆனால் நகரத்தில் பல நாட்கள் கழித்து, அவரது கனவிலிருந்து வந்தவர் இன்னும் தோன்றவில்லை. பவுலின் செய்தியைக் கேட்க பிலிப்பியில் யார் தயாராக இருந்தார்கள்?

அந்த முதல் சில நாட்களில் பவுலும் அவருடைய நண்பர்களும் எங்குத் தங்கினார்கள் என்பதை வசனம் நமக்குச் சொல்லவில்லை. பிலிப்பி ஒரு சுவிசேஷம் அறிவிக்கப்படாத நகரமாக இருந்தது மற்றும் யூத ஜெப ஆலயம் கூட இருந்திருக்காது (பொதுவாக ஒரு நகரத்தில் பவுல் முதலில் சந்திக்கும் இடம் அதுவே), ஏனென்றால் அவர்கள் ஓய்வுநாளில், அவர்கள் ஒரு ஜெப ஆலயத்திற்குச் சென்று வழிபடவில்லை. அவர்கள் “பட்டணத்துக்கு வெளியே போய், ஆற்றினருகே” சென்றார்கள், அங்கு அவர்கள் ஜெபிக்க ஒரு இடத்தைக் காணக்கூடும் என்று நினைத்தார்கள் (அப் 16:13). அப்படியே ஆனது. தியத்தீராவைச் சேர்ந்த இரத்தாம்பரம் விற்கிறவளும் “தேவனை வணங்குகிறவளுமாகிய” லீதியாள் உட்பட (வ.14) பெண்களைக் கொண்ட வழக்கமான பயபக்தியான கூட்டத்தினரை அவர்கள் கண்டனர். (“தேவனை வணங்குகிறவளுமாகிய” என்ற சொற்றொடர் பெரும்பாலும் தேவனை வணங்கும் ஆனால் இயேசுவின் நற்செய்தியைக் கேட்காத தேவா பயமுள்ள புறஜாதிகளை விவரிக்கப் பயன்படுத்தப்பட்டது.) இந்தப் பெண்கள் பவுலை வரவேற்று, அவருக்கு உபசரணை செய்தனர். லீதியாளும், அவளுடைய வீட்டாரும் பவுல் பிரசங்கிப்பதைக் கேட்டு, அவர்கள் ஞானஸ்நானம் பெற்றார்கள், பவுல் அவர்களுடன் தங்கும்படி “வருந்திக் கேட்டுக்கொண்டாள்” (வ.15).

வேதப்பூர்வ எடுத்துக்காட்டுகளில் புறஜாதிகளிடையே கடவுளுக்குப் பயந்த இரண்டு ரோமானிய நூற்றுக்கு அதிபதிகளும் அடங்குவர். ஒருவரை லூக்கா 7:2-10ல் நூற்றுக்கு அதிபதியின் வேலைக்காரரை இயேசு குணப்படுத்தும்போது காணலாம்; மற்றொன்று, அப்போஸ்தலர் 10ல் விவரிக்கப்பட்டுள்ள நூற்றுக்கு அதிபதி. பவுல் அந்தியோகியாவிலுள்ள ஜெப ஆலயத்தில் பார்வையாளர்களை நோக்கி, “இஸ்ரவேலரே, தேவனுக்குப் பயந்து நடக்கிற சகல ஜனங்களே, கேளுங்கள்” (அப்போஸ்தலர் 13:16) என்று கூறியபோது அத்தகையவர்களைக் குறிப்பிட்டார்.

நான் வளர்ந்த பிறகு, லீதியாளின் கதையைக் கேட்கும்போதெல்லாம், அவர் பவுலுக்கு விருந்தோம்பல் செய்த ஒரு பணக்கார வணிகப் பெண்மணி என்று கேள்விப்பட்டேன், ஆனால் கதை முற்றிலும் வேறுபட்டது என்று ஆராய்ச்சி சுட்டிக்காட்டுகிறது.

ஆர்தர் சதர்லேண்டின், “ஐ வாஸ் எ ஸ்ட்ரேஞ்சர்: எ கிறிஸ்டியன் தியாலஜி ஆஃப் ஹாஸ்பிடாலிட்டி“யின் படி, லீதியாளின் பெயர் ஒரு இனம், தோற்றம், தேசியம் போன்றவற்றைத் தெரிவிக்கும்படி ஒரு அடிமைக்குக் கொடுக்கப்பட்ட குறிப்பு பெயர். லீதியாள், தியத்திரா பகுதியில் உள்ள லிடியா நகரத்திலிருந்து விடுவிக்கப்பட்ட அடிமை. சுதந்திரம் கிடைத்தவுடன் அவள் பிலிப்பிக்கு இடம்பெயர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கலாம், ஏனென்றால் விடுவிக்கப்பட்ட அடிமைகள் அவர்களது தொழிலால் முன்னாள் உரிமையாளருக்குப் பொருளாதார ரீதியாகப் பாதிப்பு ஏற்படாமலிருந்தால் மட்டுமே அவர்களது கடந்தகால உரிமையாளர்களின் அதே இடத்தில் தொழில் செய்ய முடியும். துணிக்குச் சாயமிடுவது உயர் வகுப்பினரின் வேலை அல்ல; சாயமிடும் வீடுகளில் துர்நாற்றம் வீசும், ஏனெனில் கம்பளிக்குச் சாயமிடும் செயல்முறை அதிக அளவு விலங்குகளின் சிறுநீரை உள்ளடக்கியது. மேலும் பெரும்பாலான வேலைகள் கைகளால் செய்யப்பட்டன. தொழிலாளர்களின் தாழ்வான சமுதாய நிலையைக் குறிக்கும்படி கைகள் மற்றும் முன்கைகளில் அப்பட்டமாகத் தெரியும் கறைகள் அடையாளங்களாக இருந்தது.

லீதியாளும் அவரது வீட்டாரும், அநேகமாக, ஒரு சாதாரண தொழில் செய்ய புலம்பெயர்ந்த பெண்களின் குழுவாக இருக்கலாம். அவர்கள் ஏழைகள், அவர்கள் பெண்கள், அவர்கள் சிறுநீர் போல வாசம் வீசினர். பவுல் மற்றும் அவரது தோழர்கள் அவளது உபசரிப்பை ஏற்க ஒப்புக்கொண்டபோது, அது ஒரு சஞ்சாரி மற்றொரு சஞ்சாரியை ஏற்றுக்கொண்ட நிகழ்வாகும், மேலும் அது ஒரு கீழ் வர்க்கப் பெண் தன்னுடன் தங்கும்படி பவுலை “வருந்திக் கேட்டுக்கொண்ட” சம்பவமாகும். “வருந்திக் கேட்டுக்கொண்டாள்” என்பதற்குப் பயன்படுத்தப்பட்ட வார்த்தை கட்டாயத்தைக் குறிக்கிறது. பவுல் நிச்சயம் சம்மதித்திருக்க வேண்டும் என்பதை இது குறிக்கிறது. “நீங்கள் பிரசங்கிக்கும் இந்த நற்செய்தி உண்மையானது, நீங்களும் நானும் இப்போது சகோதர சகோதரிகள், கிறிஸ்துவின் இணை வாரிசுகள் என்றால், என் வீட்டில் தங்குவதற்கு சம்மதிப்பதின் மூலம் அதை நிரூபிக்கவும்” என்று லீதியாள் கூறுவதை அது சுட்டிக்காட்டுகிறது. ஒரு பெண், தனக்கு பரீட்சயமானவர்களையே உபசரிக்க வேண்டும் என்ற பொதுவாக அங்கீகரிக்கப்பட்ட வழக்கத்திற்கு அப்பாற்பட்டதாய் அவளது அயராத வேண்டுகோள்கள் இருந்தன. கிறிஸ்து அவ்வழக்கத்தை தகர்த்தெறிந்தார், கிறிஸ்துவுடனான அவர்களின் பகிரப்பட்ட ஐக்கியத்தின் அடிப்படையில், அந்நியரை வாழ்த்துவதற்கும், ஏற்றுக்கொள்வதற்கும், பாதுகாப்பதற்கும் லீதியாளுக்கு அதிகாரம் உள்ளது.

லீதியாளின் கதை, உபசரிப்பு என்பது பொருளுடைமைகளை கொண்டிருப்பதனை அடிப்படையாகக் கொள்ளாமல், மாறாக கிறிஸ்துவின் உடைமையாக இருப்பதைக் காட்டுகிறது. உபசரிப்பு ஒரு அந்நியரிடம் இருந்து மற்றொருவருக்கு வழங்கப்படலாம், அது வழக்கத்தை உடைக்கலாம், அது சங்கடமானதாகவும் ஆசீர்வதிக்கப்பட்டதாகவும் இருக்கலாம், இவை அனைத்தும் கிறிஸ்துவில் நாம் பகிர்ந்து கொள்ளும் அடையாளத்தின் அடிப்படையில் இருக்க வேண்டும்.

என்னிடமிருந்து வேறுபட்டவர்களுடன் உறவுகளை உருவாக்குவது, அந்நியர்களுக்கு வீட்டைத் திறப்பது, விருந்தோம்பலை வழங்குவது என்பது எளிமையானதல்ல அல்லது சுலபமாக ஏற்றுக்கொள்ள கூடியதல்ல என்பதை நேரடி அனுபவத்திலிருந்து நான் அறிவேன். ஆனால் தேவன் இந்த உறவுகளிலே தன்னை வெளிப்படுத்துகிறார், அவற்றைப் பயன்படுத்தி நமது தவறான எண்ணங்களையும் முன்முடிவுகளையும் தகர்த்து, ஆச்சரியமான வழிகளில் வெளிப்படுவார் என்பதையும் நான் அறிவேன்.

banner image

சியாட்டிலில் உள்ள எங்கள் வீட்டில் நாங்கள் பல தோல்விகளைச் சந்தித்த போதிலும், அந்த வீட்டில் எங்கள் உறவுகள் எங்களை ஆசீர்வதித்தனர். நாங்கள் அங்கு வசிக்கும் போது எங்கள் முதல் மகள் ரோஸி பிறந்தாள், அவள் பிறந்த பிறகு, எங்கள் வீட்டுத்தோழன் கெய் கொரியாவில் உள்ள தனது தாயை அழைத்து, புதிய தாய்மார்களுக்கான சூப் செய்முறையைப் பெற்றுத்தந்தான். சாதம் மற்றும் கோழிக் குழம்புடன் கெட்டியாகவும், மிருதுவாகவும் எனக்காகத் தயாரித்தான். கிரேஸ் எங்கள் மகளுக்கு கிரேஸ் ஆயி அல்லது கிரேஸ் அத்தை ஆனாள். ரோஸிக்கு தனது முதல் பிறந்தநாளில் அணிவதற்காக, அனு நேபாளத்திலிருந்து ஒரு இளவரசி உடையைக் கொண்டு வந்தாள். அவரவர்கள் எங்களுக்கு அவரவர்களின் கலாச்சார மரபுகள் அனைத்தையும் கற்றுக் கொடுத்தார்கள், மேலும் ரோஸி சீன, கொரிய, ஜப்பானிய மற்றும் பிரஞ்சு மொழிகளில் வாழ்த்தப்பெற்று ஆசீர்வதிக்கப்பட்டாள். வேதத்தின்படி, நாம் உபசரிக்கும் போது ஆசீர்வாதத்தை எதிர்பார்க்கலாம்.

வேதாகம பாரம்பரியத்தில், விருந்தினர்கள் தங்கள் புரவலர்களைத் தேவனுடன் இணைக்கிறார்கள். ஆபிரகாம் அந்நியர்களை வரவேற்றபோது, அவர் தேவனிடமிருந்து ஒரு செய்தியையும் வாக்குத்தத்தத்தையும் பெற்றார் (ஆதியாகமம் 18). தீர்க்கதரிசிகளான எலியாவும் எலிசாவும் தங்கள் தேவைகளின் மத்தியில், அவர்கள் இருவரும் பெண்களின் வீடுகளில் அடைக்கலம் புகுந்தனர். விருந்தோம்பல் பெற்ற தீர்க்கதரிசிகளும் மற்றும் உபசரித்த பெண்கள் இருவரும் அதன் விளைவாகத் தேவனால் ஆசீர்வதிக்கப்பட்டனர். அந்நியர்களை வரவேற்பவர்களே தம்முடைய உண்மையான சீடர்கள் என்று இயேசு கற்பித்தார் (மத்தேயு 25), மற்றும் எபிரேயரின் ஆசிரியர் தேவதூதர்களும் அந்நியர்களின் மாறுவேடத்தில் இருக்கலாம் என்று எச்சரித்தார் (13:2).

வேதாகம காலங்களில் இருந்ததைப் போலவே இப்போதும் அதிகமாக அன்னியர்களை உபசரிக்கும் தேவை சபைக்கு அதிகம் உள்ளது. இன்று நம் உலகில், தனிமை மற்றும் இடம்பெயர்வு என்பது உபசரிப்பானது குறைந்தபட்சம் கவனிக்கத் தொடங்கும் உண்மையான பிரச்சனைகள். நாம் ஒரு துண்டு துண்டான சமூகத்தில் வாழ்கிறோம். அமெரிக்காவில், குறைவானவர்களே திருமணம் செய்து கொள்கிறார்கள், மேலும் குறைவான இளைஞர்களே சபை காரியங்களில் ஈடுபடுகிறார்கள், இது பலருக்குத் தனிமைப்படுத்தப்பட்ட உணர்வுக்கு வழிவகுக்கிறது. ஆனால் மிக முக்கியமாக, உலகில் முன்பைவிட இப்போது அதிகமான அகதிகள் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் உள்ளனர் – 65.3 மில்லியன் மக்கள் தங்கள் வீடுகளிலிருந்து கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளனர், மேலும் அவர்களில் 21.3 மில்லியன் பேர் அகதிகள். இந்த அகதிகளில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் 18 வயதுக்குட்பட்டவர்கள். கிட்டத்தட்ட 34,000 பேர் மோதல் அல்லது துன்புறுத்தலின் விளைவாக நம் உலகில் ஒவ்வொரு நாளும் வலுக்கட்டாயமாக இடம்பெயர்கின்றனர். இந்த அகதிகளை கிறிஸ்துவின் அன்புடன் யார் வரவேற்பார்கள்?

உபசரிப்பை வழங்குவதற்கான முதல் படி, தேவையிலுள்ளவர்களை சந்திக்கக் கற்றுக்கொள்வது. நம் நட்பு வட்டங்களை நம்மைப் போன்றவர்கள், நமக்கு ஏற்றவர்களாக இருப்பவர்களுடன் மட்டும் சுருக்கிக் கொள்வது எளிதானது மற்றும் இயற்கையானது. ஆனால் நாம் அவ்வாறு செய்யும்போது, அதிக உபசரணை தேவைப்படுபவர்களை எளிதில் கவனிக்காமல் விட்டுவிடுவோம். பவுலைப் போலவே, நாமும் வித்தியாசமாகத் தோற்றமளிக்கும் அல்லது வாசனையுள்ளவர்களை அன்பின் தேவனிடமிருந்து கேட்கக் காத்திருக்கும் மற்றும் நம்பிக்கையுடன் இருப்பவர்களைக் கண்டுகொள்ளும்படி “பட்டணத்துக்கு வெளியே” செல்ல வேண்டியிருக்கலாம்.

உபசரிப்பு பல்வேறு வடிவங்களை எடுக்கலாம். புலம்பெயர்ந்தோரையும் அகதிகளையும் நமது நகரங்களுக்கும் நமது வீடுகளுக்கும் வரவேற்கலாம், சமீபத்தில் வந்தவர்களுக்கு அறிமுகமில்லாத உலகை பரீட்சயமாக்கிட உதவலாம், தேவையான பொருட்கள் மற்றும் நியாயமான வேலைகள் கண்டறிய உதவலாம், போக்குவரத்து அமைப்பு அல்லது நமது மொழியின் எழுத்துக்களைக் கற்றுக்கொள்ள உதவலாம். குடும்பம் தேவைப்படும் குழந்தைகளை நாம் தத்தெடுக்கலாம் அல்லது வளர்ப்பு குழந்தைகளை நம் வீட்டிற்கு வரவேற்கலாம். முதியோர் இல்லங்களில் தனிமையிலும் ஒதுக்கப்பட்டும் இருக்கும் முதியவர்களைத் தேடி அவர்களுடன் நட்பை ஏற்படுத்தலாம். தனிமையான நண்பர்களை நம் குடும்ப வாழ்க்கையில் ஏற்றுக்கொள்ளலாம். உபசரிப்பு தேவைப்படுபவர்களுக்கு நம் கண்களைத் திறக்கும்படி தேவனைக் கேட்கும்போது, தேவன் பதிலளிப்பார்.

உபசரிப்பிலுள்ள ஆபத்து என்னவென்றால், அதன் மூலம் நாம் ஆசீர்வதிக்கப்படுவதுபோல, அதனால் நாமும் மாற்றமடைகிறோம். நம்மைப் போல் இல்லாதவர்களுடன் உறவுகளை வளர்த்துக் கொள்ளும்போது, நமது முன்னோக்குகள் விரிவடைவதையும், நமது பச்சாதாபங்கள் விரிவடைவதையும், நமது முன்கணிப்புகள் உடைபடுவதையும் காண்போம். பேதுருவையும் பவுலையும் மாற்றியது போல் நம்மையும் மாற்றத் தேவன் உபசரிப்பைப் பயன்படுத்துகிறார். நம்மைப் போன்ற தோற்றமுடையவர்களுடன், அதே சமூகப் பொருளாதாரப் பின்னணியிலிருந்து வந்தவர்களுடன் அல்லது ஒரே இனப் பாரம்பரியத்தை உடையவர்களுடன் மட்டுமே நமது உறவுகள் இருக்கும் போது, தேவன் யார், வாழ்க்கை எவ்வாறு செயல்படுகிறது என்பது பற்றிய வரையறுக்கப்பட்ட கண்ணோட்டம் தான் நமக்கு இருக்கும். நிச்சயமாக, தேவனைப் பற்றிய நமது கண்ணோட்டம் எப்போதும் பரலோகத்தின் இந்தப் பக்கத்தில் மட்டுப்படுத்தப்பட்டதாகவே இருக்கும், ஆனால் நம்மிலிருந்து வேறுபட்டவர்களின் பார்வையில் அவரைப் பார்க்கும்போது நாம் தேவனைப் பார்க்கிறோம்.

உண்மையில், உபசரிப்பு நமக்குப் பரலோகத்தின் முன்னனுபவத்தை வழங்க முடியும், அங்கே நாம் ஒவ்வொரு தேசம், இனத்தவர், மக்கள் மற்றும் மொழியிலிருந்தும் வரும் ஒரு பெரும் திரளுடன் சேர்ந்து தேவனைத் துதிப்போம் (வெளிப்படுத்துதல் 7:9).

முடிவுரை

உபசரித்தல் என்பது தேவனைப் பின்பற்றுபவர்களுக்கு ஒரு அடிப்படை நற்பண்பு. நாம் இங்கே பூமியில் அந்நியர்களாக இருக்கிறோம் என்பதை நினைவூட்டி, தேவனுடைய ராஜ்யத்திற்குள் நம்மை வரவேற்கும் புரவலன் இயேசு. அந்நியர்களாகிய நம்மை, மற்ற அந்நியர்களை வரவேற்க அழைக்கிறார். நாம் அனைவரும் தேவனின் சாயலில் படைக்கப்பட்ட மனிதர்கள், அன்புக்கும் அக்கறைக்கும் பாத்திரவான்கள் என்ற உண்மையைத் தழுவி அந்த வரவேற்பு இருக்க வேண்டும்.

உபசரித்தல் என்பது பயத்திற்கு எதிரான விசுவாசத்தின் தீவிர நிலைப்பாடாகும். தேவனின் மிகுந்த அன்பின் காரணமாக, அந்நியர்களுக்குப் பயப்படுவதை விட நாம் அவர்களை வரவேற்க முடியும் என்று விருந்தோம்பல் கூறுகிறது. உபசரிப்புக்குச் சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு, விடுதிகள் மற்றும் உணவகங்கள் போன்ற “தொழில் ரீதியானவை” ஆகியவற்றுடன் சிறிதும் சம்பந்தமில்லை. உபசரிப்பு ஒரு பரிமாற்றம் என்றால், நீங்கள் இப்போது தேவையிலுள்ளீர்கள் என்பதை ஒப்புக்கொள்ளும் விதத்தில் மட்டுமே அது பரிமாற்றமாகும், ஒரு நாள் நானும் தேவையோடிருப்பேன்; நாம் பரஸ்பர சார்பு நிலையில் இருக்கிறோம், தனிச்சயாக அல்ல. நம்மில் பலர் இதை உண்மையில் நம்புவதில்லை. நாம் நமது சுய அதிகாரத்தை நம்புகிறோம். நாம் சுதந்திரமான மற்றும் பாதுகாப்பான வாழ்க்கையை வாழப்பழகிய தனிமனிதவாதிகள், எனவே நாம் உண்மையில் எவ்வளவு ஆழமாகப் பாதிக்கப்படுகிறோம் என்பதையும் உண்மையில் தேவன் மற்றும் நம் அயலகத்தாரின் கருணையில் நாம் வாழ்கிறோம் மற்றும் சுவாசிக்கிறோம் என்பதையும் மறந்துவிட்டோம். அதை நாம் நினைவில் வைத்துக் கொள்ள முடிந்தால், நம் இதயங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கும் மற்றும் ஒதுக்கப்பட்டவர்களுக்கும் இன்னும் திறந்திருக்கும் அல்லவா? நாம் அந்நியர்கள் என்பதை நினைவில் கொள்ள முடிந்தால், அந்நியர்களை வரவேற்போம்; ஆனால் நாம் இந்த உலகை மிகவும் வீடாக்கிக்கொண்டோம், ஆகவே நாமே நம் சொந்த விதியின் எஜமானர்கள் என்று நம்பத் தொடங்கிவிட்டோம். நாம் நம்மையே கவனித்துக்கொள்கிறோம், மற்றவர்களும் அதையே செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

உபசரித்தல் என்பது இப்போது நம்மிடம் உள்ள அனைத்தும் தேவனிடமிருந்து இரவலாகப் பெற்றவை என்பதை நினைவுபடுத்துவதாகும். தேவன் லேவியராகமத்தில், இஸ்ரவேலர்களுக்கு தாம் கொடுத்த தேசம் அவருடையது என்றும், அவர்கள் அந்நியர்களாகவும் பரதேசிகளாகவும் அதில் குடியிருக்க வேண்டும் என்றும் கூறினார். பேதுரு தெரிந்துகொள்ளப்பட்டவர்களுக்கு எழுதிய நிருபத்தில் இந்த சிந்தனையை எதிரொலித்தார், உலகில் நம்மை “சிதறியிருக்கிறவர்கள் மற்றும் பரதேசிகள்” என்று அழைத்தார். உபசரிப்பு கிறிஸ்தவ அடையாளத்தின் இதயமாக உள்ளது; அது ஒரு திறந்த தாராளமான இதயம், வீட்டின் தாராளமான திறந்த தன்மை, ஒரு அந்நியன் மற்றொரு அந்நியனை வரவேற்கும் இடம், அங்கே ஒவ்வொரு நபரும் தன்னை தேவன் எவ்வாறிருக்கும்படி படைத்தாரோ அவ்வாறே இருக்க முடியும், செழிக்க முடியும், நிலைத்து நிற்கும் ஒரு வீட்டிற்கு நெருங்கி வர முடியும், அந்த வீடு அசைவில்லாத ராஜ்யமாகும்.

பிறசேர்க்கை
உபசரிப்பை தழுவுவதற்கான யோசனைகள்

சபையிலிருந்து ஒரு நண்பர் அல்லது குடும்பத்தை இரவு உணவிற்கு அழையுங்கள். எளிமையாகத் தொடங்குங்கள். எளிய உணவை தயார் செய்யுங்கள்! பவுல் கலாத்திய நிருபத்தில், “ஆகையால் நமக்குக் கிடைக்கும் சமயத்திற்குத்தக்கதாக, யாவருக்கும், விசேஷமாக விசுவாச குடும்பத்தார்களுக்கும், நன்மைசெய்யக்கடவோம்” (கலாத்தியர் 6:10) என்று எழுதுகிறார். அந்நியர்களை வரவேற்பது அச்சுறுத்தலாக இருந்தால், சபையில் உங்களுக்குத் தெரிந்தவர்களுடன் தொடங்குங்கள்

உங்கள் பகுதியில் உள்ள அகதிக் குடும்பங்களுக்கு உதவத் தன்னார்வத் தொண்டு செய்யுங்கள். உங்கள் உள்ளூர் அகதிகள் மீள்குடியேற்ற நிறுவனத்தைக் கண்டறிந்து, நீங்கள் எவ்வாறு தன்னார்வத் தொண்டு செய்யலாம் என்று கேளுங்கள். அல்லது உலக நிவாரணம், கத்தோலிக்க அறக்கட்டளைகள் அல்லது லூத்தரன் குடும்ப சேவைகள் போன்ற குழுவைத் தொடர்புகொள்ளவும்.

உள்ளூரில் ஓய்வு பெற்றவர்களின் குழுவைப் பார்வையிடவும். இப்பகுதியில் குடும்பம் அல்லது நண்பர்கள் இல்லாத குடியிருப்பாளர்கள் குறித்து நிர்வாகிகளிடம் கேளுங்கள். அவர்களின் நண்பராகுங்கள்.

கலப்பு மத நம்பிக்கை கூட்டத்தினரைக் கண்டறியவும். உங்கள் நண்பர்கள் அனைவரும் கிறிஸ்தவர்களாக இருந்தால், வெவ்வேறு நம்பிக்கைகள் கொண்டவர்களைச் சந்திக்கவும், அவர்களுடன் பழகவும் நீங்கள் செல்லக்கூடிய ஒரு கலப்பு சமய நம்பிக்கை கொண்ட கூட்டத்தைக் கண்டறியவும். உங்களிடமிருந்து வேறுபட்டவர்களை நண்பர்களாக உருவாக்குங்கள், அவர்களை உங்கள் வீட்டிற்கு வரவேற்கவும்.

குறுகிய காலத்திற்கு மலிவான வாடகைக்கு அறைகளைக் கொடுக்கலாம். உங்கள் வீட்டில் கூடுதல் அறை உள்ளதா? மலிவான விலையில் குறுகிய காலத்திற்கு வடைக்கு விடலாம். பயணிகள் ஓரிரு இரவுகள் உங்களுடன் தங்கும்போது, அவர்களை அன்புடனும் தாராளமாகவும் வரவேற்கவும். அப்படிப்பட்ட சிலர் விருந்தினர்களாகத் தங்கியிருந்தபோது வேதாகம படிப்பில் கலந்துகொண்டதை நான் அறிந்திருக்கிறேன்.

உங்கள் காலியான மீதமிருக்கும் படுக்கையறையைப் பயன்படுத்துங்கள். உங்கள் வீட்டில் காலியான அறை இருந்தால், தேவைப்படக்கூடிய ஒருவரைத் தேடுங்கள்.செலவுகளைக் குறைக்க முயற்சிக்கும் கல்லூரி மாணவர், அரையாண்டு அல்லது ஒரு வருடத்திற்குப் படிக்க, சிலகாலம் உங்கள் குடும்ப வாழ்க்கையில் உங்களோடு இணைந்திருக்க விரும்பலாம்.

banner image