வாசிக்க: யோபு 13:14-28

ஏன் என்னை விட்டு விலகுகிறீர்? (வ. 24)

நான் ஒரு தேநீர்விடுதியில் தேநீர் குடித்துக் கொண்டிருக்கையில், இரு பெண்கள் வெவ்வேறு இருக்கையில் அமர்ந்திருந்தனர். ஒருவள் வாலிப பருவத்தின் அழகோடு, கிரீம்களால் அலங்கரிக்கப்பட்ட பானத்தை பருகிக்கொண்டிருந்தாள். அவளுடைய ஷாப்பிங் பைகள் அவள் காலடியில் செல்லப்பிராணிகளைப்போல் அமர்ந்திருந்தன. மற்றொருவள், அதே வாலிப பருவம், ஆனால் கைத்தடி ஊன்றி தன் இருக்கைக்கு நகர்ந்து சென்றாள். தடிமனான பிளாஸ்டிக் வளையங்கள் அவள் கணுக்கால்களைப் பாதுகாத்தன. ஒரு பணியாளர் அவளது இருக்கையில் அவள் நகர்வதற்கு உதவ வேண்டியிருந்தது. நான் இரண்டு பெண்களைப் பார்த்தபோது ஆச்சரியப்பட்டேன், சிலர் மற்றவர்களைவிட அதிகமாக துன்பப்படுவதற்கு தேவன் ஏன் அனுமதிக்கிறார்?

யோபு தனது குழந்தைகள், செல்வம் மற்றும் ஆரோக்கியம் என்று அனைத்தையும் இழந்தபோது, அவரது நண்பர்கள் அதற்கான காரணத்தை விளக்க முயன்றனர். அது பாவத்தின் விளைவு என்று நிதானித்தனர், ஆனால் தேவனோ யோபுவை குறித்து, “அவனைப்போல பூமியில் ஒருவனும் இல்லை என்றார்” (யோபு 1.8).

பாவம் எப்போதும் துன்பத்திற்கு காரணமல்ல என்பது தெளிவாகிறது. இருப்பினும் நாம் விடுதலைக்காக ஏங்குகையில், நாம் பதில்களைத் தேடுகிறோம். தேவனை தேடி அவரை பின்தொடர்வதற்கு பதிலாக, “ஏன்?” என்றும் “நான் கஷ்டப்படுவது தேவனின் விருப்பமா?” என்றும் பல கேள்விகளை கேட்கிறோம். யோபுவும்கூட இந்த வலையில் வீழ்ந்தார், “என் அக்கிரமங்களும் பாவங்களும் எத்தனை? …… நீர் உமது முகத்தை மறைத்து என்னை உமக்குப் பகைஞனாக எண்ணுவானேன்” (13:23-24) என்று கேள்வியெழுப்பினார்.

இறுதிவரைக்கும் யோபுவின் கேள்விகள் பதிலளிக்கப்படவில்லை. கண்ணுக்குத் தெரியாத தீமைதான் அவருக்கு துன்பத்தை ஏற்படுத்தியது என்று தேவன் விளக்கவில்லை (எபேசியர் 6:12). ஆனால் யோபு அதிருப்தியாய் விடப்படவில்லை. தேவன் தன்னையே வெளிப்படுத்தி அவரை பூரண திருப்தியாக்கினார். தேவன் அவருக்கு தன்னுடைய படைப்பின் மகத்துவத்தையும், தனது பராமரிப்பையும் வெளிப்படுத்திய பின்னர், “இப்பொழுதோ என் கண் உம்மைக் காண்கிறது” (யோபு 42:5) என்று யோபு அறிக்கையிட்டார். மேலும் தேவன் யோபு இழந்தவற்றிற்காக இருமடங்கு ஆஸ்திகளையும், பிள்ளைகளையும், 140 வருட வாழ்நாட்களையும் அருளி ஆசீர்வதித்தார் (வ.10-17).

தேவன் ஏன் நம்மை துன்பப்பட அனுமதிக்கிறார் என்பதை நாம் புரிந்துகொள்ளாவிட்டாலும், “தமக்குக் காத்திருக்கிறவர்களுக்கும் தம்மைத் தேடுகிற ஆத்துமாவுக்கும் கர்த்தர் நல்லவர்” (புலம்பல் 3:25) என்பதை அறிந்து அவரை நாம் நாடி பின்செல்லலாம்.

– ஜெனிபர் ஷூல்ட்

மேலும் அறிய

கொலோசெயர் 3:1-4ஐப் படித்து, பூமியில் கஷ்டப்படும் விசுவாசிகளுக்கு எதிர்காலம் என்னவாக இருக்கும் என்பதைக் கவனியுங்கள்.

சிந்திக்க

நீங்கள் துன்பப்படும்போது தேவனின் நிலையான அன்பு உங்களுக்கு எப்படி ஆறுதலளிக்கிறது? புலம்பல் 3:33, தேவனின் நற்குணத்தை எப்படி வெளிப்படுத்துகிறது?