2 020 முதல் 2022 வரையிலாகிய ஆண்டுகள் தான் நான் சகித்து கொண்ட ஊழியத்தின் மிகவும் கடினமான காலம். நான் எடுத்த ஒவ்வொரு முக்கியமான முடிவுகளிலும் சந்தேகத்தையும், இழந்த உறவுகளால் மனவேதனையையும் ஏமாற்றத்தையும் அனுபவித்தேன். பாதி உண்மைகள், தவறான தகவல்கள் மற்றும் பிரச்சாரங்களின் அழுத்தத்தினால் மகிழ்ச்சியற்றவனாகவும் நிலையில்லாதவனாகவும் இருந்தேன். கடந்த பத்து ஆண்டுகளில் சிறந்த பகுதியாக நான் போதித்து வந்த மக்களிடையே ஒரு வெளியாளைப் போல உணர்ந்தேன். முந்தைய பத்து ஆண்டுகளில் நான் செய்ததை விட கடந்த இரண்டு வருட காலப்பகுதியில் அடுத்தடுத்தாக பல அடக்க ஆராதனைகளை நடத்தினேன்.
நான் தனியாக இல்லை என்பதில் ஆறுதல் அடைகிறேன். நாம் அனைவரும் சிறிது சோர்வடைந்துள்ளோம். நமது சந்தேகங்கள் மிகவும் எளிதாகவே கவனிக்கத்தக்கதாக உள்ளன. நமது ஏமாற்றங்கள் இன்னும் கொஞ்சம் அதிகமாகவே துக்ககரமாக இருக்கின்றன, நம்பேரழிவு இன்னும் கொஞ்சம் அனைத்தையும் உள்ளடக்கியது, மேலும் நமது துக்கம் மிகவும் உண்மையாக உள்ளது.
ஒற்றுமை நமக்கு சற்று ஆறுதலை அளிக்கும் அதே வேளையில், உண்மையான ஆறுதல் தேவனிடமிருந்து மட்டுமே வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் இயேசு கிறிஸ்துவின் திருச்சபை, மேசியாவின் வருகை தரும் நம்பிக்கை, மகிழ்ச்சி, அமைதி மற்றும் அன்பை அனுபவிக்கவும், அதை நீட்டிக்கும் நோக்கத்தில் அட்வென்ட் பருவத்தில் நுழைகிறது.
கிறிஸ்மஸ் (அட்வென்ட்) என்பது நம் சந்தேகத்திலோ, ஏமாற்றத்திலோ, தனிமையிலோ, துக்கத்திலோ தேவன் நம்மை மறக்கவில்லை என்பதை நினைவூட்டும் பருவமாக உள்ளது. பெத்லகேமில் ஒரு குழந்தையின் வருகையை திருச்சபை எதிர்பார்த்து கொண்டாடும் நேரம் இது. அந்த ஒரு குழந்தை, சோர்வடைந்த மற்றும் உடைந்த இதயம் கொண்டவர்களுக்கு நம்பிக்கையையும் ஊக்கத்தையும் தரும்.
டென்னிஸ் மோல்ஸ்
♥ அப்பொழுது சகரியா தேவ தூதனை நோக்கி: இதை நான் எதினால் அறிவேன்; நான் கிழவனாயிருக்கிறேன்; என் மனைவியும் வயது சென்றவளாயிருக்கிறாளே என்றான் (லூக்கா 1:18). ♥
கிறிஸ்துமஸ் நிகழ்வையும், இந்த நிகழ்வில் யோவான் ஸ்நானகனின் தந்தையாகிய சகரியா வகித்த பகுதியைப் பற்றி சிந்திக்கும்போது, ஒரு சந்தேகப்படுகிற நபரை நாம் நினைவு கூருகிறோம். அவர் தேவாலயத்தில் ஊழியம் செய்யும் போது ஒரு தேவத் தூதனை சந்தித்த நபர். நம்மை ஆச்சரியப்படுத்தும் வார்த்தைகளால் அவர் தேவனின் அதிகாரபூர்வமான செய்தியை கேள்விக்குட்படுத்துகிறார்.
சகரியா நல்லவர்களில் ஒருவராக இருந்தார். அவருடைய மூதாதையர்கள் தேவாலயத்தை பராமரிப்பதிலும், நியாயப்பிரமாணத்தை கடைப்பிடிப்பதிலும், தேவனுக்கு முன்பாக மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உயர்ந்த அழைப்புக்காகவும் தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்கள். சகரியாவும் அவருடைய மனைவியும், மோசேயின் சகோதரனும் இஸ்ரவேலின் முதல் பிரதான ஆசாரியருமான ஆரோனின் வம்சத்தில் வந்தவர்கள். ஒரு ஆசாரியனாக, இஸ்ரவேலின் பாவங்களுக்காக பலிகளை செலுத்துவதின் மூலம் ஒரு மத்தியஸ்தன்னாக மக்களை தேவனுக்கு முன்பாக பிரதிநிதித்துவப்படுத்தி ஊழியம் செய்யவதே சகரியாவின் வேலை (லூக்கா 1:8-9).
உண்மைத்தன்மை சகரியாவின் குடும்பத்தின் அடையாளமாக இருந்தது. அவர் அபியாவின் பிரிவில் ஒரு ஆசாரியராக இருந்தார் – இந்த அபியா, ஆலயத்தை மீண்டும் கட்டும் நோக்கத்திற்காக செருபாபேலுடன் யூதாவுக்குத் திரும்பிய ஒரு மனிதர் (நெகேமியா 12:4). மேலும், அவர் நாடுகடத்தப்பட்ட ஆசாரிய பிரிவை வழிநடத்த தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் (1 நாளாகமம் 24:10).
ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் உள்ளது போலவே, எப்போதும் நல்லவனுக்கு சாதகமாக காரியங்கள் நடக்காது. சகரியா கடினமானதும் சந்தேகம் நிறைந்ததுமான காலங்களில் ஊழியம் செய்தார். மல்கியா இறந்து நானூறு வருடங்கள் ஆகிவிட்டன, இஸ்ரவேலின் கடைசி தீர்க்கதரிசி தேவனுடைய ஜனங்களின் துரோகத்திற்கு அவர்கள் மீது நியாயத்தீர்ப்பை அறிவித்ததிலிருந்து ஒரு பெரிய விஷயம் நடந்தது (மல்கியா 1 ஐப் பார்க்கவும்). ஆசாரியர்கள் மற்றும் லேவியர்களின் கீழ்ப்படியாமை மற்றும் மரியாதைக் குறைபாட்டிற்காக, மல்கியா அவர்களை கூப்பிட்டு, அவர்கள் மனந்திரும்பி, தங்கள் மூதாதையருக்கு வெளிப்படுத்தப்பட்ட தேவனின் உடன்படிக்கையின் அன்பிற்கு பதிலளிக்கவில்லை என்றால், அவர்கள் மீதும் அவர்களின் சந்ததியினர் மீதும் சாபத்தை அனுப்புவேன் என்று கூறினார் (மல்கியா 2:1-9).
நல்லவர்களுக்கு வெகுமதியும், தீயவர்களுக்கு தண்டனையும் கிடைக்கும். இது விதைத்தல் மற்றும் அறுவடை செய்வதற்கான சட்டம். கெட்டவர்கள் சிறைக்குச் செல்கிறார்கள்; நல்லவர்கள் சுதந்திரமாக நடக்கிறார்கள். கெட்டவர்கள் தங்களுக்கும் தங்கள் குடும்பங்களுக்கும் அவமானத்தையும் நிந்தையையும் கொண்டுவருகிறார்கள்; நல்லவர்கள் தாங்கள் விரும்புபவர்களுக்கு மரியாதையையும் ஆசீர்வாதத்தையும் கொண்டு வருகிறார்கள் அல்லவா? இது கேட்பதற்கு அப்படித்தான் தோன்றும்.
ஆனால் அது எப்பொழுதும் அப்படி இருப்பதில்லை.
ரோமானிய அடக்குமுறையாளர்கள் தேவனின் மக்களை ஆட்சி செய்து, தேவன் ஆபிரகாமுக்கு வாக்குறுதியளித்த தேசத்தை ஆக்கிரமித்த ஒரு சமுதாயத்தில் தான் சகரியா வாழ்ந்தார். செலூசிட் பேரரசுக்கு எதிரான மக்காபியன் கிளர்ச்சி (ரோமானியர்கள் கைப்பற்றுவதற்கு முன்பு இப்பகுதியைக் கட்டுப்படுத்தியது) வன்முறை மற்றும் இரத்தக்களரி மூலம் ஒரு குறுகிய கால சுதந்திரத்தை வழங்கியது. ஆனால் பல நூற்றாண்டுகளாக வெவ்வேறு ஆக்கிரமிப்புப் படைகள் அப்பகுதியைக் கட்டுப்படுத்தியதைப் போலவே, தேவனின் மக்கள் இன்னும் தடுமாறி, ரோமின் அடக்குமுறை மற்றும் கடுமையான வரிவிதிப்புக்கு உட்பட்டனர். காயத்திற்கு அவமானம் சேர்க்கும் வகையில், ரோம் பாலஸ்தீனிய பிராந்தியத்தின் ஆட்சியாளராக ஏதோமியரான மகா ஏரோது என்பவரை ரோம அரசு நிறுவியது. யாக்கோபு அல்லது தாவீது வம்சத்தில் இல்லாது, ஏசாவின் வம்சத்தில் வந்த ஏரோது, சிம்மாசனத்தில் அமர்ந்து இஸ்ரேலை ஆட்சி செய்தான்.
♥ செலூசிட் பேரரசு கிமு 312 முதல் 63 வரை நீடித்தது, மேலும் அலெக்சாண்டரின் தளபதிகளில் ஒருவரான செலூகஸ் நிகேட்டரால் நிறுவப்பட்டது. ஒரு காலத்தில், இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் உள்ள சிந்து பள்ளத்தாக்கிலிருந்து மத்தியதரைக் கடலின் கிழக்கு விளிம்பு வரை பரவியிருந்த பகுதியை செலூசிட் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். (https://www.worldhistory.org/Seleucid_Empire/) ♥
♥ ஈசாக்குக்கும் ரெபெக்காளுக்கும் பிறந்த மூத்த மகன் ஏசாவின் வழித்தோன்றல்கள் தான் இந்த ஏதோமியர்கள். ஈசாவின் இளம் இரட்டை சகோதரன் தான் யாக்கோபு. அவருடைய பெயர் பின்னர் இஸ்ரவேல் என மாற்றப்பட்டது. தேவன் ஆபிரகாமுக்கு அருளின ஆசீர்வாதம், யாக்கோபு மூலமாக மற்றவர்களுக்கும் செல்லும். ♥
சகரியாவின் விசுவாசத்திற்கு எதிராக சதி செய்வதற்கு பரந்த உலகம் மட்டுமல்லாமல், பாவமும், வீழ்ச்சியின் கிளைகளும் வந்தன. சகரியாவுக்கும் எலிசபெத்துக்கும் குழந்தை இல்லை—அவருடைய பெயரையோ அல்லது அவருடைய குடும்பத்தின் ஆசாரியப் பரம்பரையையோ தொடர ஒர் ஆண் பிள்ளை அவருக்கு இல்லை. சகரியா தனது வாழ்நாள் முழுவதும் சரியானதைச் செய்ய முயன்றார் (லூக்கா 1:6). அவர் தேவனுடைய நியமங்களையும், கட்டளைகளையும் கடைப்பிடித்தது மட்டுமல்லாமல், மற்றவர்களுக்கும் அதைச் செய்ய உதவுவதற்கும்மான தனது அழைப்புக்கு உண்மையாக இருந்தார். சகரியாவின் உண்மைத்தன்மை இருந்தபோதிலும், தேவனுடைய மக்கள் கூக்குரலிட்ட போதிலும், தேவன் அவர்கள் வேண்டுதலுக்கு அமைதியாகவே இருந்தார்.
சகரியா தனிப்பட்ட ரீதியாகவும், சமூக ரீதியாகவும் சாபத்தின் கீழ் வாழ்வதாக உணர்ந்திருப்பார் என்று நினைக்கின்றேன். மல்கியா இவ்வளவு காலத்திற்கு முன்பு பேசினார்? நான் அடிக்கடி செய்வது போலவே, சகரியாவும் தேவனின் மௌனத்தை தவறாகப் புரிந்து கொண்டிருக்கலாம். நான் பொறுமையிழக்கிறேன். தேவன் என்னுடைய கால அட்டவணையில் செல்ல வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அவர் அவ்வாறு செய்யாதபோது, “தேவனே, நீர் உண்மையில் இருக்கிறீர்களா?” “உமக்கு என்னைப் பற்றி உண்மையிலேயே அக்கறை இருக்கிறதா?” “நாங்கள் இங்கே என்ன குழப்பத்தில் இருக்கிறோம் என்று நீங்கள் பார்க்கவில்லையா?” போன்ற கேள்விகளைக் கேட்கும் போது, நான் கொஞ்சம் சந்தேகப்படுகிறேன் என்பதை காட்டுகிறது. கடைசியில் தேவனே தோன்றினாலும், அது அவர்தானா என்று சந்தேகப்படுவேன்.
சகரியாவின் வாழ்க்கையை மட்டுமல்ல, முழு உலகத்தின் பாதையையும் மாற்றும் ஒரு செய்தியுடன் தேவன் தனது தூதரை சகரியாவுக்கு அனுப்பும் சூழல் இதுவாகும்.
அப்பொழுது கர்த்தருடைய தூதன் ஒருவன் தூபபீடத்தின் வலதுபக்கத்திலே நின்று அவனுக்குத் தரிசனமானான். சகரியா அவனைக்கண்டு கலங்கி, பயமடைந்தான். தூதன் அவனை நோக்கி: சகரியாவே, பயப்படாதே, உன் வேண்டுதல் கேட்கப்பட்டது; உன் மனைவியாகிய எலிசபெத்து உனக்கு ஒரு குமாரனைப் பெறுவாள், அவனுக்கு யோவான் என்று பேரிடுவாயாக. உனக்குச் சந்தோஷமும் மகிழ்ச்சியும் உண்டாகும், அவன் பிறப்பினிமித்தம் அநேகர் சந்தோஷப்படுவார்கள். அவன் கர்த்தருக்கு முன்பாகப் பெரியவனாயிருப்பான், திராட்சரசமும் மதுவும் குடியான், தன் தாயின் வயிற்றிலிருக்கும்போதே பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டிருப்பான். அவன் இஸ்ரவேல் சந்ததியாரில் அநேகரை அவர்கள் தேவனாகிய கர்த்தரிடத்திற்குத் திருப்புவான். பிதாக்களுடைய இருதயங்களைப் பிள்ளைகளிடத்திற்கும், கீழ்ப்படியாதவர்களை நீதிமான்களுடைய ஞானத்திற்கும் திருப்பி, உத்தமமான ஜனத்தைக் கர்த்தருக்கு ஆயத்தப்படுத்தும்படியாக, அவன் எலியாவின் ஆவியும் பலமும் உடையவனாய் அவருக்கு முன்னே நடப்பான் என்றான். (லூக்கா 1:11-17)
ஆம்!
பல தலைமுறை தலைமுறை மௌனத்திற்குப் பிறகு, பரலோகத்திலிருந்து தேவன் இறுதியாக மீண்டும் பேசினார். அதுமட்டுமல்ல, நீங்கள் சகரியாவாக இருந்தால், அவர் உங்களிடமும் பேசியிருக்கிறார்—உங்கள் குறிப்பிட்ட குழந்தை இல்லாத சூழ்நிலையைப் பற்றி மட்டும் அல்ல. ஒரு சிறு செய்தியில், தேவன் தம்முடைய தூதர் மூலம் உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் தனிப்பட்ட துன்பங்களுக்கும் மட்டுமல்ல, உங்கள் மக்கள் அனுபவித்த துன்பங்களுக்கும் மட்டுமல்ல, உலகத்தின் துன்பங்களுக்கு முடிவும் அறிவிக்கிறார்.
இறுதியாக, சமூக ரீதியாகவும் தனிப்பட்ட முறையிலும் உலகத்துடன் சரியாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் சகரியாவின் மனதிலாவது இருந்தது. அதனால்தான் தேவனுடைய தூதனுக்கு அவர் அளித்த பதில் மிகவும் சுவாரஸ்யமானதாக உள்ளது.
அப்பொழுது சகரியா தேவதூதனை நோக்கி: இதை நான் எதினால் அறிவேன்; நான் கிழவனாயிருக்கிறேன், என் மனைவியும் வயது சென்றவளாயிருக்கிறாளே என்றான்; (லூக்கா 1:18)
♥ ஆபிரகாமின் வயதான மனைவியாகிய சாராளுக்கு ஒரு மகன் பிறப்பான் என்று கர்த்தர் சொன்னபோது, ஆபிரகாம் சொன்ன பதிலை சகரியாவின் சூழ்நிலை நினைவுபடுத்துகிறது. “அப்பொழுது ஆபிரகாம் முகங்குப்புற விழுந்து நகைத்து: நூறுவயதானவனுக்குப் பிள்ளை பிறக்குமோ? தொண்ணூறு வயதான சாராள் பிள்ளை பெறுவாளோ? என்று தன் இருதயத்திலே சொல்லிக்கொண்டு” (ஆதியாகமம் 17:17) . சகரியாவுக்கு இந்தக் கதை நன்றாகத் தெரியும், ஆனாலும் அவர் தேவனை நம்புவதற்குப் போராடினார். ♥
இது போன்ற வேத வாக்கியங்களை நாம் வாசிக்கும் போது, நவீன வேதாகம வாசகர்களான நாம், வெறுப்புடன் தலையை அசைத்து, அத்தகைய இயற்கைக்கு அப்பாற்பட்ட சந்திப்பிற்குப் பிறகும் யாராவது எப்படி சந்தேகிக்க முடியும் என்று ஆச்சரியப்படுகிறோம். இந்த தேவதூதரின் தொடர்பின் அடிப்படையில் சகரியாவுக்கு மூன்று விஷயங்கள் தெளிவாக இருந்திருக்க வேண்டும். இந்த செய்தி கர்த்தரிடமிருந்து வந்தது. தேவாலயத்தில் சகரியாவின் தேவதூதர் சந்திப்பு, தேவன் அசாதாரணமான ஒன்றைச் செய்கிறார் என்பதை தெளிவுபடுத்தியது முதலாவது காரியம். சகரியாவின் தனிப்பட்ட வலியையும், குழந்தை இல்லாத அவமானத்தையும் தேவன் மீட்கப் போகிறார் என்பது இரண்டாவது காரியம். இஸ்ரவேலின் குடியினரின் துன்பத்தையும், அனைத்து மனிதகுலத்தின் உலகளாவிய துன்பத்தையும் விடுவிக்கும் ஒரு மேசியாவைக் கொண்டுவருவதாக தேவன் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றப் போகிறார் என்பது மூன்றாவது காரியம். சகரியாவின் மகன் இந்த வாக்களிக்கப்பட்ட ராஜாவுக்கு முன்னோடியாக இருக்க வேண்டும். ஆனால் ஏதோ ஒரு வகையான நோய், அவருக்கு கொடுக்கப்பட்ட வெளிப்பாட்டுடன் வரவேண்டிய மகிழ்ச்சியைக் தள்ளிவிட்டது. அதுதான் சந்தேகம் என்னும் நோய். இந்த இயற்கைக்கு அப்பாற்பட்ட சந்திப்பிற்குப் பிறகும், சகரியாவின் தாமதமான நம்பிக்கையின் அனுபவம், அவர் கண்களால் பார்த்ததையும் காதுகளால் கேட்டதையும் சந்தேகிக்க வைத்தது.
நெடுங்காலமாய்க் காத்திருக்குதல் இருதயத்தை இளைக்கப்பண்ணும் என்று நீதிமொழிகள் 13:12 கூறுகிறது. சகரியாவில் தாமதமான நம்பிக்கையின் நோயை நாம் காண்கிறோம் என்று கருதுவது ஏற்புடையாதாக இருக்கும்.
ஒன்பது மாதங்கள் ஊமையாக இருப்பது மிகவும் உறுதியானதாக இருந்தது. இதுவே சகரியாவின் சந்தேகத்தின் விளைவுகள். ஆனாலும், எப்படி மனித நம்பிக்கை தேவனின் திட்டத்தை கட்டளையிடாதோ அதே போல, மனித சந்தேகமும் தேவ திட்டத்தை தடம் புரளச் செய்யாது. சகரியாவின் சந்தேகம் தேவனின் திட்டத்தை நிறுத்தவில்லை, ஆனால் அதில் பங்குபெறும் சகரியாவின் திறனை அது மட்டுப்படுத்தியது. சந்தேகம் தேவனை தடுக்காது; தேவன் என்ன செய்கிறார் என்பதில் நாம் பங்கேற்பதை அது கட்டுப்படுத்துகிறது. ஏனெனில் அது அவரை தூரத்தில் வைத்திருக்கிறது. தோட்டத்தில் ஏவாளிடம் சர்பம் கேட்ட கேள்வி, “தேவன் உண்மையில் சொன்னாரா?” அதைபோலவே சந்தேகமும்,”தேவனை உண்மையில் நம்ப முடியுமா?” என்ற கேள்வியை கேட்கிறது.
நம்முடைய சந்தேகங்கள் நம்மை விரக்திக்கு இட்டுச் செல்லும் அளவுக்கு தேவனின் கைகளைக் கட்டிப்போடுவதில்லை. “உண்மையாக இருப்பது மிகவும் நல்லது” என்ற சொற்றொடரை நாம் அனைவரும் கேள்விப்பட்டிருக்கிறோம். சகரியா மீது சந்தேகம் எழவில்லை. இது ஒரு மனித கண்ணோட்டத்தில், வாழ்நாள் முழுவதும் காத்திருப்புக்கு வருகின்ற இயற்கையான பதிலாகும்.
நம்மில் எத்தனை பேர் நம் சந்தேகங்கள் நம்மை ஊக்கமின்மை மற்றும் நம்பிக்கையற்ற இடத்திற்கு இட்டுச் சென்றது என்பதை ஒப்புக்கொள்ளும் அளவுக்கு தைரியமானவர்கள் அல்லது நேர்மையானவர்கள் என்ற கேள்வி எனக்கு எழுகின்றது. நாம் ஜெபித்து, நம்பிக்கை வைத்து, காத்திருந்தோம். ஆனாலும் தேவன் இன்னும் அமைதியாகவும் தொலைவில் இருப்பதாகவும் தெரிகிறது.
சகரியாவின் வாழ்க்கை முழுவதும் காத்திருத்தலிலேயே கழிந்தது. மேசியாவை எதிர்பார்த்து காத்திருந்தார். நம்பிக்கையோடும் பிரார்த்தனையோடும் மகனுக்காகக் காத்திருந்தார். இங்கே, அவரது வயதான காலத்தில், தேவன் இறுதியாக சகரியாவின் ஜெபங்களுக்கு ஒரு பதிலைக் காட்டும்போது, அவருடைய ஆரம்ப எதிர்வினை தேவனைக் கேள்வி கேட்பதாக இருந்தது. அவர் எதிர்பார்த்த விதத்திலோ அல்லது வசதியான நேரத்திலோ பதில் வரவில்லை. நீண்ட காத்திருப்பு, அவரை சந்தேகத்திற்கு இட்டுச்சென்றது.
ஒவ்வொரு ஆண்டும், இயேசு கிறிஸ்துவின் திருச்சபையானது தமது ராஜா, இரட்சகர் மற்றும் மேசியாவின் வருகையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. தேவன், சகரியாவின் கால அட்டவணையையோ, சகரியாவின் திட்டத்தையோ பின்பற்றவில்லை அல்லது அவருடைய வாக்குறுதிகளை எவ்வாறு சிறப்பாக நிறைவேற்றுவது என்பதை குறித்த சகரியாவின் ஆலோசனையையோ பெறவில்லை.
இது கேட்பதற்கு கடினமான விஷயமாக இருக்கலாம். வேறு வழியில் செய்ய முடியாத ஒன்றை நம் காத்திருப்பில் தான் தேவன் செய்கிறார் என்பதை கேட்பது கடினம். ஒருவேளை, நான் தேவனின் திட்டத்தின் மையமாக இல்லை என்று கேட்பதும் கடினம். நான் காத்திருக்க முடியும். தேவன் தமது வசனமாகிய, “கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக் குறித்துத் தாமதமாயிராமல்;” (2 பேதுரு 3:9) என்ற வார்த்தையின் படி உண்மையாக இருக்க முடியும். ஆனால் இதைக் கவனியுங்கள்: சகரியா தேவதூதனைச் சந்தித்த பிறகு, அவர் வீட்டிற்குச் சென்று, தன்னிடம் சொல்லப்பட்ட அனைத்தையும் நிறைவேற்றும்படி கர்த்தரை நம்பினார். என்ன நடந்தது என்பதை அவர் எலிசபெத்திடம் தெரிவித்திருப்பார் என்பதில் சந்தேகமில்லை. கணவனால் திடீரென பேச முடியாமல் போனதற்கான அற்புத அடையாளத்தைக் கண்டு எலிசபெத்தும் விசுவாசத்தைக் காட்டினார்.
சந்தேகத்தின் விளைவுகள் அதிகமான சந்தேகத்தை கொண்டுவரலாம். முடிவில், சகரியாவின் நம்பிக்கை அவருடைய சந்தேகங்களை வென்றது; ஆனால் அந்த சந்தேகங்களின் விளைவுகள் என்னவென்றால், சகரியா ஒன்பது மாதகள் ஊமையாய் இருக்க வேண்டியதாயிற்று. அவரது மகனுக்கு பெயரைப் சூட்டும் வரை இந்த நிலை நீடித்தது. ஒரு பொருளின் விளைவுகள் அந்த பொருளைப் போலவே இருக்காது என்பது மகிழ்ச்சிக்குரிய காரியம். நாம் சந்தேகத்தை விடாப்பிடியாகப் பிடித்து கொண்டு இருக்கும் போதும், அதைப் பற்றிக் கொள்ளும் போது மட்டுமே சந்தேகம் நம் வாழ்வில் வெற்றி பெறுகிறது. நம்பிக்கையற்ற சூழ்நிலையில், ஒரு வழியை உருவாக்கும் தேவனின் திறனை நாம் கைவிடும்போது மட்டுமே நம்பிக்கை மரித்துவிடுகிறது. சந்தேகம் விசுவாசத்திற்கு வழி விடும் தருணத்தில், நம்பிக்கை பிறக்கிறது. சந்தேகம் புரிந்துகொள்ளப்படும்; இது சகரியாவுக்கும் புரியும், நமக்கும் புரியும்.
தைரியமாயிருங்கள். ஆபிரகாம், ஈசாக்கு மற்றும் யாக்கோபின் தேவன், வாக்குறுதியைக் கடைப்பிடிப்பவர். கிறிஸ்துமஸின் நம்பிக்கை என்னவென்றால், நமக்கு சந்தேகங்கள் இருந்தாலும் அவர் உண்மையுள்ளவராக உள்ளார்.
♥ எலிசபெத் தன் குழந்தையைப் பெற்றெடுக்கும் நேரம் வந்தது, அவள் ஒரு மகனைப் பெற்றெடுத்தாள். அவளுடைய அண்டை வீட்டாரும் உறவினர்களும் கர்த்தர் அவளுக்கு மிகுந்த கருணை காட்டினார் என்று கேள்விப்பட்டு, அவளுடைய மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர். (லூக்கா 1:57–58) ♥
ம யோ கிளினிக்கின் கூற்றுப்படி, இந்தியாவில் ஆண்களும் பெண்களும் உட்பட 275 லட்சம் மலட்டுத்தன்மையுள்ள மக்கள் உள்ளனர் என்று இந்திய நுட்பத்துணை இனப்பெருக்க சங்கம் (the Indian Society of Assisted Reproduction) தெரிவித்துள்ளது. மேலும், அமெரிக்காவில் பத்து முதல் பதினைந்து சதவிகித தம்பதிகள் மலட்டுத்தன்மையுடன் போராடுகிறார்கள். அதாவது, புள்ளிவிவரப்படி, ஒவ்வொரு பத்து ஜோடிகளில் ஒருவர் ஒரு கட்டத்தில் சகரியா மற்றும் எலிசபெத்தின் நிலையில் உள்ளனர். இதை மூல எண்களாகப் பிரிப்போம் என்றால், 2020 இன் அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, அமெரிக்காவில் 620 லட்சத்திற்கும் அதிகமான திருமணமான தம்பதிகள் இருந்தனர். அதாவது, அமெரிக்காவில் மட்டும் 124 லட்சம் தனிநபர்கள், கருத்தரிக்க முடியாமலும், குழந்தைகளைப் பெற்றெடுக்க முடியாமலும் ஏமாற்றத்தையும் வேதனையையும் அடைகின்றனர்.
இதைப் பற்றி யோசித்துப் பாருங்கள்: இந்த எண்ணிக்கையில் போராடும் மக்கள் ஒரு நகரமாக இருந்தால், அந்த நகரம் உலகின் 26 வது அதிக மக்கள்தொகை கொண்ட நகரமாக இருக்கும் – ரஷ்யாவின் மாஸ்கோவிற்குப் பின்னால், மற்றும் இந்தியாவின் சென்னைக்கு சற்று முன்னால்; பொகோடா, கொலம்பியா; மற்றும் பாரிஸ், பிரான்ஸ். இது நியூயார்க், லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் டொராண்டோவை விட, வட அமெரிக்காவின் மிகப்பெரிய நகரமாக இருக்கும்.
124 லட்சம் தேவனின் சாயலில் உள்ள மக்கள், “பழுகி பெருகுங்கள்” (ஆதியாகமம் 1:28) என்ற முதல் கட்டளையை செயல்படுத்த முடியாமல், நொறுங்கும் துயரத்தில் உள்ளனர். தகுந்த துணையை கண்டுபிடிக்க விரும்பினாலும் அதைச் செய்யாத பலரைப் பற்றி இது ஒன்றும் சொல்லவில்லை. மௌனத்திலும் தனிமையிலும் பலர் தவிக்கின்றனர்.
பெண்கள் குறிப்பாக தங்கள் ஆத்துமாவை ஊடுருவக்கூடிய முடிவில்லாத கேள்விகளைத் சகிக்கிறார்கள். எலிசபெத்துக்கும் இந்த வருத்தம் நன்றாகவே தெரியும். ஒரு பெண் திருமணமாகி அவளுடைய கணவருக்கு பிள்ளைகளை பெற்று தர வேண்டும்; அதாவது தாங்கள் வயது முதிர்ந்து இருக்கும் காலத்தில், தங்களை பராமரிக்கின்ற ஒரு பெண் பிள்ளையையும், தங்கள் குடும்ப தொழிலை நடத்துகின்ற, தங்கள் குடும்ப பெயரை நிலைபாட்டுகிற ஒரு ஆண்மகனையும் பெற்று தர வேண்டும் என்ற சமூகத்தில் வாழ்ந்தாள் எலிசபெத்.
இதோ, பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்தரம், கர்ப்பத்தின் கனி அவரால் கிடைக்கும் பலன் (சங்கீதம் 127:3) என்று சங்கீதம் கூறுகிறது.
இந்த சூழலில் குழந்தைகளைப் பெறாமல் இருப்பது வெட்கக்கேடானது மட்டுமல்ல, அது ஆன்மீகக் குறைபாடாகவும் கருதப்பட்டது. குழந்தைகள் என்றால் அது தேவனின் ஆசீர்வாதம். குழந்தைகள் இல்லாதது தேவன் ஆசிர்வாதத்தை நிறுத்தி வைத்துள்ளார் என்று கருதப்பட்டது. மேலும், இந்த கலாச்சாரத்தில், பெண்ணின் மீதுதான் தவறு இருப்பதாக கருதப்பட்டது – அவள் ஏதோ தவறு செய்ததால் தான் தேவனுடைய நியாயத்தீர்ப்பை அனுபவிக்கிறாள் என்று கருதினர்.
எலிசபெத் ஏமாற்றத்துடன் நெருங்கிப் பழகினாள். துக்கம் ஒரு நிலையான தோழனாக மாறும் வரை, பக்கவாட்டு பார்வைகளை மாதாமாதம், வருடா வருடம் சகித்துக்கொண்டாள். அவள் இறுதியாக, தேவையின் மூலம், வெறுமையின் இறையியலை வளர்க்க வேண்டும் என்ற உண்மையைப் புரிந்துகொண்டாள். எலிசபெத்து தேவனுக்கு கீழ்ப்படிந்து அவருடைய சட்டத்திற்கு விசுவாசமாக இருந்த போதிலும், அவள் தன் வாழ்க்கையின் ஒரு பகுதியில் தெய்வீக தலையீடு இல்லாவிடில், வெறுமையாக தான் இருக்கும் என்ற உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டியிருந்தது.
வெறுமையான கருப்பை.
வெறுமையான இல்லம்.
வெறுமையான வீடு.
வெறுமையான நம்பிக்கைகள்.
ஏமாற்றத்தின் மத்தியில் நாம் எப்படி ஊக்கத்தைக் கண்டடைவது? எலிசபெத்தைப் போலவே, தேவனை அவருடைய காலத்திலும் அவருடைய வழியிலும், நமது வாழ்வின் வெற்று இடங்களை நிரப்ப அனுமதிக்கும்போது மட்டுமே அது நடக்கும். நமது ஆசைகள் நிகழாத நிலையில், தேவனின் பிரசன்னத்தைத் தழுவிக்கொள்ள நாம் கற்றுக் கொள்ளும்போது மட்டுமே இது நிகழ்கிறது.
எங்கள் சொந்த தேவாலயத்தில், கடந்த கிறிஸ்துமஸில் அல்லேஸ் குடும்பம் இதை கடினமான வழியில் கற்றுக் கொள்ள வேண்டியிருந்தது. அட்வென்ட்டின் முதல் ஞாயிற்றுக்கிழமைக்கு மூன்று நாட்களுக்கு முன்பு, ஜூடி – அன்பான தாய், சகோதரி மற்றும் அத்தை – கர்த்தருக்குள் நித்திரையடைந்தனர். ஏறக்குறைய கால் நூற்றாண்டுக்கு முன்பு, கிறிஸ்துமஸுக்கு சில நாட்களுக்கு முன்பு தாத்தா க்ராஃபோர்டை இழந்தபோது எனது குடும்பத்தினரும் இந்தப் பாடத்தைக் கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது.
வலியும் இழப்பும் எல்லா வகையிலும் வெளிப்படும். கிறிஸ்துமஸ் மேஜையைச் சுற்றி காலி இருக்கையும், மரத்தடியில் எஞ்சியிருக்கும் பொட்டலங்களும் இருகின்ற காரணம் என்னவென்றால், அது யாருக்காக வந்துள்ளதோ அவர் இப்போது நம்மிடம் இல்லை, ஆகையால் இல்லம் வெறுமையாக உள்ளது. வேலையின்மையால் வருகிற அவமானம், வெறுமையான வங்கி கணக்கினால் வருகிற பயம், விரைவில் அல்லது பின்னர், நாம் அனைவரும் “வெறுமை” என்ற யதார்த்தத்தையும், பூர்த்தி செய்யப்படாத எதிர்பார்ப்புகள் மற்றும் நிறைவேறாத நம்பிக்கைகளிலிருந்து வரும் ஏமாற்றத்தையும் எதிர்கொள்வோம்.
வெறுமையை நாம் எப்படி எதிர்கொள்கிறோம் என்பது நமது நம்பிக்கையையும் நமது குணாதிசயத்தைப் பற்றியும் அதிகம் கூறுகிறது. எலிசபெத்தின் ஏமாற்றத்தின் மத்தியிலும் அவள் விசுவாசத்தைத் தொடர்ந்தாள் என்பதை இந்தப் பகுதி காட்டுகிறது. அவள் இன்னும் தன் கணவனை நேசித்தாள். அவள் இன்னும் தேவனுக்கு சேவை செய்தாள். அவளுடைய விசுவாசம் அவள் விரும்பியதைப் பெறுவதற்கோ அல்லது அவள் தகுதியானதாக நினைத்ததைப் பெறுவதற்கோ இருக்கவில்லை.
நீண்ட வருட ஏமாற்றம், ஏக்கம் மற்றும் தவிர்க்க முடியததை ஏற்றுகொள்ளுதல் ஆகியவை எலிசபெத்துக்கு எதையோ ஒன்றை கற்றுக்கொடுத்தன. அதை போராட்டம், வலி மற்றும் ஏமாற்றத்தின் மூலம் மட்டுமே நாமமும் கற்றுக்கொள்கிறோம் என்று நான் நினைகின்றேன். வெகுமதிகளை சம்பாதிக்கமுடியாது. எலிசபெத்தின் முதுமையில் தேவன் தனக்கு ஒரு குழந்தையைக் கொடுப்பார் என்று எதிர்பார்த்தால், அவளுடைய பதில் எப்படி இருந்திருக்கும் என்று எண்ணுகிறேன்? உடைந்த மற்றும் மென்மையான இதயத்திலிருந்துதான் மகிழ்ச்சி வருகிறது. எப்போது ஒருவர், தான் கிருபைக்கு தகுதியானவன் அல்லது கிருபையை தன்னால் சம்பாதிக்க முடியும் என்று நினைகின்றாரோ, அது வெறுப்பை மட்டுமே உருவாக்கும், மகிழ்ச்சியை அல்ல.
அந்த பாடத்தில் நான் முதல் மதிப்பெண்ணுக்கு தகுதியானவன். பேராசிரியருக்கு எவ்வளவு தைரியம இருந்தால், எனக்கு இரண்டாம் மதிப்பெண் கொடுத்திருப்பார்!
எனது வங்கிக் கணக்கில் அதிக பணம் வைத்திருக்க நான் தகுதியானவன். எல்லாவற்றிற்கும் மேலாக, எனக்கு அந்த விடுமுறை தேவை, நான் உண்மையில் ஒரு சிறந்த வாகனத்தைப் பயன்படுத்த முடியும். என்ன தைரியம் இருந்தால், என் முதலாளி எனக்கு அந்த பதவி உயர்வைத் தராமல் இருப்பார்!
நான் மகிழ்ச்சியாக இருக்க தகுதியானவன். உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தால், என் திருமணத்திற்கு வெளியே உறவைத் தொடர்வது பாவம் என்று என்னிடம் சொல்கிறாய்!
எலிசபெத்தைப் போலவே, உங்களுடைய ஏமாற்றத்தை முற்றிலும் புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கலாம். தேவன் உங்களை மறந்துவிட்டார், கைவிட்டுவிட்டார், உங்களுக்கு துரோகம் செய்தார் அல்லது கொடூரமாக நடந்துகொண்டார் என்று நீங்கள் உணரலாம். உங்கள் உணர்வுகள் நியாயமானதாக இருக்கலாம் என்பதே உண்மை. மக்கள் உங்களைக் கைவிடுவது, துரோகம் செய்வது, கொடூரமாக நடந்துகொள்வது போன்றவற்றை நீங்கள் அனுபவித்திருக்கலாம், ஆனால் தேவன் அப்படி அல்ல. எவ்வாறாயினும் இப்போது உள்ள கேள்வி, உங்களது அல்லது என்னுடைய உணர்வுகளின் நியாயத்தன்மையைப் பற்றியது அல்ல. நம் ஏமாற்றத்தின் மத்தியில் மகிழ்ச்சியைக் காண முடியுமா என்பதே கேள்வி.
எலிசபெத்தின் வாழ்க்கை நிகழ்வு நமக்கு என்ன நினைவுப்படுத்துகிறது என்றால், தேவன் மிக தொலைவில் இருப்பவராக காணப்பட்டாலும், அவர் உண்மையாகவே நம் அருகில்தான் உள்ளார். நீண்ட வருட ஊக்கமின்மைக்குப் பிறகு பங்கேற்க அழைக்கப்பட்டது தான் எலிசபெத்தின் கதை, தேவன் நெருங்கி வருகிறார் என்பதே கிறிஸ்துமஸ். எலிசபெத்தின் குழந்தையே மேசியாவை அறிவிக்கும். தேவனின் நேரம் எலிசபெத்தின் நேரத்துடன் பொருந்தவில்லை, ஆனால் அவருடைய நேரம் சரியான நேரமாக இருந்தது.
நாம் தேவனை நம்பும் போது, நாம் புரிந்து கொள்ளாவிட்டாலும், அவர் நம் உடைந்த இதயங்களின் பிளவுகளை நிரப்புவார். அவரால் நமது துக்கத்தை நடனமாக மாற்ற முடியும். கொடுப்பவரின் அன்பைக் காட்டவே பரிசுகள் வழங்கப்படுகின்றன என்பதை நாம் உணரும்போது, நம்மிடம் இல்லாத ஒன்றை நாம் சம்பாதித்ததைப் போல உணர்கிற உணர்வை நாம் நிறுத்திக்கொள்வோம்.
“அவருடைய கோபம் ஒரு நிமிஷம், அவருடைய தயவோ நீடிய வாழ்வு; சாயங்காலத்தில் அழுகை தங்கும், விடியற்காலத்திலே களிப்புண்டாகும்,” (சங்கீதம் 30:5) என்று சங்கீதகாரன் கூறுகிறார்.
திடன்கொள்ளுங்கள். துக்கம் ஒரு குறிப்பிட்ட காலம் வரைதான் இருக்கும். மகிழ்ச்சி விரைவில் வரும்.
♥ அவன் (யோசேப்பு) இப்படிச் சிந்தித்துக்கொண்டிருக்கையில், கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் அவனுக்குக் காணப்பட்டு: தாவீதின் குமாரனாகிய யோசேப்பே, உன் மனைவியாகிய மரியாளைச் சேர்த்துக்கொள்ள ஐயப்படாதே; அவளிடத்தில் உற்பத்தியாயிருக்கிறது பரிசுத்த ஆவியினால் உண்டானது. அவள் ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக; ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான் (மத்தேயு 1: 20-21). ♥
சில துரோகங்கள் ஒரு துரோக வாழ்க்கைத் துணையுடன் பொருந்துகின்றன. மாரியாள் மற்றும் யோசேப்பு இருவரும் தங்கள் உறவின் இந்த கட்டத்தில் அதிகாரப்பூர்வமாக திருமணம் செய்து கொள்ளவில்லை என்றாலும், அவர்கள் வாழ்ந்த காலத்தில் நிச்சயதார்த்த செயல்முறை நவீன காலத்தில் இருப்பதை விட மிகவும் வித்தியாசமானதாக் இருந்தது.
முதலாவதாக, நிச்சயதார்த்தம் என்பது ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான காதல் ஒப்பந்தம் அல்ல. பிரமாண்டமான காதல் சைகைகள் இல்லை, நிலவொளி உலாவும் இல்லை, “இந்த நபர் தான்” என்பதை அறிய மாதங்கள் அல்லது ஆண்டுகள் டேட்டிங் செய்வது இல்லை. திருமணம் என்பது இருவர் ஒருவருக்கு ஒருவர் தங்கள் அன்பை வெளிப்படுத்துவது மட்டுமல்ல; இது பெற்றோர்கள் அல்லது பிற பொறுப்புள்ள தரப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்டது (நம் நாட்டில் நடக்கின்ற திருமணங்கள் போன்றது). ஆரம்பத்தில் காதலுக்கும் நிச்சயதார்த்ததிற்கும் சம்பந்தமாக இல்லாமல், இரண்டு குடும்பங்களின் ஒப்பந்தப் பிணைப்பாக இருந்தது.
இரண்டாவதாக, இந்த கட்டத்தில், குடும்பங்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்பட்டன. மணமகளுக்கான விலை மாற்றப்பட்டு, சட்ட நடைமுறைகள் பின்பற்றப்பட்டன. இந்த ஜோடி திருமணமானவர்களாக கருதப்பட்டது. நிச்சயதார்த்தம் என்பது இப்போதுள்ள நிச்சயதார்த்தத்தை விட அதிகமாக இருந்தது, ஆனால் நமது கலாச்சார சூழலில் திருமணத்தை நாம் கருத்தில் கொள்ளக்கூடியதை விட குறைவாக இருந்தது. நிச்சயிக்கப்பட்டவர்கள், சட்டப்பூர்வமாக ஒருவருக்கொருவர் பிணைக்கப்பட்டிருந்தாலும், திருமணம் சடங்கு முடியும் வரை உடலுறவுகொள்ளவோ அல்லது கணவன்-மனைவியாகவோ வாழ மாட்டார்கள்.
நீங்கள் பிரச்சினையைப் பார்க்கிறீர்களா?
யோசேப்பும் மரியாளும் திருமணம் செய்து கொள்ள நிச்சயிக்கப்பட்டனர், எனவே கணவன் மற்றும் மனைவியாக ஒருவருக்கொருவர் சட்டப்பூர்வமாக பிணைக்கப்பட்டனர். திருமண விழா முடியும் வரை அவர்கள் கலாச்சார ரீதியாகவும் மத ரீதியாகவும் பாலியல் செயல்பாடுகளில் இருந்து தடை செய்யப்பட்டனர். மரியாள் கர்ப்பமானப்போது, மனிதத் அடிப்படையில், இரண்டு வழிகள் மட்டுமே காரணங்களாக இருந்திருக்கும். நிச்சயிக்கப்பட்ட தம்பதியினர் வேசிதனம் செய்திருக்கவேண்டும் அல்லது அந்த மனைவி விபச்சாரம் செய்திருக்கவேண்டும். இதை தவற வேறு எந்த இயற்கையான தேர்வு இல்லை. ஒவ்வொரு பார்வையாளரும் ஒரு விஷயத்தை கருதினர். அது என்னவென்றால் மாரியாள் ஒருவருடன் உடலுறவு கொண்டார் என்பதே. ஒரு வருட நிச்சயதார்த்தம் மற்றும் திருமண விழா முடிவதற்குள் யோசேப்புடன் உடலுறவு கொள்வது என்பது இரு குடும்பங்களுக்கும் பெரும் அவமானத்தை ஏற்படுத்தும். வேறொருவருடன் உடலுறவு கொள்வது என்பது அந்த பெண் மற்றும் அவளுடைய குழந்தை இருவருக்கும் அசிங்கமும் அவமானமும் நிறைந்த எதிர்காலத்திற்கு வழிவகுக்கும்.
மோசேயின் நியாயப்பிரமானம் விபச்சாரத்திற்கான தண்டனையைப் பற்றி மிகவும் தெளிவாக கூறுகிறது, அது என்னவென்றால், இரு தரப்பினரும் கொல்லப்பட வேண்டும் (லேவியராகமம் 20:10). இந்த வழக்கில், பாலியல் செயல்பாட்டின் ஆதாரமே கர்ப்பம். மரியாள், ஒரு பெண்ணாக, சட்டப்பூர்வ சாட்சியம் அளிக்க அனுமதிக்கப்படாததால், தரப்பினர் யார் என்ற கேள்வி யோசேப்பின் சாட்சியத்தில் நேரடியாக இறங்கியிருக்கும். ரோம் மட்டுமே மரண தண்டனையை வழங்க முடியும் என்பதால் மரண தண்டனை சாத்தியமில்லை. யோசேப்பு மற்றும் மரியாளின் திருமணம் நிறைவேறாததால் சில தெளிவின்மை இருந்தது. இருந்தாலும் வேதம் யோசேப்பை மரியாளின் “கணவன்” என்று தான் அழைக்கிறது (மத்தேயு 1:19).
யோசேப்பு பகிரங்கமாக நிச்சயதார்த்தத்தை முறித்துக் கொண்டு, சூழ்நிலையின் அவமானம் அனைத்தும் குற்றவாளியான மரியாள் மீது சுமத்துவதே பொதுவான நடைமுறையாக இருந்திருக்கும். சட்டத்தின் தற்போதைய பயன்பாடு இதைத்தான் அனுமதித்திருக்கும் மற்றும் யோசேப்பின் குடும்பம் உட்பட சமூகமும் இதைதான் செய்ய சொல்லியிருக்கும். யோசேப்பு நிச்சயதார்த்தத்தை முறித்துக் கொள்ளவில்லை என்றால், அவர்தான் தந்தை என்று உலகிற்குச் சொல்வதாக இருக்கும். நிச்சயதார்த்தத்தை முறித்து, தனது நற்பெயரையும் தனது குடும்பத்தின் மரியாதையையும் தக்க வைத்துக் கொள்ளவேண்டும், அல்லது தனது துரோக மனைவியுடன் பொது அவமானத்தில் நுழையவேண்டும் – தான் செய்யாத பாவத்தை ஒப்புக்கொள்வது போல் தெரிகிறது. இதுவே யோசேப்பு எதிர்கொள்ளும் தேர்ந்தெடுப்பு.
நியாயப்பிரமாணத்திற்கு உண்மையுள்ள ஒரு மனிதனாக, யோசேப்பு நிச்சயமாக மரியாளுடன் தங்குவதற்கு தனது நற்பெயரையும் குடும்பத்தின் மரியாதையையும் தியாகம் செய்ய தயங்குகிறார். ஆனால் வெளிப்படையாக அவளை கவனித்துக்கொண்ட ஒருவராக அவள்படும் அவமானத்தை குறைக்க விரும்புகிறார்.
மற்றவர்கள் இதை மறுக்கலாம், ஆனால் இதயத்தை உடைக்க இரண்டு முக்கிய கூறுகள் இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது; அவை அன்பும் துரோகமும். யோசேப்பின் முடிவில் உள்ள மனவேதனையை நீங்கள் உணரலாம். சட்டம் என்ன சொல்கிறது என்பது அவருக்குத் தெரியும். கலாச்சார ரீதியாக அவரிடம் என்ன எதிர்பார்க்கப்படுகிறது என்பதும் அவருக்குத் தெரியும். தனது குடும்பத்திற்கு எது சிறந்தது என்பதை அவர் அறிந்திருந்தார். அவர் ஆழ்ந்த காயத்தில் இருந்தாலும் கூட, மாரியாள் அடைந்த வலியைக் குறைக்க விரும்பினார்.
இதைத்தான் அன்பு செய்கிறது. வெளியில் பார்ப்பவர்களுக்கு இது புரியாது. குறிப்பாக நாம் விரும்பும் ஒருவருக்கு துரோகம் இழைக்கப்பட்டால், நமக்கு நீதியோ, தண்டனையோ, பழிவாங்கவோ வேண்டும் என்றிருக்கும். ஆனால் மனம் உடைந்தவர்கள் அன்புக்கும் துரோகத்துக்கும் இடையிலான பதற்றத்தில் வாழ்கிறார்கள். துஷ்பிரயோகம் செய்யப்பட்ட மனைவி, தன்னை துஷ்பிரயோகம் செய்பவருக்கு எதிராக குற்றச்சாட்டுகளை சுமத்த போராடுகிறார், ஏனெனில் அவள் இன்னும் அவனை நேசிக்கிறாள். மனைவியை ஏமாற்றியவர் துரோகம் செய்த துணையை மீண்டும் அழைத்துச் செல்கிறார், ஏனெனில் அவர் அவளை நேசிக்கிறார். துரோகம், உண்மையானதோ அல்லது உணரப்பட்டதோ, அன்பை ரத்து செய்யாது. மனம் உடைந்தவர்களுக்கு இது நன்றாகவே தெரியும்.
உங்களை யோசேப்பின் நிலமையில் வைத்துப்பாருங்கள். உங்களுக்கு நிச்சயிக்கப்பட்டவர் கர்ப்பமாகிவிட்டார். குழந்தை உங்களுடையது அல்ல என்பது உங்களுக்குத் தெரியும், அது வேறு யாருடையதும் அல்ல என்று அவள் கூறுகிறாள் – அது வேறு எந்த மனிதனும் இல்லை. ஒரு தேவதூதன் தன்னிடம் வந்து, கன்னியாகிய நீ மேசியாவைப் பிறப்பிப்பாய் என்று சொன்னதாக அவள் சொல்கிறாள். தேவனின் வேலைகாகவும் மற்றும் அவரின் சித்தத்தின் மூலம் அவள் கர்ப்பமாக இருப்பதாகக் கூறுகிறாள். இந்த மூர்க்கத்தனமான, வெளிப்படையாக மதவெறிக் கூற்றுக்குப் பிறகு, அவள் தன் உறவினரின் வீட்டிற்கு மறைந்து விடுகிறாள். இப்போது நீங்கள் உங்கள் சிதைந்த வாழ்க்கையின் எஞ்சியவற்றை நீங்கள் எடுக்க வேண்டும்.
யோசேப்பு என்ன நினைக்கிறார்? துரோகத்தை மறைக்கும் முயற்சியில் அவள் சொல்லும் வெளிப்படையான துரோகம் அல்லது மூர்க்கத்தனமான பொய்யைப் பற்றி அவர் கோபமாக இருக்கிறாரா? ஒருவர் இதை எப்படி இன்னொருவருக்கு செய்ய முடியும்? மீண்டும், அத்தகைய துரோகத்திற்குப் பிறகு, துரோகியைப் பாதுகாக்க ஒருவர் எப்படி விரும்புகிறார்? அன்பு. அலட்சியம் அல்லது வெறுப்பு, நியாயம் மற்றும் பழிவாங்கும் எண்ணங்களுக்கு வழிவகுக்கும். அவைகள் நம்மை ஒரு சண்டைக்கு வலுப்படுத்தி உற்சாகப்படுத்துகின்றன. ஆனாலும் நாம் நேசித்த ஒருவர் நமக்கு செய்த துரோகம் நம்மை உடைத்துவிடுகிறது.
அதனால்தான் மனம் உடைந்தவர்களுக்கு, இந்த அடுத்த கட்டம் மிகவும் சக்தி வாய்ந்ததாகவும், நம்பிக்கையும் ஊக்கமும் நிறைந்ததுமாயும் இருகிறது.
“அவன் இப்படிச் சிந்தித்துக்கொண்டிருக்கையில், கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் அவனுக்குக் காணப்பட்டு: தாவீதின் குமாரனாகிய யோசேப்பே, உன் மனைவியாகிய மரியாளைச் சேர்த்துக்கொள்ள ஐயப்படாதே; அவளிடத்தில் உற்பத்தியாயிருக்கிறது பரிசுத்த ஆவியினால் உண்டானது” (மத்தேயு 1:20).
முக்கியமாக, தேவதூதர் யோசேப்பை மரியாளின் அவமானத்தில் அடியெடுத்து வைக்க அழைக்கிறார். “உன் மனைவியாகிய மரியாளைச் சேர்த்துக்கொள்ள ஐயப்படாதே.” இதுவே திருமண விழாவின் இறுதிக் கட்டமாக இருந்தது. மணமகன் தனது நண்பர்களுடன் மணமகளின் வீட்டிற்குச் சென்று அவளை மனைவியாக்க தனது வீட்டிற்கு மீண்டும் அழைத்துச் சென்றார்.
யோசேப்பு தனது உடைந்த இதயத்திற்கு நம்பிக்கையையும் ஊக்கத்தையும் இரண்டு வழிகளில் கண்டார். தெய்வீக சந்திப்பின் மூலமாகவும், சரணடைதல் மூலமாகவும்.
சங்கீதம் 51-ல் இந்த இரண்டு சாலைகளைப் பற்றி சங்கீதக்காரன் பேசுகிறார். தாவீது தனது சொந்த இக்கட்டான சூழ்நிலையை—அவரே உருவாக்கிய நெருக்கடியை—சகித்துக் கொண்டார். தாவீது வேறொருவரின் மனைவியை சட்டவிரோதமாக அழைத்துச் சென்றதாலும், அப்பெண்ணின் கணவனின் மரணத்தில் பங்குகொண்டதாலும், தனது செயல்களின் விளைவுகளை எதிர்கொண்டார். மனந்திரும்பி, தன் பாவத்தை தேவனிடம் ஒப்புக்கொண்டதால், தாவீது மன்னிப்பைக் கண்டார். பின்னர் அவர் இஸ்ரவேலின் தொலைதூர மற்றும் பிரிந்திருந்த மக்களை அழைத்து, கர்த்தருக்கு இந்த வார்த்தைகளைப் பாடவும் அறிவிக்கவும் செய்தார் “தேவனுக்கேற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவிதான்; தேவனே, நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தை நீர் புறக்கணியீர்” (சங்கீதம் 51:17).
உங்கள் உடைந்த இதயத்திற்கு இறுதி வார்த்தையைப் பெற வேண்டியதில்லை. இந்த நேரத்தில் யோசேப்புக்கு ஒரு தேர்வு இருந்தது. அது என்னவென்றால், நீதியின் வழியைப் பின்பற்றுவதின் மூலம், அதாவது மரியாள் எந்தப் பாவத்திலும் குற்றவாளியாக இல்லாவிட்டாலும், அவரது உடைந்த இதயத்தையும் சேதமடைந்த சுயமதிப்பையும் அமைதிப்படுத்தலாம் அல்லது அன்பையும் சரணடைவதற்கான வழியையும் தேர்ந்தெடுக்கலாம். மரியாளை விவாகரத்து செய்வதற்கான அனைத்து சட்டப்பூர்வ உரிமையும் அவருக்கு இருந்தது, ஆனால் அன்பின் நிமித்தமும் தாழ்மையான கீழ்ப்படிதலாலும் தேவன் மேல் உள்ள நம்பிக்கையினாலும், மரியாளின் அவமானத்தில் தானும் பங்குப்பெற தேர்ந்தெடுத்தார்.
இதயம் உடைந்தோர் தங்கள் காயத்தை போக்க அல்ல, மாறாக அந்த உடைந்த இதயத்தை சரிசெய்யக்கூடிய ஒருவரிடம் ஒப்படைக்கவே இரட்சகர் அழைக்கிறார். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்: முறைகேடான திருமணத்தில் இருக்கக்கூடாது அல்லது துரோகத்தை பொறுத்துக்கொள்ளக்கூடாது. ஆனால் நமது துரோகங்களை அவருக்கு வழங்குவதற்கே அழைப்பு நமக்கு கொடுக்கப்படுகிறது. தேவனை ஆராதித்து, அவருக்கு நம் வாழ்வை அர்ப்பணித்து வாழ நாம் பயப்பட வேண்டியதில்லை.
அட்வென்ட் நாம் சட்டத்திற்குள்ளும் கலாச்சாரத்திற்குள்ளும் சிக்கவில்லை என்பதை நினைவூட்டி அன்பையும் மீட்பின் வழியையும் தொடர நம்மை அழைக்கிறது.
♥ உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக என்று சொல்லி, தேவனைத் துதித்தார்கள்” (லூக்கா 2:14). ♥
மேய்ப்பர்கள் தேவதூதர்களை சந்தித்த நிகழ்வை லூக்கா மட்டுமே கூறுகிறார். இயேசுவின் பிறப்பைச் சுற்றியுள்ள நிகழ்வுகளைப் பற்றிய மற்ற எந்த நற்செய்தியைக் காட்டிலும் லூக்காவின் பதிவு நமக்கு அதிக தகவலை அளிக்கிறது. லூக்கா தனது சுவிசேஷப் பதிவை எழுதுவதற்கான தனது வழிமுறை மற்றும் நோக்கத்தின் ஒரு வரைப்படத்தை கொடுத்து தொடங்குகிறார்.
மகா கனம்பொருந்திய தெயோப்பிலுவே, நாங்கள் முழுநிச்சயமாய் நம்புகிற சங்கதிகளை, ஆரம்பமுதல் கண்ணாரக்கண்டு வசனத்தைப் போதித்தவர்கள் எங்களுக்கு ஒப்புவித்தபடியே அவைகளைக்குறித்துச் சரித்திரம் எழுத அநேகம்பேர் ஏற்பட்டபடியினால், ஆதிமுதல் எல்லாவற்றையும் திட்டமாய் விசாரித்தறிந்த நானும் உமக்கு உபதேசிக்கப்பட்ட விசேஷங்களின் நிச்சயத்தை நீர் அறியவேண்டுமென்று, அவைகளை ஒழுங்காய் உமக்கு எழுதுவது எனக்கு நலமாய்த் தோன்றிற்று (லூக்கா 1: 1-4).
எல்லா பதிவுகளை பார்க்கும்போது, லூக்கா தான் முதல் திருச்சபை வரலாற்றாசிரியராக் இருக்கிறார். அவரது புத்தகமானது நன்கு விசாரணைசெய்ததும் மற்றும் நேரில் கண்ட சாட்சிகளின் கணக்குகளை அடிப்படையாகக் கொண்டது என்று அவர் தனது வாசகர்களிடம் கூறுகிறார். லூக்கா ஒரு அப்போஸ்தலன் அல்ல. இயேசு இந்த பூமியில் ஊழியம் செய்த போது அவரை லூக்கா சந்தித்ததில்லை. மத்தேயு மற்றும் யோவான் செய்வது போல் லூக்கா தனது சொந்தக் கண்களால் பார்த்ததை தெரிவிக்கவில்லை. மாற்கு, பேதுரு நேரில் கண்ட சாட்சியின் கணக்குகளை வெளியிட்டதை போல லூக்கா வெளியிடவில்லை. மாறாக, லூக்கா “ஆதிமுதல் எல்லாவற்றையும் திட்டமாய் விசாரித்தறிந்தார்” (லூக்கா 1:1). இது நிச்சயமாக நேரில் கண்ட சாட்சிகளை நேர்காணல் செய்வதைக் குறிக்கும், அவர்களில் ஒருவர் இயேசுவின் தாயார் மரியாளாக இருக்கலாம். லூக்கா மட்டுமே மரியாள் தேவதூதரை சந்தித்ததையும், அதற்கு பதிலளிக்கும் வகையில் மரியாளின் பாடல் என்று அழைக்கப்படும் அவளது பாடலையும் கூறுகிறார் (லூக்கா 1:46-55). லூக்கா மட்டும் தான் இயேசுவின் பன்னிரண்டாம் வயதில் அவர் ஆலயத்தில் நடந்தகொண்ட சம்பவங்களை பதிவு செய்கிறார். சகரியா, எலிசபெத், சிமியோன், அன்னாள் மற்றும் மேய்ப்பர்களின் நிகழ்வுகளையும் லூக்கா மட்டுமே நமக்குக் கூறுகிறார் – இவை அனைத்தும் இயேசுவின் தாயாகிய மரியாள் உட்பட தேர்ந்தெடுக்கப்பட்ட சிலருக்குத் தெரிந்திருக்கும்.
இதைப்பற்றி நாம் ஏன் பேசவேண்டும்? ஏனென்றால், மேய்ப்பர்களின் கதையை அவர்கள் சொன்ன கதையாக நாம் அடிக்கடி நினைக்கிறோம், ஆனால் அது மரியாள் சொன்னது போல் அவர்களின் கதையாக இருக்கலாம். லூக்கா, பல ஆண்டுகளுக்கு பிறகு, மேய்ப்பர்களைக் கண்டுபிடித்து, இயேசு பிறந்த இரவில் அவர்கள் பார்த்த அனைத்தையும் அவர்களிடமிருந்து கற்றுக்கொண்டிருப்பது சாத்தியமில்லை. மிகவும் நம்பத்தகுந்த விஷயம் என்னவென்றால், மரியாள் தான் சந்தித்த சந்திப்பை நினைவுகூர்ந்து அதை சொல்வதை தான் நாம் வாசிக்கிறோம். மரியாள் தன் குழந்தையின் குறிப்பிடத்தக்க பிறப்பின் பின்னணியின் செழுமையின் ஒரு பகுதியாக அந்த கணக்கை பொக்கிஷமாக வைத்திருப்பாள்.
பிரசவத்தின் சில மணி நேரங்களுக்கு பிறகு அந்நியர்களின் குழு தோன்றுவது அதிர்ச்சியாக இருந்திருக்க வேண்டும், ஆனால் இயேசு பிறந்த இரவை மரியாளும் யோசேப்பும் அப்படி தான் எதிர்கொண்டார்கள். புதிதாகப் பிறந்த ராஜாவைப் பார்க்க அழுக்கு, துர்நாற்றம் வீசும் வெளியாட்கள் குவிந்தபோது, புதிய பெற்றோர்களான அவர்கள் என்ன நினைத்தார்கள். அது எவ்வளவு விசித்திரமாகத் தோன்றியிருக்கும்!
அல்லது ஒருவேளை மரியாளுக்கும் யோசேப்புக்கும் இது விசித்திரமாகத் தோன்றாமலிருக்களாம். தேவன் மேசியாவுக்காக இரு சாத்தியமற்ற பெற்றோரைத் தேர்ந்தெடுத்தார். அவரது அநாதி தீர்மனத்தின்படி, உலகத்தின் இரட்சகரை அவதூறான சூழ்நிலையில் பிறக்க அவர் தேர்ந்தெடுத்தார். இது ஒரே மாதிரியாக பொருந்தவில்லை என்றாலும், அது கதைக்கு பொருந்துகிறது. சகரியாவும் எலிசபெத்தும் மிகவும் வயதானவர்கள். மரியாள் இளமையாக இருந்தாள். திருமணத்திற்கு முன் கர்ப்பம் மிகவும் அவதூறானது. எனவே, சமூகத்தின் விளிம்புகளில் வாழும் மற்றும் அன்றைய சமூகப் படிநிலையின் அடிமட்டத்தில் ஒட்டிக்கொண்டிருக்கும் நாற்றமடிக்கும் வெளியாட்களின் ஒரு குழு, மன்னரின் வருகையை தெரிவிப்பது என்பது சரியான அர்த்தமுள்ளதாக இருக்கிறது.
இந்த மனிதர்களுக்கு தான் தேவதூதர்கள் தேவனின் தயவை அறிவித்தனர். இந்த ஒதுக்கப்பட்ட சமூகத்தினரை தான் தேவதூதர்கள், தேவனின் சமாதானத்தையும் தயவையும் உலகிற்கு பரப்பும் பணியை ஒப்படைத்தார்கள். அந்த சமாதானத்தை அவர்கள் முதன் முதலில் மரியாள், யோசேப்பு மற்றும் குழந்தை இயேசு அடங்கிய குடும்பத்திற்கு கொண்டு சென்றனர் .
“மரியாளோ அந்தக் காரியங்களையெல்லாம் தன் இருதயத்திலே வைத்து, சிந்தனைபண்ணினாள்” (லூக்கா 2:19) என்று லூக்கா கூறுகிறார்.
திடப்படுங்கள். தேவன் தம்முடைய தயவை தகுதியுள்ளவர்களுக்கு வழங்குவதில்லை, ஆனால் அது தேவைப்படுபவர்களுக்கு வழங்குவார் என்பதை நாம் உணரும் போது சமாதானம் உண்டாகிறது. தேவனின் அமைதியை அனுபவிப்பது சாதனையோ, திறமையோ அல்லது சமூக நிலைப்பாட்டை பற்றியது இல்லை. மனிதர்களாகிய நாம் கண்டுக்கொள்ளாத நபர்களை தான் தேவன் தொடர்ந்து தேர்ந்தெடுக்கிறார்.
தாவீதைப் பற்றி சாமுவேலுக்கு தேவன் சொன்ன வார்த்தைகள் இன்னும் உண்மை என்பதை மேய்ப்பர்கள் நமக்கு நினைவூட்டுகிறார்கள் – மனிதர்கள் வெளிப்புற தோற்றத்தைப் பார்க்கிறார்கள், ஆனால் தேவன் இதயத்தைப் பார்க்கிறார் (1 சாமுவேல் 16:7). தேவன் ஒதுக்கப்பட்டவர்களை உள்ளே சேர்த்துக்கொள்வதில் சிறந்து விளங்குகிறார். அவர் தனது நோக்கங்களை நிறைவேற்ற சாந்தகுணமுள்ளவர்களையும் தாழ்மையானவர்களையும் தேர்ந்தெடுக்கிறார்.
அன்றிரவு, மேய்ப்பர்கள் எதையும் பெறாதவர்களாக இருந்திருக்கலாம், ஆனால் அவர்கள் தேவனுக்கு தேவையானவர்களாய் இருந்தனர். தேவனுக்கு உயர்ந்தவர்களோ அல்லது வல்லமையுள்ளவர்களோ தேவையில்லை, மேலும் அவர் தனது சமாதான செய்தியைப் பகிர்ந்து கொள்ள திறமையுள்ளவர்களோ, புத்திசாலிகளையோ மட்டும் விரும்புவதில்லை. அவருக்கு தம்முடைய சித்ததை செய்ய விருப்பமுள்ளவர்கள் தான் தேவை.
இந்த தாழ்த்தப்பட்ட மேய்ப்பர்கள் இயேசுவின் பிறந்த செய்தியை பெத்லகேமில் உள்ள அனைவருக்கும் பரப்பியது மட்டுமல்லாமல், அவர்கள் இயேசுவின் பெற்றோருக்கு அமைதியையும் தயவையும் நினைவூட்டினர்.
♥ அவரைக்குறித்துச் சொல்லப்பட்டவைகளுக்காக யோசேப்பும் அவருடைய தாயாரும் ஆச்சரியப்பட்டார்கள். பின்னும் சிமியோன் அவர்களை ஆசீர்வதித்து, அவருடைய தாயாகிய மரியாளை நோக்கி: இதோ, அநேகருடைய இருதய சிந்தனைகள் வெளிப்படத்தக்கதாக, இஸ்ரவேலில் அநேகர் விழுகிறதற்கும் எழுந்திருக்கிறதற்கும், விரோதமாகப் பேசப்படும் அடையாளமாவதற்கும், இவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். உன் ஆத்துமாவையும் ஒரு பட்டயம் உருவிப்போகும் என்றான் (லூக்கா 2:33-35). ♥
சகரியா மற்றும் எலிசபெத்தை போலவே, சிமியோனும் மேசியா வெளிப்படும் வரை காத்திருந்தார். இந்த நேரத்தில் சிமியோனுக்கும் இஸ்ரவேலில் இருந்த மற்றவர்களுக்கும் இடையே உள்ள வித்தியாசம் என்னவென்றால், மேசியாவின் வருகையைப் பற்றி தேவன் அவரிடம் பேசினார். செய்தி எளிமையாகவும் தெளிவாகவும் இருந்தது, அது என்னவென்றால், கர்த்தருடைய மேசியாவைக் காணும் வரை சிமியோன் மரிக்க மாட்டார் என்பதே (லூக்கா 2:26).
நான் ஒருபோதும் தேவதூதனை சந்தித்ததில்லை. நான் தெய்வீகக் குரலைக் கேட்டதில்லை. எரியும் புதரை நான் சந்தித்ததில்லை, கழுதை என்னிடம் பேசியதில்லை. ஆனால் தேவன் பேசுவதை அவருடைய வார்த்தையின் மூலமாக, அவருடைய மக்கள் மூலமாக, சூழ்நிலைகள் மூலமாக, இயற்கையின் மூலமாக, மற்றும் என்னால் முழுமையாக விளக்க முடியாத சந்திப்பின் மூலமாக நான் கேட்டிருக்கிறேன் என்று நான் நம்புகிறேன். நான் தெளிவாகச் சொல்வது என்னவென்றால்: சிமியோனிடம் தேவன் பேசியது போல என்னோடு பேசினார் என்று கூறவில்லை. பெரும்பாலான கிறிஸ்தவர்கள் ஒப்புக்கொள்வார்கள் என்று நான் நினைக்கும் ஒரு வாக்குமூலத்தை நான் செய்கிறேன். அது என்னவென்றால் தேவன் பேசுகின்ற தேவன். அவர் பேசும்போது நானும் நீங்களும் அவர் பேசுவதைச் சரியாகக் கேட்கிறோமா என்பதுதான் கேள்வி.
தேவன் இந்த உலகத்தைப் வார்த்தையால் உண்டாக்கினார் (ஆதியாகமம் 1:3-26). அவர் தீர்க்கதரிசிகள் மூலம் பேசினார், ஆனால் தேவன் தம்முடைய மக்களிடம் எதையும் சொல்லாமல் மிக நீண்ட காலமாகிவிட்டது (நானூறு ஆண்டுகள்). வேதாகமத்தின் சாட்சியின் மூலம் தேவன் தமது வாக்குறுதியைக் கடைப்பிடிப்பவர் என்பதை சிமியோன் அறிந்திருந்தார். எபிரெயர் 1:1-2 நமக்குச் கூறுவது என்னவென்றால்:
பூர்வகாலங்களில் பங்குபங்காகவும் வகைவகையாகவும், தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பிதாக்களுக்குத் திருவுளம்பற்றின தேவன், இந்தக் கடைசி நாட்களில் குமாரன் மூலமாய் நமக்குத் திருவுளம்பற்றினார்; இவரைச் சர்வத்துக்கும் சுதந்தரவாளியாக நியமித்தார், இவரைக்கொண்டு உலகங்களையும் உண்டாக்கினார்.
தேவன் பேசியிருக்கிறார், இன்றும் பேசுகிறார். எபிரேயர் புத்தகத்தின் ஆசிரியர் கூறுவது போல, இயேசுவின் மூலமாக, சிமியோனிடம் பேசினது போல இன்றும் நம்முடன் பேசுகிறார். சிமியோனுக்கு கர்த்தரிடமிருந்து ஒரு வார்த்தை இருந்தது, அது இயேசுவில் நிறைவேறியது. சிமியோன் வேதாகமத்தின் சாட்சியை மட்டும் வைத்திருக்கவில்லை, குழந்தையாயிருந்த கிறிஸ்துவையும் அவர் கையில் ஏந்தினார்.
காத்திருப்பதினால் நீங்கள் சோர்வடைகிறீர்களா? நானும் சோர்வடைகிறேன்; சிமியோனும் சோர்வடைந்திருப்பார். “தேவனே, எவ்வளவு காலம்?” என்று அவர் கேட்பதை கற்பனை செய்ய முடிகிறது. அவர் தனது மக்களின் அவலநிலையையும் பார்த்தும், தேவன் அதற்கு நன்மை செய்யத் தாமதமாகத் தோன்றியதால் அவர் விரக்தியும் சோர்வுமடைந்திருப்பார் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
மனிதர்களிடமிருந்து எந்த வாய்ப்புகளும் தம் மக்களுக்கு இல்லாத போது, தேவன் அவர்களுக்கு சிறந்த காரியத்தை செய்வார் என்பதை சிமியோன் நினைவூட்டுகிறார். சாராளுக்கு தொண்ணூறு வயது, ஆனாலும் தேவன் அவளுக்கு ஒரு மகனைக் கொடுத்தார் (ஆதியாகமம் 17:17; 21:1-2). இஸ்ரவேலர்கள் மலைகள், கடல் மற்றும் பார்வோனின் படைகளுக்கு இடையில் சிக்கிக் கொண்டனர், ஆனாலும் தேவன் மோசேயை அசையாமல் நிற்கும்படி செய்து கர்த்தருடைய இரட்சிப்பைக் காணும்படி அழைத்தார் (யாத்திராகமம் 14). அன்னாளுக்கு குழந்தை இல்லை, ஆனாலும் தேவன் அவளுக்கு சாமுவேலைக் கொடுத்தார் (1 சாமுவேல் 1). கிதியோனின் படை மிகவும் சிறியதாக இருந்தது, ஆனாலும் தேவன் அவருக்கு வெற்றியைக் கொடுத்தார் (நியாயாதிபதிகள் 7:7-25). தாவீது ஒரு சிறுவனாக இருந்தான், ஆனாலும் தேவன் பெலிஸ்தியனை அவன் கையில் ஒப்புக் கொடுத்தார். யோனா ஒரு பருவமழையின் நடுவில் கடலில் தூக்கி எறியப்பட்டார், ஆனாலும் தேவன் ஒரு பெரிய மீனை அனுப்பினார் (யோனா 1:17).
திடமனதாயிருங்கள்-சிமியோனின் இயேசுவின் சந்திப்பு, காத்திருத்தல் நீண்டதாகவும் கடினமானதாகவும் இருந்தாலும், தேவன் தம்முடைய வாக்குறுதிகளைக் கடைப்பிடிக்க உண்மையுள்ளவர் என்பதை நமக்கு நினைவூட்டுகிறது. நாம் காத்திருப்பது நமது ஜெபத்தின் ஒரு குறிப்பிட்ட பதிலுக்காக அல்ல என்பதை சிமியோன் நமக்கு நினைவூட்டுகிறார்; இயேசுவை சந்திப்பதற்காக நாம் காத்திருக்கிறோம்.
————————————————————
தேவன், சகரியாவையும் , எலிசபெத்தையும் , யோசேப்பையும், மேய்ப்பர்களையும், சிமியோனையும், அவர்களுடன் பலரையும் மாற்றினார். மேலும் அதை நிறைவேற்ற அவருக்கு தேவையானது அவர்களின் “ஆம்” என்ற பதில் மட்டுமே. அவர்கள் அவருக்கு ஆம் என்று சொன்னபோது, அவர்களால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத பரிசுகளை அவர்களுக்குக் கொடுத்தார். அவர் ஒவ்வொருவருக்கும்-அவர்களின் சொந்த வழியில்-புதிதாகப் பிறந்த ராஜாவை சந்திக்க வைத்தார்.
திடப்படுங்கள், உங்கள் “ஆம்” என்பதில் தேவன் உங்களை சந்திப்பார்.
With ❤️ from ODB