வாசிக்க: எபிரேயர் 10:32-39

விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான் (வ. 38)

இழப்பு, கடினமான சூழல், அலைச்சல் மற்றும் சுகவீனம் என்று ஒரு நீண்ட பருவத்தை தொடர்ந்து உள்ளமும் இதயமும் நொறுங்கியிருந்தது. இயேசு கிறிஸ்து தான் “மகா தேவனும் நமது இரட்சகரு(ம்)” (தீத்து 2:13) என்ற உறுதிப்பாடு என்னில் சிதயவில்லை என்றாலும், நமது அனுதின வாழ்வின் காரியங்களில் அவரை முழுவதும் நம்புவதை குறித்து எனக்கு அநேக கேள்விகள் எழும்பின.

இந்த நிச்சயமற்ற நிலைக்கு மத்தியில், சபை மூப்பர்கள் எனக்காக ஜெபித்தபோது குறிப்பிடத்தக்க பலத்தையும் ஊக்கத்தையும் பெற்றேன். “தைரியத்தை விட்டுவிடாதிரு(க்க)” (எபிரேயர் 10:35) அவர்கள் எனக்கு மென்மையாக நினைப்பூட்டினார்கள். ஆகவே பின்வாங்கிப்போகாமல், மாறாக “மிகுந்த பலனுக்கேதுவான” காரியங்களை நினைவுகூர்ந்து விசுவாசத்தில் நடக்க (வ.35,38) நான் ஊக்கம் பெற்றேன்.

உபத்திரவங்களின் நேரத்தில் எபிரேயர் 10 விசுவாசிகளுக்கு அத்தியாவசியமான நினைப்பூட்டுதலாகும். நாம் தொடர்ந்து விசுவாசத்தில் நிலைக்க நமக்கு உதவும். இயேசுவோடு ஆழமாக நடப்பதற்கு வழிகாட்டுவதோடு, எதிர்காலத்தில் நமக்காக காத்திருக்கும் பலனை குறித்து மீண்டும் மீண்டும் அறிவிக்கிறது. வேதாகம அறிஞர் மாத்தியூ ஹென்றி இந்த பகுதியை குறித்து தனது கருத்தை தெரிவிக்கையில், “பரிசுத்தமான இந்த நம்பிக்கையானது, தற்காலத்திற்கு பரிசுத்தமான சமாதானம் மற்றும் சந்தோஷம் ஆகிய பரிசுகளையும்… மேலும் மறுமையில் பெரும் வெகுமதியையும் கொண்டுவருகிறது” என்கிறார். அவருடனான இந்த பயணத்தின் மூலம், நம்முடைய மிகவும் கடினமான நாட்களில் நம்மைச் சுமந்து செல்வதற்கான ஆதாரத்தைக் காண்போம். சோதனைகளும், கேள்விகளும், நமது சொந்த பாவங்களும் கிறிஸ்து மீதான நமது விசுவாசத்தை விடும்படி நம்மை தூண்டினாலும், “இயேசுவே ஆண்டவர்” என்று நாம் செய்த அறிக்கையை உறுதியாய் பற்றிக்கொண்டு தைரியமாய் வாழ்வதற்கு இந்த வேதாகம பகுதி நமக்கு உத்வேகம் அளிக்கிறது. ஏனெனில் “நீங்கள் தேவனுடைய சித்தத்தின்படி செய்து, வாக்குத்தத்தம்பண்ணப்பட்டதைப் பெறும்படிக்குப் பொறுமை உங்களுக்கு வேண்டியதாயிருக்கிறது” (வ.36) என்பதற்கேற்ப நாம் இந்த உலகில் அவருடைய கிரியையில் பங்காளிகளாகிறோம்.

எபிரெயர் 10-ன் ஜீவன் தரும் வசனங்களை நாம் அதிகம் அறிய அறிய; இந்த உலகம் தரும் அழுத்தங்கள் கிறிஸ்துவின்மீது நமக்குள்ள நம்பிக்கையை பறிப்பதற்கு பதிலாக, தேவனிலும் அவரது பராமரிப்பிலும் இளைப்பாறுவோமாக.

– ராக்ஸான் ராபின்ஸ்

மேலும் அறிய

ஏசாயா 41:10 ஐப் படித்து, நீங்கள் ஏன் தேவனை உறுதியாக நம்பலாம் என்பதைப் பற்றி தியானியுங்கள்.

சிந்திக்க

நீங்கள் தேவனுடன் நடக்கிறீர்களா அல்லது அவரை விட்டு விலகிச் சென்றீர்களா என்பதை நீங்கள் எப்படி அடையாளம் காண முடியும்? “பொறுமை” (எபிரெயர் 10:36) என்றால் என்ன என்பதை விவரித்து; இதை உங்கள் இதயம், மனம் மற்றும் வாழ்க்கையில் வெளிப்படுத்தும் வழிகளை பட்டியலிடவும்.