வாசிக்க: எபிரேயர் 12:1-29
விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம் (வ. 1).
தனது 100 ஆண்டுகால வாழ்க்கையில், புகழ்பெற்ற புகைப்படக் கலைஞர் ஸ்டான்லி ட்ரூட்மேன் சில ஆழமான நிகழ்வுகளுக்கு சாட்சியாக இருந்தார். 1945 ஆம் ஆண்டில், ஒரு அமெரிக்க கடற்படை புகைப்படக் கலைஞராக, ட்ரூட்மேன் ஜெர்மனி மற்றும் ஜப்பானுக்கு அனுப்பப்பட்டார், அங்கு அவர் இரண்டாம் உலகப் போரின் நெஞ்சை பதைக்கும் சில படங்களைப் படம்பிடித்தார். போருக்குப் பிறகு, ஒரு பெரிய பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ விளையாட்டு புகைப்படக் கலைஞராக, இயேசுவின் இந்த விசுவாசி, அற்புதமான தடகள சாதனைகளை கண்ணார கண்டு ஆவணப்படுத்தினார்.
இவ்விருவகையான அனுபவங்களும் இந்த புதிரான உலகில், “நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓட” நமக்கிருக்கும் ஒரே வழி “விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை” நோக்குவதாகும் (எபிரேயர் 12:1-2) என்று ஸ்டான்லி ட்ரூட்மேன் அறிந்திட செய்தது.
புகைப்பட கருவி மூலம் உலகைப் பார்ப்பது; மனிதர்களின் உள்ளம், அவர்களின் லட்சியங்கள் மற்றும் நாம் வாழும் காலங்களைப் பற்றி அதிகம் வெளிப்படுத்தலாம். இருப்பினும், வேதத்தில் காணப்படும் இயேசு மற்றும் தேவனின் ஞானத்தின் மீது கவனம் செலுத்தும்போது, நமது நெகிழ்ந்த கைகளுக்கு “புதிய பிடிமானத்தையும்”, நமது தளர்ந்த முழங்கால்களுக்கு அவருக்குள் புதிய பெலனையும் (வ. 12) பெற்றிட நம்மை அழைக்கும் இரட்சகரை கண்டுகொள்வோம்.
வாழ்க்கையின் போர்க்களங்களிலும், நாம் உயர்ந்திருக்கும் மேடைகளிலும் இயேசு நம்மைச் சந்திக்கிறார்; தம்மை நோக்கிப் பார்க்க நம்மை அழைக்கிறார், அவரே “அவமானத்தை எண்ணாமல், சிலுவையைச் சகித்தவர்” மேலும் நம் சார்பாக பாவமுள்ளவர்களால் விரோதிக்கப்பட்டவர்; ஆகவே “இளைப்புள்ளவர்களாய் (நம்) ஆத்துமாக்களில் சோர்ந்துபோகாதபடிக்கு” (வ. 2-3) நம் வாழ்வுக்கான அவரது அழைப்பில் நாம் ஜீவிக்கிறோம்.
இயேசுவின் மேல் நம் கண்களை பதிக்க தேவன் கிருபையாக நம்மை அழைக்கிறார். மேலும், “முடமாயிருக்கிறது பிசகிப்போகாமல் சொஸ்தமாகும்படிக்கு, உங்கள் பாதங்களுக்கு வழிகளைச் செவ்வைப்படுத்துங்கள்” (வ. 13) என்று நம்மை ஊக்குவிக்கிறார். கிறிஸ்துவின் மூலமாக, “அசைவில்லாத ராஜ்யத்தைப் பெறுகிறவர்களாகிய நாம் பயத்தோடும் பக்தியோடும் தேவனுக்குப் பிரியமாய் ஆராதனை செய்யும்படி கிருபையைப் பற்றிக்கொள்ளக்கடவோம்” (வ. 28).
இன்று, நாம் இயேசுவின் மீது நம் கண்களை பதித்து, அவருடைய அன்பின் கண்ணாடி மூலம் வாழ்க்கையைப் பார்ப்போம்.
-ராக்சேன் ராபின்ஸ்
மேலும் வாசிக்க
எபிரெயர் 12:2 இன் வெளிச்சத்தில் 2 கொரிந்தியர் 5:7 ஐப் படித்து, இந்த உலகில் நீங்கள் என்ன பார்க்கிறீர்களோ அதைவிட இயேசுவின் மீது உங்கள் கண்களை வைப்பதன் அர்த்தம் என்ன என்பதைக் கவனியுங்கள்.
சிந்திக்க
உங்கள் வாழ்க்கையில் சவாலான மனிதர்களையும சூழ்நிலைகளையும் நீங்கள் எவ்வாறு இயேசுவைப் போல எதிர்கொள்ள முடியும்? கிறிஸ்துவை இன்னும் தெளிவாகக் காண உங்கள் வாழ்க்கையில் என்ன மாற்றம் தேவை?
,,,,,