வாசிக்க: எபேசியர் 4:17–5:2

நீங்கள் கோபங்கொண்டாலும் பாவஞ்செய்யாதிருங்கள் (4:26).

உங்களுக்கு எதனால் கோபம்? போக்குவரத்து நெரிசல்; வீங்கின கால்; அற்பமாக புறக்கணிக்கப்படுதல்; உங்களை சந்திப்பதாக சொன்னவர் வரவில்லையா? அல்லது இரவு முழுவதும் நீளக்கூடிய திடீர் வேலையா? கோபம் என்பது உணர்ச்சிபூர்வமான விரக்தி. நாம் தடைபடும்போதும், ​​யாராகிலும் அல்லது ஏதாகிலும் நம் வழியில் குறுக்கிடும்போதும் இது அடிக்கடி எழுகிறது.

கோபம் என்பது எல்லா மனிதர்களும் அனுபவித்திட தேவன் தந்த உணர்வு. எனது உரிமைகள் மீறப்படும்போது நான் அதை விரைவாக அனுபவிக்க கூடும். போக்குவரத்தில் ஒரு வாகனம் தவறாக என்னை இடைமறிக்கையில் அல்லது எனது உரையாடலை யாராவது பாதியில் துண்டிக்கும்போது கோபப்படுவேன்.

ஆனால், மற்றவர்களுக்காகக் கோபமடைந்த இயேசுவைப் போல் நான் ஆக விரும்புகிறேன். அவர் தனது பிதாவின் வீட்டில் மக்களை பொருளாதார ரீதியாக சுரண்ட ஒத்துழைத்த மதத் தலைவர்கள் மீதும், சூம்பிய கையுடன் இருக்கும் மனிதனை அவர் குணப்படுத்தக்கூடாது என்று அவர்கள் நினைக்கையில் கோபமடைந்தார் (மத்தேயு 21:12-13; மாற்கு 3:5). அவர் மக்களை நேசித்ததால் இயேசு கோபமடைந்தார்.

கோபப்படுவது தவறில்லை என்றாலும், அதை வைத்து நாம் என்ன செய்கிறோம் என்பது முக்கியம். “நீங்கள் கோபங்கொண்டாலும் பாவஞ்செய்யாதிருங்கள், சூரியன் அஸ்தமிக்கிறதற்கு முன்னாக உங்கள் எரிச்சல் தணியக்கடவது; பிசாசுக்கு இடங்கொடாமலும் இருங்கள்” (எபேசியர் 4:26-27) என்று தேவன் கட்டளையிடுகிறார். நாம் காலையில் சண்டையிட்டால், நாள் முழுவதும் கோபமாக இருக்கலாம் என்பது இதின் அர்த்தமில்லை. மற்ற எந்த உணர்ச்சியையும் போல கோபமும் நம்மைக் கட்டுப்படுத்தக் கூடாது என்பதே தேவனின் கருத்து (வ. 26).

கட்டுப்பாடற்ற கோபம் ஆரோக்கியமற்ற நம்பிக்கைகள் மற்றும் நடத்தைக்கு வழிவகுக்கும். நாம் வெறுமனே நமது உரிமைகளுக்காக மட்டும் போராடுகையில், ​​நாம் சரியாகப் போராடுகிறோம் என்று நம்மில் நாமே திருப்தி கொள்ளலாம். மாறாக, நமக்கு அநீதி இழைப்பவர்களுடன் நாம் ஒப்புரவாக வேண்டும் என்றும்; அது முடியாவிட்டால், நம் கோபத்தை அவரிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் தேவன் விரும்புகிறார். ஏனெனில் நமது பிதா நம்மை மீட்கப்படும் நாளுக்கென்று நம்மை முத்திரித்துள்ளார் (வ. 30). அவருடனான நமது உறவால், அவருடைய ஞானமான மற்றும் அன்பான கரங்களில் நம்முடைய கோபத்தை ஒப்புக்கொடுக்கலாம்.

-மைக் விட்மர்

மேலும் வாசிக்க

நீதிமொழிகள் 14:16-17, 22:24-25 மற்றும் 29:11, 22ஐப் படியுங்கள். நாம் கோபத்தை எவ்வாறு கையாள வேண்டும் என்று தேவன் விரும்புகிறார்?

சிந்திக்க

சமீபத்தில் உங்களை கோபப்படுத்தியது எது? உங்கள் கோபத்திலும் தேவனை எவ்வாறு கனப்படுத்த முடியும்?

,,,,,

banner image