
காலங்கள்
நான் சமீபத்தில் ஒரு பயனுள்ள வார்த்தையைக் கண்டறிந்தேன்: “குளிர்காலம்.” இயற்கை உலகின் பெரும்பகுதியை இந்த குளிர்காலம் அமைதிப்படுத்துவது போல, வாழ்க்கையின் “குளிர்” பருவங்களில் ஓய்வெடுக்கவும், குணமடையவும் வேண்டியதன் அவசியத்தை விவரிக்க, எழுத்தாளர் கேத்தரின் மே இந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறார். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட என் தந்தையை நான் இழந்த பிறகு இந்த ஒப்புமை எனக்கு உதவியாயிருந்தது. இது எனது ஆற்றலை பல மாதங்கள் புதுப்பித்தது. இந்த குளிரானது வலுக்கட்டாயமாய் என் வேகத்தைக் குறைத்ததால் கோபமடைந்த நான், எனது குளிர்காலத்தை எதிர்த்துப் போராடினேன். கோடைக்கால வாழ்க்கை திரும்ப வேண்டும் என்று ஜெபித்தேன். ஆனால் நான் கற்றுக்கொள்ளவேண்டியது நிறைய இருந்தது.
பிரசங்கி, “வானத்தின் கீழிருக்கிற ஒவ்வொரு காரியத்துக்கும் ஒவ்வொரு சமயமுண்டு” என்று சொல்லுகிறார் (3:1-4). நடவும் நட்டதை பிடுங்கவும், அழவும் நகைக்கவும், புலம்பவும் நடனம் பண்ணவும் ஒவ்வொரு காலமுண்டு. இந்த வேதவாக்கியத்தை நான் பலமுறை வாசித்திருக்கிறேன். ஆனால் குளிர்காலத்தில் தான் அதின் அர்த்தம் எனக்கு விளங்கியது. அவர்கள் மீது நமக்குக் கட்டுப்பாடு இல்லை என்றாலும், ஒவ்வொரு பருவமும் வரையறுக்கப்பட்டதாக இருக்கும், அதன் வேலை முடிந்ததும் கடந்து போகும். அது என்னவென்று நம்மால் எப்பொழுதும் புரிந்து கொள்ள முடியாவிட்டாலும், தேவன் அவைகள் மூலமாக நம்மில் கிரியை செய்கிறார் (வச. 11). என் துக்கநாட்கள் இன்னும் முடியவில்லை. அது முடியும்போது நான் நடனம்பண்ணும் காலம் வரும். தாவரங்களும் விலங்குகளும் குளிர்காலத்தை எதிர்த்துப் போராடாதது போல, நானும் அதை எதிர்த்துபோராட வேண்டியதில்லை. அது அதனுடைய வேலையை செய்வதற்கு அதை முழுமையாய் அனுமதிக்கவேண்டும்.
ஒரு சிநேகிதன், “கர்த்தாவே, உம்முடைய நற்கிரியைகளை இந்த காலத்தில் ஷெரிடனுக்குள் செய்வீர்களா?” என்று சொல்லி எனக்காக ஜெபித்தான். அது என்னுடைய ஜெபத்தைக் காட்டிலும் சிறந்த ஜெபம். தேவனுடைய கரத்தில் காலங்கள் ஒரு நோக்கத்தோடு அனுமதிக்கப்படுகிறது. அவை ஒவ்வொன்றிலும் அவருடைய புதுப்பிக்கும் கிரியைகளை காண நம்மை அர்ப்பணிப்போம்.
இயேசுவுக்காய் நிற்கும் துணிச்சல்
கி.பி. 155 இல், ஆதித்திருச்சபையின் தந்தையான பாலிகார்ப், கிறிஸ்துவை விசுவாசித்ததினால் உயிரோடு எரித்துக் கொல்லப்படுவதாக அச்சுறுத்தலுக்கு ஆளானார். பாலிகார்ப் அவர்களிடம், “எண்பத்தாறு ஆண்டுகளாக நான் அவருடைய ஊழியக்காரனாக இருந்தேன்; அவர் எனக்கு எந்தத் தீங்கும் செய்யவில்லை. என்னைக் காப்பாற்றிய என்னுடைய ராஜாவை இப்போது நான் எப்படி நிந்திக்க முடியும்?” என்று பதிலளித்தாராம். நம் ராஜாவாகிய இயேசுவின் மீது நாம் வைத்திருக்கும் நம்பிக்கையின் காரணமாக நாம் கடுமையான சோதனையை எதிர்கொள்ளும்போது, பாலிகார்ப்பின் இந்த பதில் நமக்கு உத்வேகமாக இருக்கும்.
இயேசுவின் மரணத்திற்கு ஒரு சில மணிநேரத்திற்கு முன்பாக, பேதுரு துணிச்சலாக, “உமக்காக என் ஜீவனையும் கொடுப்பேன்” (யோவான் 13:37) என்று சொல்லுகிறான். பேதுரு தன்னை அறிந்ததைக் காட்டிலும், பேதுருவை நன்கு அறிந்த இயேசு அவனைப் பார்த்து, “சேவல் கூவுகிறதற்கு முன்னே நீ என்னை மூன்றுதரம் மறுதலிப்பாயென்று, மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்” (வச. 38) என்றார். ஆனாலும் இயேசுவின் உயிர்த்தெழுதலுக்கு பின்பாக, இயேசுவை மறுதலித்த அதே பேதுரு அவரை மகிமைப்படுத்தும் விதமாக, தன்னுடைய ஜீவனையே கொடுக்கிறான் (21:16-19).
நீங்கள் பாலிகார்ப்பா? அல்லது பேதுருவா? சிலவேளைகளில் நம்மில் பெரும்பாலானோர் பேதுருவைப் போல துணிச்சல் இல்லாமல், கிறிஸ்துவின் விசுவாசியாய் செயல்படாமல் கோழையாக இருக்கிறோம். அதுபோன்ற சூழ்நிலைகளில் நாம் வகுப்பறையில் இருந்தாலும், அலுவலகத்தில் இருந்தாலும், எங்கிருந்தாலும் நாம் பயப்படத்தேவையில்லை. அதுபோன்ற தோல்விகள் நமக்கு நேரிடும்போது, நமக்காக மரித்து இன்னும் ஜீவித்துக்கொண்டிருக்கிற இயேசுவிடம் ஜெபத்தில் அணுகுவோம். அவர் நமக்கு உண்மையுள்ளவராய் வெளிப்பட்டு, கடினமான சூழ்நிலைகளின் மத்தியிலும் அவருக்காக துணிச்சலாய் நிற்க கிருபை செய்வாராக.

தேவனுக்கு அருகாமையில்
ஒரு அதிகாரி என்னை அழைத்த பின்பு, நான் மாவட்ட சிறைச்சாலைக்குள் நுழைந்தேன். பார்வையாளர் பதிவேட்டில் கையெழுத்திட்டேன். நெரிசலான லாபியில் அமர்ந்தேன். வெகு நேரம் காத்திருப்பதைக் குறித்து சிறுபிள்ளைகள் குறைகூறுவதைக் கண்டு பெரியவர்கள் நடுங்குவதையும் பெருமூச்சிவிடுவதையும் பார்த்து, நான் அமைதியாக ஜெபித்தேன். ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, ஒரு ஆயுதமேந்திய காவலர் என்னுடைய பெயர்கள் அடங்கிய பட்டியலை அழைத்தார். அவர் என் குழுவை ஒரு அறைக்குள் அழைத்துச் சென்று எங்களுக்கு ஒதுக்கப்பட்ட நாற்காலிகளில் அமரும்படிக்கு சைகை செய்தார். தடிமனான கண்ணாடி ஜன்னலின் மறுபக்கம் இருந்த நாற்காலியில் என் சித்தி மகன் அமர்ந்து டெலிபோன் ரிசீவரை எடுத்தபோது, என் இயலாமையின் ஆழம் என்னை ஆட்கொண்டது. ஆனால் நான் கண்ணீர் சிந்தி அழுதபோது, என்னுடைய வளர்ப்பு மகன் இன்னும் தேவனுக்கு அருகாமயில் தான் இருக்கிறான் என்பதை தேவன் எனக்கு உறுதிபடுத்தினார்.
சங்கீதம் 139இல், தாவீது தேவனைப் பார்த்து, “நீர் என்னை.. அறிந்திருக்கிறீர்... என் வழிகளெல்லாம் உமக்குத் தெரியும்” என்று சொல்லுகிறான். அனைத்தும் அறிந்த தேவனை அறிக்கையிட்ட தாவீது, தேவனுடைய பாதுகாப்பையும் பராமரிப்பையும் உணருகிறான் (வச. 5). தேவனுடைய ஆச்சரியமான அறிவைக் குறித்தும் அவருடைய தொடுதலைக் குறித்தும் ஆச்சரியப்பட்ட தாவீது இரண்டு கேள்விகளின் மூலம் தன்னுடைய ஆச்சரியத்தை வெளிப்படுத்துகிறான்: “உம்முடைய ஆவிக்கு மறைவாக எங்கே போவேன்? உம்முடைய சமூகத்தைவிட்டு எங்கே ஓடுவேன்?” (வச. 7).
நாமோ அல்லது நம்முடைய நேசத்திற்குரியவர்களோ கடினமான சூழ்நிலையில் சிக்கிக்கொள்ளும்போது, அது நம்மை குழப்பத்தில் ஆழ்த்தக்கூடும். அதுபோன்ற சூழ்நிலையில், தேவனுடைய கரம் நமக்கு ஆதரவாகவும் உறுதியாகவும் இருக்கும். அவர் நம்மை மீட்கமுடியாத தூரத்தில் நாம் இருப்பதாக ஒருவேளை நாம் எண்ணினாலும், அவருக்கு எட்டும் தூரத்தில் தான் நாம் இருக்கிறோம் என்பதை நாம் மறந்துபோகவேண்டாம்.
தேசத்தை ஒன்றிணைத்தல்
உலகின் மிக நீளமான சர்வதேச எல்லையை அமெரிக்காவும் கனடாவும் பகிர்ந்து கொள்ளுகிறது. இது நம்பமுடியாத 5,525 மைல் பரப்பளவுகொண்ட நிலப்பகுதியையும் நீரையும் கொண்டு அமைந்துள்ளது. இரண்டு பகுதிக்கும் இடையில் இருக்கும் இடைக்கோடு நேர்த்தியாய் தெரியவேண்டும் என்பதற்காய் தொழிலாளர்கள், அந்த இருபுறத்திலும் பத்து அடிக்குட்பட்ட மரங்களை தவறாமல் வெட்டினர். “தி ஸ்லாஷ்” என்று அழைக்கப்படும் இந்த நீளமான நிலப்பரப்பு கோட்;டில் எட்டாயிரத்திற்கும் மேற்பட்ட மைல்கற்கள் இடம்பெற்றுள்ளன. எனவே பார்வையாளர்கள் அந்த பிரிக்கும் கோடு எது என்பதை நேர்த்தியாய் அடையாளங்கண்டுகொள்ள முடிகிறது.
அந்த கோடு மறையாமலிருப்பதற்காக அகற்றப்பட்ட மரங்களானது, இரண்டு வெவ்வேறு அரசியலமைப்பையும் கலாச்சாரத்தையும் குறிப்பிடுகிறது. கிறிஸ்தவர்களாகிய நாமும், தேவன் அந்த சூழ்நிலையை மாற்றியமைத்து, உலகெங்கிலும் உள்ள அனைத்து தேசங்களையும் அவருடைய ஆட்சியின் கீழ் ஒன்றிணைக்கும் ஒரு காலத்தை எதிர்நோக்குகிறோம். ஏசாயா தீர்க்கதரிசி, தேவனுடைய ஆலயம் உறுதியாய் ஸ்தாபிக்கப்பட்டு உயர்த்தப்படும் ஒரு ஆசீர்வாதமான காலகட்டத்தை முன்னறிவிக்கிறார் (ஏசாயா 2:2). எல்லா நாடுகளிலிருந்தும் ஜனங்கள் தேவனின் வழிகளைக் கற்றுக்கொள்வதற்கும், அவருடைய பாதையில் மக்கள் நடப்பதற்கும் கூடுவார்கள் (வச. 3). அமைதியைக் காக்கத் தவறிய மனித முயற்சிகளை இனி நாம் நம்ப வேண்டாம். நமது மெய்யான ராஜாவாக செயல்பட்டு, தேவன் தேசங்களுக்கு இடையில் நியாயம் விசாரித்து, ஏற்பட்டிருக்கும் சர்ச்சைகளை நிவிர்த்திசெய்வார் (வச. 4).
பிரிவிணையில்லாத, சச்சரவுகள் இல்லாத உலகத்தை நம்மால் கற்பனை செய்யமுடிகிறதா? அதை கொண்டுவருவதாக தேவன் நமக்கு வாக்களிக்கிறார். நம்மை சுற்றியிருக்கும் பிரிவினை பேதங்களுக்கு மத்தியிலும், நாம் “கர்த்தரின் வெளிச்சத்திலே நடப்போம்” (வச. 5). அவரையே நம்புவோம். தேவன் அனைத்தையும் ஆளுகிறார் என்பதை நாம் அறிவோம். அவர் ஒரு நாள், தம்முடைய ஜனங்கள் அனைவரையும் ஒரே கொடியின் கீழ் ஒன்றிணைப்பார்.
தேவனுடைய கரத்தில்
பதினெட்டு வயதை எட்டியது என் மகளின் வாழ்க்கையில் ஒரு புதிய சகாப்தத்தை ஏற்படுத்தியது: சட்டப்பூர்வமாக அவள் வயது வந்தவள். அவள் இனி நடக்கவிருக்கம் தேர்தல்களில் வாக்களிக்கமுடியும். உயர்நிலைப் பள்ளியில் பட்டம் பெற்ற பிறகு விரைவில் அவளுடைய வாழ்க்கையைத் தொடங்க வேண்டியிருக்கும். இந்த உணர்வானது என்னை ஆக்கிரமிக்க, அவளோடு விலையேறப்பெற்றதாய் நான் கருதும் என்னுடைய மணித்துளிகளை செலவழிக்கவேண்டியிருந்தது. பொருளாதாரத்தை எவ்வாறு நிர்வகிப்பது, உலகத்தின் பிரச்சனைகளைக் குறித்து எப்படி விழிப்போடு இருக்கவேண்டும், மற்றும் நல்ல ஆரோக்கியமான தீர்மானங்களை எவ்வாறு எடுப்பது என்பது குறித்த ஆலோசனைகளை அவளுக்கு நான் கொடுக்கவேண்டியிருந்தது.
என்னுடைய மகள் அவளுடைய வாழ்க்கையை நடத்துவதற்கு தேவையான ஆலோசனைகளை அவளுக்கு கொடுப்பது ஒரு தாயாய் என்னுடைய கடமையாய் நான் கருதுகிறேன். மேலும் அவள் வாழ்க்கையை நேர்த்தியாய் வாழவேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஆகிலும் நான் செய்யும் என்னுடைய பொறுப்பு முக்கியமானதாய் எனக்கு தோன்றினாலும் அது அனைத்தும் என்னுடைய கட்டுப்பாட்டிற்குள் இல்லை. பவுல் அப்போஸ்தலர் தெசலோனிகேய திருச்சபையில் தன்னுடைய ஆவிக்குரிய பிள்ளைகளாய் கருதும் விசுவாசிகளுக்கு இயேசுவைக் குறித்தும் மற்றவர்களுக்கு உதவிசெய்வது எப்படி என்றும் கற்றுக்கொடுக்கிறார் (1 தெசலோனிக்கேயர் 5:14-15). ஆகிலும் அவர்களுடைய மெய்யான வளர்ச்சிக்காக தேவனையே சார்ந்திருக்கிறார். “உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்குவாராக” என்று அவர் நம்புகிறார் (வச. 23).
அவர்களுடைய “ஆவி ஆத்துமா சரீரம்” (வச. 23) ஆகியவற்றை தன்னால் தயார் செய்யமுடியாது என்று அறிந்து தேவனிடத்தில் ஒப்படைக்கிறார். தெசலோனிக்கேய திருச்சபைக்கு ஆலோசனை கொடுக்கும் வகையில் அவர் நிருபம் எழுதினாலும், அவர்களுடைய வாழ்க்கை மேம்படுவதற்கு பவுல் தேவனையே நம்புகிறார். நம்முடைய அன்பிற்குகந்தவர்களின் வாழ்க்கையை பராமரிக்கும் பொறுப்பானது தேவனுடைய கரத்தில் இருக்கிறது என்பதை இது நமக்கு கற்பிக்கிறது (1 கொரிந்தியர் 3:6).

துக்கமும் மகிழ்ச்சியும்
ஏஞ்சலாவின் குடும்பம் நான்கு வாரங்களில் மூன்று பேரை இழந்ததால் சோகத்தில் தள்ளாடியது. அவரது மருமகனின் திடீர் மரணத்திற்குப் பிறகு, ஏஞ்சலாவும் அவரது இரண்டு சகோதரிகளும் மூன்று நாளாக உணவு மேசையை சுற்றி அமர்ந்துகொண்டு துக்கம் அனுசரித்தனர். மேசனின் இழப்பைக் குறித்து அவர்கள் அழுது கொண்டிருந்தபோது, அவர்களது இளைய சகோதரிக்குள் வளர்ந்து வரும் புதிய கருவின் அசைவுகளைக் காண்பிக்கும் அல்ட்ராசவுண்ட் புகைப்படங்களைப் பார்த்து அவர்கள் மகிழ்ச்சியும் அடைந்தனர்.
அவ்வப்போது ஏஞ்சலா பழைய ஏற்பாட்டின் எஸ்றா புத்தகத்தைப் பார்த்து தேறுதல் அடைந்துகொள்வாள். பாபிலோனியர் எருசலேம் ஆலயத்தை தரைமட்டமாக்கி, அவர்களை சிறைபிடித்த பின்னர், தேவ ஜனம் எருசலேமுக்கு திரும்புவதைக் குறித்த தகவலை அது பதிவுசெய்துள்ளது (எஸ்றா 1). ஆலயம் மறுபடியும் எடுப்பித்து கட்டப்படுவதை எஸ்றா பார்த்த பிறகு, தேவனுக்கு துதி ஏறெடுக்கும் சத்தத்தை அவர் கேட்கிறார் (3:10-11). ஆனால் சிறையிருப்பிற்கு முன்னர் மக்களின் துக்கமான அழுகுரல்களையும் அவர் கேட்டிருக்கிறார் (வச. 12).
ஏஞ்சலாவுக்கு ஒரு வசனம் மிகவும் பிடித்திருந்தது: “ஜனங்கள் மகா கெம்பீரமாய் ஆர்ப்பரிக்கிறதினால் அவர்கள் சத்தம் வெகுதூரம் கேட்கப்பட்டது; ஆனாலும் சந்தோஷ ஆரவாரத்தின் சத்தம் இன்னதென்றும், ஜனங்களுடைய அழுகையின் சத்தம் இன்னதென்றும் பகுத்தறியக்கூடாதிருந்தது” (வச. 13). அவள் ஆழ்ந்த துக்கத்தில் இருந்தாலும், அங்கிருந்தும் மகிழ்ச்சியை அனுபவிக்கக்கூடும் என்பதை அறிந்துகொண்டாள்.
நாமும் நமக்கு நெருங்கியவர்களுடைய இழப்பைக் குறித்து துக்கங்கொண்டாடலாம். அப்படியென்றால், அவர் நம்மை அவருடைய புயங்களுக்கு நடுவில் அணைத்து சேர்த்துக்கொள்வார் என்று நம்பி நம்முடைய துக்கங்களை மகிழ்ச்சியோடு கூடிய தருணங்களோடு அவரிடத்தில் வெளிப்படுத்தக்கடவோம்.