
இயேசுவின் சிறந்த வெற்றி
இரண்டாம் உலகப் போரின்போது ஐரோப்பா முழுவதிலும் உள்ள சில இராணுவ முகாம்களில், வீடற்ற சிப்பாய்களுக்காக ஒரு அசாதாரண வகை உபகரணம் கொடுக்கப்பட்டது. அது தான், வித்தியாசமான பியானோ இசைக்கருவி. அவை சாதாரண உலோகத்தின் பத்து சதவிகிதம் மட்டுமே கொண்டிருக்கும் வகையில் சிறப்பாக தயாரிக்கப்பட்டன. மேலும் அவை சிறப்பு நீர்-எதிர்ப்பு பசை மற்றும் பூச்சி எதிர்ப்பு தன்மை கொண்டவாறு வடிமைக்கப்பட்டிருந்தன. அந்த பியானோக்கள் எளிமையானதாய் தெரிந்தாலும், இராணுவ முகாம்களில் இருந்த சிப்பாய்கள் தங்களுக்கு பிரியமான பாடல்களைப் பாடி மணிக்கணக்காய் பொழுதுபோக்கும் வாயப்பை ஏற்படுத்திக்கொடுத்தது.
கிறிஸ்தவர்கள் பொதுவாக துதி பாடல்களை பாடுவது என்பது, வாழ்க்கைப் போராட்டத்தில் அமைதியை காண்பதற்கான ஒரு சிறந்த வழி. யோசபாத் ராஜா, எதிரிகளின் படையெடுப்புப் படைகளை எதிர்கொண்டபோது இதை உண்மையாக அனுபவித்தார் (2 நாளாகமம் 20). பயந்துபோன ராஜா, பிரார்த்தனைக்கும் உபவாசத்துக்கும் எல்லா மக்களையும் அழைத்தான் (வச. 3-4). அதற்குப் பதிலளித்த தேவன், அந்த எதிரிகளை எதிர்கொள்ளுவதற்கு போர்வீரர்களை அழைத்து செல்லும்படிக்கு அறிவுறுத்துகிறார். ஆனால் “இந்த யுத்தத்தைப் பண்ணுகிறவர்கள் நீங்கள் அல்ல” (வச. 17) என்று உறுதியளிக்கிறார். யோசபாத் தேவனை நம்பினான். விசுவாசத்தில் செயல்பட்டான். வீரர்களுக்கு முன்னால் சென்று, தேவன் கொடுக்கப்போகும் வெற்றிக்காக அவரை புகழ்ந்து துதி பாடுவதற்கென்று பாடகர்களை நியமித்தான் (வச. 21). அவர்களின் இசை தொடங்கியதும், அவன் ஆச்சரியவிதமாய் எதிரிகளை தோற்கடித்து தேவ ஜனத்திற்கு மீட்பைக் கொண்டுவருகிறான் (வச. 22).
நாம் விரும்பும் வேளைகளிலோ அல்லது விதங்களிலோ வெற்றி நம்மை வந்தடைவதில்லை. ஆனால் நமக்கு ஏற்கனவே கிடைத்த பாவம் மற்றும் மரணத்தின் மீது இயேசுவின் இறுதி வெற்றியை நாம் எப்போதும் அறிவிக்க முடியும். ஒரு போராட்டத்தில் இடையில்கூட, தேவனை ஆராதிக்கும் மனநிலையை ஏற்படுத்தி நாம் இளைப்பாறக்கூடும்.

மேய்ப்பனின் சத்தத்தை அறிதல்
நான் அமெரிக்காவில் ஒரு பண்ணையில் வசிக்கும் சிறுவனாக இருந்தபோது, என்னுடைய நெருங்கிய நண்பருடன் பல மதிய வேளைகளில் சுற்றித் திரிந்து மகிழ்ந்தோம். நாங்கள் காடுகளுக்குள் நடந்துசெல்வோம். குதிரைகளில் சவாரி செய்வோம், பந்தய அரங்கிற்குச் செல்வோம், மாடுகளையும் குதிரைகளையும் பார்ப்பதற்காக தொழுவத்திற்குச் செல்வோம். ஆனால் என் அப்பாவின் விசில் சத்தம் கேட்ட மாத்திரத்தில் நான் என்ன வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தாலும், அப்படியே வீட்டிற்கு ஓடிவிடுவேன். அந்த சிக்னல் சத்தம் கேட்டால், என் தந்தை என்னை அழைக்கிறார் என்பதை நான் சரியாய் புரிந்துவைத்திருந்தேன். பல ஆண்டுகளுக்குப் பிறகும், அந்த விசில் சத்தம் எனக்கு இன்னும் நினைவிருக்கிறது.
இயேசு தம் சீஷர்களிடம் தாம் மேய்ப்பன் என்றும், அவரைப் பின்பற்றுபவர்கள் ஆடுகள் என்றும் கூறினார். “ஆடுகள் அவன் சத்தத்தை அறிந்திருக்கிறபடியினால் அவனுக்குப் பின்செல்லுகிறது” (யோவான் 10:3). பரிசேயர்களும், வேதபாரகர்களும் கிறிஸ்துவின் சீஷர்களின் அதிகாரத்தை கேள்வியெழுப்பி அவர்களை குழப்பத்திற்குள்ளாக்கியபோது, தன்னுடைய அன்பின் சத்தம் மற்றெல்லாருடைய சத்தத்தைக் காட்டிலும் தெளிவாய் கேட்கும் என்று அறிவிக்கிறார். ஆடுகள் அவருடைய (மேய்ப்பனுடைய) சத்தத்தை அறிந்திருக்கிறபடியினால் அவருக்குப் பின்செல்லுகிறது (வச. 4).
நாம் இயேசுவின் குரலைக் கேட்கும்போது கவனமாக இருப்போம். அதை நிராகரிக்கும் மதியீனத்தைத் தவிர்ப்போம். ஏனென்றால் அடிப்படை உண்மை என்னவெனில், மேய்ப்பன் தெளிவாகப் பேசுகிறார், அவனுடைய ஆடுகள் அவருடைய குரலைக் கேட்கின்றன. ஒருவேளை வேதாகமத்தின் ஒரு வசனத்தின் மூலமாகவோ, விசுவாசியான நண்பரின் வார்த்தைகள் மூலமாகவோ அல்லது ஆவியின் தூண்டுதலின் மூலமாகவோ இயேசு நம்மோடு பேசிக்கொண்டிருக்கிறார், நாம் கேட்கிறோம்.

தடைகள் உடைந்தது
“குஞ்சு பறவைகள் நாளை பறக்கும்!” எங்கள் முன் வராந்தாவில் தொங்கும் கூடையில் சிட்டுக்குருவிகள் குடும்பம் செய்து வரும் முன்னேற்றம் குறித்து என் மனைவி காரி மகிழ்ச்சியடைந்தாள். அவள் தினமும் அவற்றைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அம்மா குருவி கூட்டிற்கு உணவைக் கொண்டு வருவதைப் புகைப்படம் எடுத்தாள்.
காரி மறுநாள் அதிகாலையில் எழுந்து அவைகளைப் பார்க்க முயற்சித்தாள். அதற்கு அவள் கூட்டை மூடியிருந்த சில பசுமையை ஒதுக்கி நகர்த்தினாள். ஆனால் குஞ்சு பறவைகளைப் பார்ப்பதற்குப் பதிலாக, ஒரு பாம்பின் குறுகிய கண்கள் அவளை சந்தித்தன. ஒரு பாம்பு செங்குத்தான சுவற்றின் மீது ஏறி, கூட்டிற்குள் நுழைந்து, குஞ்சுகள் அனைத்தையும் விழுங்கியது.
காரி மனம் உடைந்து, கோபமடைந்தார். நான் அப்போது வெளியூருக்கு சென்றிருந்தபடியால், பாம்பை அகற்ற அவளுடைய தோழியின் உதவியை நாடினாள். ஆனால் அதற்குள் எல்லாம் முடிந்துவிட்டது.
தன் பாதையில் அழிவை விட்டுச் சென்ற மற்றொரு பாம்பைப் பற்றி வேதம் கூறுகிறது. ஏதேன் தோட்டத்தில் இருந்த பாம்பு ஏவாளை ஏமாற்றியது: “அப்பொழுது சர்ப்பம் ஸ்திரீயை நோக்கி: நீங்கள் சாகவே சாவதில்லை; நீங்கள் இதைப் புசிக்கும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும், நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப்போல் இருப்பீர்கள் என்றும் தேவன் அறிவார் என்றது” (ஆதியாகமம் 3:4-5).
ஏவாள் மற்றும் ஆதாமின் கீழ்ப்படியாமையின் விளைவாக “பிசாசென்றும் சாத்தானென்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய” வலுசர்ப்பத்தினால் (வெளிப்படுத்தல் 20:2) பாவமும் மரணமும் உலகில் நுழைந்தன. ஆனால் “பிசாசினுடைய கிரியைகளை அழிக்கும்படிக்கே தேவனுடைய குமாரன் வெளிப்பட்டார்” (1 யோவான் 3:8). அவர் மூலமாகவே தேவனுடனான நம்முடைய உறவு புதுப்பிக்கப்படுகிறது. அவர் ஒரு நாளில் சகலத்தையும் புதிதாக்குவார் (வெளிப்படுத்தல் 21:5).

விடாமுயற்சி பீட்சா
பன்னிரண்டாம் வயதில், இப்ராஹிம் மேற்கு ஆபிரிக்காவில் இருந்து இத்தாலிக்கு வந்தார். இத்தாலிய மொழி எதுவும் தெரியாமல், திணறலுடன் போராடி, புலம்பெயர்ந்தோருக்கு எதிரான போராட்டங்களை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டது. ஆனால் தன்னுடைய இருபதுகளில், இத்தாலியின் ட்ரெண்டோவில் பீட்சா கடையைத் திறந்த இந்த கடின உழைப்பாளி இளைஞனை அந்த போராட்டங்கள் எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. உலகின் முதல் ஐம்பது பிட்சா வியாபாரங்களில் ஒன்றாகப் பட்டியலிடப்படுவதற்கு அவரது சிறிய வணிகம் தகுதிபெற்றது.
இத்தாலிய தெருக்களில் பசியுள்ள குழந்தைகளுக்கு உணவளிக்க உதவுவது அவரது நம்பிக்கையாக இருந்தது. எனவே அவர் ஒரு நியோபோலிடன் பாரம்பரியத்தை விரிவுபடுத்த முயற்சித்தார். அதாவது, அங்ஙனம் பசியில் உள்ளவர்களுக்காக மக்கள் கூடுதல் காபியையோ அல்லது பீட்சாவையோ வாங்கிக்கொடுக்கலாம் என்னும் வழக்கம். புலம்பெயர்ந்த அகதிகள், அவர்களின் கடந்தகால பாரட்பட்சங்களில் சிக்கிகொண்டு சோர்ந்துபோய்விடாதபடிக்கு அவர்களை ஊக்கப்படுததுவதே அவரின் நோக்கமாயிருந்தது.
இத்தகைய விடாமுயற்சி, அனைவருக்கும் தொடர்ந்து நன்மை செய்யும்படிக்கு கலாத்தியர்களுக்கு பவுல் போதித்த போதனைகளை நினைவுபடுத்துகிறது. “நன்மைசெய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக; நாம் தளர்ந்து போகாதிருந்தால் ஏற்றகாலத்தில் அறுப்போம்” (கலாத்தியர் 6:9). மேலும் பவுல், “ஆகையால் நமக்குக் கிடைக்கும் சமயத்திற்குத்தக்கதாக, யாவருக்கும், விசேஷமாக விசுவாச குடும்பத்தார்களுக்கும், நன்மைசெய்யக்கடவோம்” (வச. 10) என்று வலியுறுத்துகிறார்.
அநீதிகள் மற்றும் மொழி தடைகளை எதிர்கொண்ட புலம்பெயர்ந்த இப்ராஹிம், நல்லது செய்வதற்கான வாய்ப்பை உருவாக்கினார். உணவு, சகிப்புத்தன்மை மற்றும் புரிதலுக்கு வழிவகுக்கும் பாலமாய் மாறியது. அத்தகைய விடாமுயற்சியால் ஈர்க்கப்பட்டு, நாமும் நல்லதைச் செய்வதற்கான வாய்ப்புகளைத் தேடலாம். நம்முடைய விடாமுயற்சியுடன் நாம் வேலைசெய்யும்போது, அதின் மூலம் தேவன் மகிமைப்படுகிறார்.
