வகை  |  odb

தேவனே என் துணையாளர்

என் நண்பர் ராலே தனது எண்பத்தைந்தாவது பிறந்தநாளை நோக்கி விரைகிறார்! அவரை நான் முதன்முதலில் சந்தித்ததிலிருந்து முப்பத்தைந்து வருடங்களுக்கும் மேலாக எனக்கு ஊக்கமளிக்கக்கூடிய ஆதாராமாக அவர் இருந்துள்ளார். பணி ஓய்வு பெற்ற பிறகு, அவர் ஓர் புத்தகம் எழுதும் பணியை நிறைவுசெய்துவிட்டு, வேறொரு வேலையை செய்வதாக என்னிடம் கூறினார். அவற்றைக் கேட்க எனக்கு ஆர்வமாயிருந்தது ஆனால் ஆச்சரியப்படவில்லை. 

தனது எண்பத்தைந்து வயதில், வேதாகமத்தில் இடம்பெற்றுள்ள காலேப் தன் ஓட்டத்தை நிறுத்த தயாராக இல்லை. தேவன் இஸ்ரவேலுக்கு வாக்களித்த கானான் தேசத்தை சுதந்தரிப்பதற்காக பல சகாப்தங்களாக வனாந்தர வாழ்க்கை மற்றும் யுத்தங்கள் ஆகியவற்றின் மத்தியிலும், தேவபக்தியும் விசுவாசமும் அவரை தாங்கியது. அவர், “மோசே என்னை அனுப்புகிற நாளில், எனக்கு இருந்த அந்தப் பெலன் இந்நாள்வரைக்கும் எனக்கு இருக்கிறது; யுத்தத்திற்குப் போக்கும் வரத்துமாயிருக்கிறதற்கு அப்போது எனக்கு இருந்த பெலன் இப்போதும் எனக்கு இருக்கிறது” (யோசுவா 14:11) என்று உரைக்கிறார். அவர் எந்த வழிகளில் ஜெயங்கொள்வார்? “கர்த்தர் என்னோடிருப்பாரானால், கர்த்தர் சொன்னபடி, அவர்களைத் துரத்திவிடுவேன்” (வச. 12) என்று காலேப் பதிலளிக்கிறார். 

வயது, வாழ்க்கையின் நிலை அல்லது சூழ்நிலை ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல், தேவனை முழுமனதோடு பற்றிகொள்ளும் யாவருக்கும் தேவன் உதவிசெய்ய வல்லவராயிருக்கிறார். நமக்கு உதவும் நம் இரட்சகராகிய இயேசுவில், தேவன் வெளிப்பட்டார். சுவிசேஷங்கள், கிறிஸ்துவிடத்திலிருந்து தேவன்மீது விசுவாசம் வைப்பதை நமக்கு போதிக்கிறது. உதவிக்காக தேவனை அண்டிய யாவருக்கும் தேவன் தன் அக்கறையையும் இரக்கத்தையும் வெளிப்படுத்துகிறார். எபிரெய நிருப ஆசிரியர் “கர்த்தர் எனக்குச் சகாயர், நான் பயப்படேன்” (எபிரெயர் 13:6) என்று அறிக்கையிடுகிறார். இளைஞரோ அல்லது வயதானவரோ, பலவீனமானவரோ அல்லது பலவானோ, கட்டுண்டவரோ அல்லது சுதந்திரவாளியோ, வேகமாக ஓடுகிறவரோ அல்லது முடவனோ, யாராக இருந்தாலும் இன்று அவருடைய உதவியைக் கேட்பதிலிருந்து நம்மைத் தடுப்பது எது?

 

கிறிஸ்துவில் ஐக்கிய பன்முகத்தன்மை

பேராசிரியர் டேனியல் போமன் ஜூனியர் தனது “சர்வீஸ் அன் தி ஸ்பெக்ட்ரம்” என்ற கட்டுரையில், ஓர் மனஇறுக்கம் கொண்ட நபராக தனது தேவாலயத்திற்கு எவ்வாறு சேவைசெய்வது என்பது குறித்த முடிவுகளை மேற்கொள்வதில் உள்ள சிரமத்தைப் பற்றி எழுதுகிறார். அவர் குறிப்பிடும்போது “இதுபோன்ற மனஇறுக்கம் கொண்ட மக்கள் ஒவ்வொரு முறையும் முன்னோக்கி செல்ல ஓர் புதிய பாதையை உருவாக்கவேண்டும். அவை ஓர் தனித்துவமான பாதையை அமைக்கிறது... மன, உணர்ச்சி மற்றும் உடல் ஆற்றல்... தனிமை/புத்துணர்வூட்டும் தருணங்கள்; உணர்வு உள்ளீடுகள் மற்றும் ஆறுதல் நிலை...அன்றைய நாள்பொழுது; நாம் நமது பெலனானவைகளுக்காக மதிக்கப்படுகிறோமா மற்றும் உணரப்பட்ட குறைபாடுகளுக்காக ஒதுக்கப்படாமல் நமது தேவைகளுக்கு இடமளிக்கப்படுகிறோமா இல்லையா என்று சிந்தித்தல்...; இன்னும் பற்பல காரியங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.” அதுபோன்ற தீர்மானங்கள் “மக்களின் நேரத்தையும் ஆற்றலையும் மாற்றியமைக்கும்போது, அவை மற்றவர்களையும் நம்மையும் மறுசீரமைக்க உதவும்” என்று போமன் எழுதுகிறார். 

1 கொரிந்தியர் 12இல் பவுல் விவரிக்கும் பரஸ்பர பார்வை ஓர் குணப்படுத்தும் தீர்வாக இருக்கும் என்று போமன் நம்புகிறார். அதில் 4-6 வசனங்களில், தேவன் தன் ஜனங்கள் ஒவ்வொருவருக்கும் வரங்களை “அவனவனுடைய பிரயோஜனத்திற்கென்று அளிக்கப்பட்டிருக்கிறது” (வச. 7) என்று குறிப்பிடுகிறார். ஒவ்வொருவரும் கிறிஸ்துவின் சரீரத்தில் இன்றியமையாத அவயங்கள் (வச. 22). திருச்சபை அனைவரையும் மாற்றமுடியாத ஒரே பாதையில் பயன்படுத்தாமல், அவரவருக்கு தேவன் கொடுத்த வரங்களின் அடிப்படையில் தேவனுடைய இராஜ்யத்திற்காய் அவற்றை நேர்த்தியாய் பிரயோகிக்க அனுமதிக்கலாம். 

இந்த வழியில், ஒவ்வொரு நபரும் செழிப்பையும் முழுமையையும் காண்பதோடு, கிறிஸ்துவின் சரீரத்தில் தங்கள் மதிப்புமிக்க இடத்தில் பாதுகாப்பாக இருக்க முடியும் (வச. 26).

 

இயேசு – மெய்யான சமாதானக் காரணர்

1862, டிசம்பர் 30ஆம் தேதி, அமெரிக்காவில் உள்நாட்டுப் போர் மூண்டது. எதிர் துருப்புக்கள் ஓர் ஆற்றின் எதிர்பக்கங்களில் எழுநூறு மீட்டர் இடைவெளியில் முகாமிட்டிருந்தனர். அவர்கள் தீ மூட்டி குளிர்காய்ந்துகொண்டிருந்தபோது, மற்றொரு பகுதியில் சிப்பாய்கள் தங்கள் வயலின்களையும் ஹார்மோனியங்களையும் எடுத்துக்கொண்டு “யாங்கி டூடுல்” என்ற இசையை வாசிக்கத் துவங்கினர். பதிலுக்கு, மறுபக்கத்தில் இருந்த வீரர்கள் “டிக்ஸி” என்று ஓர் பாடல் இசையை  வாசித்தனர். அப்படி மாறி மாறி வாசிக்கையில், இறுதியில் இருதரப்பினரும் இணைந்து “ஹோம், ஸ்வீட் ஹோம்” என்ற இசையை வாசித்தனர். ஒன்றுக்கொன்று எதிரிகளாய் இருந்த இரண்டு தேசத்து இராணுவ வீரர்களும் இரவில் இசையைப் பகிர்ந்து, கற்பனைசெய்ய முடியாத அளவு சமாதானத்தை பிரதிபலித்தனர். இருப்பினும் அந்த மெல்லிசைப் போர்நிறுத்தம் குறுகிய காலமே நீடித்தது. மறுநாள் காலை, அவர்கள் தங்கள் இசைக்கருவிகளை கீழே வைத்துவிட்டு, தங்கள் துப்பாக்கிகளை கையில் எடுத்தனர். அந்த போரில் 24,645 வீரர்கள் உயிரிழந்தனர்.

அமைதியை உருவாக்குவதற்கான நமது மனித முயற்சிகள் தவிர்க்க முடியாமல் பெலனற்றுபோகிறது. பகைமைகள் ஓர் இடத்தில் அணைந்து, வேறொரு இடத்தில் நெருப்பை பற்றவைக்கிறது. ஓர் குடும்பப் பிரச்சனை திடீரென்று முடிவுக்கு வரும், சிறிது நாட்கள் கழித்து மறுபடியும் சூடுபிடிக்கும். நமக்கு நம்பிக்கையான சமாதானக் காரணர் தேவன் மட்டுமே என்று வேதம் சொல்லுகிறது. “என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டு” (16:33) என்று இயேசு தெளிவுபடுத்துகிறார். இயேசுவில் நாம் இளைப்பாறக்கூடும். அவருடைய சமாதானப் பணியில் நாமும் இணைந்துகொள்ளும்போது, மெய்யான சமாதானத்தை அவர் நமக்கு அருளுவார். 

இவ்வுலகத்தின் உபத்திரவ பாதையிலிருந்து நாம் தப்பித்துக்கொள்ள முடியாது என்று இயேசு கூறுகிறார். “உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன்” (வச. 33) என்று இயேசு சொல்லுகிறார். நம்முடைய முயற்சிகள் பல சமயங்களில் பயனற்றவையாக இருந்தாலும், நம் அன்பான தேவன் (வச. 27) இந்த உடைந்த உலகில் நமக்கு சமாதானத்தை அருளுகிறார். 

 

கிறிஸ்துவின் சமூகம்

“வீட்டையும், என் மனைவி, மகன் மற்றும் மகளையும் மறந்துவிடுவதே வெற்றிக்கான ஒரே வழி என்று எனக்குத் தெரியும்; ஆனால் என்னால் அதை செய்ய முடியாது என்று கண்டுபிடித்தேன்; அவை என் இதயம் மற்றும் ஆன்மாவில் பிணைக்கப்பட்டுள்ளன” என்று ஜோர்டன் கூறினார். அவர் ஓர் தொலைதூரப் பகுதியில் தனியாக, ஓர் ரியாலிட்டி ஷோவில் பங்கேற்றுக்கொண்டிருந்தார். அங்கு போட்டியாளர்கள் முடிந்தவரை குறைந்தபட்ச பொருட்களுடன் சமவெளியில் உயிர்வாழுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அங்கிருக்கக்கூடிய பயங்கரமான கரடிகள், உறைபனி, காயங்கள் மற்றும் பசி ஆகியவைகளை அவரால் சமாளிக்க முடிந்திருந்தும், தன் குடும்பத்தைவிட்டு பிரிந்திருக்கும் தனிமையை அவரால் மேற்கொள்ள முடியவில்லை. அந்த ஆட்டத்தை கைவிட அவைகள் அவரை கட்டாயப்படுத்தியது. 

வனாந்தரத்தில் உயிர்வாழ தேவையான அனைத்து காரியங்களும் நம்மிடம் இருந்தாலும், நம்முடைய சமூகத்தினின்று நாம் பிரிந்திருப்பது நம்மை தோல்விக்கு நேராய் நடத்தக்கூடும். பிரசங்கி புத்தகத்தில் ஞானி, “ஒண்டியாயிருப்பதிலும் இருவர் கூடியிருப்பது நலம்... ஒருவன் விழுந்தால் அவன் உடனாளி அவனைத் தூக்கிவிடுவான்” (4:9-10) என்று குறிப்பிடுகிறார். கிறிஸ்துவை கனப்படுத்தும் சமூகம், குழப்பம் ஏற்படுத்தினாலும்கூட, அவைகள் நமது வளர்ச்சிக்கு இன்றியமையாதது. இந்த உலகத்தின் சோதனைகளை நாம் சொந்தமாகச் சமாளிக்க முயற்சித்தால் அவைகளை நாம் மேற்கொள்ள முடியாது. “ஒருவன் ஒண்டிக்காரனாயிருக்கிறான்” (வச. 8) அவனுடைய பிரயாசம் விருதாவாயிருக்கிறது. சமூகத்தில் இல்லாமல் தனித்திருந்தால் நாம் அபாயத்தை சந்திக்கக்கூடும் (வச. 11-12). “முப்புரிநூல் சீக்கிரமாய் அறாது” (வச. 12). அன்பான, கிறிஸ்துவை மையமாகக் கொண்ட சமூகத்தின் பரிசு, ஊக்கத்தை அளிப்பது மட்டுமல்லாமல், சவாலான சூழ்நிலைகளிலும் செழிக்க நமக்கு பலத்தையும் அளிக்கிறது. நமக்கு மற்றவர்களின் ஆதரவும் அவசியப்படுகிறது.