இளஞ்சிவப்பு கோட்
பிரெண்டா பெரிய விற்பனை மையத்தின் வெளியே செல்லும் பாதை வழியாய் வந்தபோது, இளஞ்சிவப்பு நிறத்தில் ஏதோ ஒன்று அவளுடைய பார்வையைக் கவர்ந்தது. அந்த பஞ்சுமிட்டாய் நிற கோர்ட் அவளை வெகுவாய் கவர்ந்தது. ஓ! ஹோலி இதை எப்படி விரும்புவாள்? ஒற்றைத் தாயாக அவளுடன் பணிபுரியும் அவளின் சிநேகிதிக்கு இப்படி ஒரு கோர்ட் அவசியப்படும் என்று யோசித்தாள். ஆனால் அவள் தனக்கென்று செலவுசெய்து இந்த கோர்ட்டை ஒருபோதும் வாங்கமாட்டாள் என்பதையும் ப்ரெண்டா நன்கு அறிந்திருந்தாள். கடும் யோசனைக்கு பின்னர், அந்த கோர்ட்டை விலைகொடுத்து வாங்கி, அதை ஹோலியின் வீட்டிற்கு அனுப்பிவைத்தாள். அத்துடன் “நீங்கள் மிகவும் நேசிக்கப்படுகிறீர்கள்” என்று பெயர் குறிப்பிடாத அட்டையை வைத்து அனுப்பி, அதைக் குறித்து மகிழ்ச்சியில் துள்ளி குதித்தாள்.
மகிழ்ச்சி என்பது தேவன் ஏவும் கொடுத்தலுக்கு கிடைக்கும் துணை சலுகையாகும். கொரிந்திய திருச்சபை விசுவாசிகளுக்கு, “அவனவன் விசனமாயுமல்ல, கட்டாயமாயுமல்ல, தன் மனதில் நியமித்தபடியே கொடுக்கக்கடவன்; உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்” (2 கொரிந்தியர் 9:7) என்று கொடுத்தலின் மேன்மையை வலியுறுத்துகிறார். அத்துடன், “பெருக விதைக்கிறவன் பெருக அறுப்பான்” (வச. 6) என்றும் குறிப்பிடுகிறார்.
சிலவேளைகளில் நாம் காணிக்கைப் பெட்டியில் காணிக்கை போடுகிறோம். சிலவேளைகளில் தகுதியான ஊழியங்களுக்கு அனுப்புகிறோம். சிலவேளைகளில் தேவையிலிருக்கும் நம்முடைய சிநேகிதர்களுக்கு கொடுத்து நம்முடைய அன்பை வெளிப்படுத்த ஏவப்படுகிறோம். பலசரக்கு பைகள், உணவுப்பொருட்கள்... சிலவேளைகளில் இளஞ்சிவப்பு கோர்ட் போன்ற காரியங்கள் அதற்கு வழிவகுக்கலாம்.
துரித உணவு உற்சாகம்
அன்று மதிய உணவிற்குத் துரித உணவை மரியா எடுத்துக்கொண்டு காலியான இருக்கையில் அமர்ந்தாள். பர்கரை சுவைத்தவாறே சுற்றிலும் பார்த்த அவளின் பார்வை பல இருக்கைகள் தள்ளி அமர்ந்திருந்த ஒரு வாலிபன் மீது பதிந்தது. அழுக்கான ஆடைகள், களைந்த தலைமுடி, காலியான காகித கோப்பையைக் கசக்கிக்கொண்டிருந்த கைகள். அவன் பசியோடிருக்கிறான். இவளால் எப்படி உதவக்கூடும்? பணம் கொடுப்பது நல்ல யோசனை அல்ல. உணவு வாங்கிக்கொடுத்தால், ஒருவேளை சங்கடப்படுவானோ?
அப்பொழுதுதான் ரூத்தின் சரித்திரத்தில், ஐசுவரியவானாகிய போவாஸ் வறுமையால் வாடும் அந்த புலம்பெயர்ந்த விதவை தன் வயலின் அறுவடையில் மிஞ்சியதைச் சேகரிக்க அவளை அன்பாய் ஏற்றுக்கொண்டதை மரியா நினைத்துப்பார்த்தாள். மேலும், "போவாஸ் தன் வேலைக்காரரை நோக்கி: அவள் அரிக்கட்டுகள் நடுவே பொறுக்கிக்கொள்ளட்டும்; அவளை ஈனம் பண்ணவேண்டாம். அவள் பொறுக்கிக்கொள்ளும்படிக்கு அவளுக்காக அரிகளிலே சிலதைச் சிந்தவிடுங்கள், அவளை அதட்டாதிருங்கள் என்று கட்டளையிட்டான் "(ரூத் 2:15–16). பெண்கள் தங்கள் ஜீவனத்திற்காக ஆண்களையே அதிகம் சார்ந்திருக்கும் அந்த கலாச்சாரத்தில், போவாஸ் தேவனின் அன்பான பராமரிப்பை வெளிப்படுத்தினார். இறுதியில் போவாஸ் ரூத்தை விவாகஞ்செய்து, அவளுடைய விதவை நிலையிலிருந்து அவளை மீட்டான் (4:9–10).
மரியா எழுந்து போகையில், அந்த வாலிபனின் கண்ணைப் பார்த்துக்கொண்டே, அருகிலிருந்த இருக்கையில் புதிய உணவுப்பொட்டலம் ஒன்றை வைத்துச் சென்றாள். அவன் பசியாயிருந்தால், இந்தத் துரித உணவை சேகரித்துக்கொள்ளலாம். இவ்வாறாக வேதாகமத்தில் உள்ள சம்பவங்கள் நூதனமான முறையில் நாம் செயல்படுவதற்கு நம்மை உற்சாகப்படுத்துகின்றன.
மகிழ்ச்சியாய் நன்றி செலுத்துதல்
உளவியல் நிபுணர் ராபர்ட் எம்மன்ஸ், வார நிகழ்வுகளை குறிப்பெடுக்கும்படி மூன்று குழுவினர்களை பிரித்தார். அதில் ஒரு குழுவினர், அவர்கள் நன்றி செலுத்தக்கூடிய ஐந்து காரியங்களை எழுதினர். ஒரு குழுவினர் அவர்கள் சந்தித்த ஐந்து பிரச்சனைகளை எழுதினர். ஒரு குழுவினர், தங்களுடைய வாழ்க்கையில் எளிமையான விதத்தில் பாதிப்பை ஏற்படுத்திய ஐந்து காரியங்களை எழுதியிருந்தனர். அந்த ஆய்வின் முடிவில், தங்கள் நன்றியுணர்வை வெளிப்படுத்திய குழுவைச் சேர்ந்தவர்களே தங்கள் எதிர்காலத்தைக் குறித்த நேர்மறையான எண்ணம் கொண்டவர்கள் என்றும், குறைவான சரீர வியாதிகள் உடையவர்கள் என்றும் கண்டறியப்பட்டனர்.
நன்றியுள்ளவர்களாயிருத்தல் என்பது வாழ்க்கையை நாம் பார்க்கும் விதத்தை மாற்றுகிறது. நன்றி சொல்லுதல் நம்மை மகிழ்ச்சியடையவும் செய்கிறது. தேவனுக்கு நன்றியுள்ளவர்களாயிருப்பதால் ஏற்படும் நன்மைகளை வேதம் நமக்கு அறிவிப்பதின் மூலம் தேவனுடைய சுபாவத்தை வெளிப்படுத்துகிறது. சங்கீதங்கள், “கர்த்தர் நல்லவர், அவருடைய கிருபை என்றென்றைக்கும்... உள்ளது (சங்கீதம் 100:5) என்றும் அவருடைய மாறாத கிருபைக்காகவும் ஆச்சரியமான கிரியைகளுக்காகவும் நன்றி செலுத்தும்படி தேவ ஜனத்திற்கு மீண்டும் மீண்டும் அழைப்பு விடுக்கிறது (107:8,15,21,31).
பிலிப்பியருக்கு எழுதிய நிருபத்தை பவுல் நிறைவுசெய்யும்போது, அவருக்கு ஊழியத்தில் உறுதுணையாயிருந்தவர்களுக்கு தன் நன்றியுணர்வை வெளிப்படுத்தும் விதத்திலேயே அதை எழுதுகிறார். அவர் “எல்லாப் புத்திக்கும் மேலான” தேவசமாதானத்தோடு (4:7) தன் நன்றியை வெளிப்படுத்துகிறார். தேவனையும் அவர் செய்த நன்மைகளையும் நினைவுகூரும்போது, கவலைகள் இல்லாமல் எல்லா சூழ்நிலைகளிலும் நம் நன்றியை வெளிப்படுத்தமுடியும். நன்றி செலுத்துதல் என்பது நமக்கு தேவசமாதானத்தை அருளி, நம்முடைய இருதயத்தையும் சிந்தையையும் பாதுகாத்து, வாழ்க்கையின் பார்வையையே மாற்றிவிடும். நன்றியுள்ள இருதயம் மகிழ்ச்சியின் ஆவிக்கு ஊட்டமளிக்கும்.
சுவரில் ஒரு ஓட்டை
எனது பூக்களை ஏதோவொன்று அரித்துக்கொண்டிருந்தது. நேற்றுதான் கம்பீரமாகத் தலைதூக்கிப் பூத்தன, இன்றோ தலையில்லாமல் தண்டுப்பகுதி மட்டுமே நின்றது. எனது தோட்டத்தை முழுதும் அலசி ஆராய்ந்த போதுதான், வேலியில் உள்ள ஒரு ஓட்டையைக் கண்டுபிடித்தேன். அதற்குக் காரணமான முயல்கள், பார்க்க அழகானவைதான், ஆனால் தோட்டத்தின் மொத்த மலர்களையும் நிமிடத்தில் அழிக்கும் ஆபத்துவாய்ந்தவை.
எனது வாழ்வில் 'தேவனுடைய சுபாவங்கள்' எனும் மொட்டுகளைக் கத்தரிக்கும் ஊடுருவல்கள் உண்டோவென்று சிந்திக்கிறேன். "தன் ஆவியை அடக்காத மனுஷன் மதிலிடிந்த பாழான பட்டணம் போலிருக்கிறான்." என்று நீதிமொழிகள் 25:28 கூறுகிறது. பண்டைய காலத்தில், பட்டணங்களின் மதில்களே மக்களை எதிரிகளின் தாக்குதலிலிருந்து காத்தன. மதிலில் உண்டாகும் சிறிய பிளவுகூட மொத்த பட்டணத்தின் அழிவிற்கும் காரணமாகிவிடும்.
வேதத்திலுள்ள நீதிமொழிகளில் அநேக நீதிமொழிகள் இச்சயைடக்கத்தைப் பற்றிக் கூறுகிறது. "தேனைக் கண்டுபிடித்தாயானால் மட்டாய்ச் சாப்பிடு" (நீதிமொழிகள் 25:16) என்று ஞானி எழுதினார். பொறுமையின்மை, கசப்பு, பேராசை ஆகிய இக்காரியங்கள், ஒரு பூச்சியைப்போல தேவனுக்குள் வெற்றியுள்ள ஜீவியத்தை நாம் செய்ய முடியாமல் தடுக்கிறது (கலாத்தியர் 5:22–23 பார்க்கவும்). நமது வாழ்வெனும் மதிலில் உள்ள ஓட்டைகளைக் கவனித்து, அவைகளைச் சீரமைக்கும் ஆரோக்கியமான மனநிலையே இச்சையடக்கமாகும்.
எனது வாழ்வைப் பரிசோதிக்கையில், என்னைப் பாதிக்கக்கூடிய ஓட்டைகளை ஆங்காங்கே காண்கிறேன். ஒரே சோதனையில் மீண்டும் மீண்டுமாய் விழுகிறேன், பொறுமை இழக்கிறேன். இச்சையடக்கமெனும் தேவனுக்குள்ளான ஆரோக்கியமான மனநிலை, என்னை இதுபோன்ற தடைகளிலிருந்து காக்க எவ்வளவு அவசியம்!
“மான்ஸ்ட்ரோ” என்றப் பொன் மீன்
லாசி ஸ்காட், தனது ஊரில் இருந்த செல்லப்பிராணிகள் கடையிலிருந்தபோது, தொட்டியின் அடியில் ஒரு மீன் சோர்ந்திருப்பதைக் கண்டாள். அதின் செதில்கள் கருப்பாக மாறி, அதின் உடம்பில் காயங்கள் ஏற்பட்டிருந்தது. பத்து வயதான அந்த மீனை விலைக்கு வாங்கிய லாசி, அதற்கு “மான்ஸ்ட்ரோ” என்று பெயரிட்டு, அதை பிரத்யேகமான மீன் தொட்டியில் வைத்து தினமும் தண்ணீர் மாற்றி அதைப் பராமரித்தாள்.
மான்ஸ்ட்ரோவின் வளர்ச்சியில் மாற்றம் ஏற்பட்டு, அது மெல்லமாக நீந்த துவங்கி, உருவத்திலும் வளர்ச்சியடைந்தது. அதின் கருப்பு செதில்கள் தங்க நிறத்திற்கு மாறியது. லாசியின் அர்ப்பணிப்புமிக்க பராமரிப்பினால், மான்ஸ்ட்ரோ புதுப்பிக்கப்பட்டது.
லூக்கா 10ஆம் அதிகாரத்தில், கள்ளர்களால் காயப்பட்டு குற்றுயிராய் கிடந்த ஒரு மனிதனைக் குறித்த கதையை இயேசு சொல்லுகிறார். காயப்பட்ட அந்த மனிதனின் வேதனையைப் பொருட்படுத்தாமல், ஆசாரியனும் லேவியனும் அவனை கடந்து சென்றனர். ஆனால் ஒதுக்கப்பட்ட மக்கள் கூட்டத்தின் அங்கத்தினரான ஒரு சமாரியன், அவனைப் பராமரித்து, அவனுடைய தேவைக்கு பண உதவியும் செய்தான் (லூக்கா 10:33-35). அந்தக் கதையில் சமாரியனே உண்மையான நண்பன் என்று நமக்கு சொன்ன இயேசு, அதையே செய்யும்படி மக்களை வலியுறுத்தினார்.
மரிக்கும் தருவாயில் இருந்த அந்த மீனுக்கு லாசி செய்ததுபோல, தேவையிலுள்ளவர்களுக்கு நாமும் நன்மை செய்வோம். ஆதரவற்ற, வேலையில்லாத, செயலிழந்த, தனிமையிலிருக்கும் நண்பர்கள் அநேகர் நம்முடைய பாதையில் இருக்கிறார்கள். அவர்களின் சோகத்தை கண்டறிந்து, அவர்களை அக்கறையோடு பராமரிப்போம். அன்பான வாழ்த்துக்கள், பகிர்ந்துகொள்ளப்பட்ட உணவு, சிறு பண உதவிகள் ஆகியவற்றின் மூலம் எல்லாவற்றையும் மாற்றக்கூடிய தேவ அன்பை மற்றவர்களிடம் பகிர்ந்தளிக்கலாம்.
நம்மை விரும்பும் உணவுகள்
நான் ஒரு பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளினி, “பிடித்த விஷயங்கள்" என்ற கருப்பொருளை அடிப்படையாய் வைத்து, அலங்காரம், பரிசுகள் மற்றும் உணவுகள் ஆகியவற்றை ஏற்பாடு செய்திருந்தார்கள். பிறந்தநாள் கொண்டாடும் பெண்ணிற்கு பன்னீர், பழங்கள், மற்றும் சிவப்பு வெல்வெட் கேக் ஆகியவைகள் பிடிக்கும் என்பதால், தொகுப்பாளினி பன்னீரை வறுத்து, பழங்களை வெட்டி, பிடித்த கேக்கை ஆர்டர் செய்தார். நமக்கு பிடித்த உணவுகள் நம்மைப் பார்த்து “ஐ லவ் யூ” என்று கூறுகின்றன.
விருந்துகள் மற்றும் பண்டிகைகள் பற்றிய பல குறிப்புகள் வேதாகமத்தில் உள்ளன. சரீரத்தின் செயலான உண்ணுதலையும் தேவனின் உண்மைத்தன்மையை கொண்டாடுவதையும் அது இணைக்கிறது. ஒவ்வொரு மாதமும் பஸ்கா, வாரங்களின் பண்டிகை மற்றும் பௌர்ணமி விருந்துகளுடன் இஸ்ரவேலர்கள் கடைப்பிடித்த பலி வழிபாட்டு முறையின் ஒரு பகுதியாக விருந்து இருந்தது (எண்ணாகமம் 28:11-31ஐப் பார்க்கவும்). மேலும் சங்கீதம் 23:5 இல், தேவன் ஏராளமான உணவுடன் ஒரு பந்தியை ஆயத்தம் செய்து, பாத்திரம் கருணையாலும் அன்பாலும் நிரம்பி வழிகின்றன. நம்முடைய இரட்சிப்புக்காக இயேசு சிலுவையில் மரித்த பரிசை விளக்கி, ஒரு அப்பத்தை உடைத்து ஒரு கோப்பை திராட்சை ரசத்தை எடுத்துக் கொண்டபோது, இதுவரை வெளிப்படுத்தப்பட்ட உணவு மற்றும் திராட்சை ரசத்தின் மிக ஆடம்பரமான தொடர்பாக அது இருக்கலாம். பின்னர் அவர் “என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்” என்று சவால் விடுத்தார் (லூக்கா 22:19).
இன்று நீங்கள் சாப்பிடும் போது, நமக்கு வாயையும் வயிற்றையும் உண்டாக்கி, உணவளிக்கும் தேவனுடைய உண்மைத்துவத்தைக் கொண்டாடும் வகையில் அவருடைய அன்பின் மொழியாகக் கருதுவோம். நம்முடைய தேவன் “நான் உன்னை நேசிக்கிறேன்” என்று சொல்லி, நம்மோடு விருந்தை ஆசரிக்கிறார்.
மரத்தை விற்கும் பழங்கள்
ஒரு தோட்ட முதலாளி பேரி மரங்களை விற்க முற்பட்டார். அதற்கு பல முறைகளைக் கையாண்டார். அவற்றின் செடிகளை வரிசைப்படுத்தி அடுக்கி வைக்கவேண்டுமா? பேரி மரங்ளின் ஒவ்வொரு காலகட்ட வளர்ச்சியை படங்களை காட்சிப்படுத்த வேண்டுமா? அவர் 'பேரி' மரங்களை விற்பனை செய்வதை கடைசியாகத்தான் உணர்ந்தார். இவை அதிருசியான, மணமுள்ள, ஆரஞ்சு நிற, மென்மையான தோல் கொண்ட பேரி பழங்களை தருபவை. இவைகளை விற்பதற்கு உகந்த ஒரு வழி: பழுத்த பழத்தை எடுத்து, அதை வெட்டி, அதின் சாறு ஒழுக-ஒழுக, ஒரு துண்டை அரிந்து வாடிக்கையாளருக்கு கொடுப்பதே. அந்த பழத்தை அவர்கள் ருசித்தவுடன், அந்த மரத்தை அவர்கள் வாங்குவார்கள்.
அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம் (கலாத்தியர் 5:22-23). எனும் ஆவிக்குரிய கனியினால், தேவன் தன் விசுவாசிகளில் வெளிப்படுகிறார்: கிறிஸ்துவை நம்புகிறவர்கள் இக்கனியைப் பிரதிபலிக்கையில், அக்கனியை மற்றவர்களும் விரும்புவார்கள். அதின் ஆதாரத்தையும் அறிய முற்படுவர்.
நம் வாழ்வில் பரிசுத்த ஆவியானவரின் உள்ளார்ந்த தாக்கமே இக்கனியின் வெளிப்பாடு. பிறருக்கு நம் தேவனை பிரதிபலிக்க உதவுவதே இக்கனிதான். பச்சை இலைகளுக்கு மத்தியில் இந்த பேரிக் கனிகள் பிரகாசமாய் தெரிவதுபோல, “இங்கே உணவு இருக்கிறது! இங்கே ஜீவனிருக்கிறது! உங்களுடைய பெலவீனத்திலிருந்தும் சோர்விலிருந்தும் விடைபெறுவதற்கு இங்கு வாருங்கள், வந்து தேவனை சந்தியுங்கள்” என்று, ஆவியின் கனி பசியோடிருக்கும் உலகை அழைக்கிறது.
ஜெபத்தில் கட்டப்பட்ட நாவு
என் சிறிய தம்பிக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்ததால், நான் கவலையுற்றேன். அவன் பிறவியிலே நாக்கு கட்டப்பட்ட (ankyloglossia) நிலையில் இருந்ததால், அவன் சாப்பிடுவதற்கும், பேசுவதற்கும் கடினமாயிருக்கும் என, என் தாயார் விளக்கினார். இன்று, வார்த்தைகள் இல்லாமல் திணரும் நிலையையும், பேசுவதற்கு கூச்சப்படும் நிலையையுமே நாக்கு கட்டப்பட்ட நிலை என கூறுகிறோம்.
சிலநேரம், நம் ஜெபங்களில் என்ன பேசுவது என அறியாமல் நாக்கு கட்டப்படுகிறோம். நம்முடைய நாக்கு அர்த்தமில்லா ஆவிக்குரியச் சொற்களையும், திரும்பத்திரும்ப ஒரே வாக்கியத்தையும் உச்சரிக்கும். நம் உணர்வுகளை பரலோகத்தை நோக்கி அம்பாக எய்கிறோம். அது கர்த்தருடைய செவியைச் சென்றடையுமா என தெரியவில்லை. நம்முடைய சிந்தனைகள் இங்கும் அங்குமாய் அலைபாய்கிறது.
ஜெபிக்கத் திணரும் வேளைகளில், என்ன செய்வதென்று தெரியாத முதலாம் நூற்றாண்டு ரோம விசுவாசிகளிடம், பரிசுத்த ஆவியானவரின் உதவியை நாடும்படி பவுல் அப்போஸ்தலன் அழைக்கிறார். “அந்தப்படியே ஆவியானவரும் நமது பலவீனங்களில் நமக்கு உதவிசெய்கிறார். நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ள வேண்டியதின்னதென்று அறியாமலிருக்கிறபடியால், ஆவியானவர்தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல் செய்கிறார்” (ரோமர் 8:26). இங்கே, “உதவி” என்பது அதிக எடையை சுமந்து செல்வதாகும். “வாக்குக்கடங்காத பெருமூச்சுகள்” என்பது நம் சார்பில், நம் தேவைகளை ஆவியானவர், தேவனிடத்தில் எடுத்துசெல்கிறார் என்பதைக் குறிக்கிறது.
நாம் ஜெபத்தில் வாய்கட்டப்படுகையில், கர்த்தருடைய ஆவியானவர் நம் குழப்பங்கள், வேதனைகள், கவனச்சிதறல்கள் ஆகியவற்றை நேர்த்தியான விண்ணப்பமாய் மாற்றி, நம் இருதயத்திலிருந்து அவைகளை தேவனுடைய செவிக்கு எட்டும்படி செய்கிறார். அவர் ஜெபத்தைக் கேட்டு பதில் கொடுக்கிறார். அவரை வேண்டிக் கொள்ளும்படிக்கு நாம் அவரை அனுமதிக்கும்வரை, நமக்கு தேவையான சரியான ஆறுதலை நாம் அறிந்திருக்கமாட்டோம்.
தயக்கமில்லா கண்ணீர்
“என்னை மன்னிக்கவும்,” சீமா தன் கண்ணீருக்காக மன்னிப்புக் கேட்டார். அவருடைய கணவர் இறந்த பிறகு, தன்னுடைய பதின்ம வயது குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பை அவர் ஏற்க நேர்ந்தது. அவருடைய திருச்சபை, அவருடைய சுமையை குறைக்கும் விதத்தில் ஒரு வாரயிறுதி உல்லாச முகாமுக்கு அவர்களை அழைத்து மகிழ்ச்சிபடுத்தியது. அந்த மகிழ்ச்சி பெருமிதத்தில் கண்ணீர் சிந்திய சீமா, தன்னுடைய கண்ணீருக்காக மன்னிப்புக் கோரினாள்.
நாம் ஏன் கண்ணீருக்காக மன்னிப்புக் கேட்கிறோம்? சீமோன் என்னும் ஒரு பரிசேயன் இயேசுவை விருந்துக்கு அழைக்கிறான். உணவின் இடையிலே ஒரு பாவியாகிய பெண் தன்னோடு பரிமளதைலத்தைக் கொண்டுவருகிறாள். “அவருடைய பாதங்களின் அருகே பின்னாக நின்று அழுதுகொண்டு, அவருடைய பாதங்களைத் தன் கண்ணீரினால் நனைத்து, தன் தலைமயிரினால் துடைத்து, அவருடைய பாதங்களை முத்தஞ்செய்து, பரிமளதைலத்தைப் பூசினாள்” (லூக்கா 7:38). சற்றும் தயக்கமின்றி இந்த ஸ்திரீ, வெளிப்படையாக தன்னுடைய அன்பை பிரதிபலிக்க தன் தலைமயிரினால் இயேசுவின் பாதத்தைத் துடைத்தாள். நன்றி பெருக்காலும், அன்பாலும் அவள் கண்ணீரின் மேலே பரிமள தைலத்துடன் முத்தங்களை பரிசாக்கினாள். அவளுடைய இந்த செய்கை இந்த விருந்தை ஆயத்தப்படுத்திய இரக்கமற்ற பரிசேயனின் எதிர்பார்ப்பிற்கு மாறாக இருந்தது.
அவனுக்கு இயேசுவின் பதில்? அவர் அவளின் உற்சாகமான அன்பின் வெளிப்பாட்டை புகழ்ந்து, அவளின் அநேக பாவங்கள் “மன்னிக்கப்பட்டது” (வச. 44-48) என்று அறிவித்தார்.
நன்றியுணர்வினால் கண்ணீர் பெருக்கெடுக்கும்போது, அந்த கண்ணீரை நாம் அடக்கிவைக்க முற்படுகிறோம். ஆனால் தேவன் நம்மை உணர்ச்சி மிகுந்தவர்களாகவே படைத்துள்ளார். நாம் அவரை நம் உணர்வுகள் மூலம் கனப்படுத்துகிறோம். லூக்கா நற்செய்தியில் வரும் பெண்ணைப் போல நாமும் நமது நல்ல தேவனிடம் நம் அன்பை தயக்கமின்றி வெளிப்படுத்துவோம். தேவன் நம் தேவைகளை எல்லாம் சந்திக்கிறார். அவர் நம் நன்றியின் பதில்களையும் சுதந்திரமாக ஏற்றுக்கொள்ளுகிறார்.