அவன் என்னை நோக்கிக் கூப்பிடுவான், நான் அவனுக்கு மறுஉத்தரவு அருளிச்செய்வேன்;
ஆபத்தில் நானே அவனோடிருந்து, அவனைத் தப்புவித்து, அவனைக் கனப்படுத்துவேன்.

சங்கீதம் 91:15

தேவனுடைய ஜனம் அவரிடத்திற்கு திரும்பும்போது அவர் மறுஉத்தரவு கொடுப்பார் என்று வேதம் அடிக்கடி கூறுகிறது. அவர் இரக்கமும், மன உருக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவரும், தீங்குக்கு மனஸ்தாபப்படுகிறவருமான தேவன். தேவ ஜனம் அவரிடமாய் திரும்பி, உதவிக்காக கதறி அழும்போதெல்லாம், அவர் அவர்களை இக்கட்டிலிருந்து விடுவிக்கிறார். அவர் உண்மையுள்ளவரும், நேற்றும் இன்றும் என்றும் மாறாதவருமாயிருக்கிறார்.

இந்த இக்கட்டான சூழ்நிலையில் காயப்பட்டும், நொறுக்கப்பட்டும், குழப்பத்தோடும், அச்சத்தோடும், தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து எங்கு போவது என்று திக்குத் தெரியாமல் இருக்கிற மக்களுக்கு இரக்கம் செய்யும் சவால் நமக்கு முன்வைக்கப்பட்டிருக்கிறது. அவர்களுக்காக ஜெபித்து, அவர்களின் தேவையை சந்தித்து, தெய்வீக அன்பை நிரூபித்துக் காண்பிக்க நமக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.

ஆகையால், அன்பான சகோதர சகோதரிகளே வாருங்கள். அவர் மீது நம்பிக்கை வைத்து, இருதயத்தில் இரக்கத்தை வைத்து நம்முடைய தேசத்தின் சுகத்திற்காகவும் இருதயம் நொறுங்குண்ட மக்களின் ஆறுதலுக்காகவும் ஜெபம் ஏறெடுப்போம்.

கீழ்க்கண்ட ஜெப விண்ணப்பங்களுக்காக ஜெபிக்கும்போது, எங்களோடு இணைந்துகொள்ளுங்கள்:

  1. இந்த பேரிடர் நாட்களில் நேரத்தை பொருட்படுத்தாமல் அயராது முன் நின்று செயல்படும் அனைத்து மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் யாவருக்காகவும் ஜெபியுங்கள். அவர்கள் கொடுக்கும் சிகிச்சையைக் குறித்த தீர்மானங்களை எடுக்கும்போது ஒரு தெய்வீக ஞானம் அவர்களை ஆட்கொள்ளும்படியாக ஜெபிக்கிறோம். அவர்கள் இடைவெளியில்லாமல் பணியாற்றும்போது, வைரஸின் தாக்கம் அவர்களை பாதிக்காத வகையில் அவர் சரீரங்களை தேவன் நீர் பாதுகாப்பீராக. மரணத்தையும் பாதிப்பையும் பொருட்படுத்தாமல் மற்றவர்களை பாதுகாக்க போராடிக்கொண்டிருக்கும் அவர்களை கர்த்தர் நீர் மன ரீதியாக திடப்படுத்தும்படி ஜெபிக்கிறோம்.
கர்த்தர் ஞானத்தைத் தருகிறார்; அவர் வாயினின்று அறிவும் புத்தியும் வரும். நீதிமொழிகள் 2:6
  1. தங்களுடைய சொந்தங்களை இழந்து வேதனையோடு இருப்பவர்களுக்காக ஜெபியுங்கள். அவர்கள் பெலப்படுத்தப்பட்டு, எல்லா மனிதர்களையும் ஆட்கொள்ளும் தெய்வீக சமாதானம் அவர்களை தேற்றும்படியாக ஜெபிக்கிறோம். அவர்களுடைய வேதனையான இந்த தருணத்தில் தேவன் அவர்களை சந்தித்து, அவர்களுடைய வேதனையிலிருந்து அவர்களை வெளியே கொண்டுவந்து மீண்டும் அவர்களுடைய குடும்பங்களை பராமரிக்கக்கூடிய பொருப்பில் தேவன் அவர்களை ஏற்படுத்தும்படியாக ஜெபிக்கிறோம்.
சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலும் இருப்பதாக. யோவான் 14:27
  1. நோயினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளிலும் அவசர சிகிச்சை பிரிவிலும் வாழ்க்கையோடுபோராடிக்கொண்டிருப்பவர்களுக்காக ஜெபியுங்கள். சிலுவையில் நீர் செய்து முடித்த தியாகத்தின் விளைவாய் கிடைக்கிற தெய்வீக சுகம் அவர்களின் சரீரங்களில் இப்போதே வெளிப்படும்படியாய் நாங்கள் ஜெபிக்கிறோம். அவர்கள் சரீரத்திற்குள் இருக்கும் அவயங்கள், சுவாச அமைப்பு மற்றும் நோய் எதிர்ப்பு அமைப்பு அனைத்தும் தேவன் வடிவமைத்த வண்ணமாகவே செயல்படட்டும். தற்போது அவர்கள் தங்களுடைய சொந்தங்களை விட்டு பிரிந்திருந்தாலும், அவர்களுடைய ஆவியை தேவன் பெலப்படுத்தி தேவனுடைய வார்த்தைக்கு நேராய் ஒருமுகப்படுத்தும்படியாகவும், அவர்களுடைய சரீரம் அந்த வியாதியை எதிர்த்து போராடும்படியாகவும் நாங்கள் ஜெபிக்கிறோம். அவர்களுடைய சிகிச்சைக்கு தேவையான மருந்துகளும் கருவிகளும் அவர்களுக்கு சரியான நேரத்தில் கிடைக்கும்படியாகவும், அவர்களுடைய சுகத்தின் மூலமாய் அவர்களுடைய நண்பர்கள், உறவினர்கள், மற்றும் அவர்களுக்கு சிகிச்சையளித்த மருத்துவ ஊழியர்கள் மத்தியில் தேவனுடைய நாமத்தை மகிமைப்படுத்தும்படியாகவும் நாங்கள் வேண்டிக்கொள்ளுகிறோம்.
நான் சாவாமல், பிழைத்திருந்து, கர்த்தருடைய செய்கைகளை விவரிப்பேன். சங்கீதம் 118:17
  1. மருத்துவமனையில் அல்லது அவசர சிகிச்சைப் பிரிவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்காக ஜெபியுங்கள். தங்களைச் சுற்றிலும் மற்ற நோயாளிகள் இல்லாமல் தனிமைபடுத்தப்பட்டு, தங்களுடைய தேவைகளுக்காகவும் மற்ற தகவல்களுக்காகவும் மருத்துவ ஊழியர்களை மட்டுமே சார்ந்திருக்கிறவர்களை பெலப்படுத்தும்படியாக ஜெபிக்கிறோம். அவர்களைச் சுற்றி நடக்கும் கடினமான காரியங்களைப் பார்த்து அவர்கள் பயப்படாமல் தேவனையும் அவருடைய வார்த்தையையும் உறுதியாய் பற்றிக்கொள்ளும்படியாக நாங்கள் வேண்டிக்கொள்கிறோம். அவர்கள் மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் உறுதியாய் இருக்க உதவிசெய்யும். பண செலவுகளைக் குறித்து அவர்கள் கவலைப்படாதபடிக்கு, அவர்களுடைய மருத்துவ செலவுகளுக்கு போதுமான பொருளாதார தேவைகளை கர்த்தர் சந்திப்பீராக.
நானோ, ஜீவனுள்ளோர் தேசத்திலே கர்த்தருடைய நன்மையைக் காண்பேன் என்று விசுவாசியாதிருந்தால் கெட்டுப்போயிருப்பேன். சங்கீதம் 27:13
  1. நோயினால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்காக ஜெபியுங்கள். அவர்களுக்கு எந்த வித பிரச்சனைகளும் இல்லாமல் விரைவாக அவர்கள் குணமடைய ஜெபிக்கிறோம். தாங்களாகவே தங்களை பராமரித்துக்கொள்ளுகிறவர்களாய் இருப்பினும், அல்லது குடும்பத்து நபர்களால் பராமரிக்கப்படுகிறவர்களாய் இருப்பினும், அவர்களுக்குத் தேவையான ஆரோக்கியமான உணவுகள் அவர்களுக்கு கிடைக்கும்படியாகவும் அவர்கள் குணமடையும் இந்த நாட்களில் தேவனிடத்தில் அவர்கள் அதிகமாய் நெருங்கவும் அவர்களுக்கு உதவிசெய்யும். அவர்களைப் பராமரிக்கிற அவர்களின் குடும்ப நபர்கள் சரீரப்பிரகாரமாகவும் மனரீதியாகவும் பாதுகாக்கப்பட ஜெபிக்கிறோம்.
நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்; தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்; உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும். சங்கீதம் 23:4
  1. எல்லோருக்கும் தடுப்பூசிகள் கிடைக்கும்படியாகவும், எந்த பின்விளைவு பாதிப்புகள் இல்லாதபடிக்கு தடுப்பூசிகளை அனைவரும் போட்டுக்கொள்ளவும் ஜெபியுங்கள். தேவனே இந்த தடுப்பூசி காரியங்கள் சரியாகவும் பாதுகாப்பாகவும் நடக்கும்படியாக ஜெபிக்கிறோம்.
கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடிப்பார்; கர்த்தாவே, உமது கிருபை என்றுமுள்ளது; உமது கரத்தின் கிரியைகளை நெகிழவிடாதிருப்பீராக. சங்கீதம் 138:8

 

  1. மக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து, நோயின் வேகமான பரவலை முறியடிக்கும் முயற்சிக்கு ஒத்துழைக்க ஜெபியுங்கள். மக்கள் அனைத்து கட்டுப்பாடு விதிகளையும் மதித்து, தங்களுடைய அறியாமையினாலும் மதியீனத்தினாலும் நோயை மற்றவர்களுக்கு பரப்பாமல் இருக்க ஜெபிக்கிறோம்.
துரைத்தனங்களுக்கும் அதிகாரங்களுக்கும் கீழ்ப்படிந்து அடங்கியிருக்கவும், சகலவிதமான நற்கிரியைகளையும் செய்ய ஆயத்தமாயிருக்கவும்… தீத்து 3:1

 

  1. இந்த பேரிடர் நாட்களில் பாதிக்கப்பட்ட தினக்கூலி தொழிலாளர்களுக்கும், பொருளாதார ரீதியாய் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தங்கள் குடும்பத்தை போ~pக்கவும் பராமரிக்கவும் தேவையான அனைத்து காரியங்களும் கிடைக்க ஜெபியுங்கள். ஒவ்வொருநாளும் அவர்கள் தவிர்க்கமுடியாமல் வெளியே செல்லும்போது அவர்கள் மனரீதியாகவும் சரீர ரீதியாகவும் பாதுகாக்கப்பட ஜெபிக்கிறோம். அவர்களுக்கு எல்லா திசைகளிலிருந்தும் கர்த்தர் உதவியை வரப்பண்ணி, இந்த கடினமான சூழ்நிலையை கடக்கப்பண்ணும்படியாய் ஜெபிக்கிறோம்.

 

ஏழைக்கும் திக்கற்ற பிள்ளைக்கும் நியாயஞ்செய்து, சிறுமைப்பட்டவனுக்கும் திக்கற்றவனுக்கும் நீதி செய்யுங்கள். பலவீனனையும் எளியவனையும் விடுவித்து, துன்மார்க்கரின் கைக்கு அவர்களைத் தப்புவியுங்கள். சங்கீதம் 82:3-4

 

  1. இந்த சூழ்நிலையை தீவிரமாய் மேற்கொள்ளும் ஞானத்தை தேவன் நம்முடைய தலைவர்களுக்கும் அதிகாரத்தில் உள்ளவர்களுக்கும் கொடுக்கும்படியாக ஜெபிப்போம். அவர்கள் இந்த சூழ்நிலையை கட்டுப்படுத்த தகுந்த நடவடிக்கைகளை நேர்த்தியாய் எடுக்கும்படியாகவும், தேசமெங்கிலுமுள்ள மருத்துவமனை கருவிகளை நேர்த்தியாய் கையாளவும் அவர்களுக்கு உதவிசெய்யும்.

 

நான் பிரதானமாய்ச் சொல்லுகிற புத்தியென்னவெனில், எல்லா மனு~ருக்காகவும் விண்ணப்பங்களையும், ஜெபங்களையும், வேண்டுதல்களையும்,ஸ்தோத்திரங்களையும் பண்ணவேண்டும் ; நாம் எல்லாப் பக்தியோடும் நல்லொழுக்கத்தோடும் கலகமில்லாமல் அமைதலுள்ள ஜீவனம்பண்ணும்படிக்கு, ராஜாக்களுக்காகவும், அதிகாரமுள்ள யாவருக்காகவும் அப்படியே செய்யவேண்டும். 1 தீமோத்தேயு 2:1-2

 

  1. நம்முடைய திருச்சபை போதகர்கள், சபைத் தலைவர்கள் போன்றவர்களுக்கு இந்த இக்கட்டான சூழ்நிலையில் அவர்களின் குடும்பங்களையும் பராமரித்துக்கொண்டு, திருச்சபையையும் வழிநடத்திச் செல்ல தேவையான ஞானத்தையும் பெலத்தையும் தேவன் தரும்படிக்கு ஜெபியுங்கள். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தேவையான ஆலோசனைகளை அவர்கள் ஞானத்தோடு கொடுக்கும்படியாகவும், அவர்களின் முக்கியமான தருணங்களில் அவர்களுக்கு ஆறுதலளிக்கவும், அதே நேரத்தில் தங்களையும் பாதுகாத்துக்கொள்ளவும் கிருபை செய்யும்.

 

கர்த்தருக்குக் காத்திரு; அவர் உன் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார்; திடமனதாயிருந்து, கர்த்தருக்கே காத்திரு. சங்கீதம் 27:14

 

  1. கடைசியாக, நமக்காகவும் இந்தியாவுக்காக ஜெபிக்கிற அனைவருக்காகவும் ஜெபியுங்கள். இந்த கோவிட் தொற்றுக்கு விரோதமாக இயற்கைக்கு அப்பாற்பட்ட உலகத்தில் முன் வரிசையில் நின்று நாம் யுத்தம் செய்து மற்றவர்களுக்காகப் பரிந்துபேசிக்கொண்டிருக்கிறோம். நாம் தோற்றுப்போகாதபடிக்கு முற்றிலும் பெலப்படுத்தப்பட்டு, தேவனுடைய சித்தம் பரமண்டலங்களில் செய்யப்படுவதுபோல பூமியிலும் செய்யப்படுவதாக என்று தொடர்ந்து அறிக்கையிட ஜெபிக்கிறோம். ஜெயத்தை நாம் சந்திக்கும் வரைக்கும் எங்கள் கண்கள் அலைபாயாமல், நம்பிக்கையை இழக்காமல் உம்மையே நோக்கிக்கொண்டிருக்க எங்களுக்கு உதவிசெய்யும். கிறிஸ்தவர்களாக எங்களுடைய விசுவாச வாழ்க்கையை வாழவும், மற்றவர்களுக்காகப் பரிந்துபேசி ஜெபிக்கும் வேளையில், அவர்களுக்கு நடைமுறைக் காரியங்களில் உதவிசெய்யவும் ஜெபிக்கிறோம். எங்களுடைய சக இந்திய மக்கள் இந்த சூழ்நிலையை மேற்கொள்வதற்கு எங்களுடைய நேரம், திறமைகள், பொருட்கள் ஆகியவற்றை கொடுத்து உதவ முன்வர நாங்கள் ஜெபிக்கிறோம்.
நீ இப்படிப்பட்ட காலத்துக்கு உதவியாயிருக்கும்படி உனக்கு ராஜமேன்மை கிடைத்திருக்கலாமே, யாருக்குத் தெரியும் – எஸ்தர் 4:14

தங்களுடைய தனிப்பட்ட ஜெபக்குறிப்புகளுக்கு எங்கள் குழுவினர் ஜெபிக்கவேண்டும் என்று நீங்கள் விரும்பினால், தங்களுடைய தகவல்களை கீழே நிரப்பவும் அல்லது வாட்ஸ்ஆப் மூலமாகவோ அல்லது எஸ்.எம்.எஸ் மூலமாகவோ ூ91 95000 37162 என்ற எண்ணிற்கு அனுப்பவும். இதே எண்ணிற்கு தொடர்புகொண்டால், நாங்கள் உங்களோடு சேர்ந்து ஜெபிக்கவும் ஆயத்தமாயிருக்கிறோம். நன்றி!