அக்கினி பற்றி எரிவதுபோல இந்த இரண்டாம் அலை நம்முடைய தேசத்தில் ஊடுருவி தீ போல பரவிக்கொண்டிருக்கிறது. அதில் சிக்காமல் தப்பிப்பது கடினம். எல்லா செய்தி ஊடகங்களும், சமூக வலைதளங்களும் ஜீரணிக்க முடியாத எதிர்மறையான செய்திகளையே அறிவித்துக்கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு நிமிடமும் பாதிக்கப்பட்டவர்களும் அவர்களின் குடும்பத்தினரின் கதறல் சத்தமும் கேட்டுக் கொண்டேயிருக்கிறது. இந்த மரண ஓலத்தை இதற்கு முன்பு நாம் அனுபவித்ததே இல்லை. யதார்த்தமாய் மாறியுள்ள இந்த அச்சுறுத்தும், கெட்ட கனவு எப்போது முடிவுக்கு வரும் என்று ஊகிப்பது சாத்தியமில்லை. பொதுவான ஒரு திகைப்பு தேசத்தை மூடியிருக்கிறது. அதில் ஒரு வெள்ளி நூலிழை தென்படுவது அரிது. நம்மைச் சுற்றி நடக்கிற இந்த சூழ்நிலை மேற்கொள்வதற்கு முடியாமல் நம்முடைய கைகளும் கால்களும் கட்டப்பட்டிருக்கிறது. நாம் நம்பிக்கையை தேடும் இந்த தருணத்தில், அதை சமாளிக்கும் ஐந்து வழிகளை உங்களுக்கு அறிவிக்கிறோம்.

மனப்பூர்வமாய் ஜெபியுங்கள்

என்னுடைய தாத்தாவின் நண்பரும், மூத்த சுவிசேஷகருமான ஒருவர் அடிக்கடி எங்கள் வீட்டில் வந்து தங்குவார். அவருடைய தனிப்பட்ட ஜெப நேரம் சிலவேளைகளில் எங்களுக்கு ஆச்சரியமாயிருக்கும். அவர் தேவனிடத்தில் சத்தம்போட்டு சண்டையிடுவது போல இருக்கும். அவர் இடையிடையே திடீரென்று பாடலும் பாடுவார். அவருடைய இந்த உண்மையான உணர்வு அவருக்கு தேவனோடு ஒன்றுகிற அனுபவத்தை ஏற்படுத்துகிறது. 1 நாளாகமம் 16:11, “கர்த்தரையும் அவர் வல்லமையையும் நாடுங்கள், அவர் சமுகத்தை நித்தமும் தேடுங்கள்” என்று சொல்லுகிறது. நம்முடைய உணர்வுகள் மேலும் கீழுமாக அலைபாயும் இந்த தருணங்களில், தேவன் கொடுக்கும் பெலத்திற்காக அவரை நாடுவோம். உங்களுடைய ஜெபங்கள் அவருடைய உண்மைத்துவத்தை துதிப்பதாய் இருக்கட்டும், அல்லது உங்களுடைய இழப்பை நினைத்து புலம்புவதாய் இருக்கட்டும், அவர் நம்மை புரிந்துகொண்டு நம்முடைய ஜெபத்தைக் கேட்கிறவராயிருக்கிறார். நீங்கள் அவரோடு உண்மையான உணர்வை பகிர்ந்துகொள்ள அவர் விரும்புகிறார்.

தாராளமாய் வாழுங்கள்

கடந்த ஆண்டு இதே நேரத்தில், ஊரே பொது முடக்கத்தில் இருந்த நாட்களில், வெகு குறைவாய் சம்பளம் வாங்கும் என்னுடைய சிநேகிதர் ஒருவர் தேவையிலுள்ள குடும்பங்களுக்கு உதவிசெய்ய முன்வந்தார். வேலையில்லாமல் திண்டாடும் தங்களுடைய சபை விசுவாசிகளுக்காக தங்களுடைய ஒருவேளை சாப்பாட்டை தியாகம் செய்து, அந்த தொகையைக்கொண்டு அவர்களின் தேவையை சந்தித்தார். 1 யோவான் 3:17, “ஒருவன் இவ்வுலக ஆஸ்தி உடையவனாயிருந்து, தன் சகோதரனுக்குக் குறைச்சலுண்டென்று கண்டு, தன் இருதயத்தை அவனுக்கு அடைத்துக்கொண்டால், அவனுக்குள் தேவ அன்பு நிலைகொள்ளுகிறதெப்படி?” என்று சொல்லுகிறது. தாராள மனதுடன் தேவனுக்கு ஊழியம் செய்வதின் மூலம் கிறிஸ்து உலகத்தை நேசிக்கிறார் என்பதை அவர்களுக்கு விளங்கச்செய்ய முடியும். உங்களின் தாராள குணம் என்பது பணத்தேவைகளை சந்திப்பதாயிருக்கலாம், அல்லது மற்றவர்களை தொலைபேசியில் அழைத்து நம் அக்கறையை வெளிப்படுத்துவதாயிருக்கலாம். உங்களின் தாராள குணத்தை எப்படி வெளிப்படுத்த விரும்புகிறீர்களோ, அதை செய்வதற்கான சரியான நேரம் இதுவே.

பொறுப்பாய் செயல்படுங்கள்

தேசத்தில் பொறுப்பில்லாமல் பல்வேறு மக்கள் கூடிய கூட்டங்களே இந்த இரண்டாம் அலையின் தீவிரத்திற்கு காரணம் என்று ஊடகங்கள் குற்றஞ்சாட்டுகிறது. காயீன் ஆபேலைக் கொன்ற பின்பு, தேவன் காயீனைப்பார்த்து, “உன் சகோதரனாகிய ஆபேல் எங்கே என்றார்,” அதற்கு அவன்: “நான் அறியேன். என் சகோதரனுக்கு நான் காவலாளியோ”  (ஆதியாகமம் 4:9) என்று பதிலளிக்கிறான். இந்த பேரிடர் நாட்களில் நம்முடைய பொறுப்பில்லாத பதில்களும் காயீனுடைய பதில்களைப் போன்றதே. நாம் சமூக கூடுகைகளை அனுசரிக்கும்போது முகக்கவசம் அணியாமலும் சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் இருப்போமாகில் நாம் நம்முடைய சகோதரனுக்கு காவலாளியாய் இருப்பதற்கு தகுதியற்றவர்களாகிறோம். இயேசு கிறிஸ்து நியாயப்பிரமாணத்தையும் தீர்க்கதரிசிகளையும் இரண்டே பிரமாணங்களில் உள்ளடக்குகிறார். அதில் ஒன்று, “உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோல் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக” (மாற்கு 12:31). நம்முடைய சக மனிதர்களிடம் நாம் காண்பிக்கும் அக்கறை கிரியையில் வெளிப்படட்டும். நாம் பொறுப்போடு செயல்பட்டு, நம் சகோதரனுக்கு காவலாளியாய் செயல்படுவோம்.

முழுமையாய் மதிப்பிடுங்கள்

நமக்கு பிடித்தமானவர்களை இழக்க நேரிடும்போது, “ஐயோ, இன்னும் அவரிடம் நேரம் செலவழித்திருக்கலாமே” என்ற எண்ணமே முதலில் நமக்குத் தோன்றும். காலத்தைப் போன்று வேகமாய் பயணிப்பது எதுவுமில்லை. ஞாபகப்படுத்திப் பார்க்கவேண்டிய நினைவுகளோ அல்லது சரிசெய்யப்பட வேண்டிய சச்சரவுகளோ, இந்த நிலையில்லாத தருணம் நம் வாழ்க்கையில் காலத்தை ஆதாயப்படுத்த அறிவுறுத்துகிறது. மனக்குழப்பதையோ அல்லது மன்னியாதிருக்கும் குணத்தையோ தாங்கிக்கொள்ள நம்மிடத்தில் நேரம் இல்லை. “பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே” (லூக்கா 23:34) என்று சொல்லி இயேசு ஜீவனை விடுகிறார். சிலுவையில் தொங்கிய இயேசுவின் சிந்தை இப்படியிருக்குமென்றால், நம்முடைய காரியங்கள் எம்மாத்திரம். மிகவும் பலமானவர்கள் என்று நாம் நம்பியிருந்த அனைவரும் பலவீனமானவர்களே என்பதை இந்த பேரிடர் நமக்கு விளங்கச் செய்திருக்கிறது. ஆகையினால் நாம் காரியங்களை துரிதமாய் சரிசெய்து, நமக்கு பிரியமானவர்களின் அன்பிற்கு பாத்திரவான்களாய் அவர்களிடம் நேரம் செலவிடுவோம்.

ஆழமாய் நேசியுங்கள்

என்னுடைய சிநேகிதனுடைய மகள் அவளுடைய அம்மாவைப் பார்த்து, “அம்மா, நான் கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டால், என்னுடைய பொம்மையை எடுத்து என்னுடைய தங்கைக்கு கொடுத்துவிடுங்கள்” என்று சொன்னாளாம். 6 வயது குழந்தையின் இந்த வார்த்தைகளைக் கேட்டமாத்திரத்தில், எது உன்னை அவ்வாறு சொல்லத் தூண்டியது என்று அவளிடம் ஆச்சரியத்துடன் கேட்க, “அவளும் ஒரு சிறிய அம்மா, அவள் நேசிப்பதற்கும் ஏதாவது வேண்டுமல்லவா” என்று அவள் பதிலளித்தாளாம். மனிதனின் எல்லா உணர்வுகளின் அடிப்படையிலும் அன்பு இருக்கிறது. நாம் அதற்காக ஏங்குகிறோம். 1 பேதுரு 4:8 சொல்லுகிறது, “எல்லாவற்றிற்கும் மேலாக ஒருவரிலொருவர் ஊக்கமான அன்புள்ளவர்களாயிருங்கள்; அன்பு திரளான பாவங்களை மூடும்.” இந்த பேரிடர் காலகட்டத்தில் குறிப்பாய் நம்முடைய வீட்டிலுள்ளவர்களிடம் அன்போடும் சாந்தத்தோடும் பழக நம் சிந்தையை ஒருமுகப்படுத்துவோம். தற்போது நாம் வாழும் சூழ்நிலையில் நாம் பார்த்த முகங்களையே மீண்டும் மீண்டும் பார்ப்பதால் எரிச்சலடைவது இயல்பு. சிலவேளைகளில் நம்முடைய குடும்ப சூழ்நிலையின் நிமித்தமும் அதிகமான வேலையின் நிமித்தமும் நம்மை நேசிக்கிறவர்களிடம் உணர்வு ரீதியாய் ஒன்றுவதில்லை. நாம் சுயநினைவோடு நேசிக்க பழகும்போது, நம்மை நேசிக்கிறவர்களிடத்தில் அது பெரிய மாற்றத்தைக் கொண்டுவரும். ஆகையால் ஆழமாய் நேசிக்கப் பழகுவோம்.

நமக்கு சற்றும் அறிமுகமில்லாத இந்த தண்ணீரைக் கடக்கும்போது, அவருடைய கிருபையின் சிறந்த பிரதிநிதிகளாய் இருக்க பிரயாசப்படுவோம். நம்முடைய கிரியைகள் அவருடைய தன்மையை பிரதிபலிக்கட்டும். இந்த சூழ்நிலையை சமாளிக்க முடியாமல் போராடுபவர்களுக்கு நம்பிக்கையை கொடுப்போம்.

 

 – ரெபேக்கா விஜயன்