தேவனே, நீர் எங்களை காண்கிறீரா?

நாங்கள் உம்மை நோக்கி கதரும் சத்தம் உமக்குக் கேட்கிறதா?

எங்களுடைய தேசம் மரணத்தினாலும் கொள்ளை நோயினாலும் நிறைந்திருக்கிறதை நீர் காண்கிறீரா? எண்ணற்ற இறுதிச் சடங்குகளினால் எங்கள் இரவு வானம் ஒளிர்கிறதா? மருத்துவமனை வாசலில் நீளமான வரிசையில் மக்கள் நிற்பதை நீர் காண்கிறீரா?

மக்கள் தங்களுக்கு பிரியமானவர்களை காப்பாற்ற மருந்துகளையும் உபகரணங்களையும் தேடி இங்கும் அங்கும் ஓடுவதை நீர் காண்கிறீரா? தேவ பிள்ளைகளுடைய இறுதிச் சடங்குகளை நீர் காண்கிறீரா? நல்ல மனிதர்கள், தங்கள் வாழ்நாள் முழுதும் உமக்காய் ஊழியம் செய்தவர்கள்,அவர்களின் குடும்பத்து நபர்கள் இன்று துக்கத்தோடும் அழுகையோடும் இருப்பதை நீர் காண்கிறீரா?

தேவனே, நீர் என்னைக் காண்கிறீரா?

இதுபோன்ற கேள்விகள் என்னுடைய உள்ளத்தில் எழும்ப, அதே இருதய படபடப்புடன் அதற்கான பதிலையும் பெற்றுக்கொண்டேன். அவர் காண்கிறார். ஆம், அவர் நம்மை காண்கிறார். காண்கிற தேவனாகிய ஏல்-ரோயிக்கு நாம் நன்றியுணர்வோடு துதிகளை செலுத்தியதை நான் நினைவுகூர்ந்தேன்.

அவர் அப்போதும் இப்போதும் மாறாத ஒரே தேவன். ஆகாரைச் சந்தித்து, அவளைக் காண்கிற தேவன் என்பதை அவளுக்கு வெளிப்படுத்திய அதே தேவன். ஆகார் இரண்டுதரம் வனாந்திரத்தில் சிக்கித் தவித்தாள். முதல்முறை, அவளுடைய விருப்பத்தின்படி ஓடினாள் (அதியாகமம் 16), இரண்டாம் தரம், சாராளுடைய விருப்பத்திற்கேற்ப ஆபிரகாம் அவளை அனுப்புகிறான் (ஆதியாகமம் 21). இரண்டு முறையும் அவள் கைவிடப்பட்டு திக்கற்றவளாய் நிற்கும்போது தேவன் அவளைக் கண்;டு தேற்றுகிறார்.

“தேவன் நம்மை விட்டு விலகுவதுமில்லை நம்மைக் கைவிடுவதுமில்லை” என்று வேதம் அடிக்கடி நமக்கு வாக்குக் கொடுக்கிறது. மேலும் நாம் “மரண இருளின் பள்ளத்தாக்கில் நடந்தாலும், அவர் நம்மோடு இருக்கிறார்” என்றும் உறுதியளிக்கிறது. ஆகையால் நம்மோடு நடந்துவருகிற தேவன், நம்மை விட்டு விலகாத தேவன், நம்மைச் சுற்றிலும் என்ன நிகழ்கிறது என்பதை பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார். நாம் அதை எப்படி பார்க்கிறோமோ, அவரும் அதை அப்படியே பார்த்துக்கொண்டிருக்கிறார். நாம் செய்திகளை கேட்கிற விதமாய் அவரும் கேட்டுக்கொண்டு இருக்கிறார்.

ஆனாலும் என்னுடைய இருதயம் மறுபடியும் கதறுகிறது. ஏன் தேவன் எந்த கிரியையும் நடப்பிக்கவில்லை? இந்த பெருந்தொற்று நம் தேசத்தையும் மக்களையும் தொடர்ந்து அழித்துக்கொண்டிருப்பது ஏன்? இளைஞரும் முதியோரும் ஏன் தொடர்ந்து பாடனுபவிக்கின்றனர்? நாம் மேற்கொண்டு என்ன செய்யலாம்? நாங்கள் ஜெபித்தோம், தொடர்ந்து ஜெபித்துக்கொண்டிருக்கிறோம், கோவிட் தொற்றைக் கடிந்துகொண்டோம், உம்முடைய சித்தத்தை பூமியில் நடப்பிக்க வேண்டிக்கொண்டோம், சிலுவையில் செய்து முடித்த பணியில் எங்கள் விசுவாசத்தை உறுதிபடுத்திக்கொண்டோம். எங்கள் சக மனிதர்களுக்கு எந்தெந்த வகையில் உதவமுடியுமோ அதை செய்திருக்கிறோம், இனி என்ன செய்வது?மாற்றத்தைக் கண்டு எவ்வளவு காலமாகிறது? பெருந்தொற்றின் பயமில்லாமல் வாழந்து எவ்வளவு காலமாகிறது? முகக்கவசம் அணியாமல் சுதந்திரக்காற்றை சுவாசித்து எவ்வளவு காலமாகிறது?

பதிலளிக்க முடியாத பெரும்பாலான கேள்விகள் இன்னும் இருக்கிறது. ஆனால் தேவன் நம்மைக் காண்கிறார் என்பதை என்னுடைய இருதயத்தின் ஆழத்தில் நான் நம்புகிறேன். ஏல்-ரோயி நம்மைக் காண்கிறார். அவர் இன்னும் தேவனாகவே இருக்கிறார். நல்லவராகவே இருக்கிறார். அவர் எல்லா ஜெபங்களையும், கதறலையும், சொல்ல முடியாத நம் இதய துயரங்களையும் அவர் கேட்டுக்கொண்டிருக்கிறார். எபேசியர் 6ஆம் அதிகாரத்தில் “சகலத்தையும் செய்துமுடித்தவர்களாய் நிற்கவும் திராணியுள்ளவர்களாகும்படிக்கு” என்று அறிவுறுத்தப்படுகிறோம்.

நம்முடைய வியாதியையும் வலியையும் இயேசு சிலுவையில் சுமந்திருக்கிறார், அவருடைய தழும்புகளாலே நாம் குணமாகிறோம் என்ற சத்திய அரைக்கச்சையை இடையில் அணிந்தவர்களாய் உறுதியோடு நிற்போம். சமாதானத்தின் சுவிசே~த்திற்கு ஆயத்தம் என்னும் பாதரட்சைகளை அணிந்தவர்களாய், நம்முடைய அக்கம்பக்கத்திலுள்ளவர்களின் தேவைக்கு புறமுதுகு காட்டாமல், ஒரு நல்ல சமாரியனாய் எதிர்பார்த்த உதவியை செய்வோம். சத்துருவின் தீமையான அக்கினி அம்புகளை அணைக்கிற விசுவாசம் என்னும் கேடயத்தைப் பற்றிக்கொண்டு, நம்மைச் சுற்றியுள்ள சூழ்நிலை சாதகமாயில்லாத பட்சத்திலும் தேவனுடைய வல்லமையையும் நன்மைகளையும் அறிவிப்போம். இரட்சிப்பு என்னும் தலைச் சீராவையும் ஆவியின் பட்டயத்தையும் தரித்துக்கொண்டு, கர்த்தருடைய வார்த்தையை நம்பி அறிவிப்போம். அவர் நம்மைக் காண்கிறார், நம்முடைய சத்தத்தைக் கேட்கிறார் என்ற உறுதியான நம்பிக்கையுடன் ஆவியில் தொடர்ந்து ஜெபிப்போம்.

கடைசியாய் மாற்கு 11:24-25இல் “நீங்கள் ஜெபம்பண்ணும் போது எவைகளைக் கேட்டுக்கொள்வீர்களோ, அவைகளைப் பெற்றுக்கொள்வோம் என்று விசுவாசியுங்கள்” என்று இயேசு நமக்கு ஆலோசனை கொடுக்கிறார். முகக்கவசத்தின் அவசியமின்றி நம்முடைய வீட்டை விட்டு பயமின்றி வெளியே செல்லும் காலம் வரும். கோவிட் 19 தொற்று இல்லாத, நண்பர்களையும் குடும்பத்தினரையும் மீண்டும் மகிழ்ச்சியுடன் சந்திக்கும் காலம் வரும். ஜீவனுள்ளோர் தேசத்திலே நம்முடைய வாழ்க்கையில் கர்த்தர் செய்த நன்மைகளுக்கு சாட்சியாக, உண்மையாகவே,  அவருடைய பெயருக்கேற்ப தேவன் நம்மைக் காண்கிறார்.

– ஜாஸ்மின்