
மீட்டெடுக்கும் பயிற்சி
நீங்கள் எப்போதாவது ஒரு கதையைச் சொல்லிக்கொண்டிருக்கும்போது, அதை இடையில் நிறுத்திவிட்டு, அது எப்போது நிகழ்ந்தது அல்லது யார் என்று குழம்பி யோசித்திருக்கிறீர்களா? வயதாவதினால் நினைவாற்றல் மங்கிவிடும் என்று நாம் அடிக்கடி நம்புகிறோம். ஆனால் சமீபத்திய ஆய்வுகள் அந்த கருத்தை ஆதரிக்கவில்லை. உண்மையில், அவை நமது நினைவாற்றல் பிரச்சனையல்ல என்பதைக் குறிப்பிடுகின்றன. அந்த நினைவுகளை மீட்டெடுப்பது நமது திறமை என்று கருதுகின்றன. நினைவுகளை சில வழக்கமான ஒத்திகை இல்லாமல் அணுகுவது கடினமாகிவிடும்.
அந்த மீட்டெடுப்பு திறனை மேம்படுத்துவதற்கான வழிகளில் ஒன்று, வழக்கமான திட்டமிடப்பட்ட செயல்கள் அல்லது குறிப்பிட்ட நினைவகத்தை நினைவுபடுத்தும் அனுபவங்கள். நமது சிருஷ்டிக்கர்த்தர் இதை அறிந்திருந்தார். எனவே அவர் இஸ்ரவேல் புத்திரருக்கு வாரத்தில் ஒரு நாளை தேவனை ஆராதிக்கும் ஓய்வுநாளாக ஏற்படுத்தியிருந்தார். அத்தகைய ஓய்வினிமித்தம் நாம் மனப் பயிற்சிக்கான வாய்ப்பைப் பெறுகிறோம். “கர்த்தர் ஆறுநாளைக்குள்ளே வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கி(னார்)” (யாத்திராகமம் 20:11). இது நம்மால் உண்டானது அல்ல; தேவனுடைய திட்டம் என்பதை நாம் அறிந்திருக்கிறோம்.
நம் வாழ்க்கையின் அவசரத்தில், தேவன் நமக்காகவும் மற்றவர்களுக்காகவும் என்ன செய்திருக்கிறார் என்ற நினைவுகளில் சில நேரங்களில் நம் பிடியை நாம் இழக்க நேரிடுகிறது. நம் வாழ்க்கையை யார் உன்னிப்பாகக் கண்காணிக்கிறார்கள் என்பதையும், நாம் அதிகமாகவும் தனிமையாகவும் உணரும்போது அவர் நம்மோடு இருப்பதாக வாக்களித்ததை நாம் மறந்துவிடுகிறோம். நம்முடைய வழக்கமான வாழ்க்கைப் பயணத்திலிருந்து ஒரு நாளை ஓய்வுநாளாய் ஆசரிப்பதின் மூலம் நாம் தேவனையும் “அவர் செய்த சகல உபகாரங்களையும்” (சங்கீதம் 103:2) நினைவுகூர வலியுறுத்தப்படுகிறோம்.
தேவன் தலைசிறந்த படைப்பு
மூளை இயங்கும் முறையைப் புரிந்துகொள்வதில் நரம்பணுவியல் பெரும் முன்னேற்றம் அடைந்திருந்தாலும், அதைப் புரிந்துகொள்வதற்கான ஆரம்பக் கட்டத்தில்தான் இன்னும் இருப்பதாக விஞ்ஞானிகள் ஒப்புக்கொள்கிறார்கள். மூளையின் கட்டமைப்பு, அதன் செயல்பாட்டின் சில அம்சங்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்குப் பதிலளிக்கும் பகுதிகள், நமது உணர்வுகளைச் செயல்படுத்துதல், இயக்கங்களை உருவாக்குதல் மற்றும் உணர்ச்சிகளைக் கொண்டிருக்கும் பகுதிகள் ஆகியவற்றை அவர்கள் புரிந்துள்ளார்கள். ஆனால் நடத்தை, கருத்து மற்றும் நினைவாற்றலுக்கான தொடர்புகள் அனைத்தும் , அவர்களால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. வியப்பூட்டும் வண்ணமாக , தேவனால் உருவாக்கப்பட்ட தலைசிறந்த படைப்பான மனிதனைப் பற்றி புரிந்து கொள்வதே கடினமாக இருக்கிறது.
மனித உடலின் அதிசயங்களை, உருவக நடையில், தாவீது கொண்டாடினார், “என் தாயின் கர்ப்பத்தில் என்னைக் காப்பாற்றினீர்” (சங்கீதம் 139:13) என்பது இயற்கைமுறை மீதிருக்கும் தேவனின் சர்வ ஆளுகைக்குச் சான்றாகும். அவர் , “நான் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டபடியால் உம்மைத் துதிப்பேன்; உமது கிரியைகள் அதிசயமானவைகள்” (வச. 14) என்று எழுதினார். முன்னோர்கள் தாயின் வயிற்றில் ஒரு குழந்தையின் வளர்ச்சியைப் பெரிய மர்மமாகக் கருதினர் (பிரசங்கி 11:5 ஐப் பார்க்கவும்). மனித உடலின் வியக்கத்தக்கப் புதிர்களைப் பற்றிய குறைந்த அறிவே இருந்தாலும், தாவீது தேவனின் அற்புதமான கிரியை மற்றும் பிரசன்னத்தை பிரமிப்புடனும் ஆச்சரியத்துடனும் வியந்தார் (சங்கீதம் 139:17-18).
மனித உடலின் வியப்பான, அற்புதமான புதிர்கள், நமது மகாதேவனின் வல்லமை மற்றும் சர்வ ஆளுகையைப் பிரதிபலிக்கிறது. துதிப்பது , வியப்பது மற்றும் பிரமிப்பது மட்டுமே நம்மால் செய்யக்கூடியது.

செப்னாவின் கல்லறை
தமிழ் அரசியல்வாதியான கருணாநிதி, சென்னை மெரினா கடற்கரையில் தனது ஆசான் சி.என்.அண்ணாதுரையின் அருகில் அடக்கம் செய்யப்பட விரும்பினார். அவரது பகுத்தறிவு நம்பிக்கை காரணமாக, எந்த மதச் சடங்குகளும் செய்யப்படுவதை அவர் விரும்பவில்லை.
ஒரு பெரிய நினைவுச்சின்னம் அவர் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் உண்டு என்றாலும் அவரது நம்பிக்கையானது அவரை மரணம் என்ற யதார்த்தத்திலிருந்து விலக்கி விடவில்லை என்பதுதான் உண்மை. நாம் இறந்தாலும் வாழ்க்கை கடந்து செல்கிறது என்பதே கசப்பான உண்மை.
யூதாவின் வரலாற்றில் ஒரு இக்கட்டான நேரத்தில், “அரமனை விசாரிப்புக்காரனான” செப்னா, மரணத்திற்குப் பிறகு தனக்கான மரபை நிலைநாட்ட, தனக்கென ஒரு கல்லறையை ஏற்படுத்தினான். ஆனால் தேவன், அவனுடைய தீர்க்கதரிசி ஏசாயா மூலம், “உயர்ந்த ஸ்தலத்திலே தன் கல்லறையை வெட்டி, கன்மலையிலே தனக்கு வாசஸ்தலத்தைத் தோண்டுகிறவனைப்போல, நீ உனக்கு இங்கே கல்லறையை வெட்டும்படிக்கு உனக்கு இங்கே என்ன இருக்கிறது? உனக்கு இங்கே யார் இருக்கிறார்கள்?” (ஏசாயா 22:16) என்றார். மேலும் தீர்க்கதரிசி, “அவர் உன்னை உருண்டையைப்போல அகலமும் விசாலமுமான தேசத்திலே சுழற்றி எறிந்துவிடுவார்; அங்கே நீ சாவாய்” (வ.18) என்றார்.
செப்னா தவறாகப் புரிந்துகொண்டான். நாம் எங்கே புதைக்கப்பட்டோம் என்பதல்ல, நாம் யாரைச் சேவிக்கிறோம் என்பதே முக்கியம். இயேசுவைச் சேவிப்பவர்களுக்கு இந்த அளவிட முடியாத ஆறுதல் உண்டு: “கர்த்தருக்குள் மரிக்கிறவர்கள்.. பாக்கியவான்கள்” (வெளிப்படுத்தின விசேஷம் 14:13). நமது “மரணத்தை” ஒருபோதும் அலட்சியப்படுத்தாத தேவனை நாம் சேவிக்கிறோம். அவர் நமது வருகையை எதிர்பார்த்து நம்மை தமது வீட்டிற்கு வரவேற்கிறார்!

ஒவ்வொரு நொடியும் முக்கியம்
ஏப்ரல் 1912 இல் டைட்டானிக் கப்பல் ஒரு பனிப்பாறையில் மோதியபோது, போதகர் ஜான் ஹார்பர் தனது ஆறு வயது மகளுக்கு, உயிர்காக்கும் சிறிய படகுகளிலிருந்த மிகக்குறைந்த காலியிடங்களில் ஒன்றைப் பெற்றார். அவர் சக பயணிக்குத் தனது உயிர் காக்கும் மிதவை ஆடையைக் கொடுத்து, கேட்கும் எவருடனும் நற்செய்தியைப் பகிர்ந்து கொண்டார். கப்பல் மூழ்கியது . நூற்றுக்கணக்கான மக்கள் ஒரு சாத்தியமற்ற மீட்புக்காக காத்திருந்தபோது, ஹார்பர் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு நீந்தினார், “கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள்” (அப்போஸ்தலர் 16:31) என்றார்.
கனடாவின் ஒன்டாரியோவில் டைட்டானிக் கப்பலில் உயிர் பிழைத்தவர்களுக்கான சந்திப்பு கூட்டத்தில், ஒருவர் தன்னை “ஜான் ஹார்பரின் கடைசி மாற்றம்” என்று குறிப்பிட்டார். ஹார்பரின் முதல் அழைப்பை அவர் நிராகரித்தாலும்,ஹார்பர் மீண்டும் அவரிடம் வேண்டிக்கொண்ட பின்னர், அவர் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டார். தாழ் வெப்பநிலையால் பாதிக்கப்பட்டு பனிக்கட்டி நீாில் மூழ்குவதற்கு முன்பும், இயேசுவைப் பகிர்ந்துகொள்வதற்காக ஹார்பர் தனது வாழ்க்கையின் கடைசி தருணங்களை அர்ப்பணித்ததை அவர் பார்த்தார்.
தீமோத்தேயுவிடம் பொறுப்பளிக்கையில், அப்போஸ்தலன் பவுல் தன்னலமற்ற சுவிசேஷ பணியில் இதேபோன்ற அவசரத்தையும் அர்ப்பணிப்பையும் ஊக்குவிக்கிறார். தேவனின் நிலையான பிரசன்னத்தையும், இயேசுவின் தவிர்க்க முடியாத வருகையையும் உறுதிசெய்து, நீடிய சாந்தத்தோடும் உபதேசத்தோடும் கண்டனம் பண்ணிப் பிரசங்கிக்குமாறு தீமோத்தேயுவுக்கு பவுல் கட்டளையிடுகிறார் (2 தீமோத்தேயு 4:1-2). சிலர் இயேசுவை நிராகரித்தாலும், இளம் பிரசங்கிக்குக் கவனம் செலுத்தும்படி அப்போஸ்தலன் நினைவூட்டுகிறார் (வ.3-5). நம் நாட்கள் குறுகியவை, எனவே ஒவ்வொரு கணமும் முக்கியம். “இயேசு இரட்சிக்கிறார்!” என்று நாம் அறிவிக்கையில், நம்முடைய பிதா பரலோகத்தில் நமக்கான இடத்தை உறுதிப்படுத்தினார் என்பதில் நாம் நிச்சயம் கொள்கிறோம்.

உதாரத்துவமாய் கொடுத்தல்
பள்ளி பாடங்களுக்குப் பின் வேதாகம படிப்பு என்ற நோக்கத்தில் இயங்கும் ஒரு குழுவில், வாரத்திற்கு ஒருமுறை என் மனைவி சுமதி ஊழியம் செய்கிறாள். அதிலே, போரினால் பாதிக்கப்பட்ட நாடான உக்ரைனில் உள்ள குழந்தைகளுக்கு உதவுவதற்காகப் பணத்தை நன்கொடையாக அளிக்கும்படி குழந்தைகளிடம் கேட்கப்பட்டது. சுமதி எங்கள் பதினொரு வயது பேத்தி ரஞ்சனியிடம் இத்திட்டத்தைப் பற்றிச் சொன்ன ஒரு வாரத்திற்குப் பிறகு, அவளிடமிருந்து எங்களுக்கு ஒரு கடித உறை கிடைத்தது. அதில் சுமார் ரூ. 250 இருந்தது: “உக்ரைனில் உள்ள குழந்தைகளுக்காக என்னிடம் இருப்பது இதுதான். மேலும் பின்னர் அனுப்புகிறேன்” என்ற குறிப்புமிருந்தது.
ரஞ்சனி உதவ வேண்டும் என்று சுமதி பரிந்துரைக்கவில்லை, ஆனால் ஆவியானவர் அவளைத் தூண்டியிருக்கலாம். மேலும் இயேசுவை நேசித்து அவருக்காக வாழ முற்படும் ரஞ்சனி செயல்பட்டாள்.
ஒரு தயாள மனதிலிருந்து வந்த இந்த சிறிய பரிசை சிந்திக்கையில், நாம் நிறையக் கற்றுக்கொள்ளலாம். கொடுத்தல் குறித்து 2 கொரிந்தியர் 9ல் பவுல் வழங்கிய சில அறிவுரைகளை இது பிரதிபலிக்கிறது. முதலாவது அப்போஸ்தலன், நாம் பெருக விதைக்கும்படி அறிவுறுத்துகிறார் (வ. 6). “என்னிடம் இருப்பதெல்லாம்” என்பது நிச்சயமாகவே பெருக விதைப்பதாகும். நாம் “கட்டாயத்தினால்” (வ. 7) அல்ல, தேவன் வழிநடத்தும் விதமாகவும் நம்மால் இயன்றதைப் போலவும் நம்முடைய ஈவுகள் மகிழ்ச்சியுடன் கொடுக்கப்பட வேண்டும் என்றும் பவுல் எழுதினார். மேலும் சங்கீதம் 112:9ஐ மேற்கோள் காட்டி, “ஏழைகளுக்கான ஈவுகளின்” (வ. 9) மதிப்பைக் குறிப்பிட்டார்.
கொடுக்கும்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால், நாம் எப்படிச் செயல்பட வேண்டும் என்று தேவன் விரும்புகிறார் என்று கேட்போமாக. அவர் நம்மை வழிநடத்தும் போது, தேவைப்படுபவர்களுக்கு நம்முடைய ஈவுகளை வழங்குவதில் நாம் தாராளமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும்போது, “தேவனுக்கு எங்களால் ஸ்தோத்திரமுண்டாவதற்கு ஏதுவாயிருக்கும்” (2 கொரிந்தியர் 9:11). அதுவே தாராள மனதுடன் கொடுப்பது.