ஞாயிற்றுக்கிழமை காலை வழிபாட்டைத் தொடர்ந்து, எனது மாஸ்கோ ஹோஸ்ட் என்னை கோட்டைக்கு வெளியே உள்ள ஓர் உணவகத்தில் மதிய உணவுக்கு அழைத்துச் சென்றார். வந்துசேர்ந்தவுடன், திருமண உடையில் புதுமணத் தம்பதிகள் வரிசையாக கிரெம்ளின் சுவருக்கு வெளியே யாரென்று தெரியாத இராணுவ வீரரின் கல்லறையை நெருங்குவதை நாங்கள் கவனித்தோம். அவர்களுடைய அந்த மகிழ்ச்சியான நாளில், அந்த மகிழ்ச்சிக்கு காரணமான இராணுவ வீரர்களின் தியாகத்தை நினைவுகூரும்பொருட்டு அவ்வாறு செய்வது அவர்களின் வழக்கம். அந்த புதுமணத் தம்பதிகள் அங்கே சென்று கல்லறையில் மலர் வளையம் வைத்து, புகைப்படம் எடுத்துக்கொள்வதை பார்க்க ஆச்சரியமாய் இருந்தது. 

நம்முடைய வாழ்க்கையில் நிறைவை உண்டாக்கும்பொருட்டு தியாகமாய் தங்களை அர்ப்பணித்தவர்களுக்கு நன்றிசெலுத்துவதற்கு நாமெல்லாரும் கடமைப்பட்டிருக்கிறோம். அந்த தியாகங்கள் அனைத்தும் முக்கியமற்றவைகள் அல்ல, அதேநேரத்தில் அவை மிகவும் முக்கியமானவைகளும் அல்ல. சிலுவையின் அடிவாரத்தில் இயேசு நமக்காக செய்த பெரிய தியாகத்தைப் பார்க்கிறோம். நம்முடைய வாழ்க்கை எந்த அளவிற்கு முழுமையாக இரட்சகருக்குக் கடன்பட்டிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள துவங்குகிறோம். 

கர்த்தருடைய பந்தியில் இடம்பெற்றிருக்கும் அப்பமும் திராட்சை ரசமும், இயேசுவின் சிலுவை தியாகத்தை நம்மை நினைவுகூரச்செய்கிறது. பவுல், “நீங்கள் இந்த அப்பத்தைப் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணும்போதெல்லாம் கர்த்தர் வருமளவும் அவருடைய மரணத்தைத் தெரிவிக்கிறீர்கள்” (1 கொரிந்தியர் 11:26) என்று எழுதுகிறார். கர்த்தருடைய பந்தியை அநுசரிக்கும் அந்த நாள் முழுவதிலும், இயேசு நமக்குள்ளும் நமக்காகவும் செய்த தியாகத்தை நாம் நினைவுகூரப் பிரயாசப்படுவோம்.