பாஸ்டர் பாப், அவரது குரலைப் பாதிக்கும் வகையிலான ஒரு பெலவீனத்தால் பாதிக்கப்பட்டபோது,  பதினைந்து ஆண்டுகள் அவர் நெருக்கடியிலும் மனச்சோர்விலும் வாழ நேரிட்டது. பேச முடியாத ஒரு போதகரால் என்ன செய்ய முடியும் என்று அவர் சோர்ந்துபோனார். இந்தக் கேள்வியுடன் அவர் போராடினார். தமது ஏக்கத்தையும் குழப்பத்தையும் தேவனிடம் விண்ணப்பித்தார். “கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்ப்படிவது ஒன்று மட்டுமே எனக்கு தெரியும்” என்று அவர் ஜெபித்தார். அவர் வேதத்தைப் படிக்க நேரம் செலவழித்தபோது, தேவன் மீது அவருக்கு இருந்த அன்பு அதிகரித்தது. அவர், “வேதத்தை உள்வாங்குவதற்கும் அதில் மூழ்கியிருப்பதற்கும் என்னுடைய வாழ்க்கையை அர்ப்பணித்தேன். ஏனென்றால், விசுவாசம் கேள்வியினாலே வரும், கேள்வி தேவனுடைய வசனத்தைக் கேட்பதினால் வரும்” என்று அறிக்கையிடுகிறார். 

அப்போஸ்தலனாகிய பவுல் ரோமர்களுக்கு எழுதிய நிருபத்தில் “விசுவாசம் கேள்வியினாலே வரும்” என்று குறிப்பிடுவதை நாம் பார்க்கமுடிகிறது. பவுல், யூதர்கள் அனைவரும் இயேசுவை ஏற்றுக்கொண்டு இரட்சிக்கப்படவேண்டும் என்று விரும்பினார் (ரோமர் 10:9). அவர்கள் எப்படி நம்புவார்கள்? தேவனுடைய வார்த்தையை கேட்பதினால் ஏற்படும் விசுவாசத்தினாலும், கிறிஸ்துவைக் குறித்த வார்த்தையினாலுமே அது சாத்தியமாகும் (வச. 17). 

பாஸ்டர் பாப், வேதத்தை வாசிக்கும்வேளையில் கிறிஸ்துவின் செய்தியை பெற்றுக்கொள்ளவும் விசுவாசிக்கவும் முயற்சிக்கிறார். அவரால் ஒரு நாளைக்கு ஒருமுறை மட்டுமே பேசக்கூடும். அவ்வாறு பேசும்போதும் அதிக வேதனையை அவர் உணருவார். ஆனால் அவர் வேதத்தில் மூழ்கியிருப்பதின் மூலம் தேவனிடமிருந்து சமாதானத்தையும் திருப்தியையும் தொடர்ந்து காண்கிறார். ஆகவே, நம்முடைய போராட்டங்களில் இயேசு தம்மை நமக்கு வெளிப்படுத்துவார் என்று நாம் நம்பலாம். நாம் எதிர்கொள்ளும் சவால்கள் எதுவாக இருந்தாலும், அவருடைய செய்தியைக் கேட்கும்போது அவர் நம்முடைய விசுவாசத்தை அதிகரிக்கச் செய்வார்.